"தொழுங்குலத்திற் பிறந்தாலென்
சுடர்முடி மன்னவராகி
எழுங்குலத்திற் பிறந்தாலென்
இவர்க்குப் பின் வணிகரெனுஞ்
செழுங்குலத்திற் பிறந்தாலென்
சிறப்புடைய ரானாலென்
உழுங்குலத்திற் பிறந்தாரே
உலகுய்யப் பிறந்தாரே'
என்று உழுங்குலத்தின் பெரும் பெருமையை உலகிற்கு உரைத்தார், கவிச்சக்கரவர்த்தி கம்பர்.
அவ்வகையில் நமது உழுங் குலத்தின் பெருமையாக விளங்கு கின்ற ஓர் உழவாளியையும், அவரது உழவின் பெருமைகளை உலகிற்கு உரைக்கும் வகையில் பசுமையாகப் படர்ந்து மணக்கின்ற ஒரு பெரும் பண்ணையையும் நமது, 'இனிய உதயம்' இதழின் இலக்கிய வாசகர் களுக்கு அறிமுகம் செய்ய விழை கிறேன்.
ஓர் அழகான, காண்பவர் மனத் தைக் கவர்ந்து கொள்ளையடிக்கின்ற நற்கூறுகளைக் கொண்ட, அந்தப் பசுமைப் பண்ணையை, மருத நிலத்திற்கிடையே அமைக்கப்பெற்ற பேரழகான 'முல்லை' என்றாலும் அது மிகையில்லை!
திருவண்ணாமலை நகரத்தி-ருந்து ஒன்பது கிலோமீட்டர் தொலைவில், வேட்டவலம் சாலையில் உள்ள கீரனூர் என்னும் சிற்றூரில் அமைந்திருக்கும் அந்தப் பண்ணைக்கு, 'மாலா பசுமைப் பண்ணை' என்று பெயர்.
சாலையில் இருந்து பிரிந்து பண்ணைக்குள் நுழையும்போதே நம்மை வரவேற்கிறது, கம்பீரமானதொரு திருவள்ளுவர் சிலை!
வெளியூர்களில் இருந்து அந்தப் பண்ணையைத் தேடி வருவோருக்கு, அந்த வள்ளுவரைத்தான் அடையாள மாகச் சொல்- வழிகாட்டுகிறார்கள் அவ்வூர் மக்கள்.
உண்மைதான். வள்ளுவர்தானே நமக்கான அடையாளம்!
பண்ணைக்குள் நுழைந்தவுடன் சற்றுத் தொலைவில் அழகான ஒரு கோவில் தென்படுகிறது.
'பண்ணை முதலாளி பகுத்தறிவாளராயிற்றே!' என்கிறோம்.
'இது அம்மன்களுக்கான கோயில் அல்ல... அவரது அம்மாவுக்கான கோயில்! அவரது அன்னை சின்னத் தாயம்மாவுக்காக அவர் கட்டிய கோவில். கடந்த கொரோனா காலத்தில் வாய்த்த தனிமையில் ஒரு தவம் செய்வதுபோல மனத்தால் ஒன்றி அவர் இந்தக் கோயிலைக் கட்டினார்!' என்கிறார்கள், நம்மை அப்பண்ணைக்கு அழைத்துக் கொண்டு போனவர்கள்.
இன்னும் சற்றுத் தொலைவு பயணித்தபின், நிமிர்ந்து பார்க்க வைக்கிற ஒரு மாளிகையின் வாச-ல் நின்று நம்மை வரவேற்கிறார், அப்பண்ணையின் உரிமையாளர் மாம்பலம் ஆ.சந்திரசேகர்! தமிழ் இலக்கிய உலகில் ஒரு கொடையாளராகவும், அரசியல் உலகில் ஒரு செயற்பாட்டாளராகவும், கட்டுமானத் தொழில் உலகில் வெற்றிபெற்ற ஒரு தொழிலதிபராகவும் நன்கறியப்பட்ட ஆறுமுகம் சந்திரசேகர்.
அவருடன் பண்ணையைச் சுற்றிப் பார்க்கக் கிளம்பு கிறோம். 'சாப்பிடுவீங்கன்னு எல்லாம் சமைச்சு வச்சேன்... சாப்பிடல...இருங்க டீயாவது குடிச்சிட்டு அப்புறமா சுத்திப் பாக்க போங்க!' உணவளித்து எங்களை உபசரிக்க இயலாமற் போனதால் ஏற்பட்ட உள்ளார்ந்த வ-யோடு பேசி நம்மை நெகிழ வைக்கிறார், திருமதி மாலா அம்மையார். அவரது பெயரிலும் அவரது பேருழைப்பிலும்தான் அப்பண்ணை விண்ணைத் தொட்டு உயர்ந்துகொண்டிருக்கிறது என்றும் சொல்லலாம்.
