பாலம்மாள் வில்லுப்பாடல் என்பது திருநெல்வேலிலி கட்டபொம்மன் மாவட்டத்தைச் சேர்ந்த இருக்கந்துறை என்ற ஊரில் தேவர் சமூகத்தவரின் குறிப்பிட்டதொரு குடும்பத்தாரால் இன்றுவரை வழிபடப்பட்டுவரும் ஒரு கன்னி தெய்வத்தின் கொடை விழாவில் பாடப்பட்ட கதைப்பாடலாகும். இது 10, 11-2-1989-ல் செல்வி திருமதி கிருஷ்ணம்பாளால் பாடப்பட்டது. இவரும் இதே மாவட்டத்தில் மேலச்செவலிலில் இருப்பவர். இதற்குமுன் இவர் இக்கதையை அறியாதவராக இருந்தும் கொடை விழாவிற்கு முன்பு இக்கதையை அறிந்து, புதிதாகக் கட்டிப் பாடியவர். இப்பிரதி ஒலிலிப்பதிவு நாடா உதவியால் வில்லுப்பாட்டு வடிவிலேயே அப்படியே எழுத்தில் கொண்டு வரப்பட்டுள்ளது. இவருக்குக் கொடுக்கப்பட்ட கையெழுத்துப் பிரதியும் கட்டுரையாசிரியரிடம் உள்ளது. இனி பாலம்மாள் கதையை முதலில் அறிந்து கொள்வது அதைப் பற்றிய ஆய்விற்குப் பயனுள்ளதாக அமையும்.
கதைச்சுருக்கம் இருக்கந்துறை என்பது திருநெல்வேலிலி மாவட்டத் தில் இராதபுரத்திலிலிருந்து அஞ்சு கிராமத்திற்குப் போகும் பாதையில் அமைந்துள்ள ஊராகும். இங்கு பால்வண்ணத்தேவர் தனது நான்கு தம்பிமார்களோடு வாழ்ந்து வந்தார். அவருக்கு எல்லாச் செல்வமும் இருந்தும் குழந்தைச் செல்வம் இல்லாமல் போனது. இவர் முருகனை வழிபட்டு வேண்டியதால் பெண் குழந்தை பிறந்தது. அதற்குப் பாலம்மாள் என்று பெயரிட்டு சிறப்போடும் சீரோடும் வளர்த்தனர். அவள் சிறந்த அழகியாக வளர்ந்து புஷ்பவதியானாள். அவளுக்கு பூப்பு நன்னீராட்டு விழா நடத்தி நல்ல முறையில் வளர்த்தார்கள். ஆறுபாகம் கொண்ட தலைமுடியோடு பாலம்மாள் விளங்கினாள். விஜயாபதி என்ற ஊரில் இருந்த வெள்ளைக்கார அதிகாரி வரிப்பணம் வசூல் செயவதற்காக இருக்கந்துறைக்கு வந்தார். வெள்ளைக்குதிரையில் வந்த இவர் பால்வண்ணத்தேவர் வீட்டருகில் வரும்போது அவளது தலைமுடி ஒன்று குதிரையின் காலில் சிக்கிக்கொண்டது. முடியின் அளவையும் அழகையும் பார்த்த துரைக்கு பாலம்மாள் மீது ஆசை வந்தது. தன் ஊருக்கு வந்ததும் பால்வண்ணத் தேவரையும் அவரது தம்பிமார்களையும் வரவழைத்து பெண் கேட்டார். அவர்களால் மறுக்க முடியாமல் ஊருக்குத் திரும்பினர்.
அண்ணனும் தம்பிமார்களும் ஊருக்கு வந்ததும் யோசனை செய்து பார்த்தார்கள். கொடுத்தாலும் குறைவு; கொடுக்காவிட்டாலும் இருக்கமுடியாது. எனவே, பெண்ணைக் கொன்றுவிடுவதே நல்லது என்று முடிவு செய்து ஆறடி ஆழத்தில் குழி தோண்டி மகளிடம் ""திருடர் பயம் என்பதால் இதில் ஒளிந்துகொள்'' என்று கூறி ஏணிமூலமாக இறக்குகின்றனர். அவளும் அவர்களை நம்பி குழியில் இறங்கிவிடவே அவர்கள் ஏணியை எடுத்துவிட்டு மண்ணைத் தள்ளி குழியை மூடிவிடுகின்றனர். அவளும் அழுது புலம்பி அரற்றி சாபம் கொடுத்துவிட்டுச் செத்துப் போகிறாள்.
