பார்த்த கணத்திலேயே எல்லோ ரோடும் சட்டெனப் பழகி விடும் எளிமை. தன்னைவிட வயதில் சிறியவர்களிடமும் காட்டும் பாசாங்கற்ற அன்பு. இலக்கியம், சினிமா என தமிழகமெங்கும், இந்தியாவெங்கும் சுற்றிவந்தாலும் அந்தக் கர்வத்தை என்றுமே சுமக்காத கனிவான பண்பு.
இவற்றின் கூட்டுக்கலவையே எழுத்தாளரும் இயக்குநரு மான ராசி அழகப்பன். அவரோடு உரையாடும்போது பல்வேறு புதிய செய்திகளும், அனுபவங்களும் அப்ப டியே அருவியெனக் கொட்டுகிறது. அருவியிலிருந்து தெளித்த சில சாரல் துளிகள் ‘இனிய உதயம்’ வாசகர் களுக்காக இங்கே; தாங்கள் பிறந்த திருவண்ணாமலை மாவட்டத் திலுள்ள ராயம்பேட்டை கிராமத்தின் நினைவுகள் இன்னமும் இருக்கிறதா..? பிறந்த ஊரை மறக்கமுடியுமா என்ன? தாயை எப்படி மறக்க முடியாதோ, அவ்வளவுக்குப் பிறந்த ஊரையும் மறக்கமுடியாது.
இப்போதும் ஊரிலுள்ளோர் தமது இல்ல நிகழ்வுகளுக்கு அழைக்கிறபோது மறக்காமல் சென்று வந்துகொண்டிருக்கிறேன். என் அக்கா உண்ணாமலை அங்கே தான் இன்னும் வசித்துக்கொண்டிருக்கிறார். அவருடைய மகள் சௌந்தர்யா, கீழ்பென்னாத்தூர் மேல்நிலைப் பள்ளியில் ஆசிரியராகப் பணியாற்றிக் கொண்டிருக்கிறார். வறுமையில் வாடியபோது அந்தக் கிராமம்தான் என்னை அரவணைத்து பாசத்தைப் பொழிந்தது.
காலையில் எழுந்ததும் தெருவில் பார்த்தால் நெசவாளர்கள் பாவு நீட்டி பணி செய்துகொண்டிருப் பார்கள். வெயில் ஏறுமுன் பாவு செய்து, தறியில் ஏற்றவேண்டும். அதில் வேலை செய்துமுடித்து குளித்து மூன்று மைல் தள்ளியிருக்கிற கருங்காலிக்குப்பம் இராமு ரெட்டியார் நடுநிலைப்பள்ளிக்கு ஓட்டமும் நடையுமாய் வரப்புகளில் சென்று, பள்ளிக்கூட மணி அடிப்பதற்குள் போய் பிரேயரில் நிற்கும் அந்த நாட்கள் இப்போதும் நினைவுக்கு வருகின்றன.
என் அப்பா சின்னசாமி தன்னந்தனியாய் நின்று, வேலை செய்து அடித்து உதைத்து என்னை வளர்த்தது இப்போதும் பசுமையாக மனதில் நிழலாடுகிறது. ஒன்றை முக்கியமாய் சொல்ல வேண்டும். மின்சாரம் வராத காலத்தில் இரவில் படிக்கிறோமா என்று வீடு வீடாக வந்து உளவு பார்த்த தறி வாத்தியார் சுப்பிரமணி, இப்போதும் ஏதோ ஒரு வேலையை எடுத்து கிராமத்தில் செய்துகொண்டிருக்கிறார். அவரைப் பார்க்காமல் நான் திரும்பமாட்டேன்.
சிறுவயதில் விளையாடிய நாவல் மரம், கொடுக்காப் புளி மரம், வரப்புகளில் புளிச்ச கீரைச் செடிகள் இல்லை.
மாறிவிட்டன வீடுகளும், தெருக்களும்; ஆனாலும் எப்போதும் கிராமத்தை என்னால் மறக்கவே முடியாது.
எளிய நெசவாளர் குடும்பத்தின் பிள்ளையாய் பிறந்து, சென்னை மாநிலக் கல்லூரியில் தமிழ் இலக்கியம் படிக்க வந்த பின்னணி குறித்து?
உண்மையில் இதுவொரு வேடிக்கையான கதை.
இது நிஜமா, பொய்யா என்றுகூட என்னால் இப்போது நினைத்துப் பார்க்கமுடியவில்லை.
திருவண்ணாமலை கலைஞர் கருணாநிதி கலைக் கல்லூரியில் புதுமுக வகுப்பு படித்து முடித்து, பாஸாகி விட்டேன் என்ற செய்தி வந்ததும் உடனே எதிர்வீட்டில் இருந்த முனுசாமி என்கிற உறவினர், ஏன் படிக்க வைக்கிறாய்? பேசாமல் தறிக் குழியில் இறக்கிவிடு. குடும்பத்திற்குப் பணம் கிடைக்கும் என்று சொல்லிவிட்டார். எல்லோரும் அதைத்தான் அறிவுறுத்திக் கொண்டிருந்தார்கள். என் தந்தையும், அப்படியே இருந்துவிடு என்று சொன்னார். இரண்டு மூன்று நாட்கள் நான் அழுதுகொண்டே இருந்தேன்.
இதைப் பார்த்து சகித்துக்கொள்ள முடியாமல் ஏற்கெனவே கடன்பட்டிருந்த மூன்றரை ஏக்கர் நிலத்தை முழுவதுமாக விற்றுவிட்டு, என் உடன்பிறந்த சகோதரி களுக்குச் சமமாகப் பணத்தைப் பிரித்துக் கொடுத்து விட்டார். என்னையும் அந்தப் பணத்தில் கல்லூரிக்குப் படிக்க அனுப்பினார். மாநிலக் கல்லூரியில் பி.எஸ்.சி. பாட்டனியில் சேர்த்துவிட்டார். அவருக்கே தெரியாது ஐந்து மாதம் கழித்து வந்து என்னைப் பார்த்தார். நான் இளங்கலை தமிழ் இலக்கியம் படித்துக்கொண்டி ருந்தேன்.
