நாவல்களை வாசிப்பது அற்புதமானதொரு செயல். அது வாசகருக்கு மனதை ஒருமுகப்படுத்துகின்றதும் ஆர்வமூட்டுகின்றதுமான இருவேறு அனுபவங்களை ஒருசேர வழங்கிடும் ஆற்றலைக் கொண்டிருக்கிறது. ஆனால் வாசித்திடும் எல்லா நாவல்களிலும் இவ்வகையான அனுபவம் ஒரு வாசகருக்குக் கிட்டும் என்று சொல்வதற்கில்லை.

periyavan

எடுத்துக்கொண்ட விடயத்தை நுனிப்புல் மேய்வது, மேலோட்டமாகவும் தட்டையாகவும் பார்ப்பது, காலத்தை வீணடிக்கும் நோக்கங்களைக் கொண்டது மட்டுமின்றி, எழுத்துசார்ந்த உத்திமுறைகளை நம்பி எழுதப்பட்டது மற்றும் மோசமாக மொழிபெயர்க்கப்பட்டது போன்ற நாவல்கள் வாசிப்பவரை ஏமாற்றம் கொள்ளச்செய்து விரட்டியடித்துவிடும் வல்லமை கொண்டவை.

நாவல்களை எழுதிடும் முறையிலும், முன்வைத்திடும் கருத்திலும் காலந்தோறும் மாற்றங்கள் நிகழ்ந்துவந்துள்ளன. தமிழில் மாயூரம் வேதநாயகம்பிள்ளை அவர்களால் 1879-ல் எழுதப் பட்ட முதல் நாவலான ’பிரதாபமுதலியார் சரித்திரம்’ மரபுசார்ந்த அறநெறிக் கருத்துகளை வலியுறுத்தி போதிக்கின்ற நோக்கில் எழுதப்பட்ட ஒன்றாகும்.

Advertisment

அவரைத் தொடர்ந்து தமிழில் நாவல்களை எழுதவந்த பி.ஆர்.ராஜம் ஐயர், அ.மாதவையா, ஆரணி குப்புசாமி முதலியார், கல்கி போன்றோரும் ’படிப்பவர் மனதைக் கவர்ந்து மகிழ்வூட்டலை முதற்கருத்தாகவும், அத்துடன் நல்லறிவூட்டலை உட்கருத்தாகவும் கொண்டவை’ நாவல்கள் என்றே நம்பி எழுதினர். இந்தக் கருத்து இன்றளவும்கூட எழுதுகின்றவரிடையே தொடரத்தான் செய்கிறது! ஆனால் இக்கருத்து காலப்போக்கில் பெருமளவு மாற்றமடைந்து தொண்ணூறுகளின் நடுப்பகுதியிலேயே ஆர். சண்முக சுந்தரம், சங்கர்ராம், க.நா.சுப்ரமணியம் போன்றோரால் வாழ்வனுப வம் சார்ந்த இயல்புச்சித்திரத்துடன் கூடிய அருமையான நாவல்கள் தமிழில் எழுதப்பட்டன.

நாவல் வாசிப்பு

நாவலை வாசிக்கிறபோதுதான் வாசிப்பின் முழுச் சுவையும் கிடைக்கிறது. இது என் அனுபவம். பலருடைய அனுபவமும்கூட இதுவாகவே இருக்கும். ஒரு நல்ல நாவலைப் படித்துமுடிக்கிற ஒவ்வொரு முறையும் இன்னொரு புது வாழ்க்கையை வாழ்ந்து முடித்த உணர்வு ஏற்படுகிறது. வேறொரு நிலப்பரப்பில், வேறொரு வாழ்க்கையில், வேறோர் அனுபவத்தில், வேறொரு மொழியில், வேறொரு பண்பாட்டில் வாழ்ந்த அனுபவம். இது அலாதியானது. விவரிக்கமுடியாதது. இலட்சியவாதம் அல்லது அறக்கருத்து ஒன்றுக்காக திட்டமிட்டு கட்டி எழுதப்படும் நாவல்களில் இந்த அனுபவங்கள் நிச்சயம் கிடைப்பதில்லை.

