பல்லாயிரமாண்டு தொன்மையான, வளமான, ஆழமான வேரில் தன்னை நிலைநிறுத்திச் செம்மாந்திருக்கும் தமிழாகிய செம்மொழிக்குச் சிறந்த அடையாளம் சங்க இலக்கியங்கள். சங்க இலக்கியம் பேசாத பொருளில்லை. சங்க இலக்கியம் பேசாத அறிவியலும் இல்லை எனுமளவுக்கு நிரம்பிவழியும் அமுதசுரபியாய்த் திகழ்கிறது. கற்றல் நிலையில் சொற்சுவையிலும் பொருட்சுவையிலும் எடுத்துரைப்பிலும் வளமானதொரு அற்புதத்தைக் கொண்டிலங்குவது சங்க இலக்கியங்கள். எளிமையும் நுட்பமும் அழகியலும் இதன் மேன்மைகூறும். இக்கட்டுரை சங்க இலக்கியச் சொல்லாளுமையின் வளத்தை ஒருசோற்றுப் பதமாய் எடுத்துரைக்க முயல்கிறது.
சங்க இலக்கியச் சொற்கள் மொழியின் அடிப்படை சொல்லாகும். ஒலிகளால் ஆகிச் சொற்பொருளை உணர்த்துகிற மொழியின் அலகான சொல்லின் வரையறை குறித்துப் பல்வேறு அறிஞர்கள் பல்வேறு நிலைகளில் விளக்கியுள்ளனர்.
பொருள் தரும் மிகச்சிறிய பேச்சுக்கூறு என்பது அரிஸ்டாடிலின் கருத்தென அறிஞர் உல்மென் கூறுகிறார். தனித்து இயங்கும் இயல்புடைய பொருள்கொண்ட மிகச்சிறிய கூறு சொல் என்பது ப்ளூம்ஃபீல்டின் கருத்தாகும். இத்தகைய சொல் வகைப்பாட்டை தமிழ் இலக்கண மரபில் இலக்கணச் செயற்பாடு, சொல் வழங்கு நில எல்லை, பொருள் உறவு எனும் அடிப்படையில் விளக்கப்படுகிறது. இலக்கணச் செயற்பாடு என்பது அஃறிணை, உயர்திணை சார்ந்திருப்பதைத் தொல்காப்பியம் சுட்டும். பெயர், வினை, இடை, உரி எனவும் விரித்தும் தொல்காப்பியம் பேசுகிறது. நில எல்லை அடிப்படையில் இயற்சொல், திரிசொல், திசைச்சொல், வடசொல்லென்றும் உணர்த்தப்படுகின்றன. பொருள் அடிப்படையில் வினைவேறுபடு, பலபொருள் ஒருசொல், வினை வேறுபடா பலபொருள் ஒரு சொல் எனவும் விரிந்துபோவதும் நாம் அறிந்ததே.
சொல்லுக்கும் பொருளுக்குமான உறவு என்பது முக்கியமானது. இச் சொற்பொருள் கூறுகளை கருத்துப்பொருள், குறிப்புப்பொருள், பயன்பாட்டு எல்லை என மொழியியல் அறிஞர் சுகுஸ்தா வகைப் படுத்தியுரைப்பர். சொல்லுக்கும் அது குறிக்கும் பொருளுக்குமான இடைப்பட்ட உறவுகளின் நிலையில் பலவகைப் பொருள் உறவுகள் வகைப்படுத்தப்பட்டுள்ளன. அவைபல்பொருண்மைச் சொற்கள்உருவொப்புமைஒருபொருட் பலசொற்கள் எதிர்ப்பொருண்மை மீச்சொல், உட்பொருட்சொல் என்பனவாகும்.
