பாட்டி வெற்றிலையை இடித்துக்கொண்டிருந்தாள்.

அருகில் கிடந்த கயிற்றுக் கட்டிலில் இருக்கக் கூடிய மனிதர் போய்விட்டார். அங்கிருந்தவாறு அந்தக் கிழவர் கூறுவர்: "கொஞ்சம்போல இங்க இடிச்சுத் தா...' அந்தக் காலத்தில் பாட்டியின் வாழ்க்கைக்கு அர்த்தமும் தேவையும் இருந்தன. ஒரு ஆளுக்கு சந்தோஷத்துடன் உணவு தரவேண்டும்... அந்த ஆளின் கால்களைத் தடவிவிடவேண்டும். எதற்கு அதிகமாக சொல்லவேண்டும்? ஒரு ஆளுக்குப் பணிவிடை செய்யக்கூடிய கடமையுள்ள பெண்ணாக அவள் இருந்தாள்.

அப்போது அவளுக்கு செய்வதற்கு வேலைகள் இருந்தன. அந்தவகையில் அவளுக்கு உற்சாகமும் தன்னம்பிக்கையும் இருந்தன.

அந்தக் காலத்தில் பாட்டியின் கண்களுக்கு ஒளியும், முகத்திற்கொரு பிரகாசமும் இருந்தன. அவள் இரண்டு நேரங்களிலும் குளிப்பாள். சலவைசெய்த ஆடைகளையே அணிவாள்.

Advertisment

சந்தனத்தைக்கொண்டு கோடும், குங்குமப் பொட்டும் இடுவாள். அன்று அவள் தங்கமாலை அணிந்திருந்தாள்.

அவள் சுமங்கலியாக இருந்தாள். அவளுடைய புன்னகைக்கு பெண்மைக்கே உரிய தனித்துவ அழகு இருந்தது.

அவள் கடந்த திருவாதிரைவரை விரதமிருந்தாள். தூங்காமல் கணவருக்கு நள்ளிரவுவரை பணிவிடை செய்துகொண்டிருந்தாள். இன்று அவள் தனியாகிவிட்டாள். அவளுடைய துணைவர் போய்விட்டார்.

Advertisment

அரை நூற்றாண்டிற்குமுன்பு... அன்று பெண் பிள்ளைகளின் காது தோள்வரை வளர்ந்திருந்தது. கழுத்துச் சங்கிலியும் காசு மாலையும் கெட்டியான காப்பும் கொலுசும் அவர்களின் நகைகளாக இருந்தன. கூந்தலைக் கட்டி முன்னால் தொங்கப்போடுவார்கள். இன்றைய கண்மை பூசலும் சந்தனக் குறியும் மார்புக் கச்சை அணிபவர்களுக்கு அழகாக இருந்தன.

வேட்டியும் மேற்துண்டும் அணிந்து, முன்குடுமியைக் கட்டி வைத்திருக்கும் அந்தக்கால இளைஞனின் கண்களுக்கு பெண்ணின் அந்தத் தோற்றம் முழுவதும் ஆர்வத்தைத் தூண்டக்கூடியதாக இருந்தது. அவளிடம் அவன் அழகைப் பார்த்தான். அவர் களுடைய பார்வைகள் சந்திக்கும்.

அவள் வெட்கப்படுவதைப் பார்த்து அவன் கிறங்கிப்போய் இருப்பான்.

அப்போதும் காதல் கதைகள் இருந்தன. காதலில் தோல்வியைச் சந்திக்க நேர்ந்த இளம்பெண்களும் இளைஞர்களும் தற்கொலையில் ஈடுபடுவார்கள். ஏமாற்றப் பட்ட இளம்பெண்ணும் இளைஞனும் இருந்தார்கள். அந்த யுகத்திலும் காதலில் கட்டுண்ட இளம்பெண்களும் இளைஞர்களும் சமுதாயத்திற்கு சவால் விட்டுக்கொண்டு நள்ளிரவு வேளையில் வீட்டைவிட்டு வெளியேறிச் சென்றார்கள்.

இவையனைத்தும் அதற்கு முன்பும்... அதற்கு முன்னாலும்... அதையும் தாண்டி முன்னாலிருந்த தலைமுறைகளில் நடந்திருக்கின்றன. ஆனால், காதலியின்... காதலனின் தோற்றம் மாறிவிட்டது. இனிமேலும் மாறிக்கொண்டிருக்கிறது. இந்த சுருக்கங்கள் விழுந்த சரீரத்தில், இளமையின் தீவிரமான உணர்ச்சிகள் நிறைந்த குருதி ஓடிக்கொண்டிருந்த காலத்தில் பாட்டி தன் பெற்றோரை எதிர்த்தாள். அது ஒரு காதல் கதையாக இருந்தது. அப்போது அவள் ஒரு இளைஞனைக் காதலித்தாள். பெற்றோர்கள் எதிர்த்தார்கள்.

