அவன் நடைப்பயிற்சி முடிந்து திரும்பிவந்து சேர்ந்தபிறகும், அவள் அந்த பாம்புப் புற்றுக்கு முன்னால், புழுதிமண்ணில், ஒரு சிலையின் அசைவற்ற தன்மையுடன் அமர்ந்துகொண்டிருந்தாள். எதையோ தேடிக்கொண்டிருந்த கண்களுடன்...
அவனுக்கு தாங்கமுடியாத உணர்வு உண்டானது.
அவளுடைய ஆடைகளுக்கும் அந்த மாலைப்பொழுதின் புழுதிமண்ணின் நிறமிருந்தது. மண்ணிலிருந்து மேலே வந்த ஒரு உயிரினத்தைப்போல அவள் காணப்பட்டாள். துக்கம் நிறைந்த கண்களைக்கொண்ட மண்ணுளிப் பாம்புகளை நினைத்தான்.
அவன் வேகமாகப் படிகளில் ஏறி, உள்ளே இருட்டிகுள் அபயம் தேடினான்.
அவனுடைய தாய் ஒரு லாந்தர் விளக்கை எரியவைக்க முயற்சித்துக் கொண்டிருந்தாள். அவனைப் பார்த்ததும், அவள் தன் முகத்திலிருந்த வியர்வையை உள்ளங்கையால் துடைத்துவிட்டு, அந்த விளக்கை உயர்த்திக் காட்டினாள்.
""இதுக்கு என்ன பிரச்சினை? கொஞ்சம் பாரு ராமன்குட்டி.'' அவள் கூறினாள்.
""நான் எவ்வளவு முயற்சி செஞ்சும், அதோட திரிமேலே போக மாட்டேங்குது.''
அவன் தன் வேட்டியின் ஓரங்கள் தரையில் படாமலிருக்க முயற்சித்தவாறு அமர்ந்தான். தாய்க்கு அருகில்... அவளுடைய சரீரத்தின் லேசான வாசனையை முகர்ந்தவாறு இருந்த அந்த இருப்பிலும், அவனுடைய இதயம் இனம்புரியாத வேதனையுடன் துடித்துக் கொண்டிருந்தது.
""எங்கே போனே?'' தாய் கேட்டாள்.
""வயல் வழியா வெறுமனே நடந்தேன்.''
""வடக்கு வீட்டு வாசல் வழியாவா திரும்பிவந்தே?'' அவன் தலையை ஆட்டினான்.
""அந்த வீட்டு வாசல் வழியாவா திரும்பிவந்தே?'' தாய் மீண்டும் கேட்டாள்.v ""இல்ல.''
அவன் விளக்கைப் பற்றவைத்து தாயின் கையில் கொடுத்தான். பிறகு... எழுந்து கையைக் கழுவுவதற்காக வாசலுக்கு நடந்தான்.
வெளியே... இருண்ட ஆகாயத்திற்குக் கீழே...
அதையும்விட இருண்ட ஒரு காட்டிற்கு முன்னால் அசைவே இல்லாமல் அந்த இளம்பெண் அமர்ந்திருந்தாள். அவளுடைய முகம் அப்போது ஒரு கறுத்த வட்டமாக மாறிவிட்டிருந்தது என்றாலும், அந்த கண்கள் தன் முகத்திலும் சரீரத்திலும் வந்து மோதுவதைப்போல அவனுக்குத் தோன்றியது.
அவனுடைய முழங்கால்கள் நடுங்கின. வாசலுக்குச் சென்று அவளுடன் பேசவேண்டும் என்பதற்கு மட்டுமல்ல: அவளைப் பார்த்ததாகக் காட்டிக் கொள்வதற்குக்கூட அவனுக்கு தைரியம் இல்லாமலிருந்தது.
அவன் சிறிது நீரை எடுத்து முகத்தைக் கழுவிவிட்டு உள்ளே சென்றான்.
