களுடைய பள்ளிக்கூடத்தில் 'பெற்றோர்கள் தினம்' கொண்டாடப்பட்ட நாளன்று இரவில் உணவு சாப்பிடுவதற்காக அமர்ந்திருந்தபோது, தந்தை கூறினார்: "இனி இப்படிப்பட்ட கோமாளித்தனமான செயல்களைச் செய்யாதே... நாடகமாம் நாடகம்!''

தாய் தலையை உயர்த்தி தந்தையின் முகத்தையே பார்த்தாள். ஆனால், மகள் தலையை உயர்த்தவில்லை.

அவள் கிண்ணத்திலிருந்த சோற்றில் விரலால் ஒரு வீட்டை வரைந்தாள். பிறகு... அதை அழித்துவிட்டாள்.

"ஒத்திகை..... ஒத்திகை... என்று கூறி இரண்டு மாதங்களாக ஓட்டமும் தாவலும்! பிறகு..இந்த கோமாளி கதாபாத்திரத்தில் நடிப்பதற்குத்தான் அவையெல்லாம்....!''

Advertisment

மகள் தலையை உயர்த்தி தந்தையைப் பார்த்தாள். மீண்டும் தலையை தாழ்த்திக் கொண்டாள். தாய் சிரித்துக்கொண்டே கூறினாள்: "அவளுடைய தவறு இல்லையே! அவளுக்குக் கிடைச்சதே செங்கல்லையும் கலவையையும் சுமக்கும் வேடம்தான். அதை நன்றாகச் செய்தாளே!'

தாயின் முகத்தையே தந்தை கோபமாகப் பார்த்தார். சாதாரண நாட்களாக இருந்தால், அந்த முகத்தையும் இடையே வெளிப்படக்கூடிய அந்த புன்சிரிப்பையும் பார்க்கும்போது, கோபம் தணிந்து விடும். ஆனால், அன்று அந்த அழகும் அவரை கோபம் கொள்ளச் செய்தது.

"ராதா....நீதான் இவளைத் தூண்டிவிட்டுக் கொண்டிருக்கிறவள்.. அவளை கோமாளித்தனமான காரியங்களைச் செய்ய வச்சு...''

Advertisment

தாய் இயல்பான கோபத்துடன் கூறினாள்: "வெறுமனே ஒவ்வொரு முட்டாள்தனத்தையும் சொல்லிக்கிட்டு இருக்க வேண்டாம். மகளை வைத்து ராணி வேடத்தைச் செய்ய வைத்திருந்தால், இது எதுவுமே தோணியிருக்காது.''

தொடர்ந்து தாய் வெள்ளிமணிகள் குலுங்குவதைப்போல வாய்விட்டுச் சிரித்தாள்.

தந்தை எதுவும் கூறவில்லை.

மனைவி கூறியது சரிதான் என்பது அவருக்குத் தெரியும். ஆனால், அந்தச் சிரிப்பு அவருக்குச் சிறிதும் ரசிக்கக் கூடியதாக இல்லை. மகளிடம் அவள் கணக்கைவிட அதிகமாக குரூரத் தன்மையைக் காட்டுகிறாள். அவர் சிந்தித்தார். பல வேளைகளில் அவள் மகளின் நிறத்தைப் பற்றியும் அழகற்ற நிலையைப் பற்றியும் குறிப்பிடும் வகையில் பொழுதுபோக்குகள் பேசுவதுண்டு.

"அப்பாவைப் போலவே மகளும்... அந்த வழுக்கை விழுந்த நெற்றிகூட கிடைச்சிருக்கு...''

"மக்களுக்குக் கல்யாணம் நடக்கணும்னா, வரதட்சணை பணத்தைத் தயார் பண்ணி வச்சிக்கோங்க. அழகைப் பார்த்து மயங்கி யாருமே வர மாட்டாங்க...''

பல வேளைகளில் அந்த குலுங்கல் சிரிப்பிற்கு மத்தியில் அவர் மகளின் முகத்தைப் பார்ப்பதுண்டு.

அவளுடைய கண்கள் விரிந்திருக்கும்.

