கொரோனா காலம், நம்மை மூச்சுப்பயிற்சி செய்யச் சொல்லி அறிவுறுத்துகிறது. சித்த மருத்துவர்கள் மட்டுமல்லாது ஆங்கில மருத்துவர்களும் மூச்சுப் பயிற்சியை பரிந்துரைக்கின்றனர்.

இந்த தியானம், மூச்சுப் பயிற்சி, வர்மக் கலை, போன்றவை மிகத் தொன்மையான, நம் பண்பாட்டோடு ஒன்றியவை ஆகும். திருமூலரின் திருமந்திரம் மூச்சுப்பயிற்சி, தியானம் போன்றவற்றைக் குறித்து பல இடங்களில் விவரிக்கிறது.

பழந்தமிழ் இலக்கியங்கள் பலவற்றிலும் தியானம், வர்மக் கலைகள் பற்றிய கருத்துகள் இடம் பெற்றுள்ளன. சீன தேசம் முதல் உலக நாடுகள் பலவும் போற்றுகிற நம் போதி தர்மர், தமிழ்ப் பண்பாட்டையும், கலைகளையும் நன்கு உள்வாங்கிய தமிழ்த் துறவியாகத் திழ்ந்துள்ளார். அவர் நமது தியானம், வர்மக் கலை போன்றவற்றை உருமாற்றி புதியதொரு கலையினைக் கற்பித்திருக்கி றார் என்பதனை எடுத்துரைப்பதே இக் கட்டுரையின் நோக்கம் ஆகும்.

duravi

Advertisment

தமிழகத்தில் இருந்து சீன நாட்டிற்குச் சென்ற போதி தர்மர் நமது தியான முறைகளை அடித்தளமாகக் கொண்ட புதிய பௌத்த மார்க்கத் தைத் தோற்றுவித்துள்ளார். அதுவே சான் பௌத்தம் என்று அழைக்கப்படு கிறது. போதி தர்மரால் தோற்றுவிக்கப் பட்டதாகக் கருதப்படும் இந்த பௌத்த சமயம் நமது நாட்டின் தியான முறைகளையே அடிப்படையாகக் கொண்டுள்ளது என்பர்.

நமது பண்பாட்டில் மிகத் தொன்மையானதாகத் தியானம் அமைந்துள்ளது. தியானம் யோக கலை என்பன மனிதன் வாழும் முறையினைச் செம்மைப் படுத்துவதற்காக நமது முன்னோர்களால் உருவாக்கப்பட்ட வைகள் ஆகும். அவற்றை அரிதின் முயன்று உருவாக்கியவர்களைச் சித்தர்கள் என்று நாம் அழைக்கிறோம்.

அவர்களால், மூச்சுக் கட்டுப்பாடு, மனதை ஒரு நிலைப்படுத்துதல் போன்ற யோக முறைகள் கற்பிக்கப்பட்டுள்ளன. இந்த யோக முறைகளை முறையாகக் கடைப்பிடித்தால் தியானம் முழுமையாகக் கைக்கூடும் எனலாம். “எல்லா யோக முறைகளுமே ஆசனங்களின் முக்கியத்துவத்தை வற்புறுத்துகின்றன. இந்திய நாட்டுத் தவ வாழ்வில் ஆசனங்கள் சிறப்பான அம்சமாக விளங்குகின்றன. அவை மனத்தையும் உடம்பையும் சீரான கட்டுப்பாட்டில் வைத்துக்கொள்ள உதவுகின்றன எனலாம். உடம்பைத் தூய்மைப்படுத்தவும் உடம்பின் எல்லாப் பகுதிகளையும் ஒழுங்கு படுத்திக் கட்டுப்பாட்டில் வைத்துக்கொள்ளவும் ஆசனம் ஒரு சிறந்த சாதனமாகும். இயக்கம் ஒடுக்கப்பட்ட, தூய்மைப்படுத்தப்பட்ட, வலிமை ஏற்றப்பட்ட உடம்பே மன ஒருமைப்பாட்டிற்கும் தியானத்திற்கும் ஏற்ற சாதனமாகும்.

