ஒரு நீண்ட கம்பார்ட்மென்டின் பல அறைகளுக்கு முன்னாலும் அவன் சென்று நின்றான். நிற்கமட்டுமே முடிந்தது. அந்த அளவுக்கு ஆட்களின் கூட்டம்... "ரிஸர்வ்ட் கம்பார்ட்மென்ட்' இரவு தாண்டிவிட்டால் "ஸ்லீப்பிங் கோச்சஸ்' அல்ல என்பதை யாரும் நினைத்துப் பார்ப்பதே இல்லை. வெளிச்சத்தைத் திட்டியவாறு பலரும் கவிழ்ந்து படுத்திருந்தார்கள். எழுந்தவர்களேகூட கால்களையும் கைகளையும் நீட்டியவாறு, தாராளமான வகையில் அமர்ந்திருந்தார்கள். அவன் அடுத்த அறையை நோக்கி நகர்ந்தான். கையில் தூக்கியிருந்த பெட்டியை... எது எப்படியிருந்தாலும்... மேலே வைக்கலாம்.
அந்த அளவுக்கு வசதி இருந்ததே! அவன் அவ்வாறு செய்துவிட்டு, மிதித்து இறங்கக்கூடிய இரும்பு ஏணியைப் பிடித்தவாறு நின்றுகொண்டிருந்தான். கம்பெனியின் வெளிவாசலில் நிற்கக்கூடிய கூர்க்கா அப்போது நினைவில் வந்தான். இந்த "பூத்"தின் காவலாளி தான்தான் என்று தோன்றும்...
தோன்றட்டும். மற்ற கம்பார்ட்மென்ட்களில் இனி தேடி நடக்க முடியாது. நேரம் கிடைப்பதும் கஷ்டமாக இருக்கும்.
வண்டி அசைந்தது.
தூங்குபவர்களும், வாசிப்பவர்களும், கற்பனையில் திளைப்பவர்களும் கொஞ்சம் கொஞ்சமாக குலுங்கிக் கொண்டிருப்பதை அவன் பார்த்தான். இந்த காலகட்டத்தில் ஒரு மனிதனாலும் இன்னொரு மனிதன்மீது கவனம் செலுத்தமுடியாது என்று தோன்றுகிறது. காலையில் எழுந்திருக்கிறான். எப்போதும்போல அன்றாடச் செயல்களைச் செய்கிறான். ஆடைகள் அணிந்து சாலைக்கு வருகிறான். கையைக் காட்டுகிறான். அதிர்ஷ்டம்... பேருந்து நின்றது. குதித்து ஏறினான். இரண்டு வரிசைகளாகத் தொங்கிக்கொண்டு நின்றிருக்கும் மனிதப் பழக்குலைகளில் ஒன்றாக மாறினான். திரும்பிப் பார்த்தபோது, யாரோ சிரித்தார்கள். அங்கும்... யார் அது? அருகில் நின்றிருந்தவனின் வியர்வை வாசனையைத் தாங்கிக்கொள்ள முடியாத நிலை வந்தபோது, கைக்குட்டையை எடுத்து நாசியைப் பொத்திக்கொண்டான். இடித்துக்கொண்டு ஏறியதைப்போலவே இடித்துக்கொண்டு இறங்கவும் செய்தான். அதே வித்தைகளைப் பயன்படுத்தி புகைவண்டியில் ஏறினான். இட வசதி இருந்தால், ஒருவரையொருவர் பார்த்து சிரித்துக்கொள்வார்கள். இல்லாவிட்டால்... கண் ஒவ்வொருவரின் உள்ளுக்குள்தான்....
""சார்...''
யாரோ யாரையோ அழைத்ததைப்போல தோன்றியது. மென்மையான குரல்.... தன்னை அழைப்பதற்கு வழியில்லையென்று அவன் நினைத்தான். அவன் அங்கோ இங்கோ திரும்பிப் பார்க்கவில்லை. இரும்பு ஏணியில் சாய்ந்து நின்றுவாறு சிந்திப்பதில் மூழ்குவதற்கு முயற்சித்துக் கொண்டிருந்தான்.
