1996-ஆம் ஆண்டு ஜூன் 15-ஆம் நாள் "செம்மொழிப் பட்டியலில் தமிழ்' எனத் தலைப்பிட்டு தினமணி நாளேடு தலையங்கம் ஒன்றை எழுதி இருந்தது. அதில் மத்திய அரசின் பரிசீலனைக்குத் தமிழ்ச் செம்மொழித் தகுதி வழங்கும் கோரிக்கையை எடுத்துச் செல்லுமாறு கேட்டுக்கொண்டதோடு அரசு இந்தச் சமயத்தை நழுவவிடக் கூடாது என்றும் எச்சரித்து இருந்தது. கலைஞர் எச்சரிக்கையாக இருந்து வந்தார். ஆகவே அவரது அரசு மணவை முஸ்தபா, வா.செ. குழந்தைசாமி, ஜான் சாமுவேல், பொற்கோ ஆகியோரைக் கொண்ட ஒரு குழுவை அமைத்தது. அதோடு தமிழைச் செம்மொழி யாக்கக் கோரி மத்திய அரசுக்குக் கடிதம் ஒன்றையும் அனுப்பி வைத்தது. மத்திய அரசு அந்தக் கடிதத்தை மைசூரி லுள்ள இந்திய மொழிகளின் நிறுவனத்திற்கு அனுப்பி வைத்தது. அந்நிறுவனம் செம்மொழி என அறிவிக்கலாம் எனப் பரிந்துரைத்தது.

இதன் பிறகு சிறுசிறு அமைப்பு களும், சில அரசியல் கட்சிகளும் செம்மொழி பற்றிய கோரிக்கையை முன்வைத்து மத்திய அரசை வலியுறுத்திப் போராட்டங்களை நடத்தின. பலன் இல்லை. மீண்டும் தி.மு.க. தலைவர் கலைஞர் 22.4.2003-ல் பிரதமர் வாஜ்பாய்க்கு தமிழைச் செம்மொழியாக அறிவிக்க வேண்டும்' என்று கடிதம் எழுதினார்.

அந்த முயற்சி 12-10-2004-ல் மத்திய அரசின் அறிவிக்கையாக வெளிவந்தது. இதன் பிறகு மற்ற மொழிகளின் தகுதி அறிந்து பரிந்துரைக்கக் குழு அமைத்து 1-11-2004-ல் ஐக்கிய முற்போக்குக் கூட்டணியின் பிரதமர் மன்மோகன் சிங்கின் மத்திய அரசு அறிவிக்கை வெளியிட்டது. ஆக 2004-ஆம் ஆண்டே தமிழ் செம்மொழி ஆகிவிட்டது. 2005-ல் சமஸ்கிருதத்திற்கும் 2008-இல் கன்னடத்திற்கும், தெலுங்கிற்கும் 2013-இல் மலையாளத்திற்கு செம்மொழி அறிவிப்பு வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த அறிவிப்புகளில் நியாயம் இல்லை என்றாலும் தமிழ்தான் செம்மொழி என்று முதன்முதலி−ல் அறிவிக்கப்பட்டு இருக்கிறது. இதை பற்றி செய்திகள் நிரம்ப இருப்பினும் இங்கே நாம் கூறப் போவதில்லை. நேரம் இல்லை. சுமார் நூறாண்டுக்கு மேலாக இருந்த ஒரு பிரச்சினையைக் கலைஞர் முடித்து வைத்தார். தமிழைச் செம்மொழி என்று அறிவிக்கச் செய்து அவர் இமாலய வெற்றியைப் பெற்றுவிட்டார்.