அவர்களும் ஊரைவிட்டு ஓடிப்போகின்றனர்.
பிறகு, அவர்களது குடும்பத்தில் தொல்லையும் துன்பமும் அதிகரித்து விடுகின்றது. இறுதியில் பாலம்மாளுக்குக் கோவில் கட்டி வழிபட்டால்தான் குடும்பம் தழைக்கும் என்ற முடிவுக்கு வந்து அவ்வாறே இருக்கந்துறைக்குப் போய் வழிபாடு செய்தனர். பாலம்மாளும் கன்னி தெய்வமாக அவர்களின் குடும்பத்தைக் காப்பாற்றி வருகின்றாள்.
இக் கதைப்பாடலால் ஒரு கன்னிப் பெண் அவளது பெற்றவர்களாலேயே கொலை செய்யப்பட்டு எவ்வாறு கன்னி தெய்வமாகவே வழிபடப்பட்டு வருகின்றாள் என்பதை அறிந்து கொள்ளலாம். இதன் மூலம் நமது நாட்டுப்புறத் தெய்வ வழிபாட்டின் தன்மையை அறிந்து கொள்ளலாம். இத்தெய்வங்களின் தோற்றம் குறித்த வரலாறு வாய்மொழிக் கதைகளாகவே விளங்குகின்றன. ஏனெனில் நாட்டுப்புறத் தெய்வங்களில் முன்னோர் வழிபாட்டில் உருவான தெய்வங்கள் பெரும்பான்மையாக உள்ளன. ஒரு குறிப்பிட்ட சமூக அமைப்பில் வாழ்ந்து மடிந்து அல்லது கொலையுண்ட மனிதர்களே தெய்வமாக்கப்பட்டுள்ளனர். எனவே இத்தெய்வங்களைக் குறித்த கதைகளில் உண்மை நிகழ்ச்சிகளும் இணைந்தே காணப்படுகின்றன. நிலவுடைமை சமூக அமைப்பில் பல்வேறு சாதிகளும் ஆளும் வர்க்க அமைப்பு முறைகளும் விதித்த இடத்தையும் அவற்றுக்கிடையே நிலவிய உறவு முறைகள் முரண்பாடுகள் குறித்தும் ஆதிக்க சக்திகளாக விளங்கியவர்கள் உருவாக்கிய நீதிமுறைகளும் அவற்றை மீறியவர்களுக்கு அவர்கள் வழங்கிய தண்டனைகளும் இத்தகைய கதைப்பாடல்களில் வரலாற்று உண்மைகளாக படிந்துள்ளன என்று ஆ. சிவசுப்பிரமணியன் அவர்கள் கூறுவது ஏற்கத்தக்கதே.
இனி பாலம்மாள் கதையை அமைப்பியல் முறைப்படி பகுத்துப் பார்க்கும்போது இவ்வுண்மைகள் தெளிவாகத் தெரிய வருகின்றன.
பாலம்மாள் வில்லுப்பாட்டில் கதைக் கூறுகள்
1. குறை - பால்வண்ணத் தேவருக்குக் குழந்தை
இல்லாத குறை
2. குறை நீக்கும் முயற்சி - ஆண்டவன் முருகன்
கிருபையை வேண்டல்.
