ன்னுடைய சாளரத்திற்கு அப்பால் காற்றாடி மரங்கள் உற்சாகத்துடன் நின்றுகொண்டிருந்தன. குளிர்ச்சியான காற்று... இந்த காற்றுக்கும் மரங்களுக்கும் நான் கடவுளுக்கு நன்றி கூறுகிறேன். காரணம்- கடந்த மாதம் சோவியத் யூனியனுக்கு எதிராக ராக்கெட்களை செலுத்துவதற்கு அமெரிக்கா தீர்மானித்திருந்தது.

அமெரிக்க கேபினட்டின் அவசரக் கூட்டம்... போரில் ஈடுபடும் ராணுவ அதிகாரிகள் ஒரு பக்கத்தில்... ஜனாதிபதி ஜான்ஸன்... டீன் ரஸ்க்... மெக்னமாரா ஆகியோர்... அமெரிக்கன் தலைமையைச் சேர்ந்த மிதவாதிகள் அவ்வளவுபேரும்- மறுபக்கத்தில். போரில் ஈடுபடுபவர்களைத் தலைமையேற்று நடத்தக்கூடிய அமெரிக்க ஒட்டுமொத்த படையின் தலைவரின் பெயரை நீங்கள் இதற்குள் பலமுறை கேட்டிருப்பீர்கள்.

ஜெனரல் அவ்ஸேப்புண்ணி பைலோதுவறீது.

ஜான்ஸன் கெஞ்சினார்: ""அவ்ஸேப்புண்ணி, வேண்டாம்.

Advertisment

செய்யக்கூடாததைச் செய்யக்கூடாது. கடவுள் பொறுத்துக் கொள்ள மாட்டார்.''

""என்ன நாசம் பிடித்த ஜனாதிபதியடா நீ?'' அன்று முதல்முறை அமெரிக்க ஆட்சியமைப்பின் வரலாற்றில் ஒரு படைத்தலைவர் மக்களின் தலைவரை எதிர்த்துப் பேசினார்.

""சிவா! சிவா!'' டீன் ரஸ்க் கூறினார்.

Advertisment

ஜனாதிபதிக்கு வியர்த்தது.

அவையில் பேச்சு நின்றது.

""போரைத் தொடங்கியே ஆக வேண்டும்!''

அவ்ஸேப்புண்ணி பைலோதுவறீது முஷ்டியைச் சுருட்டி, மேஜையின்மீது குத்தினார்.

இறுதியில் ஓய்வூதியம் வாங்கிக்கொண்டிருக்கும் ஒரு படைத்தலைவர், அவ்ஸேப்புண்ணி பைலோதுவறீதிடம் கேட்டார்: ""பலாப்பழக் கொட்டை வெடிப்பதைப்போல குண்டுவெடிக்க ஆரம்பித்தால், உன் மனைவியும் பிள்ளைகளும் எஞ்சியிருப்பார்களாடா முட்டாளே?''

""வாபஸ் வாங்க வேண்டும்'' என்றார் அவ்ஸேப்புண்ணி.

தொடர்ந்து வாக்குவாதம்... போர் முழக்கம்...

பயங்கரமான வாள் போர்... அவ்ஸேப்புண்ணி பைலோதுவறீத் மேஜையின்மீது ஏறி, தொங்கிக்கொண்டிருந்த விளக்குகளை வெட்டி வீழ்த்தினார். தொடர்ந்து "பென்ஷன்' வாங்கிக்கொண்டிருந்த மனிதருக்கு காயத்தை ஏற்படுத்தினார்.

""பரஸ்ஸினிக்கடவில் இருக்கும் முத்தப்பா...'' ஜான்ஸன் கூறினார்: ""காப்பாற்ற வேண்டும்.''