அவ்வாறு நின்றிருந்தபோது கழுகு மார்பில் வந்து கொத்தி இழுக்கும் "ப்ரோமோதியூஸா' தான் என்று சித்தித்துப் பார்த்தான். இந்த யுகத்தில் எல்லாரும் "ப்ரோமோத்யூஸ்'கள்தான். இல்லாவிட்டால்- யாருமே அல்ல. ஒரு நெஞ்சுப் பகுதி இருப்பதே ஏதோ கழுகுகள் கொத்தி இழுப்பதற்குதான்... நேர்மையாக வாழ்வதென்பது நாகரிகமற்றதாகியிருக்கிறது. ஒன்று- பட்டினி கிடந்து சாகலாம். இல்லாவிட்டால்- எப்படியாவது சம்பாதித்த புகழ்களின்மீது ஆன்மாவைத் தொங்கவிட்டு சாகடிக்கலாம். மரணம் நடக்கப் போவது உண்மை. பிறகு...
இறந்த மனிதர்கள் அனைவரும் ஒன்றுசேர்ந்து அவசர கதியில் இருப்பவர்களைப்போல பயணிக் கிறார்கள். எல்லாரின் குற்றச்சாட்டும்- தங்களுடைய பிணத்திற்குக் கிடப்பதற்கு இடம் போதவில்லை என்பதுதான்.
""சார்...''
மீண்டும் ஒரு மென்மையான குரல்... அது ஒலித்த இடத்தை அவன் பார்த்தான். கடைந்தெடுத்த சங்கு போன்ற கழுத்தைக் கொண்டிருந்த ஒரு இளம்பெண். அவளுடைய உதட்டில் பிரகாசம் தங்கி நின்றிருந்தது. கண்களில் இடியும் மின்னல்களும்...
""சார்... இங்க உட்காரலாம்.''
தான் எதற்கு பதைபதைக்கவில்லையென்று அவன் சிந்தித்துப் பார்த்தான். அந்த அளவுக்கு அந்த கனிவான செயல் எதிர்பார்த்திராததாக இருந்தது. ""சிரமப்பட வேணாம். நான் நின்னுக்கிட்டிருக்கேன்.''
""நிக்கிறதா இருந்தா நிக்கலாம்... எனக்கு சிரமமில்லை.''
அவள் தன்னுடைய மூட்டையையும் பெட்டியையும் எடுத்து மேலே வைத்தபோது இடம் உண்டாகியிருக்கிறது.
வேண்டுமா? வேண்டாமா?
ஒரு நிமிடம் சிந்தித்தான். யாருடைய இரக்கமும் இல்லை. அவனும் பயணச் சீட்டு வாங்கி யிருக்கிறானே! தொடர்ந்து அவள் உண்டாக்கிய அந்த இடைவெளியில் அவன் சென்று அமர்ந்தான்.
அவள் எதுவும் பேசவில்லை.
அவனும் எதுவும் பேசவில்லை.
ஓரக் கண்களால் பார்த்தான்... அவள் விரித்துப் பிடித்திருந்த மாத இதழை. ஆச்சரியம் உண்டானது.
தத்துவ அறிவியல் நிறைந்த ஒரு மாத இதழ் அது.
அதை மேலும் ஒருமுறை பார்க்காமலிருக்க முடியவில்லை. "இந்த வயதிலிருக்கும் ஒரு இளம்பெண்ணுக்குப் பொருத்தமானது திரைப்படம் சம்பந்தப்பட்ட மாத இதழ்தான்.' அவன் தனக்குத் தானே கூறியவாறு மீண்டும் மாத இதழை நோக்கி கண்களைப் பதித்தான்.
""நீங்க எங்க போறீங்க?''
""பம்பாய்க்கு... சார்... நீங்க?''
""நானும்....""
""பிறகு... ஏன் முன்பதிவு செய்யல?''
""திடீர்னு முடிவெடுத்தேன். ஒருவகையில பார்த்தா... இதை மட்டுமில்ல... எதையுமே முன்பதிவு செய்ய முடியாது.''
அவள் சிரித்தாள்.