3. குறை நீக்கம் - பெண் குழந்தை பிறத்தல்
4. நிறைவு - பாலம்மாள் என்று பெயரிட்டு
வளர்த்தல்
இரண்டாம் அசைவு
1. குறை - பாலம்மாளின் முடியழகைப் பார்த்து
மோகம் கொள்ளல்
2. குறை நீக்கும் முயற்சி - மணம்பேசல்
மூன்றாம் அசைவு
1. குறை - மதம், சாதி அமைப்பு (வெள்ளைக்காரத் துரை)
2. குறை நீக்கம் - கொலை
(குழியில் உயிரோடு புதைத்தல்)
3. வெளியேற்றம் - ஊர்விட்டுப்போதல்
நான்காம் அசைவு
1. குறை - குடும்ப கஷ்டம்
2. குறை நீக்கும் முயற்சி - கோயில் கட்டி
வழிபடல்
3. குறை நீக்கம் - கஷ்டம் தீரல்
4. நிறைவு - பாலம்மாள் கன்னி தெய்வமாதல்
ஏறக்குறைய இதே ரீதியில் 7 கதைப்பாடல்களும் 10 பழ மரபுக் கதைகளும் இனங்காணப்பட்டுள்ளன.
முதல் அசைவு
குறையும். நிறையும் இது பெரும்பாலான கதைப்பாடல்களில் வழங்கப்படுவது. கதைத் தலைவன் அல்லது தலைவி குறை தீர்க்கப்பிறந்தவர்கள்; தெய்வ அருளால் பிறந்தவர்கள். அவர்கள் பத்தோடு பதினொன்று அல்லர். தனிப்பிறவிகள் என்பதை அந்த அசைவு நமக்கு அடிக்கோடிட்டுக் காட்டுகின்றது. அதோடு குழந்தைபேறு என்பது அறிவியல் முறைப்படி மனிதர்களோடு- ஆண்பெண் சேர்க்கையோடு தொடர்புடையதாக இருப்பினும் அது அறிவியலையும் கடந்தது; தெய்வத் தன்மையோடு உறவுடையது. அவன் இன்றி ஓரணுவும் அசையாது, எல்லாம் அவன் செயல் என்ற கருத்தை நேரடியாகவும் மறைமுகமாகவும் தொடர்ந்து சொல்லவும் இவ்வசைவு பயன்படுகிறது.
பிறப்பும் இறப்பும் மனிதனின் கைகளில் இல்லை; அவனது கைகளில் நிகழ்ந்தாலும் அவன் வெறும் கருவிதான் கடவுள் தான் கர்த்தா என்ற கருத்தும் வற்புறுத்தப்படுகிறது. இதனை 5 கதைப் பாடல்களிலும் காணலம்.
இரண்டாவது அசைவு
இதில் குறையும் நிறைவும் வருகின்றது. அதாவது வெள்ளைக்கார அதிகாரி, துரை என்று அழைக்கப் படக்கூடியவர் தேவர் மகள் பாலம்மாள் மீது ஆசை வைக்கிறார். அவளது முடி அழகு ஆறுபாக நீளத்தில் அவரை மோகத்திற்குள் முடிச்சுப் போட்டே விடுகிறது. அதிலிருந்து மீள முடியாமல் போவது ஒரு குறை, இதை பலவீனம் என்று சொல்லமுடியாது. நிறைவு செய்யத்தக்க குறையே பெண்ணாசை. அதற்கு அவருக்குத் தெரிந்த வழி திருமணம் செய்து கொள்ள எண்ணியது. அதற்காக தேவரை அழைத்துப் பேசுகிறார். பெண் கொடுத்தால் வரிப்பணம் கட்ட வேண்டாம்; ஊர் உனக்குச் சொந்தமாகும் என்று பொருளாசை காட்டி நயமாகக் கேட்கிறார். நீ பெண்ணைத் தவறவிட்டால் நான் என்னென்ன செய்வேன் என்று அவர் வெளிப்படையாகச் சொல்லவில்லை. ஆனால் அவரது துரைத்தனத்தை, குதிரை, காவலாளி, அதிகாரம் அனைத்தும் சொல்லாமல் சொல்லிலி அவரை மிரட்டியது.
பாலிலியல் வன்முறை தனிப்பட்ட ஒருவன் தன் பெண்ணாசைக்காகப் பலவந்தப்படுத்தினால் அது கற்பழிப்பு முயற்சி அல்லது பாலிலியல் பலாத்காரம். இதையே இன்னொருவன் அதிகாரத்தின் துணையோடு ஆளும் வர்க்கப் பிரதிநிதியாக நின்றுகொண்டு கட்டளையிடுகிறான். இது நடுவர்க்கத்தின் பாலிலியல் வன்முறையாகும்.