ஆனால், ஒருமுறைகூட தாயின் வார்த்தை களைக் கேட்டு அவள் அழுததில்லை.

ss

ஒருமுறை கூட தாயைக் குறை கூறியதில்லை. தாய் நல்ல புடவையையும் நகைகளையும் அணிந்து கொண்டு வெளியே செல்லும்போது, அவள் புத்தகத்தை மடக்கி வைத்துவிட்டு

வாசலுக்குச் செல்வாள். தாய் காரில் ஏறி அமர்ந்திருக்க, அவள் கையை உயர்த்தி சிரிப்பாள். அவர் அவற்றையெல்லாம் பார்த்துக் கொண்டிருப்பார்.

அவள் தாயைப் பற்றி கூறும் அனைத்தையும் கேட்பார்.

"பார்ப்பதற்கு அம்மா.... எவ்வளவு அழகா இருக்கீங்க! அம்மா... இன்னைக்கு நீங்க சிவப்பு புடவையைக் கட்டுங்க. அது உங்களோட நிறத்துக்கு எந்த அளவுக்குப் பொருத்தமா இருக்கும்னு தெரியுமா? அம்மா.. என் வயதில் நீங்க இருக்குறப்போ, என்னைவிட நீங்க தடிமனாக இருந்தீங்க... அப்படித்தானே?''

மெலிந்த கால்கள்... கறுத்த நிறம்.... எப்போதும் அசைந்து கொண்டிருக்கும் கைகள்.... வெண்ணிற ஆடை... எனினும், அவள் எந்த அளவிற்கு நல்ல குழந்தை!

"பேபீ... இனிமேல் இந்த நாடகங்களில் வேடம் கட்டி நடிக்க வேண்டாம். உனக்கு பதிமூணு வயசு ஆச்சுல்ல...? அதனால்தான் நான் சொன்னேன்...''

பேபி எதுவும் கூறவில்லை.

அவளுடைய கண்கள் நிறைந்திருந்தன.

அவர் குற்றவுணர்வுடன் முகத்தைத் திருப்பி, மீண்டும் பயமற்ற குரலில் கூறினார்: "உணவைச் சாப்பிடு...''

உணவைச் சாப்பிட்டுவிட்டு எழுந்தவுடன், படுப்பதற்காக அவர் மேலே சென்றார். வாசித்து நிறுத்திய புத்தகத்தை எடுத்தவாறு கட்டிலின் மீது கிடந்தார். ஆனால், நினைவுகள் அனைத்தும் பேபியைப் பற்றியே இருந்தன.

மாலை நேரத்தில் பள்ளிக்கூட கட்டடத்திற்குப் பின்னால் கட்டப்பட்டிருந்த மேடையில் நாடகம் நடந்து கொண்டிருந்தது.

அரசர் சிலரிடம் கேள்விகள் கேட்கிறார். நான்கடி உயரமுள்ள ஒரு அரசி, தாளால் செய்யப்பட்ட கிரீடத்தை அணிந்து கொண்டு அங்குமிங்குமாக அதிகார தோரணையுடன் நடந்து கொண்டிருக்கிறாள்.

வெண்ணிற துணியை உடலில் சுற்றிக் கொண்டு, சிவப்பு நிறத்தில் பெரிய தலைப்பாகையை அணிந்து கொண்டு கையில் ஒரு சாந்துக் கலவை வைத்திருக்கும் கலனைக் கையில் வைத்தவாறு பேபி நுழைகிறாள். சாயம் பூசக்கூடிய மனிதனின் கதாபாத்திரம் ஒன்றரை நிமிட உரையாடலுக்குப் பிறகு உள்ளே திரும்பிச் செல்கிறது...

"என்ன.... புத்தகத்தைத் திறந்து வைத்துக்கொண்டு சிந்தனையில் மூழ்கியவாறு படுத்திருக்கீங்க?''

மனைவி செருப்புகளைக் கழற்றிவிட்டு உள்ளே வந்தாள். அவளுடைய கைகள் குளிர்ந்திருந்தன.

"ராதா... நீ பேபியை மிகவும் வேதனைப்படுத்துறே. எப்போதும் அவளைக் கிண்டல் பண்ணுறே...''

"நல்லாத்தான் இருக்கு! இன்னைக்கு நானா அவளைப் பார்த்து கோபப் பட்டேன்?''

மீண்டும் அந்த குலுங்கல் சிரிப்பு....

"ராதா... அவளுக்கு அப்படி என்ன அழகு விஷயத்துல குறை? உன் நிறம் இல்லைன்னு சொல்றியா? அவளுடைய நிறம் என்ன கெட்டுப்போச்சு? என் அம்மாவும் அந்த நிறம்தான்.''