என்னைப் பார்க்க வந்த அப்பா, நேரடியாக பிரின்ஸ்பல் அறைக்குச் சென்றார். நாலு முழ வேட்டி, மேலுக்குச் சட்டை இல்லாமல் துண்டு மட்டும் போட்டுவந்திருக்கிறார். பிரின்சிபலை ஹெட்மாஸ்டர் என்று நினைத்துக்கொண்டு, “எங்க பையன் என்ன படிக்கிறான்? நல்லா படிக்கிறானா?“ என்று கேட்க, அதற்கு பிரின்ஸ்பல், “யார் நீங்க?“ என்று கேட்க, “ஹெட்மாஸ்டரா இருந்துகிட்டு இதுகூட தெரியலையா உங்களுக்கு? நல்லதாப்போச்சு. உங்கள நம்பி எம்புள்ளய அனுப்புறோம் பாருங்க, எங்களைச் சொல்லணும்?” என்று கேட்கவே, பிரச்சினை வெடித்தது. கிளர்க்கை விட்டு ஒவ்வொரு அறையாக என்னைத் தேடி, கடைசியில் பிடித்துக்கொண்டுபோய் நிறுத்தினார்.
இவர்தான் என் பையன் என்று அப்பா சொல்லவே, பிரின்சிபலாக இருந்த இராமச்சந்திரன், அன்றுமுதல் என்னைத் தொடர்ந்து விசாரித்து ஒழுங்காகப் படிக்கவேண்டும் என்று மிரட்டியது என்றுமே மறக்க முடியாத நினைவு.
சிறிய வயதிலேயே தாயை இழந்த நீங்கள், அந்தப் பெருந்துயரின் வலியை எவ்விதம் கடந்துவந்தீர்கள்?
துயரம் தான். ஆனால் பெரும் துயரமென்று சொல்லிவிட முடியாது. தெருவில் எல்லோரும் விளையாடிக் கொண்டிருப்பார்கள். அஞ்சாங்கல்லு, கிட்டிப்புள், கபாடி என்றெல்லாம் விளையாடிக் கொண்டிருக்கிறபோது நான் விளையாட முடியாமல் வீட்டில் சமையல் செய்துகொண்டிருப்பேன்.
இரவில் நிலா வெளிச்சத்தில் கோலிக்குண்டு ஆட்டம் ஆடுவார்கள். நான் விளையாடமுடியாது. சில சமயம் திருட்டுத்தனமாக அவர்களோடு சேர்ந்து விளையாடுவதும் உண்டு. அப்போது கோள்மூட்டி நண்பன், அப்பாவிடம் சொல்ல அடி செமத்தியாய் வாங்கியதுமுண்டு. நாவல் மரத்தில் ஏறி நாவல் பழம் பறிப்பார்கள். ஆனால் நான் அப்போது ஓடையில் சுள்ளி பொறுக்கிக்கொண்டு போய், அப்பாவிற்கு கால் வலி தீர்வதற்காக அடுப்பில் வெந்நீர் போட்டுக் கொடுப்ப தும் சமையல் செய்வதுமாக இருப்பேன். வாசலில் சாணி தெளித்து கோலம் போடுவது ஐந்தாவது வகுப்பிலேயே நான் என் வீட்டில் செய்த வேலை. எல்லோரும் விளையாடிக் கொண்டிருக்கிறபோது என்னுடைய நிலை விளையாடமுடியாமல் போனபோது, என் தாய் இல்லையே என்று நினைத்துக்கொள்வேன்.
அந்த இடத்தில் திருமணம் செய்துகொண்டுபோன என் அக்கா என்னை ஆறுதல்படுத்துவார்கள். இப்போது தான் தெரிகிறது, தாய் இல்லாத பிள்ளையை என்ன பாடுபட்டாவது வளர்க்க நினைத்தார் என்பது. தாயுமானவன் தானே அவர்!
நான் பெற்ற தாயைப் பார்க்கத்தான் முடியவில்லை. ஒரு வயதில் இறந்துவிட்டார். எனக்கு முகம்கூடத் தெரியாது.
புகைப்படமும் இல்லை. அதனால் என்ன? அன்பு என்றால் அம்மா தானே! அப்படி என்றால் அன்பு இருக் கிற இடமெல்லாம் என் அம்மாவாகத்தான் நான் பார்க்கிறேன். அம்மாவின் பெயரைச் சொல்லவில் லையே… என் அம்மா பெயர் பங்காரு அம்மாள்.
நீங்கள் பள்ளி மாணவராக இருந்தபோதே உங்களைக் கவிதை எழுதத் தூண்டியது ஆசிரியரா? தமிழா? காதலா? ம்… காதல் தான்.
எட்டாவது படிக்கும்போது வகுப்புத் தோழிக்கு எழுதிய காதல் வரிகளிவை;
அப்படிப் பார்க்காதே
திராட்சையே
பார்வையே
போதை தருகிறது
இதை எழுதியதற்கு ஹெட்மாஸ்டரிடம் எனக்கு
அடி கிடைத்தது.
மாட்டிவிட்டாள் படுபாவி. அதோடு நிறுத்தி விட்டேன்.