அந்தப் பெண் நள்ளிரவு வேளையில் அவனுடன் வீட்டைவிட்டு வெளியேறிச் சென்றுவிட்டாள். அதற்குப்பிறகு ஐம்பது வருடங்கள் கடந்தோடிவிட்டன.

அந்தப் பெண் நான்குமுறை பிரசவிக்கவும் செய்தாள்.

இந்த பாட்டியைப் பார்க்கும்போது நமக்கு ஆச்சரியம் உண்டாகும். கண் மங்கலாகிப்போன இவள் இவற்றையெல்லாம் செய்தவளா? இவளைக் காதலித் திருக்கிறானா? இவள் காதலித்திருக்கி றாளா? ஹேய்..! நாம் சந்தேகப்படுவோம். அது ஒரு ரத்தம் கொதித்துக்கொண்டிருந்த பெண்ணின் கதை...

பாட்டியுடையது அல்ல. இளம்பெண் பாட்டியாகும்போது... அது இன்னொரு கதை!

வெற்றிலையை இடித்து வாய்க்குள் போட்டுமுடித்த நேரத்தில் பாட்டியின் மகளின் மகள் அவளுக்கு முன்னால் கடந்துசென்றாள். அவளுடைய முகம் மிகவும் பிரகாசமாக இருந்தது. அதை பாட்டியின் மங்கலான விழிகள் கண்டுபிடித்தன. பாட்டி கேட்டாள்:

"நீ எங்கடீ இருந்தே?''

அவள் சற்று தயங்கிக்கொண்டே கூறினாள்:

"நான் இங்கேதான் இருந்தேன்.''

பாட்டிக்கு அந்த பதில் போதுமானதாகத் தெரியவில்லை.

அவளுக்கு நம்பிக்கை வரவில்லை. அவள் தொடர்ந்து கேட்டாள்:

"நீ என்ன செஞ்சிக்கிட்டு இருந்தே?''

அவள் சற்று நெளிந்தாள். எனினும், ஒரு நிமிடம் கழித்து ஒரு தயாரெடுப்புடன் அவள் பதில் கூறினாள்:

"நான் அந்தப் பக்கத்துல உட்கார்ந்து புத்தகம் வாசிச்சிக்கிட்டு இருந்தேன்."

தொடர்ந்து கேட்க வழியில்லை. எனினும், பாட்டிக்கு போதுமென தோன்றவில்லை.

பானுமதி நடந்து சென்றாள். அவளையே வெறித்துப் பார்த்துக்கொண்டிருந்த பாட்டி கேட்டாள்:

"உன் விரல்ல என்னடீ ஒட்டியிருக்கு?''

பானுமதி குற்றவாளியைப்போல பதுங்கினாள்.

விரலைத் தரையில் துடைத்தவாறு அவள் கூறினாள்:

"மை... பாட்டி.''

"மையா? நீ எழுதுனியா?''

பானுமதி மெதுவான குரலில் "உம்' கொட்டினாள்.

அவளுக்கு அங்கிருந்து போனால் போதும் என்றிருந்தது. பாட்டி தொடர்ந்து கேட்டாள்: "நீ என்ன எழுதினே?''

அதைக் கேட்காததைப்போல பானுமதி சென்றாள்.

வாசற்படிகளின் வழியாக ஒரு இளைஞன் வெளியே இறங்கிச்செல்வதை பாட்டி பார்த்தாள். "அது யாருடா?'' என்று பாட்டி உரத்த குரலில் கேட்டாள். அவன் அதை காதில் வாங்கவில்லை. பாட்டி பானுமதியை அழைத்தாள்.

ss4

அழைத்ததை பானுமதி கேட்டாள்.

"அங்கே போனவன் யாருடீ?''

சிறிது தூரம் சென்றபிறகு அந்த பையன் பாட்டி அழைத்ததைக் கேட்டான். அதிர்ச்சியடைந்து நின்றான்.

நிற்காமல் ஓடிவிடும்படி பானுமதி அவனுக்கு சைகை காட்டினாள். அதை பாட்டி பார்க்கவில்லை.

அவன் போய்விட்டான். பாட்டி என்னென்னவோ கூறிக்கொண்டிருந்தாள்.

பானு, பாட்டியின் மூத்தமகளின் மகள்.

அவளின் தாய் அவளைப் பிரசவித்த ஏழாவது நாளில் இறந்துவிட்டாள். பாட்டிதான் அவளை எடுத்து வளர்த்தாள். அங்கும் ஒரு கதை இருக்கிறது. பானுவின் தாயின் பெயர் முத்து. முத்தம்மா ஒரு காதல் திருமணத்தின் முதல் விளைவல்லவா?

அந்த அளவுக்கு அவளை தந்தையும் தாயும் செல்லம் கொடுத்து வளர்த்தார்கள். இளம் வயதிலேயே அவளுக்குத் திருமணமாகிவிட்டது. திருமணம் நடந்து ஆறு வருடங்களுக்குப் பிறகுதான் அவள் வயதிற்கு வந்தாள்.

தன் செல்ல மகளை அவளுடைய கணவன் வேண்டிய அளவுக்கு அன்புடன் வைக்கவில்லை என்று பாட்டிக்கு ஒரு தோணல். அவன் அவளைத் துன்பப்பட வைக்கிறான். வேதனைப்படச் செய்கிறான்.

அவள் மெலிந்துகொண்டு வருகிறாள். அவன் அவளுக்கு எதுவுமே சம்பாதித்துத் தரவில்லை.

அவளுடைய நகைகளில் சிலவற்றை அவன் பணயம் வைத்தான். அவன்மீது பாட்டிக்கு வெறுப்பு உண்டானது.

ஏதோ விஷயத்திற்காக மருமகனுக்கும் மாமியாருக்கும் இடையே வாக்குவாதம் உண்டானது.

மாமியார் கோபத்துடன் கூறினாள்:

"உன் உறவே வேணாம். என் வீட்டைவிட்டு வெளியே போ...'

அவன் சிரித்தான். இவையனைத்தையும் கேட்டுக்கொண்டு நின்றிருந்த முத்து நடுவில் புகுந்து கூறினாள்:

"அம்மா... உறவு வேணுமா வேணாமான்னு நானுல்ல முடிவு செய்யணும்! நாங்க புறப் படுறோம்...'

அவள் கணவனுடன் சேர்ந்து வெளியேறிச் சென்றாள். பாட்டியால் கவலையையும் கோபத்தை யும் தாங்கிக்கொள்ள முடியவில்லை. அவள் கூறினாள்:

"பெத்த தாயை மீறிப் போற நீ.... உனக்கு நல்லதே நடக்காது...'

முத்தம்மா சிரித்தாள். அவள் அமைதியான குரலில் கூறினாள்:

"அம்மா. பெத்த தாயைமீறிய உங்களுக்கும் நல்லது நடக்கலையே! அது அப்பாமேல வச்ச அன்புனாலே தானே... அம்மா?' எனினும் முத்தம்மா பிறகு எந்த சமயத்திலும் தாயின் வீட்டிற்குச் சென்றதில்லை. தாய் அவளை அழைக்கவுமில்லை. சில நேரங்களில் மகளின்மீது பாசம் வைத்திருந்த தாய் கண்ணீருடன் கணவனிடம் கூறுவாள்:

"நான் என் தாயைக் கவலைப்பட வச்சதுக்கான பலன்...'

கணவன் தேற்றுவான்.

"கணவன் அன்பு வச்சிருக்கணும்னு நீதானே அவளுக்கு கத்துத் தந்தே?'

"சரிதான். இருந்தாலும் அவங்களால ஒத்துக்கொள்ள முடியல.'

முத்தம்மா பிரசவமாகி மரணமடைந்தபிறகு, அந்த குழந்தையைப் பாட்டி பலமடங்கு பாசத்துடன் வளர்த்தாள்.

முத்துவுக்குச் செய்ததைப்போலவே பானுவுக்கும் நகைகளை பாட்டி உண்டாக்கிக்கொடுத்தாள். அந்த சிறிய குழந்தையைத் தூக்கி முத்தமிட்டவாறு அவள் கூறுவாள்:

"கண்ட எவனாவது வந்து எல்லாத்தையும் வித்து சாப்பிடுவான். ஆனால், ஒரு தப்பு நடந்திருச்சு. இனிமேல நடக்காது.'

பேத்திக்கு வரவேண்டிய கணவன் எப்படிப்பட்ட வனாக இருக்கவேண்டுமென்று பாட்டி சிந்தித்து முடிவுசெய்து வைத்திருந்தாள். அவன் எப்படிப்பட்ட குணமுள்ளவனாக இருக்கவேண்டும்- எவ்வளவு சொத்து இருக்கவேண்டும்- என்னவெல்லாம் தெரியும்- அந்த ஆண்மகனைப் பாட்டி மனதில் பார்த்தாள். அவன் வருவான். வந்தால்தான் அவளைக் கொடுப்பாள். வேறொருவனுக்குக் கொடுக்கமாட்டாள். வரவில்லையெனில் அவளுக்குக் கணவனே வேண்டாம்.

=== பானுமதியிடம் சில மாற்றங்கள் தெரிந்தன. பாட்டி அதை வேகமாகக் கண்டுபிடித்தாள். இனம்புரியாத ஒரு உற்சாகமும் பிரகாசமும் அவளிடம் இருந்தன. எப்போதும் குலுங்கல் சிரிப்பும் விளையாட்டும்தான். இப்படியொரு மாற்றம் உண்டாகுமோ? அவள் சற்று வளர்ந்து... வீங்கி அழகாக இருந்தாள். முகத்தில் நல்ல ரத்த ஓட்டம் இருந்தது. முகப் பருக்களும் அரும்பியிருந்தன. அவளுடைய மார்பகங்கள் மேலும் பெரிதாயின. சில நாட்களில் காலை வேளையில் ஒரு சரீரரீதியான சோர்வு அவளிடம் காணப்பட்டது. சுருக்கமாகக் கூறுவதாக இருந்தால்... திருமணம் முடிந்த நிலையில் ஒரு பெண் எப்படி இருப்பாளோ, அதைப்போல அவள் இருந்தாள்.

பாட்டியின் உள்மனம் நடுங்கியது. அவள் அவளுடைய அலட்சியமான மனப்போக்கினைக் குற்றம் சுமத்தினாள். அதுமட்டுமல்ல; அவளைக் குறைகூறுவதற்குதான் நேரமே இருந்தது.

ஒரு ஆபத்தின் வாசனை தெரிந்தது. அவள் எதற்காக இப்படி அலங்காரித்துக் கொள்கிறாள்? வீட்டில் இருக்கும்போது பொட்டுவைக்க வேண்டுமா? தலைமுடியை வாரி பூச்சூட வேண்டுமா? நகையணிய வேண்டுமா? புதிய... புதிய படங்களுக்காக அவள் பாட்டியைப் பாடாய்ப்படுத்திக்கொண்டிருந்தாள்.

அவள் என்ன நினைத்துக்கொண்டிருக்கிறாள்?

பாட்டி நகைகள் அனைத்தையும் வாங்கிப் பெட்டியில் வைத்து மூடினாள். அப்படி தேவடியாள் தனம் செய்ய அனுமதிப்பதாக இல்லை.

"பெண் பிள்ளைங்க குடும்பத்துல வளர்றதைப்போல வளரணும்.' பாட்டி கூறினாள். ‌

பானுவுக்கு கோபத்தையும் கவலையையும் சகித்துக்கொண்டிருக்க முடியவில்லை. அவள் பற்களைக் கடித்தவாறு என்னவோ முணுமுணுத்தாள். பாட்டி சற்று அதிர்ச்சியடைந்தாள். அந்த அதிர்ச்சி அவளை ஐம்பது வருடங்களுக்கு முன்னால் கொண்டுசென்றது. அவளும் இதேபோல பற்களைக் கடித்து முணுமுணுத்திருக்கிறாள். இதே சத்தம்தான்... இதே வார்த்தைகளை அவளுடைய தாய் கூறியபோது, கோபத்தையும் கவலையையும் சகித்துக்கொள்ள முடியாமல் அவள் முணுமுணுத்தாள்.

பற்களுக்கு மத்தியிலிருந்து நொறுங்கி நொறுங்கி, அப்படி என்ன வார்த்தைகள் வெளியே வந்தன என்பதை அவள் இப்போதும் நினைத்துப் பார்க்கிறாள்.

பாட்டி பானுவிடம் கேட்டாள்: "அலங்கரிச்சுக்காம இருந்தாலும், பார்க்கறவனுக்கு ஆர்வம் தோணும்...

அப்படித்தானேடீ?'

"ஆமா...' ஒரு இளம்பெண் அப்படிப்பட்ட சூழலில் இப்படியொரு வார்த்தையைத்தான் கூறுவாள். ஐம்பது வருடங்களுக்கு முன்னால் பற்களைக் கடித்துக்கொண்டு பாட்டி முணுமுணுத்த வார்த்தையை இன்று பானுமதி உச்சரிக்கிறாள்.

