சிறிதுநேரம் சிந்தனையில் மூழ்கிவிட்டு, ஞாபகத்தின் இடைவெளியிலிருந்து ஏதோவொரு சம்பவத்தைப் பெயர்த்தெடுத்தவாறு அவன் கூறினான்:

""அந்த மரம் காய்ப்பதில்லை.''

கிழவனின் குரல் கனமானதாக இருந்தாலும், அதில் மனவேதனையின் அடையாளம் இருந்தது. அவன் அதைப்பற்றி பிறகு எதுவும் கூறவில்லை. எனினும், விளக்கைப் பற்றவைப்பதற்காக அவன் குனிந்தபோது, வாழ்க்கை அனுபவங்களின் கோடுகள் விழுந்த அந்த முகத்தை நான் தெளிவாகப் பார்த்தேன்- அங்கு கண்ணீர்த் துளிகள் வழிந்து இறங்கிக்கொண்டிருந்தன.

தூரத்திலிருந்த மலைகளிலிருந்து குளிர்ந்த காற்று பலமாக வீச ஆரம்பித்தபோது, என் பெரிய ஓவர் கோட்டை எடுத்து நான் உடல் முழுவதையும் மூடினேன்.

Advertisment

கொஞ்சம் கொஞ்சமாக அதிகரித்துக்கொண்டு வந்த இருட்டில், வாசவிலிருந்த பெரிய நாவல் மரம் பெரும்பாலும் கண்ணுக்குத் தெரியவில்லை. லாந்தரின் மெல்லிலிய வெளிச்சத்தில் எங்கள் இருவரின் நிழல்களும் பிணங்களைப்போல வாசலில் நீண்டு கிடந்தன.

தனிமையான அந்த சூழல் யாரையும் பயப்படச் செய்ய பொருத்தமான ஒன்றாக இருந்தது.

ஆனால், எனக்கு ஒரு சுவாரசியம்தான் உண்டானது. சாகச குணம் கொண்ட ஒரு பயணிக்கு அவ்வாறு அல்லாமல் தோன்றுவதற்கு வழியில்லையே! அந்த மலைப் பகுதிக்கு குறிப்பிட்ட எந்தவொரு நோக்கமும் இல்லாமலே சென்றேன். வழியில் நான் பேருந்திலிருந்து இறங்கித் தனியாக நடந்தேன். சுற்றுலா மாளிகையாக இருக்கவேண்டுமென்று கருதிதான் அங்கு ஏறிச் சென்றேன். அங்கு மக்கள் இருப்பதற்கான எந்தவொரு அடையாளமும் தெரியவில்லை. நேரம் சாயங்காலத்தை நெருங்கிவிட்டிருந்தது. நான் கதவைத் தட்டி அழைத்தபோது, அந்த கிழவன் வெளியே வந்தான்.

Advertisment

எனக்கு தவறு நேர்ந்துவிட்டது- அது ஒரு சுற்றுலா மாளிகையல்ல. அங்கு ஆட்கள் வந்து சிறிது காலமாகிவிட்டது. ஒரு காலத்தில் அருகிலிருக்கும் தோட்டத்தைச் சேர்ந்த மேனேஜர்கள் தங்கியிருந்தது அங்குதான். இவ்வளவு தகவல்களும் அந்த கிழவனிடமிருந்து- அவன் அங்குள்ள காவலாளியும்கூட- என்னால் தெரிந்துகொள்ள முடிந்தது.

அந்த இரவுப் பொழுதை அங்கு செலவிட முடியுமா என்று விசாரித்தபோது, அவன் என்னையே சிறிதுநேரம் வெறித்துப் பார்த்தான். பிறகு... ஒரு நீண்ட பெருமூச்சுடன் கூறினான்:

""இங்க இருந்தவங்க பயந்திருக்கிறாங்க. உங்களுக்கு தைரியமிருந்தா...''

ஆழமான ஒரு கிணற்றுக்கு அடியிலிலிருந்து பேசுவதைப் போலிருந்தது அவனுடைய குரல். நான் மெதுவாக சற்று புன்னகைதேன். சுடுகாட்டில்கூட படுத்து உறங்கியிருக்கும் எனக்கு தைரியம் இருக்கிறதா என்று யோசித்தேன்.