இதைப்போன்று பிற்கால வரலாற்றில் எண்ணற்ற எடுத்துக்காட்டுகள் கதைப் பாடல்களிலும் பழமரபுக் கதைகளிலும் இடம்பெற்றுள்ளன. கிடைக்காதவை ஏராளம். கிடைத்தவற்றுள் வஞ்சி நகர மன்னன் திரைமுகத்தழகி மீதும் குறும்பூர் மன்னன் சங்கு முகத்தழகி மீதும், பள்ளத்தூர் நாடார் பூலங்கொண்டாளின் மீதும், குமரப்பன் தோட்டுக்காரி மீதும், அகம்படிய ஜமீன்தார் பத்ரகாளி மீதும், துலுக்கராசாக்கள் பெரியவூட்டு அம்மன், தங்கம்மா, தாயம்மா மீதும், ஜமீன்தார்கள் வீரசின்னம்மா, பொன்னும்மாரி போத்தியம்மாள், தச்சர், கவுண்டர், சமணர், மருதவாணர், பெண்கள் மீது பாலிலியல் வன்முறையைச் செலுத்துகிறார்கள். அடித்தள மக்கள், தேவர், நாடார், கோனார், தச்சர், கவுண்டர், பொற்கொல்லர், செட்டியார் என்னும் சாதியைச் சேர்ந்தவர்களாக இருக்கிறார்கள் அல்லது ஒரே சாதியாக இருந்தாலும் (பூலங்கொண்டாள் கதைப்பாடல்) ஒரே மன்னர் வகையாக இருந்தாலும் (தோட்டுக்காரி கதைப் பாடல்) வேறு உட்பிரிவுடையவராக அல்லது பலத்தில் மிகுந்தவர்களாக இருக்கிறார்கள். ஆக இப்பாலிலியல் வன்முறையானது அதிகாரம் அல்லது ஆற்றலுக்குப் பட்டவர்கள் மீதே செலுத்தப்படுகிறது.
இப்பாலிலியல் வன்முறை தொன்று தொட்டு மனித வரலாற்றில் நீண்ட நெடுங்காலமாக இருந்துவந்ததற்குத் தொல்காப்பியர் காலமுதலே சான்று கிடைக்கிறது. இதனைத் தொல்காப்பியர் மகட்பாற் காஞ்சி என்பார்.
நிகர்த்து அடல்வந்த வேந்தனொடு
முதுகுடி மகட்பாடு அஞ்சிய மகட்பாலும்
(தொல்பொருட் புறத்துறை 77)
அதாவது நமது மாறுபட்டதன் மேல் வந்த வேந்தனொடு தன் தொல்குலத்து மகட் கொடை காஞ்சியும் என்று இளம்பூரணர் உரை எழுதுகிறார். பெண் கேட்டபோது பெண் கொடுக்க மறுப்பவர் மீது அரசன் படை நடத்திச் சென்று பலவந்தமாகப் பெண்ணைச் சிறையெடுக்கும் வழக்கத்தைத் தொல்காப்பியர் குறிப்பிடுகின்றார். இவ்வன்முறை பிற்காலத்தில் "மறம்' என்னும் பெயரில் கலம்பகத்தில் ஓர் உறுப்பாகச் சேர்க்கப்பட்டுள்ளது. அதில் இது போல் மன்னன் குடியானவர்களிடம் தூதர்கள் மூலம் மணம் பேச அனுப்பியதைக் காணமுடிகிறது.
சங்கால மூவேந்தர்கள் குறுநில மன்னன் பாரியிடம் அவனது மகள்களான அங்கவை சங்கவை ஆகியோரை அவர்களுக்கு மணமுடித்துத் தரவேண்டும் என வற்புறுத்தியபோது பாரி மறுத்து விடுகின்றான்.