தமிழ்ச் சிற்றூர் விருந்தோம்பல் மரபின் சொல்மணம் மாறாத, கள்ளம் கபடங்கள் ஏதுமற்ற அவரைப் போன்ற பேருழைப்பாளிகளை நான் மிகவும் அரிதாகவே சந்தித்திருக்கிறேன்.
'சரி விடுங்க பாட்டாளி. அடுத்த முறை வருவாங்க அப்ப சமைச்சுப் போடுங்க!' என்று சற்று வேண்டுதலான குர-ல், மெதுவாக அவருக்கு ஆறுதல் சொல்கிறார் ஆ.சந்திரசேகர்.
'அது யார் பாட்டாளி?' என்கிறோம்!
'நாந்தான்... அவரு எப்பவுமே என்ன அப்படித்தான் கூப்புடுவாரு!'
மெல்-ய வெட்கத்தோடு நம்மிடம் சொல்கிறார் மாலா அம்மையார்!
நாம் அங்கு செல்வதற்கு ஒருவாரம் முன்பாகத் தான் தங்களது ஐம்பதாம் ஆண்டு திருமணப் பொன்விழாவைக் கொண்டாடி இருக்கிறார்கள் அந்தத் தம்பதிகள்.
இப்போது பண்ணை உலாவுக்குப் புறப்படத் தொடங்குகிறோம். திருவண்ணாமலையைச் சேர்ந்த எழுத்தாளர் ந.சண்முகம், அருகி-ருக்கும் செம்மேடு அரசு நடுநிலைப் பள்ளி ஆசிரியர் அல்-ராணி ஆகிய இருவரும் பேரார்வத்தோடு நம்முடன் இணைந்து கொள்கிறார்கள்.
பதினெட்டு குறுக்கம் (ஏக்கர்) பரப்பளவில் விரிந்து பசுமை பூண்டு தழைத்திருக்கிறது, அந்த பண்ணை! இருபது ஆண்டுகளுக்கு முந்தைய திட்டமிட-ல் உருவானது.
அதன் அனைத்துப் பகுதிகளுக்குமான நீராதாரமாக, மூன்று பெருங்கிணறுகள், பளிங்கு போன்ற நீரைப் பெருமளவில் சுரந்து கொடுக் கின்றன.
தேக்கு, செம்மரம், நாவல், வேம்பு, மா, அருநெல்-, சப்போட்டா, பனை, தென்னை என்று விதம் விதமான மரங்கள் அழகழகான சின்னஞ்சிறு தோப்புகளாக அங்கே வடிவம் கொண்டிருக்கும் காட்சி நம்மைப் பரவசப்படுத்துகிறது.
ஒரு பகுதியில் சேப்பங்கிழங்கைப் பயிரிட்டிருக் கிறார்கள். பச்சைப் பசேல் என்று இருக்கும் மடல் போன்ற அதன் இலையொன்றில், நிலவொளியில் அமர்ந்து சோறுண்ண வேண்டும் என்று தோன்றுகிறது நமக்கு! அந்த இலையின் வடிவம் ஒரு சிறு படகு போல அமைந்து, அதில் உணவுண்ண நம்மைத் தூண்டுகிறது என்றுதான் சொல்ல வேண்டும்.
நெல், எள்,கேழ்வரகு, கம்பு, வாழை போன்றவை இன்னொரு பக்கத்தில் பயிரிடப்பட்டுள்ளன.
வேர்க்கடலை, காராமணி (பெரும்பயிறு), உளுந்து, துவரை போன்றவை மற்றொரு பக்கத்தில் ஊடுபயிர்களாகத் தலை உயர்த்திச் சிரிக்கின்றன.
'சப்போட்டா, மா உள்ளிட்ட பழவகைகளும் தானியங்களும் பறவைகளுக்குப் போகத்தான் எங்களுக்கு! மனிதர்கள் தங்களுக்குத் தேவையானதை மட்டுமே பயிர் செய்து அடையவேண்டும் என்பதற்காக இயற்கையின் மற்ற உயிரினங்களை அண்டவிடாமல் விரட்டினால் அது முழுமையான ஒரு வேளாண்மை பண்ணையாக இருக்கமுடியாது.