மாத இதழை மடக்கி வைத்தாள். கைக்குட்டையை எடுத்து கண்ணாடித் துண்டுகளைத் துடைத்தாள். தொடர்ந்து அதை வெளிச்சத்தை நோக்கிப் பிடித்தவாறு எல்லாம் சரியாக இருக்கிறதா என்று பார்ப்பதற்கு மத்தியில் கூறினாள்:
""முன்பதிவு செய்யாமலிருக்கிறது நல்லது. குறிப்பா... பயணம்ங்கறது எப்போ எங்கே முடிவடை கிறதுங்கறது தெரியாமலிருக்கறப்போ... ஆனா சார்... கொஞ்ச நேரம் கடந்தபிறகு நீங்க பிளாட்...பாரத்திற்கு மாறவேண்டிய நிலை உண்டாகும். அவ்வளவுதான் விஷயம்...''
""பார்க்கலாம்...''
அவள் வெளிப்படையாக சிரித்தாள்.
அவனும் சிரித்தான்... வெளிப்படையாகத்தான்...
""நீங்க படிச்ச விஷயம்... தத்துவ அறிவியலா?''
""இல்லை... என் பாடம் உயிரியல். எதுக்கு அந்த பாடத்தை எடுத்தேன்னு கேட்டா பதில் இல்லை. முன்பதிவு செய்யாமலே வண்டியில ஏறிய உங்களைப் போலவே நானும் அந்த பாடத்திற்குள்ள நுழைஞ்சிட்டேன்.''
""நான் முன்பதிவு செய்யாததுக்காக நீங்க கவலைப்பட வேணாம். நான் எந்த சமயத்திலும் உங்ளுக்கு கஷ்டம் தரமாட்டேன்.''
""கஷ்டம் தர்றதைப்பத்தி நான் சிந்திக்கவேயில்லை. உங்களை நீங்களே கஷ்டத்திற்குள்ளாக்கிக்கிறீங்களே என்பதைப் பத்தி சிந்திச்சா சந்தோஷம்.''
அவன் சிரித்தான். அவளும் சிரித்தாள். பிறகு...
அவள் கேட்டாள்: ""பம்பாயில் வியாபாரமா?''
""நான் ஒரு நேர்காணலுக்குப் போறேன். வேலை தேடி...''
என்ன வேலை என்றோ, எங்கு வேலை என்றோ அவள் கேட்கவில்லை. எதற்குக் கேட்கவேண்டும்? இதற்கிடையில் பம்பாயில் அவள் எங்கு வசிக்கிறாள் என்பதையும், என்ன தொழில் செய்கிறாள் என்பதையும் அவன் கேட்டான்.
"தொழில் இல்லை... நேர்காணலுக்குச் செல்லவும் இல்லை' என்பதாயிருந்தது அவளுடைய பதில்.
மிகவும் ரசிக்க முடியாததாக இருந்த அந்த பதில் அவனை வெறுப்படையச் செய்திருக்கவேண்டியது. ஆனால், என்ன காரணத்தலோ... மனதில் உற்சாகம் அதிகரித்துக்கொண்டிருந்தது. கேள்வி களைக் கேட்கவேண்டும். அவள் பதில் கூறவும் வேண்டும். தனக்கு அமர்வதற்கு இடம் தந்த கனிவான செயலுக்காக அவளை வெறுப்படையச் செய்யக்கூடாதே! அவன் சாளரத்தின் வழியாக வெளியே பார்த்துக்கொண்டிருந்தான். அனைத்தும் எவ்வளவோ முறை பார்த்தவைதான். "நான் இந்த வெளிச்சத்தில் நின்றவாறு இறப்பேன்' என்று கூறுவதைப்போல, பாதி கண்களை மூடியநிலையில் நின்றுகொண்டிருக்கும் எருமை, "மரணமடைவதுவரை நான் இதன்மீது சவாரி செய்வேன்' என்று நினைப் பதைப்போல இருக்கக்கூடிய காட்டுக்கிளி, தனியாக கவலையுடன் நின்றுகொண்டிருக்கும் வேப்பமரம்- அனைத்துமே பழையவைதான்.
