கொரோனாவின் கொடூர முற்றுகைக்கு நடுவே, மெல்லிய நம்பிக்கை தீபத்தைக் கையில் ஏந்தியபடி நம் வாசலில் வந்து நிற்கிறாள் தைப்பாவை. அவர் காலத்தின் செல்லமகள். வசந்தத்தின் தோழி. அறுவடைக் காலத்தின் அழகிய தேவதை.
அவள் மனதின் ஈரத்தில் அவள் முகம் சுடர்கிறது.
ஊருக்குச் சோறிடும் விவசாயி, பசியும் பட்டினி யுமாய், வல்லாதிக்க அரசின் வஞ்சகத்தை எதிர்த்துத் தலை நகரத் தெருக்களில் இறங்கிப் போராடிக் கொண்டிருக்கிறான். தன் ஜீவாதாரத்தை முடக்கும் அரசின் முட்டுக்கட்டை சட்டங்களைத் தகர்த்தெறி யும் வேகத்தோடு அவனது போராட்டம் தொடர்ந்து கொண்டிருக்கிறது. அவன் விளைவிப்பதை உண்டு அவனுக்கே இரண்டகம் செய்வது அதிகார வர்க்கத்தின் அழுக்கியல்பு. அதிகாரத்தின் மமதையான வெற்றி தற்காலிக ஆயுள்கொண்டது. உழைப்பவனின் வெற்றி உலகை நிர்வகிக்கும் செய்யும் வல்லமை கொண்டது. இதையெல்லாம் பரிவுக் கண்களால் கவனித்தபடியே, தைமகள் நம்மிடம் வந்து சேர்ந்திருக்கிறாள்.
நம் தமிழகத்தின் பேரிடர்க் காயங்களுக்கு மருந்து தடவும் பரிவுக் கரங்களாய், அவளின் அழகுக் கரங்கள் நீள்கின்றன.
ஆண்டெனும் ஆடையணிந்து நடைபயிலும் அவளின் அன்னத்தின் தூவியன்ன’ அழகுப் பாதங்கள், காலப் பெருவெளியில் கவிதைகளாய்ப் பதிகிறது.
அவளின் வருகையால்; கரும்புக் காடாகிறது மனம். அறுவடைக் களமாகிறது வாழ்க்கை. மஞ்சள், இஞ்சித் தோரணமாகிறது நாட்கள்.
உறவுகளின் குதூகலத்தில் வண்ணக் கோலமாகிறது வாசல். ஜல்லிக்கட்டுப் புழுதியைச் சந்தனமாய்ப் பூசிச் சிலுசிலுக்கிறது காற்று. பழமையை விறகாக்கிக் கொண்டு எரிகிறது, நம் பொங்கல் அடுப்பு.
தமிழர் திருநாளான தைத் திருநாளை இந்த உலகம் உவப்பாகப் பார்க்கிறது. காரணம், இது தமிழர்களாகிய நமது, பண்பாட்டுச் செழுமையின் அடையாளம் - இயற்கைக்கு நன்றி தெரிவிக்கும் நாகரிக நன்நாள். இதை இதய ஈரத்தோடும், ஈடிலா வீரத்தோடும் காலங் காலமாய்க் கனிந்து கொண்டாடுகிறது தமிழினம். மார்கழித் திங்களில் நீராடி நோன்பிருந்து, தைத் திங்களைத் தையலர்கள் வரவேற்கும் வழக்கம், சங்ககாலத்தில் தழைத்திருந்தது.
நற்றினை, குறுந்தொகை, புறநானூறு, பரிபாடல், சிலப்பதிகாரம் போன்றவற்றில், தைநீராடி வரும் பாடல்களைப் பார்க்க முடிகிறது. இவற்றின் நெகிழ்வான நீட்சியாகவே ’மார்கழித் திங்கள் மதிநிறைந்த நன்னாள்’ என பனியில் குளிர்ந்து, அதன் சில்லிப்பைத் தன் பாடலில் அள்ளி வீசுகிறாள் ’சூடிக்கொடுத்த சுடர்க்கொடி’யான ஆண்டாள்.
‘தீங்கின்றி நாடெலாம்’ வளம்சூழ வாழவேண்டும் என்னும் பொது நோக்கிற்காகவே தமிழ் மகளிர், தை நோன்பிருந்ததை ஆண்டாள் மொழி அழகுறப் பேசுகிறது.
