கூழுங் குடியும் ஒருங்கிழக்கும் கோல்கோடிச்
சூழாது செய்யும் அரசு
-என்கிறது வள்ளுவம். இதன் பொருள், கொடுங் கோன்மையோடு ஒருவன் நாட்டை ஆளத் தொடங்கினால், நாடும் வீழ்ச்சியடையும், மக்களும் அவனைக் கைவிட்டு விடுவார்கள் என்பதாகும்.
இந்தக் குறளுக்கு மோசமான எடுத்துக்காட்டாக இருக்கிறது மோடி தலைமையிலான சர்வாதிகார பா.ஜ.க. அரசு. நாட்டைப் பற்றியோ, மக்களைப் பற்றியோ கவலைப்படாமல், "ஒரே நாடு- ஒரே மொழி-ஒரே இனம்- ஒரே கொள்கை' என, வேற்றுமை யில் ஒற்றுமையை மறந்து, மதவெறியோடு மோடி இங்கே அதிகார தர்பார் நடத்துவதால், எல்லாமே வீழ்ச்சியை நோக்கி விரைந்துகொண்டு இருக்கிறது.
மக்களை கொஞ்சமும் மதிக்காத மோடிக்கு, நம் தமிழ்நாடு, தமிழர்கள், தமிழினம், தமிழ்ப்பண்பாடு என்றால், வேப்பங் காயாய்க் கசப்பு. அந்தக் கசப்பை மறைக்க, அடிக்கடி திருக்குறளையும் திருவள்ளுவரையும் பாராட்டி, சமரச முகமூடியை அணிந்துகொள்கிறார்.
*
உலகத் தமிழர்களுக்கும், தமிழ்நாட்டினருக்கும் எதிராக, இந்தத் தேர்தல் நேரத்திலும் கூட அடுத்தடுத்து அணுகுண்டுகளை வீசிக்கொண்டே இருக்கிறது மோடி தலைமையிலான சர்வாதிகார அரசு. இப்போது அது வீசியிருக்கும் மோசமான அணுகுண்டு, ஐ.நா.வில் ஈழத் தமிழர்களுக்கு ஆதரவாக கடந்த 23-ஆம் தேதி கொண்டு வரப்பட்ட தீர்மானத்தை அது ஆதரிக்க மறுத்ததுதான். ஜெனிவாவில் நடந்துவரும் ஐக்கிய நாடுகள் சபையின் 46-ஆவது கூட்டத்தொடரில், 2009-ல் இலங்கையில் ராஜபக்சே நடத்திய போர்க் குற்றங்களுக்கு எதிரான தீர்மானத்தை பிரிட்டன், ஜெர்மனி, கனடா உள்ளிட்ட 6 நாடுகள் கொண்டு வந்தன. அந்தத் தீர்மானம் ஏக மனதாக நிறைவேறாதா? என்று உலகத் தமிழினமே பரிதவித்த நிலையில், அதை ஆதரிக்காமல் "நடுநிலை' என்ற பெயரில், ஒட்டுமொத்த தமிழர்களின் முதுகிலும் குத்தியிருக்கிறது மோடி அரசு. இதன்மூலம் தான் ஒரு "தாடி வைத்த ராஜபக்சே' என்பதை உலகத் தமிழர்களிடம் காட்டிக்கொண்டிருக்கிறார், மூர்க்க மனம் கொண்ட மோடி. அப்படிப்பட்டவரின் அதிகார வெறி, தமிழ் மண்ணில் வேரூன்ற நாம் அனுமதிக்கலாமா?
