யற்கையை தெய்வமாக வணங்கி வழிபட்டு, இயற்கையோடு இணக்கமாக வாழ்ந்துவந்ததுதான் மனித குலம். ஆடிப்பட்டம் தேடி விதை, சித்திரை புழுதி பத்தரை மாத்துத் தங்கம், கார்த்திகைக்குப் பின் மழையுமில்லை... கர்ணனுக்குப்பின் கொடையும் இல்லை போன்ற சொலவடைகள் மூலம், இயற்கையோடு இயைந்த விவசாய வாழ்க்கையை வாழ்ந்துவந்தவர்கள்தான் நாம். காலச்சுழற்சியில், மக்கள் தொகை, தொழில்நுட்ப வளர்ச்சியில் இயற்கையை சிதைக்கத் தொடங்கினோம்.

ஆற்று மணலை அளவுக்கதிகமாக அள்ளுவது, மலைகளை வெட்டிப் பள்ளத்தாக்குகளாக்குவது, மலையெங்கும் மரங்களை வெட்டிவீழ்த்தி தங்கும் விடுதிகள் அமைப்பதென இயற்கையை நம் தேவைக்கேற்ப வெட்டிவீழ்த்தத் தொடங்கியதால் கடந்த 20 ஆண்டு களாக சுனாமிப் பேரலைகள், புயல், கனமழையால் பெருவெள்ளம், வறட்சி எனப் பல்வேறு இயற்கைச் சீரழிவுகளை எதிர்கொண்டுவருகிறோம்.

இயற்கையை சிதைப்பதால் ஏற்படும் பேரழிவுகளுக்கு கடவுளின் தேசம் மட்டும் விதிவிலக்கா என்ன? பசுமை போர்த்திய மலைப்பகுதிகளைப் பெருமளவு தன்னகத்தே கொண்ட கேரள தேசத்தில், குடியிருப்புகள் மற்றும் தொழிற்சாலைகளின் பெருக்கத்தால் இயற்கை தனது இயல்பு நிலையிலிருந்து மாறத்தொடங்கியுள்ளது. ஆங்கிலேயர் கள் காலத்தில் மரங்கள் அழிக்கப்பட்டு ஏலக்காய், தேயிலைத் தோட்டங்களாக மாற்றப்பட்ட மலைப்பகுதிகளில், தொடர்ச்சியான தாக்குதலாகத் தற்போது கட்டடங்கள் பெருகத் தொடங்கி யுள்ளது. இதனால் பெருமழைக் காலங்களை எதிர்கொள்ளமுடியாமல் அடிக்கடி நிலச்சரிவுகள், பெருவெள்ளங் களை எதிர்கொள்ளும் சூழல். இந்நிலையில், கேரள மாநிலம் வயநாடு மாவட்டத்தில், கடந்த ஜூலை 30-ஆம் தேதி, மேகவெடிப்பு காரணமாக ஒரே நாளில் கொட்டித்தீர்த்த பலத்த மழையால், அன்றிரவு அனைவரும் உறக்கத்திலிருக்கும்போது, முண்டக்கை, சூரல்மலை பகுதிகளில் திடீர் நிலச்சரிவு ஏற்பட்டது.

ww

Advertisment

உடைப்பெடுத்து வந்த வெள்ள நீரின் சீற்றத்தை, ஆழ்ந்த தூக்கத்திலிருந்த மக்களால் எதிர்கொள்ள இயலவில்லை. அதிலிருந்து எப்படித் தப்புவதென சிந்திக்கக்கூட வாய்ப்பளிக்காத இயற்கை, மரம், செடி கொடிகளோடு அவர்களின் வீடுகளையும் சேர்த்து மொத்தமாக குடும்பம் குடும்பமாக இழுத்துச்சென்று, மணலுக்குள் புதைத்து கோரதாண்டவமாடியது.