வழியில்லை... அவ்ஸேப்புண்ணி பைலோதுவறீது வெற்றிப்பெருக்குடன் நின்றுகொண்டிருக்கிறார். ஜான்ஸன் அடிபணிந்தார். டீன் ரஸ்க்கும் மெக்னமாராவும்... அனைவரும் சம்மதித்தார்கள். மூன்றாவது உலகப்போரை ஆரம்பிக்கலாம்... பணிக்கரை வரவழைத்து, பிரசன்னம் வைத்து நாள் நிச்சயித்தார்கள். பொழுது புலர்வதற்கு ஒரு மணி, இரண்டு நிமிடங்கள் இருந்தபோது, அமெரிக்க ராக்கெட்டுகள் சோவியத் யூனியனை நோக்கிப் பறக்கும்...

மாஸ்கோவில் அது வெடிக்கும்போதுதான் மக்களுக்கே தெரியும்.

ஒரேயொரு தவறு இருந்தது.... பிரசன்னம் வைப்பதற்காக வந்திருந்த சாமிப்பணிக்கர் பாலக்காட்டைச் சேர்ந்தவர். போதாதற்கு- சமாதானக் குழுவில் உறுப்பினரும்கூட!

நிகழ்ச்சி நடைபெறுவதற்கு மூன்று நாட்களுக்கு முன்பு...

மாலைவேளையில் வாஷிங்டன் நகரத்தின் சாலைகளில் ஒரு வெள்ளைநிறக் காளை மூச்சுவிட்டவாறு நடந்தது. ஒரு காலில் வீக்கம் இருந்தது. எனினும், மெதுவாக மிதித்து நடந்துகொண்டிருந்தது.

ஒரு அமெரிக்க விஞ்ஞானி தன்னுடைய மனைவியிடம் கூறினார்: ""ஹாய் பேபி... அதைப் பார்... அதன் காலில் இருக்கும் வீக்கத்தைப் பார்த்தாயா?''

""உண்மைதான். மிகுந்த சந்தேகத்திற்கு இடமாக இருக்கிறது.''

இருவரும் நெஞ்சில் சிலுவை வரைந்தார்கள்.

காளை பின்னங்காலால் சாலையை மிதித்துக்கொண்டு, மூச்சுவிட்டது.

மறுநாள் காலையில் நகரம் அதிர்ச்சியடைந்து கண்விழித்தது. ஜெனரல் அவ்ஸேப் பைலோதுவஹீது கொல்லப்பட்டிரு கிறார். அதுவும்- பென்டகனில் வைத்து!

மரணம் நடைபெற்று சில நிமிடங்களுக்குப் பிறகு ஒரு வெள்ளைநிறக் காளை பென்டகனிலிருந்து வெளியே செல்வதைப் பார்த்திருக்கிறார்கள்.

மறுநாள் வெளிவந்த "நியூயார்க் டைம்ஸ்' கேட்டது:

"அவ்ஸேப்புண்ணியின் மரணத்திற்கும் அந்த வெள்ளைநிற காளைக்குமிடையே ஏதாவது சம்பந்தம் இருக்கிறதா?'

வெள்ளைநிறக் காளையைப் பிடிப்பதற்காக கடலோரத் திலிருந்து கடலோரம்வரை தீவிர வேட்டை தொடங்கியது. காளையைப் பற்றிய சிறிய அடையாளம்கூட இல்லை!

காளை எங்கே?

காளை மீண்டும் மனித வடிவம் எடுத்தது.

அந்த உருமாற்றத்தை யாராவது பார்த்தார்களா? இல்லை. பார்த்திருக்க வழியில்லை. பாலக்காட்டைச் சேர்ந்த செந்தியாவு பறையன் ஒரு மரத்திற்குக் கீழே சாய்ந்து அமர்ந்துகொண்டு, நீண்ட பெருமூச்சுவிட்டான். அவ்ஸேப்புண்ணியின் மரணத்துடன் யுத்தத்தைப் பற்றிய பயம் தற்காலிகமாக நின்றிருக்கிறது. இனி, தான் இங்கு இருக்கவேண்டியதில்லை... நேரத்தை வீணடிக்காமல், திரும்பி ஊருக்குச் செல்ல வேண்டும். கையிலிருந்த பணம் முழுவதும் தீர்ந்துவிட்டது. பரவாயில்லை. உலக அமைதிக்காகத்தானே? எனினும், அவற்றையெல்லாம் நினைத்தவாறு செந்தியாவு கவலைப்பட்டான்.

