சொற்களற்று மூடிக்கிடக்கிறது என் நகரத்தின் உதடுகள்.
குறு குறுவென மவுனமாய் என்னை உற்றுப் பார்க்கிறது அது. அதற்கு பதில் சொல்ல முடியாத என் வாயை முகக்கவசத்தால் மூடிக்கொள்கிறேன்.
கைக்கொடுக்க கைநீட்டினால் மறுத்தபடி… சானிட்டைஸர் வாசமடிக்க கும்பிடுகிறது. அந்த வாசனை எனக்குப் பிடிக்கவில்லை.
என்நகரத்தின் பழைய வாசனை எனக்கு ரொம்பப் பிடிக்கும் அத்தரும், வியர்வையும், டீசலும், குரோம்பேட்டை பாண்ட்ஸும், கூவமும், டுமிங் குப்பமும், சைதாப்பேட்டை வடகறியும் கலந்த பரிமள சுகந்த சொர்ண ‘நறுமணம்’ அது.
28 வருஷங்களுக்கு முன்பு – ஒரு டிசம்பர் அதிகாலையில் ஒரு வாலிபனாக தாம்பரத்தில் வந்திறங்கியபோது ஆயிரம் கைகளை நீட்டி என்னை வரவேற்று அணைத்துக் கொண்டது என் நகரம்.
என் பெல்பாட்டத்தையும் ஸ்டெப் கட்டிங்கையும் பார்த்து ஏளனிக்காமல் ‘தானாய் எல்லாம் மாறும் என்பது புதிய நிஜமடா’ என்றது.
நான் வந்தேறிதான்… ஆனாலும் இந்நகரம் என் நகரமானது.
இந்நகரத்தில் என் முதல் நேநீரில் தொடங்கியது சென்னையின் சர்க்கரைப் பக்கங்கள்.
என் புருஷ லட்சணத்தை உயர்த்த உடனடியாக உத்தியோகம் கொடுத்தது என் நகரம் காசிருந்தால் சரவணபவனை நாடும் ‘நாசிக்’ திமிரையும்… காசு கம்மியானால் கையேந்தி பவனையும் தேட வைக்கும் தன்னியச் செலாவணியை கற்றுத் தந்ததும் என் நகரம்தான்.
ரெங்கநாதன் தெரு –அன்னமாள் மேன்ஷனில் நண்பர்கள் வீர ஆறுமுகம், ராஜகுமாரன், ஆரூர் தமிழ்நாடன், ஜேதா முருகேஷ் தங்கியிருந்த பல்லவன் டிக்கெட் சைஸிலிருந்த தனது அறையில் ஒதுங்க நிழல் கொடுத்தபோது – சென்னை எனக்கு நிலமங்கை தாயாராகியது.
என்னையும்விட வயது அதிகமான வசனகர்த்தா ஆரூர்தாஸ், பேராசிரியர் பெரியார்தாசன், கவிஞர் மு.மேத்தா, தஞ்சாவூர் கவிராயர், ஓவியக் கவிஞர் அமுதோன், தமிழறிஞர் முத்துக் குமார சாமி, ஓவியர் சேகர், கவிஞர் அறிவுமதி, தமிழருவி மணியன், பத்திரிகையாளார் பாவைச்சந்திரன் போன்ற அண்ணன் களை எனக்கு சிநேகிதமாக்கிய இந்நகரம் தான்… ‘பீஃப் கவிதை’ புத்தகம் தந்த தம்பி பச்சோந்தியையும் கடந்த ஜனவரியில் மாநகரப் பேருந்தில் அறிமுகம் செய்வித்தது.
தனி மரமாக வந்த என்னை தோப்பாக்கி அழகு பார்த்தது என்நகரம்.
என்னுடைய ஈ.எம்.ஐ கூடிலிருந்து வெளியே வந்து குல்ஃபி ஐஸ் வாங்கித் தின்ற என் நகரத்தின் நடுராத்திரிகள் புரண்டுபடுக்கின்றன இப்போது.
தனது சட்டைப்பையின் உள் பாக்கெட்டில் எப்போதும் என்னை பத்திரமாக வைத்திருக்கிறது என் நகரம்.
நான் கை கழுவிக்கொண்டிருக்கிறேன்.