அவர்களோடு போரிட்டால் வெல்ல முடியாது என்று தெரிந்திருந்தும் போரிடத் தயாராகிறான். இறுதியில் செத்தும் போகிறான். எனினும் அவனால் மூவேந்தரின் அதிகாரத்தை- அடக்குமுறையை அது பாலிலியல் ரீதியானதாக இருந்ததையும் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.
இந்தப் பாலியல் வன்முறையில் "மணம்' என்று பெயரிடப்பட்டாலும் அது உண்மையான திருமணம் அன்று. அவர்களின் அந்தப்புரத்தில் பத்தோடு பதினொன் றாகவே சேர்த்து கொள்ளப்படுவர். இதனால்தான் தன்னைவிட உயர்ந்த செல்வாக்குடையவர்களாக இருப்பினும் தம் பெண்ணைக் கொடுக்க விரும்பு வதில்லை.
இவ்வாறு மணமுடித்துக் கொள்கிறேன் என்று சொல்லாமல் ""உன் மகள் அழகாக இருக்கிறாள்.
அவளை என்னிடம் அனுப்பி வை'' என்று கட்டளை இடுகிற கல்நெஞ்சர்களும் இருந்தார்கள் என்பதற்குப் பாடல்களில் சான்றில்லை. எனினும் பழமரபுக் கதைகளில் சான்றுகள் உள்ளன.
1. வளையப்பட்டி ஜமீன்
2. குருவிநத்தம் ஜமீன்
3. எட்டயபுரம் ஜமீன்
4. கவுண்டர் ஜமீன்
ஆகியோர் இதற்கு எடுத்துக்காட்டாக விளங்குகின்றனர். இதிலும் பொற்கொல்லர் மகள் 12 வயதே ஆன சிறுமியாக இருக்கிறாள். இதில் அந்த ஜமீன்தாரின் வக்கிரமான பாலுணர்ச்சியும் வெளிப்பட்டு அவரது பாலிலியல் வன்முறை கொடுமையானதாக விளங்குகிறது.
சாதி அமைப்பு
அதிகார வர்க்கத்தினர் பெண் கேட்கும்போது அடித்தள மக்கள் மறுத்து விடுகின்றனர். அவ்வாறு அவர்கள் கேட்டபடி பெண்ணைக் கொடுப்பது அவமானம்- இழிவு- குறைவு எனக் கருதிவிடுகின்றனர்.
இதனால் வரும் விளைவுகளை எதிர்கொள்ளத் தயாராக இருக்கின்றனர். அத்தகைய சாதி அமைப்பு தடை அல்லது குறை என்று வைத்துக்கொள்ளலாம். அவர்கள் அடித்தள மக்களாக இருப்பினும், பிற உயர் சாதிகளோடு ஒப்பிடும்போது தாழ்ந்தவர்களாக மற்றவர் களால் கருதப்பட்டாலும் அவர்களுக்கென்று தனித்த சாதி மானம் இருப்பதாகவே நம்புகின்றனர். அதோடு அதனை எப்பாடுபட்டாவது காப்பாற்றி விடவேண்டும் என்றும் முயலுகிறார்கள்.
இதையே பாலம்மாள் கதை நமக்கு சுட்டிக் காட்டுகிறது. வெள்ளைக்கார அதிகாரி பெண் கேட்டதும் மறுக்கமுடியாத நிலை இருந்தாலும் கொடுக்க விரும்பாமல் பொய் சொல்லிலிவிட்டு ஊருக்கு வருகிறார். தன் தம்பிமார்களோடு கலந்து பேசி தன் மகளை ஆழ குழிவெட்டி அவளை ஏமாற்றி அதனுள் இறக்கி மண்ணால் மூடிக் கொன்றுவிடுகிறார். தனக்கு வந்த குறையை ஒரு கொலையின் மூலம் நீக்கி நிறைவு செய்கிறார். அல்லது தனக்கு ஏற்பட்ட சாதித் தடையை இவ்வாறு மீறுகிறார் என்றும் சொல்லலாம். இதுவும் சரியில்லை. இவர் சாதித்தடையை மீறுவதற்குப் பதிலாக அத்தடையைப் பலப்படுத்துகிறார் என்று தான் சொல்லவேண்டும். சாதி அமைப்பை மீறுவது தடையாக இல்லாமல் குறையாக உள்ளது.
