எதையும் கொண்டாடி மகிழ்வதே தமிழரின் மரபு; மனிதனைப் பக்குவப்படுத்தும் இலக்கியத்தைக் கொண்டாடித் தீர்க்க வேண்டாமா? இலக்கியத் திருவிழாக்கள் நிச்சயமாக இலக்கியத்திற்கு நாம் செய்யும் கைமாறு என்றே சொல்லவேண்டும். இலக்கியமானது பல்வேறு வடிவங்களைப் பெற்றிருந்தாலும் அதன்வாயிலாக அதை வாசிப்பவருக்குச் சொல்லவந்ததைத் திறம்படச் சொல்லிவிடவேண்டும்.
நாமெல்லாம் போற்றிமகிழும் மகாகவி பாரதியின் ‘பிறநாட்டு கலைச்செல்வங்கள் யாவும் கொணர்ந்திங்கு சேர்ப்பீர்’ என்ற கூற்றானது சிந்திக்கத்தகுந்தது.
மொழிபெயர்த்தல் மட்டுமின்றி பிறநாட்டின் இலக்கிய வடிவங்களையும் தமிழில் அறிமுகம் செய்து, புத்திலக்கியம் படைக்க வித்திட்டவன் பாரதி. ஜப்பானைப் பிறப்பிடமாய் கொண்டு உலகெங்கிலும் பரவிய ஹைக்கூ இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில்தான் முதன்முதலாக இந்தியாவிற்குள் அறிமுகமானது. 1916-ஆம் ஆண்டில் வங்கத்திலும், தமிழகத்திலும் சமகாலத்தில் அறிமுகமானது. ஹைக்கூவை வடஇந்தியாவில் அறிமுகம் செய்தவர் தேசிய கவி ரவீந்திரநாத் தாகூர், தென்னிந்தியாவில் அறிமுகம் செய்தவர் மகாகவி பாரதியார்.
ஒரு கவிதை வடிவத்தைக் கவிஞர்களே நிராகரிக்கும், அவமதிக்கும் அவலநிலையைத் தமிழில் அதிகம் சந்தித்தபோதிலும் பல தடைகளைத் தாண்டி, தமிழோடு வலம்வந்துகொண்டிருக்கும் ஹைக்கூ, அரைநூற்றாண்டில் தொட்டிருக்கும் உயரம் வியப்புக்குரியது.
எத்தனையோ எதிர்ப்புக் குரல்கள் இருந்துகொண்டிருந்தபோதிலும் ஹைக்கூவை, ஹைக்கூ கவிஞர்கள் கொண்டாடி மகிழ்ந்தேவந்தனர். அப்படியாய் ஹைக்கூவிற்காகப் பெரிய விழா எடுக்கும் முயற்சியில் உதித்ததே ஹைக்கூ மாநாடு நடத்தும் சிந்தனை. திருச்சியில் அதன் செயல்வடிவமாக முதல் முயற்சியாய் 2002-ல் நடந்தேறியது ‘தமிழ் ஹைக்கூ: முதலாம் உலக மாநாடு’. ஹைக்கூ வரலாற்றின் முக்கிய நிகழ்வு இந்த முதல் மாநாடு.
அதில் பெற்ற அனுபவங்களைக் கொண்டு, 2023-ல் அந்தமானில் இரண்டாம் மாநாடு நடைபெற்றது.
'அனுபவங்களே செயல்களின் தாய்' என்பதற்கிணங்க, இரண்டு மாநாடுகள் தந்த அனுபவங்களின் வழியாகத் திட்டமிடப்பட்டு, சங்கம் வைத்து தமிழ் வளர்த்த மாமதுரையில் மூன்றாம் மாநாடும் கடந்த ஜூன் 9 அன்று நடைபெற்றது. மதுரை உலகத் தமிழ்ச்சங்கம், தமிழ் ஹைக்கூ கவிதையாளர்கள் இயக்கம், இனிய நந்தவனம் இதழ் ஆகியன இணைந்து நடத்திய ‘தமிழ் ஹைக்கூ: மூன்றாம் உலக மாநாடு’ மதுரை உலகத் தமிழ்ச்சங்க அரங்கத்தில் நடந்தேறி யது.
