தமிழ்க் காப்பிய மரபில் முன்னோர்கள் செய்யாத பல புதுமைகளைப் புகுத்தியவர் சேக்கிழார். அறுபத்துமூன்று அடியார்களின் கதையை அவர்களில் ஒருவரான சுந்தரரைக் கதைத்தலைவராக்கியதே ஒரு புதுமைதான். அதற்கு ஏற்றாற்போலப் பல உத்திகளை வகுத்துப் பெரிய புராணத்தைக் காப்பியச் சுவை குன்றாமல் நடத்திச் செல்வதும் சேக்கிழார் செய்த காப்பியப் புதுமையே ஆகும்.
சோழ அரசு பரந்துபட்ட அரசாக- துங்கப்பத்திரை முதல் குமரிமுனை வரை மிகவும் விரிந்த பேரரசாக முதலாம் இராசராசன் காலத்தில் ஆனது.
அந்தக் காலத்திற்குப் பின்னால் வாழ்ந்த சேக்கிழார் சோழர் காலத்தில் இருந்த நால் வருண வேறுபாட்டையோ சமூகத்தில் நிலவிய சாதி ஏற்றத் தாழ்வுகளையோ முற்றாக மீறிக் காப்பியப் பாத்திரங்களைப் படைத்திருக்க முடியாது.
சோழர் காலத்தில் சமூகத்தில் நிலவிய தீண்டாமைக் கொடுமைகளைச் சேக்கிழார் பார்வையில் இக்கட்டுரையில் பார்ப்போம்.
பெரிய புராணத்தில் பார்ப்பனர், அரசர், வணிகர் போன்ற குலத்தினரை மேல்சாதியினராகவும் குயவர், வண்ணார், வேடர், பறையர், பாணர் போன்றோர் கீழ்ச்சாதியினராகவும் படைக்கப்பட்டுள்ளனர்.
இவர்களில் திருநாளைப் போவார் எனும் நந்தனாரும் திருநீல கண்ட யாழ்ப்பாணரும் தாழ்த்தப்பட்ட வகுப்பினர். கண்ணப்பர் மலைச்சாதியினர். தாழ்த்தப்பட்டவர்கள் சேக்கிழார் காலத்தில் எவ்வாறு நடத்தப்பட்டார்கள்?
நந்தனார் கதை சோழ நாட்டை வளமுடையதாக்கும் ஆறுகளில் ஒன்றான கொள்ளிடம் ஆற்றின் கரையில் உள்ள மேற்கா நாட்டில் உள்ள ஊர்களில் ஒன்று ஆதனூர். இன்று அவ்வூர் மேலா நல்லூர் என்று வழங்குகிறது. (சோ. சிவபாதசுந்தரம். சேக்கிழார் அடிச்சுவட்டில். பக் 75) அவ்வூரில் உள்ள புலைச்சேரியில் வாழ்ந்த நந்தனார், இளமை முதலே அம்மையப்பரிடம் அளவிலாப் பக்தியோடு வாழ்ந்து வந்தார். இசைக் கருவிகளுக்கு வேண்டிய தோல், விசிவார், வீணை யாழுக்குரிய நரம்புகள், கோரோசனை ஆகியவற்றை ஆலயங்களுக்குக் கொடுத்து வந்தார்.
சிவனிடம் கொண்ட அன்பால் எல்லாக் கோவில்களுக்கும் சென்றார். தீண்டத்தகாத அவரை மேல் சாதியிரை கோவில் வாசலைத் தாண்டி அனுமதியார். அவரும் வாசலின் புறத்தே நின்றே பரமனை வழிபட்டு வந்தார்.
கோவில்களுக்கு வேண்டிய பொருளைத் தந்துவிட்டுப் புறத்தே நின்று அன்பு மிகுதியால் ஆடுதலும் பாடுதலும் செய்வார் என்று சேக்கிழார் கூறுகிறார். (பா. 1060)
ஒரு நாள் அருகிலுள்ள திருப்புன்கூர் சென்று சிவனை நேரே கும்பிட நினைத்தார். வெளியில் நின்ற அவர் கண்ணுக்குச் சிவன் புலப்படவில்லை. சிவலிலிங்கத்திற்கு முன்னே இருந்த நந்தி மறைத்தது, அடியவரின் விருப்பத்தை அறிந்த ஆண்டவன் நந்தியை விலகச் செய்தார். நந்தி விலகியவுடன் நந்தனார் நாதனை நேரே கண்ணாரக் கண்டு மகிழ்ந்து வழிபட்டுத் திரும்பினார்.
சிவாலயங்கள் இருக்குமிடமெல்லாம் சென்று சிவனை வழிபட்டுத் தொண்டும் செய்தார். ஆனால் தில்லை செல்லும் அவா ஒவ்வொரு நாளும் அவருக்கு மிகுந்தது. தன் குலம் கருதி "நாளைப் போவேன்' எனத் தள்ளிப்போட்டார்.
