கவிஞர் - இயக்குநர் யார் கண்ணன்
தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகம் அயல்நாட்டுத் தமிழக்கல்வித்துறையிலிருந்து அதன் புலமை சார்ந்த பொறுப்பாளர் பேராசிரியர் முனைவர் இரா. குறிஞ்சிவேந்தன் அவர்களின் அழைப்பிற்காக நான் கடந்த மார்ச் மாதம் இறுதியில் தஞ்சை சென்றிருந்தேன். "காலந்தோறும் தமிழர்களின் பயணச்சுவடுகள்' என்ற தலைப்பில் நடந்த ஒரு நாள் பயிலரங்கம் அது. "கடலோடிகள் முதல் ஒப்பந்தக்கூலிகள் வரை தமிழர் பயணங்கள்' -என்ற தலைப்பில்தான் பேசச் சென்றேன். ஆனால் பேசத் தொடங்கியதும்... பொதுவான ஒரு தமிழனின் ஆதங்கத்தை எல்லாம் இடைஇடையே பேசவேண்டிய கட்டாயத்தையும் உணர்ந்தேன்.
எனக்குமுன் முதல் அமர்வில் பேசிய சரஸ்வதிமகால் கல்வெட்டு- சுவடிஇயல் அறிஞர் மணிமாறன் ஒரு நல்ல தமிழ்ப்பண்டிதர். தனது ஆராய்ச்சி உரையை வரைபடங்களோடு விளக்கினார்.
நான் வழக்கம்போல் பொதுவாகப் பேசினாலும் ஆராய்ச்சி மாணவர்கள் அதிகம் நிறைந்த சபை என்பதால் ஊடகத்துறையின் பிரதிநிதியாய் நான் அங்கு பேசியது எனக்கே பிடித்திருந்தது. தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் அயலக தமிழ்க்கல்வித்துறையில் நான் பேசும் வாய்ப்புக் கிடைத்தமைக்கு முழு முதற்காரணம்...
சின்னஞ்சிறு வயதில் இருந்தே நான் முழுமையாய் தமிழை நேசித்ததும்... வாசித்ததும்தான்.
அன்று அங்கிருந்தே தஞ்சை செழியன் அவர்களுடன் நான் மதுரை புறப்பட்டேன். சாகித்ய அகாடமி விருது பெற்ற வெங்கடேசன் வெற்றித்தமிழர் பேரவையின் சார்பாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஓர் இலக்கியக் கூட்டத்திற்கு அழைக்கப்பட்டிருந்தார். கீழடி பற்றிய ஆய்வு உரையை வெகு நேர்த்தியாக, நிதானமாக, விளக்கமாக அரங்கேற்றினார். ஒரு பார்வையாளனாய் இருந்து வரலாற்று வாசலுக்கருகில் சென்று வந்தது... கல்லூரி வகுப்புகளில் அமர்ந்திருந்த காலத்தை எனக்கு மீண்டும் நினைவுபடுத்த... இரவே மீண்டும் தஞ்சைப் பல்கலைக்கழக விருந்தினர் அறைக்குத் திரும்பினேன்.
சரியான பராமரிப்பு இல்லாமல் பல்கலைக்கழக அரங்கமும் விருந்தினர் அறைகளும்... ஏதோ இனம்புரியாத குறையை எனக்கு சுட்டிக்காட்டின. பல்கலைக்கழகம் அரசியல் சார்பில்லாமல் இயங்கவேண்டும். அரசியல் தொடர்பற்ற சுத்தமான அக்மார்க் அறிஞர்கள் பதவிகளில் இருக்கவேண்டும். அதுபோலவே ஆண்டுதோறும் தமிழ் அறிஞர் களுக்கு வழங்கப்படும் அரசு விருதுகள் தகுதி இல்லாதவர்களுக்கு கிடைப்பதால் தமிழ்த்தொண்டு செய்யும் உண்மையான அறிஞர்கள், பேராசான்கள் பலர் வெளியில் சொல்ல முடியாத அளவுக்கு வேதனையில் உள்ளனர். தமிழ்நாட்டில் மட்டும்தான் இந்த அவலநிலை.
இல்லையென்றால், "தமிழ், தமிழ்' என்றே வாழ்நாள் முழுதும் வரலாறு படைத்துக்கொண்டிருக்கம் கவிக்கோ ஞானச்செல்வன் அவர்களுக்கும், "தமிழ், தமிழ்' நலனுக்காக தெருவில் இறக்கிப் போராடிக்கொண்டே இருக்கும் பேராசிரியர் தஞ்சை இறையரசன் அவர்களுக்கும் அரசு விருதுகள் புறக் கணிக்கப்பட்டிருக்குமா?
