மிழகம் வெயிலில் நனைந்து நெட்டுயிர்த்துக் கொண்டிருக்கிறது. தாகம் தணிக்க கார்மேகம் கனிவு காட்டுவதாயில்லை. மக்கள் காலிக்குடங்களோடு ஆங்காங்கு சாலைகளிலும் தெருக்களிலும் நின்று மறியலிலும், போராட்டங்களிலும் ஈடுபட்டுவருகின்றனர். நீர் தேடுவதிலேயே பொழுதைக் கழிப்பதால் வேலைக்குக்கூட செல்லமுடியாத அவலநிலையைப் பல இடங்களில் அவதானிக்க முடிகிறது. நீரில்லாமல் பயிர்கள் ஒருபுறம் கருக மனவேதனையில் விவசாயிகள் துடிதுடித்து உயிர்துறக்கும் அவலம் ஆங்காங்கே அரங் கேறிக்கொண்டிருக்கிறது. புன்செய்ப்பயிர்களும் பட்டுப் போகிறது. பறவைகளும் விலங்குகளும் நீரின்றித் தவிக்கின்றன, இறக்கின்றன என்பதை அவ்வப்போது சமூக ஊடகங்களின் வழி அறியமுடிகிறது. சில ஆண்டுகளுக்கு முன்புவரை நீரின் தேவை என்பது ஏதோ விவசாயி களின் பிரச்சனையாகப் பார்க்கப்பட்ட நிலைமாறி தனிமனிதப் போராட்டமாக வெடித்துள்ளதை உணரமுடிகிறது. நிலத்தடி நீரோ அதலபாதாளத்தில் சென்றுவிட்டது. நீர்வளத்தால் ‘சோழநாடு சோறுடைத்து’ என்று போற்றப்பட்ட சோழநாட்டிலேயே இன்று 300 அடிக்குக் கீழ் நிலத்தடிநீர் சென்றுவிட்டது. கடந்த காலங்களோடு ஒப்பிடுகையில் இந்த ஆண்டு வெப்பத்தின் தாக்கம் மிக்கிருப்பதை உணரமுடிகிறது. இந்நிலைக்கு யார் காரணம்? ஏன் இந்த நிலை எனச் சற்று ஆராய்வோம்.

நவீனம் என்ற பெயரில் புதிய புதிய கண்டுபிடிப்புகளால் மிகுதியாகப் பாதிப்புக்குள்ளானது நிலம் என்றால் அது மிகையில்லை. நீர் இறைக்கும் இயந்திரம் வந்தபின்னர் நிலத்தடி நீரை சமன்செய்துகொண்டிருந்த நீர் நிலைகளின் நிலை மோசமாயின. குளத்துப் பாசனம் ஏரிப்பாசனம் என்ற நிலை மாறியது. குளிக்கவும், குடிக்கவும் பயன்பட்ட நீர்நிலைகள் வீடுகளில் குளியலறைகள் வந்தபின் சுத்தமாகப் புறக்கணிக்கப்பட்டன. ஏரிகளைக் கூறுபோட்டுக் கொண்டனர். குளங்களும், குட்டைகளும் குப்பைகொட்டும் இடமாக மாறின. நீர்நிலைகளில் புதர்களும், கருவேலமரங்களும் மண்டிக்கிடக்கின்றன. திறந்தவெளி மதுகுடிக்கும் இடமாகவும், திறந்தவெளிக் கழிப்பிடமாகவும் மாறியுள்ள அவலத்தைப் பார்க்கமுடிகிறது. என் பாலியவயதில் என் ஊரில் நீச்சல் தெரியாத ஆண், பெண் பிள்ளைகளைப் பார்க்கமுடியாது. இன்றோ கிராமங்களில்கூட பிள்ளைகளுக்கு நீச்சல் தெரியவில்லை. பயனற்றது என்பதால் துர்வார முக்கியத்துவம் அளிக்கப்படாததால் ஆசையாய் குளத்தில் இறங்கும் பிள்ளைகள் சகதியில் மாட்டி இறப்பதையும் காணமுடிகிறது. நம் முன்னோர்கள் நீரின் தேவையுணர்ந்து அதை எப்படியெல்லாம் பராமரித்தார்கள் என்பதைப் பார்ப்போம்

பூமிப்பந்து நிலம், நீர், காற்று, தீ, ஆகாயம் என பஞ்சபூதங்களின் கூட்டுச்சேர்க்கையால் ஆனது.