அவனுடைய அறையில் வெளிச்சம் இல்லை. கட்டிலின்மீது தான் மாலையில் அவிழ்த்துப் போட்டிருந்த சட்டை கிடந்தது. கொக்கி உடைந்த ஒரு இடுப்பு வாரும்... அவன் படுக்கை விரிப்பை எடுத்து உதறி அவை இரண்டையும் தரையில் போட்டான். பிறகு... மீண்டும் விரிப்பை விரித்து அதன்மீது மல்லாந்து படுத்தான்.
சாளரத்திற்கு அருகில் யாருக்கும் தேவைப்படாத ஒரு செய்தியுடன் ஒரு குயில் பறந்துசென்றது... "கூ...' அது கூறியது: "கூ... கூ...'
அவன் அந்த லேசான இருட்டில் தனக்குத்தானே மெதுவான குரலில் கூறிக்கொண்டான்: "ராமன்குட்டி... நீ என்ன ஒரு முட்டாள்! பயங்கர முட்டாள்!'
சிந்திக்க... சிந்திக்க... தன்னுடைய முட்டாள்தனத்தை நினைத்து அவனுக்குச் சிரிப்பு வந்தது. தன்னுடைய மனசாட்சிக்கு அவளுடன் என்ன உறவிருக்கிறது? அவள் தனக்கு யார்? யாருமே இல்லை.... யாராக இருந்தாள்? சிறு வயதில்.... விடுமுறைக் காலங்களில் ஊருக்கு வரும்போது, தன்னுடன் சேர்ந்து விளையாடிய சிறுமி.... அவ்வளவுதான்.
"அது நடக்காது... அது நடக்காது...' அன்று விளையாடுவதற்கு மத்தியில் அவள் அடிக்கடி உரத்த குரலில் கூறிக்கொண்டிருந்தாள். விளையாட்டில் அவளைத் தோற்கடித்தால், உடனே தன் தலைமுடிச் சுருள்களை அசைத்தவாறு அவள் கூறுவாள்.
"அது நடக்காது.'
அந்த காலத்தில் அவளுடைய குரல் ஒரு சிறுவனின் குரலாக இருந்தது. புதிய பட்டுநூலைப்போன்ற... முரட்டுத்தனமான ஒரு குரல். அந்த முரட்டுத்தனம்... அடிபணியாத குணம்.... அவளுடைய அசைவுகளிலும் இருந்தது... அவள் ஒருமுறைகூட களைத்துப்போய் விளையாட்டை நிறுத்திக்கொள்ளவோ... மற்ற சிறுமிகளைப்போல... புழுதி மண்ணில் துணி பொம்மைகளின் சோர்வுடன் குழைந்து விழுந்து ஓய்வெடுக்க வேண்டுமென்று படுக்கவோ செய்ததில்லை. மாலையில் இரண்டு மூன்று மணி நேரம் விளையாடிவிட்டு, சிவந்த முகத்துடன் அவள் வீட்டிற்குத் திரும்பிச் செல்லும்போதுகூட, களைப்பே அறிந்திராத அந்த கால்கள் துள்ளிக்கொண்டிருக்கும். காற்று பலமாக அடிக்கும்போது. தலைசாய்க்கும் நெற்கதிர்களுக்கு நடுவில் ஓடிக்கொண்டிருக்கும் வரப்புகளில் பாவாடையைப் பறக்கவிட்டவாறு அவள் ஓடிக்கொண்டிருப்பாள்.
"ம்...' அவள் கூறுவாள்: "காற்று என் காதுல பாட்டுபாடுதே... ஊ... ஊ...'
அவள் வளர்ந்தபோது, அவன் அவளிடமிருந்து விலகிக்கொண்டான். அந்த விலகல் சாதாரணமானதுதான்... இயல்பாக நடக்கக்கூடியதுதான்.