மாநாட்டின் முதல் நிகழ்வாக மதுரை உலகத் தமிழ்ச் சங்கத்தின் முகப்பில் அமைந்திருக்கும் ‘குறுகத் தரித்த குறளோனாம்’ வள்ளுவப் பெருந் தகையின் உருவச்சிலைக்கு இலங்கையைச் சேர்ந்த இலக்கிய புரவலர் ஹாசிம் உமர் மலர்மாலை அணிவித்து மரியாதை செய்தது விழாவின் நல்லதொரு தொடக்க மாய் அமைந்தது. அதைத்தொடர்ந்து மாநாட்டு நிகழிடமாம் கவிஞர் மித்ரா அரங்கத்திற்கு முன்பு தோரணமாய் தொங்கவிடப்பட்டிருந்த கவிஞர் ஆ.உமாபதியின் கைவண்ணத்தில் தீட்டப்பட்ட ஓவியங்கள் அடங்கிய ஹைக்கூ கவிதைகளின் புகைப்படக் கண்காட்சியைத் தமிழ் ஹைக்கூ முன்னோடி ஓவியக் கவிஞர் அமுதபாரதி திறந்துவைத்தார்.
இந்நிகழ்வுகளைத் தொடர்ந்து மாநாடு இனிதே தொடங்கியது. ‘இசையில்லாத தொடக்கமா? சிவகங்கை சீமையைச் சார்ந்த கவிஞர் மு.தமிழ்க்கனலின் இசைப் பாடலோடு மாநாடு களைகட்டியது.
சிற்றுயிர்களின் மீதான நேசம்:
மாநாட்டில் தலைமை வகித்த வரவேற்புக் குழுவின் தலைவர் கவிஞர் சகா என்ற கஜேந்திரன் தலைமையுரை ஆற்றினார். ஹைக்கூ நால்வரின் முன்னோடியாம் பாஷோ இயற்கையின்மீது வைத்திருந்த பிணைப்பானது அவரது படைப்புகளில் வெளிப்பட்டதை நினைவுபடுத்தினார். அதுபோலவே மனிதப் பண்பையும் அதனோடு சிற்றுயிர்களை நேசிக்கும் பண்பையும் வெளிப்படுத்தும் வகையில் ஹைக்கூ படைப்புகள் அமையவேண்டும் என்பதை மாநாட்டு செய்தியாகக் கூறினர். வரவேற்புக் குழுவின் செயலாளர் மூரா அனைவரையும் அழகுத் தமிழால் வரவேற்றார்.
மாநாட்டின் தொடக்கவிழாவினைத் தனது கவித்துவ ஆற்றலால் கவிவரிகள் ததும்ப ஒருங்கிணைத்தார் கவிஞர் அன்புத்தோழி ஜெயஸ்ரீ. நிகழ்வில் ஹைக்கூ இலக்கியத்தை ஊக்கப்படுத்திக்கொண்டிருக்கும் ரொட்டேரியன் டாக்டர் கே.சீனிவாசன், மகாகவி பாரதியாரின் கொள்ளுப்பெயர்த்தி கவிஞர் உமாபாரதி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
வாழ்த்துப் பூத்தூறல்:
திண்டுக்கல் சேவைவரி கலால் சுங்கவரித்துறை உதவி ஆணையர் ஜி.வெங்கட் சுப்பிரமணியன், த.மு.எ.க.ச.- அறம் கிளை தலைவர் எழுத்தாளர் அ.உமர்பாரூக்ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.
ஹைக்கூ மாநாடு எதற்காக?
