தமிழ்மொழி, வரலாறு அறிய இயலாத காலத்திலேயே தோன்றிய மொழி. உலக மொழிகளில் பழமையானவை என்று கிரேக்க, இலத்தீன்,வடமொழி, தமிழ் ஆகியவை கூறப்படுகின்றன.
மிகப் பழங்காலத்திலேயே பாண்டியர் சங்கம் வைத்து முத்தமிழ் ஆய்ந்தது தமிழ்மொழியின் தொன்மைக்குச் சான்றாகிறது.
இலக்கிய வழக்கிற்கும்,பேச்சு வழக்கிற்கும் இடையே காணப்படும் வேறுபாடே மொழியின் தன்மையை விளக்கும்.
அந்த வகையில் தமிழின் இலக்கிய வழக்கிற்கும், பேச்சு வழக்கிற்கும் மிகப்பெரிய வேறுபாடு இருப்பதைக் காண முடிகிறது என்கிறார் திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம் கண்டு தந்த டாக்டர் கால்டுவெல். தமிழ் இலக்கிய வழக்கில் கடினச் சொற்களும் மிகக்குறைந்த அளவிலான வடமொழிக்கலப்பும் காணப்படுவது மொழியின் தொன்மையால்தான் என்று அவர் குறிப்பிடுகிறார்.
உலகமே போற்றும் தமிழ்மொழி
இயற்றமிழ், இசைத்தமிழ், நாடகத்தமிழ் என்று பகுத்துரைக்கப்பட்டுள்ளது. இந்த முத்தமிழ் பாகுபாடு தொல்காப்பியர் காலத்திற்கு முன்பே இருந்திருக்கிறது. தொல்காப்பிய நூற்பாக்களில் முத்தமிழைக் குறிக்கும் சொற்றொடர்களை காணமுடிகிறது.
இயற்றமிழ்... செந்தமிழென்றும், கொடுந்தமிழென்றும் இருவகைப்படுகிறது. பிறமொழிச் சொற்களின் கலப்பில்லாமல் தனித்தமிழ் சொற்களால் ஆனவை செந்தமிழ் என்றும், மலையாளம், தெலுங்கு போன்ற பிறமொழிச் சொற்களின் கலப்புடன் இருப்பவை கொடுந்தமிழ் என்றும் வகைப் படுகின்றன.
" செந்தமிழ் நாடே..
சந்தனப் பொதியச் செந்தமிழ் முனிவனும்
சௌந்தர பாண்டியன் எனும் தமிழ் நாடனும்
சங்க புலவரும் தழைத்தினி திருக்கும்
மங்கலப் பாண்டி வளநாடென்ப "
என்ற பிற்காலப் பாடல் பாண்டிய நாடே செந்தமிழ் நாடு என்பதை தெளிவாக்கு கிறது.
பண்ணோடு கலந்து தாளத்தோடு கூடி இயங்கும் செந்தமிழ், கொடுந்தமிழ் பாட்டுகளால் ஆன கீர்த்தனைகள், வரிப்பாட்டுகள், சிந்து, ஆனந்தக்களிப்பு, கும்மி, தெம்மாங்கு போன்றவை இசைத்தமிழில் அடங்கும்.
முத்தமிழ் காப்பியமான சிலப்பதிகாரம் இசைப்பாக்களின்
தமிழ்மொழி, வரலாறு அறிய இயலாத காலத்திலேயே தோன்றிய மொழி. உலக மொழிகளில் பழமையானவை என்று கிரேக்க, இலத்தீன்,வடமொழி, தமிழ் ஆகியவை கூறப்படுகின்றன.
மிகப் பழங்காலத்திலேயே பாண்டியர் சங்கம் வைத்து முத்தமிழ் ஆய்ந்தது தமிழ்மொழியின் தொன்மைக்குச் சான்றாகிறது.
இலக்கிய வழக்கிற்கும்,பேச்சு வழக்கிற்கும் இடையே காணப்படும் வேறுபாடே மொழியின் தன்மையை விளக்கும்.