ஏனைய கதைப்பாடல்களிலும் கதைகளிலும் இவ்வாறே தங்களுக்கேற்பட்ட குறையைக் கொலைகள் அல்லது தற்கொலைகள் அல்லது வெளியேறுதல் மூலமே நிறைவு செய்துவிடுகின்றனர்.
1. வெங்கலராசன் - மகளின் தலையை வெட்டுதல்
2. சோழநாட்டுச் செட்டிகள் - மகளை நிலவறையில்
புதைத்தல்
3. எட்டையபுர பொற்கொல்லர் - குழிதோண்டிப்
புதைத்தல்
4. கவசன்குளத்து தச்சர் - குழிதோண்டிப்
புதைத்தல்
5. சீத்தார குளக்கவுண்டர் - வெட்டிக்கொல்லுதல்
மேற்கண்ட 5 பேரும் வெட்டி அல்லது புதைத்துக் கொன்றுவிடுகின்றனர். இவை கொலைகளாகும். துளசியம்மன் கதையில் அவள் பூமியிலிலிருந்து உள்ளே மறைந்தாள் என்பதுகூட பூமியுள் புதைக்கப்பட்டாள் என்ற கருத்தாக வேண்டும். இவற்றில் பாலம்மாள் போன்றவர்கள் கொலை செய்யப்படுவதை விரும்பாமல் பலவந்தமாகக் கொல்லப்படுகின்றனர்;
திரை முகத்தழகி போன்றவர்கள் தம் சொந்த விருப்பத்தோடே கொல்லப்படுகின்றனர்.
இதுபோல் தற்கொலை செய்துகொண்டு தெய்வமானவர்களும் இருக்கிறார்கள்.
1. வெங்கலராசனும் சங்கு முகத்தழகியும்
(விளக்கமில்லை)
2. தோட்டுகாரி - (தீப்பாய்தல்)
3. கன்னியாகா - (தீப்பாய்தல்)
4. கன்னியாகா - (தூக்கு)
5. பொன்னுமாரி - (தூக்கு)
இவர்களின் தற்கொலைகள் ஒரு வகையில் பார்த்தால் கொலைகளே. இவர்கள் தற்கொலை செய்யும்படி வற்றுபுறுத்தப்படுகிறார்கள். வேறுவழியே இல்லாமல் தற்கொலையை நாடுகிறார்கள்; தற்கொலை அவர்கள் மீது திணிக்கப்படுகிறது. ஒருவேளை இவர்கள் தற்கொலை செய்து கொள்ளாமல் போனால் கொலை செய்யப்பட்டிருக்க வாய்ப்புண்டு. பூலங்கொண்டாள் கதையில் மாலை குட்டி நாடார் மறுக்கும்போது பள்ளத்தூர் நாடார்கள் பெண்ணை ஒரு விதவையின் மூலம் கடத்திச் சென்று கொலை செய்து கிணற்றில் போட்டு விடுகிறார்கள்.
மணம் செய்து தரும்படி கேட்காமல் பெண்டாள அனுப்புமாறு ஆணையிட்ட ஜமீன்தார்களுக்கு எதிராகப் போராட முடியாமல் இது போல தம்மை அழித்துக்கொள்வதும் தவிர்க்க முடியாத ஒன்றாக இருந்தது. இவ்வாறு, கொலை செய்யாமலும் தற்கொலை செய்து கொள்ளாமலும் ஊரைவிட்டு ஓடிப்போய் வேறு ஊர்களிலும் நாடுகளிலும் குடிபெயர்வதும் நடந்திருக்கின்றன. பால்வண்ணத்தேவரும் அவரது சகோதரர்களும் ஊரைவிட்டு ஓடிப்போனார்கள். எனினும் எங்கு போனார்கள் என்ற குறிப்பில்லை. எப்போது திரும்பி வந்து கோவில் கட்டினார்கள் என்றும் தெரியவில்லை.