ஒரு நாள் தில்லை சென்றுவிட்ட நந்தனார் அவ்வூரைப் பணிந்தார். தான் செல்லமுடியாத நிலையை நினைத்து மதிலிலின் வாயிலை அடைந்தார். கோவிலை வலம் வந்தார். தான் தீண்டாதவராகவே பிறந்தமையை நினைத்து வருந்தித் துயின்றார்.
இங்கே சேக்கிழார் ஒரு குறிப்புத் தருகிறார். அது மிகவும் முக்கியமானது.
"இன்னல்தரும் இழிபிறவி இது தடை' (பா.1072) என்று நந்தனார் நினைத்து நொந்ததாகப் பாடுகிறார் சேக்கிழார்.
திருப்புன்கூரில் இறைவன் தெரியாமல் அடைத்து நின்ற நந்தியைச் சிவனே அகலச் செய்கிறார். அப்போது வாயிலிருந்தே வணங்கி மகிழ்ந்தவர் நந்தனார். தில்லையில் அவ்வாறு ஒன்றும் சிவன் செய்யவில்லை.
நந்தனார் தன் பிறவி இழிபிறவி எனத் தானே கூறுவது பின்னால் நடக்கப் போகும் கொடுமையை முன்கூட்டியே உணர்த்தவே சேக்கிழார் இப்படிக் கூறுவதாக நினைக்கத் தோன்றுகிறது.
நந்தனார் துயரைக் கண்ட பெம்மான் அவர் கனவில் தோன்றி "இப்பிறவி இழிவு நீங்க எரியில் மூழ்கி அந்தணருடன் என் முன்னே வா' என மொழிந்தார். இதனையே தில்லைவாழ் அந்தணரிடமும் சிவன் கூறினார்.
அந்தணர்கள் இறைவன் சொன்னபடி தீக்குழி அமைத்தனர். நந்தனாரும் மகிழ்ந்து தொழுது குழியில் மூழ்கிப் புண்ணியமா முனிவர் வடிவில் மேனியில் வெண்நூலுடன் சடைமுடியோடு வெளிவந்தார்.
வந்தவர் கோபுரத்தை வணங்கிக் கோவிலுக்குள் புகுந்தார். உடன் வந்தவர்கள் காணமுடியாமல் நந்தனார் மறைந்தார்.
இதுதான் சேக்கிழார் கூறும் நந்தனார் கதை.
அறுபத்துமூன்று அடியார்களில் மிகவும் கொடுமையான தண்டனைக்கு ஆளாகி உயிரைவிட்டவர் தாழ்ந்த சாதியாரான நந்தனாரே ஆவர். இன்னொருவரான திரு நீலகண்டருக்கு இந்த அளவிற்குச் சிவனோ பார்ப்பனர்களோ இன்னல் தரவில்லை. ஒருவேளை யாழ்ப்பாணர், சம்பந்தர் பின்னே சென்றதால் கொஞ்சம் சலுகை கிடைத் திருக்கலாம் என நினைக்கவும் இடமிருக்கிறது.
நந்தனார் தீக்குழியில் இறங்கியதற்குப் பேராசிரியர் அ.ச.ஞா. அவர்கள் வேறொரு சமாதானம் கூறுகிறார்.
"நந்தனாரை அர்ச்சகர்களே வந்து கோவிலுக்குள் அழைத்தாலும் அவர் செல்லமாட்டார். ஏனெனில் அவருக்கே தாழ்வு மனப்பான்மையும் குற்றவுணர்வும் இருந்தன. அதனால் தான் இறைவன் அவருக்கு அக்னிப் பிரவேசம் நடத்தினார்' என்று கூறுகிறார். (சித்திர பெரிய புராணம். பக்.93)
ஆனால் பேராசிரியர் அ.ச.ஞா ஒன்றை இங்கே மறந்துவிட்டார் வசதியாக. கடைக்குடியில் பிறந்த யாழ்ப்பாணர் ஆலயங்கள் தோறும் புறத்தில் நின்றே யாழ் வாசித்து வந்தார். மதுரையில் அவர் வெளியில் நின்று யாழ் வாசித்தார்.
யாழிசையில் சொக்கிய சொக்கநாதர் கோவில் அலுவலர் கனவில் தோன்றிப் பாணரைக் கோவிலுக்குள் அழைத்து வாசிக்கச் சொன்னார். அதன்பின் பாணர் உள்ளே சென்று வாசித்ததாகச் சேக்கிழார் பாடுகிறார்.
இறைவனே நந்தனாருக்கு ஒரு வழியையும் பாணருக்கு ஒரு வழியையும் காட்டுவது ஒரு கண்ணுக்குச் சுண்ணாம்பும் ஒரு கண்ணுக்கு வெண்ணெயும் வைத்ததுபோல் இருப்பது பாராட்டும்படியாக இல்லை.
திருநீலகண்டரும் அவர் மனைவியும் சம்பந்தருடன் கோவில்தோறும் சென்றனர். சம்பந்தர் பதிகம் பாடும்போது யாழ் வாசித்தனர்.