மறுநாள் பொழுது விடிய விடியத்தான் இயற்கையின் சீற்றம் அனைவருக்கும் தெரியவர, துரிதகதியில் மீட்புப் பணியில் கேரள அரசு இறங்கியது. கேரள அரசுக்கு உதவியாக ஒன்றிய அரசின் தேசியப் பேரிடர் மீட்புப் படையினரும், ராணுவத்தின் முப்படையினரும் களமிறங்கி மீட்புப்பணியில் கைகோர்த்தனர். வயநாடு மாவட்டத்தில் நிலச்சரிவு ஏற்பட்ட இடங்களை 6 மண்டலங்களாகப் பிரித்து தேடுதல் பணியில் மீட்புப் படை வீரர்கள் ஈடுபட்டனர். தீவுத் திட்டுகளாகிப்போன வயநாடு பகுதிகளில், வெள்ளத்தில் தப்பியும் மக்கள் தொடர்பே கிடைக்காமல் தவித்துக்கொண்டிருந்த மக்களை ஹெலிகாப்டர் மூலம் மீட்கும் முயற்சிகள் எடுக்கப்பட்டன. கொத்துக்கொத்தாக ஆங்காங்கே மரம் செடிகொடிகளில் சிக்கியும், மண்ணில் புதைந்து கை, கால்கள் வெளித்தெரியும்படியுமாக நூற்றுக் கணக்கான மனித உடல்கள் பதைபதைக்க வைத்தன. பச்சிளம் குழந்தைகளும், சிறார்களும்கூட இயற்கையின் சீற்றத்துக்கு தப்பவில்லை. பலியானோர் எண்ணிக்கை, நூறு, இருநூறு என உயர்ந்து நானூறுக்கும் மேலாக உயர்ந்தது. அதன்பின்னும் நூற்றுக்கணக்கானோர் காணாமல் போயினர், இன்னும் பலரின் உடல் பாகங்கள் மட்டுமே துண்டுதுண்டாக மீட்கப் பட்டன. உயிரிழந்த பலரை அடையாளம் கண்டபோதும், சிலரது உடல்களை அடையாளங்காண முடியாத அளவுக்கு சிதைந்திருந்தன. டி.என்.ஏ. சோதனை மூலம் கண்டறியும் பணியும் நடைபெற்றது. உயிரோடு மீட்கப் பட்ட இரண்டாயிரத்துக்கும் மேற்பட்டோர் அப்பகுதியில் அமைக்கப் பட்ட 16 முகாம்களில் தங்கவைக்கப் பட்டனர்.

தமிழ்நாடு அரசு சார்பில், நிலச்சரிவில் உயிரிழந்த மக்களுக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்த தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின், கேரள அரசுக்கு 5 கோடி ரூபாய் நிவாரண உதவி வழங்குவதாக அறிவித்தார். மேலும், மூத்த ஐஏஎஸ் அதிகாரிகளான கீ.சு.சமீரன், ஜானி டாம் வர்கீஸ் ஆகியோர் தலைமை யில் மீட்பு குழுவினரை உடனடியாக அனுப்பவும் உத்தரவிட்டார். இக்குழுவில், தீயணைப்பு துறை இணை இயக்குநர் தலைமையில் 20 வீரர்கள், ஒரு காவல் கண்காணிப்பாளர் தலைமையில் மாநில பேரிடர் மீட்பு குழுவின் 20 வீரர்கள், 10 மருத்துவர்கள், செவிலியர்கள் அடங்கிய மருத்துவ குழுவினர் இடம்பெற்றனர். இவர்கள் கேரள அரசின் மீட்புக்குழுவினரோடு இணைந்து செயல்படுவார்களென்று அறிவித்தார்.

கேரள முதல்வர் பினராய் விஜய னும், வயநாடு எம்.பி.யாக இருந்த ராகுல் காந்தியும், அவரது சகோதரி பிரியங்கா காந்தியும் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீட்புப் பணிகளைப் பார்வையிட்டதோடு, உயிர்தப்பி முகாம்களில் தங்கவைக்கப்பட்ட வர்களையும், சிகிச்சையில் இருப்பவர்களையும், உறவினர்களை இழந்தவர்களையும் சந்தித்து ஆறுதல் கூறினர். "நான் எனது தந்தையை இழந்தபோது சந்தித்த துயரத்தைப்போல உங்கள் துயரங்களை என்னால் உணரமுடிகிறது" என உணர்வுப்பூர்வமாக ராகுல் காந்தி அவர்களுக்கு ஆறுதல் கூறினார். ஆகஸ்ட் 10-ஆம் தேதி பிரதமர் மோடியும் ஹெலிகாப்டர் மூலம் பாதிக்கப்பட்ட பகுதிகளைப் பார்வையிட்டதோடு, மீட்புப்பணிகளையும் சென்று பார்த்தார்.

