ம் மதுரைத் தமிழரான முனைவர் பேராசிரியர் பா.நாகராச சேதுராமன், அமெரிக்காவில் தமிழ் வளர்க்க பலவகையிலும் பாடுபட்டு வருகிறார்.

இவர் அமெரிக்காவில் இருக்கும் யூனிபார்ம் சர்வீசஸ் மருத்துவப் பல்கலைக் கழகத்தில் ’பேத்தாலஜி’ துறை பேராசிரியராகப் பணிபுரிகிறார்.

இப்படியோர் தமிழரா? என அமெரிக்கா வாழ் தமிழர்கள் அவரைக் கண்டு வியப்பதோடு, மனதார அவரை வாழ்த்திக் கொண்டும் இருக்கிறார்கள்.

அப்படி என்ன அவர் சாதிக்கிறார்?

Advertisment

sethuramanநாம் பேராசிரியர் முனைவர் நாகராச சேதுராமன் அவர்களிடமே இது குறித்துக் கேட்டோம். அப்போது அவர்...

""அமெரிக்க தலைநகர் வாசிங்டனை ஒட்டியுள்ள மேரிலாந்து மாநிலத்தில் கடந்த 2001 முதல் வசித்து வருகிறேன். இங்கு வந்த புதிதில் புதிய இடம், புது கலாச்சாரம் என எங்கும் சுற்றி இருக்க, என் மனது தமிழையும் தமிழரையும் நாடியது. ஒரு இந்திய பலசரக்கு கடையில் வாசிங்டன் தமிழ்ச் சங்கத்தில் நடைபெற இருந்த ஒரு தமிழ் இன்னிசை நிகழ்ச்சி பற்றிய விளம்பரம் கண்டு அந்த நிகழ்ச்சிக்கு சென்றேன். அன்று அங்கே தொடங்கிய தமிழ்ப் பணிக்கான உணர்வும், உழைக்கும் ஆர்வமும் பன்மடங்காகி இன்றுவரை தொடர்ந்து வருகிறது'' என்ற முன்னுரையுடன் பேசத்தொடங்கியவர் தன் தமிழ்ப் பணிகளில் சிலவற்றை விவரிக்கத் தொடங்கினார்.

""என் பேராசிரியப் பணி ஒரு பக்கம் என்றபோதும், வாசிங்டன் தமிழ் சங்க செயற்குழுவில் 2003-ல் இயக்குனரானேன். அதில் இரு வருடங்கள் பொருளாளராக, இரு வருடங்கள் செயலாளராக ஒரு வருடம் துணைத் தலைவராக, 2009-ல் தலைவராக உயர்ந்து 2010-ல் செயற்குழுவிலிருந்து விலகினாலும், தேர்தல் அதிகாரி, அதன்பின்னர் இரு ஆண்டுகள் ""தென்றல் முல்லை'' தமிழ்ச்சங்க இதழின் தலைமை ஆசிரியர் என தமிழ்ச் சங்கத்தில் என் தொண்டு மென்மேலும் தொடர்கிறது.

Advertisment

நான் தலைவராக இருந்தபோது சங்கத்தின் நிதி நிலைமை முதன்முறையாக அதிகரித்தது. வங்கிக் கணக்கில் குறிப்பிடத்தக்க அளவுக்கு சேமிப்பும் வைத்தேன். அதனைப் பாராட்டி அடுத்த வருடம் தமிழ்ச் சங்க செயற்குழு எனக்குப் பாராட்டுப் பட்டயம் வழங்கியது.

""தென்றல்முல்லை'' இதழின் தலைமை ஆசிரியராகப் பொறுப்பேற்றபின், வாசிங்டன் வட்டாரத்தில் இயங்கும் தமிழ்ப் பள்ளிகளில் இருந்து தலா ஒரு பிரதிநிதி என ஆசிரியர் குழுவில் இணைத்து, முழு புத்தகமும் வண்ணக் காகிதங்களில் அச்சிடப்பட்டு காலாண்டு இதழாக தங்கு தடையின்றி வெளியிடப்பட்டன.

வாசிங்டன் வட்டாரத் தமிழ்ச்சங்க துணைத்தலைவராக நான் இருந்தபோது ஜெர்மன் டவுனில் தமிழ்ப்பள்ளி ஒன்று தொடங்கப்பட்டது. தற்போது மேரிலாண்ட் தமிழ்க் கல்விக்கழகம் எனும் பெயரில் இயங்கி வருகிறது. அதன் தலைவராகவும், பள்ளியின் முதல்வராகவும் இன்றுவரை உள்ளேன். தற்போது 300 மாணவர்களுடன் முன் மழலை முதல் பத்தாம் வகுப்புகள் வரை நடத்தப்படுகின்றது. இந்த பள்ளி, அமெரிக்க வாழ் தமிழ்க் குழந்தைகளுக்கு தமிழ் பயிற்றுவிப்பதோடு, தமிழர் நாகரிகம், பண்பாட்டின் அடிப்படையில் அவர்களது திறனையும் வளர்த்து வருகிறது.'' என்கிறார் உற்சாகத்தோடு.

முனைவர் நாகராச சேதுராமன், பல்வேறு தமிழ் நிகழ்ச்சிகளையும் ஒருங்கிணைத்து நடத்திவருவதோடு, ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்கையை நிறுவும் முயற்சியிலும் தன்னை இனைத்துக்கொண்டு செயலாற்றிவருகிறார். இவரது தமக்கையார் முனைவர் நா.நளினிதேவி, சிறந்த ஆய்வாளராகவும் தமிழறிஞராகவும் திகழ்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.