சர்வதேச வாழ்க்கையில் ரகசியங்களை நீண்டகாலம் மறைத்து வைத்திருப்பதற்கு இயலாது. பல பெரிய பலமான சக்திகளின் ஒற்றர்கள் செந்தியாவுவை அணுகினார்கள். ""காளையின் உருமாற்ற ரகசியத்தைப் பற்றி சற்று கூறவேண்டும். என்ன வேண்டுமானாலும் தருகிறேன்'' என்றார்கள்.

""ஹு... ஹு...'' செந்தியாவு வலைவீசல்கள் அவ்வளவையும் ஒதுக்கித் தள்ளினான். ""கூறமாட்டேன்'' என்றான்.

ஒரேயொரு விருப்பம் மட்டுமே... கூட்டிற்குப்போய்ச் சேரவேண்டும். திரும்பவும் பாலக்காட்டை அடையவேண்டும்.

இறுதியில் கொலைகாரனின் பயணச் செலவுக்காக வாஷிங்டன் கேரள சமாஜம் பண வசூல் நடத்தியது. (வழியனுப்பு விழாவில் "கலைஞனும் சமுதாயமும்' என்ற விஷயத்தைப் பற்றி கொலைகாரன் ஒரு சொற்பொழிவையும் ஆற்றினான்.)

ஆனால், அனைவரும்... சோவியத் யூனியனையும் சேர்த்து... ஒரு விஷயத்தை கவனிக்காமல் இருந்துவிட்டார்கள். செந்தியாவு, மாவோவின் கொள்கைகளைப் பின்பற்றுபவன். (அவ்ஸேப்புண்ணியை செந்தியாவுக்குக் காட்டிக்கொடுத்த சாமிப்பணிக்கரையும் அந்த அளவுக்கு கவனிக்கவில்லை.)

காளையின் உருமாற்றத்தைப் பற்றிய ரகசியத்தை மனதிற்குள் வைத்தவாறு, செந்தியாவு பறையன் பீகிங்கிற்குள் நுழைந்து சென்றுவிட்டான்.

இதை நினைத்தவாறு, ஆர்வம் நிறைந்த நாட்களை நான் நகர்த்திக்கொண்டிருந்தேன்.

மொழிபெயர்ப்பாளரின் உரை

வணக்கம்.

இந்தமாத "இனிய உதய'த்திற்காக நான்கு அருமையான மலையாளச் சிறுகதைகளை மொழிபெயர்த்திருக்கிறேன்.

"மிஸஸ் டாலிபோத்தனின் மரணம்' கதையை எழுதியவர் சாகித்ய அகாடெமி விருது பெற்றவரும், மலையாள நவீன இலக்கியத்தின் துருவ நட்சத்திரமுமான எம். முகுந்தன். மாறுபட்ட கருக்களைக்கொண்டு கதைகள் எழுதுவதில் மன்னர் அவர்.

டாலி போத்தன் என்ற பெண்ணின் மரணத்தையும், அதை துப்புதுலக்குவதற்காகச் செல்லும் துப்பறிவாளர் ஹர்ஷராஜை யும் மையமாக வைத்து எழுதியிருக்கிறார். "கொலை செய்தது யார்?' என்று ஹர்ஷராஜ் கூறும்போது, உண்மையிலேயே நமக்கு ஆச்சரியம்தான் உண்டாகிறது. "அந்தப் பெண்ணைக் கொலை செய்தவர் இவர்தானா?' என்று நம் உதடுகள் நிச்சயம் உச்சரிக்கும். இப்படியொரு புதுமைக்கதையை எழுதிய முகுந்தனுக்கு ஒரு பூச்செண்டு!