அவளுடன் அவனால் எதைப்பற்றி பேசமுடியும்? அவள் பிறந்ததற்குப்பிறகு, அந்த கிராமத்திற்கு வெளியே சென்றதில்லை. மொத்தத்தில் ஒரு நூற்றுக்கும் அதிகமான மனிதர்களை அவள் பார்த்திருக்கக்கூட வாய்ப்பில்லை. எனினும், அவன் முயற்சித்தான். தன்னை நோக்கி நீட்டப்பட்ட அந்த சதைப்பிடிப்பான கைகளை அவமானப் படுத்திவிடக்கூடாது என்பதற்காக ஒருமுறை... விடுமுறைக் காலத்தில் வீட்டிலிருந்தபோது... சாளரத்தின் வழியாகப் பார்த்துவிட்டு, வடக்கு திசையில் வாசலில் சிந்தனையுடன் இருந்த அந்த இளம்பெண்ணைப் பார்த்துவிட்டு, தாயும் வேறு யாரும் அறியாமலே அவன் வெளியே சென்றான்.: அவள் வேலிக்கருகில் நின்று ஒரு செம்பருத்திச் செடியின் இலைகளைக் காரணமே இல்லாமல் கிள்ளி நசுக்கிக்கொண்டிருந்தாள்.
"என்ன சாந்தா?' அவன் கேட்டான். தன் குரலுக்குச் சிறிதுகூட இனிமையில்லை என்பதாக அவனுக்குத் தோன்றியது. அவள் கண்களை உயர்த்திப் புன்னகைத்தாள். சற்று அளவில் பெரிதாக இருந்த இரண்டு பற்களை வெளியே தெரியும்படி காட்டிய அந்தச் சிரிப்பை மீண்டும் பார்த்ததும், அவன் திடீரென்று தளர்ந்து போனான். வளர்ந்தவர்களின் உலகத்தில் அதன் சக்தி முன்பைவிட அதிகரித்துவிட்டிருப்பதை அவன் புரிந்துகொண்டான். அவனால் சிரிக்கக்கூட முடியவில்லை. "என் தங்கச்சி...' அவனுடைய இதயம் முணுமுணுத்தது: "என் சொந்த தங்கச்சி...'
அவளுடைய கைகளை எடுத்து ஒவ்வொரு விரலையும் தனித்தனியாக முத்தமிடவேண்டுமென்று அவன் ஆசைப்பட்டான். அவளுடைய கன்னங்களைத் தொடுவதற்கு... அவளைக் கொஞ்சுவதற்கு... சிரிக்கச் செய்வதற்கு... ஆனால், அவன் ஒரு சோர்வு நிறைந்த குரலில் கேட்டான். "மதியம் தூங்கறதில்லியா? வெயில்ல ஏன் இப்படி நடக்கறே?'
"சில நேரங்கள்ல தூங்குவேன். சில நேரங்கள்ல தூங்கமாட்டேன்.'
அவன் எதையும் கூறுவதற்கு முயற்சிக்கவில்லை. உயரம் குறைவான, தரமனான சரீரத்தைக்கொண்ட ஒரு இளம்பெண்ணாக அவள் ஆகிவிட்டிருந்தாள். கைத்தண்டு முழுக்க உரோமம்... முகம் முழுவதும் முகப்பருக்கள். அவன் அவளுடைய அழகற்ற விஷயங்களை நினைத்து ஒவ்வொன்றுக்கும் தைரியம் கொடுக்க முயற்சித்தான். ஆனால், அதுவும் செயல்வடிவத்திற்கு வரவில்லை. அவையனைத்தும் அவளுடைய கையற்ற நிலையைப் பற்றி அவனுக்கு ஞாபகப்படுத்தின. "ஓ... எனக்குச் சொந்தமான சாந்தா...' அவனுடைய இதயம் கேட்டது: "உனக்கு என்ன இருக்கு? இந்த ஆசைகளைத் தவிர...? உனக்காகப் போராடுவதற்கு ஒரு சிறிய அளவில்கூட அழகென்ற ஒன்று உன்னிடம் இல்லையே!'
"என்ன... சாந்தா?' அவன் மீண்டும் கேட்டான்.
"ஒண்ணுமில்ல...'
இனி என்ன கூறுவது? அவளே கூறுகிறாள்- "ஒண்ணுமில்ல' என்று. அவர்களுக்கிடையே ஒரு உறவை உறுதிப்படுத்திக்கொள்வதற்கு இனிமேல் எந்தச் சமயத்திலும் வார்த்தைகளால் இயலாது என்ற நிலை உண்டாகிவிட்டதோ?