அவற்றின் இயக்கங்களால்தான் இப்பூமி இயங்கிக் கொண்டிருக்கிறது. உலக உயிர்களின் இயக்கத்திற்கு உணவு மிகமிக இன்றியமையாதது. அவ்வுணவில் நீரின் பங்களிப்பு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. நீர் இல்லையெனில் இப்பூமிப்பந்தில் புல், பூண்டைக்கூட காண்பது அரிதாகும். இதனால்தான் நீர்நிலைகளைத் தெய்வமாக நம் முன்னோர் வழிபட்டுக் காத்து வந்தனர்.

Advertisment

தமிழின் முதல் இலக்கணநூலாகக் கருதப்படும் (கிடைத்தவற்றில்) தொல்காப்பியம்; இவ்வுலகமானது

ஐம்பூதங்களின் சேர்க்கையால் ஆனது என்பதை,

நிலந்தீ நீர் வளி விசும்போ டைந்தும்

Advertisment

கலந்த மயக்கம் உலகம்’’ (தொல்-1589)

என்று குறிப்பிட்டுள்ளது. புறநானூறும்

மண்திணிந்த நிலனும்

நிலனேந்திய விசும்பும்

விசும்பு தைவரு வளியும்

வளித் தலைஇய தீயும்

தீமுரணிய நீரும் என்றாங்கு

ஐம்பெரும் பூதத்து இயற்கை போல’’ (புறம்-2)

என்கிறது. இவ்வாறு ஐம்பூதங்களின் சேர்க்கையால் ஆனது உலகம் என்பதை என்று தமிழன் உணர்ந்தானோ அன்றிலிருந்தே இயற்கையைப் போற்றி வணங்கவும் பேணிப் பாதுகாக்கவும் தொடங்கினான்.

புவியில் 97 சதவிகிதம் கடல் நீராகவும், எஞ்சி யுள்ள 3 சதவிகிதம் நன்னீராகவும் அமையும். நீரின் 1 சதவிகிதம் உலக மக்களின் பயன்பாட்டு நிலையிலிருந்தும் பயன்தராதவையாகக் கிடக்கிறது. குளம், குட்டை ஆறுகளில் இருந்தும், மிகப் பெரும்பான்மையாகக் கடல் பகுதியிலிருந்தும் நீரை ஆவியாக்குகின்ற வினையை ஞாயிறு செய்கிறது. அந்த ஆவி திரண்டு அகன்ற வான்வெளியில் மேகமாகப் பரவுகின்றது. பின்னர் மழையாய்மாறிச் சொரிகின்றது. கரிய முகிலாக வெளியில் மிதக்கும் அத்திரளில் அடங்கியுள்ள நீர்ப்பரப்பு உலகம் அனைத்திற்கும் ஒட்டுமொத்தமாகத் துணைபுரியும் நன்னீரின் அளவில் தோராயமாக 0.04 விழுக்காடு என நீரியலார் கணக்கிட்டுள்ளனர். (ரா.சுந்தரம், வளர்தமிழ் அறிவியல் ப.68)

வான்பொழியும் நன்னீரே வாழ்க்கைக்கு இன்றியமையாக் காரணியாக இருக்கின்றது என்பது இன்றைய அறிவியலாரின் துணிபு. நீர் வளத்தால் நெல் விளையும். நெல்லின் விளைச்சலால் குடிமக்கள் பயன்பெறுவர். அதனால் அரசன் உயர்வடைவான் என்பதைச் சிறுபஞ்சமூலம்,

நீர்சான்று உயரவே நெல் உயரும் சீர்சான்ற

தாவாக்குடி உயரத் தாங்கு அருஞ்சீர்க்கோ உயர்தல்’’

(சிறு.ப.மூலம்-46)

என்கிறது. மக்களுக்கு வாழ்வைக்கொடுப்பதும் மழைசில நேரங்களில் அவர்கள் வாழ்வைக்கெடுப்ப தாகவும் அமையும் (2016 சென்னையில் கொட்டித் தீர்த்த மழையை நாம் அவ்வளவு எளிதில் மறந்துவிடமுடியாது) இதன்மூலம் மழையின் வலிமையை நன்குணரமுடியும்.

