லக முத்தமிழ்க் கூட்டமைப்பும் அமெரிக்க முத்தமிழ் இலக்கியப் பேரவையும் இணைந்து, உலக முத்தமிழ் மாநாட்டை சென்னை ஆவடி பருத்திப்பட்டில் உள்ள மகாலட்சுமி கலை அறிவியல் கல்லூரியில் இருநாள் திருநாளாக கடந்த அக்டோபர் 21,22-ல் சிறப்புற நடத்தின.

இங்கிலாந்து, சுவிட்சர்லாந்து, ஜெர்மனி உள்ளிட்ட உலக நாடுகள் பலவற்றில் இருந்தும் பேராளர்கள் பலரும் இந்த மாநாட்டிற்கு வருகை தந்திருந்தனர்.

தமிழ் வளர்ச்சித்துறை இயக்குநர் முனைவர் ந.அருள், தமிழ்நாடு திறந்தவெளி பல்கலைக்கழகப் பதிவாளர் பேராசிரியர் பாரதிபாலன், கவிமாமணி ஆரூர் தமிழ்நாடன், கவிஞர் ஜெயபாஸ்கரன், முனைவர் பாரதி சந்திரசேகரன், முனைவர் சம்பத்குமார், முனைவர் விஜயகுமார், முனைவர்.த.ஜெயச்சந்திரன், முனைவர் மோ.பாட்டழகன், கலைமாமணி டி.கே.எஸ். கலைவாணன், கவிஞர் அமுதா தமிழ்நாடன், முனைவர் ஆதிராமுல்லை, கல்லூரி முதல்வர் முனைவர் இரா.குமுதினி, விஜயலட்சுமி ரங்கேஷ் வெண்பா இரா. பாக்கியலட்சுமி, பாடலாசிரியர் முத்துலிங்கம், அருட்திரு. அருள் பிலிப், கவிஞர் கோவிந்தம்மாள் ரத்தினம், கவிஞர் அன்புச்செல்வி சுப்புராஜு, கவிஞர் பேச்சியம்மாள் பிரியா கா.கிரிஜா, மருத்துவர் கவிநிலா மோகன், பாவலர் நீலகண்ட தமிழன் உள்ளிட்ட தமிழ் ஆளுமைகளுடன், திரைப்பட இயக்குநர்கள் சீனு.ராமசாமி, யார் கண்ணன் உள்ளிட்ட பல்துறை வல்லுநர்களும் இந்த மாநாட்டில் கலந்து கொண்டனர்.

cc

Advertisment

மாநாட்டில் பேசிய தமிழ் வளர்ச்சித் துறை இயக்குநர் ந.அருள் “தாழையாரின் தமிழ்ப்பணி பாராட்டுக்குரியது. அமைப்பு களைத் தொடங்குவது எளிது. ஆனால் தொடர்வது என்பது அரிது. அந்த வகையில் தொடங்கிய அமைப்பு களை எல்லாம் தொய்வின்றி இயக்கிக்கொண்டிருக்கிறார் தாழையார். அடுத்த மாநாட்டை மதுரைத் தமிழ்ச்சங்கத்தில் நடத்த வேண்டும் என்று அழைப்பு விடுக்கிறேன் என்றுவேண்டுகோள் வைத்தார்.

முதல்நாள் நிகழ்வில் 750 பக்கங்களுக்கு மேற்பட்ட ஆய்வுக்கோவை தொகுதி-1 மற்றும் கவிமாமணி வெற்றிப்பேரொளி தொகுத்த ஆண்டுவிழா மலர் ஆகிய இரண்டும் வெளியிடப் பட்டன.

ஐந்து அரங்குகளில் கருத்தரங்க அமர்வுகள் நடைபெற, இவற்றில் பேராசிரியர்களும் கட்டுரையாளர்களும் பங்கேற்று தங்கள் ஆய்வுக்கட்டுரைகளை அரங்கேற்றினர்.

