ய்வறிஞர் நா.நளினிதேவி பெண்ணுரிமையை மையப்படுத்தி எழுதிய "அக விடுதலையே பெண் விடுதலை' என்னும் நூல் கருத்துலகில் ஆச்சரியத்தையும் அதிர்வலைகளையும் ஏற்படுத்திவருகிறது. இந்த நூலின் வெளியீட்டுவிழா பெண் பிரபலங்கள் புடை சூழ அண்மையில் சென்னை கவிக்கோ அரங்கில் நடந்தது.

வரவேற்புரையாற்ற வந்த துர்கா நாகநாதன் எடுத்த எடுப்பிலேயே, ""பெண்ணுரிமை இல்லாத வீடு; விலங்குகள் வாழும் காடு'' என கவிதையாகப் பேசி அதிரடி கிளப்பினார். விழாவைத் தொகுத்து வழங்கிய முனைவர் மஞ்சுளாதேவியும் பெண்ணியக் கருத்துக்களை மின்னலாய்த் தெறிக்கவிட்டார்.

விழாவில் பஞ்கேற்ற ஆளுமையரின் சிந்தனைக் குரிய உரையிலிருந்து....

நிகழ்ச்சிக்குத் தலைமை ஏற்ற வழக்கறிஞர் அ.அருள்மொழி:

Advertisment

ஆண், பெண் என்று உலகத்தை பிரித்துவைத்து அரசியல் செய்கிறார்கள். அதில் உடை அரசியல் இருக்கிறதே அது கொடுமையானது. ஆண்களின் உடை அவர்களின் கௌரவத்துக்கு பாதிப்பை ஏற்படுத்துவது இல்லை. ஆனால் பெண்ணின் உடல், அவளுடைய உடல் பாகங்கள் தெரியும்படி வடிவமைக்கப்படுகிறது. உடம்பு எல்லோர் கண்களுக் கும் தெரிகிறது என்ற நிலை இருந்தால் ஒரு பெண்ணால் தன் வேலையில் முழு கவனத்தைச் செலுத்தமுடியுமா? இந்த நிலையைப் பெண்களே உணர்ந்து விழித்துக் கொள்ள வேண்டும். நடைமுறை வாழ்க்கையே ஆணுக்கு ஒருவிதமாகவும் பெண்ணுக்கு ஒருவிதமாகவும் இருக்கி றது. அலுவலகம் சென்றாலும் பெண் வீட்டு வேலைகளை முழுதாகச் செய்யவேண்டும். சாப்பாட்டைக்கூட, பசி வாட்டினாலும் அதைப் பொறுத்துக்கொண்டு, வீட்டுக்கு வந்தவர்கள் சாப்பிடும்வரை இன்முகத்தோடு காத்திருந்து, அதன்பின் மிச்சம் மீதி இருந்தால் சாப்பிடவேண்டும் என்ற நிலை இன்னும் இருக்கிறது.

நளினி அம்மாவின் அக விடுதலைக் குரல் சிறப்பானது.

அவர் தன் கருத்துக்களுக்கு உதாரணங்களையோ, எடுத்துக்காட்டுகளையோ துணைக்கு அழைக்க வில்லை. தான் நினைத்ததைத் தனக்குச் சரியெனப்பட் டதை அப்படியே அதிரடியாகவும் அழுத்தமாகவும் சொல்லியிருக்கிறார். பெண்கள் தங்கள் பாலியல் உரிமைகளை நிலை நாட்டவேண்டும் என்றும், அது தொடர்பான தயக்கங்களை அவர்கள் விட்டொ ழிக்கவேண்டும் என்றும் கூறுகிறார். அதுதான் சமத்துவத்துக்கான வழிகளை ஏற்படுத்தும் என்று சொல்கிறார். இப்படிப்பட்ட கருத்துகள் பாராட்டுக் குரியன. என்றாலும் அக விடுதலை என்பதையும் பாலியல் விடுதலை என்பதையும் இளைஞர்கள் தவறாகப் புரிந்து கொள்ளாமல் இருக்கவேண்டும்.

