ponvannan

"தமிழைக் காத்து.. தமிழரின் நலன்காக்கும் தொண்டர்க்குத் தொண்டராகிய நான்' என இலக்கியக் காவியமான பூம்புகார் திரைப்படத்தில், முதன்முதலில் திரையில் தோன்றுகிறார் கலைஞர். தமிழ்த்திரையுலகின் நீண்டநெடும் வரலாற்றில், அவர் பதிக்காத முத்திரைகள் கிடையாது. தனக்கு நினைவிருக்கும் வரை எழுதிக்கொண்டே இருந்த கலைஞரின் ஓயாத ஓட்டமே அதற்குச் சான்று. கலைஞரின் திரையுலக நினைவுகளைப் பதிவுசெய்ய வார்த்தைகள் போதாது.

எனினும், திரைக்கலைஞர் பொன்வண்ணன் கலைஞரின் நினைவுகள் குறித்து ஆழமாக பதிவுசெய்திருக்கிறார். ""கொடியேற்றுவதற்காக கலைஞர் வருவதாகச் சொன்னார்கள். மிக எளிமையாக, ஆரவாரமற்று வந்த அவரை, எட்டுவயது சிறுவனாக இருந்த நான் தூரத்தில் நின்றபடி வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தேன். கலைஞரின் எழுத்து, திரையுலக சாதனைகள், அரசியல் என எதைப்பற்றியும் அறிந்திருக்காத பிராயம். அதேபோல், அந்த சமயத்தில் சினிமாவிலும், அரசியலிலும் முத்திரை பதித்துக் கொண்டிருந்த எம்.ஜி.ஆரின் தீவிர ரசிகனாகவும் நான் இருந்ததால், அவரளவிற்கு கலைஞரைத் தெரிந்துகொள்ளும் விருப்பமும் இருந்திருக்கவில்லை. காலங்கள் கடந்து கல்லூரி வயதை எட்டியபோது, அரசியல், சமூகம் மற்றும் நண்பர்களின் பழக்கவழக்கங்கள் கலைஞரை நோக்கிய அடுத்த கட்ட தேடலுக்கு இட்டுச்சென்றன.

அந்தத் தேடல் கலைஞரும் எம்.ஜி.ஆரும் நண்பர்கள், கலைஞரும் சிவாஜி கணேசனும் நண்பர்கள்.. அவர்தான் இந்த நடிகர்களை எல்லாம் தன் எழுத்தின் மூலம் ஹீரோவாக்கினார் என்ற சில உண்மைகளை எனக்கு உரைத்தது. இந்தக் காலகட்டம் வரை கலைஞர் முதல்வர் பதவியில் இல்லை. இருந்தாலும், எம்.ஜி.ஆரின் ரசிகன் என்பதால், கலைஞரைப் பற்றிய தேடலும், புரிதலும் எழத்தொடங்கியும் அதை வெளிச்சொல்லாமல் ஆச்சர்யத்தில் மட்டுமே மூழ்கியிருந்தேன்.

Advertisment

சில மாதங்களில் குங்குமம் இதழில் கலைஞர் "பொன்னர் சங்கர்' கதையை தொடராக எழுதத் தொடங்கினார். அதற்கான வரலாற்று இடங்களைப் பார்வையிட வந்திருந்த கலைஞருடன், உபசரிப்பு நிமித்தமாக அருகிலிருந்து நேரடியாக பார்த்துப்பழகும் வாய்ப்பு உருவானதோடு, அவர்மீதான ஈடுபாடும் அதிகரித்தது. அந்த ஈடுபாடு வெறுமனே சினிமா ரசிகன் என்பதையும் தாண்டி, அறிவுப்பூர்வமாக தலைவர்களையும், வரலாற்றையும் பார்க்கும் சந்தர்ப்பத்தை ஏற்படுத்தியது. ரசிக மனப்பான்மையில் இருந்துகொண்டு மற்றவர்களைக் கண்மூடித்தனமாக எதிர்ப்பது வேறு... அதையும்மீறி எல்லாவற்றையும் பொதுத்தன்மையுடன் அணுகும் தேடல் என்பது வேறு என்கிற பார்வையும் அங்கிருந்துதான் கிடைக்கப் பெற்றது. கம்யூனிஸ்டு மற்றும் பெரியார் களஞ்சிய நண்பர்கள் உலகை விசாலமாக பார்க்கத் தூண்டும் புத்தகங்களைத் தந்துதவிய சமயத்தில் இதெல்லாம் நிகழ்ந்திருந்தது.