தமிழ் செம்மொழி ஆனதற்கு பிறகு பெரிய மாநாட்டை கோவையில் நடத்தினார் கலைஞர். இடதுசாரி ஆய்வாளர்கள் தேவையில்லாத விமர்சனங் களைச் செய்தார்கள். நாம் அவர்களை ஒன்று கேட்டுக்கொள்கிறோம். நம் மொழி செம்மொழி என்பதை ஒவ்வொரு தமிழனும் உணர்ந்து கொள்ளும் வகையில் தெரிந்து கொள்ளும் வகையில் மாநாடு ஏற்பாடு செய்தது தவறா? சமஸ்கிருதத்திற்கு உலக மாநாடு நடைபெற்றது. தெலுங்கிற்கு உலக மாநாடு நடைபெற்றது. இந்திக்கு உலக மாநாடு நடைபெற்றது. இது யாருக்காவது தெரியுமா? கன்னடமும், மலையாளமும் உலக மாநாடுகளை நடத்தட்டுமே! யாராவது தெரிந்து கொள்கிறார்களா என்பதைப் பார்ப்போமா? முடியாது. திராவிட இயக்கத்தாரால் மட்டுமே அப்படி உலகம் தழுவிய மாநாடு நடத்த முடியும். அந்தப் பெருமிதத்திலும் சில ஆய்வாளர்கள் மாசு கற்பித்தார்கள்.

Advertisment

ஆகவே நண்பர்களே "மானமிகு சுயமரியாதைக் காரர்தான்' தாய் மொழியாம் தமிழைச் செம்மொழி என்று அறிவிக்கச் செய்ய முடியும். அந்தச் சொற் றொடரின் உள்ளீடு அப்படி! அதன் தனித்தன்மை அப்படி! அதற்கு எவரும் எதிர் நின்று அறைகூவல் விடமுடியாது.

அடுத்து திருவள்ளுவரைப் போற்றுவது, திருக்குறளைப் பரப்புவது கலைஞரின் பணியாக இருந்து வருகிறது. இதற்குக் காரணம் என்ன? ஈ.வெ. இராமசாமிப் பெரியார் 1927-ல் திருக்குறளைப் படித்தார். அதில் அவருக்குச் சில அய்யங்கள் தோன்றின. அவருடைய நண்பர் அறிஞர் பா.வே. மாணிக்க நாயக்கரிடத்தில் விவாதித்துத் தெரிந்து கொண்டார். பெரியார் எல்லாத் திருக்குறளையும் ஏற்றுக்கொள்ளுவதில்லை. திருக்குறள் "வர்ணாசிரம' முறைக்கு எதிரானது. "பிறப்போக்கும் எல்லா உயிர்க்கும்' எனும் கொள்கையை முழங்குவது. ஆகவே திராவிட இயக்கம் திருக்குறளைப் பரப்புகிறது. திருவள்ளுவரையும் போற்றுகிறது.

1949 ஜனவரி மாதம் 15, 16 தேதிகளில் சென்னை பிராட்வேயில் பெரியார் திருக்குறள் மாநாடு நடத்தினார். அப்போது தி.மு.கழகம் உருவாகவில்லை. செப்டம்பரில்தான் தோன்றப் போகிறது.

Advertisment

அம்மாநாட்டில் பேசுகிற போதுதான் திருக்குறளுக்குச் சிறந்த பகுத்தறிவு சார்ந்த உரை ஒன்று எழுதப்பட வேண்டும் என்கிற வேண்டுகோளைப் பெரியார் வைக்கிறார். இம்மாநாடு நடந்த சில மாதங்களில் சங்கரமடம் ஒரு திருக்குறள் உரையை வெளியிடுகிறது. என்றால் அதற்குக் காரணம் என்ன? என்பதை நமது தோழர்கள் ஆராய்ந்து பார்க்க வேண்டும். அதற்குப் பிறகுதான் மு.வ.வின் தெளிவுரை வந்தது. அது நமது இயக்கப் பார்வையில் இருக்கவில்லை. அதைப் பாரதிதாசனே கண்டனம் செய்து இருக்கிறார். புலவர் குழந்தையின் உரை வெளிவந்தது. அதற்கு முன்பும் திருக்குறள் உரைகள் இருந்தன. அவை வருணாசிரமம் பேசின. மதம் சார்ந்த கருத்தை முன் வைத்தன.