பலவிதமான பறவைகள், பலவிதமான பாம்புகள், ஆடுகள், மாடுகள், தேனடைகள் நிறைய தேனீக்கள், கரையான் புற்றுகளின் கரையான்கள் போன்றவற்றின் உணவுத் தேவைகளுக்கும் அதிகான உணவு வகைகள், சின்னஞ்சிறிய நீர்நிலைகள் இவை அனைத்தும் இருந்தால்தான் அது உண்மையான பல்லுயிர்ச்சூழல் கொண்ட விவசாயப் பண்ணை.
இந்த பண்ணைக்கான பல விதைகள் பறவைகள் மூலமாக எங்கோ இருந்து வந்து விழுந்து, எனக்குத் தெரியாமல் இங்கே முளைத்தவை..
அதேபோல, இங்கேயிருந்து எனக்குத் தெரியாமல் பல விதைகள் பறவைகள் மூலமாக வெளியே எங்கேயோ போய்விழுந்து அங்கே முளைக்க வேண்டும். ஒரு நல்ல பண்ணையின் விளைச்சல் என்பது அதன் வே-களோடும் நமது சுய தேவைகளோடும் முடிந்து விடக்கூடாது!'
நமது சிந்தனையைக் கிளறுவதுபோல நிதானமாகவும் உறுதியாகவும் சொல்கிறார் மாம்பலம் ஆ.சந்திரசேகர்!
அவர் சொல்வதெல்லாம் உண்மைதான் என்று மெய்ப்பிக்கும் வகையில், பலவிதமான பறவைகளின் ஒ-யோடு, ஒரு செம்போத்துப் பறவையின் உரத்த அகவலும் அங்கே நமக்கு நீண்டநேரமாகக் கேட்டுக் கொண்டேயிருக்கிறது.
ஆடுகளும் மாடுகளும், கோழிகளும் கூட்டம் கூட்டமாக அப்பண்ணையில் ஆங்காங்கே மேய்ந்து கொண்டிருக்கின்றன.
'இந்த ஆடு மாடுகளில் பெரும்பகுதி வெளியே இருந்து வந்திருப்பவைதான்!' என்கிறார், ந.சண்முகம்.
ஆசிரியர் அல்-ராணி சேப்பங்கிழங்குப் பயிரின் பச்சைப் பசேலென்ற இலையழகில் இருந்து மீளமுடியாதவராக எங்களுடன் நடந்து கொண்டி ருக்கிறார்.
நாம் பார்த்தவரைக்கும் அந்தப் பண்ணையின் வேறுபட்ட சிறப்பு என்பது ஆங்காங்கே இருப்பது போல விடப்பட்டுள்ள சிறு சிறு தாவரங்களோடு கூடிய அதன் வெட்டவெளி நிலப் பரப்புகள்தான்.
'ஆடு மாடுகள் மேயவும், புதர்ப் பறவைகள் வாழவும்,கோழிகளும் பிற பறவையினங்களும் இரையெடுக்கவும், அவை கூட்டம் கூட்டமாகப் பறந்து வந்து அமரவும், இதற்கெல்லாம் மேலாக எல்லாவற்றுக்கும் தேவையான சூரிய ஒளி உள்ளே வரவும் வேண்டுமானால், ஒவ்வொரு பண்ணையிலும் கொஞ்சம் வெட்டவெளி அவசிய மாக இருந்தாக வேண்டும். இங்கே அப்படித்தான் இருக்கிறது!'
என்று சொல்-விட்டு தளர்ந்த ஒரு கயிற்றுக் கட்டி-ல் அமர்ந்து காலசைத்தபடி, தனது பண்ணையின் வெட்டவெளியைப் பார்க்கிறார், சந்திரசேகர்.
அவர் குறிப்பிடுவது போல, ஆயிரக்கணக்கான உயிரினங்களைக் கொண்ட ஆப்ரிக்கக் காடுகளின் தனிச் சிறப்பாக விளங்குபவை அவற்றின் மிகப் பரந்த வெட்ட வெளிகள்தான் என்பது அப்போது நமது நினைவுக்கு வருகிறது.
'மழை பொய்த்துப் போன கடுமையான வறட்சிக் காலங்களில் எப்படிச் சமாளிப்பீர்கள்?' என்கி றோம்.
