காவிய நாயகருக்காக உதிரும் கண்ணீர் மலர்கள்! ஆரூர் தமிழ்நாடன்
2018-ன் ஜூலை 7-ந் தேதி, காலக் கணக்கிலிருந்து தொலைந்து போயிருக்கலாம். அந்த நாள், தமிழர்களின் நெஞ்சத்தில் வாளாய்ப் புகுந்து வடியாத துயரத்தைத் தந்துவிட்டுப் போயிருக்கிறது.
தமிழகம், மிகப்பெரிய இழப்பைச் சந்தித்திருக்கிறது. தன்னை உயர்த்திய ஒரு மானுடத் தலைவனை அது காலப்பேராற்றில் கைநழுவவிட்டிருக்கிறது. தமிழக வரலாற்றில் ஏறத்தாழ ஒரு நூறாண்டு காலம் பின்னிப் பிணைந்திருந்த ஒரு மாபெரும் தலைவனை, அது கருணையற்ற காலதேவனிடம் பறிகொடுத்துவிட்டுப் பரிதவிக்கிறது.
இயற்கையின் விடுபடமுடியாத விசித்திரம் மரணம் என்று தெரிந்தாலும், அது கலைஞரைக் கொள்ளையடித்துச் சென்றதை சிந்தனையால்கூட செரிக்கமுடியவில்லை.
கலைஞரைத் தொலைதூர நட்சத்திரமாக, நான் எட்டத்தில் இருந்தும் தரிசித்திருக்கிறேன். நிலவைத் தீண்டிய ஆம்ஸ்ட்ராங்கைப் போல் அவர் அருகில் இருந்தும் அவரது அசைவுகளைக் கண்கள் விரிய ரசித்திருக்கிறேன். அவரைப் போன்ற ஒரு தலைவரை, எங்கேயும் காணமுடியாது.
திராவிட இயக்கத்தின் விலைமதிப்பற்ற பெட்டக மாகத் திகழ்ந்தவர் கலைஞர். அதனால்தான், அவரது மறைவைக் கண்டு அரசியல் வல்லுநர்கள் கலங்கி நிற்கிறார்கள். அவரது அரசியல் எதிரிகளே, அவர் இன்னும் கொஞ்சகாலம் இருந்திருக்கக் கூடாதா என்று கண் கலங்குகிறார்கள். அவர் மீது உயிரையே வைத்திருக்கும் இயக்கத் தொண்டர்களோ, எங்கள் தலைவனே... எழுந்துவா’ என்று, இன்னும் தேம்பிக் கொண்டிருக்கிறார்கள். அவரை வைத்து அரசியல் லாபம் பார்த்தவர்கள்கூட, அவர்தான் தமிழர்களுக்கான லாபம் என்று கண்டுணர்ந்து அழுகிறார்கள்.
இலக்கியவாதிகளோ ஈர விழிகளோடு...
"எங்கள் உலகம் இருண்டுவிட்டது. எங்கள் சூரியன் அணைந்துவிட்டது. எங்கள் நிலா தொலைந்துவிட்டது. எங்கள் வானம் கரைந்துவிட்டது. எங்கள் இமயம் உடைந்துவிட்டது. எங்கள் கடல் வற்றிவிட்டது
எங்கள் தலைவன் எங்களை விட்டுச் சென்று விட்டான். எங்கள் தமிழன்னை அனாதையாகி அழுது கொண்டிருக்கிறாள்'’ என்றெல்லாம் கற்பனை வீணை யைக் கையிலே ஏந்தியபடி இரங்கலை இசைத்தபடி தேம்புகிறார்கள்.
சாக்ரட்டீசைப் போல் சிந்திக்கக் கூடியவராக, மார்க்சைப் போல் ஏழைகளுக்கு இரங்கக் கூடியவரா கத் திகழ்ந்தவர் கலைஞர். ஷெல்லி, கிப்ரான், மில்டன், கீட்ஸைப் போல் உலகக் கவிஞர்களின் வரிசையில் உளவலம் வந்தவர் கலைஞர். சேக்ஸ்பியரைப் போல், நாடகத்திறன் வாய்க்கப்பெற்றவர். சேக்ஸ்பியர், மனிதனின் குணநலன்களை நாடகப் பாத்திரங்கள் மூலம் உணர்த்தினார். கலைஞரோ, சமூக சீர்திருத்தச் சிந்தனைகளை இயங்களில் விதைத்தார். புராண, இதிகாச காப்பியங்கள் கூட கலைஞரின் கைவண்ணத் தில் தம் கூனலை நிமிர்த்திக்கொண்டன. மாப்பசான், ஓ ஹென்றியைப் போல் சிறந்த சிறுகதைகளை எழுதிக்குவித்தவர் கலைஞர். சங்கக் கடலில் மூச்சுத் திணறாமல் மூழ்கி முத்தெடுத்தவர் அவர்.
ஐம்பது ஆண்டுகாலம், திராவிட இயக்கமான தி.மு.க.விற்குத் தலைமை தாங்கியவர். 13 முறை சட்டமன்றத் தேர்தல்களைச் சந்தித்து, அத்தனையிலும் கரையேறிக் காட்டியவர். 60 ஆண்டுகாலம் சட்டப்பேரவை உறுப்பினராகப் பணியாற்றியவர். ஐந்துமுறை தமிழக முதல்வராக ஆகி, 19 ஆண்டுகாலம் ஆட்சி பீடத்திலே அமர்ந்து, அதிசயங்கள் பலவற்றை நிகழ்த்தியவர். தமிழகத்தைத் தன் ஆளுமைக் கைகளால் அலங்கரித்தவர். சமூக நீதிக்காக மட்டுமல்லாது மாநில உரிமைக்காகவும் வாள் சுழற்றியவர். இப்படி எண்ணற்ற பரிமாணம்கொண்ட கலைஞரைக் கண்டு, எதிரிகளே பயந்தும் வியந்தும் வாழ்ந்தார்கள் என்பதுதான் கலைஞருக்கான பெருமையாகும்.
பெண்களுக்கு சொத்துரிமை வேண்டும் என்று 1929-லேயே சுயமரியாதை இயக்க மாநாட்டில் தந்தை பெரியார் தீர்மானம் போட்டார். 34-ல் காஞ்சியிலே நடந்த பெண்கள் மாநாடும் இதை வலியுறுத்தியது. இத்தனை ஆண்டுகாலக் கோரிக்கையை 89-ல் சட்டமாக்கிப் பெண்களை நிமிரவைத்தவர் கலைஞர். கோயிலுக்குள் இருந்துதான் சாதிகள் வெளியே வந்தன. கலைஞரோ, அனைத்துச் சாதியினரும் அர்ச்சகராகலாம் என்று சாதி மறுப்பைக் கோயிலுக்குள் அனுப்பிவைத்தார்.
அரசுப் பணி என்பதே ஆரியர்களுக்கானது என்று அவாள் எழுதிவைத்த தலைவிதியை மாற்றி, பாதுகாப்பான 69 சத இட ஒதுக்கீட்டுக்கு வழிவகுத்து, "அவாள்'களின் தலைவிதியையும் "இவாள்'களை விட்டு எழுதவைத்த புரட்சியாளர் கலைஞர்.
50-ல் இருந்து பாடப்பட்டுவரும் தேசிய கீதமான தாகூரின் "ஜன கண மன'விற்கு இணையாக மனோன்மணியம் சுந்தரனார் எழுதிய ’"நீராரும் கடலுடுத்த'’ பாடலை டி.எம்.எஸ், பி.சுசீலாவைக் கொண்டு மெல்லிசை மன்னர்’ எம்.எஸ்.விஸ்வநாதன் இசையில் பாடவைத்து, அதை 70-லேயே தமிழ்த்தாய் வாழ்த்தாகப் பிரகடனம் செய்த, மாமேதை அவர். பிரதமர், குடியரசுத் தலைவர் உள்ளிட்ட தேசியத் தலைவர்களையும் தமிழ்த்தாய் வாழ்த்திற்கு எழுந்து நிற்கவைத்த சுயமரியாதைமிக்க இலக்கியச் சுடர் அவர்.
தமிழுக்குச் செம்மொழித் தகுதி, செம்மொழி மாநாடு, செம்மொழிப் பாடல் என்றெல்லாம் அவர் நிகழ்த்திய ஆக்கங்கள், தமிழின் பேரழகை உலகறியச் செய்தன.
கலைஞர் தனக்குள் இருக்கும் கலைஞனை எப்போது அடையாளம் கண்டார்? இந்தக் கேள்வியை 2013-ல் ’இனிய உதயம்’பேட்டிக்காக அவரைச் சந்தித்தபோது அவரிடம் நானும் கவிக்கோ அப்துல்ரகுமானும் வைத்தோம். கலைஞரோ, ’1938-ல் இந்தி எதிர்ப்புப் போர் தீவிரமாக இருந்தபோது, மாலை நேரத்தில் மாணவர்களை அழைத்துக்கொண்டு தமிழ்க்கொடியோடு ஊர்வலமாக வருவேன். அப்போது, "வாருங்கள் எல்லோரும் போருக்குச் சென்றிடுவோம்! வந்திருக்கும் இந்திப் பேயை விரட்டித் திரும்பிடுவோம்'’என்ற வரிகளை நானாகப் பாட்டின் பல்லவியாக்கிக் கொண்டு பாடினேன். அதுதான் என் படைப்பு’ என்று பெருமிதமாகக் குறிப்பிட்டார். இந்தி எதிர்ப்புக் களத்தில்தான் அவர் ஒரு போராளிக் கவிஞனாக முதன்முதலில் தன் எழுதுகோலை எடுத்திருக்கிறார் என்பது பிரியத்திற்குரிய பிரமிப்பு. அன்று எடுத்த எழுதுகோலை, அவர் நோய்வாய்ப்படும் வரை மூடி வைக்கவே இல்லை.
அவருக்குள் இருந்த வீரியமிக்க பேச்சாளர் எப்போது வெளிப்பட்டார்? அதுவும் 1939-ல் அவர் எட்டாம் வகுப்பு படித்தபோதுதான் நிகழ்ந்தது. பேச்சுப் போட்டியில் பங்கேற்று ’"நட்பு' என்ற தலைப்பில் கலைஞர் பேசினார்.
அதுதான் அவர் ஆற்றிய முதல் சொற்பொழிவு.
அன்று அவரது வாயில் குடிபுகுந்த செந்தமிழ் அன்னை, அவரது நாவிலேயே தனது அழகிய அரண்மனையை அமைத்துக்கொண்டாள். வேண்டும்போதெல்லாம் அவர் விரலிலும் நின்று நடனமாடினாள்.
42-ல் அண்ணா நடத்திய திராவிடநாடு இதழில் இளமைப்பலி’என்னும் கட்டுரை, அவரை அண்ணா விடம் அறிமுகம் செய்தது. அதே 42 ஆகஸ்ட்டில் "முரசொலி' பத்திரிகையை ஆர்வமாய் ஆரம்பித்தார். அந்த வயதிலேயே ’பழனியப்பன்’ என்ற பகுத்தறிவு மணக்கும் நாடகத்தை எழுதி 28.5.1944-ல் திருவாரூர் பேபி டாக்கீஸில் ஆசையோடு அரங்கேற்றினார் கலைஞர். அது பெரியாரை அறிமுகப்படுத்தியது. இதயம் மகிழ்ந்த பெரியார், கலைஞரை ஈரோட்டுக்கு அழைத்தார். அங்கே "குடியரசு' பத்திரிகையில் பணியாற்றிய கலைஞர், அங்கிருந்து கோவை ஜூபிடர் தியேட்டர்சில், காலை வைத்தார். அங்கே அவரது எழுதுகோல் தன் கைத்திறனைக் காட்டத் தொடங்கியது. அபிமன்யூ, ராஜகுமாரி, மருதநாட்டு இளவரசி போன்ற திரைப்படங்களில், தீப்பொறித் தமிழால், தன் திருவிழாவைத் தொடங்கினார். தமிழ், கலைஞரால் ஒரு புதிய தமிழைக் கண்டுபிடித்தது.
’"மிருக ஜாதியில் புலி மானைக் கொல்லுகிறது. மனித ஜாதியில் மான் புலியைக் கொல்லுகிறது'- என்று ‘மருதநாட்டு இளவரசியில் கலைஞரின் எழுதுகோல் மகுடி வாசித்தது. 52-ல் பராசக்திக்காக, ‘"கோவிலிலே குழப்பம் விளைவித்தேன். கோவில் கூடாது என்பதற்காக அல்ல. கோவில் கொடியவரின் கூடாரமாய் இருக்கக் கூடாது என்பதற்காக. பூசாரியைத் தாக்கினேன். அவன் பக்தன் என்பதற்காக அல்ல. பக்தி பகல் வேசமாகிவிட்டதைக் கண்டிப்பதற்காக'’-என்றெல்லாம் அவரது வசனம், மூட நம்பிக்கைக்கு எதிரான போரை மூர்க்கமாய் நடத்தியது. இதுபோன்ற கலைஞரின் வசனங்கள் பட்டிதொட்டி எங்கும் தீப்பிடிக்க வைத்தன. அந்தத் தீயில் அங்கங்கே பெரியார் பிரகாசித்தார். அந்தப் படத்தில் கலைஞர் எழுதிய வசனம், சிவாஜி என்ற மகா கலைஞனையும் தமிழுக்கு ஆரவாரமாக அடையாளப்படுத்தியது.
"பூம்புகார்' படத்தில் கலைஞரின் பேனா ’மனச் சாட்சி உறங்கும்போது மனக்குரங்கு ஊர் சுற்றக் கிளம்பிவிடுகிறது’ என்று வித்தக மொழியில் தத்துவம் பேசியது. கலைஞர் திரைப்படங்களில் தீட்டிய காட்சிகளே, பாமர மக்களுக்கு கட்சியின் கொள்கைகளை வகுப்பெடுத்தன. தமிழ்த்திரையுலகில் 40 படங்களுக்கு மேல் வசனம் எழுதி, அதன் மூலம் மறக்க முடியாவண்ணம் மறுமலர்ச்சியை உண்டாக்கினார் கலைஞர். அது தி.மு.க.வுக்கும் அரண் சேர்த்தது.
நமஸ்காரம், நாதா, ப்ரிய சகி, ஸ்வாமி என்றெல் லாம் செத்துப்போன வசனங்களைக் கேட்டுக் கேட்டு மரத்துப்போயிருந்த பாமர மக்களின் காதுகளுக்கும், இலக்கிய ருசியை உண்டாக்கியது.
தூக்குமேடை, மணிமகுடம், ஒரே ரத்தம், காகிதப்பூ,
சாக்ரட்டீஸ், அனார்கலி, சாம்ராட் அசோகன்,
சேரன் செங்குட்டுவன் என ஏறத்தாழ 20 நாடகங்களை எழுதியிருக்கிறார் கலைஞர். இவை எல்லாமே உரையாடல் உற்சவங்களை இன்னும்கூட நடத்திக்கொண்டிருக்கின்றன. இவரது "தூக்குமேடை' நாடகத்தைப் பார்த்து உற்சாகமான நடிகவேள் எம்.ஆர்.ராதாதான், திருவாளர் மு.க.வைக் கலைஞராக்கினார்.
காதல் ரசம் சொட்டிய அவரது சிறுகதைகள், அந்த இனிப்புத் தேனோடு சமூக சீர்திருத்தத்தைக் கலந்து அணுகுண்டுக் குரலில் வெடிப்புறப் பேசின.
பொன்னர் சங்கர், ரோமாபுரிப் பாண்டியன், தென்பாண்டிச் சிங்கம், பாயும்புலி பண்டாரக வன்னியன், தாய் என அவர் எழுதிய புதினங்கள், தமிழிலக்கியத்துக்குப் புதுப்புது வண்ணங்களை வசீகரமாய்ச் சேர்த்தன.
தன் வாழ்க்கையில், தான் சந்தித்த அனைத்து விதமான அனுபவங்களையும், தனது ‘ "நெஞ்சுக்கு நீதி'யில் ஆறு பாகமாக எழுதி, இடைச்செருகலுக்கும் உயர்வு நவிற்சிக்கும் வேலையின்றித் தன் வரலாற்றைத் தானே வரலாற்றில் பதிவுசெய்திருக்கிறார் கலைஞர். திருக்குறளுக்கு அவர் தீட்டிய கற்பனை வண்ணங்கள் குறளோவியமாய்' இலக்கியச் சுவர்களில் முக்கால மகிமையுடன் ஒளிர்கின்றன. பண்டிதர்களின் பழந்தமிழுக்குள் சிக்கிக்கொண்டிருந்த தமிழின் ஆதி இலக்கண நூலான தொல்காப்பியத்தை, எளிய நடையில் முற்போக்கு சேர்மானங்களைச் சேர்த்து மக்களிடம் கொண்டுவந்த பெருமையும் கலைஞருக்கே உண்டு. ஏறத்தாழ 200 புத்தகங்களை எழுதி, தமிழின் உயரத்தை உயர்த்தியவர் கலைஞர்.
சொற்களால் கவிதை எழுதிய கலைஞர், வள்ளுவர் கோட்டம், புனரமைக்கப்பட்ட பூம்புகார், குமரியில் வானளாவ நிற்கும் வள்ளுவர் சிலை என கற்களாலும் காவியம் படைத்தார்.
நான்கு அறைகளுக்குள் புலவர் பெருமக்களால் நடத்தப்பட்டு வந்த கவியரங்குகளை, லட்சக்கணக்கான மக்கள் நடுவே அழைத்துவந்து, தமிழ்க் கவிதை வெளியின் பரப்பை, ஆகாயத்தைப்போல அகலமாக்கியவர் கலைஞர்தான்.
மக்களுக்குப் புரியவேண்டும் என்று தனது தமிழைக் கீழே இறக்காமல், மக்களின் செவிகளையும் கண்களையும் மனதையும் மெல்ல மெல்ல இலக்கிய உயரங்களை நோக்கி மேலே ஏறிவரச் செய்தவர் கலைஞர். அதனால்தான் அவர் தமிழ் மக்களின் இதய சிம்மாசனத்தில் உயரமாய் உட்கார்ந்திருக்கிறார்.
தமிழகத் தலைவர்களில் அதிக காலம் மக்களுக்காக உழைத்துத் தேய்ந்தவர் தந்தை பெரியார். அவர் இங்கே வாழ்ந்தது 94 ஆண்டு, 3 மாதம் 7 நாட்கள். அவர் வழியில் வந்த கலைஞர், எந்தக் காரணத்துக் காகவும் தந்தை பெரியாரைத் தான் விஞ்சிவிடக்கூடாது என்று 94 ஆண்டு, 2 மாதம் 4 நாட்கள் இங்கே வாழ்ந்திருக்கிறார்.
காவேரி மருத்துவமனையில் கலைஞர் உயிருக்குப் போராடுகிறார் என்று ஊடகங்கள் அறிவித்தன. ஆனால் உண்மையில் மரணத்தோடு கலைஞருக்காகப் போராடியவர்கள், மருத்துவமனை வாசலிலேயே உண்ணாமல் உறங்காமல், "எழுந்துவா தலைவா' என்று கோஷம் எழுப்பியபடியே இருந்த அவரது உயிரினினும் இனிய உடன்பிறப்புகள்தான்.
கலைஞர் மரணித்துவிட்டார் என்ற இருட்டுத் தகவலைக் கேட்டு மன ரீதியாக இறந்தவர்கள் பலர்.
கருணையற்ற காலதேவனைக் கல்லறையில் புதையுங்கள்!
மமதைகொண்ட மரணத்தை மண்ணோடு மண்ணாய் நசுக்கிப் புதையுங்கள். எங்கள் சூரியனை ஊதியணைத்த உதடுகளைத் தேடிப் பிடித்துத் தீவைத்துக் கொளுத்துங்கள்! எங்கள் ஆசைக்குரிய ஆண் தமிழை அமைதியாக்கிப் படுக்கவைத்த இயற்கையின் இதயத்தை ஏதாவது செய்யுங்கள்!
என்ன செய்து என்ன பயன்?
திரும்பிவருவானா எங்கள் தலைவன்?’ என என் போன்றோரின் இலக்கிய இதயங்கள் கதறிப் புலம்புகின்றன. . இதோ, மரணித்த பின்னும் போராட்டம் நடத்தி, அண்ணாவின் அருகே இடம்பிடித்து உறங்குகிறார் கலைஞர்.
மெரினாவில் இருக்கும் அவருடைய கல்லறைக்கு அன்றாடம் படையெடுத்துச் சென்று, அவருக்குக் கண்ணீர் மலர்களை உதிர்த்துக்கொண்டே இருக்கிறார்கள் அவரது உடன்பிறப்புகள்.
கலைஞரையும் அவர்களையும் மரணத்தாலும் பிரிக்க முடியாது என்பதைப் புரிந்துகொண்ட வங்கக் கடலின் கண்ணீர் அலைகள்...
திருக்குவளைச் சூரியனே எங்கே போனாய்?
திசையளந்த தமிழ்முனியே எங்கே போனாய்?
கருக்கலென வந்தவனே எங்கே போனாய்?
கனவுகளின் நாயகனே எங்கே போனாய்?
என்றபடி கதறி அழுகின்றன. அதன் அழுகை,
காலவெளி நெடுக ஒலித்துக்கொண்டே இருக்கும்.