இவ்வகைப்பாட்டைச் சங்க இலக்கியம் முழுமையும் காணமுடிவது என்பதே அதன் பல்லாயிரம் ஆண்டு பழமைக்கு மேலும் அணி சேர்ப்பதாகும். சிலவற்றைச் சான்றாகக் காணலாம். பல்பொருண்மைச் சொற்கள் என்பனவற்றுக்கு- கை எனும் சொல்லைக் குறிப்பிடலாம். கை என்பது கரம், சட்டையின் கை, காம்பு, கைப்பிடி, விசிறிக்காம்பு, நாற்காலியின் கை, கைமரம், புகைவண்டியின் கைகாட்டி, கைப்பிடி அளவு, யானையின் துதிக்கை எனும் பல பொருள்களில் பயன்படுத்தப்படுகிறது. இவ்வாறே கண் என்பதும் பல்பொருண்மைச் சொல்லுக்குச் சிறந்த சான்றாகும். விழி, கண்ணோட்டம், நுங்கின் கண், வலைக்கண், தேனடைக்கண், மயிற்பீலியின் கண், முலைக்கண், ஊற்றுக்கண், முரசில் அடிக்கும் இடம், மூங்கில், கரும்பு இவற்றில் காம்பு பொருந்தியிருக்கும் இடம், துண்டு எனப் பலபொருட்களைக் கொண்டதாகும்.
உருவொப்புமை சொல் என்பது உருவத்தில் ஒத்துப் பொருளில் வேறாகி நிற்பது. இதனை ஒத்தவடிவமும் வேறுபட்ட பொருளும் கொண்ட சொல் என சுகுஸ்தா கூறுவார். சான்றாகப் படி எனும் சொல்லைக் குறிப்பிடலாம். படி என்பது படிக்கட்டு, தானியங்களை அளக்கும் படி, படித்தல் எனும் வேறுபட்ட பொருள் களைக் கொண்டதாகும்.
ஒருபொருட் பலசொற்கள் ஒரே பொருளைக்குறிக்கும் பலசொற்களின் தன்மையை இதற்குச் சான்றாகக் குறிப்பிடலாம். யானை எனும் பொருளைக் குறிக்கச் சங்க இலக்கியத்தில் உம்பல், குஞ்சரம், கோட்டுமா, கைம்மா, வேழம், உவா, கரி, பிடி ஒவ்வொரு காலகட்டத்தில் உருவாக்கப்பட்டுள்ளமையை அறியலாம்.
எதிர்ப்பொருண்மை என்பது சொற்பொருளில் முரண் அல்லது எதிர்த்தன்மையைக் காட்டுவதாகும். சான்றாக வாழ்வு-சாவு, மேல்-கீழ், கிழக்கு-மேற்கு, பிறப்பு-இறப்பு போன்றவற்றைக் குறிப்பிடலாம். இந்த எதிர்ப்பொருண்மையே முழு எதிர்ச்சொல் (பிறப்பு, இறப்பு) எனவும், படித்தர எதிர்ச்சொல் (துன்பம், இன்பம்) எனவும், பொருள் முரண் (பகல், இரவு) எனவும் எதிர்விளைவுச் சொற்கள் (வாங்குதல், விற்றல்) எனவும் வகைப்படுவதையும் இதற்கான சான்றுகளை சங்க இலக்கியம் கொண்டி ருப்பதையும் கண்டறியலாம்.
இதேபோன்று மீச்சொல், உட் பொருட்சொல் என்பன ஒரு பொருட்புலத்தில் அடங்குதல், ஒரு பொருட் புலத்தில் அடக்கிக்கொள்ளுதல் எனும் நிலையில் அமையும். இதையே அடங்கு சொல், அடக்குச் சொல் எனவும் குறிப்பிடலாம். சான்றாகத் தாவரம் என்பது அடக்குச்சொல்லாகவும் அதனும் மரம், செடி, கொடி என்பன அடங்கு சொற்களாகவும் அமையும். மேலும் ஒரே சொல் மீச்சொல்லாயும் உட் பொருட்சொல்லாயும் இயங்கும். மரம் என்பது அடங்குச் சொல்லாக இருக்கும். அதன்கீழ் பல்வகை மரங்கள் மா, பலா, வாழை என வருகையில் மரம் என்பது அடக்குச் சொல்லாகவும் இயங்கும். இத்தகைய தன்மைகள் யாவும் சங்க இலக்கியத்தில் இருப்பதை எண்ணும்போது சொல்லாளுகையின் திறனையும் வளத்தையும் நாம் புரிந்து கொள்ளலாம் சங்க இலக்கிய சொல்லாளுகை வளம் சொல், சொல்லின் பொருள், சொற்பொருள் உறவு, வகைகள் எனும் நிலையில் அமைந்துள்ள அத்தனைக் கும் சங்க இலக்கியத்தில் விடையுள்ளது. இதற்குக் காரணம் மொழியின் வளத்திற்கு அடிப்படைக் காரணமாக அமையக்கூடிய சொல்பெருக்கமே. இத்தகைய சொல்பெருக்கத்தின் வளமே இன்றுவரை சங்க இலக்கியத்தின் அழியாத் தன்மைக்கும் நிலைபேற்றுக்கும் வேராக அமைவன. மேலும் இத்தகைய சொல் பெருக்கத்திற்குச் சொல் உருவாக்கம் முக்கியமாக அமைகிறது. சங்க இலக்கியச் சொல்லுருவாக்கத்தைப் பார்க்கிறபோது தமிழனின் பல்வகை ஆற்றலும் ஆளுமையும் மிகத் துலக்க மாகப் புலப்படும். அவ்வகையில் இத்தகைய சொல்லாளுமையின் வளத்தை சொல்லுருவாக்கத்தின் வழியாகக் கண்டு சுவைக்கலாம்.