பிறகு வேட்டவலம் அரசு உயர்நிலைப் பள்ளியில் கே.அரிகிருட்டிணன் என்கிற ஆசிரியர், இந்திய சோவியத் நட்புறவுப் பாலம் என்ற தலைப்பில் வடாற் காடு மாவட்ட அளவில் ஒரு கவிதைப்போட்டிக்கு என்னைக் கேட்காமலேயே என் பேரையும் கொடுத்துவிட்டார். அதற்காக நான் வேட்டவலம் நூல் நிலையத்தில் சென்று கவியரசர் கண்ணதாசன், கலைஞர் மு.கருணாநிதியின் கவிதைகளைப் பார்த்து அதைப்போலவே, சோவியத் நட்புறவுப் பற்றி ஒரு கவிதை எழுதினேன். அந்தக் கவிதைக்கு உவமைக் கவிஞர் சுரதா முதல் பரிசு தந்தார். அந்தக் கணத்திலிருந்து தான் நான் கவிதை எழுத ஆரம்பித்தேன். அதற்குக் காரணம் என் ஆசிரியர்தான்.
கூடுதலாக என்னைக் கேலி செய்பவர்களின் எதிரே ஒரு படி முன்னேறிச் சென்று காண்பிக்கவேண்டும் என்கிற உணர்வும் மொழியின் மேல் என்னைப் பற்றுக்கொள்ள வைத்தது.
கல்லூரியில் படிக்கும்போதே கவிதைப் போட்டியில் வென்று, முத்தமிழறிஞர் கலைஞரின் கரங்களினால் நீங்கள் பரிசு பெற்ற அந்த அனுபவம் எப்படியிருந்தது?
ஆஹா, அதைச் சொல்லவும்வேண்டுமா?
வெறும் காலால் வரப்பில் பனித்துளியில் நடக்கும் போது கிடைக்கும் சிலிர்ப்பினூடே வானத்திலிருந்து சட்டென்று மழை பெய்தால் முழுவதும் நனைந்த படி செல்கிற சுகானுபவம்தான் முத்தமிழறிஞர் கலைஞர் மு.கருணாநிதியிடம் மாநில அளவில் நான் கவிதைக்காக முதல் பரிசு பெற்ற தருணம்.
செனாய் நகர் மாணவர் விடுதியில் இருந்து பஸ் ஏறி, மாநிலக் கல்லூரிக்கு வேட்டியுடன் சென்ற மாணவன் நான். என்னைக் கல்லூரியில் பாவாடை என்றுகூட கேலி செய்வார்கள். கன்னம் ஒட்டி இருக்கும். பார்க்க சுமார் மூஞ்சி ரகம். வறுமை. இந்தச் சூழலில் நான் கலைஞரிடம் பரிசு பெற்றபோது எல்லோரும் என்னை வியப்பாகவும் அங்கீகாரத்துடனும் நிமிர்ந்து பார்த்தார்கள். அந்தப் பார்வைதான் என் வாழ்க்கையில் முதலில் கிடைத்த பொக்கிஷமான கணம்.
அதன்பிறகு கட்டுரை, பேச்சு, நாடகம் என்று எல்லாவற்றிலும் புகுந்து விளையாடி, பரிசுகளை வாங்கிக் குவித்தேன்.
தமிழ் இலக்கியமும், முதுகலை பொதுநிர்வாகமும் படித்த நீங்கள் பத்திரிகையில் வேலைக்குச் சேர நேர்ந்தது ஏன்?
இளங்கலை தமிழ் இலக்கியம் கல்லூரி படிப்பு முடிந்ததும் என்ன செய்வது என்று தெரியாமல் நண்பர் அல்போன்ஸ் ராஜாவுடன் வீட்டில் தங்கிக் கொண்டு சதாகாலமும் இலக்கியம் பற்றிப் பேசிக்கொண்டி ருந்தோம்.
கவிஞர் முத்துலிங்கம் வீட்டுக்கு அடிக்கடி செல்வது வழக்கம். ஒரு நாள் என்னை அழைத்து, “என்ன செய்து கொண்டிருக்கிறாய்?” என்று கேட்டார். நான், “சும்மா இருக்கிறேன்” என்றேன். “இப்படி இருந்தால் எப்படி? ‘தாய்’னு ஒரு பத்திரிகை ஆரம்பித்து இருக்கிறார்கள். அங்கு போய்ப் பார்” என்றார். அதை நான் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை.
ஒரு வாரத்திற்குப் பின் மறுபடியும் என்னைத் திட்டி, “போய்ப் பார்” என்றார். வேறு வழியில்லாமல் எல்டாம்ஸ் சாலையிலிருந்து நுங்கம்பாக்கம்நெல்சன் மாணிக்கம் சாலையிருந்த ‘தாய்’ வார இதழ் அலுவலகம் சென்றேன். அங்கு ஆசிரியர் வலம்புரிஜான் ஏதோ எழுதிக்கொண்டிருந்தார். நான் நின்றுகொண்டி ருந்தேன். ஏற்கெனவே வெளியில் காத்துக்கொண்டி ருந்தது, அறையில் வந்தும் நிற்கும்போதும் என்னைக் கண்டுகொள்ளாமல் இருப்பதைப் பார்த்து,‘இங்கு வேலை செய்வதைவிட சும்மா தெருவில் திரிந்து கொண்டிருக்கலாம்’ என்றுதான் எனக்கு முதலில் தோன்றியது.
அவர் என்னை நிமிர்ந்து பார்த்து, ‘என்ன தெரியும்?’ என்று கேட்டார். ‘ஒன்றும் தெரியாது’ என்றேன். “எதுவும் தெரியவில்லை என்றால் எப்படி வேலை தருவது?” என்று கேட்டார்.
“எல்லோரும் தெரிந்துகொண்டா பிறக்கிறார்கள்? பிறக்கும்போது இரு கைகளோடுதான் பிறக்கிறார்கள்.
பிறகுதானே எல்லாம் கற்றுக்கொள்கிறார்கள். வாய்ப்பு கிடைத்தால் எல்லாம் செய்யலாம்” என்றேன். உடனே உதவியாளர் குமாரை அழைத்து, “இவரை அழைத்துக்கொண்டு போய் உணவு கொடுத்து விட்டு, திருப்பி அழைத்து வா’என்று சொன்னார். திரும்பி வருகிறபோது என் கோபம் கொஞ்சம் குறைந் திருந்தது.
