மே மாதம் முதல் வாரத்தில் சென்னை எழும்பூர் ஆவணக் காப்பகத்தில் “ஆவண மாக்கள்’’ (ஆவணப் பதிவர்கள்) என்னும் தலைப்பில் வரலாற்று ஆய்வாளரான ஆர்.பாலகிருஷ்ணன் ஐ.ஏ.எஸ். உரையாற்றினார்.
சங்க இலக்கியங்களில் இச்சொல் எப்படியெல்லாம் பயன்படுத்தப்பட்டிருக்கிறது என்பதை அதன் பாதையிலேயே பயணம் செய்து, நமது வரலாறே அதில் எழுதப்பட்டிருப்பதைஅவர் விளக்கிய போது, செம்மொழியானவள் தன்னை எப்படியெல்லாம் காத்துக் கொள்கிறாள்?!அவள் இனியவள் மட்டுமல்ல; வலியவளும் கூட!! என்ற எண்ணம் தானாய் தலைநிமிர்த்தியது.அவரது உரையில் பகிர்ந்த கருத்துக்களை அவரது மொழிநடையிலேயே இங்கே பார்ப்போம்.
இதுவரை உலகில் ஆறு செம்மொழிகள் இருக்கின்றன என்றால் திராவிட மொழிக் குடும்பத்தைச் சேர்ந்தவை மட்டுமே நான்கு செம்மொழிகள் ஆகும். இவற்றிலும் தமிழைப் போல தொன்மையான சங்க இலக்கியமோ, தொல்காப்பியம் போன்ற பழமையான இலக்கணமோ பிற மொழிகளில் இல்லை.
பொதுவான ஒரு சொல் என்றாலே, அது சங்க இலக்கியத்தில் இருக்கிறதா என்பதைத் தேடுவது எனக்கு கட்டாயமானதாக இருந்து வருகிறது.. “மாண்ட என் மனைவியுடன் மக்களும் இருந்தனர்’’ என்னும் வரியில், மாண்ட என்ற சொல்லுக்கு சங்க இலக்கியத்தில் ‘மாட்சிமை பொருந்திய’, ‘மதிப்பிற்குரிய’ என்று பொருளாகும். இன்று அச்சொல் ‘இறந்த’எனும் பொருளைக் கொண்டிருக்கிறது. நாற்றம் என்பதற்கு நறுமணம் என்றே பொருள். இன்று அதனை எதிர்ப்பதமாக பயன்படுத்திக் கொண்டிருக்கிறோம்.
இதே போல ஆவணம் என்பது யாது? மாக்கள் என்பது யார்? என்ற கேள்வியின் தேடலில் பெற்ற கருத்தையும் பகிர்ந்துகொள்கிறேன்.. பொதுவாக மனிதன் எழுத ஆரம்பித்ததேதனது பண்டப் பாத்திரங்களில்தான். அதற்கு கீறல் என்று பெயர்.. பானையைச் செய்த குயவன் கீறினான்; அதனை வாங்கியவன், இது எனது பானை எனக் குறிக்கும்படி கீறினான். நிலத்தை உடமையாக்கும்பொழுது, பழைய பத்திரங்களில் கையெழுத்திடும் இடத்தில் கீறல் என்றே எழுதியிருப்பதை நாம் இன்றும் கவனிக்கலாம்.
கிராமங்களில் துணியை வெளுப்பவர்கள் இன்னாரது வீட்டுத் துணி என்பதற்கு ஒரு குறியீடு வைத்திருப்பார்கள். அதுகூட எனக்கு சிந்துவெளியின் குறியீடு போலவே தோன்றும். அகநானூறு, பதிற்றுப்பத்து, நெடுநல்வாடை போன்ற நூல்களில் ‘ஆவணம்’ என்ற சொல் கடைவீதி என்ற பொருளைக் கொண்டு அதிக பயன்பாடு உடையதாக இருந்திருக்கிறது. சிலப்பதிகாரத்திலும் ஆவண வீதி (கடை வீதி) என்ற சொல்வருகிறது. ஆவணக்களம் என்பது ஊரறியவிற்பனை செய்யும் இடம் என்ற பொருளில் வருகிறது.