தமிழின் சொல்லாக்கம் எனும் நிலையில் ஆக்கப்பாடு என்பதைக் குறிப்பிட்டுச் சொல்லலாம். இந்த ஆக்கப்பாடு என்பது தன்னில் மாற்றம் அடைபவை, விகுதி சேர்பவை ஆகிய இரண்டையும் உள்ளடக்கியதாகும். தன்னில் மாற்றம் என்பது பொருள் விரிவுபெறுதல், நீளல், போலி, விகாரம் எனும் கூறுகளைக் கொண்டமைவதாகும். இவை விரிப்பின் கட்டுரை விரியும். இவற்றின் விரிவஞ்சி சிலவற்றை மட்டும் சுருங்கக் காணலாம். மேலும் இவை எளிமையான புரிதலுக்கும் தேடலுக்கும் வழியமைக்கும்.
கூட்டுச்சொற்கள் எனும் நிலையில் வெவ்வேறு பொருள் தரும் சொற்கள் இரண்டும் இரண்டிற்கு மேற்பட்ட சொற்களும் இணைந்து உருவாகின்றன. இவற்றில் சில தனித்தன்மைகளைக் காணலாம்.
அ. பொதுச்சொல்லைக் குறிப்பிட்ட பொருள்தரும் சிறப்புச் சொல்லாக்குதல்.
ஆ. ஒன்றுக்கு மேற்பட்ட சொற்கள் சேர்ந்த கூட்டாக்கம்.
அ. பொதுச் சொல்லைச் சிறப்புச் சொல்லாக்குதல்.
மா, கல், கண், களம் போன்ற சொற்களை எடுத்துக் கொள்ளலாம். முதலில் மா எனும் சொல்லைக் கருதுவோம்.
சங்க இலக்கியத்தில் மா என்பதும் மான் என்பதும் விலங்கைக் குறிக்கிற பொதுச் சொற்கள். இவை தம் முன்னே சேர்க்கப்படும் சொல்லைப் பொறுத்துப் பொருள் மாற்றம் அடைகின்றன. அஃதாவது விலங்கு எனும் பொதுப்பொருளிலிருந்து குறிப்பிட்ட விலங்கைக் குறிக்கும் தனிச்சொல்லாக மாற்றம் அடைகின்றன.
எந்த விலங்கைக் குறிப்பிடவேண்டுமோ அந்த விலங்கின் பண்பு, செயல், சிறப்பான உடல் உறுப்பு இவற்றைக் குறிக்கிற சொற்களை மா அல்லது மான் எனும் பொதுச்சொற்களோடு சேர்த்துச் சிறப்புச் சொல்லாக மாற்றியுள்ளனர்.