ஓரிரு ஆண்டுகளில் சென்னை வந்தபோது, இந்த இடைவெளி இன்னமும் குறைந்தது. இயக்குனர் பாரதிராஜாவி டம் உதவி இயக்குனராக வேலைபார்த்துக் கொண்டிருந்த நேரம்... அப்போதுதான் முதல்வர் கலைஞரை நேரில் சந்தித்துப் பேசமுடிந்தது. சிறுவயதில் தூரத்தில் நின்று வேடிக்கை பார்த்தபோது அவரிடம் எனக்குத் தெரிந்த துடிப்பும், ஆர்வமும் அப்போதும் நிறைந்திருந்தது. அயராது உழைத்துக் கொண்டிருந்த அவரிடத்தில் எந்த வித்தியாசத்தையும் என்னால் காணமுடியவில்லை. கலைஞர் அ(எ)ப்போதும் கலைஞராகவே இருந்தார்.

ஒரு அரசியல்வாதியாக இந்திய அரசியலமைப்புச் சட்டத்தில் மாநில அரசுக்கான உரிமையை எப்படி கேட்டுப்பெற வேண்டும். போராடித்தான் அதைப் பெறமுடியும் என்பதற்கு உதாரணமான தமிழக அரசியல்வாதிகளின் பயணம் என யோசித்துப் பார்த்தால், கலைஞரின் பயணம் மற்ற எல்லோரையும்விட முக்கியத்துவமானது. சுதந்திரத்திற்குப் பிறகான இந்திய அரசியல் வரலாற்றை எழுதத் தொடங்கினால், பெரியார் தொட்டு எல்லா ஆளுமைகளுடனும் பயணம் செய்த, அரசியலாற்றிய தலைவர் கலைஞராகத்தான் இருப்பார். களத்தில் உயிர்கொடுப்பது, வெட்டிச்சாய்வது மட்டும் போர் அல்ல. பின்வாங்குவதும், நிதானம் கடைப்பிடிப்பதும், தேவையான சமயத்திற்காகக் காத்திருப்பதும்தான் என்ற ராஜதந்திரத்தை முழுமையாக உணர்ந்தவர் அவர். அவரை சமரசமற்றவர் என்று சொல்ல முடியாது. அரசியல் அமைப்புக்குள் இருந்து கொண்டு தனது இடத்தை அதில் தக்கவைத்து, அதை தனக்கான ஆதரவாக மாற்றி, அதன்மூலம் ஆட்சியைப் பிடித்து, தன் மாநிலத்திற்கு உரியதைச் செய்யவேண்டும் என்பதற்காக சில சமரசங்களையும் செய்திருக்கிறார். அது நல்லதற்கான சமரசம்.

Advertisment

ஒரு தனிமனிதனின் வாழ்க்கையில் பெரும்பாலும் மிகப்பெரிய சங்கடங்கள் என ஒன்றிரண்டு வந்துபோகலாம். மாறாக, தனிப்பட்ட வாழ்க்கையில் தொடங்கி வாழ்நாள் முழுவதும் ஏராளமான சம்பவங்களையும், சங்கடங்களையும் மட்டுமே அவர் எதிர்கொண்டிருக்கிறார். ஆனால், யாரொருவரின் மீதும் தனிப்பட்ட காழ்ப்புணர்ச்சியை வெளிப்படுத்தாமல், தன்மீதான விமர்சனங்களை எல்லாம் நேர்மறையாக எதிர்கொண்டதோடு மட்டுமல்லாமல், அதை முன்வைத்தவரை நேரத்தே அரவணைத்துக்கொண்டு, நிழல்தருவதில் கலைஞருக்கு நிகர் கலைஞர்தான்.