Advertisment

விரிந்த தளத்தில் எழுதப்படும் வாழ் வின் பேருண்மையே நாவல் என்பேன் நான். தேர்ந்துகொண்ட காலத்தை இயல் பான தன்மையில் மீட்டுருவாக்கம் செய்வதோடு மட்டுமின்றி அசலான மானுட அனுபவங்களை புதுப்பிப்பதும், அவற்றின் வழியே உன்னதமான கருத்துக் களை கண்டடையச் செய்வதுமே சிறந்த நாவலாக இருக்கமுடியும். மனித வாழ்க்கை யின் சுவடுகளை, அவர்தம் நம்பிக்கை களை, பண்பாட்டை, மொழியை, சிந்தனையை, எண்ணப்போக்கை காலஓட்டத்தில் நீந்திக் கடந்துவந்து வாசகருக்கு முழுமையாக கையளிப்பதே ஒரு நாவல் செய்திடும் மிகச்சிறந்த வேலை.

அந்த வகையில் ஒரு சிறந்த நாவல் காலத்தின் நினைவுப்பேழையாக விளங்குகிறது.

இரண்டு ரஷ்ய நாவல்கள்

dd

அண்மையில் தமிழ் மொழிபெயர்ப்பில் வாசித்த இரண்டு ரஷ்ய நாவல்கள் மேற் சொன்ன அனுபவத்தை முழுமையாக வழங்கின. ஒன்று, மண்கட்டியைக் காற்று அடித்துப்போகாது (1967) என்கிற, பாசு அலீயெவா என்பவரால் எழுதப்பட்ட நாவல். இதை தமிழில் மொழியாக்கம் செய்தவர் பூ. சோமசுந்தரம். மற்றொன்று நவீன ரஷ்ய இலக்கியத்தின் தந்தை என்று கருதப்படும் அலெக்சாந்தர் பூஷ்கின் அவர்களால் எழுதப்பட்ட காப்டன் மகள் (1836). இந்நாவலை தமிழில் மொழியாக்கம் செய்தவர் நா.தர்மராஜன். இவ்விரண்டு நாவல்களுமே மறுவாசிப்பிலும் சிறந்த வாசிப்பு அனுபவத்தை கொடுத்தன.

எழுபதுகளில் மாஸ்கோ முன்னேற்றப் பதிப்பகத் தால் வெளியிடப்பட்ட மண்கட்டியைக் காற்று அடித் துப்போகாது நாவல் என் நினைவுகளில் ஏதோ ஒருவகையில் தொடர்ந்துவருகின்ற ஒன்றாக இருக்கிறது. அதற்கு முக்கியமான காரணம் ஆண் எழுத்தாளர்கள் நிறைந்ததாகவே இருக்கும் ரஷ்ய இலக்கிய அறிமுகத்தில் இடம்பெறும் பெண் படைப்பாளி யாக பாசு அலீயெவா இருப்பதுதான். இதேவகையில் இன்னொருவர் கவிஞர் அன்னா அக்மதோவா. பாஸூ அலீயெவா, ரஷ்யாவின் தென்மேற்குப் பகுதியில் உள்ள தாகிஸ்தான் குடியரசை சேர்ந்தவர். காஸ்பியன் கடலுக்கு அருகிலுள்ள மலைநாடு தாகிஸ்தான். சுலக், சமூர், குரக் என்கிற எப்போதும் ஆர்ப்பரித்து ஓடும் காட்டாறுகளைக்கொண்ட அழகிய நாடு.

பாஸூ அலீயெவா, அங்கிருக்கும் ஆவார்மொழி பேசும் இனக்குழுவைச் சேர்ந்தவர். தாகிஸ்தானில் முப்பதுக்கும் மேற்பட்ட பூர்வீகக் குடிகளும், பல தேசிய இனங்களும் வாழ்கிறார்கள். இவர்களில் ஆவார்மொழி பேசுகின்றவர்களே பெரும்பான்மையினர். மலை நாட்டவர் (ஙர்ன்ய்ற்ஹண்ய்ங்ங்ழ்ள்) என்ற பொருள்தரும் ஆவார் மொழியைப்பற்றி நினைக்கும்போது அம்மொழியின் மாபெரும் கவிஞனான ரசூல்கம்சதேவ் நினைவுக்கு வருவார்.