எதுவுமே நடக்காததைப்போல மாத இதழை வாசித்துக்கொண்டிருக்கும் அவளுடைய பளபளப் பான கழுத்தையே அவன் மீண்டுமொருமுறை பார்த்தான். சிறிய நகைகூட அங்கில்லை. காதில் ஒவ்வொரு வளையம் வீதம் இருந்தது. எருமையின்மீது சவாரி செய்யும் அந்த காட்டுக்கிளிகளில் ஒன்று பறந்து வந்து, அந்த வளையத்தில் அமர்ந்தால் எப்படியிருக்கும் என்ற ஒரு குறும்புத்தனமான கேள்வி மனதில் எழுந்து வந்தது.
திடீரென்று அவள் முகத்தை உயர்த்தினாள்.
அவனுடைய கண்களைப் பார்த்துவிட்டு அவள் கூறினாள்: ""சார்... நீங்க எங்கிட்ட என்னவோ கேட்க நினைக்கிறீங்க. தயங்க வேணாம்.... கேளுங்க.''
""ஏய்.... ஒண்ணுமில்ல...''
""சார்... உங்களைப்போல அறிவுள்ள ஒரு மனிதர் அப்படி சொல்லலாமா?''
அப்போது தான் ஏதோ வளையத்திற்குள் சிக்கிக் கொண்டோம் என்று அவனுக்குத் தோன்றியது.
அவன் கூறினான்: ""நாம் கொஞ்சமும் எதிர்பாராம சந்தித்தோம். சில மணி நேரங்கள்ல ஒவ்வொரு வழியில போகவும் செய்வோம். இதற்கிடையில நான் என்ன கேட்கிறது?''
அவள் சற்று சிரித்தாள். அதில் மிகவும் அதிகமான கிண்டல் ததும்பி நிற்பதைப்போல அவனுக்குத் தோன்றியது. ""சார்... நான் பம்பாயில எங்க வசிக் கிறேன்னு நீங்க தெரிஞ்சுக்க நினைக்கிறீங்களா?''
""தெரிஞ்சிக்கிட்டா சந்தோஷம்... தெரிஞ்சுக்க வேணும்ங்கற கட்டாயம் எதுவுமில்ல.''
அவள் மேலும் ஒருமுறை அந்த கிண்டல் கலந்த சிரிப்பை வெளிப்படுத்தினாள். தொடர்ந்து மிகவும் இயல்பான முறையில் ஆர்வம் உண்டாகும் வகையில் கூறினாள். நான் மலபார் ஹில்ஸில் வசிக்கிறேன். முகவரியை எழுதித் தர்றேன்...''
அவன் வேண்டுமென்றோ, வேண்டாமென்றோ எதுவும் கூறவில்லை. அவள் அதை ஒரு துண்டுத்தாளில் எழுதித் தந்ததும் அவன் அதையே பார்த்துக்கொண்டிருந்தான்.
""நான் என் கதையைச் சொல்லல...'' என்ற அவனுடைய வார்த்தையைக் கேட்டதும், அவள் சற்று சிரித்தாள்.
""அதெல்லாம் எனக்குத் தெரியுமே!''
""எப்படி?''
""அதையெல்லாம் எதுக்கு மறுபடி சொல்லணும் சார்... நீங்க சொல்லாமலே உங்க கதையைக் கேட்டு முழு திருப்தியடைஞ்சிட்டேன்...''
அப்போதும் அவன் அவளுடைய கதைகளைக் கேட்கவில்லை. அவ்வாறு கேட்பதில் ஏதோ மரியாதைக்குறைவு இருப்பதைப்போல தோன்றியது. சிறிது நேரம் கடந்ததும், அவள் தான் பயணம் செய்த இடங்களைப் பற்றிய கதையைக் கூறினாள். எகிப்து, மெசபடோமியா ஆகிய இடங்களின் பூகோளத்தைப் பற்றியும், மனிதர்களைப் பற்றியும் விளக்கிக் கூற ஆரம்பித்தபோது, அவன் கேட்டான்: ""நீங்க அங்க என்ன காரணத்துக்காக போனீங்க?''