’மார்கழிக்குப் பெண்ணாக, மாசிக்குத் தாயாகப் பேர்கொழிக்க வந்த பெட்டகமாகத்’ தைப்பாவையைப் பொங்கல் வைத்துப் பூரிப்பாய் வரவேற்பது, வளமையான வழக்கமாயிற்று.
ஐம்பெரும் காப்பியங்களில் ஒன்றான சீவகசிந்தாமணி,
’’மங்கையர் வளர்த்த செந்தீப்
புதுக்கலத்து எழுந்த தீம்பால் பொங்கல்'v -என எடுத்துக்காட்டுவது போல், நம் இல்லத்துப் பெண்கள், அடுப்புத் தீவளர்த்து, சுவைமிகும் பால்கொண்டு, புதுமண் கலயத்தில் வைக்கும் பொங்கல், ஆண்டாண்டு காலமாய் நம் வீட்டு முற்றத்தில் பொங்குகிறது. முற்றத்தில் மட்டுமா பொங்கலின் அடையாளம்?
’அலங்கு செந்நெல் கதிர் வேய்ந்த
ஆய் கரும்பின் கொடிக் கூரை,
சாறு கொண்ட களம் போல்’
-என புறநானூற்றுப் புலவர் குறுங்கோழியூர்க் கிழார் படம்பிடித்துக் காட்டுவதுபோல், சிற்றூர்களில் எல்லாம், வைக்கோல் வேய்ந்த கூரைகளோடும், செங்கரும்புத் தோரணங்களோடும், அறுவடைத் திருநாளாய்ப் பொங்கல் பொங்கி வழிந்தது. இந்தப் புதுநாளில், சங்கத் தமிழரின் இல்லம் செல்லுபவர்க்கு, மணக்க மணக்க இனிய பொங்கல் கிடைக்கும். அது எவ்விதமாய்த் தயாரிக்கப்படும் பொங்கல் தெரியுமா?
விதைவிடாமலே அறுத்த தினையை, மான்கறி சமைத்துச் சமைத்து மணமேறிப் போயிருக்கும் கலத்தில், நுரைக்க நுரைக்கக் கறந்த புதுப்பாலை ஊற்றி, சந்தன விறகைக் கொண்டு அடுப்பெரித்துப் பொங்கவைக்கும் பொங்கல் அது. அங்கே தழைவாழை இலையுடன் விருந்தோம்பல் நடக்கும். இதைத்தான்,
’உழாஅது வித்திய பரூஉக்குரற் சிறுதினை
முந்துவிளை யாணர் நாள்புதிது உண்மார்,
மரையான் கறந்த நுரைகொள் தீம்பால்,
மான்தடி புழுக்கிய புலவுநாறு குழிசி
வான்கேழ் இரும்புடை கழாஅது, ஏற்றிச்,
சாந்த விறகின் உவித்த புன்கம்,
கூதளங் கவினிய குளவி முன்றில்,
செழுங்கோள் வாழை அகல்இலைப் பகுக்கும்
- என்கிறது புறநானூறு (168.)
இப்படி ஒருபுறம் அகத்தில் இனிமையாய்ப் பொங்கல் பொங்கித் ததும்ப, இன்னொரு புறம், களத்தில் இளைஞர்களின் வீரம், எழிலுறப் பொங்கும்.
காளைகளோடு காளையர்கள் வீறுகொண்டு மோதுவர். அப்போது அவர்களின் பார்வை, மனதிற்கினிய மங்கையரைக் கூட்டத்தில் தேடிப் பரிதவிக்கும். ஜல்லிக்கட்டுக் களங்களில், கண்களுக்கிடையிலும் ஜல்லிக்கட்டு நடக்கும். கண்களால் காதலெனும் கரும்பு கடிப்பார்கள். அப்போது கூட, ‘கொல்லேற் றுக் கோடஞ்சு’கிறவர்களை, மறுமையிலும் ஏற்க மாட்டோம் என்று அரிவையர்கள் கண்களாலேயே அறிவிப்பார்கள். இதனால், அன்றைய ஜல்லிக்கட்டுக் களங்களில், சாதிமத பேதங்கள் கடந்த மண முகூர்த்தங் கள் முளைத்தன. இத்தகைய பெருமிதப் பின்னணி களோடு பொங்கல் விழாக்கள், தமிழ்மண்ணில் காலங்காலமாய்க் கொண்டாடப்பட்டு வருகிறது .
