தென்றிசையைப் பார்க்கின்றேன்;

என்சொல்வேன்! என்றன்

சிந்தையெலாம் தோள்களெலாம்

பூரிக்குதடா!

Advertisment

-என்று அன்றைய இலங்கையில் ராவணனால் தமிழாட்சி சிறந்திருந்ததை எண்ணிப் பூரித்துப் பாடினார் புரட்சிக்கவிஞர் பாரதிதாசன்.

அந்த இலங்கையில்,அதன் ஆதி இனமான தமிழினம் இன்று எப்படி இருக்கிறது என்பதை உணரும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. அதை அப்படியே இங்கு பதிவுசெய்கிறேன்.

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் நூற்றாண்டு விழாவில் "சமயங்களும் சமகால உரையாடல்களும்" என்னும் தலைப்பில் ஆய்வுரை நிகழ்த்திட அண்மையில் அழைக்கப்பட்டேன்.

Advertisment

சுற்றுலா பயணிகளாகச் செல்வோரிடம் அதிகாரிகளின் உசாவுகள் பெரிதாக ஒன்றும் இல்லை. ஆனால் எங்களை இந்திய அதிகாரிகளேகூட அதிகம் கேள்விகள் எழுப்பினர். அழைப்புக் கடிதத்தில் யாழ் பல்கலையின் கிறிஸ்தவ- இசுலாமிய ஆய்வுத் துறை என்று குறிப்பிடப்பட்டிருந்தது அவர்களை உறுத்தியிருக்க வேண்டும். இந்து ஆய்வுத் துறை என்று போட்டிருந்தால் எங்களிடம் அதிகம் கேள்விகள் கேட்டிருக்க மாட்டார்கள். இலங்கை அதிகாரிகளும் சளைக்காமல் வினாக்களை எழுப்பினர். இந்துக்கள் உள்ள யாழ்ப்பாணத்தில் கிறிஸ்தவர்கள் உங்களுக்கு என்ன வேலை என்று கொழும்பில் கால்வைத்ததும் ஒரு சிங்கள அதிகாரி எங்களிடம் கேட்டார். திகைத்தோம். அதிர்ந்தோம். இந்திய-இலங்கை அதிகாரிகளின் கூட்டுச் சிந்தனையில் மதரீதியில் தமிழரை அணுகும் பிரிவினைப் போக்கு நிலவுவது ஆபத்தானது. எங்கள் வருகை குறித்து காவலரிடம் தகவல் கூறப்பட்டுள்ளது என்றும் கூறினர். எங்களை மிரட்டுவதற்காகக்கூட இவ்வாறு கூறியிருக்கலாம்.

ss

இலங்கையின் பொருளாதாரம் கடுமையான வீழ்ச்சியில் உள்ளது. விலைவாசி கடுமையாக உயர்ந்துள்ளது. வெளிநாடுகளில் வசிக்கும் ஈழத் தமிழர்கள் அனுப்பும் நிதி நிலைமையைச் சமாளிக்கத் தமிழருக்கு உதவுகிறது. சிங்களர் நிலை மிகவும் பரிதாபமாக உள்ளது. சிங்கள அரசு தமிழருக்கு மட்டுமல்ல, சிங்களருக்கும் எதிரானது என்பதை சிங்களர்களுக்கும் உணர்த்துவதாக நிலைமை உள்ளது. இந்தப் பின்னணியில் இராசபக்சே இல்லிடங்கள் மக்களின் தாக்குதலுக்கு ஆளானதைப் புரிந்துகொள்ள முடிகிறது.

யாழ்ப்பாணப் பல்கலைக் கழகம் எங்களை உற்சாகமாக வரவேற்றது. கலை நுணுக்கம் மிகுந்த பண்பாட்டு அம்சங்கள், மேளதாளங்கள், உளங்கனிந்த உபசரிப்புகள், வற்றாத கேள்விக் கணைகளோடு களைகட்டிய ஆய்வரங்குகள் என்று அனைத்தும் எம் நெஞ்சை நிறைத்தன.