காசிருந்தால் முனைவர் பட்டம்வரை விற்கும் கடைவீதி ஆயிற்று தமிழ்நாடு. கட்சிக்கரை வேஷ்டிகள் கட்டாயம் கட்டவேண்டும். இல்லையேல் சாதியப் பற்றாளராய். மதவாதியாய்ப் பிறக்கவேண்டும். நாடா இது?
பயோகேஸ், ஸோலார் மின்சாரம் பயன்படுத்தினால் விலைச்சலுகை, வரிச்சலுகை, தள்ளுபடி என்பதை எல்லாம் அதிகப்படுத்தி அறிவிக்கலாம். பெட்ரோல், டீசல் பயன்பாட்டைக் குறைத்தால் விலையும் குறையும். சுவாசிக்க சுத்தமான காற்றும் கிடைக்கும். யார் செய்வது? பாலிதீன் பை உற்பத்திக்கே தடை விதித்தால் ஆறுகள் வாய்க்கால்கள் காப்பாற்றப்படும். யார் செய்வது? இலவசங்களையும் நூறு நாள் வேலை வாய்ப்பையும்... இழுத்து மூட வேண்டும். விவசாய நிலங்களை குடியிருப்பு மனைகளாக்கியதும். நிலம் இருப்பவர்கள் எல்லாம் கல்லூரி வியாபாரி ஆகலாம் என உத்தரவிட்டதும் சாபங்கள். சாபம் விலகுமா?
தஞ்சை, மதுரை என ஊர்கள் பல சுற்றிவிட்டு பிறந்த ஊரான மதுக்கூர் சென்றிருந்தேன். கல்யாண ஓடைக்கால்வாய் முழுதும் பிளாஸ்டிக் பாலிதீன் பைகள் குப்பைகள்... கையால் கேணி, கிணறு என்ற நீர்நிலைகளில் குடிக்க குடம்குடமாய் தண்ணீர் எடுக்கும் பெண்கள் இல்லை. கிணறுகளும் இல்லை.
""போர்வெல்''கூட ஆழம் இருநூறு அடிகளுக்கு மேல் போனால் நீர் கிட்ட வாய்ப்பு.
மன்னார்குடிக்கு "இந்திராகாந்தி' வந்தபோது விவரம் தெரியாத வயதில் மதுக்கூரிலிருந்து "கோஷம்' போட்டவாறே லாரியில் அப்பாவின் கைபிடித்தவாறே சென்று சோற்றுப்பொட்டலமாய்க் கிடைத்த தயிர்சாதம் உண்டு சற்றே அருகில் இந்திராகாந்தியைச் சந்தித்தபோது- நாட்டின் தலைவியை நாமும் பார்க்கிறோம் என உற்சாகத்தின் உச்சத்தை ஒரு தியாகியின் மகனாய் இருந்து உணர்ந்தேன். பட்டப்படிப்பின்போது காமராஜர் இறந்த செய்தி அறிந்தவுடன் அழுதேன். இப்போது யார் இருக்கிறார்கள் தொழுவதற்கும்... பிரிவை எண்ணி அழுவதற்கும்? தண்ணீர் அணைகள் கட்டுவதற்கும்?
தமிழர் எழுச்சிப் பேரவையின் சார்பாக காவிரிக்காக அடையாளக் கூட்டம் ஒன்று தெருமுனையில் நடத்தத் திட்டமிட்டு காவல்துறை அனுமதி கேட்டபோது "தமிழ்' "தமிழன்' என்றதுமே தீவிரவாதிகள் பட்டியலில் இட்டு கமிஷனர் அலுவலகம் செல்லவேண்டும், ஐ.எஸ். சிறப்பு அனுமதி வாங்க வேண்டும் என்று நாள் முழுக்க அலைய வைத்துவிட்டார்கள்... அனுமதி பெற்று அறிவிப்பும் செய்து கூட்டத்தைத் தொடங்கினால் அருணாசலம் சாலையின் முடிவில் (சாலிகிராமம்) தசரதபுரம் பேருந்து நிறுத்தம் அருகில் இந்தத் தண்ணீர் பிரச்சினை தனக்கல்ல என்றபடி தமிழர்கள் தேநீர்க்கடைகளில் அரட்டை அடித்தபடி நின்றுகொண்டிருந்தார்கள்.