இலக்கியம், அரசியல் என்ற இரண்டு துருவங்களிலும் முத்திரை பதித்த கலைஞருக்கு மற்ற எந்தத் தலைவர்களிடமும் இல்லாத அளவிற்கான இயல்பான அணுகுமுறை, அவரை மேன்மையான இடத்தில் வைத்தே பார்க்கச் செய்திருக்கிறது. இயல்பில் சோழமண்ணில் இருந்து வந்தவரென்பதால், ஆரம்பக் காலத்தில் அவரது படங்கள் எல்லாமே வரலாற்றுப் பின்னணியைக் கொண்ட படங்களாக இருந்தன. "பராசக்தி' போன்ற சாதாரண தனிமனித வாழ்வைப் பேசும் படங்களை எடுத்திருந்தாலும்கூட, அதற்கு சரிநிகராக பூம்புகார், மந்திரிகுமாரி போன்ற படங்களும் அவர் புகழைப்பேசுகின்றன.

அதேசமயம், அந்தக் கதாபாத்திரங்களை பகுத்தறிவு பேசவைத்து, தனது கொள்கைக்காக சினிமாவையும் பயன்படுத்திக் கொண்டார். மேலும், கலைஞருக்கு மனரீதியாகவே பழங்காலக் கட்டிடங்கள், காட்சிகள் மீது அதீத ஈடுபாடு இருந்தது. அதனாலேயே, அதையே அரசியல்வாதியாக இருந்தபோது தன்னால் கொண்டுவரப்பட்ட வள்ளுவர் கோட்டம் போன்றவற்றில் வெளிக்கொணர்ந்திருக்கிறார். காலப்போக்கில் இந்திராகாந்தியின் 20 அம்சத் திட்டங்கள் வந்தபோது, அவரது எண்ணத்தில் மாற்றம் வந்தது. வெளியில் பழைமையும், உள்ளே புதுமையும், சற்றும் குறைவில்லாக் கலைநயமும் கொண்ட பல அலுவலகங்களை அவர் உருவாக்க அது காரணமாக இருந்தது. சோஷியல் நெட்வொர்க் காலகட்டம் வந்தபோது, புதிய தலைமைச் செயலகத்தை முற்றிலும் மாறுபட்ட வேறொரு கட்டட வடிவமைப்புடன் திட்டமிட்டு, அதில் ஆர்வமும் காட்டினார்.

அண்ணா வரைந்த படத்தில் அமர்ந்த நிலையில் இருக்கும் திருவள்ளுவரை, எழுந்து நளினத்துடன் நிற்கச்செய்து, இன்று அதை தமிழகத்தின்-தமிழின் அடையாளமாக மாற்றிக் காட்டியவர் கலைஞர். 95 வயது வரை இயற்கையாக அழகாக வாழ்ந்துவிட்டு, எல்லாப் புகழையும் அடைந்துவிட்டுத்தான் அவர் மறைந்திருக்கிறார். இருந்தாலும், மற்ற எந்தத் தலைவருக்கும் கிடைத்திடாத நூறு வயது கொடுப்பினையை அவர் பெற்றிருந்திருக்கலாம்; சென்சுரி அடித்துவிட்டுச் சென்றிருக்கலாம் என்ற சின்ன வருத்தம் எனக்குள் இருக்கிறது. கலைஞர் தனது முதல்வர் பதவி, அரசியல் என எல்லாவற்றையும் தாண்டி பெரிதும் நேசித்தது தமிழைத்தான். தமிழும் - தானும் என்று இருப்பதில்தான் அவருக்கு கோடி மகிழ்ச்சி. தமிழ் உள்ளவரை அவர் இருப்பார்'' என நெகிழ்ச்சி குறையாமல் பேசிமுடித்தார்.

தொகுப்பு: ச.ப. மதிவாணன்