அதற்கு, அப்பண்ணையின் நண்பராக விளங்குகிற பிரபு விடையளிக்கிறார்.
'எங்களின் வாழ்விடமாகக் கட்டப்பட்டுள்ள இந்த வீட்டின் வெட்டவெளி மேல் தளத்தில் இருந்து ஒரு சொட்டு மழைநீர்கூட வீணாகக் கீழே போய்விழாது. இதோ இந்த பெரிய கட்டடத்தைப் பாருங்கள். அதற்குள் வேளாண் கருவிகளும் தானிய மூட்டைகளும் உள்ளன. ஆனால் அதற்குக் கீழே தூய்மையாகப் பாதுகாக்கப்பட்ட இரண்டு லட்சம்லிட்டர் தண்ணீர் இப்போதும் இருக்கிறது. அவ்வளவும் இந்த வீட்டின் மொட்டை மாடியில் விழுந்த மழைநீர். இந்த நீரைக் கொண்டுதான் நாங்கள் சில வறட்சிக் காலங்களில் பயிர்களின் உயிர்காத்தோம். இன்னும் சொல்லப்போனால் இந்த நீர் எங்களுக்கு எப்போதும் மிகையானதாகவே இருக்கிறது என்றும் சொல்லலாம்!'
என்று சொல்-க்கொண்டே , அருகே உள்ள ஒரு பெரிய கட்டடத்தின் கீழே ஒரு மூலையில் இருந்து உறுதியான ஒரு சிமெண்ட் பலகையைத் திறந்து காட்டுகிறார். உள்ளே நிறைந்து தளும்பித் தெளிவாகத் தலை காட்டுகிறது, என்றைக்கோ பொழிந்த மழைநீர்.
அங்கே நிறுத்தப்பட்டிருந்த டிராக்டர் ஒன்றின் அருகே நின்று உரையாடலைத் தொடர்கிறோம்.
இந்தப் பண்ணையின் விளைச்சல்களை எப்படி வணிகம் செய்கிறீர்கள்?
'எங்களின் குடும்பம், எங்கள் நெருங்கிய உறவினர் கள் மற்றும் நண்பர்களின் குடும்பங்கள் என்று பல குடும்பங்களுக்கு வேண்டிய அரிசி, பருப்பு, புளி, சிறுதானிய வகைகள், கடலை, எள், தேங்காய் எண்ணெய் வகைகள் என்று பல்வேறு வகையான உணவுத் தேவைகளின் அமுதசுரபியாக விளங்கி விளைந்துகொடுப்பது இந்தப் பண்ணைதான்.
அவற்றையெல்லாம் நாங்கள் மளிகைக் கடைகளில் வாங்கினால் அத்தனைக் குடும்பங்களுக் கும் லட்சக்கணக்கில் செலவாகும். நெல்-க்காய், சேப்பங்கிழங்கு போன்றவற்றுக்கு வியாபாரிகள் வருவார்கள். அவர்கள் ஒரு குன்சா விலை பேசி அவற்றை எடுத்துக் கொண்டு போவார்கள். (அவர் சொன்ன 'குன்சாக என்பதன் பொருள் எனக்குத் தெரியவில்லை. எனது பாட்டியும் அச்சொல்லைச் சொல்ல நான் கேட்டிருக்கிறேன்) அந்த வகையிலும் எங்களுக்குக் கொஞ்சம் பணம் கிடைக்கும். மற்றபடி பிற தொழில்களில் கிடைக்கும் வருமானப் பெரும் பணத்தை இங்கு எதிர்பார்க்கவோ, மற்ற வருமானங்களோடு இந்த வருமானத்தை ஒப்பிடவோ கூடாது.
இது தரும் வருமானம் என்பது தூய்மையான காற்று, கலப்பிடமில்லாத நல்ல உணவு, உடம்புக்குக் கிடைக்கிற உழைப்புப் பயிற்சி, சுற்றுச் சூழல் நலம், ஊர்வன, நடப்பன, பறப்பன, நீந்துவன என்று ஆயிரக்கணக்கான உயிர்களுக்குக் கிடைக்கிற வாழ்வாதாரம் இதற்கெல்லாம் மேலாக இதோ இந்த கயிற்றுக் கட்டி-ல் கிடைக்கிற தூக்கம், அதோ அந்த விறகுக் கட்டை அடுப்பில், இங்கேயே வளர்ந்தவற்றைக் கொண்டும், இங்கேயே விளைந்தவற்றைக் கொண்டும், எத்தனை பேருக்கு என்றாலும் என் பாட்டாளி (மனைவி) செய்கிற தனிச் சுவை கொண்ட சமையல் இதெல்லாம் தான் இதில் வருமானம். இதன் வருமானங்களை பன்முகத் தன்மையில் பிரித்துப் பார்க்க வேண்டும்.