கொண்டாட்டமேயானாலும் கூடிக் கலைதலில் நன்மை இருக்கவேண்டும். நிகழ்வு நடப்பதன் தேவையை உணர்ந்து அதைக் கொண்டுசெலுத்துவதே பயனாய் அமையும் என்கிற உணர்வோடு, ‘மாநாடு எதற்காக?’என்ற தலைப்பில் பேசினார் கவிஞர் நந்தவனம் சந்திரசேகரன்.
தமிழ் ஹைக்கூவின் பாதையும் பயணமும்:
ஹைக்கூ உலகிற்குள் பலரையும் பிரேவேசிக்க வைத்தவரும், ஹைக்கூ உலகிற்குள் வந்தவர்களுக் கெல்லாம் உந்துசக்தியாகவும் பெரும் உற்சாகமூட்டு பவராகவும் விளங்கும் கவிஞர் மு.முருகேஷின் நோக்கவுரை மாநாட்டின் நோக்கத்தை தீர்க்கமாய் முன்வைத்ததோடு, தமிழ் ஹைக்கூ அடுத்து எத்திசை நோக்கிப் பயணிக்கவேண்டுமென்கிற உத்வேகத்தையும் அளித்தது.
"இலக்கியப் படைப்பு எதுவானாலும் அது
வெறும் வடிவம் சார்ந்தது மட்டுமல்ல; அதன் பொருளும்
சமூகப் பயன்பாடும் அதன் உள்ளடக்கத்தில் இருக்
கிறது. இந்த மாநாடு நம்மை நாம் புதுப்பித்துக்
கொள்ளவும், ஹைக்கூவை அடுத்த கட்டத்திற்கு நகர்த்திச்செல்லவும் பயன்படட்டும்” என்றார்.
தொடக்க நிகழ்வில் ‘தூண்டில்’ ஹைக்கூ சிறப்பு மலரும், தமிழ் ஹைக்கூ கவிதையாளர்கள் இயக்கத்தின் இலட்சினையும் வெளியிடப்பட்டன.
உடனடி ஹைக்கூ போட்டி:
மாநாட்டு மேடையில் உடனடி ஹைக்கூ போட்டி அறிவிக்கப்பட்டது. ஓவியக் கவிஞர் ஆ.உமாபதியின் கைவண்ணத்தில் இரண்டு ஓவியங்கள் காட்சிப் படுத்தப்பட்டு, அந்த ஓவியங்களுக்கு கவிதை எழுதுமாறு கவிஞர்கள் பணிக்கப்பட்டனர். இரு நூறு பிரதிநிதி களுக்கும் மேற்பட்டோர் கலந்துகொண்ட மாநாட்டில் சரியாய் 186 கவிஞர்கள் போட்டியில் ஆர்வத்துடன் கலந்துகொண்டனர்.
ஹைக்கூ வாசிப்பரங்கம்:
காலை, மாலையென இரு ‘ஹைக்கூ வாசிப்பரங்கம்’ நடைபெற்றன. ஐம்பதுக்கும் மேற்பட்ட கவிஞர்கள் பங்கேற்ற இந்த வாசிப்பரங்கில், அவர் களே… இவர்களே… என்கிற எந்த பாராட்டு வரிகளுக்கும் இடமின்றி, ஒவ்வொரு கவிஞரும் மேடையேறி, தலா 3 கவிதைகளை வாசித்தனர். முதல் வாசிப்பரங்கத்தை கவிஞர் பிரியா ஜெய காந்த், இரண்டாவது வாசிப்பரங்கத்தை கவிஞர் மலர்மகளும் சிறப்பாய் ஒருங்கிணைத்தனர்.
அனுபவமே சிறந்த ஆசான்:
‘ஹைக்கூவும் நானும்’ எனும் தலைப்பில் அனுபவங்களைப் பகிரும் அரங்கினை கவிஞர் கம்பம் புதியவன் ஒருங்கிணைத்தார். ஓவியக் கவிஞர் ஸ்ரீரசா, அவைநாயகன், சு.இளவரசி, பசுமலை பாரதி, பிரேமா கிறிஸ்டி ஆகிய்யொ அனுபவங்களைப் பகிர்ந்தனர்.