தஞ்சை மாவட்டத்தில் கிணறுகள் செத்துப்போய் மண்மேடாய் மயானமாய் காட்சியளிப்பது இவர்களுக்கு நேரடி பாதிப்பை இன்னும் நிகழ்த்தவில்லை. பாரதிராஜா கலந்துகொண்ட "கல்லணை'க் கூட்டத்தில் நான் பேசுகிறபோது காவிரி யின் அழகை குடந்தையில் படிக்கிறபோது ரசித்ததையும் குளித்ததையும் திருப்பராய்த்துறை அகண்ட காவிரியை கவிதையாய் எழுதியதையும் கல்லணையில் சிறுவயதில் நடந்து காவிரியைக் கடந்ததையும் அனுபவப்பூர்வமாய் உணர்ந்த ஆற்றாமையை வெளிப்படுத்தினேன்.
ஊரின் பச்சைப்புடவைக்கு ஜரிகைத் தலைப்பாய் நெளிந்து வளைகிற கல்லணைக் கால்வாய் என்று மதுக்கூரின் கல்யாண ஓடை வாய்க்காலை என் முதல் கவிதைத் தொகுப்பில்- முன்னுரையின் முதல் வரியாய்த் தொடங்கி இருந்தேன். பாலீதின் பைகளின் குப்பைத் தொட்டியாய் இன்று காட்சியளிக்கிறது.
வரப்புகளின் வழியே குளித்து முடித்து வீடு திரும்பும் கோவணம் கட்டாத சிறுவர்கள், கரங்களையே பல்லக்காக்கிச் சுமந்துபோகிற ராஜவம்சத்துத் தாமரைகளின் தேவ சுகந்தம் என்றும் பிறந்த ஊரைப் பிரியத்துடன் பிரகடனப்படுத்தினேன். பச்சைப்பசேல் வரப்புகளும் தாமரைக்குளமும்... இன்றைய ஊர்ச்சிறுவர்களுக்கு அந்நியமான அவலத்தை எப்படி மாற்றப்போகிறோம்? சாவின் மர்மமுடிச்சு அவிழ்க்கப்படாத நிலையில் சமாதிகட்ட எத்தனை கோடியில் திட்டங்கள்? கடற்கரையில் எவர் சமாதியும் இருக்கக்கூடாது என்று புதிய சட்டம் ஒன்று பொறிக்கப்படவேண்டும். நீர்மேலாண்மைக்கும் அணைக்கட்டுகளுக்கும் செலவு செய்யாமல் நடக்கும் ஆடம்பர அரசு விழாக்கள் தடுத்து நிறுத்தப்பட வேண்டும்.
குடும்பத்திற்கு ஒருவர் மட்டுமாவது மக்களின் அன்றாடப் பிரச்சினைகளுக்காக களத்தில் இறங்கிப் போராடவேண்டும் நான் என்னை அப்படித்தான் உருமாற்றிக் கொண்டிருக்கிறேன். நீ என்ன செய்தாய் நீ சார்ந்த உன் சமுதாயத்திற்கு என்று யாரும் என்னைக் கேள்வி கேட்டுவிடக்கூடாது.
சினிமா மட்டும் வாழ்க்கையல்ல என்பதை மிக ஆழமாக உணர்ந்த நிலை இது. ரஜினி என்கிற எனக்கு உதவிய ஒருவரைக்கூட என்னால் இப்போது விமர்சனம் செய்ய முடிகிறது. தன் படத்தின் முதல் நாள் காட்சியை அவர் முதலில் அரசு நிர்ணயித்த கட்டணத்தில் காட்ட அவர் சார்ந்த அனைவரையும் கட்டுப்படுத்தட்டும். பிறகு நாட்டு மக்களுக்கு கட்டளை இடலாம். கட்டுப்படுத்தலாம்.
மோகன்லாலையும் மம்முட்டியையும் கேரள மக்கள் ஏன் ஆட்சி செய்ய அழைக்கவில்லை? கேரள மக்கள் விவரமானவர்கள். கேவலமான ஓட்டு வியாபாரம் அவர்களிடம் நடக்காது. மூன்றில் ஒரு பங்கு சம்பளத்தை ஆதரவற்ற எளிய மக்களுக்காகச் செலவிடும் இந்தி நடிகர் நானா படேகர் வில்லனாய்க் கூட நடிக்கிறார். ஆனால் உள்ளத்தால் உண்மைக் கதாநாயகன் அல்லவா?