எனக்கு நன்கு ஞாபகம் இருக்கிறது. கடந்த மார்ச் மாதத்தில் பவுர்ணமி நாள் அது... நான் குளித்து முடித்து, உள்ளறையில் படுக்கையை விரித்துப் போட்டுவிட்டு, சிறிதுநேரம் பேசிக்கொண்டிருக்கலாமென்று நினைத்து வாசலில் கிழவனுக்கு அருகில் சென்று அமர்ந்தேன். அப்போதுதான் சற்று தூரத்தில் கிளைபரப்பி நின்றுகொண்டிருக்கும் அந்த பெரிய நாவல் மரம் என் பார்வையில் பட்டது. நாவல் பழுக்கக்கூடிய காலம்... என் இளம்வயதில் எங்களுடைய வீட்டுத் தோட்டத்திலிருந்த ஒரு மரத்தின்மீது ஏறி பழங்களைக் குலுக்கி விடுவதை நினைத்துப் பார்த்தேன்.

ஆனால், அந்த மரம் முற்றிலும் வெறுமையாக இருந்தது. ஒரேயொரு காய்கூட அதில் இல்லை.

அதைப்பார்த்ததும் எனக்கு ஏமாற்றம் உண்டானது. விசாரித்தபோது, அவன் கூறினான்:

""அந்த மரம் காய்ப்பதில்லை.''

""அது எந்த சமயத்திலும் காய்ச்சத்தில்லியா?'' நான் மீண்டும் கேட்டேன். நீண்டகாலமாக அங்கு வசித்துக்கொண்டிருந்த வகையில் அவனுக்குத் தெரிந்திருக்குமே! ஆனால் என் கேள்வி காதில் விழாதது காரணமாக இருக்கலாம்-

அவன் பதிலெதுவும் கூறவில்லை. ஏதோ ஆழமான சிந்தனையில் மூழ்கிவிட்டதைப்போல, தூரத்தை நோக்கிப் பார்வையைப் பதித்தவாறு, அவன் அமர்ந்திருந்தான். கடந்து சென்ற ஏதாவது சம்பவத்தை அவன் நினைத்துக்கொண்டிருக்கலாம்.

அரேபிய கதைகளிலும் பிறவற்றிலும் வரக்கூடிய ஒரு சூழல் அப்போது அங்கிருந்தது. மலைச் சரிவிலிருக்கும் பழமையான கட்டடம்... இருட்டு... ஆளரவமற்ற நிலை... அங்கு வந்துசேரும் வெளியூரைச் சேர்ந்த பயணியை வரவேற்பதற்கு வயதான ஒரு காவலாளி!

திடீரென்று என்னை நோக்கித் திரும்பி அவன் கூறினான்:

""நீங்க என்ன கேட்டீங்க? இந்த மரம் ஒரு காலத்திலும் காய்ச்சதிலியான்னுதானே கேட்டீங்க? ஓ... இது அடியிலிருந்து மேலே வரை காய்ச்சிருந்த ஒரு காலம் இருந்தது. ஆனா அந்த நாசமாய்ப்போன சம்பவம்! அது நடந்த பிறகு, எந்த சமயத்திலும் பூ மலரல. இனி எந்தக்காலத்திலும் பூ மலரவும் செய்யாது. மரத்துக்குக்கூட மனம் நொந்து போயிருக்கணும்.''

இவ்வாறு கூறியவாறு அவன் உரத்த குரலில் குலுங்கிக் குலுங்கிச் சிரித்தான். லாந்தரின் மெல்லிய விளக்கொளியில் அவனுடைய கறை பிடிக்காத பற்கள் ஒளிர்ந்தன. அவன் அப்போது ஒரு பைத்தியம் பிடித்தவனைப்போல காணப்பட்டான்.

நான் திகைப்படைந்து அமர்ந்திருந்தேன். அவன் அப்போதும் எதையோ நினைத்து நினைத்து சிரித்துக்கொண்டிருந்தான். அந்த கிழவன் தெளிவில்லாமல் புலம்பிக்கொண்டும் இருந்தான். இறுதியில் அவன் எழுந்து, காற்றில் அசையும் ஒரு எலும்புக்கூட்டினைப்போல என்னை நோக்கி நடந்து வந்து, முகத்தை குனிந்து பார்த்தவாறு கூறினான்:

""இப்பவும்... இவ்வளவு காலம் கடந்து சென்றபிறகும்... எல்லா ராத்திரிகள்லயும் அவன் இந்த மரத்திற்குக் கீழே வர்றதுண்டு. அதனாலதான் இங்க யாரும் தங்கறதில்லைன்னு நான் சொன்னேன். புரியுதா?