அந்த வகையில் தமிழின் இலக்கிய வழக்கிற்கும், பேச்சு வழக்கிற்கும் மிகப்பெரிய வேறுபாடு இருப்பதைக் காண முடிகிறது என்கிறார் திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம் கண்டு தந்த டாக்டர் கால்டுவெல். தமிழ் இலக்கிய வழக்கில் கடினச் சொற்களும் மிகக்குறைந்த அளவிலான வடமொழிக்கலப்பும் காணப்படுவது மொழியின் தொன்மையால்தான் என்று அவர் குறிப்பிடுகிறார்.
உலகமே போற்றும் தமிழ்மொழி
இயற்றமிழ், இசைத்தமிழ், நாடகத்தமிழ் என்று பகுத்துரைக்கப்பட்டுள்ளது. இந்த முத்தமிழ் பாகுபாடு தொல்காப்பியர் காலத்திற்கு முன்பே இருந்திருக்கிறது. தொல்காப்பிய நூற்பாக்களில் முத்தமிழைக் குறிக்கும் சொற்றொடர்களை காணமுடிகிறது.
இயற்றமிழ்... செந்தமிழென்றும், கொடுந்தமிழென்றும் இருவகைப்படுகிறது. பிறமொழிச் சொற்களின் கலப்பில்லாமல் தனித்தமிழ் சொற்களால் ஆனவை செந்தமிழ் என்றும், மலையாளம், தெலுங்கு போன்ற பிறமொழிச் சொற்களின் கலப்புடன் இருப்பவை கொடுந்தமிழ் என்றும் வகைப் படுகின்றன.
" செந்தமிழ் நாடே..
சந்தனப் பொதியச் செந்தமிழ் முனிவனும்
சௌந்தர பாண்டியன் எனும் தமிழ் நாடனும்
சங்க புலவரும் தழைத்தினி திருக்கும்
மங்கலப் பாண்டி வளநாடென்ப "
என்ற பிற்காலப் பாடல் பாண்டிய நாடே செந்தமிழ் நாடு என்பதை தெளிவாக்கு கிறது.
பண்ணோடு கலந்து தாளத்தோடு கூடி இயங்கும் செந்தமிழ், கொடுந்தமிழ் பாட்டுகளால் ஆன கீர்த்தனைகள், வரிப்பாட்டுகள், சிந்து, ஆனந்தக்களிப்பு, கும்மி, தெம்மாங்கு போன்றவை இசைத்தமிழில் அடங்கும்.
முத்தமிழ் காப்பியமான சிலப்பதிகாரம் இசைப்பாக்களின் களஞ்சியமாகும். இடைக்காலத்தில் தேவாரம், திருவாசகம், கந்த புராண கீர்த்தனை, பெரிய புராண கீர்த்தனை ஆகியவை தோன்றின. மாணிக்கவாசகர், திருநாவுக்கரசர், திருஞானசம்பந்தர், சுந்தரர் போன்றவர்களும், ஆழ்வார்களும் சிறந்த இசைப்பாக்களைப் பாடி இசைத்தமிழை வளம்பெறச் செய்துள்ளனர்.
இயற்றமிழும், இசைத்தமிழும் கலந்தால் நாடகத்தமிழ் கிடைக்கும். இயல், இசை, நாடகம் என்ற முத்தமிழைக் கலந்து நாடகத்தை கூத்து என்று குறிப்பிட்டனர். நாடகத்தமிழ் பற்றி,
"நாடக மகளி ராடுகளத் தெடுத்த
வீசிவீங்க் கின்னியங் கடுப்ப... "
என்று பெரும்பாணாற்றுப்படையிலும்,
"நாடக நன்னூல் நன்கு கடைப்பிடித்து "
என்று சிலப்பதிகாரத்திலும் இன்னும் பல இலக்கண, இலக்கியங்களிலும் சொல்லப் பட்டிருக்கின்றன.
