இலக்கியம் சார்ந்த மொழிப் பேராளுமைகளின் பெருமிதம் உரைப்பதாக இலக்கியத்தைச் செறிவுபடுத்தி பொதுவெளியில் நிலைநிறுத்த வேண்டும் என்ற எண்ணத்தில் உதித்ததே வாசகசாலை. இவ்வமைப்பின்கீழ் இலக்கியக் கூட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டு, அதனடிப்படையில் வாசகசாலை தன் ஒவ்வொரு அடியையும் தெளிவுடன் முன்வைத்து மொழிசார் இலக்கியக் கூட்டங்கள், செவிக்கினிய கதையாடல், ஒவ்வொரு நாட்பொழுதும் இலக்கியம் பேசல் என்று தன் பயணத்தை இப்பரவெளியில் நெடும் கைக்கொண்டு நீட்டியுள்ளது எனில் சிறப்புதான். இப்பயணம் பரந்துபட்டு சென்னை தவிர பிற மாவட்டங்களில் மாதாந்திர நிகழ்வுகள் நடத்தி தற்பொழுது முந்நூறு கூட்டங்களுக்கு மேல் இத்தேடல் விரிந்துள்ளது. மற்றும் 2017 சென்னையில் பிப்ரவரி முதல், வாரம்தோறும் கூட்டங்கள், மே மாதம் முதல் திரைக்களம், ஒலியும் ஒளியும் என பன்னோக்கில் தன் பணியைப் பதிவுசெய்துள்ளது வாசகசாலை.
அடுத்த அடிவைப்பாக பெங்களூருவிலும் வாசகசாலை இலக்கியப் பணியை முன்னெடுத்துள்ளது.
இவ்வமைப்பு தஞ்சையிலும் செயல்பட்டு வருகின்றது. தஞ்சை வாசகசாலையின் மூன்றாம் நிகழ்வாக 15-07-18 அன்று மருதநில மண்ணைப் பிறப் பிடமாகக் கொண்ட தஞ்சை ப்ரகாஷின் ‘"மீனின் சிறகுகள்'’ பேசும் பொருளாக எடுத்துக் கொள்ளப்பட்டு இலக்கியக் கலந்துரையாடல், அனுபவ பேச்சாடல் என நல்லதொரு புரிந்துணர்ந்த நிகழ்வு அகத்தை நெகிழச் செய்ததொன்றாக நடந்தேறியது. உயிர்ப்பாய் உவப்பாய் பொதிந்து நின்ற அந்நிகழ்வின் நாயகன் தஞ்சைப்ரகாஷ்.
மருதத்தின் அழகியலைத் தஞ்சை எனத் தன் பெயரில் கொண்டார். மொழியின் இலக்கிய வகைமைகளுக்குள் தன்னை அடக்கிக் கொண்ட ஒரு மகத்தான கலைஞன். தன்னிடம் கொட்டிக் கிடக்கும் சொற்களை அள்ளிப் பருகுங்களென சொற்பசி நீக்கிய சொல்லாளன். அவர் எழுத்துகள் வாழ்வியலைப் பேசியது. அனுபவம் தானே வாழ்க்கை? அது என்னவெல்லாம் செய்யும்?
அவ்வனுபவங்களைக் கொண்டு மக்களினம் அடையும் நன்மை தீமை என்னென்ன? என்பதைக் கூறுகின்றது. அதுமட்டுமின்றி, மனம் தானே எல்லாவற்றிற்கும் அடிப்படை. அம்மனஅடுக்கில் புதைந்துகிடக்கும் புதையல்கள் ஏராளம். அது
இலக்கியம் சார்ந்த மொழிப் பேராளுமைகளின் பெருமிதம் உரைப்பதாக இலக்கியத்தைச் செறிவுபடுத்தி பொதுவெளியில் நிலைநிறுத்த வேண்டும் என்ற எண்ணத்தில் உதித்ததே வாசகசாலை. இவ்வமைப்பின்கீழ் இலக்கியக் கூட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டு, அதனடிப்படையில் வாசகசாலை தன் ஒவ்வொரு அடியையும் தெளிவுடன் முன்வைத்து மொழிசார் இலக்கியக் கூட்டங்கள், செவிக்கினிய கதையாடல், ஒவ்வொரு நாட்பொழுதும் இலக்கியம் பேசல் என்று தன் பயணத்தை இப்பரவெளியில் நெடும் கைக்கொண்டு நீட்டியுள்ளது எனில் சிறப்புதான். இப்பயணம் பரந்துபட்டு சென்னை தவிர பிற மாவட்டங்களில் மாதாந்திர நிகழ்வுகள் நடத்தி தற்பொழுது முந்நூறு கூட்டங்களுக்கு மேல் இத்தேடல் விரிந்துள்ளது. மற்றும் 2017 சென்னையில் பிப்ரவரி முதல், வாரம்தோறும் கூட்டங்கள், மே மாதம் முதல் திரைக்களம், ஒலியும் ஒளியும் என பன்னோக்கில் தன் பணியைப் பதிவுசெய்துள்ளது வாசகசாலை.