*
மோடி அடுத்து போட்டிருக்கும் குண்டு, அரசுப் பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கு இட ஒதுக்கீடு கிடையாது என்ற புறக்கணிப்பு தான். அரசுப் பள்ளியில் படிக்கும் ஏழை மற்றும் நடுத்தட்டு மாணவர்களுக்கு மருத்துவம் பயிலும்போது 10 சதவீத உள் ஒதுக்கீட்டை புதுவையும், 7.5 சதவீத உள் ஒதுக்கீட்டை தமிழக அரசும் தருவதாக சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றி இருந்தன. இந்த நேரத்தில் புதுவை மாநில ஒதுக்கீடு தொடர்பான வழக்கு கடந்த 25 ஆம் தேதி உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்த போது, மத்திய அரசு அந்த ஒதுக்கீட்டை அனுமதிக்கமுடியாது என்றும், அது சட்டவிரோதம் என்றும், அப்படி அனுமதித்தால் அனைத்து மாநிலங்களும் இதேபோல் ஒதுக்கீட்டைக் கேட்கும் என்றும் இரக்கமில்லாமல் மறுத்திருக்கிறது. இதன் மூலம் ஏழை எளிய மாணவர்களின் மருத்துவக் கனவை, மேலும் மேலும் எட்டாக்கனியாக ஆக்கிவிட்டது மோடியின், மானம்கெட்ட மனுநீதி அரசு. அதே போல் இங்குள்ள அரசு, அறிவித்த 7.5சத இட ஒதுக்கீடு பற்றிய தகவல், தங்கள் பார்வைக்கே வரவில்லை என்றும் சொல்லி, தமிழக அரசுப்பள்ளி மாணவர்களுக்கும், இந்த இட ஒதுக்கீடு இல்லை என்று உணர்த்தியி ருக்கிறது, இந்த சதிகார அரசு. மாநில அரசுகள், ஏகமனதாக சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றி அறிவித்த சலுகையைக்கூட அனுமதிக்க முடியாது என்றபடி, மாநில உரிமைகளையும் இந்த ஹிட்லர் அரசு காலில் போட்டு மிதிப்பது ஜனநாயகத்துக்கு ஏற்பட்டிருக்கும் மிகப்பெரிய ஆபத்தாகும். இப்படிப்பட்ட கேடுகெட்ட மோடி கும்பல், தமிழகத்தில் வேரூன்ற நாம் அனுமதிக்கலாமா?
*
தமிழகம் திராவிட மண். குறிப்பாக தந்தை பெரியாரால் சலவை செய்யப்பட்ட, உணர்வும் உயிருமுள்ள மண். அதனால்தான் பல மாநிலங்களிலும் இந்துத்துவா கொடியோடு எளிதாகக் காலெடுத்து வைத்த மோடியின் பா.ஜ.க.வால், இதுவரை தமிழகத்திற்குள் வேரூன்ற முடியவில்லை. இனியும் பா.ஜ.க.வும் மோடியும் இங்கே நுழைய முடியாதபடி- இங்கே ஒரு தொகுதியில்கூட தாமரை மலர முடியாதபடி- தமிழர்களான நாம், கட்சி பேதங்களைக் கடந்து ஒன்றுபட்டு நிற்கவேண்டும். இங்கே திராவிடக் கட்சிகளில், எந்தக் கட்சி ஆட்சிக்கு வந்தாலும் நமக்குக் கவலை இல்லை. ஆனால் மோசடித்தனமும் நயவஞ்சகமும், மதவெறியும் கொண்ட பா.ஜ.க. மட்டும் இங்கே ஒரு தொகுதியில் கூட வெற்றி பெற்றுவிடக் கூடாது. தமிழர் களான நமக்குள் எப்படிப்பட்ட அரசியல் வேண்டுமானாலும் இருக்கட்டும். திராவிடக் கட்சிகளில் எது வேண்டுமானாலும் இங்கே வெற்றிபெற்று ஆட்சி நடத்தட்டும். ஆனால் ஒருபோதும், மதவெறிச் சனியன்களுக்கு மட்டும் இங்கு நாம் வாய்ப்பைக் கொடுத்துவிடக்கூடாது. இந்துத்துவா கும்பலைத் தமிழர்களான நாம் ஒன்றுசேர்ந்து விரட்டியடித்தே ஆகவேண்டும்.
*
பா.ஜ.க. மனித குலத்துக்கு எதிரான கட்சி. மனிதாபிமானத்தை எப்போதோ கொன்று புதைத்துவிட்ட கட்சி. மாட்டு அரசியலைக் கையில் எடுத்து, மனிதர்களை வெட்டிப் பலிகொடுக்கும் கட்சி. குழந்தைகள், பெண்கள், முதியவர்கள் என்று கூடப் பார்க்காமல், மதவெறி கொண்டு உயிரோடு தீவைத்து எரிக்கும் கட்சி. பா.ஜ.க. மட்டுமல்ல அதன் சகோதரக் கட்சிகளும் ரத்த வெறி பிடித்த கட்சிகள்தான். பா.ஜ.க.வின் சகோதரக் கட்சியான பஜ்ரங்தள் ஒரிசாவில் ஆடிய வெறிக் கூத்தை மறக்கமுடியுமா? கடந்த 1999-ஆம் ஆண்டு பஜ்ரங் தள்ளைச் சேர்ந்த தாரா சிங் என்ற இந்து பயங்கரவாதியின் தலைமையில் வந்த கும்பல், ஆஸ்திரேலிய கிறித்துவப் பாதிரியாரான கிரஹாம் ஸ்டெயின்ஸையும், சிறுவர்களான பிலிப், திமோதி எனும் அவரது இரு மகன்களையும் பிடித்து, துடிக்கத் துடிக்க, அவர்கள் கதறக் கதற, உயிரோடு தீவைத்துக் கொன்றதை எவரால் மறக்க முடியும்? இது மட்டுமா?