ஆவணக்காரன் என்றால் கடை வைத்துவாணிபம் செய்பவன். இச்சொற்களை சங்கஇலக்கியங்களிலும், தென்னிந்திய கல்வெட்டுகளின் சொற்கள் அடங்கிய தமிழ் கல்வெட்டுச்சொல் அகராதியிலும் காணலாம்.அதனைத் தொடர்ந்து, ‘

ஆவணக்காரன் என்றால் கடை வைத்துவாணிபம் செய்பவன். இச்சொற்களை சங்கஇலக்கியங்களிலும், தென்னிந்திய கல்வெட்டுகளின் சொற்கள் அடங்கிய தமிழ் கல்வெட்டுச்சொல் அகராதியிலும் காணலாம்.அதனைத் தொடர்ந்து, ‘உரிமை’ என்ற பொருளிலும் பயன்படுத்தப்பட்டிருக்கிறது. ஆவண ஓலை, ஆவணத்தாள் என்றால் பத்திரம் என்று பொருளாகும். ஆவணக் களரி என்பது பத்திரப்பதிவு ஆகும். பத்தாம் நூற்றாண்டில் தேவாரம் போன்ற பக்தி இலக்கியங்கள் தோன்றிய இடைக்காலங்களில் அடிமை என்ற பொருளிலும் பயன்படுத்தப்பட்டிருக்கிறது.
திருநாவுக்கரசு,அப்பர், சம்பந்தர் ஆகியோரது படைப்புகளில் இதனை நாம் காணலாம். இச்சொல் எப்பொழுது என்னவாக இருந்தது என்பதை நாம் புரிந்துகொண்டாலே நாம் நடந்து வந்த பாதையை அறிந்துகொள்ள
முடியும்.‘உரிமை’ என்கிற பொருளிலிருந்து வேறுபட்டு இடைக்காலத்தில் அது ‘அடிமை’ என்கிற பொருளில் அதிகமாகப் பயன்பாடு கொண்டிருக்கிறது.. அடிமைத் தொழிலாளர்களை ஒழிக்கும் திட்டம் என்ற ஒன்றுகூட இந்திரா காந்தியின் 20 அம்ச திட்டத்தில் இருந்தது. கணக்கெடுப்பின்படி, ஒவ்வொரு ஆண்டும் அரசு கொடுக்கின்ற அறிக்கையில், தற்பொழுது எத்தனை அடிமைத் தொழிலாளர்கள் இருக்கிறார்கள்; எவ்வளவு பேர் குறைக்கப்பட்டிருக்கிறார்கள் என்பதைக் கொடுக்கவேண்டும்.
இன்றளவும் இது நீடிக்கிறது.எனது உறவினர் அமெரிக்காவில் உதவி ஜனாதிபதியாக இருக்கிறாரென்றும், உயர்ந்த கம்பெனியில் நம்ம ஊர்க்காரர் சுந்தர் பிச்சை தலைமைப் பொறியாளராக இருக்கிறாரென்றும் இந்த நூற்றாண்டில் நாம் பெருமைப்பட்டுக் கொள்கிறோம். ஆனால் 15-ஆம் நூற்றாண்டுகளில் அவர்களது சம்மதமே இல்லாமல் இந்த மண்ணிலிருந்து தூக்கி எறியப்பட்டு, அடிமைகளாக மொரிஷியஸ் தீவிற்கும், ஃபிஜி தீவிற்கும், தென்னாபிரிக்காவிற்கும், ஆடு மாடுகள் போல அடிமைகளாக விற்கப்பட்டவர்கள் இருந்தார்கள். வயிற்றுப் பசியின் கொடுமையில் தன்னைத்தானே விற்றுக்கொண்டவர்களும் இருந்தார்கள்.