பல்கலையின் முகப்பிலேயே முள்ளிவாய்க்காலை நினைவு கூரும் ஆதரவற்று அலைபாய்கிற கைகளுடைய சின்னம் நமது கவனத்தை ஈர்க்கிறது. கடந்துபோன குருதிதோய்ந்த ஈழ வரலாற்றின் காய்ந்துவிடாத பக்கமாக அது விளங்குகிறது! ஈழத்துப் பல்கலையின் முகப்பில் உண்மை வரலாறு நமது முகத்தில் அறைந்து நம்மை உலுக்குகிறது. நமது பல்கலைக் கழகங்களில் இத்தகைய வரலாற்று நினைவுகள் சிற்பங்களாகவும் ஓவியங்களாகவும் அமைவது எப்போது?

பிலிப்பைன்சில் நான் பயின்ற இலசுபானியோ பல்கலைக்கழகத்தின் முகப்பில் ஓர் எருமை மாடு சிலை உள்ளது. உழவனையும் வேளாண்மையையும் கிராம வாழ்வையும் இடைவிடாமல் மாணாக்கருக்கும் பேராசிரியருக்கும் அது எடுத்துச் சொல்கிறது.

தொடரும் துயரங்களுக்கு மாணவர் எதிர்வினைகள் இன்று வரையிலும் குடியிருக்க வீடின்றி தகரக் கூடாரங்களில் வசிக்கும் ஈழ மக்கள், தேயிலைத் தோட்டங்களில் மாடாக உழைத்து ஓடாக மாய்கிற மலையகத் தமிழர், குடியுரிமையே இல்லாமல் நித்தம் திருப்பி அனுப்பப்படுவோமோ என்கிற அச்சத்தில் உறைந்துபோய்க் கிடக்கிற ஊமைச் சனங்களான இந்திய வம்சாவழித் தமிழர், கொழும்பில் சிங்களர் இடையே பிழைப்பிற்காக வாழ்ந்தாகவேண்டிய ஏழைத் தமிழர்கள், சாதி வெறியின் உச்சத்தில் இருக்கும் யாழ்ப்பாணம் சைவப் பிள்ளைகள் .... என்று ஈழத் தமிழகம் சிதறிக்கிடக்கும் நிலைகளைக் கூர்ந்துகவனித்து எழுத்தாயுதத்தால் எதிர்வினை யாற்றுகின்றனர்.

மறைக்கல்வியை சமகாலச் சிக்கல்களுக்குத் தீர்வுகளை வழங்குகிற மாற்றுக் கல்வியாக்குகின்றனர். ஈராயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய கடந்த காலத்து நிகழ்வுகளை ஏதோ அருகிலிருந்து பார்த்ததுபோல் இன்றும் கிளிப் பிள்ளைகளைப் போன்று அடுத்து வரும் தலைமுறைக்குச் சொல்வது வரலாற்றைத் திரிப்பது. நிகழ்காலத்தின் வாழ்வியல் சிக்கல்களை எதிர்கொள்ளத் தேவையான உளவியல் வலிமையை மறைக் கல்வி கற்றல் பயன்பட வேண்டும்.

விளிம்பிற்குத் தள்ளப்படும் வேளாண்மைப் பாட்டாளிகளின் உழவுசார் உற்பத்தியை உறிஞ்சிக் கொண்டே வறுமைச் சாட்டையால் அவர்களை வதைக்கும் கொழும்பின் கொழுப்புக் கட்டிகள் மீது ஆய்வுக் கணை தொடுக்கின்றனர். இத்தகைய சுதந்திரம் துணிவும் தனித்துவமான ஆய்வுகளுக்கு அடிப்படை.

ss

சமயங்களும் சமகாலப் பார்வைகளும்

இரட்சண்ய யாத்திரிகம் புகழ் எச். ஏ. கிருஷ்ணன் அரங்கில் சமயங்களும் சமகால உரையாடல்களும் என்னும் தலைப்பில் ஆய்வுரை நிகழ்த்தினேன்.

அறிவுத் தேடலையும் மக்கள்நேயத்தையும் கைவிடுகிற சமயங்கள் வெற்றுச் சடங்குகளாகின்றன.