அவன் யாரையும் தொல்லைக்குள்ளாக்கியது இல்ல. இருந்தாலும் ஆளுங்க அவனை நினைச்சு பயப்படு றாங்க. உங்களுக்கும் பயம் இருக்கும். உங்க முகம் வெளிறிப்போகுதே...''

அவன் கூறியது உண்மைதான். நான் பயப்பட்டேன். அந்த மரத்துடன் சம்பந்தப்பட்ட ஒரு மனித ஆன்மாவைப் பற்றி அவன் கூறினான். ஒரு பேய்க் கதையின் ஆரம்பம்.... அதன் தன்மை எப்படி இருக்கும்? அமாவாசை இரவு... மலையின் உச்சியிலிருந்து வீசும் குளிர்ந்த காற்றை ஏற்றவாறு, பாதையின் ஓரத்திலிருக்கும் அந்த தனிமையான கட்டடத்தின் வாசலில் அமர்ந்துகொண்டு நான் அதைப்பற்றி நினைத்துப் பார்த்தவாறு, என் சரீரமும் மனதும் ஒரே மாதிரி நடுங்கிக்கொண்டிருந்தன.

அவனுடைய ஒளிர்ந்துகொண்டிருக் கும் கண்கள் என் உள் மனதிற்குள் துளைத்து நுழைந்தன. ஒரு மனநல மருத்துவரைப்போல என்னை மயக்கி, என் சம்மதமே இல்லாமல் அவன் கூற ஆரம்பித்தான்:

""இன்னிக்கு ராத்திரி நீங்க தங்கியிருக்குற இந்த வீடு ஒரு காலத்தில் இங்கிருக்குற தோட்டத்தைச் சேர்ந்த மேனேஜர்கள் வசிச்ச இடமா இருந்தது. அப்போ வெள்ளைக்காரங்கதான் மேனேஜர்களா இருந்தாங்க. தோட்டம் அவங்களோடதுதானே! பிறகு நம் நாட்டைச் சேர்ந்தவங்களும் இந்த பணியில்வர ஆரம்பிச்சாங்க. அப்போ இதன் பாகங்களை உடைச்சு, அளவைக் குறைச்சாங்க.

tree

இங்கு வந்த, நம்ம நாட்டைச் சேர்ந்த முதல் மேனேஜரோட சம்பந்தப்பட்ட ஒரு கதையைத்தான் நான் சொல்லப்போறேன்.

ஒருவேளை... இப்போ அவர் உயிரோட இல்லாம இருக்கலாம். எங்காவது... யாருடைய கையிலாவது அவருடைய கதை முடிஞ்சிருக்கணும். அவரைப் போல் கடுமையான இதயத்தைக்கொண்ட இன்னொரு மனுஷரைப் பார்க்கறதே கஷ்டமான விஷயம்.

அன்புன்னா என்னங்கறதே அவருக்குத் தெரியாமலிருந்தது. வேலைக்காரங்களுக்கு துரோகம் செய்றது இருக்கட்டும்... சொந்த மனைவிக்கும், குழந்தைக்கும் கூட... உங்களுக்கு நம்புறதுக்கு சிரமமா இருக்கும். ஆனா, இவையெல்லாம் என் அனுபவங்கள்...

அப்போ இங்க ஒரு பட்லர் இருந்தார். அதோ... அங்கதான் அவரோட வீடு இருந்தது. இப்போ அதெயல்லாம் இடிஞ்சு விழுந்து கிடக்கு. அவர் ரொம்ப மரியாதை தெரிஞ்சவராவும் உண்மையானவராவும் இருந்தார். அவருடைய திறமையை உயர்ந்த நிலையிலிருக்கும் வெள்ளைக்காரங்ககூட பாராட்டிக்கிட்டிருப்பாங்க.

புதிய எஜமானர் வருகையோட, அந்த மனிதரின் கஷ்ட காலமும் ஆரம்பமாகிட்டது. ராத்திரியில ஒரு நிமிஷம்கூட தூங்கறதுக்கு நேரம் கிடைக்கல. எப்போதும் குடியும் கூத்துமா இருக்கும். அந்த பட்லருக்கு அவை எதிலும் மன வருத்தமில்ல.

அப்படிப்பட்ட நடவடிக்கைகள் அனைத்தையும் முனகல் இல்லாம சகிச்சிக்க அவர் கத்துக்கிட்டிருந்தார்.

