முதுபெரும் தமிழறிஞரும், தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தரும், செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தின் முன்னாள் துணைத் தலைவருமான ஔவை நடராஜன், நவம்பர் 21-ஆம் தேதி, தனது 87ஆவது வயதில் காலமானார்.
சில ஆண்டுகளாகவே நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சையெடுத்துவந்த அவரின் உடல்நிலை, கடந்த சில நாட்களாக மோசமடைந்ததால் தனியார் மருத்துவமனையில் சேர்க்கப் பட்டிருந்த நிலையில், சிகிச்சை பலனளிக்காமல் காலமானார்.
திருவண்ணாமலை மாவட்டத்திலுள்ள செய்யாறு என்னும் ஊரில், தமிழறிஞரான ஔவை துரைசாமி - லோகாம்பாள் இணையருக்கு மகனாக 1936-ஆம் ஆண்டு ஏப்ரல் 24-ஆம் தேதி பிறந்தார். இவரது தந்தை, விழுப்புரம் மாவட்டத்திலுள்ள ஔவையார் குப்பத்தைச் சேர்ந்தவர் என்பதால் ஔவை என்ற பெயர், இவருக்கும், இவரது தந்தைக்கும் பெயரோடு இணைந்துகொண்டது. இவர் முதுகலைப் பட்டத்தை மதுரை தியாகராசர் கல்லூரியிலும், முனைவர் பட்டத்தை சென்னை பச்சையப்பன் கல்லூரியிலும் பெற்றார். மாணவனாகப் பயின்ற மதுரை தியாகராசர் கல்லூரியிலேயே பேராசிரியராகப் பணிபுரிந்தார். தஞ்சை சரபோஜி கல்லூரியிலும் பேராசிரியராகப் பணிபுரிந்தார். அகில இந்திய வானொலியில் அறிவிப்பாளராக பணியாற்றியபோது, அப்போதைய முதல்வரான எம்.ஜி.ஆர்., 1975-ம் ஆண்டு முதல் 1984-ம் ஆண்டு வரை, செய்தி மக்கள் தொடர்புத் துறையின் இணை இயக்குநராக ஔவை நடராஜனை நியமித்தார். அதற்கடுத்ததாக, 1984-ம் ஆண்டு முதல் 1992-ம் ஆண்டுவரை, தமிழ் வளர்ச்சி மற்றும் பண்பாட்டுத் துறையின் செயலராகப் பணியாற்றினார். இந்திய ஆட்சிப் பணி அதிகாரியாக இல்லாத நிலையில், தமிழ்நாடு அரசுத் துறைச் செயலாளராக நியமனம் செய்யப்பட்டவர் என்பது குறிப்பிடத் தக்கது. தஞ்சை தமிழ் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராகப் பணியாற்றினார். பின்னர், செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தின் துணைத் தலைவராக நியமிக்கப்பட்டார்.
தமிழ், ஆங்கிலம் என இரு மொழிகளிலும் புலமைபெற்றவர் ஔவை நடராஜன். பேரறிஞர் அண்ணா, கம்பர் காட்சி, கம்பர் விருந்து, வாழ்விக்க வந்த வள்ளலார், சங்க இலக்கிய பெண்பாற் புலவர்கள், திருவெம்பாவை விளக்கம், திருப்பாவை விளக்கம், நங்ப்ச் ஈர்ய்ச்ண்க்ங்ய்ஸ்ரீங், நஹஹ்ண்ய்ஞ் ர்ச் நற்ஹப்ஜ்ஹழ்ற், பட்ங் டஹய்ர்ழ்ஹம்ஹ ர்ச் பஹம்ண்ப்ள், அருளுக்கு ஔவை சொன்னது உள்ளிட்ட தமிழ், ஆங்கில நூல்களை எழுதினார். ஒன்றிய அரசால் பத்மஸ்ரீ விருது வழங்கி கவுரவிக்கப்பட்டார். தமிழக அரசின் கலைமாமணி விருது வழங்கப்பட்டது. தமிழ், ஆங்கிலம் என இரு மொழிகளிலும் நூற்றுக் கணக்கான ஆய்வுக்கட்டுரைகளை எழுதியுள்ள இவர், பல்கலைக்கழக மாணவர்கள் பலருக்கும் ஆய்வு வழிகாட்டியாகச் செயல்பட்டிருக்கிறார்.
இவர் பேராசிரியராகப் பணியாற்றியபோது, இவரிடம் பயின்ற மாணவர்கள் பலரும் தற்போது தமிழறிஞர்களாகவும், பல துறைகளில் வல்லுநர்களாகவும் விளங்குகின்றனர். 1982ஆம் ஆண்டு, அமெரிக்காவிலுள்ள சான்பிரான்சிஸ்கோ நகரில் நடைபெற்ற அனைத்து நாடுகளின் கவிஞர்கள் மாநாட்டில், தமிழகத்தின் பிரதிநிதியாகக் கலந்துகொண்டு சிறப்பித்திருக்கிறார்.