தமிழ்ச் சித்தர்கள் ஆசனங் களை இருவேறு பயன்கள் கருதிக் கையாண்டிருக்கிறார்கள். உடம்பைக் கட்டுக்குள் வைத்துக்கொள்ளும் ஒரு கலையாகவும், மருந்தாகவும் ஆசனங் கள் பயன்பட்டன என்பது ஒன்று. மற்றொன்று மனத்தை ஒடுக்கித் தியானத் தில் பரிபூரண வெற்றியைப் பெற உதவுகின்றன என்பது”என்கிறார் பேராசிரியர் டி.என்.கணபதி. தமிழில் கிடைக்கப் பெறும் சித்தர் பாடல்கள் மனித வாழ்வியலை அடிப்படையாகக் கொண்டவைக ளாகவே உள்ளன. அவற்றில் தியானம், மூச்சுப் பயிற்சி பற்றிய குறிப்புகள் ஏராளமாக உள்ளன. அதேபோன்று ஐம்புலன்களையும் நமது கட்டுப் பாட்டிற்குள் வைப்பதும் தியான பயிற்சியில் முதன்மையானது ஆகும். எனவேதான் திருவள்ளுவரும், “ஒருமையுள் ஆமைபோல் ஐந்தடக்கல் ஆற்றின் எழுமையும் ஏமாப்பு உடைத்து” -என்கிறார்.

ஆபத்துகளில் இருந்து தம்மைக் காத்துக்கொள்ள ஆமையானது நான்கு கால்கள், தலை ஆகிய ஐந்து உறுப்புகளையும் தனது ஓட்டிற்குள் அடக்கிகொள்ளும். அதே போன்று கண், காது, மூக்கு, வாய், மெய் ஆகிய ஐந்து புலன்களையும் அடக்கி ஆள வேண்டும். அவ்வாறு ஐம்புலன்களையும் அடக்கி ஆள தெரிந்தவர்களுக்கு அவையே நல்ல பாதுகாப்பு அரணாக அமையும் என்பதனை வள்ளுவர் மேற்கண்ட குறள் வாயிலாகத் தெளிவுபடுத்துகிறார்.

அதாவது தியான பயிற்சியின் ஒருநிலைப்படுத்துதல் தத்துவத்தை இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே திருக்குறள் எடுத்துரைக்கிறது.

“முழங்கி எழுவன மும்மத வேழம்

அடக்க அறிவு என்னும் கோட்டையை வைத்தேன்

பிழைத்தன ஓடிப் பெருங்கேடு மண்டிக்

கொழுத்தன வேழம் குலைகின்ற வாறே”

-என்பது திருமூலரின் திருமந்திரப் பாடல்,

வேழம் என்றால் யானை என்பது பொருள், இந்தப் பாடலில் ஐம்புலன்களை யானையாக உருவகப் படுத்துகிறார். யானை பார்ப்பதற்கு மிகப் பெரிய விலங்கு, ஆனால் சாதுவானது. தானாக முன்வந்து எந்த தீங்கும் செய்யாதது. அதேநேரம் அந்த யானைக்கு மதம் பிடித்து விட்டால் பெரும் நாசத்தை ஏற்படுத்திவிடும். அது போலவே நமது ஐம்புலன்களும் என்கிறார் திருமூலர். ஆசைகள், பந்த பாசம் என்பவை ஐம்புலன் அடக்கத்தை மீறி எழுந்து விட்டால் அவை தீய விளைவுகளுக்கு நம்மை ஆள்படுத்திவிடும். மதயானை போன்று கட்டுபாடு இன்றி செல்லும் புலன்களை அடக்கி ஆள்வதற்காகவே அறிவு என்னும் கோட்டை உள்ளது. அந்த கோட்டையை உடைத்துவிட்டு மீறி ஓடும்போது பெரும் கேடுகள் வருவதைத் தடுக்க இயலாது என்பதே இப்பாடலின் பொருள் ஆகும்.