17-ஆம் நூற்றாண்டில் தமிழகம் வந்த போர்த்துக் கீசியரான அபே டூபாய்ஸ், அந்நாளில் பொங்கல் விழாக்கள் பொலிவுலிற நடந்ததையும், இதற்காக இல்லங்கள் தோறும் கூரைகளைப் புதிதாகத் தமிழர்கள் வேய்ததையும், சுவர்களுக்கு வண்ணம் தீட்டி அலங்கரித்ததையும், மஞ்சுவிரட்டுக் களங்களில் இளைஞர்கள், மாடுகளை விரட்டிப் பிடித்ததையும், தனது 'இந்துகளின் பழக்க வழக்கமும் வாழ்க்கை முறையும்’ (ம்ஹய்ய்ங்ழ்ள் ஹய்க் ஸ்ரீன்ள்ற்ர்ம்ள் ர்ச் ட்ண்ய்க்ர்ர்ள்) என்ற நூலில் வியப்பாய் விவரித்துப் பூச்செண்டை உயர்த்துகிறார்.
பொங்கலைத் தமிழ்ச் சமுகம் பரவலாகக் கொண்டாடிய போதும், ஒவ்வொரு பகுதியிலும் ஒவ்வொரு வழக்காறுகள் வளர்ந்தன. இதனால், 19-ஆம் நூறாண்டில் வாழ்ந்த தமிழ்ச் சான்றோர், தைப்பொங்க லைத் ’தமிழர்த் திருநாள்’ என்னும் ஒருமித்த அடை யாளத்தோடு கொண்டாட முனைந்தனர்.
இதை முதன்முதலில் கையில் எடுத்தவர், பேராசிரியர் கா.நமச்சிவாயனார் என்பது காலத்தின் கல்வெட்டுச் செய்தியாகும். தனது ’தமிழ்க்கடல்’ பதிப்பகத்துக்கு நூல் எழுதிய புலவர் பெருமக்களை, தான் நடத்திய ’ தமிழர் திருநாளில்’ அவர் சிறப் பித்தார் என்பது, அவர்க்கான சிறப்பாகும்.
தமிழர் திருநாளை முன்னெடுக்க விழைந்த, அறிஞர் பெருமக்கள், தமிழைச் சிகரத்தில் ஏற்றிய திருவள்ளுவரைக் கைதொழுதனர். அவருக்கு விழா எடுக்க விழைந்தனர். ’திருவள்ளுவர் பிறந்த திருத்தலம்’ என்று மயிலாப்பூர் திருவள்ளுவர் கோயிலை, அவர்களில் பலர் ஆராதித்தனர். எவ்வித சான்றும் இல்லாமல், வைகாசித் திங்களில் வரும் அனுச நாளே, திருவள்ளுவர் பிறந்த நாள் என்று அக்கோயிலில், கற்பனைப் பல்லக்கு தூக்கப்பட்டு வந்தது. இதைச் சார்ந்தே ’திருவள்ளுவர் நாள் கழகத்தின ரால்’ தமிழ்முனிவர் மறைமலையடி கள் தலைமையில் பச்சையப்பன் கல்லூரியில் திருவள்ளுவர் திருநாள் கொண்டாடப்பட்டது. அங்கு அடிகளாரும் நமச்சிவாயரும் ஆற்றிய உரை, தமிழ் அறிஞர்கள் மத்தியில் பெரும்தாக்கத்தை ஏற்படுத்தி, தமிழின வரலாற்றில் வண்ணப் பக்கங்களை வளர்க்க ஆரம்பித் தது என்று சொல்லாம். ஏனெனில், திருவள்ளுவரைக் கொண்டு தமிழர் ஆண்டுகளைக் கணிக்கும் எண்ணம், அப்போது அறிஞர்கள் மத்தியில் மலர்ந்தது.