அவர் என்னை, “இப்போது சொல் என்ன செய்யலாம்?” என்றார். ஒரு நூறு ரூபாய் தாருங்கள் என்றேன்.
அவரும் தந்தார். 100 ரூபாய் எடுத்துக்கொண்டு போய் எல்லா வார, மாத இதழ்களையும் வாங்கிப் பிரித்துப் படித்து, அலசி ஆராய்ந்தேன். நகரங்களின் உணர்வு களை, மேல்மட்ட நட்சத்திரங்களின் அபிலாஷைகளை சொல்லி, எப்படி கிராம வாசகனின் காசை ஜேப்படி செய்கிறது பத்திரிகை உலகம் என்று காரசாரமாக எழுதிக் கொடுத்தேன். அவ்வளவுதான் உடனே துணை ஆசிரியராகப் பணியில் சேர் என ஒரு நாற்காலி யைக் காண்பித்தார்.
‘தேன்மழை’ எனும் மாணவர் இதழின் துணையாசிரியராகப் பணியாற்றிய அனுபவம் குறித்து?
அடடா… அது அற்புதமானதொரு காலகட்டம். லயோலா கல்லூரியின் அருகில் ‘அய்க்கஃப்’ என்கிற ஒரு நிறுவனம். அந்த நிறுவனத்தில் இருந்து ‘தேன்மழை’ என்ற மாணவர் மாத இதழ் வெளிவந்து கொண்டிருந்தது. அப்போது பால்ராஜ் ஆசிரியராக இருந்தார். பிறகு பால் பாஸ்கர், மகிமைப் பிரகாசம் என்று பல பேர் ஆசிரியராகப் பணியாற்றினார்கள். பிறகு ஏனோ அது வரவில்லை.
நான் இருந்தபோது எஸ்.அறிவுமணி ஆசிரியராக இருந்தார். அவருடன் சேர்ந்து, நான் அதில் பணியாற்றி னேன். மாநிலம் தழுவிய மாணவர்களின் முன்னேற்ற கருத்துகளுக்கு ‘தேன்மழை’ இடம் தந்தது. கல்லூரி முடிந்த பிற்பாடு நேராக அந்த அலுவலகத்திற்குச் சென்று விடுவது வழக்கம். அப்போது அங்கு லீடர்ஷிப் வகுப்புகள் எல்லாம் நடக்கும். அப்போது என்னோடு பழகிய பலரும் இன்று தமிழகத்தில் என்.ஜி.ஓ.-ஆக செயல்பட்டு வருகின்றனர். குறிப்பாக, விழுப்புரத்தில் சின்னப்பன், செங்கல்பட்டில் ஜோசப் ராஜ், திண்டுக் கல்லில் பால் பாஸ்கர் என்று சொல்லலாம்.
பின்னர் ‘தாய்’ வார இதழில் எப்போது, என்ன பணியில் சேர்ந்தீர்கள்?
அய்யய்யோ,…இதற்கு முன்பாகவே ‘தாய்’ கதை யைச் சொல்லிவிட்டேனே…இருந்தாலும் சொல்கிறேன்.
தாய்’ இதழில் நான் பணியாற்றுகிறபோது, அலுவலக நாற்காலியில் அமர்ந்துகொண்டு வருகிற கதை, கவிதை, செய்திகளை வெளியிடுவது மட்டும் நம் பணியல்ல; நாம் படைப்பாளர்கள் வாழ்கிற கிராமப் பகுதிகளுக்கே சென்று, அவர்களைக் கண்டுபிடித்து வெளிக்கொண்டு வருவதே நம் சரியான பணியாக இருக்கும் என்று சொல்லி, நான் தமிழ்நாடு முழுவதும் சுற்றிப் படைப் பாளர்களை அறிமுகப்படுத்தினேன். அந்த வாய்ப்பை எனக்கு ஆசிரியர் வலம்புரி ஜான் தந்தார்.
‘தாய்’ அலுவலகம் அண்ணா அலுவலகத்தோடு சேர்ந்து இருந்தது என்பதால் ஜனவரி 1 அன்று முதல்வர் எம்.ஜி.ஆர். அவர்கள் அங்குவந்து எல்லோரை யும் சந்தித்துப் பணம் கொடுப்பார்.
இந்த அலுவலகத்தில்தான் திரைப்படலாசிரியர் பழநிபாரதி, நக்கீரன் கோபால், பொன்.ஜெயந்தன், நாகை தருமன், சூரியகாந்தன், பாபநாசம் குறள்பித்தன், தாய் பிரபு, கல்லாடன் ராஜா, மணிமொழி, ரகுநாத் கஸ்தூரி ரங்கன், கல்யாண் குமார், கங்கன், மோகன்தாஸ், பவித்ரா, ஆர்.சி.சம்பத், மணி, சகாயம், குமார், அச்சில் ராதாகிருஷ்ணன், பொன்ராஜ், கணேசமூர்த்தி, சிவா என பலரோடும் பணியாற்றியது பசுமையாய் மனதில் பதிந்திருக்கிறது.
‘தாய்’ வார இதழின் ஆசிரியர் வார்த்தைச் சித்தர் வலம்புரி ஜான் குறித்து சொல்லுங்களேன்..!
அவரைப் பற்றிச் சொல்ல வேண்டுமானால் பக்கங்கள் நீண்டுகொண்டே செல்லும். அந்தக இரவில் சந்தன மின்னல், பற்றி எரியும் பனித்தீ, மலையேறும் நதி என்று புதிய புதிய சொற்சேர்க்கைகளை உருவாக்கித் தந்தவர் வலம்புரி ஜான். அவரை ‘வார்த்தைச்சித்தர்’ வலம்புரி ஜான் என்றுதான் இலக்கிய உலகம் அழைக்கிறது.