*
2002-ல் குஜராத் மாநில முதல்வராக மோடி இருந்தபோது பெரும் மதக்கலவரத்தை உண்டாக்கினார் கள். இதில் மோடி உள்ளிட்டவர்களுக்கு தொடர்பு இருப்பதாக வழக்கு தொடுக்கப்பட்டு, பின்னர் நீதித்துறை மௌனமாக்கப்பட்டு விட்டது. இதுகுறித்து மத்திய அரசின் தகவலின்படியே இக்கொடிய வன்முறையின் போது 790 முஸ்லிம் களும், 254 இந்துக்களும் கொல்லப் பட்டனர். 2458 பேர் காயமடைந்தனர். 223 பேர் காணாமல் போய்விட்டனர். 919 பெண்கள் விதவைகளாகவும் 606 சிறார்கள் அனாதைகளும் ஆக்கப்பட்டனர். இந்த சாதனைப் பட்டியலுக்குச் சொந்தக்காரர்தான் நம் மோடி மஸ்தான்! மோடியின் உயிர்த்தோழர் அமித்ஷா எப்படிப்பட்டவர்? குஜராத்தில் 2005-ல் நடந்த சொராபுதீன் என் கவுண்டர் வழக்கில் அமித்ஷா பிரதானமாகக் குற்றம் சாட்டப்பட்டார். பல வகையிலும் இந்த வழக்கு இழுத் தடிக்கப்பட்ட நிலையில் , அதைக் கடுமையாக விசாரிக் கத் தொடங்கினார் நீதிபதி லோயா. அந்த நீதிபதி மர்ம மரணத்துக்கு ஆளானார். இதுதொடர்பாக எழுந்த சர்ச்சைகளும் நம் மனதில் இப்போதும் சுழன்றடிக்கத்தான் செய்கிறது. இவையெல்லாம் பா.ஜ.க.வின் கோரமுகம் எப்படிப்பட்டது என்பதற் கான ஓரிரு சாட்சியங்கள் மட்டும்தான். அப்படிப்பட்ட மதவெறியில் ஊறிப்போன மோடியையும் அமித்ஷாவையும் நல்லவர்கள் போல் சித்தரித்து, மக்கள் முன் அவர்களை ஹீரோக்களாக முன்னிறுத்தப் பார்க்கிறது பா.ஜ.க. அவர்கள் ஹீரோக்கள் அல்ல வில்லன்கள் என்பதை கடந்த 7 ஆண்டு ஆட்சிக் காலத்திலேயே இந்தியா பலவகை யிலும் உணர்ந்துவிட்டது. அவர்கள் சின்னமாக வைத்திருக்கும் தாமரை, ரத்தத் தடாகத்தில் பூத்த தாமரை என்பதையும், குருதி வீச்சமடிக்கும் தாமரை என்பதையும் தமிழர்கள் நன்கு அறிவார்கள்.
*
பா.ஜ.க.வின் லீலைகளையும் மோடியின், மோடி மஸ்தான் வேலைகளையும் அவ்வளவு சீக்கிரத் தில் யாராலும் மறந்துவிடமுடியாது. வெளியில் தெரியாத சர்வாதிகாரத்தைக் கையில் எடுத்துகொண்டு ஜனநாயகத்தின் வேர்களைத் தொடர்ந்து பெயர்த்து வருகிறது பா.ஜ.க. புலனய்வு அமைப்புகள் தொடங்கி, காவல்துறை, ராணுவம், நீதித்துறை, ஊடகத்துறை என சகலத்தையும் தன்வயப்படுத்த சகல சித்து வேலைகளையும் பா.ஜ.க. நடத்திக்கொண்டுதான் இருக்கிறது. பா.ஜ.க.வின் இந்த நரித்தனத்தின் முன் சில கோழைகளும் மோழைகளும் அடங்கிப்போகலாம். ஆனால் தனித்துவம்மிக்க தன்மானத் தமிழர்கள் ஒருபோதும் அடங்கமாட்டார்கள். அ.தி.மு.க.வைக் கூட நாம் கடுமையாக எதிர்ப்பதற்கு காரணம், அது மோடியின் அடிமையாக, பலியாடாக இருப்பதால்தான். தமிழகத்தின் சுயமரியாதையை அவர்கள் மோடியிடம் அடகு வைப்பதால்தான் அ.தி,மு.க. வையும் நாம் எதிர்க்கவேண்டிய நிலையில் இருக்கிறோம்.