இங்கே ஒரு நெருடல் உள்ளது. சம்பந்தர் சாதிகாரணமாக கருவறை அருகே சென்று பாடமுடியும். ஆனால் பாணர் உள்ளே செல்ல அனுமதி இல்லை.
அதனால் சம்பந்தர் கோயிலுக்கு வெளியில் நின்றே பாடியிருக்கவேண்டும். அப்போதுதான் பாணரும் அருகே நின்று யாழ் வாசித்திருக்க முடியும்!
திருநீலநக்கர்
ஒருமுறை ஞானசம்பந்தர் அடியார்களுடன் திருநீலநக்கர் எனும் பார்ப்பனர் இல்லம் வந்தார். அவருடன் பாணரும் அவர் மனைவியும் வந்தனர்.
முத்தீ வளர்க்கும் திருநீலநக்கர் தாழ்த்தப்பட்டவ ராகிய பாணருக்கும் அவர் மனைவிக்கும் வேள்வி செய்யும் இடத்தில் தங்க இடம் கொடுத்தார். எனச் சேக்கிழார் சொல்லுகிறார்.
இச்செய்தி அன்றைய நிலையில் உண்மையாக இருக்கமுடியாது. பாணரை மதுரைக் கோயிலுக்குள் இறைவன் அழைக்கச் சொன்னது சேக்கிழார் கூறிய கற்பனைச் செய்தி. அதுபோல இச்செய்தியும் கற்பனையாகவே இருத்தல் வேண்டும்.
நமிநந்தி அடிகள்
சோணாட்டில் திருவாரூர்க்கு அருகே உள்ள ஊர் ஏமப்பேரூர். (இன்று அவ்வூர் பெயர் திருநெய்ப்பேர்) அவ்வூரில் பிறந்த நமிநந்தி பார்ப்பனக் குலந்தினர்.
ஒரு நாள் ஆரூர் வீதிவிடங்கர் அருகிலுள்ள மணலி எனும் ஊருக்கு எழுந்தருளினார். விடங்கரைக் காண ஊரே திரண்டது. கூட்டத்தோடு கலந்த நமிநந்தியார் இறையை வணங்கி வீடு திரும்பினார்.
எல்லா மக்களோடு கலந்து நின்றதால் தீட்டுப் பட்டுவிட்டது எனக்கருதியவர் வீடு வந்து நீராட ஏற்பாடு செய்யும்படி மனைவியிடம் கூறியவர் உறங்கிவிட்டார். அவர், கனவில் தோன்றிய ஆரூர் பெருமான் "அன்பனே, ஆரூரில் வாழ்பவர் அனைவரும் நம் கணங்களே. அவர்களுக்குள் சாதியையும் தீட்டையும் எங்குக்கண்டாய்?' எனக்கூறி மறைந்தார்.
"ஆரூரில் பிறந்தார் எல்லாம் நம் கணங்கள்
ஆன பரிசு காண்பாய்'
(பா 1897). என்பது பாட்டு.
நமிநந்தியடிகள் தம் பிழையை உணர்ந்தார் எனச் சேக்கிழார் கதையை முடிக்கிறார்.
சேக்கிழார் கூற்றை அப்படியே நம்புவதில் சில சிக்கல்கள் உள்ளன. நந்தனாரை ஆலயத்திற்குள் அழைக்க நெருப்புக்குழியில் இறங்கச் சொன்னவர் சிவனாரே ஆவர். யாழ்ப்பாணரை வெளியில் நிற்காமல் கோவிலுக்குள் வரச் சொன்னவரும் அவரே.
அப்போதெல்லாம் எல்லா மக்களும் சமநிலையினரே. சாதி வேறுபாடுகள் இல்லை என்பதெல்லாம் ஆண்டவனுக்கு ஏன் தெரியாமல் போயிற்று?
ஆகவே நமிநந்தியாரிடம் சிவனார் சொன்னவை சேக்கிழாரே சொன்ன மிகைச் செய்தியே எனக் கருதலாம் அல்லது சைவ சமயத்தில் சாதி வேறுபாட்டு நிழல் படியாமலிலிருக்க இப்படிப் பாடியிருக்கலாம்.
சேக்கிழார் சில சமயங்களில் நழுவலாகவும் கற்பனையாகவும் கூறுபவை எல்லாம் சமயத்தைக் காப்பாற்றவே என நினைக்கத் தோன்றுகிறது.
நந்தனார், திருநீலகண்ட யாழ்ப்பாணர், திருநீலநக்கர், நமிநந்தியடிகள் கதைகளிலிலிருந்து சேக்கிழார் தீண்டாமை பற்றிய அவர் கருத்துகளைத் தெளிவாகவும் முரண்பாடு இல்லாமலும் கூறவில்லை எனவும் அவர் கூற்று சமூகத்தில் நடைமுறையில் இருந்த பழக்கவழக்கங்களை அப்படியே காட்டவில்லை எனவும் அறிந்து கொள்கிறோம்.