""அதுவா? அதை நான் சொல்லல. எங்க அப்பாவுக்கு அந்த இடங்கள்ல வேலை இருந்தது.
அப்பா இறந்த பிறகுதான், நாங்க சொந்த ஊருக்குத் திரும்பி வந்தோம்.'' மத்திய தரைக்கடலின் கரையிலிருக்கும் ஆப்பிள் தோட்டங்களைப் பற்றிய அவளுடைய வர்ணனையில் நல்ல காவியத்திற்குரிய அழகு இருப்பதைப்போல அவனுக்குத் தோன்றியது.
இருக்கைக்கு அடியிலிருந்து கூடையை இழுத்துத் தூக்கினாள். அதிலிருந்து புட்டிகளை எடுத்து வெளியே வைத்தாள்.
சிறிது அதிர்ச்சி உண்டானது. அவள் சிரித்தாள். ""பழச்சாறு...''
கண்ணாடிக் குவளைகளில் ஊற்றி வைத்தாள்.
""குடிங்க...''
""எனக்கா?''
""ஆமா....''
அவள் கண்ணாடிக் குவளையைத் தூக்கிக் காட்டினாள். அவன் அதை வாங்கிப் பருகுவதற்கு மத்தியில் கூறினான்:
""நல்லா இருக்கே...''
""சார்... உங்களுக்கு இது பிடிக்கும்னு எனக்குத் தெரியும்.''
எப்படி என்று அவன் கேட்கவில்லை.
""என் பேரு தெரியுமா?''
அவள் பெயரைக் கூறினாள். அவன் ஆச்சரியத்தை வெளியே காட்டிக்கொள்ளவில்லை. அவளுடைய பெயரைக் கேட்கவுமில்லை.
""எல்லா பெண்களுக்கும் ஒரே பேரு மட்டும் இருந்தா ரொம்ப நல்லா இருக்கும். இல்லையா சார்?''
அதற்குப் பிறகும் அவன் பெயரைக் கேட்கவில்லை.
இதற்கிடையில் யாரெல்லாமோ வந்து ஏறினார்கள். அந்தப் பக்கமும் இந்தப் பக்கமும் பாய்ச்சல்... மூட்டைகள், பெட்டிகள் ஆகியவற்றை நுழைத்துத் திணிக்கும் செயல்கள்... பெர்த் எண்ணைக் கண்டுபிடிப்பதற்கான வேகமான தேடல்... தங்களுடைய தலைவிதியைக் கண்டுபிடிப்பதற்காக முயற்சிக் கிறார்கள் என்று தோன்றியது.
இதற்கு மத்தியில் அவன் யாரிடம் என்றில்லாமல் கூறுவது காதில் விழுந்தது.
""எனக்கு முன்பதிவு தர்றதா சொல்லியிருந்தார்.
அவர் தூங்கிட்டாரோ என்னவோ?''
""சொல்லியிருந்தா கிடைக்கும்.''
சிறிது நேரம் கடந்தபிறகு, பயணச்சீட்டுப் பரிசோதகர் வந்தார். அவனிடம் கூறினார்:
""அடுத்த ஸ்டேஷன்ல இந்த மனிதர் இறங்கிடுவாரு. நீங்க இந்த பெர்த்துல இருந்துக்கங்க...''
""நன்றி.''
சந்தோஷம் உண்டானது.
ஆரவாரம் அடங்கியது. அடுத்த ஸ்டேஷனிலிருந்து அவனும் அவளும் ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்தவாறு அமர்ந்திருந்தார்கள்.
வெளியே... நிழல்கள் நீண்டுகொண்டிருந்தன.
அவற்றைப் பார்த்தவாறு அவள் ஏதோ ஒரு ராகத்தை முனகினாள். அது நீண்டு.... நீண்டு சென்றது. அந்த பாடல் நின்றதும், அவள் இரு பக்கங்களிலும் பார்த்தாள். அவனுடைய கண்கள் நிறைந்திருந்தன.
""சார்... உங்களுக்கு இசைமீது விருப்பமா?''