அயலகக் கவிஞர்களின் பகிர்வரங்கம்:
மாநாட்டில் பங்கேற்பதற்காக வெளிநாடுகளில் இருந்துவந்து பங்கேற்ற மலேசியாவை சேர்ந்த கவிஞர் ந.பச்சைபாலன், மகேந்திரன் நவமணி, சிங்கப்பூரைச் சேர்ந்த கவிஞர் டி.என்.இமாஜான், ஆதிரன், இலங்கையைச் சேர்ந்த மருத்துவர் ஜலீலா முஸம்மில், கேரளாவைச் சார்ந்த கவிஞர் பெரியார் விஜயன் ஆகியோர் பேசினர். இந்த அமர்வை கவிஞர் ஜா.சலேத் ஒருங்கிணைத்தார்.
விருதுகளும் பரிசுகளும்:
அயலகத்திலிருந்து தமிழில் ஹைக்கூ படைத்துவரும் கவிஞர்களுக்கு ‘ஹைக்கூ பேரொளி’ எனும் விருது வழங்கப்பட்டது. ஹைக்கூ மாநாட்டை யொட்டி கவிஞர் கவிமுகில் நடத்திய ஹைக்கூ கவிதைப்போட்டியில் பரிசு பெற்ற கவிஞர்களுக்கு பரிசுத்தொகை வழங்கப்பட்டது. ‘தூண்டில்’ ஒன்பதாவது இதழில் வெளியான சிறந்த ஹைக்கூ கவிதைகளுக்காக கவிஞர் கார்முகிலோன் வழங்கும் புத்தகப் பரிசும், ஹைக்கூ வாசிப்பரங்கில் சிறப்பான ஹைக்கூ வாசித்த கவிஞர்களுக்கு கவிஞர் தனலெட்சுமி பாஸ்கரன் வழங்கிய நூல் பரிசும் வழங்கப்பட்டன. ஓவியங்களுக்கு சிறந்த ஹைக்கூ கவிதைகளைப் படைத்த கவிஞர்களுக்கு கவிஞர் அமரன் வழங்கிய புத்தகங்கள் பரிசாக வழங்கப்பட்டன.
நூல்கள் மலர்ந்த பூந்தோட்டம்:
மாநாட்டின் நெகிழ்வான - உற்சாக அரங்கமாக மாறிப்போனது நூல் வெளியீட்டு நிகழ்வு. 38 ஹைக்கூ நூல்கள் ஒரே மேடையில் வெளியிடப்பட்ட சாதனை நிகழ்வு என்றே இதைச் சொல்லலாம். சற்றும் தொய்வில்லாமல் சீராகப் பாயும் விமானத்தைப் போல இந்நிகழ்வு நடைபெற்றது. கவிஞர்கள் பலரும் தங்களின் இனிய குடும்பத்தினருடன் மேடையேறி நூல்களைப் பெற்ற அந்த அனுபவம் என்றென்றைக்கும் மறக்கவே முடியாத ஒன்று.
எங்கும் ஹைக்கூ; எதிலும் ஹைக்கூ:
மாநாட்டு நிறைவுரையாக கவிஞர் தங்கம் மூர்த்தி பேசும்போது, “ஹைக்கூவானது பாதி திறந்த கதவாக இருக்கவேண்டும்; மீதிக் கதவை வாசகன் திறக்க வேண்டும். ஒரு நல்ல கவிதையானது ஞாபக யுத்தத்தை நடத்திக்கொண்டே இருக்கும். ஹைக்கூ எழுதி விட்டுச் சொற்களிலிருந்து எழுதியவர் இறங்கி விடவேண்டும், வாசகன் அதன் மீதேறி பயணிப் பான். எல்லோரிடத்திலும் சொற்கள் இருக்கிறது, ஆனால் ஒருவனுக்கு சொற்கள் வசப்படவேண்டும்.