புரட்சிக் கவிஞர் பாரதிதாசன், "தமிழ் இறைவனாரின் திருக்குறளிலி−ருந்து ஒரு சொல் எடுத்து இயம்பிக் காட்டமாட்டாயா?' என்று கேட்பார். தமிழ் இறைவனார் என்றால்- தமிழியல் தலைமை என்று பொருள். அந்தக் கட்டமைப்பைக் கட்டுவதற்குப் பெரியார் திருக்குறளைச் சலித்து எடுத்தார். புரட்சிக் கவிஞர் கவிதை வடித்தார். திருவள்ளுவர் ஓவியம் வரைய காரணமாக இருந்தார். சிலைகள் அமைய அதுவே அடிப்படையாக அமைந்தது. அறிஞர் அண்ணா திருக்குறள் பற்றிக் கூறியுள்ள கருத்துக்கள் எல்லாம் அவருடைய படைப்புகளில் விரவி நிற்கின்றன.

கலைஞர் திருக்குறளில் தோய்ந்தவர். குறளோவியம் தீட்டியவர்; தெளிவுரை எழுதியவர். சென்னை மாநகராட்சி சார்பாக அமர்ந்த மேனியாக உள்ள வள்ளுவர் சிலையைத் தி.மு.க நிர்வாகத்தின் சார்பில் 1964-ல் மயிலாப்பூரில் அமைத்தது என்றால் காரணம் என்ன? சென்னை மெரினா கடற்கரையில் நின்ற நிலையில் திருவள்ளுவர் சிலை 1968-ல் உலகத் தமிழ் மாநாட்டின்போது அமைக்கப்பட்டதே அதற்கு என்ன பொருள்? தென்குமரியில் 133 அடி உயரத்தில் வள்ளுவர் கம்பீரமாக நிற்கிறாரே அதற்கு யார் காரணம்? வள்ளுவர் கோட்டம் அமைத்தது யார்? கலைஞர் அல்லவா?

rrr

அறிஞர் அண்ணாவினுடைய அமைச்சரவையில் கலைஞர் பொதுப்பணித்துறை அமைச்சராக இருந்தார். அப்போது அவர் போக்குவரத்துத் துறைக்கும் அமைச்சர். பேருந்துகளில் திருவள்ளுவரின் ஓவியம் படமாக வைக்கப்பட்டு அங்கே திருக்குறளும் அச்சடித்து சட்டம் போட்டு மாட்டி வைக்கப்பட்டது. இப்போதும் பேருந்துகளில் நீங்கள் காணலாம். நீங்கள் காண்கிற அந்த வள்ளுவரின் ஓவியம்தான் குடியாத்தம் தமிழ்ச்செல்வன் பணச்செலவு செய்து புரட்சிக் கவிஞரின் ஆலோசனையின் பேரில் வேணுகோபால சர்மா எனும் ஓவியர் வரைந்ததாகும். அதனைத்தான் முன்னர் நமது பேச்சில் குறிப்பிட்டோம்.

அந்த ஓவியம் முற்றாக முடிந்தபின் மயிலாப்பூரில் ஒரு வீட்டில் காட்சிக்காக வைக்கப்பட்டு இருந்தது. அறிஞர் அண்ணா, காமராசர், கலைஞர், நாவலர் போன்ற தலைவர்கள் எல்லாம் பார்வையிட்டு ஒப்புதல் தெரிவித்த ஓவியமாகும். 1960-ஆம் ஆண்டு தேனாம்பேட்டை காங்கிரஸ் மைதானத்தில் சி. சுப்பிரமணியம், அறிஞர் அண்ணா, கலைஞர் ஆகியோர் கலந்து கொண்ட கூட்டத்தில் அந்த ஓவியம் வெளியிடப்பட்டது. இந்த ஓவியம்தான் அஞ்சல் தலையாகவும் வெளியிடப்பட்டது. நாடாளுமன்றத்திலும் சட்டமன்றத்திலும் வைக்கப் பட்டு இருக்கிறது.