தமிழுக்கு உயிர் நூலான தொல்காப்பியம் மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் இயற்றப் பட்ட நூல். எழுத்ததிகாரம், சொல்லதிகாரம், பொருளதிகாரம் என்று மொத்தம் 1610 நூற்பாக்கள் கொண்ட தொன்மையான காவியம், தமிழின் தொன்மைக்கு நல்ல சான்று.
இலக்கியத்திலிருந்துதான் இலக்கணம் பிறக்கிறது என்பது முதல் சங்கத்துத் தலையாய புலவர் அகத்தியரின் கருத்து. தொல்காப்பியர் அகத்தியரின் முதன்மை மாணாக்கர் என்றும் சொல்லப்படுகிறது. தமிழ் மொழியின் தொன்மைக்கு இதுவே உறுதியான சான்று.
தமிழிலுள்ள நூல்களுள் மிகப்பழமை வாய்ந்தவை சங்க இலக்கியங்கள். கி.மு. 500 முதல் கி.பி. 200 வரை வாழ்ந்த கடைச்சங்கப் புலவர்களால் ஆயிரக்கணக்கான பாடல்கள் பாடப்பட்டன. அவற்றுள் சிறந்த பாட்டுகளை பொருள் மற்றும் செய்யுள் என்ற அடிப்படையில் எட்டுத் தொகுதிகளாக பகுத்தனர்.
நற்றிணை, குறுந்தொகை, ஐங்குறுநூறு, பதிற்றுப்பத்து, பரிபாடல், கலித்தொகை, அகநானூறு, புறநானூறு என்ற எட்டுமே எட்டுத்தொகை நூல்கள்.
"நற்றிணை, குறுந்தொகை, ஐங்குறுநூறு
ஒத்த பதிற்றுப்பத்து ஓங்கு பரிபாடல்
கற்றறிந்தார் ஏத்தும் கலியோடு அகம்புறம் என்று
இத்திறத்த எட்டுத் தொகை"
என்ற பாடலால் இதனை அறியமுடிகிறது. இவை அகப்பொருள், புறப்பொருள் என்று மேலும் பிரித்து பாடப்பட்டுள்ளன.
சங்கப்பாடல்களை பதினெண் மேல்கணக்கு நூல்கள் என்றும் அவற்றையொட்டி எழுதப்பட்ட பாடல்களை பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள் என்றும் இரு பிரிவாகப் பிரித்தனர். தமிழ்ச் சான்றோர்கள், புலவர்கள் பலர் பாடிய பாக்களுள் குறுகிய அடிகளையுடைய பாக்கள் “எட்டுத்தொகை” என்றும், நீண்ட பத்து பாடல்களை “பத்துப்பாட்டு” என்றும் பெயரிட்டனர். இவையே சங்க நூல்கள் என்ற பாராட்டுக்குரியவை.
இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே தமிழகத்தில் ஐநூற்றுக்கும் மேற்பட்ட புலவர்கள் ஆயிரக்கணக்கான பாடல்களை இயற்றிய பெருமையை கொண்டது தமிழ்மொழி. இந்த சங்க காலமே தமிழ் இலக்கிய வரலாற்றின் பொற்காலம் எனப் போற்றப்படுகிறது.
தமிழ்மொழி இலக்கிய வளம் மிகுந்தது. இலக்கண நலம் கொண்டது. தமிழ் இலக்கியங்கள் அக்காலத் தமிழரின் சிறந்த வாழ்வியலை விளக்குகின்றன. எக்கால மக்களுக்கும் வாழ்க்கை நெறி காட்டும் நூல்களாக திகழ்கின்றன.