*
ஆட்சித் தேரை, உடைந்த சக்கரங்களோடு உருட்டிக் கொண்டிருக் கும் மோடி எப்படிப்பட்டவர்? எவ்வளவு மோசமான மோசடிப் பேர்வழி? 2014 நாடாளுமன்றத் தேர்தலின் போது, பிரதமர் பதவிக்குப் போட்டியிட்ட மோடி, "நாங்கள் ஆட்சிக்கு வந்தால்... வெளிநாடுகளில் முதலீடு செய்யப்பட்ட கருப்பு பணத்தை எல்லாம் மீட்டு, ஒவ்வொரு இந்தியரின் வங்கிக் கணக்கிலும் ரூபாய் 15 லட்சத்தைச் செலுத்துவோம்' என்று அறிவித்தார். ஆனால் இதை நம்பி வாக்களித்த வாக்காளர்களை அவர் நம்பிக்கை மோசடி செய்தார். அது மட்டுமா? இப்போது வங்கி களையே விற்றும், சீர்குலைத்தும், பணப் புழக்கத்தைக் கெடுத்து, மக்களைப் பரிதவிக்க வைத்துவருகிறார் பாமரர்களின் வில்லனான மோடி.
*
ஆட்சியில் அமர்வதற்கு முன் மோடி, விவசாயிகளின் மீது அக்கறை கொண்டவர் போல் நடித்த மோடி, விளைபொருளுக்கு உற்பத்திச் செலவோடு 50 சதவீதம் லாபம் கிடைக்கும் படி, கூடுதலாக விலை நிர்ணயம் செய்வோம் என்று திருவாய் மலர்ந்தார். ஆட்சியில் உட்கார்ந்ததும் விவசாயிகளை நடுத்தெருவில் கொண்டுவந்து நிறுத்தினார். கோரிக்கைகளோடு டெல்லி சென்ற விவசாயிகளை மோடி சந்திக்க மறுத்தார். நிர்வாணப் போராட்டம் வரை அவர்கள் நடத்தியும், அவர்களை ஏறெடுத்தும் பார்க்காதவர், அம்பானி, அதானிகளின் மனைவிமார்களுக்கு சல்யூட் அடித்துக்கொண்டிருந்தார். விவசாயிகளைச் சந்திக்க நேரமில்லாத மோடி, வனத்தை ஆக்கிரமித்து, யானைத் தடத்தில் கட்டடம் கட்டிய ஈஷா மைய ஜக்கி வாசுதேவ் உள்ளிட்ட சாமியார்களோடு கைகோர்த்து, மத்தளம் கொட்டி ஆட்டம் போட்டார். விவசாயிகளுக்கு உதவுவதாகச் சொன்ன மோடி, கார்ப்பரேட் கம்பெனிகளிடம் விவசாயிகளின் வாழ்க்கையை அடிமைப்படுத்தும் நோக்கத்தோடு, வேளாண் சட்ட திருத்த மசோதாவைக் கொண்டு வந்து, அவர்களைக் கடந்த 130 நாட்களாக டெல்லி வீதிகளில் போராட வைத்து ரசித்துக் கொண்டிருக்கிறார். வெயிலிலும் மழையிலும் குளிரிலும் நூற்றுக்கணக்கான உயிரிழப்புகளுக்கு மத்தியிலும் விவசாயிகள் தீவிரமாகப் போராடுகிறார்கள். உலக நாடுகளே அவர்களுக்காகக் கவலைப்படும் நிலையில், அதைப் பற்றிக் கொஞ்சமும் கவலைப்படாமல், வெட்கம் கெட்ட துரோக அரசாங்கத்தை நடத்தி வருகிறார் பாசிச மோடி. அந்தப் பாசிசக் கும்பலை தமிழகத்திற்குள் நாம் அனுமதிக்கலாமா?