கெடுப்பதும் கெட்டார்க்குச் சார்வாய்மற் றாங்கே

எடுப்பதூஉம் எல்லாம் மழை’’ (குறள்-15)

அதேநேரத்தில் மழைதான் நிலத்தடிநீரை சமன் செய்வது என்பதை எவரும் மறுக்கமுடியாது.

“நிலத்தடி நீர் கூடுவதும் குறைவதும் மழையின் அளவைப் பொறுத்தே அமையும் என்பது அறிவியல் உண்மை.

(முனைவர் மகிழேந்தி, சுற்றுச்சூழலியல் நோக்கில் சங்கத்தமிழகம் ப-93) தண்ணீரின் இடையறாத ஓட்டமும் மழை பெய்யவில்லை என்றால் வற்றிவிடும். இதனால் மின்சாரம் தயாரித்தல், உழவுத்தொழில் போன்ற பல்வேறு அடிப்படையான தொழில்கள் முடங்கிவிடும் இதனை வள்ளுவர் நீர்

இன்று அமையாது உலகெனின் யார்யார்க்கும் வான்

இன்று அமையாது ஒழுக்கு’’ (குறுள்-20)

என்கிறார்.

வானத் துளிநோக்கி வாழும் உலகம்’’(நா.கடிகை-29)

என்கிறது நான்மணிக்கடிகை. நீரின் இன்றியமையாமையை சங்ககாலம்தொட்டே மக்கள் நன்கு உணர்ந்திருந்தனர். அதே நேரத்தில் நீரின் தோற்றுவாய் மழைதான் என்பதையும் அறிந்திருந்தனர். மேலைநாடுகளில் இதைப்பற்றி 17-ஆம் நூற்றாண்டுவரை நிலவிவந்த கருத்தை இங்கு கூறுவது பொருத்தமானதாகும். பொதுவாக உலகில் பல இடங்களில் பல உயிர் ஊற்றுகள் காணப்படுகின்றன. எண்ணற்ற உயிர் நதிகள் ஓடுகின்றன. இவற்றில் வருடத்திற்கு 365 நாள்களிலும் நீருக்குப் பஞ்சமில்லை. மழை நாள்தோறும் பெய்யும் ஒன்று அன்று.

எத்தனையோ நாடுகளில் வருடம் முழுவதுமாகச் சேர்ந்து சில மாதங்கள் மட்டுமே மழைபெய்கிறது. (இங்கு சில நாட்கள்கூட மழைபெய்யவில்லையென்பது மிகவும் கொடுமை) நமது நாட்டின் நிலையும் அதுவே. பல மதங்கள் வறண்டவையாகவே வந்துபோகின்றன.

அப்படி இருக்க ஊற்றுக்களிலும் நதிகளிலும் தொடர்ந்து தண்ணீர் எப்படி வருகிறது என்ற கேள்வியை மேலை நாட்டுச் சிந்தனையாளர்கள் 2500 ஆண்டுகட்கு முன்பே எழுப்பினர். மேலும் அவர்கள் தங்களுடைய யூகத்தினால் தெரிந்துகொண்ட அளவில், மழையினால் கிடைக்கும் நீரைவிட, வருடம் முழுதும் ஓடும் ஊற்றின் நீரும் அளவில் அதிகம் என்று நம்பினார்கள்.’’(டாக்டர் வா.செ.குழந்தை சாமி வாழும்வள்ளுவம் ப:43-44)

மேலைநாடுகளில் கடல் நீர் நிலத்தின் அடியாகச் சென்று ஊற்றுகளாக உருவெடுக்கின்றன என்று நம்பினர்.

water

இந்நிலையில் மழை ஒன்றே நீருக்குத் தோற்றுவாய் என்ற கருத்தை முதலில் உணர்ந்தவர் லியானார்டோ டாவின்சி என்றுதான் கூறவேண்டும் என்றாலும் இக்கருத்தை தங்கள் ஆய்வின்மூலம் நிருபித்தவர்கள் பெரோ(ல்ட்) மற்றும் எப்மே மாரியோட் என்பவர்களாவர். “பெரோ(ல்ட்) பிரெஞ்சு நாட்டைச் சேர்ந்தவர் செயின் நதியின் நீர்ப்பகுதியில் பெய்யும் மழையையும் அந்தப் பகுதியில் ஓடும் நீரையும் கணக்கிட்டார். அதன்படி பெய்யும் மழை நீர் நதியில் ஓடும் மொத்த நீரைவிட ஆறு மடங்கு அதிகம் என்று தெளிந்தார். இதே போன்றதொரு சோதனையை இந்த நதியில் வேறு இடத்தில் மாரியோட் என்பவரும் செய்தார். அவர்கள் வாழ்ந்தது 17-ஆம் நூற்றாண்டு.’’(டாக்டர் வா.செ.குழந்தைசாமி வாழும் வள்ளுவம் ப:44) இக்கருத்தை கிட்டத்தட்ட இரண்டாயிரம் முன்பே வள்ளுவர் தெரிவித்துள்ளர் என்பது அதானிக்கத்தக்கது.