இந்த நாவல் மரம்தான் அவருக்கு ரொம்ப அதிகமா துரோகம் செய்தது. அவரோட வாழ்க்கையை நாசமாக்கியதும் இந்த மரம்தான்... ஆனா... வேணாம். நான் ஏன் இந்த மரத்துமேல பழி சுமத்தணும்? எதுவுமே அறியாத மரம்!''

அவன் திடீரென்று தன் கதையை நிறுத்தினான். அந்த கிழவனின் விழிகள் சுற்றிலும் பார்த்தன. அவனுடைய நடவடிக்கையைப் பார்த்தபோது, எதையோ கவனிக்கிறான் என்பதாக எனக்குத் தோன்றியது. மெதுவாக எழுந்து, கனவில் என்பதைப் போல அவன் என்னிடம் கேட்டான்:

""உங்களுக்கு ஏதாவது காதுல விழுதா?''

எனக்கு எதுவுமே புரியவில்லை. நான் "இல்லை' என்பதைப்போல பதில் கூறினேன். உண்மையிலேயே நான் எதையும் கேட்கவில்லை.

அந்த கிழவனின் முக உணர்ச்சி மாறியது.

""அதோ... அவன் வர்றான். காதுல விழற அந்த சீட்டியடிக்குற சத்தம் அவனுடையதான். எவ்வளவு வருஷங்க கடந்தோடிப்போச்சு. ஆனாலும், அவன் வர்றான். அந்த சிறுவன் தன்னோட நண்பனைக் கூப்பிடுறான்.''

நான் அறியாமல் கேட்டுவிட்டேன்.

""எந்த சிறுவன்?''

என்னைப் பார்க்காமலேயே அவன் பதில் கூறினான்:

""பட்லரின் மகன்.''

அந்த கனமான பேரமைதி அங்கு எல்லா இடங்களிலும் பரவிவிட்டிருந்தது. நாங்கள் இருவரும் எதுவும் பேசவில்லை. எனக்கு தாங்கமுடியாத அளவுக்கு சோர்வுண்டானது. உள்ளே சென்று படுப்பதுதான் நல்லதென்று தோன்றியது. ஆனால், கைகளுக்கும் கால்களுக்கும் தாங்கமுடியாத அளவுக்கு கனம்! எழுந்திருக்க முடியவில்லை.

இரவுப் பறவைகள் நாவல் மரத்தின் மேலே கூட்டமாகச் சேர்ந்து ஓசை உண்டாக்கின. அவற்றின் இரைச்சல் சத்தத்திற்கு மத்தியில் எனக்கு அந்த மனிதனின் தெளிவற்ற புலம்பல் கேட்டது.

"அவன் எறிகிறான்! ஏன்? ஒரே யொரு காய்கூட அதனிடம் இல்லை. தான் சென்றபிறகு, அது காய்ப்ப தில்லை என்ற விஷயம் அவனுக்குத் தெரியாதா?'

பறவைகளின் கோலாகலம் நின்றதும், அவன் சிந்தனையில் மூழ்கினான். அந்த அமைதி எவ்வளவு நேரத்திற்கு நீடித்து நின்றது என்பதை என்னால் உறுதியாகக்கூற முடியவில்லை. தூரத்திலிலிருந்து காயம்பட்ட மனித ஆன்மாவின் தேம்பி அழுவதைப் போன்ற சத்தம் காதில் விழுந்தது. படிப்படியாக அது தூரத்தை நோக்கி விலகி... விலகிச் சென்றது.

இப்போது நான் நினைத்துப் பார்க்கிறேன்- ஒருவேளை... அது வெறும் ஒரு தோணலாக இருக்கு மென்று. எனினும், அப்படிப்பட்ட ஒரு அனுபவம் எனக்கு உண்டானதென்னவோ உண்மை.

இடையே கிடைத்த அந்த. ஓய்விற்குப்பிறகு அவன் மீண்டும் கூற ஆரம்பித்தான்:

"மரத்தின் மேலே காய்கள் பழுக்க ஆரம்பித்து விட்டால் போதும்... பிறகு... இங்கு அமைதியே இருக்காது. அருகிலும் தூரத்திலுமிருக்கும் எல்லா குழந்தைகளும் அதற்குக்கீழே கூடி விடுவார்கள். அவர்களுடைய ஒரு கூட்டமே இருந்தது. இரண்டு பேர் முக்கியமானவர்கள்- பட்லரின் மகனும், மேனேஜரின் மகனும். மரத்தின்மீது யாராலும் ஏறுவதற்கு முடியவில்லை. கல் எறிவதுதான் அவர்கள் எப்போதும் செய்யக்கூடிய விஷயம். அதை அவர்கள் இரவும் பகலும் ஒரேமாதிரி சிறிதுகூட நிற்காமல் செய்துகொண்டிருந்தார்கள்.