""சில நேரங்கள்ல... சில வேளைகள்ல அது இதயத்தைக் கடிச்சி பறிச்செடுக்குது...''
அவள் பதில் கூறவில்லை.
அன்று உறங்குவதற்காகப் படுத்தபோது, அவள் சிறிது நேரம் மெதுவான குரலில் பாடினாள்.
அதை ஒரு தாலாட்டுப் பாடலைப்போல அவன் கேட்டவாறு, கண்களை மூடிப்படுத்திருந்தான்.
பம்பாயில் வண்டியிலிருந்து இறங்கியபோது அவன் கூறினான்:
""முகவரியில உங்க பேரை எழுதல!''
""நீங்க கேட்கவுமில்ல.''
அவள் அந்த எழுதப்பட்ட முகவரியை மீண்டும் வாங்கி மேலே பெயரை எழுதிக் கொடுத்தாள்.
அவள் வாடகைக் காரில் ஏறியபோது, அவனைத் திரும்பிப் பார்க்கவில்லை. அவன் வேறொரு வாடகைக் காரில் ஏறி ஓட்டுநரிடம் கூறினான்:
""வேகமா போ.''
அவனுடைய வாடகைக் கார் அவளுடையதை "ஓவர் டேக்' செய்து சென்றபோது, அவனும் திரும்பிப் பார்க்கவில்லை. முந்தைய நாள் அவள் முணுமுணுத்த ராகத்தை அவன் நினைத்து... நினைத்து முணுமுணுத்தான். மானிடக்கடலிருந்து மானிடக்கடலுக்கு... தெருவிலிருந்து தெருவுக்கு... அவன் நகர்ந்து... நகர்ந்து சென்றான். தந்தையின் நண்பரின் வீட்டினை அடைந்தபோது, வயதான தம்பதிகள் அவனை எதிர்பார்த்து நின்றிருந்தார்கள். அவர்களிடம் நலம் விசாரித்தபோதும், அவர்கள் அவனுக்கு உணவு தந்தபோதும், ஆடை அணிந்து நேர்காணலுக்கு செல்வதற்காக காரில் ஏறி அமர்ந்தபோதும் அவனுடைய மனம், முந்தைய நாள் தான் கேட்ட அந்த ராகத்தை முழுமை செய்வதற்கு முயற்சித்துக் கொண்டிருந்தது.
அந்த பெரிய கட்டடத்தின் படிகளைத் தாண்டும்போது, அன்றுவரை உண்டாகியிராத ஒருவகையான கூச்சமின்மையை அவன் உணர்ந்தான். எதை வேண்டுமானாலும் கேட்கட்டும்.... விருப்பம்போல கேட்கட்டும்.
வேகவேகமாக கேள்விகள் வந்தன.
உடனுக்குடன் பதில்களும்...
அனைத்தும் முடிந்து வெளியே கடந்து வந்தபோது சற்று சீட்டியடிக்க வேண்டும்போல அவனுக்குத் தோன்றியது.
பாடலைப் பாடினான்.
தங்கவைத்தவர்களின் வீட்டிற்குத் திரும்பி வந்தபோது, தந்தையின் வயதான நண்பர் கேட்டார்:
""நல்லா பதில் சொன்ன இல்லியா?''
""நல்லா சொன்னேன்... ரொம்ப நல்லா சொன்னேன்...''
தன் வாழ்க்கையில் தான் எந்தச் சமயத்திலாவது இனிமேல் இந்த அளவுக்கு நன்றாக பதில் கூறுவோமா என்று அவன் தனக்குள் கேட்டுக்கொள்ளவும் செய்தான்.
குளித்தான்.
நன்றாக தலைமுடியை வாரி, பவுடர் இட்டான். மார்பில் பெர்ஃபியூமை "ஸ்ப்ரே' செய்தான். பேன்ட்டும் சட்டையும் அணிந்து வெளியே சென்றபோது, எதையோ அடைந்துவிட்டதைப்போல அவன் உணர்ந்தான்.