பாராட்டினால் அவர்போல் பாராட்டுவதற்கு ஆளே இல்லை. தோளுக்கு மேல் ஏற்றிப் பாராட்டுவார். கோபம் வந்துவிட்டாலும் அந்த அளவுக்கு எதிர்வினை ஆற்றுவது அவருடைய பழக்கம். ஆனாலும் அவரால் புகழ் பெற்றவர்கள் பலர் பலர்.
பத்திரிகை என்றால் என்னவென்று தெரியாத ஒரு இளம் குழுவை வைத்துக்கொண்டு, எல்லோரும் விரும்புகிற ஒரு வார இதழை அவர் நடத்தினார் என்றால், அவர் மற்றவர்கள் மேல் வைத்த நம்பிக்கையும், அவர் களிடமிருந்து அவர் பெற்றெடுத்து தமிழுக்குத் தந்த சிறந்த சிந்தனைகளும்தான் காரணம். ஒருவரை ஊக்கப் படுத்தி, மேலும் செயல்பட வைப்பது அவருக்கே உரித்தான தனிப் பண்பு.
1982-ல் ‘கை குலுக்கிக்கொள்ளும் காதல்’ எனும் முதல் நூலினை வெளியிட்டபோது கிடைத்த வரவேற்பு எப்படியிருந்தது?
கவியரங்கங்களில் தமிழ்நாடு முழுக்கச் சென்று மேடையேறினாலும் எவரும் அரை சல்லிக்காசுக்குக் கூட மதிப்பதில்லை. ஒரு புத்தகம் போட்டால்தான் மதிப்பேன் என்கிற காலம் என்பதால் வேறுவழியில் லாமல் நான் பாவலர் அறிவுமதியிடம் சென்று ஒரு புத்தகம் போடவேண்டும் என்றேன். ‘சரி… போடு’ என்றார். அந்த உற்சாகத்தில் நாகை எஸ்.சலா என்ற நண்பருடைய சிறு பண உதவியுடன் ஓவியக் கவிஞர் அமுதோனிடம் அட்டைப்படத்தைக் கெஞ்சிக் கூத்தாடி வாங்கி, ‘கைகுலுக்கிக் கொள்ளும் காதல்’ என்ற முதல் நூலை வெளியிட்டேன். அதற்கு வைரமுத்து,
அறிவுமதி, பழநிபாரதி ஆகியோர் மதிப்புரை தந்தனர்.
அந்த நூலை சோவியத் கலாச்சார மையத்தில் வலம்புரி ஜான் வெளியிட்டார்.
அதற்குப் பிறகு உலகமே நம்மைத் திரும்பிப் பார்த்து உச்சி முகர்ந்து கொண்டாடும் என்று நினைத் தேன். அப்படியெல்லாம் ஒன்றும் நிகழவில்லை. மீண்டும் போராட்ட வாழ்க்கையே தொடர்ந்தது.
1985-இல் நடைபெற்ற உங்களின் திருமணத்தில் ‘வசந்த நினைவுகள்’ எனும் கவிதை நூலை வெளியிட்டதோடு, மண விழாவிற்கு வந்தவர்களுக்கு அதைப் பரிசாகக் கொடுத்தீர்கள் அல்லவா..!
ஆமாம்.
அந்தத் திருமண நாளில் மட்டுமல்ல, என் வாழ்வில் நடந்த ஒவ்வொரு முக்கிய நிகழ்வுகளிலும் புத்தகங்களை வெளியிடுவது என்பது பழக்கம்.
அவ்வாறாகவே நாங்கள் கட்டிய வீட்டின் புதுமனை புகுவிழா நடக்கிறபோது மூன்று நூல்களைப் புதிய வீட்டின் மாடியில் வைத்து வெளியிட்டேன்.
அதேபோல, 1985 ஜனவரி 17 எம்.ஜி.ஆர். பிறந்த நாள். அவர் அப்போது எம்.ஜி.ஆர். நோய்வாய்ப்பட்டு, அமெரிக்காவிலுள்ள ப்ரூக்ளின் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருந்தார். திருமண விழா திண்டிவனத் தில் மருத்துவர் ராமதாஸ் இல்லத்தின் எதிரேயுள்ள வேதவல்லி கல்யாண மண்டபத்தில் நடந்தது. அதில் தான் ‘வசந்த நினைவுகள்’ என்ற கவிதை நூலை வெளியிட் டேன். நள்ளிரவில் எஸ்.அறிவுமணி புத்தகங்களை எடுத்துக்கொண்டு சென்னையிலிருந்து வந்தார். பாரதி பதிப்பகம் தான் அதைப் பதிப்பித்தது.
இந்த விழாவிற்குத் தலைமை தாங்கி நடத்துவதாக இருந்த வலம்புரி ஜான், முத்துலிங்கம் போன்ற பிரபலங்கள் எவரும் வர இயலவில்லை. கலைவாணர் அரங்கத்தில் எம்.ஜி.ஆரின் பிறந்த நாளுக்கான கவியரங்கம் திடீரென நடத்திய காரணத்தினால் வர இயலாமல் போனது. ஆனாலும் விழா நண்பர்களாலும் ஆசிரியர்களாலும் நிரம்பிவழிந்தது.
சொல்லப்போனால் பெரியார்தாசன், நடிகர் சரத்குமார், ஆனந்தி பிலிம்ஸ் மோகன், சாமி பழநியப்பன், மக்கள் குரல் ராம்ஜி, பத்திரிகையாளர் ப்ரியன், கலைஞன் மாசிலாமணி, சரளா ராஜகோபாலன், ஜெயகிருட்டி ணன், அல்போன்ஸ் ராஜா, தேவிதாசன் செண்பகமூர்த்தி (ரெட் ஜெயண்ட்), ஆசிரியர் கே.அரிகிருட்டிணன் என பலரும் கலந்துகொண்டு வாழ்த்தினர். மேளதாளம் இல்லை. சடங்குகள் இல்லை. புத்தக வெளியீட்டுடன் திருமணம் நடைபெற்றது.