Advertisment

எனவே அது கூறித்த எச்சரிக்கை யையும் அம்மா அவர்கள் அடுத்த நூலிலே எழுதவேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். இன்று ஆண் பெண் உறவுச் சிக்கலை வழக்கறிஞ ராக இருந்து நான் நிறைய பார்க்கி றேன். தவறான புரிதல்களால் தடம் மாறிப் போகிறவர்களையும் காண்கி றேன். எனவே தெளிவோடு வாழ்க் கையை அணுகவேண்டும். பெண் விடுதலைக்கான சிந்தனையை அழுத்தம் திருத்தமாக வைத்திருக் கும் நளினி அம்மாவைப் பாராட்ட வேண்டும். அவர் எழுதிய நூலை, நேர்மையாக அறிவு நாணயத்தோடு படிக்கவேண்டும் என்று அணிந் துரையில் சொல்லியிருக்கும் ஆசிரியர் வீரமணி, அதற்கு முன் ஏற்கனவே மனதில் படிந்திருக்கும் அழுக்குகளை நீக்கிவிட்டு படிக்க வேண்டும் என்றும் இந்த நூலைப் படிக்கத் துணிவும் வேண்டும் என்றும் அவர் குறிப்பிடுகிறார். அப் படிப்பட்ட இந்த நூல் மக்களிடம் எடுத்துச்செல்லவேண்டிய நூல்.

ஆசிரியர் நக்கீரன் கோபால் பெண்களுக்கான திருவிழா வாக இந்த நிகழ்ச்சி நடந்துகொண்டி ருக்கிறது. பெண்ணின் பெருமை களைப் பேசுகிறோம். அதே நேரம், நாங்கள் ஒரு பெண்மணியால் படாத பாடு பட்டதுதான் இப்போதும் நினைவுக்கு வருகிறது. அதே பெண்மணி அநியாயமாக இறந்த போது, அவர் மரணத்தில் மர்மம் இருக்கிறது என்று அவருக்காகக் குரல் கொடுத்ததும் நக்கீரன்தான். நளினிதேவி அம்மாவின் நூல் களை ஆறேழு மாதங்களுக்கு முன்புதான் வெளியிட்டோம். அதற்குள் அவர் அடுத்த புத்த கத்தை, அதிலும் புரட்சியைப் பேசும் புத்தகத்தைத் தயார் செய்து விட்டார். செவித்திறனை இழந்த நிலையிலும், தளராமல் போராடு கிறார். அவர் தனக்காகப் போராட வில்லை. யார் தயவையும் எதிர்பார்க் காமல், தனியாக, சமூகத்திற்கான போராட்டத்திலும், பெண் ணுரிமைக்கான போராட்டத்திலும் பங்கேற்கிறார். இப்படிப்பட்ட போராளிகளை நாம் பாராட்ட வேண்டும். பெண்ணியக் குற்றங்கள் நடக்காமல் இருப்பதற்கு இவர் வழிகளைச் சொல்கிறார். அதைத் தான் நக்கீரனும் செய்து கொண்டி ருக்கிறது. நித்தியானந்தா விவகார மாக இருந்தாலும், பொள்ளாச்சி விவகாரமாக இருந்தாலும் நக்கீரன், பெண்களின் நீதிக்கான குரலை எழுப்பிவருகிறது. நளினி அம்மாவின் நோக்கமும் நக்கீரனின் நோக்கமும் ஒன்றுதான். இப்போது தேசத்தின் நிலைமை மோசமாக இருக்கிறது. நாம் தீயாக வேலைபார்க்க வேண்டிய நேரம் வந்துவிட்டது. இன்று அதிகார ஆட்டத்தைப் பார்க்கிறோம். இன்னும் நான்கரை வருடம் பாக்கி இருக்கிறது. நாம் விழிப்போடும் எச்சரிகையோடும் உரியதைச் செய்யவேண்டும். அதற்கு நாம் தயாராவோம்.

நாடாளுமன்ற உறுப்பினர் முனைவர் தொல்.திருமாவளவன்:

இந்த மானுடம் சரிபாதி ஆண் களையும் சரிபாதி பெண்களையும் கொண்டது. இந்த இரண்டும் ஒன் றோடு ஒன்று இணக்கமாக இயைந்து வாழவேண்டும். பெண்விடுதலை என்பது ஆண்களை எதிர்ப்பதல்ல. ஆண்களோடு முரண்படுவதல்ல. அது ஆணிடமிருந்து விலகிச்செல்வ தும் அல்ல. ஆணோடு பெண்ணும் பெண்ணோடு ஆணும் இணக்கமாக வாழ்வதுதான் மானுடத்தின் பயன். பெண் விடுதலைக்கு எதிரான முரண்கள் நம் சமூகத்தில் நிறுவப் பட்டுள்ளன. அவற்றைத்தான் இனம் கண்டு நாம் களையவேண்டும். பெண் விடுதலை என்பது மானுட விடுதலையோடு தொடர்புடையது. இங்கே நளினிதேவி அம்மையார் தன் நூலில் அக விடுதலை என்பது மன விடுதலையைக் குறிப்பது என்று நிறுவுகிறார். பெண்ணின் புற உலக விடுதலை என்பது ஆணாதிக் கச் சுரண்டலை, ஆணின் உழைப் புச் சுரண்டலை எதிர்ப்பது. அக விடுதலை என்பது ஆண்பெண் உளவியல் சிக்கலோடு தொடர்பு டையது. பெண்ணின் புற விடுதலை யோடு கூடிய அக விடுதலையே முழுமையானது.