காரணம், வடநாட்டைச் சேர்ந்த சாலிவாகனன் பெயரிலான கணக்கீட்டின் படி பிரபவ-வில் தொடங்கி அட்சய வரையிலான 60 வருடங்களைக் கடைபிடிப்பதில், தமிழருக்கான எந்த அடையாளமும் இல்லை. சுக்கில, விரோதி, விகாரி, குரோதி, துன்மதி என்பது போன்ற, அவ்வருடங்களின் பெயர்களில் அநாகரிகம் அப்பியிருந்தது. அதிலும், அந்த 60 வருடங்களும் பிறந்த கதையாகப் புராணங்கள் சொல்லுவது ’அடச்சே!’ என அறுவறுக்கத் தக்கது. எனவே, கிறித்தவர்கள் ஏசுவை வைத்து ஆங்கிலப் புத்தாண்டைத் தொடங்கியது போல், திருவள்ளுவரிலிந்து புத்தாண்டைத் தொடங்கத் திட்டமிட்டனர். அதை நோக்கிக் காலம் அவர்களை நகர்த்தியது.
பள்ளிகளில் இந்தி கட்டாயப் பாடம், என அன்றைய முதல்வர் ராஜாஜி அறிவித்து, தமிழர்களின் நெஞ்சில் எரிதழல் மூட்டிய சூழலில், 1937 டிசம்பர் 26-ல் நாவலர் சோமசுந்தர பாரதியார் தலைமையில், தமிழர் மாநாட்டைத் திருச்சியில் நடத்தினார் முத்தமிழ்க் காவலர் கி.ஆ.பெ.விசுவநாதம்.
இது, வைகறைக்கு வாசல் திறந்த தமிழர் மாநாடு.
இதில், கிறித்து பிறப்பதற்கு 31 ஆண்டுகளுக்கு முன்னர் திருவள்ளுவர் பிறந்தார் என்கிற தன் காலக்கணிப்பை வெளியிட்டார் அடிகளார். இதை அங்கிருந்த தந்தை பெரியார் ஏற்பாரா? என அனைவர் கண்களும் அவரையே கவனித்தன. அந்த கணநேரத்தில், காற்றுக்கும் அங்கே வியர்த்திருக்கும். தந்தை பெரியரோ, அந்த முடிவை ஏற்பதாகப் பச்சைக்கொடி அசைத்தார். அவருக்கு அங்கேயே திரு.வி.க., தன் உரையால் நன்றிமுத்தம் பெய்தார். இதைத் தொடர்ந்தே, தைமகளில் வயிற்றில், கருக்கொள்ள ஆரம்பித்திருந்த ’தமிழர் புத்தாண்டு’ உருக்கொள்ள ஆரம்பித்தது. 1949 ஜனவரி 15,16-ல் பெரும்புலவர் தெ.பொ.மீ. தலைமையில் திருக்குறள் மாநாட்டைத் தந்தை பெரியார் சென்னையில் நடத்தினார். அண்ணா, திரு.வி.க., சோமசுந்தர பாரதியார், இலக்குவனார் , புலவர் குழந்தை போன்ற அறிஞர் பெருமக்கள் அணிவகுத்தனர். இதுபோன்ற முயற்சிகளால், தமிழர் திருநாளாய் தமிழர் நெஞ்சமெலாம் பொங்கல் பொங்கியது.
இந்த நேரத்தில், பொங்கல் திருநாளில் வாழ்த்தனுப்பும் வழக்கத்தை ஆரம்பித்துவைத்த பெருந்தமிழர் பெரியசாமித் தூரனை நாம் மனதிற்குள் நிறுத்தி மலர்தூவியாகவேண்டும். 1923-ல் மாநிலக் கல்லூரி மாணவராக இருந்த அவர்தான், திரு.வி.க. உள்ளிட்டவர்களுக்கு வாழ்த்திதழ் அனுப்பி, நம் பண்பாட்டு வெளியில் ஒரு புதிய திசையைத் தொடங்கிவைத்தார். இளைஞர்கள் மத்தியில், தமிழர் திருநாளைக் கொண்டாடும் விருப்பத்தை, இதயத் துடிப்பைச் சுமந்த இந்த வாழ்த்திதழ்கள், ஆர்வமாய் ஒருபுறம் வளர்த்தன என்றும் சொல்லலாம்..
