Advertisment

தமிழ் மணக்கும் திருநாள்! அறிஞர் அண்ணா

/idhalgal/eniya-utayam/tamil-manakkum-thirunal-scholar-anna

பொங்கல், உழவர் விழா!

தமிழர் திருநாள்!

நம்பொணாப் புராணக் கருத்தினை நாட்டினர் மனத்திலே மூட்டிவிடும் மற்றைய விழாக்கள் போலன்றி, உழைப்பின் பெருமையை உலகுக்கு உணர்த்தும் உன்னதமான விழா.

Advertisment

களத்திலே காணப்பட்ட பயன், வீட்டிலே, புதுப்பானையிலே, பொங்கிவழியும் நாள், பொங்கல் விழா. செந்நெலும், செங்கரும்பும், பச்சைக் காய்கறியும் பசும்பொன்நிறப் பண்டங்களும், வண்ணக் கோலமும், வாடாமலர்களும், மனைதோறும் குவிந்திடும் மக்கள் நன்னாள்! கூந்தலிலே மலர்கள் மொய்க்கும் நாள்! ஆடல், பாடல், கொட்டு முழக்கு, குதூகலம் கூத்தாடும் நாள், பொங்கல் விழா. பாடுபட்ட உழவன் தன் வீட்டுப்பானையில், தான் உழைத்ததில் சிறிதளவு பயனாவது, சேர்வதைக் காணும் நாள்.

களத்திலே செந்நெல் குவியலைக் கண்டபொழுதும், அது புதிய கலத்திலே தீம்பாலமுதாக மாறுவதைக் காணும்பொழுதும், அவனுடைய உள்ளத்தில் உவகை பொங்குகிறது! அவன் பாடுபட்ட நாட்கள், திருந்தாத நிலத்தில் அவன் பட்ட கஷ்டங்கள், வாய்க்காலுக்கு வரப்பெடுத்த காலம், வரப்பைச் சூழ்ந்த கள்ளி முள்ளியைக் கல்லி எடுத்துவிட்டுப் பயன்தருமிடமாகச் செய்தகாலம். முதலில் ஏர்பூட்டியது, எருவூட்டியது, பரம்படித்தது, மடைதிறந்தது, விதைதூவியது, களைஎடுத்தது, காற்றிலும் மழையிலும், கடும் வெயிலிலும், பயிரைப் பாதுகாத்தது, கதிர்காய்ந்ததும் களத்திலே குவிந்தது. இவை எல்லாம் அவன் நினைவிற்கு வ

பொங்கல், உழவர் விழா!

தமிழர் திருநாள்!

நம்பொணாப் புராணக் கருத்தினை நாட்டினர் மனத்திலே மூட்டிவிடும் மற்றைய விழாக்கள் போலன்றி, உழைப்பின் பெருமையை உலகுக்கு உணர்த்தும் உன்னதமான விழா.

Advertisment

களத்திலே காணப்பட்ட பயன், வீட்டிலே, புதுப்பானையிலே, பொங்கிவழியும் நாள், பொங்கல் விழா. செந்நெலும், செங்கரும்பும், பச்சைக் காய்கறியும் பசும்பொன்நிறப் பண்டங்களும், வண்ணக் கோலமும், வாடாமலர்களும், மனைதோறும் குவிந்திடும் மக்கள் நன்னாள்! கூந்தலிலே மலர்கள் மொய்க்கும் நாள்! ஆடல், பாடல், கொட்டு முழக்கு, குதூகலம் கூத்தாடும் நாள், பொங்கல் விழா. பாடுபட்ட உழவன் தன் வீட்டுப்பானையில், தான் உழைத்ததில் சிறிதளவு பயனாவது, சேர்வதைக் காணும் நாள்.

களத்திலே செந்நெல் குவியலைக் கண்டபொழுதும், அது புதிய கலத்திலே தீம்பாலமுதாக மாறுவதைக் காணும்பொழுதும், அவனுடைய உள்ளத்தில் உவகை பொங்குகிறது! அவன் பாடுபட்ட நாட்கள், திருந்தாத நிலத்தில் அவன் பட்ட கஷ்டங்கள், வாய்க்காலுக்கு வரப்பெடுத்த காலம், வரப்பைச் சூழ்ந்த கள்ளி முள்ளியைக் கல்லி எடுத்துவிட்டுப் பயன்தருமிடமாகச் செய்தகாலம். முதலில் ஏர்பூட்டியது, எருவூட்டியது, பரம்படித்தது, மடைதிறந்தது, விதைதூவியது, களைஎடுத்தது, காற்றிலும் மழையிலும், கடும் வெயிலிலும், பயிரைப் பாதுகாத்தது, கதிர்காய்ந்ததும் களத்திலே குவிந்தது. இவை எல்லாம் அவன் நினைவிற்கு வருகின்றன.

anna

Advertisment

அவனுடன் கூடச் சேர்ந்து உழைத்த உற்றார், உறவினர், ஆருயிர்த் தோழர்களைப் பற்றிய நினைவும் வருகிறது.