நிலச்சரிவின் காரணமாக முண்டக்கை, சூரல்மலையை இணைக்கும் பாலம் அடித்துச்செல்லப்பட்டது. எனவே மீட்புப் பணிக்காக தற்காலிக மரப்பாலம் அமைக்கப்பட்டது. ஆனால் வெள்ளத்தின் சீற்றத்தில் அந்த பாலமும் அடித்துச்செல்லப்பட்டது. அதையடுத்து ராணுவத்தின் பொறியாளர் பிரிவினர் இரும்புப்பாலம் அமைக்கும் பணியில் துரிதமாக ஈடுபட்டு இரும்புப்பாலம் அமைக்கப்பட்டு, மீட்புப்படையினரோடு உணவு, மருந்துப்பொருட்களும் அனுப்பிவைக்கப்பட்டன. இந்நிலையில், அடுத்து பெய்த பெருமழையில், ராணுவத்தினரால் அமைக்கப்பட்ட இரும்புப்பாலமும் அடித்துச்செல்லப்பட்டது பெரும்துயர்!

முண்டக்கை கிராமத்தை சேர்ந்த ஒருவர் தான் சந்தித்த துயரத்தை பகிர்கையில், "நள்ளிரவு 12.40 மணியளவில் மிகப்பெரிய சத்தம் கேட்டது.

அடுத்தடுத்து நான்கு முறை நிலச்சரிவு ஏற்பட்டது. என் வீட்டின் முன் நடந்த நிலச்சரிவில் எனது குடும்ப உறுப்பினர்கள் 3 பேரை இழந்துவிட்டோம். எங்கள் குடும்பத்தில் மொத்தம் 8 பேர். எனது தாயாரின் சகோதரி மற்றும் குடும்பத்தினர் நிலச்சரிவில் சிக்கிக்கொண்டனர்' என்றார் பெரும் துயரத்துடன்.

அதேபோல் பிரஜீஷ் என்பவருக்கு முண்டக்கை கிராமத்தில் நிலச்சரிவு ஏற்பட்ட செய்தி கிடைத்ததுமே தனது ஜீப்பை எடுத்துக்கொண்டு அம்மலைப்பகுதிக்கு சென்றவர், இரண்டு முறை அங்குள்ள பாதிக்கப்பட்ட மக்களை ஜீப் மூலமாக பாதுகாப்பான இடத்துக்கு கொண்டுசென்று விட்டார். அடுத்த முறை மீண்டும் அம்மலைப்பகுதிக்கு சென்றவர் திரும்பவே யில்லையாம். மீட்புப்படையினர், சேதமடைந்த அவரது ஜீப்பை மட்டும் கைப்பற்றியுள்ளனர். அவர் என்னவானார் என்பது தெரியவேயில்லை!

சூரல்மலையைச் சேர்ந்த பிரசன்னா என்பவர், நிலச்சரிவால் பெருவெள்ளம் சூழ்ந்ததும் அவரது தந்தையை மட்டும் இழுத்துக்கொண்டு காட்டுப் பகுதிக்கு சென்று தப்பியிருக்கிறார். வெள்ளத்தில் அவரது தங்கையும் இரு குழந்தைகளும் இழுத்துச் செல்லப்பட்டு உயிரிழந்ததாக தெரிவித்தார்.

அதே சூரல்மலையைச் சேர்ந்த பத்மாவதி என்ற 80 வயது மூதாட்டி தனது மருமகளுடன் வசித்துவந்த நிலையில், நிலச்சரிவால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் அவரது மருமகள் அடித்துச்செல்லப்பட, மூதாட்டி மட்டும் உயிர்தப்பினார். இனி நான் யார் தயவில் வாழமுடியுமென்று அவர் கேட்ட கேள்விக்கு பதிலில்லை.