1932-ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் ஐந்தாம்நாள் பிறந்த பாஸூஅலீயெவா 2017-ஆம் ஆண்டு ஜனவரி முதல் நாளன்று இறந்தார். கவிஞராகவும், நாவலாசிரியராகவும், நாடக ஆசிரியராகவும் அறியப் பட்ட அலீயெவா ரஷ்ய நாட்டின் பல உயரிய விருது களைப் பெற்றவர். மனித உரிமை செயற்பாட்டாளர்.

இந்த நாவலின் பெயரே என்னை முதலில் கவர்ந்தது. அதுவும் சற்றே நீளமான பெயர். அதுமட்டுமின்றி ஆவாரிய மனிதர்களின் அற்புதமானதொரு மொழிமரபில் உருவான பழமொழியை தலைப்பாகக்கொண்டிருந்தது. ஒற்றை வார்த்தையில் நாவலுக்கு பெயர் வைப்பதுதான் பொதுவான தமிழ் வழக்கம். பின்தொடரும் நிழலின் குரல், லண்டனில் சிலுவைராஜ், உண்மைக்கு முன்னும்பின்னும், மீசை என்பது வெறும் மயிர், யாம் சில அரிசிவேண்டினோம் போன்ற சில தமிழ்நாவல்களின் நீண்ட தலைப்புகளெல்லாம் வெகுசில விதி விலக்குகள்.

தொண்ணூறுகளின் இறுதியில் எழுத்தாளர் யூமாவாசுகியோடு தமிழினி பதிப்பகத்தின் அலுவலகத் தில் பேசிக்கொண்டிருக்கையில் இந்நாவல் குறித்து பேசியதாக நினைவு. ஒரு நூல் வெளியீட்டு விழாவுக்கு ஈரோடு போயிருந்தபோது சா.தேவதாஸ் இந்நாவல் குறித்து என்னுடன் உரையாடியதும் நினைவிருக்கிறது. ஒரு மொழியின் அசலான படைப்பு என்று சொன்னால் அது இந்த நாவலைப்போன்று இருக்கவேண்டுமென தேவதாஸ் சொன்னார். எனக்குப் பிடித்தமான வீடில்லாப் புத்தகங்கள் நூலில் எஸ்.ராமகிருஷ்ணன் இந்த நாவலைப் பற்றி எழுதியிருக்கிறார்.

மண்கட்டியைக் காற்று அடித்துப்போகாது மண்கட்டியைக் காற்று அடித்துப்போகாது நாவல், ரஷ்ய தாஜெஸ்தானில் இஸ்லாமிய மக்கள் வாழும் ஒரு மலைகிராமத்தில் நடக்கிற சம்பவங்களை உயிரோட்டமாக விவரிக்கின்ற மிகமிக எளிய கதை யைக் கொண்டது. ஆனால் அதன் சிறப்பும் தனித் தன்மையும்கூட அதுதான்! போதனை செய்திடும் தொனியில், பிதற்றும் பாவனையில் ஆழ்ந்த தத்துவதரிசனங்கள் எதையும் அந்நாவல் முன்வைக்க வில்லை. ஆனால் ஊனும் நிணமுமான ஒரு கூட்டுவாழ்க்கையை நம் முன்னால் விரிக்கிறது. அந்தக் கூட்டுவாழ்க்கையிலிருந்து தேர்ந்த வாசகர் ஒருவர் பல்வேறு தத்துவங்களை உருவாக்கிக்கொள்ளவோ, புரிந்துகொள்ளவோ, தரிசிக்கவோ முடியும்.

பரீஹான் கிராமத்தின் மிக அழகிய பெண்.

அவளுக்கும் உறவுக்கார இளைஞன் ஜமாலுக்கும் பரிசம் போடுகிறார்கள். பரீஹானோ அகமதுவை விரும்புகிறாள். ஜமால் பணக்காரன். பரீஹானை தன் மனைவியாக்கிக்கொள்ள என்னென்னவோ செய்கிறான். பரீஹானை மணம் செய்துகொள்ள முடியாது என்று நினைக்கும் ஏழை அகமது பொறுப் பில்லாத தனது தந்தையைப் பிரிந்து ஊரைவிட்டுச் சென்று ராணுவத்தில் சேர்ந்துவிடுகிறான். சிறிது காலத்துக்குப்பின் உரம்கொண்ட இளைஞனாக ராணுவத்திலிருந்து திரும்பும் அகமது தன் அதிகாரி யின் உதவியோடு காதலி பரீஹானின் கைப்பிடிக்கி றான். ஊரிலேயே தங்கி கூட்டுப்பண்ணையின் தலைமைப்பொறுப்பையும் ஏற்றுக்கொள்கிறான்.

தீராப்பகை கொள்ளும் ஜமால் பல இடையூறு களைச் செய்து அகமதுவைக் கொல்கிறான். பரீஹானை தன் பிடியில் வைத்துக்கொள்ள முயல் கிறான். ஆனால் ஜமாலின் முடிவு கொடூரமாக இருக்கிறது. பெண்பித்தனான அவன் ஒரு பெண்ணால் கொல்லப்படுகிறான். அவன் குடும்பம் ஊராரால் வெறுக்கப்பட்டு சிதைகிறது. ஜமாலின் கொலைப்பழி பரீஹான்மீது விழுகிறது. பின்பு அவள் நிரபராதி என விடுதலையாகிறாள். தன் பிள்ளைகளை வளர்க்கிறாள். அவர்களை மாஸ்கோவரைக்கும் அனுப்பி படிக்கவைத்து ஆளாக்குகிறாள்.

நாவல் பரீஹானின் மகளும், மாஸ்கோ சென்று வேளாண்மைப் பாடத்தைப் படிப்பவளுமான பாத்திமாவின் பார்வையில் விவரிக்கப்படுகிறது. உண்மையில் நாவலில் வரும் பாத்திமாதான் பாஸூ அலீயெவா. இது ஒரு தன்வரலாற்று நாவல். இந்த நாவலில் பிரதான பாத்திரமாக உமர்தாதா என்பவர் வருகிறார்.

அவர் இந்நாவலின் பெரும் ஆகிருதி.

அவர் வாயைத்திறந்தாலே பழமொழிகளும், சொலவடை களும் கொட்டுகின்றன. விவசாயம் சார்ந்த எண்ணற்ற பழமொழிகள்.

‘உழவன்மேல் மண்ணை எறியுங்கள், இல்லாவிட்டால் தானியம் உரியநேரத்தில் முதிராது’

’முதிர்ந்த எருது கலப்பையை இழுத்தால்; பதியும்

ஆழச்சால் அதன்பின்னே’

‘காளைகள் வேகமாக ஓடாவிட்டால் கதிர்கள் அடர்த்தியாக இரா’

‘ஊற்றை மண்ணால் அடைக்கமுடியாது’

‘கிளைகளின் அழகுக்கும்; வேர்களே ஆதாரம்’

மண்கட்டியைக் காற்று அடித்துப்போகாது என்பது உமர்தாதா சொல்லும் பழமொழிதான்! விவசாயம், காலநிலை, வாழ்க்கை விவகாரங்கள், ஊர்வழக்கம், உலகவிவகாரம் என்று அவர் அனுபவச் சுரங்கமாக விளங்குகிறார்.

எளிய மனிதர்களான அந்த மலைகிராமத்து மக்கள் விவசாயம்செய்கிறார்கள். கூட்டுப்பண்ணையில் உழைக்கிறார்கள். ஆடுமாடுகளை மேய்க்கிறார்கள்.

ஒருவருக்கு ஒருவர் உதவிசெய்து கொள்கிறர்கள்.

காதலிக்கிறார்கள். திருமண விருந்துகளில் நடனமாடிக் களிக்கிறர்கள். போர் எனும்போது பிள்ளை களை நாட்டுக்காக அனுப்புகிறார்கள். எந்தக் கடினச்சூழலையும் உறுதியோடும் திடமனதோடும் கடந்துபோகிறார்கள். அவர்கள் மத்தியில் நிலவும் இயங்குசக்தி அன்பு ஒன்றுதான்.