நான் விரும்பிவாறு நடந்த சீர்திருத்தத் திருமணம் அது. அப்போது மணப்பெண் ஆன்மீகத்தில் அதிகப் பற்றுக்கொண்டவர் என்றாலும் அதற்கு சம்மதித்தார். என் மேலுள்ள விருப்பத்தினால் என்றுதான் இன்று வரை எண்ணிக் கொண்டிருக்கிறேன். அவரிடம் கேட்டால்தான் என் புரிதல் சரிதானாவென்று தெரியும்.
கமல் நடித்த ‘அபூர்வ சகோதரர்கள்’ திரைப்படத்தில் உதவி இயக்குநராகப் பணியாற்றினீர்களே... அது குறித்து?
இதுவும் ஒரு வகையான ஆச்சரியம்தான்.
திருமணம் முடிந்த அன்றே பத்திரிகை வேலையை விட்டு நின்றுவிட்டேன். எல்லோரும் திட்டினார்கள். ஆனாலும் எனக்குத் தொடர்ந்து பத்திரிகையில் பணி யாற்ற விருப்பமில்லை. என்ன செய்வது என்று சுற்றித் திரிந்து கொண்டிருந்தேன். அப்போது கமல்ஹாசன் ‘மய்யம்’ என்றொரு பத்திரிகை தொடங்குவதற்கு என்னைப் பணிக்காகக் கேட்டார். நான் மறுத்தேன்.
மீண்டும் அவர் வேண்டுமென்று கேட்டார். பிடிவாத மாக நான் திரைப்படத்திற்குச் செல்லவேண்டும் என்று மறுத்துச் சொன்னேன்.‘நான் நிச்சயம் உங்களைச் சேர்ப்பேன்’ என்று சொன்னார். சொன்னபடியே சில காலம் கழித்து ‘அபூர்வ சகோதரர்கள்’ படத்தில் என்னைத் துணை இயக்குநராக இணைத்துக் கொண்டார்.
தெலுங்கு இயக்குநர் சிங்கீதம் சீனிவாசராவ், அவர் மிகப்பெரிய இயக்குநர். மயூரி, புஷ்பக், திக்கற்ற பார்வதி என்ற படங்களை எல்லாம் இயக்கியவர். துணை இயக்குநர்களுக்கு அவ்வளவு மரியாதை கொடுப்பவர். அவரிடம் ஐந்து துணை இயக்குநர்கள் இருந்தோம். அதில் மற்றவர்கள் எல்லாம் தெலுங்கு. நான் மட்டும்தான் தமிழ் என்பதால் அந்தப் படத்தில் எல்லாப் பணிகளும் எனக்கு அதிகமாகவே தரப் பட்டன.
அதற்குக் காரணம் கமல்ஹாசன் எனக்கு அளித்த உற்சாகமும், இயக்குநர் சிங்கீதம் சீனிவாசராவின் அரவணைப்பும்தான். அதன்பின் ராஜ்கமல் ஃபிலிம் இண்டர்நேஷனலில் நான் கமல்ஹாசன் படங்களில் தொடர்ந்து துணை இயக்குநராகப் பணியாற்றினேன்.
குள்ள அப்பு ரகசியம் எனக்குத் தெரியும். ஆனால் அதை யாரிடமும் சொல்லவேண்டாமென்று அவர் சத்தியப் பிரமாணம் வாங்கிக்கொண்டாரே!
கமல் தொடங்கிய ‘மய்யம்’ இதழிலும் சில ஆண்டுகள் ஆற்றிய பணி குறித்து...
ஆமாம்; ‘மய்யம்’ மொத்தம் 22 இதழ்கள் வந்ததாக நினைவு. முதல் 11 இதழ்களில் நான் துணையாசிரியராக வும், பிறகு வந்த 11 இதழ்களில் ஆசிரியராகவும் பணியாற்றினேன்.
படத்தில் துணை இயக்குநராகப் பணியாற்றிக் கொண்டே மீதி நேரத்தில் அந்தப் பத்திரிகையைக் கவனித்துக்கொண்டு வந்தேன். அதுவொரு ஆச்சரிய மான - சங்கடமான காலமும்கூட.
அதில் கமல்ஹாசன் அவர்கள் என்னைச் சுதந்திரமாகச் செயல்பட அனுமதித்தார். 60 சதவீதம் சமூகம், கவிதை, சிறுகதை, உலக சினிமா என்றும் 40 சதவீதம் தங்களைப் பற்றியும் இருக்கவேண்டும் என்று சொன்னதை அப்படியே கேட்டு, இதுதான் எனக்குப் பிடித்தது என்று சொல்லி என்னைச் சுதந்திரமாக செயல்பட அனுமதித்தார்.
அவரின் தலையங்கத்தோடு வந்தால்தான் பத்திரிகை நன்றாக இருக்கும் என்பதற்காக அவரோடு கூடவே போய் போராடிய நாட்கள்… அடடா…
அதனாலேயே பல சமயம் இதழ்கள் தாமதமாக வந்தன.மய்யம்’ இயக்கத் தோழர்களுக்கு மட்டுமே கிடைக்கும். அதைத் தொடர்ந்து கொண்டுவந்து இருக்கலாம். ஆனால் ஏதோ வொரு காரணத்தால் நின்று விட்டது.
அதில் புரபசர் ராமுவும் சிறிதுகாலம் அறிவுறுத்தினார்.
மருதநாயகத்துக்கு அடிப்படையாக அதற்குமுன் பாலகுமாரன் எழுதி, மணியம் செல்வன் வரைந்த சித்திரத் தொடர் ‘கருங்கல்படியான்’ வந்தது. ‘மய்யம்’ இதழில் பிரசித்தி பெற்றது தலையங்கமும், கேள்வி - பதிலும். ஏனென்றால் கமலின் அறிவார்ந்த பங்களிப்பு அவற்றில் வெளிப்படும்.
