இன்னும் கொரோனாவின் முற்றுகை முடிவுக்கு வரவில்லை. போதாக்குறைக்கு இன்னொரு பக்கம் அதன் சகோதரியான ஒமிக்ரானும் வந்துகொண்டிருக்கிறது. எனினும் இதற்கு நடுவிலும், மெல்-ய நம்பிக்கை தீபத்தைக் கையில் ஏந்தியபடி நம் வாச-ல் வந்துநிற்கிறாள் தைப்பாவை. அவர் காலத்தின் செல்லமகள். வசந்தத்தின் தோழி. அறுவடைக் காலத்தின் அழகிய தேவதை. தமிழர்களின் நம்பிக்கை வெளிச்சம். உழவர்களின் உயர்ந்த அன்னை.
அவள் மனதின் ஈரத்தில் அவள் முகம் சுடர்கிறது. ஆண்டெனும் ஆடையணிந்து நடைபயிலும் அவளின் ’ அன்னத்தின் தூவியன்ன’ அழகுப் பாதங்கள், காலப் பெருவெளியில் கவிதைகளாய்ப் பதிகின்றன.
அவளின் வருகையால்; கரும்புக் காடாகிறது மனம். அறுவடைக் களமாகிறது வாழ்க்கை. மஞ்சள், இஞ்சித் தோரணமாகிறது நாட்கள். உறவுகளின் குதூகலத்தில் வண்ணக் கோலமாகிறது வாசல். ஜல்லிக்கட்டுப் புழுதியைச் சந்தனமாய்ப் பூசிச் சிலுசிலுக்கிறது காற்று. பழமையை விறகாக்கிக் கொண்டு எரிகிறது, நம் பொங்கல் அடுப்பு.
தமிழர் திருநாளான தைத் திருநாளை இந்த உலகம் உவப்பாகப் பார்க்கிறது. காரணம், இது தமிழர்களாகிய நமது, பண்பாட்டுச் செழுமையின் அடையாளம் - இயற்கைக்கு நன்றி தெரிவிக்கும் நாகரிக நன்நாள். இதை இதய ஈரத்தோடும், ஈடிலா வீரத்தோடும் காலங் காலமாய்க் கனிந்து கொண்டாடுகிறது தமிழினம். மார்கழித் திங்களில் நீராடி நோன்பிருந்து, தைத் திங்களைத் தையலர்கள் வரவேற்கும் வழக்கம், சங்ககாலத்தில் தழைத்திருந்தது.
நற்றிணை, குறுந்தொகை, புறநானூறு, பரிபாடல், சிலப்பதிகாரம் போன்றவற்றில், தைநீராடி வரும் பாடல்களைப் பார்க்கமுடிகிறது. இவற்றின் நெகிழ்வான நீட்சியாகவே ’மார்கழித் திங்கள் மதி நிறைந்த நன்னாள்’ என பனியில் குளிர்ந்து, அதன் சில்லிப்பைத் தன் பாடலில் அள்ளி வீசுகிறாள் ’சூடிக்கொடுத்த சுடர்க்கொடி’யான ஆண்டாள்.
‘தீங்கின்றி நாடெலாம்’ வளம்சூழ வாழவேண்டும் என்னும் பொது நோக்கிற்காகவே தமிழ் மகளிர், தை நோன்பிருந்ததை ஆண்டாள் மொழி அழகுறப் பேசுகிறது.
’மார்கழிக்குப் பெண்ணாக, மாசிக்குத் தாயாகப் பேர்கொழிக்க வந்த பெட்டகமாகத்’ தைப்பாவையைப் பொங்கல் வைத்துப் பூரிப்பாய் வரவேற்பது, வளமையான வழக்கமாயிற்று. அதுவே தமிழர் புத்தாண்டாகவும் தமிழ் அறிஞர்களால் கொண்டாடப்படுகிறது.
ஒட்டுமொத்த தமிழ்ச் சமூகமும்,
’தரணி ஆண்ட தமிழனுக்குத்
தை முதல் நாளே தமிழ்ப்புத் தாண்டு!’
-என்கிற புரட்சிக் கவிஞரின் குரலை, காலத்தின் மொழியாக ஏற்றுகொண்டுவிட்டது. எனவே, தைப் பொங்கல், எல்லாத் திக்கிலும் தமிழ்ப் பொங்கலாய்ப் பொங்கி வழிந்துகொண்டிருக்கிறது.
இந்த தைத்திருநாளை தமிழ்ப் புத்தாண்டாகவும், பொங்கல் திருநாளாகவும் கொண்டாடும் அனைவருக்கும் அகங்கனிந்த வாழ்த்துக்கள். தமிழர்கள் வாழ்வில் என்றென்றும் பொங்கட்டும் மகிழ்ச்சிப் பொங்கல்.