அடுத்த அடிவைப்பாக பெங்களூருவிலும் வாசகசாலை இலக்கியப் பணியை முன்னெடுத்துள்ளது.
இவ்வமைப்பு தஞ்சையிலும் செயல்பட்டு வருகின்றது. தஞ்சை வாசகசாலையின் மூன்றாம் நிகழ்வாக 15-07-18 அன்று மருதநில மண்ணைப் பிறப் பிடமாகக் கொண்ட தஞ்சை ப்ரகாஷின் ‘"மீனின் சிறகுகள்'’ பேசும் பொருளாக எடுத்துக் கொள்ளப்பட்டு இலக்கியக் கலந்துரையாடல், அனுபவ பேச்சாடல் என நல்லதொரு புரிந்துணர்ந்த நிகழ்வு அகத்தை நெகிழச் செய்ததொன்றாக நடந்தேறியது. உயிர்ப்பாய் உவப்பாய் பொதிந்து நின்ற அந்நிகழ்வின் நாயகன் தஞ்சைப்ரகாஷ்.
மருதத்தின் அழகியலைத் தஞ்சை எனத் தன் பெயரில் கொண்டார். மொழியின் இலக்கிய வகைமைகளுக்குள் தன்னை அடக்கிக் கொண்ட ஒரு மகத்தான கலைஞன். தன்னிடம் கொட்டிக் கிடக்கும் சொற்களை அள்ளிப் பருகுங்களென சொற்பசி நீக்கிய சொல்லாளன். அவர் எழுத்துகள் வாழ்வியலைப் பேசியது. அனுபவம் தானே வாழ்க்கை? அது என்னவெல்லாம் செய்யும்?
அவ்வனுபவங்களைக் கொண்டு மக்களினம் அடையும் நன்மை தீமை என்னென்ன? என்பதைக் கூறுகின்றது. அதுமட்டுமின்றி, மனம் தானே எல்லாவற்றிற்கும் அடிப்படை. அம்மனஅடுக்கில் புதைந்துகிடக்கும் புதையல்கள் ஏராளம். அது ஒரு கிடங்கு. ஆம். மனக்கிடங்கென்று சொன்னால் பிழையில்லை. ஒவ்வொருவரும் தன் சுயவாழ்க்கைக்கும், சுயமுன்னேற்றத்திற்கும் எப்படியெல்லாம் இந்த மனக் கிடங்கை அசைத்துப் பார்த்து காய் நகர்த்துகின்றனர் என்ற பல விஷயங்களைத் தஞ்சை ப்ரகாஷ் தன் படைப்புகளின் வழி வாசிப்போரிடம் பேசிக் கொண்டே வருகிறார். இன்றளவும் பேசிக் கொண்டுதானிருக்கிறார்.
அவர் எழுத்து காலத்தைப் பேசுகின்றது. காலம் தானே அனைத்தையும் மாற்றக்கூடியது. வாழ்தல், தாழ்தல், புகழ்ச்சி, புறக்கணிப்பு, ஏற்றம், கெடுதி போன்ற பல சுழற்சி நிலைகளை உணர்ச்சிகளை வாழ்வின் அனுபவத் தேடலாக தன் படைப்பின்வழி முன்னகர்த்துகின்றார். அது நம்மைப் பற்றிக் கொள்கிறது. பற்றுதல் தானே வாழ்க்கை. அதன் மூலம் ஒரு துலக்கம் புலப்படுகின்றது. அதனுள் நாம் முயங்கித் தெளிகிறோம். எழுத்து செய்யும் மாயை இது. உச்சம் தொட்ட எழுத்து அது. மிக சாதாரணமாக இதுதான் உண்மையென மிகப்பெரும் ஒரு நிஜத்தை சுயமாக வெளிப்படுத்திய ஒரு கட்டுடைப்பாளன் பிரகாஷ். வாழ்வின் மரபு மீறல், ஒழுக்கநெறி, மறைக்காத நேர்மை, பரிதவிப்பு, வெற்றி, தோல்வி, ஆண், பெண் மனநிலை இவை மிக எதார்த்தமாக தன் படைப்புகளில் பிணையலாக்குகின்றார்.