இதுபோன்றதொரு நாவல் தமிழில் ஏன் எழுதப் படவில்லை என்ற எண்ணத்தை வாசிக்கிறபோது இது உருவாக்கியது. விவசாயம் செழித்த தஞ்சை மண்ணிலிருந்தே அருமையானதொரு விவசாயநாவல் உருவாகியிருக்கவேண்டும். ஆனால் அங்கு உருவானதெல்லாம் காதலையும் காமத்தையும் சொல்லும் நாவல்களே. மிகச்சொற்பமாகவே வேளாண்குடிகளின் பாடுகளைச் சொல்லும் நாவல்கள் அங்கிருந்து எழுதப்பட்டன.

தமிழகத்தின் மலைப்பாங்கான பகுதிகளிலிருந்துகூட இப்படி ஒரு நாவல் எழுதப்பட்டிருக்கலாம். ஆனால் அது இனிமேல்தான் எழுதப்படவேண்டும். உமர்தாதாவைப்போலவே பழுத்த விவசாயஅறிவும், பூடகமும் நுட்பமுமான மொழியறிவும் உடைய வயசாளிகள் இங்கு இல்லாமலில்லை. நாவலின் எளிய கதைசொல்லும் முறையும், ஆவார் மக்களின் தொன்மநம்பிக்கைகளும், உயிரோட்டமான பேச்சுமொழியும் மிகவும் பிடித்தமானவைகளாக இருக்கின்றன. மிகுந்த கவித்துவத் தோடும், மொழியின் நுட்பங்களோ டும் பாஸூ இந்த நாவலை எழுதி யிருக்கிறார்.

மொழி யாரிடத்தில் உயிர்ப்பு டன் வாழ்கிறது? நிச்சயமாக கிராமத்து மக்களிடம்தான். ஒரு நாள் சாயங்காலத்தில் வானம் இருண்டுகிடந்தது. மழை கொட்டோ கொட்டென்று கொட்டும் போலத் தெரிந்தது. நான் மழையில் மாட்டிக்கொண்டேன். அது நான் வேலைபார்க்கும் மலைக்கிராமம். சுற்றிலும் நான்கைந்து கிலோ மீட்டருக்கு அடர்ந்த காடு. மழை ஆவேசக்குரலில் காட்டுடன் பேசிக்கொண்டு இறங்குவதை நடுக்கத் துடன் பார்த்தபடி ஒரு புளியமரத்துக்கு அடியில் நின்றிருந்த எனக்கு பேச்சுத்துணையாக பெரியவர் ஒருவர் வந்துசேர்ந்தார்.

“நல்லாக்கீறயா வாத்தியாரே?’’

இயல்பாக பேசத்தொடங்கிவிட்டார் பெரியவர். நாட்டுநடப்புகளைப் பற்றி பேசியபோது, சிறையிலிருக்கும் சசிகலாவைச்சொல்லி,’’எங்கம்மாகிட்ட வந்து நல்லா ஊணிக்கினா’’ என்றார். இங்கே பெரியவரின் பொருளில் ஊன்றிக்கொள்ளுதல் என்பது வேர்விட்டு இறுக்கமாக பற்றிக்கொள்ளுதல் என்றாகிறது.

அவரின் மொழிச் சரளத்தைக் கண்டு நான் வியந்தேன்.

அவரோ மேலும் மேலும் வியப்புகளைத் தந்து கொண்டிருந்தார்.

மழைநின்றதும் நாங்கள் கிளம்பியபோது, ’’எம் பேத்திக்கு ஒரு ஜோடி யூனிபாமு குடு வாத்தியாரே’’ என்று கேட்டுக்கொண்டார் அப்பெரியவர். நான்,’’

நாளைக்கு நிச்சயமா தரச்சொல்றேன்’’ என்றேன். என் பதிலுக்கு சிரித்துக்கொண்ட பெரியவர், ’’

எல்லாம் மழபேஞ்சா அடிமறைஞ்ச கததான் போ வாத்தியாரே. நானும் ரெண்டு வாரமா கேட்டு ணுகீறன்’’ என்று சொல்லியபடியே போனார். அந்த, ’மழபேஞ்சா அடிமறஞ்சகத’ என்னை கொஞ்சநேரத்துக்கு அங்கேயே நிற்கவைத்திருந்தது. மொழிதான் எத்தனை அழகும் பூடகமும் கொண்டது! மண்கட்டியைக் காற்று அடித்துப்போகாது எனக்கு அதை உணர்த்திக்கொண்டே இருக்கிறது. அதை வாசிக்கிற ஒவ்வொருவருக்கும் அது உணர்த்தும்.