சொற்களுக்கு ஒருவன் சுடர் ஏற்றவேண்டும். காட்சியை படம்பிடிப்பவனே கவிஞன் ஆகிறான். சில நேரங்களில் ஹைக்கூவை ஒருமுறை வாசிக்கும்போது வசப்படாது. இரண்டு மூன்றுமுறை வாசிக்கும்போது வசப்படும். சக கவிஞர்கள் ஒருவரை ஒருவர் பாராட் டிக்கொள்வது குறைந்துவரும் நிலையில் மாநாடானது ஒரு குடும்ப ஒன்றுகூடலாகவே எனக்கு தோன்றுகிறது” என்று தனது கம்பீரமான உரையை வழங்கினார்.
மாநாட்டில் முத்தாய்ப்பாக மூன்று தீர்மானங் கள் நிறைவேற்றப்பட்டன.
1. மறைந்த கவிக்கோ அப்துல் ரகுமான் பெயரால் தமிழக அரசு ஆண்டுதோறும் சிறந்த ஹைக்கூ கவிஞர்களுக்கு விருதுகளை வழங்கவேண்டும்.
2. உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் ரூ.5 இலட்சம் வைப்புநிதி செலுத்தி, ஹைக்கூ இருக்கையை உருவாக்கவேண்டும்.
3.தமிழக அரசு நூலகங்களுக்கு கொள்முதல் செய்யப்படும் நூல்களில் ஹைக்கூ நூல்களையும் வாங்கவேண்டும்.
மாநாட்டில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட ரொட்டேரியன் டாக்டர் கே.சீனிவாசன், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் ஹைக்கூ இருக்கை அமைப்பதற்கான வைப்புநிதி ரூ.5 இலட்சத்தை தானே நன்கொடையாக வழங்குவதாக மேடையிலேயே அறிவிக்க, மாநாட்டுத் தீர்மானங் களுள் ஒன்று சொன்ன சில நிமிடங்களிலேயே நிறைவேறியது பெரிதும் மகிழ்வைத் தந்தது.
நிறைவாக, நன்றியுரைக்குப் பிறகும் யாரும் கலைந்துசெல்ல மனமின்றி, கூடிநின்று பேசிக் கொண்டும், நூல்களைப் பகிர்ந்துகொண்டும் இருந்தனர்.
‘அடுத்த ஆண்டு இலங்கையில் நடைபெறும் மாநாட்டில் சந்திப்போம்’ என்கிற உற்சாகத்தோடு விடைபெற்றனர்.
மாநாட்டில் மனதில் தங்கிய ஹைக்கூ வரிகள்:
மரங்களை வெட்டியதும்
சாளரத்தில் நின்றுபோனது
குயிலின் இசை.
-மகேந்திரன் நவமணி
என்ன சுவையோ
குஞ்சுகள் மட்டுமே அறியும்
தாய்க்குருவி அதக்கிய உணவு.
-ஜலீலா முஸம்மில்
சாளரத்தின் அருகில்
தேன்சிட்டுகளின் கூடு
இப்போதெல்லாம் திறப்பதே இல்லை.
-ஆதிரன்
ஒற்றைத் தலையில்
எத்தனை உச்சிவகிடுகள்
அருகில் தென்னங்குருத்துகள்.
-பெரியார் விஜயன்
பெட்டியின் மீது
படுத்து உறங்குகிறார்
சவப்பெட்டி செய்பவர்.
-வலம்புரிலேனா
கூவிய குயில்
சட்டென்று நிறுத்திக்கேட்டதுv காக்கையின் தனி கீதம்.
-டி.என்.இமாஜான்
வாடகை வீடு மாறும்நாளில்
அவள் நட்ட செடியில்
சில பூக்கள்.
-ந.பச்சைபாலன்