மைக்கேல் மதன காமராஜன், மகளிர் மட்டும், தேவர் மகன், விருமாண்டி ஆகிய படங்களின் கதை விவாதங்களிலும், உதவி இயக்குநராகவும் இருந்து கமல் எனும் திரைக்கலைஞரோடு இணைந்து பணியாற்றிய அனுபவங்கள் பற்றி...
எனது திரைப்பட அனுபவங்கள் பெரும்பாலும் கமலோடு தான். அவருடனே சென்றுகொண்டே எழுதுவேன். அவர் வண்டி ஓட்டிக்கொண்டே சொன் னாலும்கூட நான் குறிப்பெடுத்துக்கொண்டே வருவேன். பிறகு, விரிவாக எழுதுவேன்.
கதை, திரைக்கதை, வசனம் முடிந்த பிற்பாடு, அவரோடு பணியாற்றும் முக்கியத் தொழில்நுட்பக் கலைஞர்களிடம் படித்துக் காட்டுவது அவருடைய வழக்கம். என் மனதில் பட்டதை மறைக்காமல் சொல்ல கமல்ஹாசன் எப்போதும் என்னை அனுமதிப்பார்.
1996-இல் ‘மிஸ்டர் தேவராஜ்’ எனும் முதல் படத்தை இயக்கியது குறித்து...
நடிகர் ஜெயராம் கலெக்டராகவும், ஆனந்தராஜ் ஐ.பி.எஸ்.-ஆகவும் நடிக்க, இரு நண்பர்களுக்கு இடையே நடைபெறும் ஒரு போராட்டம்தான் படத்தின் மையக் கரு. ரஞ்சிதா நாயகி. கவுண்டமணி பிரமாதமாக நடித்துக்கொடுத்தார். படம் முடிந்து பர்ஸ்ட் காபி கூட ரெடி. ‘உதயம்’ படத் தயாரிப்பாளர் கோபால், படம் பார்த்துவிட்டு, தெலுங்கில் என்னை படம் பண்ண அழைத்தார். ஃபிளைட் டிக்கெட்டும் ரெடி. ஆனாலும், கூட இருந்தவர்களே குழி பறித்தார் கள். இந்தப் படம் மட்டும் வெளிவந்திருந்தால் இன்று நான் வெற்றிகரமான கமர்ஷியல் இயக்குநராக இருந்திருப்பேன்.
2009-இல் நீங்கள் இயக்கிய ‘வண்ணத்துப்பூச்சி’ எனும் படம், தமிழக அரசின் சிறந்த குடும்ப நெறிமுறைகளுக்கான படம் எனும் விருதினைப் பெற்றதே..!
‘எவரும் உனக்கு உதவவில்லை என்றால் நீ உனக்கே உதவி யாக இருந்து விடு’ என்கிற சொல்வதுபோல் இயக்குநர் பரதன், ‘உன் பேனாவை நம்பி, நீயே சிறிய படத்தை ஏன் எடுக்கக் கூடாது?’ என்று அறிவுறுத்தினார்.
அதன்படி ‘வண்ணத்துப்பூச்சி’ என்ற திரைக்கதையை எழுதி, நானே தயாரித்து இயக்கினேன்.
அது என்னைக் கைவிடவில்லை.
முதல்வர் கலைஞர் மு.கருணாநிதி கரங்களால் சிறந்த குடும்ப நெறிமுறைக்கான திரைப்படம் என்ற விருதி னைப் பெற்றேன். அதில் நடித்த லட்சுமி என்ற குழந்தைக்குச் ‘சிறந்த குழந்தை நட்சத்திரம்’ என்ற விருதை வாங்கித் தந்தது.
கவிதை, சிறுகதை, கட்டுரை, நாடகம், குறுநாவல் என பல படைப்பு முகங்களுடன் எழுதினாலும் உங்களுக்குப் பிடித்தமான படைப்பு முகம் எது?
கவிதை, சிறுகதை, கட்டுரை, நாடகம், குறுநாவல் என பல படைப்பு முகங்களுடன் எழுதினாலும் உங்களுக்குப் பிடித்தமான படைப்பு முகம் எது?
சட்டெனச் சொன்னால் கவிதைதான். ஆனால் கொஞ்சம் யோசித்துச்சொன்னால் எல்லாப் படைப்பு களிலும் தன்னை வியாபித்துக்கொள்கிற அனுபவ உலகம் நிறைந்து கிடைக்கிறதே! எப்படி அவை பிடிக்காமல் போகும்?! எனவே சிறுகதைகளும், கட்டுரைகளும், நாவல்களும், நாடகங்களும் இன்னும் கவிதை தாண்டி மக்களைச் சென்றடைய முடியும் என்பதனால் அவற்றில் எனக்குப் பிடித்தமுண்டு.
ஒரு படைப்பாளனுடைய சுகம் யாவற்றிலும் எனக்கு கிடைக்கிறது. சிறார் பாடல்களிலும், கதைகளிலும் எனக்கு உண்மையாகவே அடுத்த தலைமுறைக்கான பண்புகளை விழுமியங்களைக் கொண்டுசேர்ப்பது அவசியம் என்று கருதுவதால் அதிகம் எனக்குப் பிடித்திருக்கிறது. எல்லாவற்றையும்விட என்னை எனக் குப் பிடிக்கும் என்பதால், என் படைப்புகளையும் எனக்குப் பிடிக்கும்.
தங்களின் இணையரும் ஆசிரியருமான செண்பக வடிவு, சிறுவர்களுக்கான கதைகளை எழுதி, நூலாகி வெளியிட்டுள்ளாரே. நீங்கள் அதைப் படித்தீர்களா..?
உண்மையிலேயே என் துணைவியார், முதுகலைத் தமிழாசிரியர் ப.செண்பகவடிவு எழுதிய ‘மாணவர்களுக்கான புதுமொழிக் கதைகள்’ என்ற நூல் எனக்கு மிகவும் பிடித்தமானது.