இதுதான் முழுமையான விடுதலை. அதைத் தொடங்கி வைக்கும் முயற்சியாகத்தான் இந்த நூல் மலர்ந்திருக்கிறது.

இங்கே ஆண், பெண் என்ற இரண்டு சொற்களை நாம் பாலின வேறுபாட்டிற்காகப் பயன்படுத்தி வருகிறோம். ஆண் என்ற சொல் ஆளுமை என்ற சொல்லில் இருந்து பிறந்தது. பெண்களிலும் ஆளுமை உடையவர்கள் இருப் பதில்லையா? பெண் என்ற சொல் பேணுமை என்பதிலிருந்து வந்தது. ஆண் அலுவலகத்தை யும் குடும்பத்தையும் பேணு வதில்லையா? ஆணிலும் பெண் இருக்கிறாள். பெண்ணிலும் ஆண் இருக்கிறான். இதை நாம் உணர வேண்டும்.

ttt

ஆதிக்கம், ஒடுக்குமுறை, சுரண்டல், இந்த மூன்றுக்கும் எதிரான போராட்டம்தான் விடுதலை. மதத்தின் பெயரால் மோசமான கருத்து ஆதிக்கம் செலுத்தும் போது அதை எதிர்க்கிறோம். பெண்கள் மட்டுமே போராடி பெண் விடுதலையைப் பெறமுடியாது. அவர் களோடு ஜனநாயக சக்திகள் இணையவேண்டும்.

என்னுடைய சின்ன வயதில் கிராமப்புறங்களில் வாழ்ந்த அனுபவங்களை எண்ணிப் பார்க்கிறேன். அடித்தள மக்களிடம், உழைக்கும் மக்களிடம் உறுப்புக் கவர்ச்சி கிடையாது. உடல் கவர்ச்சியைப் பற்றியெல்லாம் எண்ணிக்கொண்டிருக்காமல் ஆண்களும் பெண்களும் மாங்கு மாங்கு என வேலை பார்ப்பார்கள். அருகில் இருப்பவர்களைப் பற்றிக் கவலைப்படாமல் எங்கள் அக்கா, தங்கைகள் குழந்தைக்குப் பால் கொடுப்பார்கள்.

அங்கே விரசத்துக்கு வேலையில்லை. ஒரே துறையில் குளிப்பார்கள். அங்கே அநாகரிகத்துக்கு வேலையில்லை. நாற்று நடும் போதும் சேலையை தூக்கிச்செருகிக்கொண்டு வேலைபார்ப்பார்கள். அங்கே வேறுபார்வைக்கு வேலை இல்லை. இளம்வயது ஆணும் கோமணத்தை மட்டுமே கட்டிக்கொண்டு களத்தில் நிற்பான். அங்கே ஆபாசத்துக்கு வேலையில்லை. அங்கே ஆணும் பெண்ணும் சகஜமாகவே பழகுவார்கள். விகல்பம் வேறுபாடு என்பதெல்லாம் கிடையாது. கணவன் மனைவிகூட வாடா போடா வாடி போடி என்று கூடப் பேசிக்கொள்வார்கள். கிராமங்களில் பெண்பார்க்க வரும்போதுகூட பெண் மேக்கப் போட்டுகொள்ள மாட்டாள். அந்தப் பெண் குளிக்காமல் தலைவாராமல் கூட இயல்பாக இருப்பாள். கரும்பு கடித்துக்கொண்டோ, எள்ளுப் புண்ணாக்கைத் தின்றுகொண்டோ இருப்பாள்.