*
பண மதிப்பீட்டு நடவடிக்கை என்ற பெயரில், பணக்கார திமிங்கிலங்களைப் பாதுகாத்துவிட்டு, ஏழை எளிய மக்களை வங்கி களின் வரிசையில் வெய்யிலிலும் மழையிலும் நிறுத்தியவர் மோடி. பலர் அதிர்ச்சியிலும், வங்கி முன்பும் மரணமடையும் நிலையை ஏற்படுத்திய கொடூரர் அவர். அன்று அவர் ஏற்படுத்திய பண மதிப்பிழப்புத் திட்டம், இன்றுவரை இந்திய மக்களை நிமிரவிட வில்லை. எல்லோரும் ஏ.டி.எம்., கிரடிட் கார்ட், டெபிட் கார்ட் என விதவித கார்டை மட்டுமே வைத்துக்கொண்டிருக்கிறார்கள். அவர்களின் கையிருப்பு போன வழி தெரியவில்லை. இப்படிப்பட்ட கார்ப்பரேட்டுகளின் கைக்கூலியான மோடிக் கும்பலை தமிழகத்தில் நாம் வளரவிடலாமா?
*
அதிகாரவர்க்கத்தை விமர்சிக்கிற எவரையும் விட்டு வைக்கக் கூடாது என்று கருதுகிற கொடுங்கோல் மனம் கொண்ட கருத்துக் குருடர்கள்தான், பா.ஜ.க.வினர். இவர்களை பாரபட்சமின்றி விமர்சித்து வந்த பெங்களூரைச் சேர்ந்த பத்திரிகையாளரும் பகுத்தறிவாளருமான டாக்டர் கவுரி லங்கேஷை, அவரது வீட்டுக் கதவைத் தட்டி, பெண் என்று கூடப் பார்க்காமல் நெற்றியிலும் மார்பிலும் ஈவு இரக்கமின்றி, சுட்டுச் சரித்தார்கள். அதற்கு முன்பே, கர்நாடகாவைச் சேர்ந்த சாகித்ய அகாடமி விருது பெற்ற இலக்கியவாதியும் பகுத்தறிவாள ருமான கல்புர்கியையும், மனைவியோடு வாக்கிங் சென்று கொண்டிருந்த மும்பை வழக்கறிஞர் கோவிந்த் பன்சாரே, புனேவைச் சேர்ந்த மருத்துவரும் எழுத்தாளருமான நரேந்திர தபோல்கர் ஆகியோரையும் அடுத்தடுத்து வெறி தீர சுட்டு கொன்று, கருத்துச் சுதந்திரத்தின் கழுத்தை நெரித்தது இந்தப் படுபாதக பாசிசக் கும்பல்தான். இத்தகைய நச்சுச் செடிகள் தமிழகத்தில் வேரூன்ற நாம் அனுமதிக்கலாமா?
*
குடியுரிமைச் சட்டம் என்ற பெயரில், மக்களுக்கு விரோதமாக -குறிப்பாக இஸ்லாமிய சிறுபான்மை மக்களுக்கு விரோதமாக ஒரு சட்டத்தைக் கொண்டு வந்து, அவர்களுக்கு 1971-ம் ஆண்டுக்கு முந்தைய பிறப்பு சான்றிதழ் இருக்க வேண்டும் என்றும், அது இல்லாவிட்டால் 1971-க்கு முந்தைய வாக்காளர் பட்டியலில் அவர்கள் பெயர் இருக்க வேண்டும் என்றும். அதுவும் இல்லை என்றால், அவர்களின் அப்பா, அல்லது தாத்தாவுக்கு அத்தகைய தகுதி இருக்க வேண்டும் என்றும் நிர்பந்தம் செய்கிறது மோடி அரசு. இதற்கெல்லாம் ஆதாரம் காட்ட முடியாவிட்டால், அவர்கள் இந்தியாவிலே பிறந்து வாழ்ந்து வந்தாலும் அவர்கள் அன்னியர்கள் தான் என்று, ஹிட்லர் பாணியில் சர்வாதி காரத்தை அரங்கேற்றுகிறது மோடி அரசு. அப்படிப்பட்டவர்களைக் குற்றவாளியாக்கி, மாநிலம்தோறும் அவர்களுக்கு சிறைச் சாலைகளையும் கட்டிவருகிறது இந்த வஞ்சக அரசு. இதன்மூலம் இந்துக்கள் அல்லாதோர் அத்தனை பேரும் சிறையில்தான் இங்கே இருக்கமுடியும் என்ற நிலையைக் கொண்டுவரப் பார்க்கிறது மானம் கெட்ட மதவெறி அரசு. இந்த சட்ட திருத்தத்துக்கு எதிராக இந்தியாவே வெகுண்டெ ழுந்து போராடியும், மக்களின் உணர்வை மதிக்க மறுத்தது மோடியின் இந்துத்துவா மூளை. இப்படிப்பட்ட சகுனிக் கும்பலை, தமிழகத்தில் வேரூன்ற நாம் அனுமதிக்கலாமா?