அவன் தன்னுடைய நட்பு முழுவதையும் ஒரு சிரிப்பில் வெளிப்படுத்த முயற்சித்தவாறு கூறினான்:
"நான் உள்ளே போகட்டுமா? அம்மா தேடிக் கிட்டிருப்பாங்க.'
அவள் தலையைக் குலுக்கினாள். அவன் தன் வீட்டின் வாசலை அடைந்ததும், சற்று திரும்பிப் பார்த்தான். அந்த பெரிய கண்களில் பிரகாசித்துக் கொண்டிருந்தவை வெயிலின் ஜூவாலைகளா? இல்லாவிட்டால்... கண்ணீரா?
அதற்குப்பிறகும் அவர்கள் பார்த்தார்கள். ஆனால், உரையாடல் நடக்கவில்லை. இறுதியில் பார்த்தலும் குறைந்துகொண்டு வந்தது. என்ன காரணம்? பார்க்கவேண்டுமென்ற ஆசைகூட இல்லாமலே போனது.
ஆனால் அவளுக்கோ? அவனுடைய மனசாட்சி திடீரென்று உறக்கத்திலிருந்து கண்விழிக்கும் ஒரு நாயைப்போல சற்று நெளிந்து எழுந்தது.
அவன் கவிழ்ந்து படுத்து, அந்தத் தலையணையில் தன் வறண்ட உதடுகளை அழுத்தினான்.
"நடக்காது சாந்தா.' அவன் முணுமுணுத்தான்! "அது எதுவும் நடக்காது. உன்னைப் போன்ற ஒரு கிராமத்து மனைவி எனக்கு வெறும் சுமையாக இருப்பாள். ஒரு நியூஸென்ஸ்! தெரியுமா? ஒரு நியூஸென்ஸ்!'
மழைத்துளிகள் அந்த அறைக்குள் நுழைந்தன- எந்தவொரு முன்னறிவிப்புமில்லாமல்... கீழே தாய் ஓடி ஓடி, ஒவ்வொரு சாளரத்தின் கதவுகளையும் இழுத்து அடைக்கும் சத்தத்தை அவன் கேட்டான். மகர மாதத்தில் இவ்வளவு சீக்கிரமே மழையின் வருகையா?
அவன் எழுந்து சாளரத்திற்கருகில் சென்றான். பாம்புப் புற்றுக்கு முன்னால் அவள் இருக்கிறாளா? எதையும் அவனால் தெளிவாகப் பார்க்கமுடியவில்லை. காற்று அடிக்கும்போதெல்லாம் புழுதிமண்ணிலிருந்து சாம்பல் நிறத்திலிருந்த சில புகைப்படலங்கள் உயர்ந்துகொண்டிருந்தன... மரங்கள் நடுங்கின...
அவள் அங்கிருக்கிறாள். அவன் தனக்குத்தானே கூறிக்கொண்டான். எதையோ தேடிக்கொண்டிருக்கும் பெரிய கண்களுடன் அவள் அந்தப் புழுதிமண்ணில் அமர்ந்திருக்கவேண்டும்.
அவன் வேகமாகப் படிகளில் இறங்கி, கீழ்த் தளத்திற்கு வந்தான். தாய்க்குத் தெரியாமல் ஒரு குடையைத் தேடிக் கண்டுபிடிப்பதற்கு முயற்சிசெய்தான். கிடைக்கவில்லை. ஓசை உண்டாக்காமல் அவன் குளியலறையின் கதவைத்திறந்து, வாசலுக் குச் சென்றான்.
மழைத்துளிகள் ஒரு இரைச்சலுடன் அவனை மூடின. வாழைகள் நின்றுகொண்டிருக்கும் அந்த நிலத்தின் வழியாக, புற்களையும் தொட்டாஞ்சிணுங்கிச் செடிகளையும் நிர்வாணமான பாதங்களைக்கொண்டு மிதித்து நசுங்கியவாறு அவன் நடந்தான். பாம்புப் புற்றுக்கு அருகில் சென்றதும், அவன் நின்றான்.
"சாந்தா...' அவன் அழைத்தான். நனைந்த முகத்தை உயர்த்தியவாறு அவள் அவனைப் பார்த்தாள்.