ஒரு மன்னனைப் பற்றி புலவன் எழுதி வைத்துவிட்டுச் சென்றது மட்டுமே வரலாறு என்பதில்லை. புறநானூற்றுப் பாடல்களில் போரில் வென்றவர்கள் இருப்பார்கள்; கொடை வள்ளல்கள் இருப்பார்கள்; கலிங்கத்துப்பரணி போன்ற நூல்களில் வன்முறை இடம்பெற்றிருக்கும்; பத்துப்பாட்டு, எட்டுத்தொகை போன்றவையெல்லாம் பெரிய மன்னர்களைப் பற்றிய பதிவைக் கொண்டிருக்கும்; புகழைப் பேசுவது மட்டுமே இந்த நூல்களின் நோக்கமாகும். இவ்வாறான நோக்கங்கள் எதுவுமின்றி, உரிப்பொருளாக திணையின் அடிப்படையில், பெயர் சொல்லாமல் தனது காதலைப் பேசும் மக்கள் எழுதிய அகநானூறு போன்ற இலக்கியங்களின் சொற்களுக்கு இடையேயும் வரலாறு ஒளிந்து கொண்டிருக்கிறது. அவற்றை நாம் கண்டெடுக்க வேண்டும்.
நோக்கமற்ற அகநானூற்று வரலாற்றை, புறநானூற்றைவிடவே மேலானதாக நாம் முழுமையாக நம்பலாம்.
மருதன் இளநாகனார் எழுதிய பாலைத் திணையைச் சேர்ந்த அகநானூற்றுப் பாடல்( 77) வரிகளில் சிலவான,
""இடி உமிழ் வானம் நீங்கி, யாங்கணும்
குடி பதிப்பெயர்ந்த சுட்டுடை முது பாழ்,
கயிறு பிணிக் குழிசி ஓலை கொண்மார்,
பொறி கண்டு அழிக்கும் ஆவணமாக்களின்,
உயிர் திறம் பெயர, நல் அமர்க் கடந்த
தறுகணாளர் குடர் தரீஇ, தெறுவர,
செஞ் செவி எருவை, அஞ்சுவர இகுக்கும்’’
-என்பதின் கருத்தாக, எங்கும் ஒரே வெப்பம்; வானம் இடிக்கிறது; ஆனால் மழை இல்லை; ஊரிலிருந்த மக்கள் குடிபெயர்ந்து விட்டனர். பாழ்பட்டுக் கிடக்கும் அந்த முதுமையான பாழ் மன்றத்தில், பானையிலுள்ள கட்டை அவிழ்த்து உள்ளிருக்கும் ஓலையை ஆவணப் பெரியோர் (மாக்கள்/ மக்கள்/ பெரியோர்) வெளியே எடுப்பதைக் காணும்போது அது, பகைவர்களைக் கொன்று போரில் வெற்றி கண்டு மாண்டு கிடக்கும் வீரனின் குடலை கழுகு பிடுங்கி இழுப்பதுபோல இருக்கிறது.
தலைவியின் நல்ல நெற்றியில் பசப்பு ஏற்படும்படி, கண்ணீர் வடிக்கும் இவளை விட்டுவிட்டு, இப்படியான இடத்திற்கா செல்ல இருக்கிறாய் நெஞ்சே? என்ற பொருளைக் கொண்டிருக்கிறது. இந்தப் பாடலில் குழிசி என்பது குடம் என்ற பொருளைக் கொண்டுள்ளது. குழிசி ஓலை என்றால்குடத்தில் இடப்பட்ட ஓலை/ குடவோலை என்பதாகும். கயிற்றால் கட்டி வைக்கப்பட்ட அக்குடம்மாற்றி வைக்கப்படவில்லை; மெய்யானதொன்று என்பதை உறுதி செய்து, கட்டை அவிழ்த்து தேர்ந்தெடுத்த ஓலையை வெளியே எடுத்து அதிலுள்ள பெயரை அறிவிப்போர், ஆவண மாக்கள்/ ஆவணப் பெரியோர் எனப்படுவர்.