"அம்மாவின் நிறம் என்பதற்காக....''

அவருக்குக் கோபம் வந்தது.'' என் அம்மாவை நீ கிண்டல் பண்றியா?''

"என்ன... இன்னைக்கு எல்லார் மேலயும் பாய்ந்து கடிச்சிக்கிட்டு இருக்கீங்க? உயர் அதிகாரி திட்டிவிட்டார்னு நினைக்கிறேன்...''

அவள் எழுந்து ஒரு முனகல் பாட்டுடன் வெளியே சென்றாள். அவர் புத்தகத்தை மடக்கி வைத்துவிட்டு எழுந்தார். சாளரத்தின் கதவை நோக்கி நடந்தார்.

இருள் நிறைந்த இரவு வேளை...

தோட்டத்தின் மூலையில் காவலாளியின் சிறிய சிம்னி விளக்கு எரிந்து கொண்டிருந்தது.

தந்தை ஒரு சிகரெட்டை எடுத்து பற்ற வைத்தார். மகளின் ஆரவாரமான படி ஏறல் உண்டாக்கிய சத்தத்தைக் கேட்டதும் அவர் கண்களை மூடி, நெற்றியைச் சுளித்தார். ஆனால், எப்போதும்போல அதிக கோபம் கொள்ளவில்லை. "இனிமேல் நான் அவள் மீது கோபப்பட மாட்டேன்.'' -அவர் சிந்தித்தார்: "நானும் அவளிடம் கடுமையாக நடந்து கொண்டால், அவளுக்கு எங்கிருந்து நிம்மதி கிடைக்கும்? இனி எந்தக் காலத்திலும் அவள் தலைகுனிந்தவாறு நகத்தைக் கடித்துக் கொண்டு கணக்கு போடும்போதோ.. குளியலறையில் நீர்த் தொட்டியில் பேனாவைக் கழுவி, மையைக் கலந்து விட்டாலோ... காவலாளியின் வீட்டிற்குச் சென்று அமர்ந்து உரையாடிக் கொண்டிருந்தாலோ... அவளைத் திட்ட மாட்டேன். வயதில் மூத்தவர்களை அளந்து பார்க்கக்கூடிய அளவுகோலை வைத்துக் கொண்டு நான் எதற்கு இந்தச் சின்ன குழந்தையைக் குற்றம் கூறுகிறேன்?''

தந்தை சிகரெட்டை தரையில் போட்டுவிட்டு நசுக்கி அணைத்தார். சுவரிலிருந்த மகளின் வண்ண புகைப்படம் அவரைப் பார்த்து சிரித்துக் கொண்டிருந்தது.

அவளுக்கு பத்து வயது நடக்கும்போது எடுத்த புகைப்படமது. அந்த தலைமுடி தோள்களைத் தொட்டுக் கொண்டிருந்தன.

வலது பக்கத்தில் சற்று எழுந்து நிற்கும் அந்த தெற்றுப் பற்களையும் ஆடையின் பொத்தானைத் திருகிப் பிடித்திருக்கும் கை விரல்களையும் பெரிய அந்த கண்களையும் பார்த்தவாறு சிறிது நேரம் நின்றுவிட்டு அவர் அழைத்தார்: "பேபீ...!''

"என்ன அப்பா?''- அவளுடைய அறையில் ஒரு நாற்காலி நகர்வதையும் மேஜை ஓசை உண்டாக்குவதையும் தாள்கள் பறப்பதையும்... அனைத்தையும் அவர் கேட்டார்.

"பேபீ.... இங்கு வா...''

சூறாவளியைப் போல அவள் ஓடி வந்து நின்றாள். கை விரல்களிலும் மூக்கின் மீதும் மை படிந்திருந்தது.

"நீ என்ன பண்ணிக்கிட்டு இருந்தே?''

"எதுவுமில்ல...''

"எழுதிக்கிட்டு இருந்தே.... அப்படித்தானே?''

"ம்...''

"கணிதமா?''

அவள் எதுவும் கூறவில்லை. கை விரல்கள் பொத்தான் மீதும் தலை முடியிலும் பற்களுக்கு மத்தியிலும் பயணித்துக் கொண்டிருந்தன.

"கணக்கு போடு. கணிதத்தில் நீ சிறிதும் கவனம் செலுத்தவில்லை என்று மேரி டீச்சர் என்கிட்ட சொன்னாங்க. ஏன் அப்படி?''