மரத்தின்மீது கல்லை எறிவது மட்டுமல்ல-

அதற்குக்கீழே குழந்தைகள் கூட்டமாகச் சேர்ந்து நிற்பதைக்கூட மேனேஜர் விரும்பவில்லை. ஒன்றிரண்டு முறை துப்பாக்கியை எடுத்து அந்த மனிதர் அவர்களை பயமுறுத்தக்கூட செய்தார்.

ஆனால், அதனாலெல்லாம் அவர்களுடைய உற்சாகத் திற்கு பங்கமெதுவும் உண்டாகவில்லை. அவர்கள் தங்களுடைய பழைய செயலையே தொடர்ந்து கொண்டிருந்தார்கள்.

குழந்தைகளை விரட்டியடிக்க வேண்டிய பொறுப்பும் பட்லருக்குத் தான்! அவர்களைப் பிரித்து அனுப்பி னால் மட்டும் போதாது... தண்டிக்க வும் வேண்டும். அதுதான் மேனேஜரின் உத்தரவாக இருந்தது. அந்த பட்லர் மிகவும் குழம்பிப் போய் விட்டார். குழந்தைகளின்மீது மிகவும் அதிகமான அன்பு வைத்திருக்கும் ஒருவராக அந்த பட்லர் இருந்தார். அதற்கும் மேலாக... அவருடைய மகனும் எஜமானரின் மகனும் அந்த கூட்டத்தில் இருந்தார்கள். அவர்களை அவர் என்ன செய்யமுடியும்?

அந்த சிறுவர்களின் கூட்டத்தில் தன்னுடைய மகனும் இருக்கிறான் என்ற விஷயமே மேனேஜருக்குச் சற்று தாமதமாகத்தான் தெரியும்.

ஒருநாள் உச்சிப் பொழுதில் நாவல் மரத்திற்குக் கீழேயிருந்தவாறு குழந்தைகள் கல்லை எறிய ஆரம்பித்தபோது, பட்லருக்காகக் காத்திருக்காமல் அவரே வெளியேறிப்போய் பிடிப்பதற்காக ஓடினார். குழந்தைகள் அம்புவிட்டதைப்போல நான்கு திசைகளிலும் பாய்ந்தோடினார்கள். ஓட முடியாததாலோ என்னவோ... ஒருவன் மட்டும் அங்கு நின்றுவிட்டான். அது... மேனேஜரின் மகன். தான் விலக்கிய ஒரு செயலைத் தன்னுடைய மகனே செய்கிறான் என்று அவர் நினைத்திருக்கவில்லை.

அவருடைய கோபம் இரு மடங்கானது. ஒரு கையால் மகனைத் தூக்கி, அவர் அவனை பலமாக அடித்தார். அந்தச் சிறுவனின் அழுகையால், தந்தையின் இதயத்தை இளகச் செய்ய இயலவில்லை.

மகனை வலிய இழுத்தவாறு அவர் வீட்டிற்குச் செல்ல முயற்சித்துக்கொண்டிருந்தார். அப்போதுதான் அந்தச் சம்பவம் நடந்தது. பலமாக ஒரு கல் அவருடைய நெற்றியில் வந்து விழுந்தது. கண்களை நோக்கி வழிந்து இறங்கிய ரத்தத்தைத் துடைத்தவாறு, மிதிபட்ட தாய்ப் பாம்பைப்போல அவர் திரும்பிப் பார்த்தார்- அதை எறிந்தது யார் என்பதைத் தெரிந்து கொள்வதற்காக. அதோ... சில அடி தூரத்தில் சிரித்தவாறு ஒரு சிறுவன் நின்றுகொண்டிருக்கிறான்.

அவனைப் பார்த்ததும், மேனேஜரின் குருதி கொதித்தது.

யார் அது?

அந்த பட்லரின் மகன்!

தன் மகனை விட்டுவிட்டு அவர் முன்னோக்கிப் பாய்ந்தார். ஆனால், ஒரு மின்னலைப்போல அவன் மறைந்துவிட்டான். அவனுக்கு அப்போது வயது பத்துதான். எனினும், அவன் ஏறி இறங்காத காடும் மேடும் மலையும் இல்லை.