மழை பெய்யவில்லையெனில் ஊருக்கேத் துன்பம் உண்டாகும் என்பதை இன்னா நாற்பது,

மாரி வளம் பொய்ப்பின் ஊர்க்கு இன்னா’’ (இ.நா:24)

என்கிறது.

குறிஞ்சிநிலமக்கள் உரிய பருவத்தில் மழைபெய்யா விடின் ஒன்றுகூடி மழை வேண்டிக் கடவுளிடம் ஆரவாரத்துடன் முறையிட்டனர் என்பதையும் அவ்வாறு வழிபட்டால் மழை பெய்யும் என்ற நம்பிக்கையும் இருந்துள்ளது. இதனை ஐங்குறுநூறு தெரிவிக்கிறது.

குன்றக் குறவன் ஆர்ப்பின் எழிலி

நுண்பல அழிதுளிபொழியும்’’ (ஐங்-251)

உலகம் முழுமைக்கும் நீரின் பயன்பாடு மிகமிக இன்றியமையாதது. இதனை நன்குணர்ந்த நம் முன்னோர்கள் அந்நீரினைத் தேக்கிவைத்து பயன்படுத்தத் தொடங்கினர். பெய்யும் மழையை முறையாக நீர் நிலைகளில் சேகரித்து அவற்றை முறையாகப் பயன்படுத்தி நாட்டை வளம்பெறச் செய்பவன் மன்னன் என்பதை சிலப்பதிகாரம் இடையுடைப் பெருமழை எய்தா ஏகப்பிழையா விளையுள் பெருவளம் சுரப்ப

முழைபிணித்து ஆண்ட மன்னவன்’’ (சிலம்பு வரி 26-28)

என்று குறிப்பிட்டுள்ளது.

பல்வேறு போர்களில் ஈடுபட்டு வெற்றிவாகை சூடிய பாண்டியநெடுஞ்செழியனிடம் புலவர் குடபுலவியனார் அறிவுறுத்துகையில்

நீர்இன்று அமையா யாக்கைக்கு எல்லாம்

உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோரே

உண்டி முதற்றே உணவின் பிண்டம்

உணவு எனப்படுவது நிலத்தொடு நீரே

.............................................

டுபோர்ச் செழிய! இதழாது வல்லே

நிலன் நெளி மருங்கில் நீர்நிலை பெருக

தட்டோரம்ம இவண் தட்டோரே

தள்ளாதோர் இவண் தள்ளாதோரே’’ (புறம்.18)

என்கிறார். நிலம் குழிந்த இடங்கள்தோறும் நீர்நிலை

களை பெருகச் செய்வாயாக. அவ்வாறு செய்தால் அறம், பொருள், இன்பம் இம்மூன்றையும் பெறலாம்; என்று அறிவுறுத்தினார்.

சங்கத்தமிழர்கள் ஏரி எந்த வடிவில் அமைக்கப் படவேண்டும் என்பதையும் திட்டமிட்டுள்ளனர் என்பதைப் புறநானூற்றுப் பாடல் தெரிவிக்கிறது. ஏரி நீளம் குறைவாகவும் ஆனால் மிகுதியாக நீரைக் கொள்ளும்படியாக ஆழமாகவும் இருக்கவேண்டும் அஃதாவது எட்டாம்பிறை வடிவில் இருக்கவேண்டும் என்பதை அறையும் பொறையும் மணந்த தலையஎண்

நாள் திங்கள் அனைய கொடுங்கரைத்

தெண்ணீர்ச் சிறுகுளம் கீழ்வது மாதோ’’ (புறம்118)

என்று குறிப்பிட்டுள்ளது.