அவளைக் காட்டி இதுதான் பொண்ணு என்பார் கள். அந்தப் பெண்னும் நாணிக்கோண மாட்டாள். இயல்பாக இருப்பாள். கிராமங்களில் வரதட்சணை எல்லாம் கிடையாது. ஆண்தான் பணத்தைக் கொடுத்து, பரிசம் போட்டுப் பெண்ணை அழைத்துக்கொள்வான். கிராமத்தில் உழைக்கும் மக்களிடம் ரசிக்கத்தக்க வாழ்க்கை இருந்தது. உரிமை இருந்தது. சமன்மை இருந்தது. இதைத்தான் சனாதனம் அநாகரிகம் என்றது. பெரியாரியமோ இதைத்தான் சமத்துவம் என்றது. பெண் விடுதலை என்றது. இந்துத்துவம் தாக்கம் செய்யாத வாழ்க்கை முறைதான் அது.

ஆண், பெண்ணுக்கிடையே விரசம் என்பது இடையில் கற்பிக்கப்பட்ட உணர்ச்சி. இந்துத்துவம் என்ற கோட்பாடு இங்கே நுழைந்து பெண்களுக்குத் தீட்டு, கல்வி மறுப்பு, நிலம் போன்ற உரிமைகள் மறுப்பு என்பதை வாழ்வியல் சட்டமாக்கியது. இந்தக் கோட்பாடுக்கு எதிரான போராட்டம் தான் பெண் விடுதலைப் போராட்டம்.

நளினி அம்மையார் ஒரு அருமையான கேள்வியை வைக்கிறார். கற்பு என்பதே கற்பிதம் என்கிறபோது அதை எதற்கு ஆணுக்கும் பெண்ணுக்கும் பொதுவில் வைக்கவேண்டும் என்கிறார்.

பெண்களின் வாழ்க்கையைக் கற்பு என்ற சொல் ஆட்டிப்படைக்கிறது. கற்பு என்றால் உறுதித்தன்மை என்று பொருள். கல் என்றால் உறுதி. காயகல்பம் என்றால் உடலை உறுதி செய்யும் லேகியம். நாம் கொண்டிருக்கும் திருமண உறவோ, நட்போ, கொள்கையோ உறுதித் தன்மையோடு இருந்தால், அதற்கும் கற்பு என்றுதான் பொருள். அதைப் பெண்ணின் உடலோடு தொடர்பு படுத்திப் பார்ப்பதுதான் வேடிக்கை.

அதேபோல் அச்சம், மடம், பயிர்ப்பு பெண்களுக்கு வேண்டும் என்றார்கள். இதுவும் ஆண்களுக்கும் பெண்களுக்கும் பொதுவானதுதான். ஆண்களுக்கும் அச்சம் நாணம், வேண்டும். தவறு செய்ய, குற்றம் இழைக்க, நேர்மை தவற அவன் அச்சப்படவேண்டும். நாணம் கொள்ள வேண்டும்.

ஆண் என்பவன் ஆயிரம் படிகள் தண்டலாம். பெண் படி தாண்டக்கூடாது என்பார்கள். இது ஆணாதிக்கத் தந்திரம்.

ஆண், பெண்ணை அடிமைப்படுத்தக் கூடாது.

சுரண்டக்கூடாது. கீழ்மை செய்யக்கூடாது. பெண் விடுதலை என்பது ஆண்களுக்கு எதிரானது அல்ல.

அது மானுடத்துக்கு அனுசரணையானது.

-விழாவில் அருட்திரு பிலிப் சுதாகரன், கு.கா.பாவலன், மு.ஞா.செ.இன்பா, ’பாவையர் மலர்’ வான்மதி, இயக்குநர் பிருந்தாசாரதி, முனைவர் இராம.குருநாதன், முனைவர் ஆதிராமுல்லை, கவிஞர் மானா.பாஸ்கரன், த.இலக்கியன் உள்ளிட்ட பலரும் உரையாற்றினர். முனைவர் நளினிதேவி, கவிதைமொழியில் ஏற்புரை ஆற்றி அரங் கைக் கவர்ந்தார். பெண் படைப்பாளிகளான கவிஞர் நர்மதா, பெண்ணியம் செல்வக்குமாரி, லதா சரவணன், லதா, ஜானு இந்து, மகாலட்சுமி ஆகியோருக்கு இந்த விழாவில் ’பெண்ணியப் பேரொளி’விருதை திருமாவள வன் வழங்கினார். பெண் விடுதலைக்கான குரலை உயர்த்திப் பிடித்தது இந்த விழா.