தமிழுக்குத் தொண்டாற்றிவரும் ஆளுமைகள் பதின்மருக்கு வாழ்நாள் சாதனையாளர் விருதுகளும், அமெரிக்க முத்தமிழ்ப் பல்கலைக் கழகத்தில் பயின்றவர்களுக்கு பட்டயமளிப்பும் வழங்கப்பட்டன.

திராவிட முற்போக்குப் படைப்பாளர் பேரவை சார்பில் அதன் தலைவர், துணைத்தலைவர் முன்னிலையில் உலக முத்தமிழ்க் கூட்டமைப்பு நிறுவுநர் தலைவர் தாழை. இரா.உதயநேசனுக்கு செம்மொழிச் செம்மல் என்ற விருதினை, தமிழ் வளர்ச்சித்துறை இயக்குநர் அருளும், முனைவர் குறிஞ்சிவேந்தனும் வழங்கினர்.

இரண்டாம் நாள் நிகழ்வில் பரதநாட்டியம், கண்ணகி வழக்குரை காதை நாடகம் மற்றும் சிறுவர் கவியரங்கம் நடைபெற்றன. தொடக்கக்கல்வி பயிலும் பிள்ளைச் செல்வங்கள் பலர் பாரதி வேடத்தில் பங்கேற்றனர், மேடைப் பயமின்றி மழலை மொழியில் வெளுத்துக்கட்டி அரங்கின் ஆரவார வரவேற்பைப் பெற்றனர்.

பிற்பகல் மகளிர் கவியரங்கம் பாரதியின் கொள்ளுப்பெயர்த்தி உமா பாரதி தலைமையில் நடந்தது. அடுத்து கவிச்சுடர் கல்யாணசுந்தரம், கவிஞர் கவிநிலா மோகன் ஆகியோர் தலைமையில் தன்முனை மற்றும் ஹைக்கூ கவியரங்கங்கள் நடக்க, அடுத்து கவிமாமணி வெற்றிப்பேரொளி தலைமையில் நடைபெற்ற மரபுக் கவியரங்கில் இலண்டன் திருமகள் சிறீபத்பநாதன், சுவிட்சர்லாந்து ரதி கமலநாதன், புதுவை நிக்கி.கிருட்டிண மூர்த்தி, கவிஞர் கோ.பூமணி ஆகியோர் கவிதைபாடினர்.

த.இலக்கியன் தொகுப்புரையோடு தொடங்கிய பிற்பகல் நிகழ்வில், தாழையார் உள்ளிட்டோரின் நூல்கள் வெளியிடப்பட்டன. இவற்றை இயக்குநர் சீனு.ராமசாமி வெளியிட, இயக்குநர் யார் கண்ணன் பெற்றுக்கொண்டார். நூல்கள் வெளியீட்டுக்குப் பிறகு தமிழகமெங்குமிருந்து வந்திருந்த கவிஞர் பெருமக்களுக்கு விருதுகள் வழங்கப் பட்டன.

அமெரிக்க முத்தமிழ் இலக்கியப் பேரவை, அமெரிக்க முத்தமிழ்ப் பல்கலைக்கழகம், அமெரிக்க முத்தமிழ்ச் சிறுவர் பேரவை, அமெரிக்க முத்தமிழ் ஹைக்கூ பேரவை, அமெரிக்க முத்தமிழ் ஆசிரியர் பேரவை ஆகியவற்றின் பொறுப்பாளர்களும், தமிழார்வலர்களும் இணைந்து இருநாள் உலக முத்தமிழ் மாநாட்டை முத்திரை மாநாடாக நடத்தி மகிழ்ந்தனர்.

இதைத் தொடர்ந்து, அடுத்த வாரமே, அக்டோபர் 28, 29 ஆகிய நாள்களில் இலங்கைத் தீவில் உலக முத்தமிழ் மாநாடு நடைபெற்றது. இதிலும் தமிழகத் திலிருந்து பல்வேறு ஆளுமைகள் கலந்துகொண்டனர்.இதில் ஆய்வுக்கோவை தொகுதி- 2 வெளியிடப்பட்டது.கடல் கடந்தும் தமிழலை, முத்தமிழ் மணத்துடன் வீசியது.