இவ்வளவு நற்கருத்துகளும், இவ்விழாவின் உட்பொருளாக அமைந்திருக்கிறது.

அறுவடைதரும் ஆனந்தத்தை, பயன்பெறுபவர் கொண்டு மகிழ்கின்றனர்-மகிழ்கையில், அவர்தம் மனத்திலே எப்படிப்பட்ட பாடுபட்டபிறகு, இந்த அறுவடை சாத்தியமாயிற்று என்பதுபற்றிய எண்ணம், எழாமலிருக்க முடியுமா?

பொங்கற் புதுநாள், தமிழர் திருநாள், வாழ்வின் உட்பொருளை உணருவதற்கு உதவும் நாள்.

அதோ பாலிலே குழையும் சீரகச்சம்பாவைப் பெறுவதற்குப் பாட்டாளி சிந்தியது வியர்வை! இரத்தமும் கூடத்தான்! பாற்பொங்கலாகும் போது, சுவையும் பயனும்! இச்சுவையும் பயனும் கிடைத்திடப் பல பாடுபட்டான்; பஞ்சையாகி நொந்தான் பகலெல்லாம் உழைத்துவிட்டு இரவிலே தூக்கம் பிடிக்காமல் புரண்டிருக்கிறான். கார்கண்டு களிப்பான்! கடும்காற்றுக் கண்டு கிலி கொண்டிருப்பான்! பூச்சிகண்டு பதைத்தான்! பூமி உலரக்கண்டு பீதி கொண்டான்! முளைகண்டால், முகம் மலரும்! களைகண்டால், கரம் செல்லும் களைய! கதிர்கண்டு ஒருகளிப்பு! அதிலே மணிமுற்றுவதுகண்டு ஒரு பூரிப்பு! அறுவடையின்போது மகிழ்ச்சி! இவ்வளவுமான பிறகுதான், இன்பம் தரும் பொங்கற் புதுநாள் காணமுடிகிறது!

களிப்பூட்டும் விழா நாளன்று, இந்தக்கருத்து மனைதோறும் உலவவேண்டும்.

வாழ்க்கையிலே இன்பம் பெறுவதையே குறிக்கோளாக மக்கள் கொண்டுள்ளனர். இந்த இன்பத்தைப் பெறுவதற்காகப் பாடுபடவேண்டும். முறையுடன் திறத்துடன்; களைக்காமல் சளைக்காமல் என்பதைப் பொங்கல் விழாதரும் பாடமாகக் கொள்வோம்.

முதலிலே, நஞ்சையும் புஞ்சையும், வரப்பு வாய்க்காலுடன், வேலி காவலுடன், வாவி அருவியுடன், இருந்ததோ பெருவெளி- மணற் காடு-சதுப்பு நிலம்-சிறுகாடு- இவையன்றோ வயல்களாக மாற்றப் பட்டன- மந்திரக் கோல் கொண்டா? -அல்ல- மதிவழி நடக்கும் மக்கள் பாடுபட்டதனால்.

எத்தனை இரவுகள் விழித்துக் கொண்டு எண்ணி எண்ணி ஏக்கமுற்றுப் பிறகு கண்டுபிடித்திருப்பான் உழவு முறையை! பல தோல்விகளுக்குப் பிறகு, துயரத்தால் தாக்கப்பட்ட பிறகு, விடாமுயற்சியின் பயனா கக் கண்டறிந்தான், நிலத்தைத் திருத்தி நற்பயனைக் காணும் முறையினை. இன்று சாதாரணமானதாகக் காணப்படும் முறைகளைக் கண்டறிய, முன்னாளில், மக்கள் அரும்பாடுபட வேண்டியிருந்தது.

