சிக்காகோவில் முப்பெரும் தமிழ்விழா மொத்தமாக நான்கு நாட்களாகக் கொண்டாடும்வண்ணம் வடிவமைக்கப்பட்டிருந்ததால், இரண்டாவது நாளான ஜூலை 5 இல், தமிழ்த்தாய் வாழ்த்துடன் தொடங்கப் பட்ட விழா, அடுத்ததாக ஜேம்ஸ் வசந்தனால் திருக்குறள் ஓதல் நிகழ்வாகத் தொடர்ந்தது.
கனடா தமிழ் காங்கிரஸின் "தமிழுக்கு வந்தனம்' நிகழ்ச்சி மற்றும் கிராமிய நடனமும், சிக்காகோ தமிழ்ச் சங்கத்தின் கதம்ப நடனம், நியூஜெர்ஸி தமிழ்ச் சங்கத்தின் நகைச்சுவை நாடகமும், ஆர்.ஆர்.சீனிவாசன் ஆதிச்சநல்லூர் பற்றிய சிறப்புரையும், அதனைத் தொடர்ந்து சீர்காழி சிவசிதம்பரம் அவர்களின் தமிழிசையும், "சங்கத்தமிழ் பாடும் மங்காத தமிழ்மரபு' பொருளில் நாட்டியமும் கோலாகலமாக அரங்கேறின.
அதன்பின்னிட்டு, 10ஆம் உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாடுத் துவக்கவிழா நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து, தமிழர் கலைநிகழ்ச்சிகள் மற்றும் "தாய்நாடு அதில் ஒரு தாய்வீடு' எனும் கருப்பொருளில் இங்கிலாந்து நடனக் குழுவினரால் ஒரு நடன நிகழ்ச்சியும் நிகழ்த்தப்பட்டது.
அடுத்த இருநாட்களான ஜூலை 6 மற்றும் 7-ல், ஒருபக்கம் கலைநிகழ்ச்சிகளும், இன்னொருபக்கம் தமிழ்சார்ந்த கருத்தரங்கமும் நடைபெற்றன.
ஜூலை 6ஆம் தேதி இரவு மெல்லிசை நிகழ்ச்சியாக யுவன்சங்கர் ராஜா தமது குழுவினரான ராகுல்நம்பியார், ஹரிசரண், ஆண்டிரியா மற்றும் விஜய் டிவி புகழ் டி.டி. ஆகியவர்களுடன் மேடையையும் மக்களையும் இசைமூலம் தம்வயப்படுத்தினார்.
அதுபோலவே, ஜூலை 7 மாலை, நம் நாட்டுப்புற இசைக்கலைஞர்களான ராஜலட்சுமி மற்றும் செந்தில் குமார் இணையர், தம் குழுவினரோடு மக்களிசையைப் பாடி, சிறுவர்முதல் பெரியோர்வரையான மனங் களைக் கொள்ளைகொண்டனர். குறிப்பாக, அவர்களது கும்மிப் பாடல்களுக்குப் பார்வையாளர்கள் தாங்களாகவே எழுந்துசென்று மேடையின்முன்பாக வட்டமாகக்குழுமி தாளக்கட்டும் அதன் இலயமும் சிறிதும் மாறாமல் நம் பண்டைய கலையான கிராமத்துக் கும்மியினை அடித்து நடனமாடி அவ் விழாநாளுக்குச் சிறப்பு சேர்த்தனர்.
அதைக் கண்ணுற்றதும், கடல்கடந்து அயலகத் தில் வசித்துவந்தாலும் நம் தமிழர்தம் பாரம்பரியக் கலைகளைக் கைவிடாமல் இன்னும் தொடர்ந்து அதற்குச் சிறப்புச் சேர்த்துவருவது கண்டு மனம் புளகாங்கிதமடைந்தது.
அங்கு குளிரூட்டப்பட்ட அரங்கத்தின் ஒரு பகுதியான தரைத்தளத்திலும், முதல் தளத்திலும், பெரிய வெண்திரையில் காணொலிக் காட்சிகளுட னான கருத்தரங்கம் நடைபெறும் அறைகளுக்குத் தனித்தனித் திணைப் பெயர்களாக குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல் என்று பெயரிட்டு அசத்தி யிருந்தனர்.
முன்னதாக, கடந்த நூற்றாண்டில், 1964-ல் இலங்கைத் தமிழறிஞரான ஐயா. தனிநாயகம் அடிகளாரது முயற்சியால் துவக்கப்பட்ட உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தின் நடப்பாண்டுத் துணைத் தலைவராக இருந்த தமிழகத்தைச் சார்ந்த முனைவர்.
மு.பொன்னவைக்கோ ஐயா இந்தாண்டுமுதல் தலைவராகப் பொறுப்பேற்றுக்கொள்ள அனைவ ராலும் ஏகமனதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
ஆராய்ச்சிக் கருத்தரங்கு நிகழ்ச்சிகளில் முதல் நிகழ்வாக, பன்முகப் புலமை வாய்ந்தவரும், எழுத்தாளரும், பேராசிரியரும், நேட்-ஜியோ சானலின் நிர்வாக உறுப்பினரும், உலகில் சுமார் நூறு நாடுகளுக்குமேல் பயணம்செய்து மனித மரபியலை ஆய்வுசெய்த மரபியலாளருமான அமெரிக்கர் முனைவர். திரு. ஸ்பென்ஸர் வெல்ஸ் என்பவரது மேற்பார்வையில், தொன்தமிழ் நாகரிகம்- மரபு மற்றும் புவியியல், குமரிக் கண்டமும் பண்பாட்டு நாகரிகமும் என்னும் தலைப்புகளில்முனைவர்.