அன்பிற்கும் நீதிக்கும் மக்கள் விடுதலைக்கும் துணை நிற்கவேண்டிய சமயங்கள் ஆதிக்கரின் பல்லக்குகளாக மாறி சாயமிழக்கின்றன. சமயம் அபினாக மட்டுமல்ல. தற்காலிக ஆறுதலாகவும் தாங்க முடியாத துன்பங்களில் வலி நிவாரணியாகவும் செயல்படுகிறது.

இன்னும் 25 ஆண்டுகளில் சமயங்கள் முற்றாக வேறு வடிவங்கள் ஆகிவிடும். கிறிஸ்தவ விடுதலை இறையியலைப் போன்று மற்ற சமயங்களும் மக்கள் விடுதலை இறையியலை முன்னெடுக்க வேண்டும் என்று பரிந்துரை செய்தேன். சமகால நெருக்கடிகளுக்கு முகம்தராது கடந்த காலத்தில் தேங்கிவிட்ட எந்த சமயத்திற்கும் எதிர்காலம் இல்லை.

கடந்த ஐந்தாயிரம் ஆண்டுகளில் பல்வேறு சமயங்கள் தோன்றின. கால வெள்ளத்தில் மறைந்தன. மனிதரே சமயங்களைத் தோற்றுவித்தனர்.

கடவுளர் மனிதரைத் தண்டிக்கின்றனர் எனில் மனிதர்கள் கடவுளரைக் கேள்விக்குட்படுத்தலாம். தண்டிக்கலாம். அழிவுக்கும் வன்முறைக்கும் சமயத்தைப் பயன்படுத்துவதைக் காண்கிறோம்.

அதற்கு மாற்றாக அமைதிக்கும் நலவாழ்விற்கும் மக்கள் விடுதலைக்கும் சமயம் துணை நிற்க வேண்டும்.

ஆறுமுக நாவலர் அரங்கில் ஆய்வர்களின் ஆய்வுகளையும் நெறிப்படுத்தும் பொறுப்பு இருக்கை எனக்களிக்கப்பட்டது. வாழ்விடம், சுற்றுப்புறம், இயற்கை, பெண் விடுதலை, பழங்குடியினர் பண்பாடு, இயற்கை வேளாண்மை என்னும் தலைப்பு களில் மாணவர்கள் புதிய வெளிச்சங்களைக் கொணர்ந்தனர்.

ஆறுமுக நாவலர் சைவ நெறியைப் பரப்பிய காலத்தில் கிறிஸ்தவம் தனது கல்வி, மருத்துவ, சமூகப் பணிகளால் மக்களைக் கவர்ந்தது. இலங்கை கிறிஸ்தவ நாடாகிவிடுமோ என்ற கலக்கம் அவருக்கு ஏற்பட்டது. வேகமாகப் பரவிய கிறிஸ்தவத்தை எதிர்த்தவர் ஆறுமுகநாவலர். அவர் சாமானியர்கள் சைவ நெறியை இந்துவெறிப்படுத்தினார். இத்தகையோர் சமயத்தை அரசியலாக்குகின்றனர்.

ss

வள்ளலாரை வம்புக் கிழுத்தார்.

சைவ வேளாளரின் ஆதிக்கம் யாழ்ப்பாணம் எங்கும் கொடிகட்டிப் பறக்கிறது. இவர்களின் சாதி வெறியும் சமயவெறியும் இந்துத்துவத்திற்கே பயன்பட்டன. மோடிக்கே துணை நிற்கின்றன.

இலங்கைக்கு உதவி என்ற பெயரில் மோடி தரப்பு சிங்கள அரசிற்கு உதவுகிறது. மேலும் ஆர்.எஸ்.எஸ். அங்கேயும் வலுவாக வேரூன்றி வருகிறது. ஆங்காங்கே சாலையோரத்தில் சிவன் சிலைகள் முளைக்கின்றன. யாழ்ப்பாணத்திற்கு சிவபூமி என்று பெயர் வைக்கவேண்டும் என்று கோரிக்கை வைக்கின்றனர்.

இந்து என்ற உணர்வு திணிக்கப்பட்டு தமிழர் என்ற ஓர்மை மறக்கடிக்கப்படுகிறது. தமிழரின் கலை மரபுக் கோட்டையாக விளங்கிய மட்டக் களப்பு பகுதிகளின் முக்கியத்துவம் மறக்கடிக்கப் படுகிறது.