1949-ல், மாநிலப் பிரிவினைக்கான குரல்கள் எழுந்த நேரத்தில், சிலம்புச்செல்வர் மா.பொ.சி.யும் தமிழர்களுக்கு உணர்வூட்ட தமிழர் திருநாளைக் கையில் எடுத்தார். தமிழாய்ந்த அறிஞர்களின் கைகளைப் பற்றியபடி, திராவிட இயக்கங்கள் வைத்த பொங்கலில், நாடுமுழுக்கத் தமிழ் மணம் கமழ்ந்தது. இலக்கியத் தேனில் தமிழர்களின் இதயம் அமிழ்ந்தது.
தைத்திங்களில் தொடங்கும் திருவள்ளுவராண்டு நாட்காட்டிகளைத் தமிழ் இயக்கங்கள் பரப்பிய போதும், அதற்கு அரசின் அங்கீகாரம் கிடைக்க வில்லையே என்ற ஆதங்கம், செரிக்காத உணவாய், உணர்வாளர்களின் நெஞ்சில் கரித்துக் கொண்டிருந்தது.
இதற்கு தி.மு.க. ஆட்சிக் காலத்தில், தீர்வு கிடைத்தது. 69-ல் முதல்வராக முதல்முறை பொறுப்பேற்ற கலைஞர், தைப் பொங்கலுக்கு மறுநாளைத் ’ திருவள்ளுவர் நாள்’ என பிரகடனம் செய்து, அரசுவிடுமுறை அறிவித்தார். இதன் மூலம், தமிழன்னையின் கோட்டையில் வெற்றிக்கொடி ஏறியது. அடுத்து, தை முதல்நாளே தமிழர் புத்தாண்டு என்று 28.1.2008-ல் சட்டப்பேரவையில் சட்டமியற்றிச் சாதனை படைத்தார் கலைஞர். வரலாற்றில், தமிழருக்குக் கிடைத்த மகத்தான பண்பாட்டுப் பதிவு இது. 1971-ல் தமிழக அரசால் திருவள்ளுவர் ஆண்டு ஏற்கப்பட்டு, அது 1972-ல் அரசிதழிலும் இடம்பிடித்தது. இதைப் பின்னர் முதல்வர் பொறுப்பேற்ற ஜெயலலிதாவால் ஏற்கமுடியவில்லை. 2011-ல் சித்திரையே தமிழர் புத்தாண்டு என, ஏறுக்குமாறாக சட்டத்தை நிறைவேற்றிவிட்டார். இதன்மூலம், தமிழறிஞர்கள், ஏறத் தாழ 80 ஆண்டுகாலம் போராடி, தைமகளின் தலையில் அணிவித்த ’தமிழர் புத்தாண்டு’எனும் மகுடத்தைக் கழற்றி வீசிவிட்டார். இதன் மூலம் உலகத் தமிழர்களின் சாபத்தை அவர் சம்பாதித்திருக்கிறார். ’அரசியல் பிழைத்தோர்க்கு அறங்கூற்றாகும்’ என்பதை காலம் அவருக்கு ’உருத்து வந்து’ ஊட்ட’ட்டும்.
அடிக்கடி மாறும் அரசாணைகள் வேண்டு மானால், தையை நிராகரிக்கலாம். எனினும், ஒட்டுமொத்த தமிழ்ச் சமூகமும்,
’தரணி ஆண்ட தமிழனுக்குத்
தை முதல் நாளே தமிழ்ப்புத் தாண்டு!’
-என்கிற புரட்சிக் கவிஞரின் குரலை, காலத்தின் கட்டளையாய் ஏற்றுகொண்டுவிட்டது. எனவே, தைப் பொங்கல், எல்லாத் திக்கிலும் தமிழ்ப் பொங்கலாய்ப் பொங்கி வழிந்துகொண்டிருக்கிறது. தைப்பாவை, நம் வாழ்த்து மழையில் நனைந்துகொண்டிருக்கிறாள்.
அவள்தனது வாழ்த்துக்களை அறுவடைச் சொற்களால், வசந்தத்தின் குரலில் வழங்குகிறாள். அதனாம் நம் மனச் செவிகள் இனிக்கின்றன. அந்த இனிப்பு இதயத்தில் இறங்கி வாழ்வின் மீது படியும் என்ற நம்பிக்கை உள்ளத்தை நிமிரவைக்கிறது.