"மூன்றாவது உலகப்போர்' கதையை எழுதியவர் சாகித்ய அகாடெமி விருது பெற்றவரும், பத்மபூஷன் விருது பெற்றவருமான ஒ.வி. விஜயன். அரசியல் பின்னணி கொண்டு கதைகளை எழுதுவதில் அரசர் அவர். வித்தியாசமான கண்ணோட்டத்துடன் இந்த கதையை எழுதியிருக்கிறார். "இப்படியும்கூட எழுத முடியுமா?' என்ற வியப்புதான் இதை வாசிக்கும்போது நமக்கு உண்டாகிறது.

"என் சோனி வண்ணத் தொலைக்காட்சிப்பெட்டியும் ஏதோ ஒரு தாய் கொண்டுவந்த பிளாஸ்டிக் விளையாட்டுப் பொருட்களும்' என்ற நீளமான தலைப்பைக்கொண்ட கதையை எழுதியவர் சாகித்ய அகாடெமி விருதுபெற்ற மூத்த எழுத்தாளரான டி. பத்மநாபன். தனக்கென ஒரு வேறுபட்ட சிந்தனையையும், கதை எழுதும் அபார ஆற்றலையும் கொண்டவர் பத்மநாபன். அமெரிக்காவிலிருந்து சோனி தொலைக்காட்சிப்பெட்டி கொண்டு வரப்படும் செயல் ஒரு பக்கம் நடந்துகொண்டிருக்க, பழைய ஆடைகளையும் தன் குழந்தைகளுக்காக பிளாஸ்டிக் விளையாட்டுப் பொருட்களையும் ஏதோவொரு வளைகுடா நாட்டிலிருந்து ஆசை ஆசையாகக் கொண்டுவரும் ஒரு தாயின் கண்ணீர்க் கதை இன்னொரு பக்கம் நடந்துகொண்டிருக்க... கதையை வாசித்து முடிக்கும்போது, நம் கண்களில் நிச்சயம் கண்ணீர் அரும்பும். மனதில் இனம்புரியாத சோகம் வந்து ஆட்கொள்ளும்.

"பத்தினிப் பெண்' கதையை எழுதியவர் சாகித்ய அகாடமி விருது பெற்ற மலையாளப் பெண் எழுத்தாளர்களின் நட்சத்திர மான மாதவிக்குட்டி. கணவரின் பணி உயர்விற்காக தன் சரீரத்தையே விலையாகக் கொடுக்கும் ஒரு பெண்ணின் கதை...

அவளின் தியாகச் செயலின் மூலம் கிடைக்கும் பணி உயர்விற்காக சந்தோஷத்தில் திளைக்கும் அவளின் கணவன்! யாரும் எழுதத் தயங்கும் கருவை வைத்து, உயிரோட்டமான ஒரு கதையை எழுதிய மாதவிக்குட்டியை நிச்சயம் நாம் பாராட்ட வேண்டும்.

இந்த நான்கு கதைகளையும் நான் மிகுந்த ஈடுபாட்டுடன் மொழிபெயர்த்திருக்கிறேன். இவை உங்களுக்குப் புதுமையான இலக்கிய அனுபவங்களை நிச்சயம் கொடுக்கும்.

மீண்டும் சந்திப்போம்.

"இனிய உதயம்' வெளியிடும் என் மொழிபெயர்ப்புப் படைப்புகளை ஆர்வத்துடன் வாசித்துவரும் உயர்ந்த உள்ளங்களுக்கு என் இதயத்தின் அடித்தளத்திலிருந்து நன்றி.

அன்புடன்,

சுரா