1. வெளியேறியவர்கள் 2. சேர்ந்த இடம்
1. வெங்கலராசன் குறும்பூருக்குப் போதல்
2. அனஞ்ச பெருமாள்கோனார் (தெரியவில்லை)
3. வடபகுதி கோனார்கள் கால்கரை பகுதிக்கு
4. பேணுகொண்டா செட்டியார்கள் (தெரியவில்லை)
5. சோழ செட்டியார்கள் நாஞ்சில் நாட்டுக்கு
6. ஆந்திர கம்மவர்கள் கோபல்ல கிராமத்திற்கு
7. எட்டையபுரம் பொற்கொல்லர்கள் கீழக்கரைக்கு
8. கசவன் குளத்து தச்சர்கள் (தெரியவில்லை)
9. செஞ்சி சமணர்கள் (தெரியவில்லை)
10. சோழநாட்டு மருதவாணர் (தெரியவில்லை)
இவ்வாறு வெளியேறுதல் ஒரு தப்பித்தலே.
எனினும் இதுவே குறை நீக்கும் வழியாக உள்ளது. வேறுவழி இல்லாதபோது அதாவது கொலையோ தற்கொலையோ செய்து கொள்ள விரும்பாதபோது உயிரோடு ஓடிப்போய் விடுகிறார்கள். இவர்களில் கொலை அல்லது தற்கொலைக்குப்பின்னும் வெளியேறியவர்கள் உள்ளனர்.
அவர்கள் தாம் இருந்தால் தமக்கும் ஆபத்து வரலாம் என்று தப்பித்துக் கொள்ளும் எண்ணம் ஓட வைக்கிறது. பால்வண்ணத்தேவர் குடும்பம் அத்தகைய நிலையில் இந்திருக்கிறது. இதைப்போல் வெங்கலராசனும், பேணுக்கொண்டா செட்டியார்களும் சோழ நாட்டுச் செட்டியார்களும் எட்டையபுரம் பொற்கொல்லர்களும் கசவன்குளத்து தச்சர்களும் ஊரைவிட்டு வெளியேறி விடுகின்றனர். தங்கள் பெண் இறந்த ஊரில் இனிமேல் வாழக்கூடாது என்ற வெறுப்பும் இவர்களின் வெளியேற்றத்துக்கு இன்னொரு காரணமாக இருக்கலாம். வெங்கலராசனுக்கு இரண்டாவது மகளும் இருக்க அவளுக்கும் வஞ்சி மன்னனால் ஆபத்து இருக்கிறது என்பதை அறிந்து அஞ்சி வெளியேறினர். ஆனால் குறும்பூரிலும் அவருக்குக் குறை ஏற்படத் தற்கொலை செய்துகொள்ளுகிறார். எனவே வெளியேற்றம் மட்டுமல்ல கொலையும் தற்கொலையும் கூட ஒருவகை சந்தர்ப்பத்தில் பெண்ணுக்குப் பதிலாக நாயைக் (பெண் அல்லது ஆண்) கட்டிப் போட்டுவிட்டு போய்விடுகிறார்கள். இது ஒரு வகை அவமதிப்பு அல்லது தாக்குதல் என்று வைத்துக்கொள்ளலாம்.
அணைஞ்சபெருமாள் கோனார் குடும்பமும், பெரியவூட்டு அம்மன் கோனார் குடும்பமும் இவ்வாறே நடந்து கொள்ளுகின்றன. நாய்தான் உனக்கேற்ற பெண் என்று குறிப்பு காட்டுவதன் மூலம் பாலிலியல் வன்முறை செலுத்தியவனையும் நாயாக்கி விடுவது ஒரு போர்முறை தாக்குதலே.
திருவரங்கக் கலம்பகத்தில் பெண்கேட்டு வந்த தூதுவனிடம், ""குறையுடல்(முண்டம்) ஆலுக்கு ஏற்றது அரசமரமே'' என்று திட்டுவதோடு ""பாசம் வைத்த மறவர் பெண்ணை நேசம் வைத்து முன்னரே பட்ட மன்னர் பட்டதெங்கள் பதிபுகுந்து பாரடா'' என்று மிரட்டுவதும் நேரடியான தாக்குதலாக எடுத்துக் கொள்ளலாம்.