*
புதிய கல்விக்கொள்கை என்ற பெயரில் சமஸ்கிருதத்துக் கும் இந்திக்கும் ஆரத்தி எடுக்கும் மோடி அரசு, மாநில மொழிகளின் உரிமையை முழுமையாக நசுக்கிவிட முனைகிறது. கீழ்த்தட்டில் இருக்கும் மக்கள் கீழ்த்தட்டிலேயே இருக்கவேண்டும் என்ற திட்டத்தோடு 8-ஆம் வகுப்பில் இருந்தே "குலக்கல்வித் திட்டத்தை' நடைமுறைப்படுத்த முனைவதோடு, 3-ஆம் வகுப்பு மாணவர்களும் 5-ஆம் வகுப்பு மாணவர்களும் பொதுத்தேர்வை எதிர்கொள்ளவேண்டும் என்று மிரட்டுகிறது. இது தொடர்பாக மக்களின் கருத்துக் கேட்புக் கூட்டங்களை பேருக்கு நடத்திய மத்திய அரசு, அதற்கான அவகாசம் முடியும் முன்பாகவே புதிய கல்விக்கொள்கையை அமல்படுத்துவதாக அறிவித்து மாணவர்களின் நிம்மதியையும் பெற்றோர்களின் நிம்மதியையும் ஒருசேர கலைத்துப்போட்டு விளையாடுகிறது, இந்த பாசிச அரசு. இவர்களுக்கு தமிழ் மண்ணில் நாம் இடம்தரலாமா?
*
மருத்துவக்கல்வி படிக்க நினைக்கும், கீழ்த்தட்டு, அடித்தட்டு மாணவர்களின் கனவைத் தகர்க்கும் வண்ணம் நீட் தேர்வை நடைமுறைப்படுத்திய மோடி அரசு, மத்திய கல்வித் திட்டத்தில் படிக்கும் உயர் வகுப்பு மாணவர்களுக்கு மட்டுமே இதன் மூலம் இடம் கிடைப்பதற்கான வழிவகை செய்திருக்கிறது. அதிலும் தமிழக மாணவர்களுக்கு அந்நிய மான பாடத்திட்டத்தில் இருந்து கேள்விகளைக் கேட்டு, தமிழக மாணவர்கள் மருத்துவக்கல்வியையே படிக்க முடியாதபடி செய்திருக்கிறது. இதனால் மேல் நிலைக்கல்வியில் 1200-க்கு 1176 மதிப்பெண்கள் பெற்றும் நீட்டில் வெற்றிபெற முடியாத அரியலூர் மாணவி அனிதா தற்கொலை செய்துகொண்டு, நீட்டின் ஆபத்தை உணர்த்தினார். அவரைப் போல் பல மாணவ- மாணவிகள் மன உளைச்சலில் தற்கொலை செய்தும் கூட, அதுகுறித்தெல்லாம் கவலைப்படாமல், மாணவ- மாணவி களின் எதிர்கால மருத்துவக் கனவை நீட் மூலம் கேள்விக் குறியாக்கிவிட்டது மோடியின் கொடுங்கோல் அரசு. இது போதாது என்று அனைத்து மேற்படிப்புகளுக்கும் நீட் போன்ற தேர்வு உண்டு என்றும் இப்போது அறிவித்து, மாணவர்களின் எதிர்காலத்தைத் தகர்த்துக் கொண்டிருக்கிறது வக்கிரம் பிடித்த மோடி அரசு.