அக்காலத்தில் நீர் மாசடைதல் என்பது இல்லை என்ற நிலையில் இயற்கை ஒத்துழைத்தது. பண்டைத் தமிழர்கள் குடிநீருக்காக ஆற்று நீர், கிணற்று நீர் பயன்படுத்தினர் என்பதை எறிநீர்ப் பெருங்கடல் எய்தியிருந்தும்

ஆறுநீர்ச் சிறுகிணற்று ஊறல்பார்த்து உண்பர்’’ (நாலடி:275)

நாலடியார் பாடல்வரிகளால் அறியலாம். மேலும், ஊருணி எனப்படும் குளத்து நீரையும் குடிநீராகப் பயன்படுதியுள்ளனர். அக்குளத்தை இரவுபகல் பாராது பாதுகாக்க காவலர் நியமிக்கப்பட்டிருந்தனர் என்பதையும் அறியமுடிகிறது. பெருங்குளம், சிறுகுளம் என குளம் இருவகைப்படும். அவற்றுள் பெருங்குளத்து நீர் பயிர்தொழிலுக்கும், சிறுகுளத்து நீர் குடிப்பதற்கும் பயன்படுத்தப்பட்டன. சிறுகுளத்தை ஊருணி என்பர் குடிப்பதற்குப் பயன்படுத்தும் குளம் ஆகையால் காவலர்கள் பாதுகாத்துள்ளனர்.

நீர்நிலைகள் தூர் வாரப்பட்டுப் பராமரிக்கப் பட்டால்தான் நீரை மிகுதியாகச் சேர்த்துவைத்துப் பயிர்த்தொழிலுக்குப் பயன்படுத்தமுடியும். அவ்வாறு தூர்வாரப்படவில்லையெனில் குளத்தில் நீர்நிரம்பாது. அவ்வாறு நீர்நிரம்பவில்லையெனில் அந்நீர்நிலையைச் சுற்றியுள்ள பயிரானது வளராது என்பதை நாலடியார்,

கோளாற்றக் கொள்ளாக் குளத்தின்கீழ் பைங்கூழ்போல்’(நாலடி-191)

என்றும், நான்மணிக்கடிகை

ஏரி சிறிது ஆயின் நீர் ஊரும்’ (நா.கடிகை-102)

என்றும் கூறுகின்றன. அதாவது ஏரி சிறிதாகவும் மேடாகவும் இருந்தால் மழைபெய்யும் காலங்களில் நீர் வெளியேறிவிடும். ஆகையால் நீர்நிலையானது ஆழமாகவும் அகலமாகவும் இருக்கவேண்டும் என்பது தெளிவாகிறது.

சிறுபஞ்சமூலம்

நீர் அறம் நன்று’(சி.ப.மூ.61)

என்கிறது. இனியவைநாற்பது,

காவொடு அறங்குளம் தொட்டல் மிக இனிதே’ (இ.நாற்-23)

என்கிறது. இதன்மூலம் நீராதாரங்கள் மக்களுக்கு எவ்வளவு இன்றியமையாதது என்பதை எடுத்துரைத்துள்ளனர்.

இவ்வாறு நீரின் இன்றியமையாமையுணர்ந்து நம் முன்னோர்கள் சேர்த்து வைத்திருந்த நீராதாரங்களை யெல்லாம் தொலைத்துவிட்டோம். இனியேனும் அவற்றை மீட்டெடுத்து பயன்பாட்டிற்கான மாற்று உத்திகளைக் கண்டறிவோம். இந்நவீனயுகத்தில் மக்களை நீராட குளம்நோக்கிச் செல்ல வலியுறுத்தமுடியாது. அதனால் அக்குளங்களை மீன் வளர்ப்பிற்காகவும், நீச்சல் பயிற்சிக்காகவும் பயன்படுத்தலாம். ஏரிகளை சரியாகக் கட்டமைத்து அச்சிறு சமுத்திரத்தில் படகுப் பயணம் செய்து மகிழலாம். விவசாயத்திற்கும் பயன்படுத்தலாம். இதனால் நீராதாரங்கள் பாதுகாக்கப்படுவதுடன். விவசாயமும் செழிக்கும், நிலத்தடி நீரையும் கீழிறங்காமல் பார்த்துக் கொள்ளமுடியும்.