ஒருவேளை அந்தச் சிறுவன் நினைத்திருக்க மாட்டான்- தன்னுடைய செயலிலின் விளைவு என்னவாக இருக்குமென்ற விஷயத்தை. தன் நண்பனை அடித்தவனுக்கு எதிராக ஒரு கல்லை எடுத்து எறிந்தோம் என்பதைக் கடந்து அந்த சம்பவத்திற்கு அவன் ஒரு முக்கியத்துவமும் கொடுத்திருக்கப் போவதில்லை. தான் என்ன செய்கிறோம் என்பதை அவன் அறிந்துகொண்டிருந்தால்...?

கோபம் காரணமாக வெறிபிடித்தவரைப்போலான மேனேஜர் உடனடியாக பட்லரை அழைத்துவரச் செய்தார். அன்று அந்த மனிதர் பயன்படுத்தாத கெட்ட வார்த்தைகளே இல்லை. மகனை உடனடியாகத் தனக்கு முன்னால் கொண்டுவந்து நிறுத்தவேண்டுமென்று அவர் உத்தரவும் பிறப்பித்தார்.

ஆனால், சில நாட்களாக அந்தச் சிறுவன் அங்கு எந்த இடத்திலும் கண்ணில் படவேயில்லை. அவன் எங்கு சென்றான் என்ற விஷயம் அவனுடைய தந்தைக்கும் உறுதியாகத் தெரியவில்லை. தன் கண்களில் பட்டிருந்தால், உண்மையிலேயே அவனை எஜமானின் கையில் பட்லர் ஒப்படைத்திருப்பார். பாசமில்லாத காரணத்தால் அல்ல... ஒரு கீழ்நிலைப் பணியாள் என்ற வகையில் அவருக்கு ஒரு கடமை இருக்கிறதே!

நம்பிக்கை இல்லாமலிருந்ததால், மேனேஜரே பட்லரின் வீட்டிற்குள் ஓரிரண்டுமுறை எந்தவொரு முன்னறிவிப்பும் கொடுக்காமலே நுழைந்து செல்லவும் செய்தார். மகனை அங்கு மறைந்துவைத்திருப்பாரோ என்பது அவருடைய சந்தேகமாக இருந்தது. ஆனால், அவருடைய பரிசோதனையால் குறிப்பிட்டுக் கூறும் வகையில்.... எந்தவொரு பயனும் உண்டாகவில்லை.

ஒரு இரவில் பணி முடிந்து பட்லர் வீட்டிற்குத் திரும்பி வந்தபோது, சமையலறைக்குப் பின்னாலி ருந்த புதருக்குள்ளிருந்து யாரோ இரண்டு பேர் பேசிக்கொண்டிருப்பதைப் பார்த்தார். சத்தம் உண்டாக்காமல் அருகில் சென்று பார்த்தபோது, அவருக்குத் தன் கண்களையே நம்பமுடியவில்லை. நிலவு வெளிச்சத்தில் அவருடைய எஜமானனின் மகனும் அவருடைய மகனும் தரையில் சம்மணமிட்டு அமர்ந்து, ஒரு கூடை நிறைய இருந்த நாவல் பழங்களை பங்கு வைத்துக்கொண்டிருந்தார்கள். அவரைப் பார்த்து அவர்கள் சிறுதுகூட பதட்டமடையவில்லை. அவர்கள் சிரிக்க மட்டும் செய்தார்கள்.

எவ்வளவு சிந்தித்துப் பார்த்தும் அவருக்கு அதற்கான அர்த்தம் தெரியவில்லை. அவர்களுடைய "நிலையில்' இருக்கக்கூடிய வேறுபாடு இருக்கட்டும்... அவர்களுடைய மொழிகூட வேறானதாயிற்றே! எனினும், அவர்களுக்கிடையே என்ன ஒரு நெருக்கம்!

எல்லா இரவுகளிலும் அவர்கள் அவ்வாறு சந்திப்பார்கள் என்ற விஷயம் தெரிந்தபோது, அவருடைய இதயம் சத்தமாகத் துடித்தது. மேனேஜர் இதை தெரிந்துகொள்ள நேர்ந்தால், எப்படியெல்லாம் பிரச்சினைகள் உண்டாகும்! மகனை மறைத்து வைத்ததற்காகவும், தன் மகனைத் தவறான வழியில் கொண்டு சென்றதற்காகவும் அவர் சமாதானம் கூறவேண்டிய நிலை உண்டாகுமல்லவா?