*
ஆட்சிக்கு வந்தால் வேலையில்லா திண்டாட்டத்தைப் போக்குவோம். 10 கோடி வேலை வாய்ப்புகளை உருவாக்குவோம் என்று வாய்ப்பட்டா விட்ட மோடி ஆட்சியில், தமிழகத்தில் மட்டும் 90 லட்சம் பேர் வேலை கேட்டுப் பதிவு செய்துவிட்டு, போராடிக் கொண்டிருக்கிறார்கள்.
*
தமிழக வேலை வாய்ப்புகளின் வட இந்தியர்களை நியமித்து, தமிழர்களுக்குக் கிடைக்கவேண்டிய வேலை வாய்ப்பையும் மோடி அரசு தட்டிப்பறித்து வருகிறது. தமிழ்நாட்டில் உள்ள மத்திய அரசு மற்றும் பொதுத்துறை பணிகளில் தமிழர்கள் திட்டமிட்டுப் புறக்கணிக்கப்படுகிறார் கள். வட இந்தியர்களுக்கு விதிகளை மீறி முன்னுரிமை அளிக்கப்பட்டு வருகிறது. அண்மையில் திருச்சி ரயில்வே தொழில்நுட்பப் பணிக்கு எடுக்கப்பட்ட 540 பேரில் 15 பேர்தான் தமிழர்கள். மீதி 525 பேரும் வட இந்தியர்கள். மதுரை ரயில்வே கோட்டத்தில் ரயில்வே பணியிடங்களுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டவர்களில் வட மாநிலத்தவர்கள் மட்டும் 90 சதம்பேர். தமிழகத்தைச் சேர்ந்த இளைஞர்கள் 10 பேர் கூட அங்கே தேர்வாகவில்லை. ஐ.சி.எப். ரயில்வே தொழிற்சாலைக்கு அண்மையில் எடுக்கப்பட்ட 1765 பேரில் 1600 பேர் வட மாநிலத்தைச் சேர்ந்தவர்கள். திருச்சி பொன்மலை ரயில்வே பணிமனையில் வேலைக்குத் தேர்வுசெய்யப்பட்ட 300 பேரில் ஒருவர் கூட தமிழர்கள் இல்லை. இப்படி வேலைவாய்ப்புகளில் தமிழக இளைஞர்களைத் திட்டமிட்டுப் புறக்கணிக்கிறது மோடியின் துரோக அரசு. அதேபோல் அண்ணா பல்கலைக்கழகம் போன்ற தமிழகப் பல்கலைக்கழகங்களுக்கு, இங்கேயே தகுதியானவர்கள் நிறைய பேர் இருக்கும் நிலையிலும், பிற மாநிலங்களிலிருந்து துணைவேந்தர்களை கொண்டு வந்து விளையாட்டுக் காட்டுகிறது விபரீதமான மோடி அரசு. அமித்ஷாவால் மாநில வேலைவாய்ப்பும் பறிபோகப் போகிறது. இப்படி பலவகையிலும் தமிழகத்துக்கு துரோகமிழைக்கும் சகுனிக் கும்பலுக்கு, தமிழக மக்கள் இடம் தரலாமா?
*
உலகின் ஆதி இனம் தமிழினம் என்பதையும், அது கி.மு. 600-க்கு முன்பே நாகரிகத்தின் மேம்பட்டு சகல நவீன அறிவோடும் வாழ்ந்தது என்பதையும், கீழடி ஆய்வுகள் உலகிற்கு வெளிச்சம் போட்டுக்காட்டி வருகின்றன. இதுவரை நடத்தப்பட்ட 6 கட்ட ஆய்வுகளில், 18ஆயிரத்திற்கு மேற்பட்ட வியப்பூட்டும் தொல்பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டிருக் கின்றன. இதன் மூலம் தமிழனின் பெருமை உலக அளவில் வியப்பை ஏற்படுத்துவதைத் தாங்கிக்கொள்ள முடியாத இந்த மோடி தலைமை யிலான முட்டாள் அரசு, ஆய்வாளர்களை அடிக்கடி இடம் மாற்றியும், நிதி ஒதுக்கீட்டில் தாமதித்தும், இந்த ஆய்வுகளுக்கு முடிந்தவரை முட்டுக்கட்டை போட்டுவருகிறது. நெருப்புத் துண்டை காகிதத்தில் பொட்டலம் கட்டப்பார்க்கும் இந்த வஞ்சக மோடிக் கும்பலை, நாம் தமிழகத்தில் வேரூன்ற அனுமதிக்கலாமா?