மாக்கள் என்றால் மக்கள் என்ற பொருளினையே கொண்டிருக்கிறது. சிறுவனைக் கொண்டு குடத்திலுள்ள ஓலையைத் தேர்ந்தெடுக்கும் முறைக்கு ஆவண மாக்கள் என்று தமிழ் உரை ஆசிரியர்கள் ஒப்பிடுவது பொருத்தமில்லாதது. குடவோலை முறை என்ற சொல்லின் புரிதலிலும் வரலாற்றுப் பிழை இருக்கிறது. கிபி 907 - 955 ஆண்டுகளில் முதலாம் பராந்தகச் சோழனின் ஆட்சியிலும், 14-ஆம் ஆண்டு கால சோழப் பேரரசுகளின் ஆட்சியிலும், ‘குடவோலை’ வாரியம் எனப் பொறிக்கப்பட்ட கல்வெட்டுகள் இருக்கின்றன.
அதன் மூலம் அறிந்தவையாக, உத்திரமேரூர் கிராமம் என்பது,1200 கற்றறிந்த வைஷ்ணவ பிராமணர்களுக்கு நிலக்கொடையாக வழங்கப்பட்ட ஒன்றாகும். இவ்வாறு வழங்கப்பட்ட ஊர்கள், சதுர்வேதிமங்கலம், பிரம்மதேயம், தேவதான கிராமங்கள், பிராமணக் குடியிருப்புகள் என்றெல்லாம் அழைக்கப்பட்டன.கிபி 9-ஆம் நூற்றாண்டு முதல் 11-ஆம் நூற்றாண்டுவரை உத்திரமேரூர் சதுர்வேதி மங்கலம் பிராமணக் குடியேற்றமாக இருந்துள்ளது. ஊரிலுள்ள கல்வெட்டுகள் கிராமிய உள்ளாட்சி முறை குறித்த செய்திகளைப் பதிவுசெய்துள்ளன.
இங்கு மகாசபா, பிராமணா என இரண்டு கிராமிய சபைகள் இருந்துள்ளன. மகாசபா என்பது ஒரு பிரத்தியேக பிராமணர்களுக்கான உள்ளாட்சி அமைப்பாகும். இந்த நிர்வாகத்தில் மகா சபாவிற்கென ஒரு தேர்தல் நடத்துவார்கள். இதில் பங்கு பெறுபவர்களின் தகுதியாக, அவர் வேதம் படித்தவராக இருக்க வேண்டும். சாஸ்திரங்களிலும் காரியத்திலும் நிபுணராக அறிவிக்கப்பட வேண்டும். அதனை பிறருக்கு கற்பிக்கும் திறனையும் கொண்டிருக்க வேண்டும். 30 வயதைக் கடந்தவராகவும், குற்றம் குறைகளில் ஈடுபடாதவராக, தன் மனைவிஅல்லாதவரோடு உறவு வைத்துக் கொள்ளாதவராகவும் இருக்கவேண்டும்.
இவ்வாறான தகுதிகளை கொண்டவர்களது பெயர்களை எழுதி குடத்தில் இடுவார்கள். இதனை பொறுப்போடு கையாண்டு சிறுவனைக் கொண்டு ஓலையைத் தேர்ந்தெடுத்து மகா சபையின் பொறுப்பாளர்களை நியமிப்பவரே “ஆவண மாக்கள்/ஆவணப் பெரியோர்’’ எனப்பட்டனர். இம்முறைக்கு “குடவோலை முறை’’ என்பது பெயராகும். எனவே இது குறிப்பிட்ட சமூகத்தில் குறுகிய வட்டத்தில் நடக்கின்ற நிர்வாக நடவடிக்கைகளில் ஒன்றாகவே இருக்கிறது.