அவர் கடவுளிடம் வேண்டிக்கொண்டார்- அந்த விஷயங்களெதுவும் மேனேஜருக்குத் தெரியக்கூடாதே என்று. உண்மையிலேயே அவர் வேதனைப்பட்டார். மகன் எப்போதாவது அந்த மனிதரின் கண்களில் படுவானே? கண்களில் பட்டால்...? அவர் கொடூரமானவர்! எதையும் செய்வார்.

இவ்வாறு ஒவ்வொரு நிமிடமும் பயம், பதைபதைப்பு நிறைந்த அடுப்பில் வெந்தவாறு அதிக நாட்கள் இருக்கவேண்டிய நிலை அவருக்கு உண்டாகவில்லை. அதற்கு மறுநாளே அனைத்தும் முடிவுக்கு வந்துவிட்டன.

மாலை மயங்கிவிட்டிருந்தது. நாவல் மரத்திற்குக் கீழேயிருந்து யாரோ மெதுவாக சீட்டியடிப்பதை பட்லர் கேட்டார். அவருக்கு பாதத்திலிருந்து தலைவரை நடுக்கம் உண்டானது. அது உண்மையிலேயே அவருடைய மகன்தான்! அவர் நினைத்தார்: மேனேஜர் வருவதற்கு தாமதமாகுமென்று நினைத்து ஒருவேளை... அன்று அவன் சற்று முன்பே வந்திருக்கலாம். அவர் பின்பக்கக் கதவைத் திறந்து, மரத்தின் அடிப்பகுதியை நோக்கி ஓடினார்.

ஆனால், பட்லர் தாமதமாகிவிட்டார். அவர் பார்ப்பதற்கு முன்பே, அவனை மேனேஜரின் கழுகைப் போலிருந்த கண்கள் பார்த்து விட்டிருந்தன.

அந்த அப்பாவி மனிதர் ஒரு சிலையைப்போல அங்கேயே நின்றுவிட்டார். உண்மையிலேயே அவருடைய உயிர் அப்போது தராசில் கிடந்து ஆடிக்கொண்டிருந்தது. மேனேஜர் பைக்குள்ளிருந்து பிஸ்டலை வெளியே எடுத்தார். அவர் எப்போதும் அந்த துப்பாக்கியை வைத்துக்கொண்டு நடப்பார். அவருடைய இரும்பைப் போன்ற முஷ்டியில் சிக்கித் துடித்துக்கொண்டிருந்த அந்த சிறுவன் அதைப் பார்த்ததும் அமைதியாகிவிட்டான். அவனுடைய முகம் வெளிறியது. ஆனால், அந்த துப்பாக்கியை அவர் பயன்படுத்தவில்லை. அதை அவர் பைக்குள் இட்டார். எனினும், அவர் அவனை வெறுமனே விடவில்லை. அந்த சிறுவனும் அவனுடைய தந்தையும் விழித்தவாறு நின்றுகொண்டிருக்க, கழுத்திற்கு மேலே ஒரு அடி கொடுத்துவிட்டு அவர் நடந்தார்.

பட்லர் அருகில் சென்றபோது, அவன் இறந்திருக்க வில்லை. அந்த மரத்திற்குக் கீழே அவன் சுய உணர்வில் லாமல் கிடந்தான். அந்த தந்தை மகனைத் தூக்கியவாறு வீட்டை நோக்கி நடந்தபோது, இரவுப் பறவைகள் அழுதன. நாவல் மரங்கள் பழங்களை உதிர்த்தன.

அவன் அவர்களுக்கு மிகவும் பிரியத்திற்குரியவனாக இருந்தான்.

அன்றிரவே அவன் இறந்துவிட்டான். இறப் பதற்குமுன்பு அவன் சில வார்த்தைகளைக் கூறினான்.

அவனுடைய நண்பனையும் நாவல் பழங்களைப் பற்றியும் மட்டும்... அவனுடைய தந்தைக்கு அது எதையும் கவனிக்க முடியவில்லை. அவருக்கு மனநலம் பாதிக்கப்பட்டிருந்தது.

""அந்த சம்பவத்திற்குப்பிறகு எவ்வளவோ வருஷங்கள் கடந்தோடிப் போச்சு! அதுக்குப்பிறகு இந்த மரம் எந்த சமயத்திலும் காய்க்கவேயில்லை. உங்களுக்கு அது ஒரு ஆச்சரியமான விஷயமா தோன்றலாம். ஆனா, ஆச்சரியப்படுறதுக்கு எதுவுமே இல்லை.

எல்லா ராத்திரிகள்லயும் அவன் இங்க வர்றான். அவனோட சீட்டியடிக்குற சத்தத்தையும் கல் எறியறதையும் பலரும் கேட்டிருக்காங்க.''

அவன் தன்னுடைய கதையை நிறுத்தினான். சில விஷயங்களைக் கேட்க வேண்டுமென்று நான் நினைத்தேன். அந்த கதையின் சம்பவங்களில் எனக்கு சந்தேகம் உண்டானது. ஒரு சிறுவனை, மிகவும் சாதாரண காரணத்திற்காக வயதில் மூத்த ஒரு மனிதர் அவ்வாறு தண்டிப்பாரா? ஆனால், ஏனென்று தெரியவில்லை. அந்த கேள்வியை நான் கேட்கவில்லை. அந்த மேனேஜர் அதற்குப்பிறகு என்ன செய்தார் என்பதையும் நான் கேட்கவில்லை.

முன்பு எப்போதோ நடைபெற்ற அந்த கதையை மிகவும் அதிகமான ஈடுபாட்டுடன் கூறிய அந்த கிழவனின் முகத்தைப் பார்த்தபோது, காரணமேயற்ற ஒரு பயம் எனக்கு உண்டானது.

என் பாதுகாப்பற்ற நிலையை நினைத்து பயம் தோன்றியது. நான் கண்களைச் சிமிட்டினேன். காற்று பலமாக வீசிக்கொண்டிருந்தது. அந்த நாவல் மரமும் புதர்களும்... அனைத்தும் நடுங்கின. லாந்தர் விளக்கு தனியாக அணைந்தது. ஒரு குலுங்கல் சிரிப்பு காதில் விழுந்ததைப்போல எனக்குத் தோன்றியது. யாரோ சிரமப்பட்டு நடந்து செல்லும் காலடிச் சத்தமும் கேட்டது. இருட்டில் நான் தட்டுத்தடுமாறிப் பார்த்தேன். அந்த மனிதன் அங்கில்லை. என் அனைத்து பலத்தையும் பயன்படுத்தி நான் உரத்த குரலில் அழைத்துக் கேட்டேன்:

""நீங்க எங்க போயிட்டீங்க?''

அதற்கு மிகவும் தூரத்திலிருந்து பதில் கிடைத்தது.

""முட்டாள் மனிதரே! நான் போறேன். உங்களுக்கு என்னைத் தெரியல. நான்தான் அதிர்ஷ்டமில்லாத அந்த அப்பா! என் மகன்தான் அந்த மரத்தடியில இறந்தவன்!''

அந்த குரல் அங்கு எல்லா இடங்களிலும் எதிரொலித்தது.

அந்த வார்த்தைகள் என் உள்மனதின்மீது விழுந்த அடியாக இருந்தன. நான் எழுந்து சிரமப்பட்டு உள்ளே சென்று படுத்தேன். ஆனால், எனக்கு தூக்கம் வரவில்லை. மனதை நெரிக்கக்கூடிய அந்த தனிமையில் ஒவ்வொரு நிமிடமும் நான் இறந்து, வாழ்ந்துகொண்டிருந்தேன்.

நேரம் புலர்ந்தபோது, எனக்கு நிம்மதி உண்டானது.

புலர்காலைப் பொழுதின் முதல் ஒளிக்கீற்றுகள் அந்த மலைப்பகுதியை வருடியபோது, நான் மூட்டை யுடனும், மார்புப் பகுதியை போர்த்திக்கொண்டும் வெளியேறினேன். இரவில் நடைபெற்ற சம்பவங்கள் ஒரு கெட்ட கனவைப்போல தலைக்குள் கிடந்து புகைந்துகொண்டிருந்தன.

வாசலில் நான் லாந்தர் விளக்கைப் பார்க்கவில்லை. எனக்கு ஒரு அதிர்ச்சி உண்டானது.

முற்றத்திலிறங்கி சாலைக்குச் செல்லும் ஒற்றையடிப் பாதையை அடைந்ததும், நான் திரும்பிப் பார்த்தேன். கள்ளங்கபடமற்ற ஒரு சிறுவனின் விளையாட்டுத் தோழனாக இருந்த அந்த நாவல் மரம் அங்கேயே இருந்தது.

அந்த மரத்தில் ஒரேயொரு பழம்கூட இல்லை.

அந்த மரம் காய்ப்பதில்லை!