காப்டன் மகள்

ரஷ்ய இலக்கியத்தின் மாபெரும் மேதையும், முன்னோடியுமாகக் கருதப்படும் அலெக்சாந்தர் பூஷ்கின் அவர்களால் 1836 ஆம் ஆண்டு எழுதப்பட்ட நாவல் காப்டன் மகள். பூஷ்கினின் ரத்தத்தில் கருப்பின மரபும் கலந்திருக்கிறது என்பது ஒரு சிறப்புச்செய்தி. அவருடைய அம்மாவழி தாத்தா அப்ராம் ஹனிபால் அபிசினிய அரசக் குடும்பத்தைச் சேர்ந்த கருப்பினத் தவர். துருக்கியர்கள் ஒரு யுத்தத்தில் அவரைச் சிறைப் பிடித்து ஜார்மன்னரான முதலாம் பீட்டருக்குக் கொடுத்திருக்கின்றனர். தன் பாட்டனாரை வைத்து அவர் வேறொரு நாவலையும் எழுதியிருக்கிறார்.

ஜார் மன்னர்களின் ஆட்சிக்கால ரஷ்யாவில் 1774- 1775 ஆகிய ஆண்டுகளில் யெமெல்யான் புகச்சோவ் என்ற ஒரு புரட்சியாளனின் தலைமையில் நடைபெற்ற விவசாயிகளின் எழுச்சியை பின்னணியாகக்கொண்டு பூஷ்கின் இந்த நாவலை எழுதியிருக்கிறார்.

ஜார் மன்னரிடத்தில் ராணுவ ஜெனரலாக இருந்து ஓய்வுபெற்ற ஆந்திரேய் என்பவர் சுமார் முன்னூறு பண்ணையடிமைகளைக்கொண்ட செல்வந்தர். தன்னுடைய மகன் அந்திரேயெவிச்சும் ராணுவத்தில் சேர்ந்து உயர்பொறுப்புகளை அடையவேண்டும் என்று அவர் விரும்புகிறார். அவனை ஓரான்புர்க் வட்டாரத்திலுள்ள பெலகோர்ஸ்க் கோட்டையிலிருக்கும் தளபதியிடத்தில் அனுப்பிவைக்கிறார்.

அங்குசெல்லும் அந்திரேயெவிச் தளபதியின் மகளான மாஷாவிடம் காதல்வயப்படுகிறான்.

அப்போது அந்தப் பிரதேசத்தில் ஏற்படும் விவசாய எழுச்சிக் கலவரத்தில் தளபதியின் குடும்பமே கொல்லப் பட்டு கோட்டை தகர்க்கப்படுகிறது. அனைவரும் புகச்சோவ் தலைமையிலான புரட்சியாளர்களால் தூக்கிலிடப்படுகிறார்கள். ஆனால் மாஷா எப்படியோ தப்பிப்பிழைக்கிறாள். அந்திரேயெவிச் தன்னையும் அறியாமல் எங்கோ ஒருமுறை புகச்சோவுக்கு செய்த உதவியின் காரணமாக உயிர் பிழைக்கிறான். புகச்சோ வின் உதவியாலேயே மாஷாவை சில ஆபத்துகளிலிருந்து காப்பாற்றி தன் பெற்றோரிடத்துக்கு அனுப்பி வைக்கி றான். பின்னர் ஜார் மன்னரின் விசாரணை மற்றும் சிறைப் படுத்துதலுக்குப் பிறகு மாஷாவின் முயற்சியால் கருணை விடுதலை பெற்று அவளை மணந்து கொள்கிறான்.