தன் ஏழாவது வயதிலேயே இந்த படைப்பாளனின் எழுத்துப் பயணம் தொடங்கிவிட்டது. மூன்று பாட்டிகள், தாய் இவர்களுடன் வளர்ந்த ப்ரகாஷுக்கு அடிப்படைக் கல்வியும், ஆங்கிலமும் பதியமிடப்பட்டன. அப்பதியம் நன்றாகவே காலப்போக்கில் விருட்சமாக மாறிற்று. ஆம். விருட்சம் அழகிய சொல். இன்றளவும் அப்படித்தான் ப்ரகாஷ் விருட்சமாகவே நிற்கின்றார்.
சாதாரண அறிவுக்குட்பட்ட ஒரு விஷயத்தை நடைமுறைக்கு ஒத்துவரும் நிலையில் வளைந்து கொடுக்கக்கூடிய சில நேரங்களில் நழுவியும் செல்லக்கூடியதொன்று ப்ரகாஷின் படைப்பு. எதையும் எப்படி உள்ளதோ அதை அப்படியே ஏற்கின்ற தெளிவும், வீரியமான மனோபாவமும் அவரிடம் உண்டு. அவர் வாழ்ந்த சூழலில் அறியாமையில் சிக்குண்ட, குடும்பத்தை முன்னெடுக்கின்ற ஒரு களமாக பெண் இயங்கி வந்ததை சமூக அங்கீகாரம் மறுக்கப்பட்டதைத் தன் படைப்பில் வெளிப்படுத்த முனைந் தார். ஆண், பெண் உறவு நிலைகள் பற்றி தீவிரமும் காத்திரமுமான எழுத்தும் அவரிடம் மிக்குண்டு. வாழ்க்கை மீதான அசாத்தியமான உண்மை, உயிர்ப்பு, மனிதர்களின் மீதான அளவு கடந்த அன்பு, நேசிப்பு இவை தான் ப்ரகாஷின் எழுத் துக்களில் தளமிட்டன.
ஆம். சக மனிதரை யாரொருவர் அன்பு கொள்ளமுடியுமோ, நேசிக்க முடியுமோ, உணர முடியுமோ அது தானே எழுத்தில் வெளிப்படும். ப்ரகாஷிடம் அது வெளிப்பட்டது. நிஜத்தைப் பேசியது. மனிதர்களைக் காட்டியது. மாயை உணர்த்தியது. உணர்வைத் தூண்டியது. சொல்லின்பத்தை நல்கியது. உயிராழத்தை மீட்டது. இப்படியெல்லாம் எழுத்து செய்ததொரு அனுபவக் கலைஞனின் தனித்துவ எழுத்தாய் கண்முன் நட்டுச்சென்ற காட்சிப் பதிவாய் ப்ரகாஷின் ஒரு படைப்பு உள்ளதென்றால் அது "மீனின் சிறகு கள்' எனலாம்.
"மீனின் சிறகுகள்'’ நூல் வாசிப்பவரை கைக்குள் பொத்திக்கொள்ளும் கலைஅழகியல் என்றால் மிகையாகாது. தஞ்சையின் நாயகனாக, தனித்த எழுத்தின் பேரின்பமாக நிறத்தால் மூழ்கிய இவ்வுலகத்தை நம் வாழ்வில் நிறமற்றிருந்தாலும் இரசிக்கக் கற்றுத் தரும் மனவியலாளன் தஞ்சை ப்ரகாஷ். அவருடைய படைப்புகள் தீவிரம், கனஅடர்த்தி, சாதுர்யம், பரிமாணம், நிரம்பியது.
அவரின் வாழ்வே இலக்கியக்கூட்டத்தால் மூழ்கியது.