அவனுடைய முகம் குனிந்தது- அன்புடன்... பாசத்துடன்...
"எழுந்திரு... சாந்தா.' அவன் கூறினான். "இந்த மழையில இருக்க வேணாம்.'
அதற்குப்பிறகும் அவள் எதுவும் கூறவில்லை.
அவளுடைய கண்கள் மட்டும் அவனுடைய முகத்தில் எதையோ தேடுவதைப்போல அசைந்தன. அவை தாகமெடுத்த பருந்துகளைப்போல இருந்தன.
அவன் இடறிய குரலில் மீண்டும் கூறினான்: "எழுந்திரு சாந்தா.' அவளுடைய கையைப் பிடித்து, அந்த ஈர மண்ணிலிருந்து அவளை எழுந்திருக்கச் செய்வதற்கான தைரியம் அப்போதும் அவனுக்கு இல்லாமலிருந்தது.
"நாம என் வீட்டுக்குப் போவோம்.' அவன் கூறினான்.
அவள் தலையை ஆட்டினாள்.
"அப்படின்னா உன் வீட்டுக்கு...'
அப்போதும் அவள் தலையை ஆட்டினாள். தன்னைவிட அவளுக்கு அறிவிருக்கவேண்டும் என்பதாக அவனுக்குத் தோன்றியது. ஆனால், சில நிமிடங்களில் அறிவுக்கு முக்கியத்துவமே இல்லையே! ஒரு சிறிய குழந்தையைப்போல அவள் ஏன் இப்படிப் பிடிவாதம் பிடிக்கிறாள்?
"எழுந்திரு' அவன் கூறினான்: "இந்த மழையில இருக்கக்கூடாது.'
அவள் திடீரென்று அழ ஆரம்பித்தாள். முகத்தை அசைக்காமல்- சாதாரணமாகக் கண்ணீரை வழியவிட்டவாறு... அவன் அந்த மண்ணில் அமர்ந்து, தன் முழங்கால்களில் முகத்தை வைத்தான்.
"நான் என்ன செய்யணும்?' அவன் கேட்டான்.
அந்த கேள்வி அவளிடம் மட்டும் கேட்கப்படவில்லை. அது பலவற்றிடமும்... தன் இளம்வயதில் தான் மிகவும் அதிகமாக அன்பு செலுத்தியதும், பிறகு... காரணமே இல்லாமல் வெறுக்க ஆரம்பித்ததுமான அந்த கிராமத்திடம்... தன் பிரியத்திற்குரிய நகரத்திடம்... தன் தாயிடம்... பணமற்றவர்களான சாந்தாவின் குடும்பத்தினரிடம்... கடவுளிடம்... இவ்வாறு எல்லாவற்றிடமும்... எல்லாரிடமும் அவன் மீண்டும் கேட்டான்.
"நான் என்ன செய்யணும்?'
படிப்பும், நாகரீகமும், ஈர்க்கக்கூடிய அழகும்... எதுவுமே இல்லாத அந்தப் பெண் அவனுடைய தலைமுடியில் விரல்களை ஓடச்செய்தாள்.
"பரவாயில்ல...' அவள் கூறினாள்: "எல்லாம் சரியாகும்... எல்லாம் சரியாகும்.'
"இல்ல சாந்தா... இனி எதுவும் சரியாகாது.' அவன் கூறினான். தொடர்ந்து வெட்கத்தையும், மதிப்பையும் முற்றிலுமாகக்கை கழுவிவிட்டு, இருபத்தைந்து வயது கடந்த அந்த இளைஞன் தன் முகத்தை மறைத் துக்கொண்டு தேம்பித்தேம்பி அழ ஆரம்பித்தான்.
அப்போது அவளுடைய கை விரல்கள் கலப்பட மற்ற பாசத்துடன் அவனுடைய நனைந்த தலைமுடியைக் கொஞ்சிக்கொண்டிருந்தன. அந்த அழுகைக்கான... விரக்திக்கான அர்த்தம் அவற்றுக்குத் தெரியவில்லை. எதுவுமே தெரியவில்லை- அவற்றின் அந்த தனிப்பட்ட தாகத்தைத் தவிர...