*
உலக நாடுகள் முன்னதாகவே எச்சரித்தும், கொரோனா நோய் இந்தியாவிற்குள் நுழைய வழிவகுத்து, அதைத் தடுப்பதாக திடீரென லாக் டவுனை அறிவித்த கேடுகெட்ட மோடி அரசு, லட்சக்கணக்கான மக்களை சொந்த ஊர் நோக்கி நடக்கவைத்தும், வெயில் மழையில் வாட வைத்தும், வேடிக்கை பார்த்தது. அப்போது அரங்கேறிய அவலக்காட்சிகளைப் பட்டியலிட்டால் தனியாக ஒரு நூலையே எழுதவேண்டி இருக்கும். பல லட்சம் கோடிகளை கொரோனா தடுப்புக்காக வாரி இறைத்ததாகச் சொல்லிக்கொண்டே, இந்தியா முழுதும் கடந்த அக்டோபர் வரை 79 லட்சத்து46 ஆயிரத்து 429 பேருக்கு கொரோனா பரவுகிற நிலையை அனுமதித்திருக்கிறது மூடத்தனம் மிகுந்த மோடி அரசு. அதேபோல் ஏறத்தாழ 1 லட்சத்து 19 ஆயிரத்து 502 பேரின் உயிரிழப்புகளுக்கும் அது காரணமாக இருந்தது. இந்த நிலையில், இப்போது கொரோனா வின் இரண்டாவது அலைக்கும் வழி வகுத்திருக் கிறது கேடுகெட்ட பா.ஜ.க. அரசு. இப்போது மீண்டும் இந்தியாவில் கொரோனா பாதிப்பின் எண்ணிக்கை 26-ந் தேதி நிலவரப்படி 26 லட்சம் பேருக்கு ஏற்பட்டிருக்கிறது. புதிதாக அவர்கள் சொல்லும் கணக்குப்படியே 257 பேர் பலியாகி யுள்ளனர். கொரோனா பரவலை முழுதுமாகத் தடுத் திருந்தால், இரண்டாவது சுற்று அலை எப்படி ஏற்பட்டிருக்கும்? நிர்வாகத் திறமையற்ற மோடியின் நிர்மூல அரசை, மக்கள் சபித்துக்கொண்டு இருக்கிறார் கள்.
-மோடி தலைமையிலான மதவெறி பா.ஜ.க. வுக்கு, திராவிட இயக்க எதிர்ப்பு என்ற பெயரில்... "மக்கள் நீதி மய்ய' கமல், "நாம் தமிழர்' சீமான், "மக்கள் பாதை இயக்க' சகாயம் ஐ.ஏ.எஸ். உள்ளிட்ட வர்கள் மறைமுகமாக கரசேவை செய்துவருகின் றனர். திராவிட இயக்கங்கள் பெற வேண்டிய வாக்கு களைத் திசைதிருப்பிப் பிரித்து, பா.ஜ.க. பரிவாரங் கள் வெற்றிபெறுவதற்கான சூழ்நிலையை உருவாக்க முனைகின்றனர். தேர்தலில் யார் வர வேண்டும் என்பதை விட, யார் வரக்கூடாது என்று தீர்மானிக்க வேண்டிய தேர்தல் இது.
போனமுறை இந்தக் கோணத்தை அப்போ தைய "மக்கள் நலக் கூட்டணி' நினைத்திருந்தால், தமிழகத்தின் தலையெழுத்து ஐந்தாண்டுகளுக்கு முன்பே நல்லவிதமாக மாறியிருக்கும். அடிமை களின் ஆட்சி வந்திருக்காது. ஓட்டுப் பிரிப்பைச் செய்வதன் மூலம், மேற்சொன்ன மூவரும் பா.ஜ.க. வுக்கு எதிரான வாக்குகளைப் பிரித்து, பா.ஜ.க.வுக்கு வெற்றி தேடித் தரப் பார்க்கிறார்கள். இவர்களையும் இனம் கண்டு நாம் தோற்கடித்தாக வேண்டும். எது எப்படியாயினும், மனித குலத்துக்கே எதிரான மனுநீதியின் பேரர்களாக மோடிகள், தமிழகத்தில் காலூன்ற நாம் அனுமதிக்கவே கூடாது. தமிழர்களே... கவனம்.
-உங்கள்
-நக்கீரன்கோபால்