பதினான்கு மொழிகளைக் கற்றறிந்த கல்வியாளன் மீனின் சிறகுகளில் வாழ்வின் கண்ணாமூச்சி ஆட்டத்தை எடுத்துக்காட்டுகிறார். வாழ்வே ஆட்டம் தானே. ஒவ்வொரு நாளும் அறிந்தும், அறியாமலும் ஆட்டம் தொடர்கிறது. எது நல்லது கெட்டது என ஆராயும் நிலை யாரிடத்துமில்லை. ஏற்கனவே முடியாததொன்றை ஏற்கவைக்க செய்கிறதென்றால் அது தஞ்சை ப்ரகாஷின் எழுத்தின் ஈர்ப்பு மட்டுமே.
அப்பெரும் ஜீவன் பற்றி தஞ்சை வாசகசாலை பெருமைப்படுத்தும் விதமாக இதனைக் கையிலெடுத்தது போற்றற்குரியதொன்றே.
சிறப்பிற்குரிய ‘மீனின் சிறகுகள்’ என்ற எழுத்தறம் மிக நன்றாகவே படைப்பாளனின் படைப்புப் புகழ் பாடியது.
வாசகசாலையின் இந்நிகழ்வில் வாசக பார்வையை முனைவர் பட்ட ஆய்வாளர் தமிழ் இலக்கியா முன்னெடுத்தார். சிறப்புரையைத் தஞ்சை ப்ரகாஷின் நண்பரும், அவருடன் நெருங்கிப் பழகியவருமாகிய ஆ. செல்லதுரை வழங்கினார்.
"மீனின் சிறகுகள்'’ படைப்புப் பற்றி தமிழ் இலக்கியா சில கருத்தை முன் வைத்தார். அதில் ஒரு ஆண் பல பெண்கள் இவர்களிடையேயான உறவுகள், ஆணென்றாலும், பெண்ணென்றாலும் தம் குடும்ப உறவை விட்டு வெளிவராமல் தமது சுதந்திரத்தை அனுபவிக்க நினைப்பதையும், திருமணம் பற்றிய நல்ல புரிதலில்லாமல் ஒரு மாயையாகவே பார்க்கப்படுவதை ப்ரகாஷின்வழி முன்வைத்தார். மற்றும், உடல் ரீதியான நிலைப்பாட்டைக் கொண்டு வாழ்பவரிடத்தும் இப்பரவெளியில் சுதந்திரம் தேவையானதொன்று.
அவர்களிடத்தான நியாயத்தையும் எடுத்துக் கொள்ள வேண்டும் என்றும், மீனின் சிறகுகள் வழி என் உடல் என் உரிமை என்பதே மையக்கருத்தென்பதை மிக அழகாக விளக்கிக் கூறினார்.
இந்நிகழ்வில், அடுத்து ஆ.செல்லதுரை சிறப்புரை தந்தார். இவர் மீனின் சிறகுகள் பற்றிக் காத்திரமான கருத்தை முன்வைத்தார். இதில் சுட்டப்படும் வாழ்வு, அதன் உண்மை, வாசிப்பவர் மனதில் நிச்சயமாக ஒரு மனச்சிதறலை ஏற்படுத்தும். ஆனால், அதுவே நடைமுறை மாற்றத் தையும் ஏற்படுத்துகிறது. மற்றொரு முக்கிய அங்கமாக இந்நாவல் பற்றி ஜெயமோகன் விமர்சனத்திற்கு எதிர்வினையாக பல செய்திகளைத் தந்தார். தவறாகப் புரிந்து கொள்ளப் பட்ட விஷயங்களை அழகாகத் தெளிவுப்படுத்தி மீனின் சிறகுகளில் வரும் ரங்கமணி என்ற கதாபாத்திரம் இத்தனை பெண்களைத் தன்வயப்படுத்தியது எப்படி என்ற கேள்விக்கு, ரங்கமணியை ஒரு ஆணாகப் படைக்காமல், பல ஆண்களின் கூட்டமாகப் படைத் திருக்கின்றார் என்றார்.