விவசாய எழுச்சி

ஒருசேர வாசிக்கையில், இந்த இரு நாவல்களும் தற்போது நாட்டில் நடந்துவரும் விவசாயிகளின் போராட்டத்தை அவ்வப்போது எனக்கு நினைவு படுத்திக்கொண்டே இருந்தன. நாடுகடந்து, மொழி கடந்து, காலத்தையும் முந்திச்சென்று எழுதப்பட்ட இவ்விரு நாவல்களுமே நம்முடைய தற்காலத்தோடு பிணைந்துகொள்வதாக எனக்குத் தோன்றுவதுதலிôன் இலக்கியம் செய்யும் அதிசயம். அதிலும் குறிப்பாக நாவல்கள் செய்திடும் அதிசயம் என்று நினைத்தேன். மண்கட்டியைக் காற்று அடித்துப்போகாது வாசகரை ஒரு விவசாயியாக மாற்றிடும் ஜாலத்தை செய்திடும் அதேவேளையில், காப்டன் மகள் அவனிடத்தில் விவசாய எழுச்சியின் கலக உணர்வை உணரும்படி செய்துவிடுகிறது.

காப்டன் மகளில் பூஷ்கினின் மேதமை மிளிர்கிறது. ஜார் மன்னர்களின் காலத்தில் எழுதப்பட்ட நாவல் ஒன்றில், அரசுக்கு எதிரான ஒரு கலகக்காரனை, நாவலின் நாயகன் அவன்தான் என நுட்பமாய் வாசித்து உணரும்படிக்கு எழுதுவதென்பது அசாத்தியமான திறமை. புகச்சேவ் எதிர்நாயகனே என்றாலும் ஆளுமை யும், வீரமும், மனிதாபிமானமும் கொண்டவனாகவே சித்தரிக்கப்பட்டுள்ளான். நாவலின் ஓரிடத்தில் விவசாயப் புரட்சியாளன் புகச்சேவ் தன் சக புரட்சி யாளன் ஒருவனிடத்தில் தனக்குப் பிடித்தமான பாடல் ஒன்றை பாடும்படிக்கு கேட்டுக்கொள்கிறான். ஜார் மன்னருக்கு எதிராக நடக்கும் விவசாய எழுச்சியில் கலந்துகொண்டிருக்கிற ஒரு விவசாயி பாடுவதாக இருக்கும் அந்த நாட்டுப்பாடல், ’பசுங்காடுகளே! ஓலத்தை நிறுத்துங்கள்! நான் வீரத்தோடு சிந்திக்க வேண்டும்…’ என்று தொடங்குகிறது.

‘விவசாயி மகனே! உண்மையைச் சொல்! கொள்ளை அடித்தாயா? உன் கூட்டாளிகள் எத்தனை பேர்? என்று ஜார் மன்னன் கேட்கிறான். அதற்கு அந்த விவசாயி, என் கூட்டாளிகள் நான்கு பேர். காரிருள், கூரிய கத்தி, குதிரை, வில்லம்புகள் ஆகியோரே அந்தத் தோழர்கள் என்கிறான். அதற்கு ஜார் மன்னன் பதிலாகச் சொல்கிறான். விவசாயி மகனே, வீரப்புதல்வனே, உனக்குத் திருடத்தெரியும்! வீரமாகப் பேசத்தெரியும். உனக்கு திறந்த மாளிகையில் நான் பரிசுகொடுப்பேன்.

அவை இரண்டு. ஒன்று உயர்ந்த கம்பங்கள். இரண்டு அவற் றின் நடுவே கட்டப்பட்டிருக்கும் குறுக்குச்சட்டம்’

கருணை உள்ளத்தின் கழுத்துக்கு அதிகாரம் எப்போதுமே தூக்குக் கயிறைத்தான் பரிசளிக்க எண்ணு கிறது. இந்தக் கவிதைவரிகள் இப்போது அப்படியே பொருந்துகின்றன. அடக்குமுறை உள்ளவரை எப்போ தும் பொருந்தும். மேன்மையான இலக்கிய பிரதிகள் சமூக இயங்கியலை மட்டுமின்றி மனிதனின் கீழ்மை குணத்தையும் உணர்த்தியபடியே இருக்கின்றன. அவற்றைக் குறித்து நம்மை சிந்திக்கவும் தூண்டுகின்றன.