டாக்டர் சுப்பராயன் அஞ்சல்துறை அமைச்சராக இருக்கிறபோதுதான் திருவள்ளுவருக்கு அஞ்சல் தலை வெளியிடப்பட்டது. நாடாளுமன்றத்தில் மாதிரி ஓவியத்தைக் காட்டியபோது ஒருவர் பூணூல் இல்லையே என்று கேட்டு இருக்கிறார். அதற்கு சுப்பராயன் திருவள்ளுவர் மார்பின் குறுக்கே அணிந்திருக்கும் மேலாடையின் உள்ளே பூணூல் இருக்கத் தேவையில்லை என்கிறவர்கள் மேலாடைதான் அணிந்திருப்பதாகக் கருதிக் கொள்ளுங்கள் என்றார். இவ்வளவு தூரம் திருவள்ளுவரின் ஓவியம் வேலை செய்து இருக்கிறது. கலைஞர் அவர்கள் திருவள்ளுவர் சிலைகளையும், திருக்குறள் பரப்புரையையும் ஏன் மேற்கொள்கிறார் என்பதை இப்போது நீங்கள் புரிந்துகொண்டு இருப்பீர்கள்.

"மானமிகு சுயமரியாதைக்காரர்' என்று தம்மைக் கலைஞர் கூறிக்கொள்வது தெருச் சண்டையில் பேசப்படுகிற மானமோ சுயமரியாதையோ அல்ல! "மானமிகு சுயமரியாதைக்காரர்' என்றால் வர்ணாசிரம சநாதன தர்மம் சொல்கிற சூத்திர மக்கள், தாசி மக்கள், வேசி மக்கள், அடிமைகள் என்று கூறுவதை மாற்றி நாங்கள் அப்படி அல்லர்.

நாங்கள் தமிழர்கள்- தொல்குடிகள் மானம் மிகுந்தவர்கள் என்று சொல்வது ஆகும். எங்கள் வாழ்க்கை நெறிலி வர்ணாசிரம வாழ்க்கை நெறி இல்லை. மனிதரிடையே சமநிலையை வளர்ப்பதாகும். சங்க காலத்திற்கு முந்தைய தமிழர் சமுதாயத்தில் தமிழன் ஒருவருக்கொருவர் சமநிலையில் வாழ்ந்ததோடு சமயச் சார்பற்ற சமுதாயத்தில் வாழ்ந்தவர்கள் என்பது ஆய்விலி−ருந்து பெறப்படுவதை உணர்ந்தவர் கலைஞர்.

அதுமட்டுமல்ல, தமிழர் சமுதாயம் எப்படி இழிநிலைக்கு தள்ளப்பட்டுவிட்டது என்பதைக் கவிப்பேரரசு வைரமுத்து ஒருமுறை பின்வருமாறு தெரிவித்து இருந்தார்.

""இந்தியர் அல்லாத அரசுகள் எழுந்ததும் வீழ்ந்ததும்தான் இந்தியாவின் வரலாறு என்றார் காரல் மார்க்ஸ், தமிழர் அல்லாதவர்கள் தமிழர்களை ஆண்டதுதான் தமிழர்களின் வரலாறு என்பது அதன் உண்மை. மண்ணின் மக்களை ஆலயத்திற்குள் அனுமதிக் காமல் பூக்களுக்கும் வரி விதித்துப் "புண்ணியம்' தேடிக் கொண்டது பல்லவ அரசு.

வருணாசிரமத்தை நெறியென்று கொண்டு சாதிவாரியாய் வீதி அமைத்தது மத மயக்கத்தின் மடியில் கிடந்த மாமன்னன் ராஜராஜன் அரசு.

மேல் சாதி மக்களுக்குக் கருவூலத் தங்கம் காணிக்கை கொடுத்துவிட்டு தறிகளுக்கும் மாட்டு வண்டிகளுக்கும் வரி விதித்தது நாயக்கர் அரசு. கீழ்சாதி என்று கருதப் பட்ட சாதி இந்து ஒருவர் கோயிலுக்குள் நுழைவது குற்றம் என்று நீதிமன்றத் தில் தீர்ப்பளித்தது பிரிட்டிஷ் அரசு (1874)

இப்படிப்பட்ட நூற்றாண்டுகளின் செருப்படியில் லாடமாய்த் தேய்ந்து கிடந்த தமிழனைத் தொட்டுத் தூக்கி நிறுத்தியது திராவிட இயக்கம். தொலைந்துபோன விழுமியங்களை மீட்டெடுத்தது திராவிட இயக்கம். உயர்வு, இழிவு என்பன பிறப்பால் உருவானதில்லை என்று வரலாற்று ரீதியாக வாதிட்டு வென்றது திராவிட இயக்கம்''.