மேலும், மீனின் சிறகுகளில் காதல் பற்றிக் குறிப்பிடவேயில்லை. பொதுவாக, இப்பொதுவெளியில் காதலென்பது இருநிலை. ஒன்று கடிதம் கொடுப்பது. மற்றொன்று மனதைக் களவாடுவதென ஒரு பக்கம் சென்றாலும், மற்றொரு பக்கமாக பூவை நுகர்ந்து தூக்கி விட்டெறியக்கூடிய உலகமும் இயங்கிக்கொண்டு தானுள்ளது. இது உண்மை. நடப்பு. இதனை வெட்ட வெளிச்சமாகக் காட்டியது தஞ்சை ப்ரகாஷின் எழுத்து. இதை எத்தனை பேரால் ஏற்றுக் கொள்ளமுடியும். உண்மை சுடத்தானே செய்யும். ரங்கமணியை விருப்பமுற்றே பெண்கள் நாடினரென்பதையும், மீனின் சிறகுகளில் வரும் சாந்தா மாமி என்ற விதவையின் செயலே ரங்கமணியின் பெண்கள் மீதான அதிக விருப்பத்திற்குக் காரணம் என்ற போது பெண்களின் மன உணர்வுகள் வெளிப்படுத்தப்படாமல் அடக்கப்பட்டதும், அவர்களின் வாழ்வுரிமைக் கட்டுப்படுத்தப்பட்டதும் அறியமுடிகின்றது செல்லதுரையின் இக்கருத்துக்கள் ‘மீனின் சிறகுகள்’ படைத்த படைப்பாளனின் பரந்துபட்ட பார்வையினைத் தெளிவுபடுத்தியது.
பன்முகம் கொண்ட ப்ரகாஷின் படைப்பு பற்றிய இக்கலந்துரையாடலில் உன்னதமாக பல படைப்பாளுமைகள் நா.விச்வநாதன், சுந்தர் ஜி பிரகாஷ், ஜாகிர் ராஜா, ஸ்டாலின் சரவணன், பேராசிரியர் தர்மராஜன், செழியன், கிருஷ்ணபிரியா, கே.ஜே.அசோக்குமார், இளங்கோ போன்றோர் பங்கேற்று, பிரகாஷுடனான தன் நினைவுளையும், அவரெழுத்தின் தனித்துவத்தையும் பகிர்ந்து கொண்டனர். இந்நிகழ்வில் தஞ்சை ப்ரகாஷின் இணையர் மங்கையர்க்கரசிபிரகாஷ் கலந்து கொண்டு கணவருடனான சில செய்திகளைப் பதிவு செய்தார்.
தஞ்சை ப்ரகாஷ் எழுத்துலக வித்தகனென்பதும், காலமெல்லாம் தேடிக் கண்டடைந்த மாண் பொருளென்பதும், மானுடம் துய்ப்பவனென்பதும், ஆன்றமைந்த பேராளனென்பதும் இவற்றைக் கண்டபோது எளிதில் உரைத்தது. ஏற்றமும் செப்பியது. ஐயமும் களையச் செய்தது. ஒரு குதூகலத்தைத் தூண்டியது. ஓவென ஆர்ப்பரிக்கச் செய்தது.
இவ்வாறாக, தஞ்சை வாசக சாலையின் இலக்கிய நிகழ்வு தஞ்சை பிரகாஷ் என்ற மானுடன் இலக்கிய வகைமைக்குள் தன்னை அடக்கி ஒரு மகத்தான படைப்புக் கலைஞனாக முன்னின்றதையும், காலம்கடந்தாலும் ப்ரகாஷின் எழுத்து மொழிக்கூட்டமாய் வசீகரித்துக் கொண்டே செல்லும் என்பதையும் உறுதிப்படுத்தியது. தஞ்சை ப்ரகாஷ் என்ற தனித்துவன் தன் பிரம்மாண்டக் காட்சிப் பதிவைத் தமிழிலக்கிய உலகிற்கு விட்டுச் சென்றதை அந்த நிகழ்வு பறைசாற்றியது கண்டு வந்தோர் அனைவரும் மகிழ்ந்துதான் கலைந்தனர்.
தஞ்சை வாசகசாலையின் இந்நிகழ்வின் சொல்லாடலில் தஞ்சை ப்ரகாஷும் சற்றே மனம் நெகிழ்ந்து தன் தீஞ்சுவை எழுத்தை இப்பெரும் தமிழுலகம் போற்றிப் புகழ்வது கண்டு, யாரும் அண்ட முடியாத மௌனமொழியாய் ஆனந்தத்தில் திளைத்து நீந்தியிருப்பார் என்று சொல்லவும் வேண்டுமோ?