பாய் + மா = பாய்மா (குதிரை) (கலி.139-13)
கோடு + மா = கோட்டுமா (யானை) (கோடு-தந்தம்) (ஐங்.282-5)
உளை + மான் = உளைமான் (சிங்கம்) (அக.102-1) (உளை- பிடரி)
முளவு +மான் = முளவுமான் (முள்ளம் பன்றி) (முளவு-முள்)( அக.182.8)
கல் எனும் பொதுச்சொல் கடினத்தன்மையுடைய பொருள் எனும் பொதுப்பொருள் உடையது. இதனுடன் துறு என்பது சேர்த்து துறுகல் எனும்போது அது பாறையைக் குறிக்கிறது (குறு.13.3) பெருமை எனும் சொல்லுடன் சேர்ந்து பெருங்கல் எனும்போது அது இமையத்தைக் குறிக்கிறது (புற.17.1), வெண்மை எனும் சொல்லுடன் சேர்ந்து வெண்கல் எனும்போது அது சாப்பிடும் உப்பைக் குறிக்கிறது (அக.140.7).
இதுபோன்று களம் எனும் சொல்லுடன் சேர்ந்து பொருள்தரும் சொற்களைப் பின்வருமாறு காணலாம்.
அடு + களம் = அடுகளம் (போர்க்களம் - புற.58.29)
அவை+களம் = அவைக்களம் (புற.283.7)
எனவும் இதேபோன்று செருகளம், பொருகளம், போர்க்களம் எனவும் விரியும் சொற்களையும் குறிப்பிடலாம்.
அடுத்து கூட்டாக்கம் எனும் நிலையில் பொதுச் சொல் தவிர்த்து பல சொற்கள் பண்பு, செயல், அமைப்பு, தனித்தன்மை, சிறப்பு, தொழில், சமுதாயச் சூழல் எனப் பலவற்றையும் காரணமாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளமையும் சிறப்புறக் காணலாம்.
உரிமை மைந்தர் (கணவர்) (பரி.தி.2.49). சிறுபுறம் (முதுகு)(அக.145.20) சுடுமண் (செங்கல்) (பெரும்.405) அவிழ்பதம் (சோறு) (புற.159.12) பாப்புப்பகை (கருடன்) இதுபோன்று ஏராளமான சொல் உருவாக்கங்களைக் கூட்டாக்கம் நிலையில் காணலாம். மேலும் தொடராக்கம் எனும் நிலையில் மயிர்குறை கருவி (கத்தரிக்கோல்), அறுகால் பறவை (வண்டு), ஏரின் வாழ்நர் (உழவர்), கவைமுட்கருவி (அங்குசம்) கழிகலமகளிர் (விதவை) கால்கழிகட்டில் (பாடை), நேர்வாய்க் கட்டளை (சாளரம்) எனச் சான்றுகளை அடுக்கிக்கொண்டே போகலாம்.
மேற்சுட்டிய அத்தனை சொற்களும் வெவ்வேறு காரணங்களோடு உருவாக்கப்பட்டுள்ளமை சங்க இலக்கியத்தில் சொல்லாளுகையின் வளத்தைப் பறைசாற்றுவதாகும். பாப்பு என்பது பறவையின் குஞ்சைக் குறிப்பதாகும் அதற்குப் பகை எனும் பொருளில் கருடனைக் குறிக்கும் சொல், இரு கால் பறவைகளிலிருந்து வேறுபட்டு ஆறு கால்களையுடையதால் அறுகால்பறவை என்பது வண்டிற்கும், கால்கள் கழிக்கப்பெற்ற கட்டிலைப்போன்ற தோற்றமுடையது எனும் பொருளில் பாடையையும், அணிகலன்கள் நீக்கப்பெற்ற மகளிர் எனும் நிலையில் கழிகலமகளிர் என்பது விதவையையும் எனப் பொருள்படுத்தி உருவாக்கியிருப்பது தமிழனின் சொல்லாளுமைத் திறனை எண்ணி வியப்புறவைக்கும்.
சங்க இலக்கியங்களும் சரி அவற்றை உருவாக்கிய தமிழனின் ஆளுமைப் பண்பும் சரி எவற்றோடு ஒப்பிடமுடியாத மிக உயர்ந்த தன்மை கொண்டவை. இவை இக்கட்டுரையில் கடுகளவே எடுத்து விளக்கப்பட்டுள்ளது. மேலும் கடல்போன்று பெருக்கமுடைய சொல்வளத்தோடு பல்லாயிரம் ஆண்டு தொன்மையோடும் இலங்கும் தமிழ்மொழி உலகின் மொழிகளுக்கெல்லாம் தலைமொழி என்பதில் பெருமை கொள்வோம். அதை என்றும் காத்துநிற்போம்.