பாக்கெட்டிற்குள்ளிலிருந்து முகவரியை எடுத்து, மீண்டுமொருமுறை பார்த்துவிட்டு, அவன் வாடகைக்கார்க்காரனிடம் இடத்தைக் கூறினான்.
அழைப்பு மணியை தயங்கித் தயங்கி அழுத் தினான். கதவைத் திறந்து வெளியே வந்த இளம்பெண் என்ன வேண்டும் என்ற அர்த்தத்துடன் அவனைப் பார்த்தாள். அவன் பாக்கெட்டிற்குள்ளிருந்து முகவரியை எடுத்துக் கொடுத்தான்.
""அவ மருத்துவமனைக்குப் போயிருக்காளே!''
மருத்துவமனையின் பெயரை அவள் கூறினாள்.
""அவளுடைய யார் மருத்துவமனையில இருக்காங்க?''
""யாருமில்ல.''
பதில் கூறாமல் அந்த இளம்பெண் உள்ளே தலையை நீட்டினாள். சிறிது நேரம் அவன் அதே இடத்திலேயே நின்றிருந்தான். பிறகு.... திரும்பி நடக்க ஆரம்பித்தபோது, அந்த அறிமுகமான குரல் கேட்டது!
""சார்... வந்து நேரமாச்சா?''
புலர்காலைப் பொழுது கிளிகள் அனைத்தும் ஒன்றுசேர்ந்து ஓசை உண்டாக்கியதைப்போல அவனுக்குத் தோன்றியது.
அவள் அவனை வரவேற்பறைக்கு அழைத்துச் சென்றாள். அஸ்தமன வெளிச்சம் பரவிய நீர்த்தொட்டிக்குக் கீழே அவனும் அவளும் அமர்ந்தார்கள். அவள் மீண்டும் மத்திய தரைக்கடலின் கரையில் வாழும் மனிதர்களைப் பற்றியும் மண்ணைப் பற்றியும் விளக்கிக் கூறினாள். அனைத்தையும் கேட்டவாறு அமர்ந்திருந்தபிறகு அவன் கேட்டான்: ""நீங்க ஏன் ஒரு ராகத்தைக்கூட முணுமுணுக்கல?''
அவள் அதற்கு இவ்வாறு பதில் கூறினாள்:
""சார்... நீங்க எப்போ திரும்பிப் போவீங்க?''
""தீர்மானிக்கல.''
""சார்... உங்களுக்கு முன்பதிவு தேவையில்லையே!''
இருவரும் குலுங்கிக் குலுங்கி சிரித்தார்கள். அவன் புறப்படத்தயாரானபோது அவள் கேட்டாள்:
""சார், நாளைக்கு நீங்க எப்போ வருவீங்க?''
""நாளை வருவேன்னு உறுதியா நினைக்கிறீங்களா?''
""ஆமா.''
பிறகு எதுவும் கூறாமலே அவன் வெளியேறினான். மறுநாள் அதே நேரத்தில் அவன் மருத்துவமனையின் கேன்ஸர் பிரிவை அடைந்து காத்து நின்றிருந்தான்.
அவள் வெளியேறி வந்தாள். அவனை அங்கு பார்த்ததும், அவள் முதன்முறையாக அதிர்ச்சியடைந்தாள். ஒருவரையொருவர் பார்த்தவாறு சிறிதுநேரம் நின்றிருந்தார்கள். அவர்கள் ஒன்றுசேர்ந்து மிகவும் அமைதியாக நடந்துசென்றபோது, அவள் கேட்டாள்:
""பதைபதைப்பு அடைஞ்சிட்டிங்களா?''
""இல்ல.''
பிறகும் மிகவும் அமைதியாக நடந்தார்கள். நீண்ட தூரம் அவர்கள் ஒன்றுசேர்ந்து நடந்தார்கள். நடைபாதைகளில் ஆட்கள் கூட்டம் கூடிநின்று பேசிக்கொண்டிருந்தபோது, அவன் அவர்களுடைய முகத்தையே பார்த்தான்- அவர்களெல்லாம் மனிதர்கள்தானா என்ற அர்த்தத்துடன்.