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட வீடொன்றில், சகதிகளுக்கிடையே ஒரு குடும்பத்தின் புகைப்பட ஆல்பம் வைரலாகப் பரவியது. அதிலிருந்த அனைவரும் உயிரிழந்ததாக அனைவரும் வருத்தப்பட்ட நிலையில், தீரஜ் என்ற 19 வயது இளைஞர், அந்த புகைப்படத்திலிருப்பது நானும் என் தாயும் சகோதரிகளும் என்றதோடு, தாயோடு தப்பி பாதுகாப்பு முகாமுக்கு வந்துவிட்டதாகவும், சகோதரிகள் வெளியூர்களில் வசிப்பதாகவும் தெரிவித்தபின்னரே சமூக வலைத்தளங்கள் நிம்மதிப் பெருமூச்சு விட்டன.

இயற்கைப் பேரழிவின் துயரை விடவும் மற்றொரு துயர், நிவாரண நிதி செலுத்தப்பட்டதும், மிக வேகமாக அரசு வங்கிகள் குறைந்தபட்ச இருப்பு வைக்காத தற்காகவும் வேறுபல காரணங்களுக்காகவும் நிவாரணம் பெற்றவர்களின் கணக்கிலிருந்து தொகையைப் பிடித்துக்கொண்டதாகும்.

பலநூறு உயிர்கள் பலியான இந்த இயற்கைப் பேரழிவை தேசியப் பேரிடராக அறிவிக்க மறுத்துவிட்ட ஒன்றிய அரசு, வயநாடு பகுதியில் கேரள அரசின் ஆதரவுடன் சட்டவிரோத சுரங்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுவருவதாகவும், மலைப்பகுதிகளில் சட்டவிரோதக் குடியேற்றங் களைக் கண்டுகொள்ளாமல் விட்டதுதான் இத்தகைய இயற்கைப் பேரழிவுக்கு காரணமென்றும் கேரள அரசை நோக்கி குற்றம் சாட்டியது.

ஒன்றிய அரசின் குற்றச்சாட்டுகளை மறுத்த கேரள முதல்வர், நிலச்சரிவில் உயிரிழந்தோர் குடும்பத்திற்கு 6 லட்ச ரூபாயும், காயமடைந்தோருக்கு 50 ஆயிரம் முதல் 75 ஆயிரம் ரூபாய் வரையிலும் நிவாரண நிதி அளிக்கப்படுமென்று தெரிவித்தார். மேலும், நிலச்சரிவால் வீடுகளை இழந்து நிர்க்கதியாகத் தவிக்கும் மக்களுக்கு இலவசமாகத் தங்குமிடம் ஏற்பாடு செய்துதருவதே அரசின் நோக்கமென்று தெரிவித்த பினராயி விஜயன், வாடகை வீட்டில் குடியேறவுள்ள குடும்பங்களுக்கு மாதம் 6 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என்றும், உறவினர்கள் வீட்டில் தங்குபவர்களுக்கும் இந்த உதவித்தொகை வழங்கப்படும் என்றும் தெரிவித்தார். கேரள மாநிலத்தைத் தாண்டியும், வயநாடு நிலச்சரிவில் பாதிக்கப்பட்ட மக்களின் துயர் துடைக்க உதவிக்கரங்கள் நீண்டபடியிருக்கின்றன. வயநாடு நிலச்சரிவால் ஏற்பட்ட பேரிழப்புபோல் இனியொரு துயரம் நிகழாதிருக்க என்ன செய்யவேண்டும், என்ன செய்யக்கூடாதென்பதை இனி திட்டமிட வேண்டும். இயற்கையை, மலையின் தன்மை யைச் சிதைக்காமல் காப்பாற்றுவதும் மனிதநேயச் செயல்தான் என்பதையே இந்த வயநாடு துயரம் நமக்கு உணர்த்தியுள்ளது!

-தெ.சு.கவுதமன்