மொத்தத்தில் இந்த மகா சபை மண்டபம் உத்திரமேரூர் சதுர்வேதி மங்கலத்திற்கான குடவோலை தேர்தல் முறை உள்ளாட்சி நிர்வாகத்திற்கானதாக மட்டுமாகவே இருந்துள்ளது. அவ்வூரின் கோவிலின் அத்திட்டானத்தில் (பின்புற சுவரில்) தமிழ் கிரந்த கல்வெட்டுகளால் பொறிக்கப்பட்ட தகவல்கள், இந்திய தொல்லியல்அளவீட்டுத் துறையால் படியெடுக்கப்பட்டிருக்கின்றன. சங்க இலக்கியங்களில் குறிப்பிடும் ஆவண மாக்களுக்கும் குடவோலை முறை வாரியம் குறிப்பிடும் இடைக்கால கருத்துக்கும் எந்தவொரு தொடர்புமில்லை. உத்திரமேரூர் சதுர்வேதி மங்கலம் இருந்ததற்கோ அல்லது குடவோலை முறை இருந்ததற்கோ நமது சங்க இலக்கியங்களில் எந்தத் தரவுகளும் இல்லை.
“ஒரு ஆவணத்தை பொறுப்போடு கையாள்பவனே ஆவண மாக்கள்’’ என்று கொள்ளும்போது, தொல்காப்பியத்தில் 450 இடங்களுக்கு மேல் எம்மனார் புலவரென தனக்கு முன்பிருந்த புலவர்களையெல்லாம் குறிப்பிட்டுஅந்நூலைத் தொகுத்த புலவரும் ஆவண மாக்கள்தான். சங்க இலக்கியத்தில் பழைய நகரங்களைப் பற்றிப் பேசும் ஒரு மன்னன், “திறமை மிகுந்த கொத்தனார்கள், கட்டடப் பணியாளர்கள் போன்றோர் வறட்சி
யால் ஏற்பட்ட வறுமையால் வெகுநாட்களுக்கு முன்பே இடம்பெயர்ந்து விட்டனர். அவ்வாறான ஆட்களைப் பார்த்து அழைத்து வா’’ என்கிறார்.
மற்றுமொரு பாடலில் மதுரையில் வைகை ஆற்றில் பெண்கள் ஆரவார சப்தத்துடன் மகிழ்ச்சியாகக் குளிக்கின்றனர். இதனை ஒப்பிடுவதற்கு, “கள்ளூரில் ஒரு பெண்ணை விரும்பிய பிறகு, அவளை ஏமாற்ற எண்ணம் கொண்ட ஒருவனை, அறங்கூறும்அவயத்தில் நிறுத்தி, அவையோர்கள் விசாரித்தபோது, அவன் பொய் சாட்சி சொல்கிறான். அவர்கள் இருவரும் மரத்தின் கீழோ, மறைவான இடங்களிலோ இணைந்திருந்ததை கண்களால் கண்டவர்கள், உண்மையைச் சொல்லி உறுதிப்படுத்த, அவனை ஏளனப்படுத்தும்விதமாக, சுண்ணாம்புப் பொடியால் உடலை நனைத்து, கொல்லென சிரித்து, எள்ளி நகையாடினார். அந்தச் சிரிப்பு போல் இருந்தது வைகை ஆற்றில் குளிக்கின்ற பெண்களின் சிரிப்பு!’’ என்கிறார்.
இதில் கள்ளூர் எனும் ஊர் பெயரானது,சிந்துவெளியில் தொடங்கி, ராஜஸ்தான், மகாராஷ்டிரா, குஜராத், ஆந்திரா, கர்நாடகா, தமிழ்நாடு என்றெல்லாம் இடப்பெயர்வுஅடைந்திருக்கிறது. சங்க இலக்கியப் புலவர்களும் நெடுங்கால மீள் நினைவுகளை, வாய்வழிப் பாடல் மரபுகளை ஆவணமாக்கிய ஆவண மாக்கள்தான்! இன்றைய காலங்களில் இணையதளங்களில் மின்னேற்றம் செய்யப்படும் என்பதையெல்லாம் உணராமலேயே, பனை ஓலையில் எழுதப்பட்டிருந்த சங்க இலக்கியங்களை படியெடுத்து நகலாகக் கடத்தி வந்தவரும் ஆவண மாக்கள்தான்.