இதற்கு திருவள்ளுவரின் திருக்குறளே நல்ல சான்று. திருவள்ளுவரின் காலம் கி.மு. முதல் நூற்றாண்டு என்றும், கி.பி. முதலிரு நூற்றாண்டாக இருக்கலாம் என்றும், கி.பி. ஆறாம் நூற்றாண்டு என்றும் பல கருத்துகள் இருந்தாலும், தமிழ்மொழியின் தொன்மைக்கு திருக்குறள் என்ற நீதி நூலும் நல்ல சான்றாக அமைகிறது. உலகப் பொதுமறை திருக்குறளுக்கு அடுத்த நிலையில் உள்ள அறநூல் நாலடியார். இந்நூலும் கி.பி. 300 - கி.பி. 800 கால இடைவெளியில் தோன்றியதாக சொல்லப்படுகிறது.
தமிழில் தொன்மைச் சிறப்பும், இலக்கிய வளமும், வளமான கற்பனையும், நல்ல ஓசை நயமும், பொருள் செறிவும் உடைய ஆயிரக்கணக்கான பாடல்கள் சங்ககாலத்தில் இயற்றப்பட்டன.
தொல்காப்பியத்தின் பொருள் வளம், வனப்பு பற்றி உரையாசிரியர்கள் உரையில் குறிப்பிட்டபோது பல காப்பியங்களை எடுத்துக்காட்டாகக் கூறியுள்ளனர். என்வே தொல்காப்பியருக்கு முன்பே பல காப்பியங்கள் தமிழில் தோன்றியிருக்க வேண்டும்.
இந்திய மொழிகளிலேயே செம்மொழித் தகுதிகள் அனைத்தும் நிரம்பப் பெற்ற ஒரே மொழியாகத் தமிழ்மொழி, தொன்மையினால் இளமை சாகாத நிலையில் இருக்கிறது. தமிழ்மொழி சமணம்,பௌத்தம், சைவம்,வைணவம் வளர்த்த மொழியாகவும் பெருமை கொண்டது.
கி.பி. 17ஆம் நூற்றாண்டு முதல் உரைநடை வழக்கத்திற்கு வந்ததால் தமிழ் இலக்கியம் புது மலர்ச்சியைக் கண்டது. உரைநடையை வளர்த்தவர்களான வீரமாமுனிவரும், சிவஞான முனிவரும் உரைநடையில் பல புதுமைகளைச் செய்தனர். 18-ஆம் நூற்றாண்டின் தொடர்ச்சியாகப் பழங்கால இதிகாச, புராணக்கதைகள் 19-ஆம் நூற்றாண்டில் உரைநடையில் வெளிவந்தன. தாண்டவராய முதலியார், ஆறுமுக நாவலர், இராமலிங்க அடிகள், வேத நாயகம் பிள்ளை போன்றோரின் உரைநடைப் பணி 19-ஆம் நூற்றாண்டில் குறிப்பிடத்தக்கது.
20-ஆம் நூற்றாண்டில் உரைநடை இலக்கியத்தின் பொற்காலமாகத் திகழ்ந்தது. உரைநடையில் மாறுபாடுகளும், புதிய நடைகளும் தோன்றி வளர்ந்தன. படைப்பாளர்கள் தங்கள் தனித்தன்மையை அடையாளப்படுத்திக் காட்ட உரைநடையை கருவியாக கையாண்டனர். பாரதியார், தமிழ்த்தாத்தா உ.வே. சாமிநாதைய்யர், தனித்தமிழ் நடையின் தந்தை மறைமலையடிகள், மென்தமிழ் உரைநடையின் தலைவர் திரு.வி.கல்யாண சுந்தரனார், தமிழ்த் தென்றல் மு.வரதராசன்,சுதந்திர போராட்ட தீரர் கல்கி.ரா.கிருஷ்ணமூர்த்தி, பேரறிஞர் அண்ணாதுரை, குன்றக்குடி அடிகளார், முத்தமிழ் அறிஞர் மு.கருணாநிதி போல் தமிழ் உரைநடைக்கு வளம்சேர்த்தவர்களின் பட்டியல் நீளமானது.