இராமசாமி மற்றும் ஃபிரான்ஸிஸ் முத்து போன்றோர் உரையாற்றினர்.
அதில் மிக முக்கியமாக, மனிதர்கள் ஆதிகாலத்தில் முதன்முதலில் ஆப்பிரிக்கக் கண்டத்தில்தான் தோன்றினர் என்றும், பின்னர் படிப்படியாக ஐரோப்பா, ஆசியா, கிழக்குநாடுகள் எனப் பரவினர் என்றும், காலநிலை மற்றும் தட்பவெப்ப நிலை மாற்றங்களால்தான் மக்கள் அந்தந்த நிலப்பகுதி களுக்குத் தகுந்தாற்போல் புறத்தோற்றமும், நிறமும் அடைந்தனர் என்றும் பற்பல கருத்துகளை முன்வைத்தனர்.
ஆனால் அதற்குப் பார்வையாளர்கள் தரப்பிலிருந்து ஒருவர் எழுந்து ""ஆப்பிரிக்காவிலிருந்து மனிதர்கள் வருவதற்கு முன்பு மற்ற பகுதிகள் அனைத்தும் யாருமற்றுக் காலியாகவே இருந்தனவா?'' என்ற ஒரு கேள்வியை எழுப்பினார்.
அதற்கு இதுவரையான ஆய்வுகள்படி அவ்வாறு தான் என்றும், ஆனாலும் இன்னும் ஆய்வுகள் நடந்துகொண்டேதானே இருக்கின்றன என்றும் பதில் கூறப்பட்டது.
அடுத்தடுத்து, மற்ற கருத்தரங்க அறைகளிலும் நம் தொல்காப்பியம், சங்க இலக்கியம் சார்ந்தும், அறிவியல், சிந்துசமவெளி அகழாய்வு, மற்றும் நம் தமிழ்த் தொன்மக்கள் சார்ந்தும் சுமார் 75-க்கும் மேற்பட்ட கட்டுரைகள் வாசிக்கப்பட்டன. வெநாடுவாழ் தமிழறிஞர்கள் நம் தமிழ் இலக்கியத்தின் சுவையை எவ்வாறெல்லாம் ஆய்ந்துணர்ந்து வெளிக்கொணர்கின்றனர் என்பது இத்தகைய கருத்தரங்குகளின்மூலமே நமக்குப் புலனாகின்றன.
இலக்கியவியல், கலையியல், சொல்லியல், அறிவியல், மருத்துவம், மற்ற மொழிகளோடான நம் தமிழின் பன்முகநோக்கு, தமிழரின் அறிவுக் கோட்பாடு போன்றவை நம் தமிழகப் பேராசிரியர்களாலும், முனைவர்களாலும்,வெளிநாட்டுத் தமிழறிஞர் களாலும் மிகச்சிறப்பாக எடுத்துக்காட்டப்பட்டு, தமிழ்மொழி வளர்ச்சி அடுத்த கட்டத்திற்கு நகர்த்திச் செல்லப்பட்டதென்பது கண்கூடு.
ஒரே நேரத்தில், பல அறைகளில், தனித்தனித் தலைப்புகளில் கருத்தரங்கம் நடைபெறுவதால் என் போன்ற அறிவுத் தாகமும், தமிழ்ச்சுவை தேடலும் கொண்டோர் அனைத்து நிகழ்வுகளையும் ஒருசேரப் பார்க்க இயலாமல் போனது ஒரு மாபெரும் வேதனைதானெனினும் வேறு வழியின்றி ஏற்றுக்கொள்ள வேண்டிய நிர்ப்பந்தம்தான்.
அதுவும் தற்போதைய நம் கீழடி அகழாய்வுகளின் மூலம் வெளிப்படும் தொன்வரலாறு கூறுவது ஏராளம். அதற்கு முத்தாய்ப்பாக, "கீழடி நம் தாய்மடி' எனும் மையப்பொருளில் அனைத்து நிகழ்வுகளும் சிறப்பாக நடந்தேறியதென்பது உலகளாவிய நம் ஒட்டுமொத்தத் தமிழினத்திற்கே பெருமை சேர்த்தது எனலாம்.
இந்நான்கு நாட்கள் நடைபெற்ற முப்பெரும் விழாவில் அமெரிக்கவாழ் தமிழர்கள் மேற்கொண்ட கடும்பணிகளையும், அவர்கள் தமிழ்மொழிக்காகச் செய்துவரும் அருந்தொண்டையும் நாம் ஒருசில வார்த்தைகளில் எழுதிவிட இயலா.
தமிழர் மரபுக்கே உரித்தான விருந்தோம்பலுடன் விழா இனிதே நிறைவுற்றது.
இதுகாறும் சிக்காகோ என்று நினைத்ததுமே தம் சிறந்த சொற்பொழிவால் நம் இந்திய நாட்டின் பெருமையை உலகம்போற்றும் வண்ணம் நிலைநிறுத்திய விவேகானந்தர் நம் நினைவில் வந்துபோவதை எவ்வாறு தவிர்க்க இயலாதோ அதேபோல் இந்த முப்பெரும்விழா நினைவுகளையும் மறக்கவும் தவிர்க்கவும் இயலாது.
வாழ்க நம் செந்தமிழ்!