இலங்கையில் கண்ணகி வழிபாடு

யாழ் சைவ வேளாளர் இலங்கை முழுவதும் பரவியிருந்த கண்ணகி வழிபாட்டை மாற்றிவிட்டனர். ஏராளமான கண்ணகி கோயில்கள் இந்துக் கோயில்களாக ஆக்கப்பட்டுள்ளன.

கண்ணகிக்கு கி. பி. 178-ல் சேரன் செங்குட்டுவன் தமிழ் நாட்டில் கோயில் எழுப்பியபோது பாண்டியன் வெற்றிவேற் செழியனும் சோழன்பெருநற்கிள்ளியும் மட்டுமின்றி சேரனின் நண்பனாக விளங்கிய அனுராதபுர அரசன் கஜபாகும் கலந்து கொண்டான். (இராஜவாளி என்ற சிங்கள நூல்).

நட்பு அடிப்படையில் தமிழ்நாட்டில் சிறையிலிருந்த 24,000 சிங்களப் படை வீரர்களை சேரன் விடுவித்தான். தமிழ்நாடு திரண்டெழுந்து கண்ணகிக்குத் திருவிழா கொண்டாடுவதைக் கண்டு இலங்கையிலும் கண்ணகி வழிபாட்டை முன்னெடுக்க கஜபாகு அரசன் தனது விருப்பத்தை தெரிவிக்கவும் சந்தனத்தில் செய்த கண்ணகி சிலையையும் ஒரு காற்சிலம்பையும் சேரன் பரிசளித்து அனுப்பிவைத்தான். இலங்கை திரும்பியதும் நாட்டின் பல்வேறிடங்களில் கண்ணகிக்குக் கோயில் எழுப்பினான். சிங்களரும் பத்தினி தெய்யோ என்று வழிபட்டனர். கஜபாகு கட்டிய பத்தாவது கோயில் முல்லைத் தீவில் வற்றாப்பளை கண்ணகியம்மன் என்ற பெயரில் இன்றும் புகழ்பெற்று விளங்குகிறது.

இலங்கையின் தட்பவெப்பம்

4-02-2024. இன்று இலங்கை சுதந்திரம் அடைந்த நாளாம்! யாருக்கு சுதந்திரம்?

இலங்கை இப்போது கடும் பொருளியல் நெருக்கடியில்.

சிங்களரில் சிலரேனும் தமிழரிடம் மன்னிப்பு கேட்டனர். சிங்கள அரசின் சிற்றேவல்கள், சிறுநரித் தந்திரங்கள் சிங்களரையும் நொறுக்கியபோதே அவர்களுக்கு நெருக்கடி புரிந்தது. அயல்நாடுகளுக்கு ஏதிலிகளாக விரட்டப்பட்ட தமிழர்கள் இன்றைய நெருக்கடிகளில் தங்கள் குடும்பங்களைக் கவனிக்கின்றனர். சாவம் வரமானது. சிங்கள ஏழைகளுக்கு அவ்வாறு உதவிட ஆளில்லை.

யாழ்- கொழும்பு சாலையில் நெல்மணிகள் காய்கின்றன. கொழும்பனுக்குத் தேவையான நெல்லையும் தேயிலையையும் தானியங்களையும் ஓயாது உழைத்து உற்பத்தி செய்கிற ஈழவன் கிழக்கு விடியுமா என்று காத்துக் கிடக்கிறான்!

இலங்கை அரசு காட்சிக்கு வைத்திருக்கிற கவச வாகனம்!

பல நூறு தோட்டாக்களும் குண்டுகளும் பாய்ந்திருப்பதன் சுவடுகள்! அவர்களுக்கு அது வெற்றிக் கொண்டாட்டம்.

நமக்கோ உயிரின் வாதை! போர்தான் முடிவுற்றுள்ளது.

ஆதிக்க வெறியும் ஒதுக்குதல் குணமும் அப்படியேதான் உள்ளது. முன்னாள் பெண்பு- ஒருவர் மோசமான தொழிலுக்குத் தள்ளப்பட்ட கதையைக் கூறியதைக்கேட்டு மனம் நொந்து போனேன்.