உரைநடை வளம் போலவே, கவிதை வளம், இசைத்தமிழ், நாடகத்தமிழ், சிறுகதை, புதினம், புதுக்கவிதை, ஹைக்கூ, சென்ரியு, குக்கூ கவிதை வடிவங்கள், கடித இலக்கியம், பயண இலக்கியம், வாழ்க்கை வரலாற்றிலக்கியம், மொழிப்பெயர்ப்பியல், நாட்டுப்புறவியல் போன்ற இன்ன பிற துறைகள் தமிழ் இலக்கிய வரலாற்றில் தனித்தனித் துறைகளாக வளர்ந்து ஏற்றம் பெற்றுக்கொண்டிருக்கின்றன.
பதினெட்டாம் நூற்றாண்டு வரை இலக்கியம் என்றாலே கவிதை ஒன்றுதான் என்று சொல்லப்படும் அளவிற்கு தமிழ் இலக்கிய வரலாற்றில் இடத்தைப் பிடித்தது. பத்தொன்பதாம் நூற்றாண்டில் தமிழ் கவிதையில் மலர்ச்சி ஏற்பட்டது. மகாகவி பாரதியின் வருகைக்கு பின் கவிதை இலக்கியம் புதிய வேகத்தைக் கண்டது. இவர் கவிதைகளின் தனித்துவமே இன்றைய புதுக்கவிதைக்கும்,
வசனக்கவிதைக்கும் வழிகாட்டியாய் அமைந்து விட்டது.
கவிக்கோ அப்துல் ரகுமான், "புதுக்கவிதையின் கருத்து வெளிப்பாடு மின்னல் போன்றது. மரபுக்கவிதை கருத்தை சுற்றிவளைத்துச் சொல்வது. புதுக்கவிதை நேரடியாக கருத்தைச் சொல்வது" என்கிறார். "பித்தன்" என்ற தனது கவிதை தொகுப்பில் இந்த கவியரங்கத் தனிக்கவிஞர்,
"குறிஞ்சி என் கொங்கை
முல்லை என் கூந்தல்
மருதம் என் மணிக்கரம்
நெய்தல் என் பணிப்பெண்
பாலை என் வேனிற்கால வியாதி" என்று
அற்புதமாக எழுதியுள்ளார்.
உலகில் பேசப்படும் மொழிகளுள் தமிழ் உயிர்வாழும் உயர் தனிச்செம்மொழியாக விளங்குகிறது. இந்த இருபத்தியொன்றாம்
நூற்றண்டில் தமிழ் இலக்கியம் எல்லாத் துறைகளிலும் மாற்றமும், ஏற்றமும் பெற்று விளங்குகின்றது. உரைநடை வளர்ச்சியும், கவிதைப் பெருக்கமும் தமிழ் இலக்கிய பரப்பை விரிவுபடுத்தியுள்ளது.
சங்க கால இலக்கியங்கள் தோன்றி எத்தனை ஆயிரம் ஆண்டுகள் ஆனாலும் புதுமைக்கு புதுமையாகவும், பழமைக்கு பழமையாகவும் தமிழ்மொழியின் செம்மையை இன்னும் புலப்படுத்திக்கொண்டுதான் இருக்கின்றன.
தமிழின் வளர்ச்சிக்கேற்ப புதிய துறைகளின் வருகையும் அதிகரித்துகொண்டே இருக்கிறது. சிறுகதை, புதினம், உரைநடை, புதுக்கவிதை, மரபுக்கவிதை, ஹைக்கூ இவற்றைத் தொடர்ந்து தற்போது அறிவியல் தமிழ், இதழியல், வானொலி, தொலைக்காட்சி, திரைப்படம், இணையம், உலகளாவிய தமிழ் அமைப்புகள் என நீளும் தமிழ் இலக்கிய வகைகளின் வரிசை, தமிழ்மொழியின் வளத்தினை தெளிவாக எடுத்தியம்பும் நல்ல சான்றாகத் திகழ்கின்றன.
செம்மையும், அழகும், இனிமையும், பெறுமைப்பண்பும் அமைந்த மொழியே செம்மொழியான நம் தமிழ்மொழி.