எளிய சொற்களால் மாணவர்களுக்குத் தகுந்த விதத்தில் எழுதுகிற அந்தச் சொற்பாங்கு அவருக்கு வெகுவாக கைவந்திருக்கிறது. தம்மின் தம்மக்கட் பெரியர்’ என்பதுபோல என்னைக் காட்டிலும் அவர் உயர்ந்த சிந்தனையாளர், பண்பாளர்.
தற்போது மேடைப்பேச்சாளராகவும் வலம் வருகிறீர்களே. இந்த மாற்றம் எப்போது நிகழ்ந்தது?
மேடைப்பேச்சு அனுபவம் என்பது இப்போ தல்ல. அது பள்ளிக் காலத்திலேயே துவங்கியது.
ஆசிரியர் கே.அரிகிருட்டிணன் பள்ளி விடுமுறை காலங்களில் அருகிலுள்ள கிராமங்களுக்குச் சென்று பகுத்தறிவுப் பிரச்சாரங்களைச் என்னையும் செய்ய வைப்பார். அப்படித் தொடங்கியதே மேடைப் பேச்சு.
அவ்வை நடராஜன் தலைமையிலும் புலமைப் பித்தன், பெரியார்தாசன், கவிஞர்கள் மு.மேத்தா, நா.காமராசன், உவமைக் கவிஞர சுரதா, பொன்னடி யான், பொன்.செல்வகணபதி, பேராசிரியர் இராச கோபாலன் அவர்களின் தலைமையிலும் பல பட்டி மன்றங்கள், கவியரங்கங்களிலும் நான் மேடையேறி இருக்கிறேன்.
நீங்கள் தொடங்கியிருக்கும் ‘பார்வை’ யூ-டியூப் சானலுக்கான வரவேற்பு எப்படி உள்ளது?
இது ஒரு கலிகால விபத்து என்றுதான் சொல்ல வேண்டும். கொரோனா காலத்தில் வீட்டிலேயே அடைபட்டுக் கிடந்தபோது என்ன செய்வது என்று தெரியாமல் இருந்தபோது கைபேசியை எடுத்து, நான் பேசத் துவங்கியதுதான் ஹ்ர்ன்ற்ன்க்ஷங் சேனல். ராசி அழகப்பன் அபிஷியல் என்கிற ஹ்ர்ன்ற்ன்க்ஷங் சேனல்.
அது பரவலாகக் கவனம் பெற்றது என்றாலும் அதை இப்போது பெரிதாக நான் பயன்படுத்துவதில்லை. தேவைப்படுகிறபோது அதில் பேசுவது என்கிற ஒரு பழக்கத்தைக் கொண்டுள்ளேன். அது சில சமயம் பூமர் அங்கிளாக மாற்றிவிடுமோ என்கிற அச்சம் எனக்கு உண்டு.
இன்னுமொன்று, பேசிக்கொண்டே எல்லோரு டைய கவனத்தையும் ஈர்க்கவேண்டு மென்பதே அவசியம் என்றால் அது பிறழ் வாழ்வைத் தொடங்கி விடும் என்றும் கருதுகிறேன். பணம் கிடைக்கிறதென்று எது வேண்டுமானாலும் செய்யவேண்டுமா என்ன?!
தற்காலத் தமிழிலக்கியச் சூழலும், இளையவர்களின் படைப்புகளும் உங்களுக்கு நம்பிக்கையளிக்கிறதா?
தற்காலத் தமிழ் இலக்கியச் சூழல் சிறப்பாகத் தான் இருக்கிறது. இன்னும் சொல்லப்போனால் படைப்பு என்பது ஜனநாயகப்படுத்தப்பட்டுள்ளது. தொழில் நுட்ப வளர்ச்சியின் காரணமாக முகநூல்கள் மற்றும் சமூக ஊடகங்களால் சங்க காலம்போல் தமிழ் வளர்ந்திருக்கிறது.
சிறுகதைச் சூழலில் ஜெயகாந்தன், புதுமைப்பித்தன், விந்தன் உள்ளிட்ட முக்கியமான படைப்பாளர்களைப் போன்று நுட்பமாக இன்றைய இளைஞர்கள் எழுதிக் கொண்டிருப்பதை அறிந்துகொள்ள முடிகிறது.
கவிதைகளிலும் ஹைக்கூ, சென்ரியூ என்று புதிய வடிவங்களில் ஏராளமான படைப்பாளர்கள் கவிதைகளை மேம்படுத்திக் கொண்டிருக்கிறார்கள்.
கட்டுரைகள்கூட அவ்வாறாகத்தான் இருக்கின்றன. என்ன… வணிகப்போக்கு பல சமயம் குறிக்கோள்களைத் திசை திருப்பிவிட்டு வேடிக்கை பார்க்கிறது. குழந்தை இலக்கியங்கள் மிக அதிகமாக கவனம் பெற்று, கதை களாகவும் பாடல்களாகவும் நாடகங் களாகவும் சிறுவர்களாலேயே எழுதப்படுவது உண்மையிலேயே ஒரு நல்ல சமூகத்தின் வளர்ச்சி என்றே கருதுகிறேன்.
வலி நிறைந்தவர்கள் படைப்பாளர்களாக மாறி, சமூகத்திற்கு எழுத்துக்கள் மூலம் பங்கீடு செய்வதைக் கண்கூடாகப் பார்க்க முடிகிறது.
‘இனிய உதயம்’ இதழைப் பற்றி தங்களின் பார்வை என்ன..?
இப்போது கண்ணெதிரே மிகச் சிறப்பாகச் செயல்படுகிற இலக்கிய மாத இதழாக ‘இனிய உதயம்’ வெளிவருகிறது. இன்னார், இவர் என்ற பாகுபாடு இல்லாமல் எல்லாப் படைப்பாளர்களையும் அரவணைத்துச் செல்வது பாராட்டுக்குரியது.