நலமான தமிழர் உணவுகள்

சத்தான, சுவையான உணவுகளாக இலங்கைத் தமிழரின் உணவுகள் அமைந்துள்ளன. சிவப்பரிசி அதிகம் பயன்படுத்துகின்றனர். கேரளாவைப் போன்ற பழுப்பரிசி அதிகம் புழக்கத்தில் உள்ளது. நமக்குப் புட்டு. அவர்களுக்கு பிட்டு. கடினத் தசையுடைய மீன்களை சிறு சிறு துண்டுகளாப் பொறித்து அதன் பின்னர் குழம்பில் சேர்க்கின்றனர்.

இடியாப்பமும் கொழுக்கட்டையும் கஞ்சியும் ஆவியில் வெந்த உணவுகளும் விரும்பி உண்ணப்படுகின்றன.

தேங்காய்ப் பாலில் சொதி செய்து சாப்பிடுகின் றனர். தேங்காய்ப் பொடியும் பனங் கிழங்குப் பொடியும் மாசிப் பொடியும் அதிகம் கடைகளில் பார்க்க முடிகிறது.

நமது மரபான தமிழர் உணவு வகைகளை நாம் கைவிடுவதைப் போன்று அவர்கள் செய்வதில்லை.

நமது உணவுகளைவிட மேம்பட்ட உணவுகளாக இவர்களின் உணவுகள் அமைந்துள்ளன.

இலங்கை என்றால் இலங்குதல். ஒளி வீசுதல். இலங்கைத் தமிழர் வாழ்வில் ஒளி வீசியதா?

இலங்கைத் தமிழரின் ஈடிணையற்ற கடும் உழைப்பில் உருவான நாடு சிங்கப்பூருக்கே எடுத்துக் காட்டாகியது!

சிங்கை மேனாள் அதிபர் லீ இலங்கையைப் பார்த்து வியந்து அதைப் போன்றே சிங்கப்பூரையும் உருவாக்கு வேன் என்று அவர் உறுதி பூண்டார்! வாய்ச்சொல் வீரர் அல்ல லீ.

செயல்வீரர். சிங்கையை முதன்மை நாடாக் கினார். சிங்கப்பூரிலும் தமிழரின் அடையாளமாம் சிங்கம்!

இலங்கை ஈழத் தமிழரின் தாயகம்!

ஒளிவீசும் இலங்கையை உருவாக்கிய தமிழர் வரலாற்றை இருளடையச் செய்ய முதலில் வரலாற்றுப் பெயர்களும் அடையாளங்களும் அகற்றப்பட்டன. இலங்கை சிறீலங்கா என்றானது. லங்கா என்றாலும் அதற்குள்ளும் இலங்குவது இலங்கையே!

போர்களும் இனப் படுகொலை களும் நாட்டின் அமைதியைச் சின்னாபின்னப் படுத்திவிட்டன. அரசியல் ஆதிக்கத்திற்கும் இனஅழிப்பிற்கும் இடம் கொடுத்ததால் முதல் நிலை நாடான இலங்கை வரலாறு காணாத பொருளியல் வீழ்ச்சியில் சிக்கித் தவிக்கிறது.

இனவெறுப்பும் இன மோதல்களும் இன அழித்தொழிப்புகளும் ஒரு நாட்டை உருவாக்காது!

சக மனிதனை ஏற்கவும் புரியவும் வாழ்வைப் பகிரவும் தவறுகிறபோது அமைதி ஏது? முன்னேற்றம் ஏது?

வளர்ச்சி ஏது?

நீதியில்லாமல் அமைதி இல்லை!

அன்பில்லாமல் அகிலம் இல்லை!

இது வெறுப்பையும் கசப்பை யும் வேரறுத்துப் பகைமைக்கு விடை கொடுக்க வேண்டிய காலம்!

யாழ்ப்பாணம் எங்கும் நல்ல மழை!

பூட்டிய இருப்புக் கூட்டை உடைத்துப் புதுவசந்தங்கள் தமிழர் நெஞ்சில் பூத்துச் சிரிப்பது நாளைய வரலாறாகட்டும்!