ஆனால் மக்களாட்சியென குடவோலை முறையில் தேர்தல் நடந்ததாக எந்தவொரு குறிப்பும் சங்க இலக்கியங்களில் இல்லை. அனைவரும் சமமென அரசாங்கத்தைத் தேர்ந்தெடுக்கும் உரிமையை மக்களுக்குக் கொடுத்து, ஜனநாயக ஆட்சி முறையைக் கொண்டு வந்தவர்கள் நமது தலைவர்களான காந்தி, நேரு, அம்பேத்கார் போன்றவர்கள்தான். நமது இந்திய நாடு குடியரசாக மாறுவதற்கு ஒரு நாள் முன்பே நமது தேர்தல் ஆணையம் உருவாக்கப்பட்டு விட்டது. குடியரசு ஆவதில் ஏதும் சிக்கல்கள் இருந்தால் அதனை எதிர்கொண்டு பின்புலமாகச் செயல்பட ஒரு ஆணையம் இருக்கவேண்டுமென்கிற நோக்கில் முன்னதாகவே ஏற்படுத்தப்பட்டது. இதன் முதல் தலைமை தேர்தல் ஆணைய அதிகாரியாக சுகுமார் சென் ஐ.சி.எஸ். பொறுப்பு வகித்தார்.
உலகையே ஆண்ட இங்கிலாந்து போன்ற நாடுகள்கூட அல்லாமல், ஆண்களுக்கும் பெண்களுக்கும் சம ஓட்டுரிமையை முதன்முதலில் அளித்த நாடு நமது இந்திய நாடு. தேர்தலை துரிதமாக நடத்துவதற்கு சுகுமார் சென்னை நேரு வற்புறுத்தியபொழுது, வாக்காளர் பட்டியலை தயாரிப்பதில் அவருக்கு சிக்கல்கள் இருந்தன. உத்தரப்பிரதேசம் போன்ற மாநிலங்களில் தன் வீட்டுப் பெண்களின் பெயரைவெளியில் சொல்லமாட்டேனென்று பிடிவாதமாக இருந்தார்கள். இன்னாரது மனைவியென அடையாளப்படுத்தினார்கள். அவ்வாறு சொல்பவர்கள் பல லட்சக்கணக்கில் இருந்தார்கள்.
ஓட்டுரிமை என்பது தனி மனித உரிமை. அதில் தனிப்பட்டவரின் அடையாளமே இருக்கவேண்டுமென அறிவித்து, பெயர் கொடுக்காத 20 லட்சம் பெண்களின் பெயர்களை வாக்காளர் பட்டியலிலிருந்து நீக்குவதற்கு உத்தரவிட்டார் தலைமை தேர்தல் அதிகாரி. இதில் நேருவிற்கே உடன்பாடு இல்லையென்றாலும் சுகுமார் சென் அதனை சாதித்துக் காட்டினார். ஐந்தாண்டுகள் கழித்து நடந்த அடுத்த தேர்தலில் அனைவரும்
தனது பெயரைக் கொடுத்து விட்டார்கள்.
இப்படியான வலிகளையெல்லாம் சுமந்துதான் நமது ஜனநாயகத்தை வளர்த்தெடுத்திருக்கிறார்கள். வாக்காளர் அட்டையில் புகைப்படம் இடம்பெறுவதும் சிக்கலாக இருந்தது. அதனை சட்டப்படி செயல்படுத்திய பெரும் பங்கு எனக்கு இருக்கிறது.
(மீதி அடுத்த இதழில்...)
-எழுத்தாக்கம்: பிரேமா சந்துரு