தகாப்புணர்ச்சிக் கொள்கைகள், முறையற்ற பாலுறவு என்று தமிழிலும் அழைப்பர். ஒவ்வொரு சமுதாயத்திலும் மணஉறவு பாலுறவு தொடர்பான விதிகள் உள்ளன. இவ்விதிகளின் அடிப்படையிலேயே அவர்தம் மணத் துணையைத் தேடிக் கொள்ளவோ பாலுறவுகொள்ளவோ இயலும். சமுதாயம் தடை செய்துள்ள உறவுகளுக்கிடையே பாலுறவோ மணஉறவோ நிகழ்ந்தால் அது தகாப்புணர்ச்சி எனப்படும். தந்தை- மகள், தாய்- மகன், சகோதரன்- சகோதரி போன்ற நெருங்கிய இரத்த உறவு தடைசெய்யப்பட்டுள்ளது. தமிழகப் பண்பாட்டின் தகாப்புணர்ச்சி உறவுகளாக 24 உறவுகளை சீ. பக்தவத்சல பாரதி இனங்கண்டுள்ளார். இவை குடும்ப அமைப்பைக் காப்பாற்றும். இதுபோலவே சாதி மண உறவு கொள்வது, தகாப்புணர்ச்சியாகக் கருதப்பட்டு விலக்கினால்தான் சாதி அமைப்பு காப்பாற்றப்படும் என்ற கருத்தை இக்கதைப்பாடலிலின் இந்த அசைவு நமக்குச் சுட்டிக்காட்டுகின்றது எனலாம்.
தெய்வமாதல் பாலம்மாள் கொல்லப்பட்ட பின் பால்வண்ணத் தேவரின் குடும்பம் பல துன்பங்களுக்கும், கஷ்டங்களுக்கும் ஆளாகின்றது. இன்று இராதாபுரத்தில் வாழும் இக்குடும்பத்தைச் சேர்ந்த ஒருவர், ""பாலம்மாளை குழிக்குள் இறக்கி மண்ணள்ளிப் போட்டபோது அவளது கண்ணில் மண் விழுந்து முதலிலில் கண்பார்வை போயிற்று. அதனால் அக்குடும்பத்தில் வீட்டுக்கு ஒருவருக்குக் கண்தெரியாமல் போகும் நிலை ஏற்பட்டது. இன்றுவரை இந்நிலைமை தொடர்கிறது'' என்று கூறினார்.
இவ்வாறு சில துன்பங்கள் நேர்ந்தாலும் இதனை அவர்கள் குறையாக உணர்ந்து குறை நீக்கத்திற்காக கோவில் கட்டி வழிபாடு செய்தனர். கன்னித்தெய்வம் உருவாயிற்று. தெய்வவழிபாட்டிற்கு அடிப்படைக் காரணமே குறை நீக்கம்தான்.
""உண்மையான வழிபாடானது நாடோடியாக அலைந்த மனிதன் பயிர்த்தொழிலில் ஈடுபடத் தொடங்கிய காலத்தில்தான் ஆரம்பமானது. இக்காலத்தில் இனக் குழுக்கள் செழிப்பை பெண் தெய்வமாக வழிபடத் தொடங்கினர். இதனால் தாய்த் தெய்வவழிபாடு தொடங்கியது'' என்பார் பே.ரா. வானமாமலை.
பெண்ணைத் தாயாகவும் கன்னியாகவும் உருவகப் படுத்தி கூறுவது மிகப் பழங்காலத்திலிலிருந்தே மரபாக உள்ளது. எல்லோரையும் பெற்ற தாயாகக் கருதுவதும் அழியாத கன்னியாகக் கருதுவதும் மட்டுமல்லா மல் சுமெரியா, எகிப்து, ஆசிரியா போன்ற நாடுகளிலும் இப்பண்பாட்டினைக் காணமுடியும். பெண்கள் உலகில் எங்கிருந்தாலும் பாலிலியல் ரீதியாக ஒடுக்கப்படுகிறார்கள்.
ஆண்கள் பாலியல் சுரண்டலை தொடரத்தான் செய்கிறார்கள்.