இன்பம்பெற, உழைத்தாக வேண்டும், முறையும் திறனும் கொண்டு! இயற்கையை எழிலிட மாகவும், பயன்தருமிடமாகவும் ஆக்குவதற்குப் பாடுபட்டே, வெற்றி காணமுடிந்தது. இயற்கை, வளம் நிரம்பக்கொண்டது. வாழ்வளிக்கும் வல்லமை கொண்டது - ஆனால், இயற்கை, மனிதனின் மதியும் திறனும் கலந்த உழைப்பைப் பெற்றால் மட்டுமே, பரிசளிக்கும் பண்பு கொண்டது! மனிதனுக்குத் தெளிவு இல்லா நிலையிலே, இயற்கை, அவனை மிரட்டும் - மிரட்டுகிறது - மிரட்டி இருக்கிறது பன்னெடுங்காலமாக! பெருவெள்ளமாக, கடுங்காற்றாக, நெருப்பாக, இயற்கைக் கோலம் காட்டி மிரட்டியிருக்கிறது. சிங்காரச் சிற்றருவியாகிச் சிந்துபாடி இருக்கிறது! சந்தனக் காட்டிலே உலவி நறுமணத்தைச் சேர்த்தெடுத்துக்கொண்டு வந்து சேர்க்கும் தென்றலாகி இன்பம் தந்திருக்கிறது! ஒளியும் ஒலியுமாகி, திருவிளக்காகவும், தீங்குழலிசையாகவும் மக்களை மகிழ்வித்திருக்கிறது. இயற்கை ஓர் இன்பவல்லி - ஆனால், ஒரு ஜாலக்காரி! அவள் மிரட்டுவது கண்டு, அவளை அடியோடு வெறுத்து ஒதுக்கி விட முடியாது- ஒதுக்கிடின், மக்களுக்கு வாழ்வில்லை-

அவள் புன்னகை கண்டு பூரித்துச் செயலற்றுமிருந்து விடமுடியாது-வாழ்க்கை செம்மைப்படாது.

இயற்கை, மனித முயற்சியினாலும், மதியின் வளர்ச்சியினாலும், கட்டுப்படுத்தப்பட்டுப் பயன்தரும் விதமாகப் பணியாற்றும் பாவையாக்கப் படவேண்டும். நீரின்றி வாழமுடியாது. நீரிலேயே வாழவும் முடியாது! நெருப்பின்றி வாழ முடியாது! நெருப்பிலேயே வாழவும் முடியாது! இயற்கையின் உயிர் இல்லை. காற்றிலேயே இருந்துகொண்டிருக்க முடியாது! இயற்கையின் சக்திகளின்றி வாழ முடியாது.

ஆனால், இயற்கையுடன் மட்டுமே வாழவும் முடியாது! தானாக விளைவதைக் கண்டு, உண்டு, நீருள்ள இடத்திலே சென்று தண்ணீரை உண்டு, காற்றடித்தால் கஷ்டப்பட்டு, நெருப்புப் பரவினால் பயந்தோடி, வெள்ளம் கிளம்பினால் மிரண்டோடி இயற்கையி னாலே ஆட்டிவைக்கப்படும் ஆதி மனித நிலையை விட்டு, மனிதன் மிகமிகக் கஷ்டப்பட்டு இன்று அடைந்துள்ள முன்னேற்றம், கொஞ்ச நஞ்சமல்ல - எண்ணிப் பார்த்தால் அவன் பெற்றுள்ள வெற்றிகள், சாமான்யமானவையல்ல என்பது தெரியும். ஆனால், அவன் பெற வேண்டிய வெற்றி களோ, அநேகம்- வளர்ந்தபடி உள்ளன.

*

மனிதகுலம், குரங்கு நிலை யிலிருந்து, கோயில் கட்டிக் கும்பிடும் நிலை அளவுக்கு வளர்ந்தும், எந்த இன்பம் இன்னமும் கிடைக்கவில்லையோ, அந்த இன்பத்தைப் பெறுவதற்கு, வள்ளுவர் அறநெறியைக் காட்டியிருக்கிறார்; அறுதியிட்டுக் கூறியிருக்கிறார்; அறத்தால் வருவதே இன்பம்!

வள்ளுவர் கூறிய அறம், ஆரிய முறைப்படி நம்மவருக்கு அறிவிக்கப்பட்டுள்ள தான தருமம் அல்ல - மக்களின் வாழ்விலே, உள்ள பொறுப்புகளுக்கும் கடமைகளுக்கும் ஏற்றபடி, வாழ்க்கைத் திட்டம்

அமைய வேண்டும் - ஒருவர் வாழ்வை மதித்து மற்றவர் நடத்தல் வேண்டும் - அவரவர்களுக்குள்ள கடமை யினின்றும் வழுவாதிருக்க வேண்டும் - வாழ உரிமை கொண்டோரே மக்கள் அனைவரும் என்ற பொது நீதியை அழிக்காதிருக்க வேண்டும். இது அறநெறி; - இதனை அறிந்து நடந்தால்தான் இன்பம் வரும் என்று கூறிய வள்ளுவர் வாக்கை, இன்பம் தரும் நாளாம் இப்பொங்கற் புதுநாளன்று மனத்திற் கொண்டு, அந்த அறநெறி தழைத்திடும் அரும்பணியாற்ற உள்ள உரம் கொள்ளக் கோருகிறோம், வள்ளுவர் வாழ்ந்த தமிழக மக்களை. வாழ்க தமிழ்த் திருநாடு! வளர்க அறநெறி!! (திராவிட நாடு பொங்கல் மலர் - 1949)

uday010121
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe