மிழ் வளர்ச்சியை மையமாகக் கொண்டு, அமெரிக்க முத்தமிழ்ப் பல்கலைக்கழகத்தைத் தொடங்கி இருக்கும் முனைவர் தாழை.இரா. உதயநேசனுக்குப் பாராட்டு விழாவும் அவரது நூல்களின் அறிமுக விழாவும், சென்னை புத்தகக் கண்காட்சியின் சிற்றரங்கில் நடந்தது.

இந்த நிகழ்ச்சியை திராவிட முற்போக் குப் படைப்பாளர் பேரவை ஏற்பாடு செய்திருந்தது.

அமெரிக்க முத்தமிழ்ப் பல்கலைக்கழக வேந்தர் முனைவர் தாழை இரா. உதய நேசன், பல்கலைக் கழகத்தை சிறப்புறத் தொடங்கியதற்காக அவருக்குப் பாராட்டு விழாவும் -அவரது நூல்களின் அறிமுக விழாவும் 5-ஆம் தேதி காலை கோலா கலமாக நடந்தது.

இதில் தாழையாரின் குடும்பத்தினரும் தமிழ் அன்பர்களும் பெருந்திரளாகக் கலந்துகொண்டனர். இந்த நிகழ்ச்சியில் தமிழகத்தின் பிரபல பாடகர்களான டி.கே.எஸ்.கலைவாணனும் ஆலங்குடி வெள்ளைச்சாமியும் பங்கேற்று, இசை யுடன் விழாவைத் தொடங்கிவைத்தனர்.

Advertisment

tat

நிகழ்ச்சியை, இயக்குநரும் கவிஞரு மான அமீர் அப்பாஸ் தொகுத்து வழங்கி னார்.

விழாவிற்குத் தலைமை ஏற்ற ஓவியக் கவிஞர் முனைவர் அமுதபாரதி “ஒரு பல்கலைக் கழகத்தைத் தொடங்குவது என்பது சாதாரண விசயம் அல்ல. அதை எளிதாக-திறமை யாக உதயநேசன் தொடங்கியிருகிறார். அதிலும் என்னைப்போன்ற அனுபவசாலிகளை, இலக்கியத்தில் சாதித்தும் கண்டுகொள்ளப்படாத எங்கள் ஐந்து பேருக்கு மதிப்புறு முனைவர் பட்டம் வழங்கி சிறப்பித் திருக்கிறார். இவர், உதயநேசன் அல்ல; இதயநேசன்” என்றார் பூரிப்பாய்.

முன்னிலை உரையாற்றிய முனைவர் கா.ந.கல்யாண சுந்தரம் ”ஹைக்கூவை நான் முன்னெடுத்து வருகிறேன். தெலுங்கில் இருக்கும் நானிலு கவிதையைத் தமிழுக்குத் தன்முனைக் கவிதை என்ற பெயரில் கொண்டுவந்திருக்கிறேன். எனக்கு தாழையார்தான் முனைவர் பட்டம் மூலம் உரிய அங்கீகாரத்தைத் தந்திருக்கிறார். இப்படி திறனாளிகளைத் தேடித் தேடி உயர்த்துகிற அவரது மாண்பு மகத்தானது” என்றார்.

முனைவர் ஞா.விஜயகுமாரி, தாழையாரின் நூல்கள் பற்றி விவரித்ததோடு, அவரது சமூக நலப்பணிகளையும் பட்டியலிட்டு அவையோரை வியப்பில் ஆழ்த்தினார்.

தாழையாரின் பரிசுபெற்ற நூலான ’கலைக்கப்பட்ட கனவுகள்’ உள்ளிட்ட நூல்கள் பற்றிய மதிப்புரையை நிகழ்த்திய முனைவர் மஞ்சுளா “தாழையாரின் படைப்பு களின் உள்ளடக்கம் சாதி எதிர்ப்பு, மூட நம்பிக்கை எதிர்ப்பு, பெண்ணுரிமை உள்ளிட்டவைகளையே கொண்டிருக்கிறது. அவரைத் தமிழறிஞர் ஔவை நடராஜன் வாழ்த்தியிருக்கிறார். மகாகவி ஈரோடு தமிழன்பன் பாராட்டியிருக்கிறார். இவரது படைப்புகள் மானுடத்தை வாழ்விக்க வந்த படைப்புகளாகும்” என்று பாராட்டுரை வழங்கினார்.

வாழ்த்துரையாற்றிய பால புரஷ்கார் விருதாளரான கவிஞர் மு.முருகேஷ், “நக்கீரன் ஆசிரியர், உதயநேசன் உள்ளிட்ட உலகறிந்த ஆளுமைகளால் நிறைந் திருப்பதால், இந்த சிற்றரங்கம், பேரரங்கமாக மாறிவிட்டது. மதிப்புறு முனைவர் பட்டம் பெற்ற அத்தனை பேரும் தமிழுக்கு தொண்டாற்றுகிறவர்கள். மகத்தானவர்கள். நக்கீரன் ஆசிரியரை கடந்த 20 ஆண்டுகளாகப் பார்த்துவருகிறேன். கொஞ்சம் கூட வயது ஏறாமல் அப்படியே இருக்கிறார். அந்த இளமையின் ரகசியம் என்னவென்று தெரியவில்லை. நல்லவைகளைக் கொண்டாடும் ஆளுமை அவர். நம் உதயநேசன் கதை, கவிதை, கட்டுரை என சகலத்தையும் தருகிற படைப்பாளியாகத் திகழ்கிறார். அவரது முயற்சிகள் மகத்தான வெற்றிபெறும்” என்று உற்சாகமாகச் சொன்னார்.

இந்து பத்திரிகையின் மூத்த துணை ஆசிரியர் மானா.

பாஸ்கரன் தனது உரையில் “குடும்ப நிகழ்வாக இந்த நிகழ்ச்சி நடக்கிறது. அண்ணன் நக்கீரன் கோபால் தாழையாரைப் பாராட்ட இங்கே வந்திருக்கிறார். அண்ணன் ஆனானப் பட்ட ஜெயலலிதாவையே மிரளவைத்தவர். அவரைக் கண்டு நெஞ்சு நிமிர்த்தியவர். அவரைப் பற்றி ஒரு கவிதையை இப்படி எழுதினேன்...’காடுகளையே பார்த்தவர் இந்த கார்டனைக் கண்டா அஞ்சப் போகிறார்?’ என்று. அப்படிப்பட்டவர் இங்கே வாழ்த்துரை வழங்க இருப்பது பெரும் சிறப்பாகும்” என்றார் உற்சாகமாக.

சிறப்புரை நிகழ்த்திய திண்டுக்கல் அருட்திரு பிலிப் சுதாகர், ”உதயநேசனாரின் அரும்பெரும் தொண்டுகளைப் பற்றி அறியும் போது மனம் மகிழ்ச்சியில் மலர்கிறது. தமிழுக்கு நிறைய சோதனைகள் வந்தது. சுந்தரர், இறைவனைப் பார்த்தே உனக்குத் தமிழ் தெரியாதா? என்று கேட்டார். ஏனென்றால் இனிமையான தமிழை வைத்துக்கொண்டு, அதை உலகமெங்கும் எடுத்துச்செல்லாமல் ஒரே இடத்தில் நிற்கிறாயே என்று அவர் கேள்விக் கணையைத் தொடுத்தார். ஆனால் நம் உதயநேசனார், தனியொரு மனிதராக உலகமெங்கும் தமிழைத் தன் பல்கலைக் கழகம் மூலம் எடுத்துச்செல்கிறார்” என்று பெருமிதம் பொங்கக் குறிப்பிட்டார்.

வாழ்த்துச் சிறப்புரை வழங்கிய இதழியல் போராளி நக்கீரன் கோபால் “உதய நேசன் அவர்களை வியக்கிறேன். தன் குடும்பத்தையே தமிழுக்காக அர்ப்பணித்துக் கொண்டிருக்கிற அவரை வியக்காமல் இருக்கமுடியாது. அவர் தமிழுக்காக உழைக்கிறார். சரி, அவர் மனைவி உழைக்கிறார்.

சரி. அவரது மருமகள்களும் உழைக்கிறார்களே, அது எந்த வகையில்? இந்த மாதம் 11-ந் தேதி கல்யாணம் நடந்திருக்கிறது. அதற்குள் அவரது மருமகளுக்கு இது மூன்றாவது மீட்டிங்காம். அவர் மகனும் அப்படியே அமைந்திருக்கிறார். அந்தக் குடும்பமே தமிழுக்காக தன்னை ஒப்படைத்துக்கொண்டு இருப்பது பெருமிதத்திற்குரியது. ’ஒத்ததறிவான் உயிர் வாழ்வான்’ என்பதற்கு இலக்கணமாக வாழ்கிறவர் உதயநேசன். அடுத்தவர் துயரம் தீர்க்க இதயமாகவே அவர் வாழ்கிறார். ஏழெட்டு நூல்களை எழுதியிருக்கிறார். ஏழைகளுக்கு உதவுகிறார். தமிழுக்குத் தொண்டு செய்கிறவர்கள் தோற்பதில்லை. உதயநேசனும் தோற்கமாட்டார். அவரைப் பாராட்டியாக வேண்டும் என்று தான் இந்த நிகழ்ச்சிக்கு வந்தேன். தமிழைப் பாதுகாக்க நினைக்கிற அவரை வாழ்த்துகிறேன். அவரது இந்த சேவை தொடரவேண்டும் என்று விரும்புகிறேன்” என்றார் அழுத்தமாக .

ஏற்புரையாற்றிய வேந்தர் தாழை.இரா.உதயநேசன் “ எங்களை வாழ்த்த வந்திருக்கும் இதழியல் போராளி- இதழியல் வேந்தர் நக்கீரன் கோபால் அவர்களுக்கு நன்றி. எங்கள் குடும்பத்தினரின் மீதான அக்கறையையும் வெளிப்படுத்திய அவரது கூர்ந்த பார்வைதான், நக்கீரனின் பார்வை. அமெரிக்க முத்தமிழ்ப் பல்கலைக்கழகம் இணையப் பல்கலைக்கழகமாக இயங்கிவருகிறது. இதை கவனிக்க எங்கள் பல்கலைக்கழக டீம் ஒன்று அமெரிக்காவில் செயல்படுகிறது. வெளிச்சத்துக்கு அதிகம் வராத படைப்பாளிகளை கவுரவிக்க வேண்டும் என்பதுதான் எங்கள் நோக்கம். எங்கள் வளர்ச்சி கண்டு எதிரிகளும் முளைக்கிறார்கள். நக்கீரனை வாசித்துவருகிற நாங்கள், எங்கள் எதிரிகளை எதிர்கொள்ளும் திராணியைப் பெற்றிருக்கிறோம்.

இங்குள்ள பிரதமர் அமெரிக்காவில் புறக் கணிக்கப்பட்டதை முன்பாகவே சொன்னது நக்கீரன்தான். நாங்கள் உலக நாடுகளில் எங்கே இருந்தாலும், நக்கீரனைத்தான் ஃபாலோ பண்ணுகிறோம். 40-க்கும் மேற்பட்ட உலக நாடுகளைச் சேர்ந்தவர்கள், எங்களோடு கைகோத்து செயல்படுகிறார்கள். விரைவில் அமெரிக்க முத்தமிழ்த் தொலைக் காட்சியும் உதயமாகும் என்பதையும் இந்த நிகழ்ச்சியில் அறிவித்துக்கொள்கிறேன்” என்றார் பெருமிதமாக.

இந்த நிகழ்ச்சியில் நக்கீரன் கோபால் அவர்களுக்கு ’இதழியல் வேந்தர்’ என்ற பட்டத்தையும், பல்கலைக் கழக வேந்தர் முனைவர் தாழை.இரா.உதய நேசன் அவர்களுக்கு ‘திராவிடப் பெருந்தமிழர்‘ என்ற பட்டத்தையும் திராவிட முற்போக்குப் படைப்பாளர் பேரவை வழங்கிச் சிறப்பித்தது.

-இலக்கியன்