""வாழ்க்கை என்பது சிலருக்கு புரியாத புதிர்,,. சிலருக்கு புரிந்தும் புரியாத தத்துவம்,,,.சிலருக்கு வரம்.... இன்னும் சிலருக்கோ சாபம்....""

இந்த உலகம் இயல்பாக சுழன்று கொண்டிருக்கிறது என்பது அறிவியல் உண்மை.... ஆனால் நமது வாழ்க்கை நிகழ்வுகளும், லட்சியக் கனவுகளும் இயல்பாக தானாகவே நிகழும்.. நிறைவேறும் என நினைத்தால் அது தவறு....

இந்த உலகில் சிலர் எவ்வளவு முயன்றாலும் வெற்றிபெற்றா லும் அதற்குரிய அங்கீகாரம் கிடைப்பதில்லையே என புலம்புவர்கள் உண்டு...

ஆகாய விமானத்தை ரைட் சகோதரர்களும்... தொலைபேசியை கிரகாம்பெல்லும்.... மின்சார பல்பை எடிசனும் கண்டுபிடித்தபோது உடனடி அங்கீகாரம் கிடைக்கவில்லை.

Advertisment

இந்த உலகத்தில் நிகழ்த்தப்பட்ட எல்லா அற்புதங்களும் ஒருகாலத்தில் நிராகரிக்கப்பட்டவற்றின் தொகுப்புதான். என்றா லும் முயற்சிகள் மேற்கொள்வதில் அயர்ச்சி ஏற்படக்கூடாது.

aa

“முயற்சி செய்தால் எதுவும் முடியும். அயர்ச்சி அடைந்தால் அனைத்தும் மடியும்"" என்பது முற்றிலும் உண்மை, இலட்சியவாதிகள் மரணத்தைக்கூட துச்சமாக நினைத்துத் தங்களுடைய முயற்சியில் தீவிரமாக இருக்கிறார்கள். அவர்கள் தங்களுக்குப் பிறகும் தங்கள் வாழ்க்கையே ஒரு தகவலாக விட்டுச்செல்கிறார்கள்.

அவர்கள் வாழ்க்கை ஒரு கவிதையாக இருக்கிறது. கடைசிமூச்சும் கவித்துவமாக மாறுகிறது....

இந்த வாழ்க்கை நம்மிடம் எதையும் திணிக்கவில்லை. கண்களினூடே வாழ்வை தவறுதலாகவே கணித்து வைத்துக்கொண்டுள்ளோம்.

வாழ்க்கை என்பது நமக்கு வரமாக அளிக்கப்பட்டது... வாழ்க்கை எனும் நோட்டுப் புத்தகத்தில் எத்தனை பக்கங்களை எழுதாமல் வீணடித்துவிட்டோம் என்ற நினைவுகூர்ந்தால் நேரம், காலம் ஆகியவற்றின் அருமை தெரியும்.

வாழ்க்கை ஓர் அற்புதம். அதன் ஒவ்வொரு நொடியையும் நாம் உற்றுநோக்கி கற்றுக்கொள்ள வேண்டும். ""துயரங்களிலிருந்தும் இன்ப நார்களை பிரித்தெடுத்து அனுபவ நெசவை நெய்யத் தெரிந்தவர்களுக்கு அது சுமையாக இருப்பதில்லை.""

மனிதனுக்கு நிறைய ரகங்கள் உணவிலும் உடையிலும் தேவைப்படுகிறது. புதிய இடத்திற்கு போய்விட்டு வருவதும் புதிய மனிதர்களை சந்திப்பதும் அவனுக்கு புத்துணர்ச்சி தருகிறது. இதுவரை சுவைத்திடாத உணவு, பார்த்திராத இடங்கள், அருவி, மலைகள் ஆகியன உற்சாகத்தைத் தந்தாலும் எத்தனை காலத்திற்கு தாக்குப்பிடிக்க முடியும். மீண்டும் பழைய பணி, பழைய மனிதர்கள் பழைய இடத்துக்கே திரும்புகையில் அதிக அலுப்பே ஏற்படுகிறது.

இன்று நடக்கின்ற தற்கொலைகளில் பலவற்றை ஆராய்ந்தால் வலுவான காரணங்களோ பின்னணியோ இருப்பதில்லை. தேர்வில் தேர்ச்சி பெறாததற்காக, விரும்பிய வண்ணம் திருமணத்திற்கு பெற்றோர்கள் சம்மதிக்காததற்காக, தான் விரும்பிய பொறியியல் மருத்துவ படிப்புகளில் இடம் கிடைக்காததற்காக, தொழிலில் நஷ்டம் அடைந்தததற்காக,கடன் தொல்லை  களுக்காக.. இப்படி தற்கொலையின் வசம் தஞ்சமடைந்து விடுகிறார்கள்.

aa

இந்த பூமி யாருடைய மரணத் திற்காகவும் தன்னுடைய சுழற்சியை ஒருநிமிடம்கூட நிறுத்துவதில்லை. 'புவிஈர்ப்பு விசையை அறிந்து கொண்டவருக்காகக்கூட'...

தான் இறப்பதன் மூலம் அடுத்தவர் களுக்கு குற்ற உணர்வை ஏற்படுத்துதலே பெரும்பாலானோரது குறிக்கோளாக இருக்கின்றது.

எந்த ஒரு குற்ற உணர்வும் நீடித்து இருப்பதில்லை. யார் இல்லாமலும் இந்த உலகம் இயங்கும் என்பதையும் புரிந்துகொண்டாலே வாழ்க்கை முள் மஞ்சமாக இல்லாமல் மலர்ப்படுக்கையாக மாறிவிடும் என்பதை உணர்ந்தாலே போதும்.