அவள் தலையைக் குனிந்து கொண்டு நின்றிருந்தாள்.

"ம்...போ... அதிகம் எழுத வேண்டாம். இரவில் வாசித்து கண்களைக் கெடுத்துக் கொள்ள வேண்டாம்.''

அவள் படிகளில் அதிக சத்தத்தை உண்டாக்கியவாறு திரும்பிச் சென்றாள்.

தாய் அறைக்கு வந்தபோது, தந்தை கூறினார்: "ராதா...நீ ஏன் பேபிக்கு நல்ல ஆடைகள் எதுவும் தைத்துக் தரல? ஒன்றுக்குமே இறக்கமில்ல...''

"தைக்கிறேன்...''

"இரண்டு.... மூன்று நிறங்கள் உள்ள ஆடைகளைக் தைத்துக் கொடு...பாவம்...

எப்போதும் வெண்ணிற ஆடையையே அணிந்திருக்கிறாள்.''

"வெள்ளைதான் அவளுக்குப் பொருத்தமா இருக்கு...''

***

இரவில் புத்தகத்தை வாசித்துவிட்டு அவர் எழுந்தார். நேரம் பதினொன்றரை ஆகியிருந்தது.

மனைவி வலது காலை தலையணையின்மீது தூக்கி வைத்த நிலையில் உறங்கிக் கிடந்தாள்.

பேபியின் அறையில் விளக்கு இருந்தாலும், அவள் உறங்கி விட்டிருந்தாள்.

சிறிதும் நிலவு வெளிச்சம் இல்லாத இரவு வேளைகளில் அவள் விளக்கொளியை அணைக் காமலே தூங்குவாள்.

அவள் மல்லார்ந்து படுத்து தூங்கிக்கொண்டி ருந்தாள்.

மூக்கின் நுனியில் தெரிந்த மைக் கறையையும், பின்னிக் கட்டப்பட்டிருந்த அந்த முடியையும், வெண்ணிறக் காலுறைகள் அணிந்திருந்த சிறிய காலடிகளையும் பார்த்தவாறு அவர் சிறிது நேரம் நின்றிருந்தார். பிறகு... விளக்கை அணைப்பதற்காக திரும்பியபோதுதான் அவர் தரையில் சிதறிக் கிடந்த தாள்களைப் பார்த்தார்.

மை புள்ளிகளும் கோடுகளும் பெருக்கல்களும் வீட்டின் ஓவியங்களும் நிறைந்த தாள்களில் கவிதையின் வரிகள்....

"என் அன்பு ஒரு வண்டைப் போன்றது.

என் அன்பு ஒரு பைத்தியம் பிடித்த வண்டைப் போன்றது.

என் அன்பு ஒரு வண்டைப் போன்றது...

உங்களை நாடி வந்தது.

என் அன்பிற்குரிய மேரி டீச்சர்....

என் அன்பு ஒரு மழையைப் போன்றது...

என் அன்பு ஒரு பைத்தியம் பிடித்த மழையைப் போன்றது...''

அவர் அந்த தாள்களை அடுக்கி வைத்தார்.

தொடர்ந்து...தரையில் மிகவும் மெதுவாக சிதற விட்டார்.

விளக்கை அணைத்துவிட்டு தன் அறைக்குத் திரும்புவதற்கு முன்னால்...அவர் குனிந்து,மிகவும் மெதுவாக நெற்றியின் மீது முத்தமிட்டார். பிறகு....ஏதோ ஒரு குற்றத்தைச் செய்தால் வரக்கூடிய குற்றவுணர்வுடனும் வெட்கத்துடனும் தன் அறையை நோக்கி நடந்தார்.

அன்று இரவு அவர் நீண்ட காலத்திற்குப் பிறகு கனவு கண்டார். அவரும் மனைவியும் குழந்தையும் சேர்ந்து ஒரு படகில் செல்கிறார்கள். பேபி இரண்டு வயது மட்டுமே உள்ள குழந்தை... ஆனால், அவள் படகைப் புரட்ட முயற்சித்துக் கொண்டி ருந்தாள்.

இறுதியில்....

கனவிலிருந்து கண் விழித்தபோது நேரம் இரண்டு மணி ஆகியிருந்தது. அவர் ஒரு சிகரெட்டை எடுத்து பற்ற வைத்தார்.