இன்னும் ஐம்பது வருடங்கள் கடந்தபிறகும் இதே வார்த்தையை அன்றைய பானுமதியும் உச்சரிப்பாள்.

அந்தக் கிழவி அந்த வார்த்தையை எப்படிக் கேட்டாளென்று பானு பதைபதைத்தாள்.

அவள் நடந்தாள். பாட்டி கூறினாள்:

"என்னை ஏமாத்திடலாம்னு பார்க்காதே... காதுல விழுதாடீ?'

தொடர்ந்து பாட்டி என்னென்னவோ கூறிக்கொண்டிருந்தாள்.

அந்தப் பையனை மூன்று நான்கு முறை மின்னலைப்போல பாட்டி அங்கு பார்த்தாள். அவள் பானுவின் பெட்டியை அவளுக்குத் தெரியாமல் சோதித்துப் பார்த்தாள். எதுவுமே கிடைக்கவில்லை. பாட்டி தன்னுடைய இளமைக் காலத்தை நோக்கித் திரும்பிப் பார்த்தாள். அப்போது கிடைத்த சில பரிசுப் பொருட்கள் இப்போதும் அவளுடைய பெட்டியில் இருக்கின்றன. இல்லை... அப்படி பரிசுப் பொருட்கள் கிடைக்காமலிருக்க வாய்ப்பில்லை.

ஆனால், இவள் அவற்றையெல்லாம் எங்கு மறைத்து வைத்திருக்கிறாள்? எங்கு பத்திரப்படுத்தி வைத்திருக்கிறாள்? அந்த சாமர்த்தியம் இந்த தலைமுறைக்கு நன்றாகவே இருக்கிறது. தான் தோற்றுவிட்டதைப்போல பாட்டி உணர்ந்தாள்.

தன்னைத் தோற்கடித்துவிட்டதாக... தன் காதல் கதையிலிருந்து கிடைத்த அனைத்து பாடங்களையும் அவள் பயன்படுத்திப் பார்த்தாள்.

அவள் இப்போது படுத்துத் தூங்குவது பாட்டியுடன்தான்.

பாட்டி அவளை எப்போதும் கவனித்துக் கொண்டேயிருந்தாள். எனினும் அவள் காதலி... காதலனுடன் சந்திப்புகள் நடக்கவும் செய்கின்றன.

எப்படியோ..?

எங்கிருந்தாவது தகுதியுள்ள ஒருவனைக் கொண்டுவந்து அவளுக்குக் கட்டிவைத்து விட வேண்டுமென்று பாட்டி ஆண்பிள்ளைகளை எப்போதும் நச்சரிக்க ஆரம்பித்தாள். ஒரு பெண் பிள்ளையை எப்போதும் பாதுகாத்துக் கொண்டிருக்க முடியுமா? பாதுகாத்துக்கொண்டிருந்தாலும், ஆபத்து எளிதில் வந்துவிடும். அந்தவகையில் எங்கிருந்தோ ஒருவனைக் கொண்டுவந்தாள். அழகன்... இளைஞன்... பணக்காரன்... அது ஒரு முதல்தரமான திருமண ஆலோசனையாக இருந்தது.

அவன் பெண்ணைப் பார்ப்பதற்கு வந்தான்.

அன்று பானு குளிக்கவில்லை. சாப்பிடவில்லை. என்ன சொன்னாலும் வெளியே வரவில்லை. பாட்டி குழப்பமடைந்தாள். அடக்கமுடியாத கோபத்துடன் அவள் அவளைக் கெட்ட வார்த்தைகளால் திட்டினாள். அடிப்பதற்காகச் சென்றாள். அவளும் கோபத்துடனும் கவலையுடனும் மனம்வெடிக்கக் கூறினாள்:

கண்டவனெல்லாம் வருவானுங்க. போக்கிடம் இல்லாம... எனக்கு ஒருத்தனையும் வேணாம். அவன் அவனோட பாட்டைப் பார்க்கட்டும்..."

அவள் கூறியதை அவன் கேட்டான். அதைத் தொடர்ந்து அந்த ஆலோசனை நடக்காமல் போனது.