நம்மை நாமே உணரவேண்டும். உண்மையான உணர்தல் இல்லாமல் எந்த முன்னேற்றமும் நிகழமுடியாது. நம் முயற்சியின்மையை, நம் தவறுகளை, நம் அலட்சியத்தை நாமாக அசை போடாவிட்டால் நமக்குள் எந்த மகசூலும் நிகழாது. நம்மை நாமே செதுக்கி கொள்வதில் நாமே சிற்பியும் கூட.

நம் பிரச்சினைகளை நாமே எதிர்கொள்ள பழக வேண்டும். கழுதையின் முதுகில் கம்பீரமாக அமர்வதைக் காட்டிலும் முரட்டுக் குதிரையின் முதுகிலிருந்து தூக்கி எறியப்படுவதில்தான் வாழ்க்கையின் சாராம்சமும் சுவையும் அடங்கியிருக்கிறது.

இலக்கை நோக்கி முயற்சியை முடுக்கும் நிமிடமே அவரவர்க்கான வாழ்க்கை தொடங்குகிறது.

முயற்சியோடு உழைப்பும் சேரவேண்டும்,

“உழைப்பில்லாத முயற்சி கானல் நீரைத் தேடி

அலைந்து கரைந்து போனதாக முடிந்துவிடும்""

வாழ்க்கைக் குறிப்பு என்ற உயிலில் எதற்காக கடந்தகாலத்தை நம் தோள்களில் சுமக்கவேண்டும். அனாவசியமான காரணங்களை தாமாகக் கற்பிதம் செய்துகொண்டு வரமாக வாய்த்திடும் வாழ்வை சாபமாக மாற்றிக்கொள்வது முறையல்ல. இறந்த காலம் குறித்த எதுவுமே கழற்றி எறியப்பட வேண்டியவையே. இந்த நொடியில் என்ன நிகழப்போகிறது என்பதே நுட்பமாகவும் உன்னிப்பாகவும் கவனிக்கப்பட வேண்டிய ஒன்று.

ஒவ்வொரு மனிதனிடமும் புத்தனும் உண்டு எத்தனும் உண்டு... விருப்பமானவரை வெளிக்கொண்டு வருவதும், வேண்டியதை தேர்ந்தெடுப்பதும் அவரவர் மனதை பொறுத்ததே.

தனக்குள் இருக்கும் இறைமையை உணர்கையில் ""வாடிய பயிருக்காக வாடவும் முடியும்... வற்றிய ஆற்றுக்காக வருந்தவும் முடியும்...""

நம் உடலை மனம்தான் இயக்குகிறது...இனிய செய்திகளை பேசும்போதும் நல்லவற்றை சிந்திக்கும் போதும் மனம் உடலுக்கு ஆரோக்யமான சமிக்ஞை களை அனுப்புகிறது... குறை காண்பது, குறைகளை மிகைப்படுத்துவது, குறைகள் குறித்தே புலம்பி அடுத்தவர்களை வருந்தவைப்பது உடல்நலனையும் கெடுத்துவிடக்கூடும் .உடலின் கடிவாளம் மனதின் கைகளில்தான் இருக்கிறது.

நம் மனம் விரிவடையும் போதுதான் நம்முடைய உலகமும் விரிவடைகிறது. அப்போது தான் உலகிலுள்ள எல்லா பொருட்களும் நமக்குள் ஒருபகுதியாக ஆகிவிடுகின்றன.

""திருவாசகம் கூறும் புல்லாகிப் பூவாகி""

அப்போதுதான் உணரப்படும்....

ஆசை, கோபம், அகங்காரம், அச்சம் ஆகிய உணர்வுகளை பல்வேறு விகிதங்களில் பதிவுசெய்து நாம் உருவாக்கிய சிறிய மனதையே நாம் உண்மையான மனம் என கருதிக் கொண்டிருக்கிறோம்.

ஆனால் இரண்டாவது மனம் என்ற ஒன்று இருக்கிறது. அதுதான் நம்மோடு வந்த பிரபஞ்ச மனம்..

நாம் வெறும் சாட்சியாக நின்று எண்ணங்களற்று பற்றற்று ஒன்றைக் கவனிக்கும்போதுதான் அது செயல்படுகிறது.

பிரபஞ்சமனம் செயல்படும் போது காலம் இடம் ஆகியவை மறைந்துவிடுகிறது... உச்சக்கட்ட விழிப்புணர்வுடன் வீற்றிருந்து தன்னுணர்வாய்ச் செயல்படுகிறது.

இம்மனம் தனக்குத் தானே அனுபவங்கள் மூலம் தன்னையே விரிவுபடுத்திக் கொள்கிறது. இப்பெரிய மனதின் விரிவாக்கத்தால் ஏற்படும் இன்பமே பேரின்பம். நம்மிடம் கருணையும் அன்பும் உருவாக்கிக் கொண்டாலே பிரபஞ்சத்தை நோக்கி அடியெடுத்து வைக்கிறோம் என்பதை பிரக்ஞை வழியாக ஆத்மார்த்தமாக உணரமுடியும்...

இறக்கைகள் போல் பாரம் தொலைத்து மேகங்களுக்கு மிக அருகாமையில் பறக்கவும் முடியும். பிரபஞ்ச மனம் வாய்க்கப் பெறுவதால் மட்டுமே மனிதவாழ்க்கை உலகளாவிய மனித நேயத்தில் தழைக்கவும் முடியும்.