_______________
மொழிபெயர்ப்பாளரின் உரை
வணக்கம்...
இந்த மாத "இனிய உதய'த்திற்காக மூன்று முத்தான மலையாளச் சிறுகதைகளை மொழி பெயர்த்திருக்கிறேன்.
"தேர்வு' என்ற கதையை எழுதியிருப்பவர் தேசிய சாகித்ய அகாடெமி விருதுபெற்றவரும், நவீன மலையாள இலக்கியத்தின் துருவ நட்சத்திரமுமான எம். முகுந்தன். பள்ளிக்கூடத்தில் படிக்கும் தினேஷன் என்ற சிறுவனை மையமாக வைத்து எழுதப்பட்ட கதை. தேர்வு என்பதையே பெரிதாக எடுத்துக்கொள்ளாமல், வெளியே கவலையின்றி சுற்றித் திரியும் அவன்மீது நமக்கு இனம் புரியாத ஒரு ஈடுபாடு ஏன் உண்டாகிறது? தேர்வில் அனைத்துப் பாடங்களிலும் அவன் தோல்வியைச் சந்திக்கும்போது, நமக்கு ஏன் ஆச்சரியமும், அதிர்ச்சியும் உண்டாகின்றன? மாறுபட்ட கருவைக் கையாண்டு கதை எழுதிய முகுந்தனுக்கு பாராட்டு!
"தியாகத்தின் வடிவங்கள்' என்ற கதையை எழுதியிருப் பவர் தேசிய சாகித்ய அகாடெமி விருதுபெற்ற மூத்த எழுத் தாளரான டி. பத்மநாபன். அம்மை நோயால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையிலிருக்கும் நோயாளியையும், அங்கு பணியாற்றும் ஒரு கம்பவுண்டரின் குடும்பத்தையும் மையமாக வைத்து எழுதப்பட்ட கதை... வாசித்து முடிக்கும்போது, அந்த கம்பவுண்டரின் குடும்பத்தின்மீது நமக்கு அளவற்ற ஈடுபாடும், மதிப்பும் நிச்சயம் உண்டாகும். அதற்கு முற்றிலும் தகுதியானவர்கள் அவர்கள். அத்தகைய மனிதர்களையும் நம் அன்றாட வாழ்க்கையில் பார்த்துக்கொண்டுதானே இருக்கிறோம்!
"தாகம்' என்ற கதையை எழுதியிருப்பவர் தேசிய சாகித்ய அகாடெமி விருதுபெற்ற, மலையாள இலக்கியத்தின் நட்சத்திரப் பெண் எழுத்தாளரான மாதவிக்குட்டி. இந்தக் கதையின் நாயகனான ராமன் குட்டியையும், வடக்கு திசையிலிருக்கும் வீட்டிலுள்ள சாந்தாவையும் நம்மால் எப்படி மறக்கமுடியும்? ராமன்குட்டியின் தலைமுடியை வாஞ்சையுடன் கொஞ்சிக்கொண்டிருக்கும் சாந்தாவின் கைவிரல்களையும்தான்... இப்படியொரு அருமையான கதையை எழுதிய மாதவிக்குட்டியின் கை விரல்களைப் பிடித்துக் கொஞ்சவேண்டுமென்ற தாகம் நமக்கும் உண்டாவதில் ஆச்சரியப்பட என்ன இருக்கிறது?
நான் மொழிபெயர்த்த இந்த மூன்று கதைகளும், இவற்றை வாசிக்கும் உங்களுக்குப் பல்வேறு புதிய அனுபவங்களைத் தரும். அந்த இனிய அனுபவங்களைப் பெற்று, இலக்கியக் காற்றை சுவாசித்துக்கொண்டிருங்கள்.
"இனிய உதயம்' வெளியிடும் என் மொழிபெயர்ப்புப் படைப்புகளைத் தொடர்ந்து வாசித்துவரும் உயர்ந்த உள்ளங்களுக்கு என் இதயத்தின் அடித்தளத்திலிருந்து நன்றி.