நல்ல ஒழுக்கத்தை, பண்புகளை, பழக்க வழக்கங் களை தன் வாழ்க்கையை உதாரணமாகச் சொல்லி- வாழ வழிமுறைகள், உணவுக்கட்டுப்பாடுகள், பயிற்சி முறைகள் தரும் நடிகர் சிவகுமாரை நாம் அரசியலுக்கு அழைக்கவில்லை. ஏனென்றால அவர் பஞ்ச் டயலாக் சொல்லவில்லை. லோ ஆங்கிள் ஹைஸ்பீடு ஷாட்டில் கால் எடுத்து வைக்கவில்லை. "அகரம்' மூலம் காமராஜர் காட்டிய வழியில் கல்விச்சேவையை மகன்களுடன் செய்வதை- நாம் போற்றிப் பாராட்டி புகழ்பாடவில்லை. ஏனென்றால் "சிவகுமார்' ஆக்ஷன் ஹீரோ இல்லை... பால் அபிஷேகத்திற்கும் பட்டாசுகளுக்கும் அவர் யாரையும் பழக்கப்படுத்த வில்லை.
என் சின்னஞ்சிறு பிராயத்தில் நான் நடிகர் ஜெய்சங்கர் அவர்களைத்தான் மிகப்பெரிய ஹீரோவாக எண்ணி "ராணி' வார இதழில் முகவரி பார்த்து கடிதம் எழுதி புகைப்படம் கேட்டிருக்கிறேன். சென்னை வந்து திரைத்துறைக்கு வந்து அவரை இயக்குகிறபோதுதான் அவரின் கொடை உள்ளம், நட்பு, நற்பண்புகள் பார்த்து- தகுதியான ஒருவரைத்தான் யாரென்று தெரியாத வயதிலே நேசித்திருக்கிறோம் என்று மகிழ்ச்சி அடைந்திருக்கிறேன்.
இன்று இப்போது பயணம் போகிற இடங்களில் எல்லாம் என்னோடு படம் எடுத்துக்கொள்ள எல்லாரும் ஆசைப்படும் இடத்தில் நான் இருப்பது என் நாற்பது ஆண்டு கால திரைத்துறை வாழ்க்கையில் எனக்குக் கிடைத்துள்ள அங்கீகாரத்தின் ஆரம்பம். சமீபத்தில் மும்பை தமிழ் எழுத்தாளர் மன்றம் திருச்சி "நந்தவனம்' சந்திரசேகர் இணைந்து நடத்திய மும்பை- தமிழ்க்கொண்டாட்டத்தில் தமிழ் இலக்கியங்களில் சில துளிகளை உரக்கப்பதிவு செய்துவிட்டு- அதற்கான அளவிட முடியாத பாராட்டுக்களை அள்ளிக் கொண்டபோது- என் தந்தையும் நூலகமும்... காரணம் என்றேன். சிவகுமார் நடிகர் என்பதைவிட நல்ல தந்தை என்பதை மறுக்க முடியாது. என் தந்தை தேசவிடுதலைக்காகப் போராடியது மட்டுமல்ல. நல்ல தந்தையாகவும் இருந்திருக்கிறார். நான் நல்ல மகனாய் மாற இந்த சொல்ல மறக்காத கதை ஒரு சுயசோதனை.
"முதல் பகுதி நிறைவு பெற்றது என்கிற வியப்புடன் சொல்ல மறக்காத கதை' தொடரை நான் நிறைவு செய்யும் நேரமிது. 40 ஆண்டுகால திரையுலக வாழ்க்கையின் நான்கைந்து பக்கங்களை மட்டுமே இப்போது புரட்டி இருக்கிறேன்.
இதை எழுதுகிறபோதுகூட அனுபவங்கள்... பழசானாலும் புதிய சாரல்களை எனக்குள் சில்லென்று தூவிச்சென்றதை நான் உணர்ந்தேன்.
கவிஞர் சென்னிமலை தண்டபாணி, கவிஞர் ஜெயதேவன், எழுத்தாளர் தஞ்சாவூர்க்கவிராயர், பேராசிரியர் இறையரசன் உட்பட பல அறிஞர் பெருமக்களும் வெவ்வேறு இடங்களில் இருந்து பல வாசகர்களும் இந்தத் தொடருக்கு வாழ்த்துரைத் தாலும்... எல்லாப் புகழும் ஆரூர் தமிழ்நாடனுக்கும் எல்லாருக்கும் அண்ணன் நக்கீரன்கோபால் அவர்களுக்கும்தான். 18 அத்தியாயங்களோடு முதல் பகுதியை நிறைவு செய்துவிட்டு சற்று இடைவேளையிட்டு இரண்டாம் பகுதியைத் தொடங்குவேன்... இன்னும் இருக்கிறது.
என்றாலும் முதல்பகுதி நிறைவு பெற்றது.