===

பானுவுக்கு ஒரு காதல் கதை இருக்கிறதென்று ஊரில் சிலர் கூறினார்கள். நல்லபெயர் போகாமலிருக்கவேண்டும் என்பதற்காக பாட்டி அதை மறுத்தாள். எனினும், அந்த ஆண் யாராக இருக்கும் என்பதைத் தான் அறிந்துகொள்ள வேண்டுமென நினைத்தாள். யாருக்கும் தெரிந்துவிடக்கூடாது என்பதையும்...

ஒருநாள் அடுக்களையில் ஏதோ வேலை செய்துகொண்டிருந்தாள். பாட்டி அருகிலமார்ந்து குழம்புக்காக நறுக்கிக்கொண்டிருந்தாள். பானு எதையோ கவனித்ததைப்போல இருந்தது. அதே இடத்தில் சிறிது நேரம் நின்றுவிட்டு, அவள் வெளியே சென்றாள். உரத்த ஒரு சீட்டியடி சத்தத்தை வெளியே பாட்டி கேட்டாள். அவளும் வெளியே வந்தாள்.

அவள் முல்லைச் செடிக்குக் கீழே நின்றவாறு, மேலேயிருந்து பூக்களை உதிர்ப்பதைப்போல காட்டிக்கொண்டிருந்தாள். பூக்களை உதிர்க்கும்போது விரல்கள் ஏதோ சைகை செய்துகொண்டிருந்தன. அதைப் பார்த்தவாறு ஒருவன் வழியில் சென்று கொண்டிருந்தான். வெறுமனே என்பதைப்போல அவனும் கையை உயர்த்தினான்...

பாட்டி பார்த்தாள். அந்த ஆணின் விழிகளும் பானுவின் விழிகளும் சந்தித்தன. அவர்கள் தகவலைப் பரிமாறிவிட்டார்கள். ஆள் யாரென தெரிந்துவிட்டது. அவனுக்கு ஒரு பொருள் இல்லை... தொழிலும் இல்லை. அவனுடன் சென்றால் இவள் எப்படி வாழ்வாள்? பாட்டியின் அனைத்து எதிர்பார்ப்புகளும் தரையில் சரிந்தன.

அன்று பௌர்ணமியாக இருந்தது. அவள் சீக்கிரமே குளித்துத் தயாராவதை பாட்டி பார்த்தாள்.

===

டர்ந்து வளர்ந்து நின்றுகொண்டிருந்த மாமரத்தின் கீழ், பௌர்ணமி உண்டாக்கிய பிரகாசம் நிறைந்த நிழலில் காதலனின் தோளில் தலையைவைத்து காதலி கூறுகிறாள்:

"வர்றேன்... எங்க வேணும்னாலும் வர்றேன்.''

காதலன் அவளுடைய முகத்தைப் பிடித்து உயர்த்தி முத்தமிட்டான்.

"நீ போயிருவியாடீ..?''

மாமரத்தின் மறைவிலிருந்து பாட்டி வெளியே தாவியவாறு கேட்டாள். அவர்கள் பிரிந்தார்கள். அமைதியாக நின்றிருந்தார்கள். தொடர்ந்து பாட்டியாலும் எதுவும் பேசமுடியவில்லை.

உடனடியாகப் பாட்டி ஐம்பது வருடங்களுக்கு முன்னால் சென்றாள். பௌர்ணமி, மாமரத்தின் பிரகாசமான நிழல்... அவளுடைய தாய் முன்னால் நின்றுகொண்டிருக்கிறாள். இதயம் வெடிக்க, அன்று அவளுடைய தொண்டையின் வழியாக ஒரு வார்த்தை வெளியே வந்தது.

"நீ போயிருவியாடீ?'

அந்த வார்த்தை இந்த ஐம்பது வருடங்களாக பாட்டியின் காதுகளில் ஒலித்துக் கொண்டேயிருக்கிறது. தான் ஏதாவது பேசினோமா என்று பாட்டி அடுத்த நிமிடம் சிந்தித்தாள். இல்லை. காதுகளில் ஒலித்தது... அன்று தன் வீட்டில்... மரத்தடியில் வைத்துக் கேட்ட வார்த்தை.

காதலனும் காதலியும் இரண்டு வழிகளில் நடந்துசென்றார்கள். மேலும் சிறிதுநேரம் பாட்டி அங்கேயே நின்றிருந்தாள். ஆமாம்... அப்படித்தான் ஒரு வார்த்தைகூட பேசாமல் அவளும் அவளுடைய காதலனும் அன்று பிரிந்துசென்றார்கள். தாய் மேலும் சிறிதுநேரம் அங்கேயே நின்றுகொண்டி ருந்தாள்.