இப்போது நமது கவிப்பேரரசு வைரமுத்து கூறுகிற இந்தச் சிந்தனைகளைத் தமது மாணவப் பருவக் காலத்திலேயே மனதில் உருவாக்கிக் கொண்டவர் கலைஞர். இவை மட்டுமா? அவர் தேவாரம் பாடாத ஆரூரர், அரசிய−ல் அப்பராகத் திகழ்ந்தவர். பக்தி இயக்கக் காலத்தி−ருந்து தமிழர் சமுதாயத்தின் இறையியல் கோட்பாடுகள் சிக்கித் திணறுவதைப் பார்க்கிறார். அதில் எழுச்சிபோல் தோற்றமளிக்கக்கூடிய தாயுமானவர், அருணகிரிநாதர், பட்டினத்தடிகள், சித்தர் பாடல்கள் அறிவுச் சி−ர்ப்பை, சிந்தனைக் கிளர்ச்சியை ஊட்டுகின்றன. அதில் முழுமையைக் காணமுடியவில்லை. மையிருட்டில் ஒளிக்கீற்று துலங்குகிறது. பொருள்கள் புலனாகவில்லை.

வள்ளலார் வருகிறார். எல்லாவற்றையும் ஆழமாகப் பார்க்கிறார். ஒரு முடிவுக்கு வருகிறார். "மதித்த சமய வழக்கெல்லாம் மாய்ந்தது. வருணாசிரமமெனும் மயக்கமும் சாய்ந்தது' என்கிறார். பக்தி இலக்கியக் கால முதல் வள்ளலார் காலத்திற்கு முன் வரை இறைவனைத் தேடிய ஞானிகள் வர்ணாசிரம சிக்கலை வள்ளலார் போல் சொன்னதில்லை. அதில் வள்ளலார் தனித்து நிற்கிறார். அந்த அடையாளத்தை, பௌத்தத்தின் வழி உணர்கிறார் அயோத்திதாசப் பண்டிதர். இராமசாமிப் பெரியார் இதை தமது அனுபவத்தால் பெறுகிறார். அறிஞர் அண்ணாவோ தமது ஆழமான கல்வியாலும் பெரியாரின் இயக்க ஈடுபாட்டாலும் அறிகிறார். இந்தச் சிந்தனைகளை எல்லாம் கலைஞர் தமது உள்ளத்தில் பதிவு செய்து கொண்டே வருகிறார். எழுதிப் பார்க்கிறார். நடித்து நாட்டு மக்களுக்கு எடுத்துச் சொல்கிறார். ஆளுகிற வாய்ப்பு கிடைக்கிறபோது சட்டத்தின் வழி தமிழ் நெறியைச் செதுக்கினார்.

அதைச் சிந்தித்து மனத்தில் இருத்திதான் கலைஞர்அவர்கள் அரசியல் சாதனைகள் நிகழ்த்தி வந்து இருக்கிறார்கள். அதனால்தான் ஆதிக்க சக்திகளிடம்- மதவாதிகளிடம் எதிர்ப்புகள் அவருக்கு எப்போதும் அதிகம் இருந்து வந்து இருக்கிறது. இதுவன்றி, பழந்தமிழ் கட்டுமானத்தை மீட்டுருவாக்க முனைந்து அவர் பணியாற்றி வருபவ ராக கடைசிவரை திகழ்ந்தார். இப்படிப்பட்ட மகத்தான சாதனைகளைப் புரிந்து வரலாறாக மாறி இருக்கிற கலைஞர் என்றும் தமிழர்களின் எண்ணத்தில் நிறைந்து இருப்பார்.

("மானமிகு சுயமரியாதைக்காரன்' நூலிலிருந்து...)