மாதத்தின் இருபத்தாறு நாள்கள் என் பாட்டாளி இங்கேயே தங்கி உழைப்பார். மாதத்தின் நான்கு நாள்கள் நான் இங்கு வந்து வேலை செய்வேன். கடுமையான கொரோனா காலத்திலும் இந்தப் பண்ணையில் தொழிலாளர்கள் மனநிறைவோடு வேலைகளைச் செய்து வேண்டியவற்றை விளைய வைத்துக்கொண்டே இருந்தார்கள். கொரோனா என்னும் உலகப் பெருந்தொற்று நோயினால் முடக்க முடியாமல் போன ஒரே உற்பத்தி வேளாண் உற்பத்திதான்!
அறிவியல் நோக்கிலும், சூழ-யல் சார்ந்த அறவியல் நோக்கிலும் ஒரு பெருந்தாய்மை உணர்வுடன் விடையளிக்கிறார் சந்திரசேகர்.
'இது இங்கே பயிர்செய்து அரைத்த இட்- அரிசி என்று சொல்-க்கொண்டே அதனுடன் வேறு சில விளைபொருள்களையும் மூட்டை கட்டி மூச்சிரைக்கக் கொண்டுவந்து நாம் பயணிக்கவிருந்த மகிழுந்தில் வைக்கிறார் மாலா அம்மையார் என்கிற அந்த அன்புத் தாய்!
'இந்தப் பகுதியில் பிள்ளைப்பேறு இல்லாத பெண்கள் இங்கே இவரிடம் வந்து மூ-கை சிகிச்சை பெறுவார்கள். பிறகு அவர்கள் குழந்தையோடு வந்து நன்றி சொல்- கும்பிட்டுவிட்டுப் போவார்கள். என் பாட்டாளிக்கு ரொம்ப நாளாக இதுவும் ஒரு முக்கியமான வேலை!' சொல்-விட்டு தனது, 'பாட்டாளி'யைப் பெருமிதம் மே-டப் பார்க்கிறார், ஆ.சந்திரசேகர்.
இந்த இணையரின் பிள்ளைகள் தமிழ்நாட்டிலும் கடல் கடந்தும் வாழ்கிறார்கள். ஆனால் அவர்களின் வேர்களாகவும் விளங்குகிறது கீரனூர், 'மாலா பசுமைப் பண்ணை.
இதுபோன்று பல்லுயிர்களாலும், பலவகைப் பயிர்களாலும் நிரம்பி வழிகின்ற வேளாண் பண்ணைகள்தான், உற்பத்திப் பொருள்களின் நோக்கில் நமது மண்ணின் இன்றைய முதன்மையான தேவைகளாக இருக்கின்றன.
ஆனால் நமது செல்வந்தர்களுக்கும், மக்களுக்கும் 'பண்ணை வீடுகள்' என்பவை, 'சுயமகிழ்ச்சி' என்னும் அளவில் வெறும் உல்லாசங்களின் அடையாளங் களாக மட்டுமே, சுருங்கிப் போயுள்ளன.
ஆனால் இந்த, 'உல்லாசச் சுருக்கம்' பன்முகத் தன்மை வாய்ந்த வேளாண் உற்பத்தி மையங்களாக மாறி, தொழிலாளர்களின் வியர்வையோடு சேர்ந்து விரிவடைய வேண்டும் என்கிற செய்தியையே, 'மாலா பசுமைப் பண்ணை' நமக்கு உரத்துச் சொல்-க் கொண்டிருக்கிறது.
நாம் அந்த பண்ணையை பார்வையிட்டுத் திரும்பி வந்து சில வாரங்களாகியும்கூட இரவின் தனிமை அமைதியில், இடைவிடாமல் நமது காதுகளில் ஒ-த்துக் கொண்டே இருக்கிறது,
அந்தப் பண்ணையில் வாழுகின்ற செம்போத்துப் பறவையின் அழுத்தந்திருத்தமான அந்த அகவல் ஒ-! எழுதிவிட்டேன் பறவையே... என்னை உறங்க விடு!