இவ்வாறு மனதை ஒருநிலைப்படுத்துதலாகிய தியானம் குறித்து பழந்தமிழ் இலக்கியங்கள் பலவும் பேசுகின்றன. இதேபோன்று பிராணாயாமம் என்று சொல்லப்படுகிற மூச்சுப்பயிற்சி குறித்தும் திருமூலரின் திருமந்திரம் எடுத்துரைக்கிறது. இவற்றை எல்லாம் வைத்து ஆராயும்போது உலகின் பல்வேறு பகுதிகளிலும் இன்று போற்றப்படும் கலையாக இருக்ககூடிய தியானம் என்பது தமிழகத்தின் சொத்து என்று கூறலாம்.

தமிழ்த் துறவியாகிய போதி தர்மர் இவற்றையெல்லாம் அறிந்தவர். சீனா சென்ற அவர் முழுக்க முழுக்க நமது தமிழர் மரபை அடியொற்றி உருவாக்கிய புதிய மார்க்கமே சான் பௌத்தம் . உலகெங்கும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ள இந்த சான் பௌத்தம், தமிழர் வகுத்த வாழ்வியல் இலக்கணத்தை அடியொற்றியதே எனலாம்.

நமது தொன்மையான போர் மரபுகளில் ஒன்றாகவும் தற்காப்பு கலையாகவும் திகழ்வது வர்மக்கலை. வர்மக்கலை பல்வேறு படிநிலைகளை உடையது. அதன் உச்சநிலைகளில் ஒன்றாக நோக்குவர்மத்தைக் கூறுவர். தீவிரமான மனக்கட்டுப்பாடு உடைய ஒருவராலேயே அனைத்துவிதமான வர்மக் கலைகளையும் கற்றுத் தெளிய முடியும். போதிதர்மர் அனைத்து விதமான வர்மக் கலைகளையும் கற்று அறிந்துள்ளார். நோக்குவர்மம் என்னும் கலையையும் நன்கறிந்தவராக அவர் திகழ்ந்துள்ளார். போதிதர்மர் பொதிகை மலையில் தங்கியிருந்து பல்வேறு போர்க்கலைகளையும் வர்மக் கலைகளையும் கற்றுத் தேர்ந்தார் என்பர். இதன் மூலம் போதிதர்மருக்கும் தென்பாண்டி நாட்டிற்கும் நெருங்கிய தொடர்பு இருந்துள்ளமையை அறிய முடிகிறது. பொதிகை மலையில் வந்து தங்கியிருந்த அவர் அங்குதான் தியானத் தின் பல உயர் நிலைகளை அடைந்திருக்க வேண்டும். அதே போன்று களரிக் கலைக்கும் தென்பாண்டி நாட்டின் ஒரு பகுதியான நாஞ்சில் நாட்டிற்கும் நெருங்கிய தொடர்பு உண்டு. ‘நாஞ்சில்’ என்ற சொல்லிற்குக் கலப்பை என்று பொருள். உழவுத் தொழிலுக்குப் பயன்படும் கலப்பையானது களரிக் கலையோடு தொடர்புக் கொண்டுள்ளது. அது போலவே களரியும் நாஞ்சில் மண்ணோடு தொடர்புடையதாகும். இன்றும் களரி, சிலம்பம் போன்ற போர்கலைகள் அதிக அளவில் கற்பிக்கப்படும் பகுதியாக நாஞ்சில் நாடுதான் திகழ்கிறது.

இவற்றையெல்லாம் வைத்து ஆராயும்போது பரதேசியாகப் பல்வேறு பகுதிகளுக்கும் செல்லும் இயல்பு டையவராக இருந்துள்ள போதிதர்மர் தென்பாண்டி நாட்டோடும் நெருங்கிய தொடர்பு கொண்டுள்ளமையை அறிய முடிகிறது. அவருக்கும் தென் பாண்டிநாட்டிற்குமான தொடர்பு தனியாக ஆராயத்தக்கது. அவர் கற்றுத்தேர்ந்த தியா னம், வர்மக்கலை போன்றவையே அவரால் சீன நாட்டில் பரவலாக்கப்பட்டிருக்கும் சான்பௌத்தத்திற்கு அடிப்படை என்றால் மிகையன்று.