பூங்காவில், கடற்கரையில், சாலைகளின் சந்திப்புகளில்... அவர்கள் ஒன்றுசேர்ந்து அமைதியாக நின்றார்கள். வீட்டின் வாசற்படியை அடைந்தபோது அவள் கூறினாள்: ""இனி.... போங்க...''
அவன் பதில் கூறாமல் நின்றுகொண்டிருந்தான்.
""இந்த அளவுக்கு கொடூரமான அனுபவத்தை எதிர்பார்க்கல. அப்படித்தானே?''
அதற்கும் அவன் பதில் கூறவில்லை.
சிறிது நேரம் அவனையே பார்த்தவாறு நின்று கொண்டிருந்துவிட்டு, அவள் கூறினாள்:
""வாங்க... ஒரு நாள் இங்க தங்கிட்டுப் போங்க...''
அப்போது அவனுடைய உதட்டில் புன்சிரிப்பு ஊறி நின்றது. அவள் அதைப் பார்த்தாள். அந்த அளவுக்கு கனமான ஒரு கண்ணீர்த் துளியை அவள் அதுவரை பார்த்ததேயில்லை.
______________
மொழிபெயர்ப்பாளரின் உரை
வணக்கம்.
இந்த மாத "இனிய உதய'த் திற்காக மூன்று முத்துக்கு நிகரான மலையாள சிறு கதைகளை மொழிபெயர்த் திருக்கிறேன்.
"பாட்டி' கதையை எழுதியவர் சாகித்ய அகாடெமி விருது பெற்ற நவீன மலையாள இலக்கி யத்தின் மன்னரான எம். முகுந்தன்... நாம் பார்த்திராத ஒரு மாறுபட்ட பாட்டியை மையமாக வைத்து இந்த கதையை எழுதியிருக்கிறார் முகுந்தன். இதை வாசிக்கும் அனைவருக்கும் இதில் வரும் வித்தியாசமான பாட்டியை நிச்சயம் பிடிக்கும்.
"முன்பதிவு செய்யாத பெர்த்' கதையை எழுதியவர் சாகித்ய அகாடெமி விருது பெற்ற மூத்த மலையாள எழுத்தாளர்களில் ஒருவரான உறூப் என்ற பி.ஸி. குட்டிகிருஷ்ணன். மும்பையை மையமாக வைத்து எழுதப்பட்ட கதை. புகைவண்டியில் பயணம் செய்யும் ஒரு மனிதனையும், பயணத்தில் அவன் சந்திக்கும் ஒரு இளம்பெண்ணையும் மைய கதாபாத்திரங்களாக வைத்து, உயிரோட்டத்துடன் கதை எழுதியிருப்பதைப் பார்த்து, நமக்கு அவர்மீது அளவற்ற மதிப்பும் மரியாதையும் உண்டாகும். கதையின் இறுதிப் பகுதியை வாசிக்கும்போது, நம் கண்கள் கண்ணீரால் நிச்சயம் நிறையும்.
"ராதாவின் கடிதம்' கதையை எழுதியவர் மலையாளப் பெண் எழுத்தாளர்களின் துருவ நட்சத்திரமும், சாகித்ய அகாடெமி விருது பெற்றவருமான மாதவிக்குட்டி. ராதா தன் உள்ளத்தில் வாழும் கிருஷ்ணனுக்கு எழுதும் கடிதமே கதை. ஒவ்வொரு வரியிலும் மாதவிக்குட்டியின் திறமை நிறைந்திருப்பதை நம்மால் உணரமுடியும். இந்த அளவுக்கு மாறுபட்ட ஒரு கருவை வைத்துக் கதை எழுதமுடியுமா என்ற வியப்பு நமக்கு உண்டாவதென்னவோ உண்மை.
எனக்குப் பிடித்த இந்த மூன்று கதைகளும் உங்களுக்கும் நிச்சயம் பிடிக்கும்.
"இனிய உதயம்' வெளியிடும் என் மொழிபெயர்ப்புப் படைப்புகளைத் தொடர்ந்து வாசிக்கும் உயர்ந்த உள்ளங்களுக்கு நன்றி.
அன்புடன்
சுரா