தமிழறிஞர் ஔவை நடராஜனின் உடலுக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரில் வந்து அஞ்சலி செலுத்தி, அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார். ஔவை நடராஜனின் மறைவுக்கு, தமிழக முதல்வரின் இரங்கல் செய்தியில், 'சிறந்த தமிழறிஞர் ஔவை நடராசன் அவர்கள் வயது மூப்பின் காரணமாக இயற்கை எய்திய செய்தி அறிந்து மிகவும் வேதனையுற்றேன். ஔவை நடராசன், 'உரைவேந்தர்' ஔவை துரைசாமி அவர்களின் மகனாகப் பிறந்து, தந்தையைப் போலவே தமிழிலக்கியத்தில் நாட்டம் கொண்டு கல்லூரிகளில் தமிழைப் பயிற்றுவித்தவர். தமிழில் இவருக்கிருந்த ஆழங்காற்பட்ட புலமையால், தமிழ் வளர்ச்சித் துறையின் செயலர், தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர், செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தின் துணைத் தலைவர், சென்னை பாரத் பல்கலைக்கழக வேந்தர் உள்ளிட்ட பல பொறுப்புகள் இவரைத் தேடி வந்தன.
தொல்காப்பியம், சங்க இலக்கியம், கம்பராமாயணம் எனத் தமிழின் பெரும் இலக்கண இலக்கியங்களைப் பற்றி இவர் ஆற்றிய உரைகளால் கவரப்படாத தமிழார்வலர்கள் இருக்கமுடியாது. தமது பேச்சாற்றலால் உவமைக் கவிஞர் சுரதா அவர்களாலேயே 'பாதி அண்ணா' எனப் பாராட்டப்பட்டவர். ஔவை நடராசன் முத்தமிழறிஞர் கலைஞர் மீது மிகுந்த பற்றும் மரியாதையும் கொண்டிருந்தவர். தலைவர் கலைஞர் மறைந்தபோது நினைவேந்தல் நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு புகழாரம் சூட்டியவர். தமது இறுதிக்காலம் வரையிலும் கலைஞரின் புகழைப் போற்றிவந்தவர்.
தமது தமிழ்ப் பணிகளுக்காகப் பத்மஸ்ரீ, கலைமாமணி முத-ய ஏராளமான விருதுகளை ஔவை நடராசன் பெற்றிருந்தார். எண்ணற்ற நூல்களையும், பல நூறு மாணாக்கர்களையும் நம்மிடம் விட்டுச்சென்றுள்ள பெருந்தகை ஔவை நடராசனின் மறைவு தமிழ்த்துறையினருக்கும், கல்விப்புலத்தாருக்கும் பேரிழப் பாகும். அவரை இழந்து வாடும் குடும்பத்தார், தமிழறிஞர் பெருமக்கள் மற்றும் மாணவர்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்" என்று குறிப்பிட்டுள்ளார். மேலும், ஔவை நடராஜனின் தமிழ்ப் பணிகளைக் கவுரவிக்கும் விதமாக காவல்துறை மரியாதையுடன் இறுதி அஞ்ச- செலுத்த முதல்வர் உத்தரவிட்டார்.
ஔவை நடராஜனின் உடலுக்கு கவிஞர் வைரமுத்து அஞ்சலிசெலுத்தியபின் செய்தியாளர் களைச் சந்தித்து, ஓர் அறிவுச் சுரங்கம் என்றுதான் சொல்ல வேண்டும் அவரை. அவர் பல்வேறு பொறுப்புகளில் இருந்தபொழுது, சொல்லில் மட்டும் வல்லவர் அல்ல, செயலிலும் வல்லவர் எனத் தமிழ் உலகத்திற்கு காட்டியவர். மூன்று முதல்வரோடு இணக்கமாகப் பணியாற்றுவது என்பது தமிழ் படித்த ஒருவனுக்கு அவ்வளவு எளிதல்ல. முதல்வர் மாறுபட்டாலும் தமிழை முன்னிறுத்தி அவர் மொழிக்கு அதிகமாக செய்திருக்கிறார்" என்று ஔவை நடராஜனுக்கு புகழாரம் சூட்டினார்.
"பேரறிஞர் அண்ணாவின் மீது அளவற்ற மதிப்பும், அன்பும், ஈடுபாடும் கொண்டிருந்த ஔவை நடராசன், பேச்சுக் கலையில் அண்ணாவையே முன்மாதிரியாகக் கொண்டிருந்தார்" என்று ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ தெரிவித்தார். "அரசின் சார்பிலும், அரசியல் கட்சிகளின் சார்பிலும் தமிழ் மொழி வளர்ச்சிக்காக மேற்கொள்ளப்பட்ட பெரும்பான்மையான முன்னெடுப்புகளில் பங்களித்தவர் நடராசன்." என்று பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் தெரிவித்தார். மேலும், திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி, தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு மாநிலச்செயலாளர் பாலகிருஷ்ணன், இந்திய கம்யூனிஸ்டு மாநிலச்செயலாளர் முத்தரசன், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய தலைவர் காதர் மொய்தீன், தொழில் அதிபர் வி.ஜி.சந்தோசம் உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்தனர்.
அவ்வை நடராஜனின் உடல், அண்ணா நகரிலுள்ள அவரது இல்லத்திலிருந்து, மயிலாப்பூரிலுள்ள இடுகாட்டுக்கு ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டது. அவரது உடலை கவிஞர் வைரமுத்து, ஜெகத்ரட்கன் எம்.பி. உள்ளிட்டோர் சுமந்துசென்று, தமிழறிஞருக்கு தங்கள் இறுதி மரியாதையைச் செலுத்தினார்கள். காவல்துறையினர் 30 குண்டுகள் முழங்க, முழு அரசு மரியாதையுடன் உடல் அடக்கம் செய்யப்பட்டது. தமிழ் உள்ளவரை ஔவை நடராஜனின் புகழ் நிலைத்துநிற்கும்.