புர்தனெ கல்லூரியில் ஆறாவது ஃபாரத்தில் படிக்கும் பிள்ளைகள், தலையில் நெருப்புடன் நடந்து திரியும் காலம்...

ப்ரி மெட்ரிக்குலேஷன் தேர்விற்கான காலம்...

தேர்வில் வெற்றிபெற்றால் மட்டுமே, மெட்ரிக் குலேஷன் தேர்வில் அமரமுடியும். தோல்வியைத் தழுவினால் ஒரு வருடம் வீணாகிவிடும். பிள்ளைகளுக்குத் தலையில் நெருப்பு பிடித்தது. தேர்வு ஐந்து நாட்கள் நடக்கின்றன.

திங்கட்கிழமை.

Advertisment

செவ்வாய்க்கிழமை.

புதன்கிழமை.

வெள்ளிக்கிழமை.

Advertisment

திங்கட்கிழமை.

தேர்வுநாள் நெருங்க நெருங்க பிள்ளைகளின் மனதில் நெருப்பு நுழைந்தது. பிள்ளைகள் இரவு- பகல் பாராமல் அமர்ந்து படித்துக் கொண்டிருந்தார்கள்.

exam

பிள்ளைகளுக்கு ட்யூஷன் கற்றுத்தரும் ஆசிரியர் மாதவனுக்கு சாப்பிட நேரமில்லாமல் போய்விட்டது. உறங்குவதற்கு நேரமில்லாமல் போய்விட்டது.

மலையாளத்தைத் துணைப்பாடமாக எடுத்த எல்லா பிள்ளைகளும் ஆசிரியரைத் தேடி ட்யூஷனுக்குச் சென்றார்கள். தினேஷனைத் தவிர... தினேஷன் மலையாளத்தைதான் எடுத்திருக்கிறான்.

""அறிவுள்ள பிள்ளைக்கு ட்யூஷன் எதுக்கு?'' பாட்டி கூறினாள்.

திங்கட்கிழமை வந்தது. அதிகாலையிலேயே அலாரம் அடித்தது. அலாரத்தின் ஓசையை அவன் கேட்கவில்லை. அவன் உறங்கிக்கொண்டிருந்தான்.

ஆறு மணி ஆனபோது, தாய் வந்து அழைத்தாள்.

""தினேஷா... எழுந்திரு.''

தாய் குலுக்கி அழைத்தாள். அவன் கண்களைத் திறந்தான்.

""எழுந்திரு மகனே. இன்னிக்கு பரீட்சையாச்சே?''

காகம் கரைவதற்கு முன்பே பிள்ளைகள் படிக்க ஆரம்பித்திருந்தார்கள். கோழி கூவுவதற்கு முன்பே படிக்க ஆரம்பித்திருந்தார்கள். சிலர் இரவு முழுவதும் தூக்கத்தை விலக்கிப் படித்துக்கொண்டிருந்தார்கள்.

பிள்ளைகள் சாப்பிடுவதில்லை... குளிப்பதில்லை... தூங்குவதில்லை.

"புத்தகத்தைத் தொட்டுப் பாக்கறானா? பரீட்சைங் கிற நினைப்பு இருக்கா?'

""அறிவுள்ள பிள்ளைங்க ஏன்டீ படிக்கணும் லட்சுமி?'' கட்டிலில் போர்வைக்குள்ளிருந்து பாட்டி கூறினாள்.

""தோல்வியடைஞ்சா, ஒரு வருஷம் போச்சு.''

"நீ ஏன் கவலைப்படுறே லட்சுமி? தினேஷன் எப்போதாவது தோத்திருக்கானா?''

""வெற்றிபெற்றா... கோவில்ல ஒரு பூஜை...''

தாய் நேர்ந்துகொண்டாள்.

அப்போது தினேஷன் உறங்கிக்கொண்டிருந்தான்.

அவன் கட்டிலிலிருந்து இறங்கினான்.

""பல் துலக்கிட்டு வா மகனே.''

டப்பாவிலிருந்து உமிக்கரியை எடுத்துப் பல் துலக்க ஆரம்பித்தான்.

""டீ குடி மகனே.''

சமையலறைக்குள் சென்றான். பலகையில் அமர்ந்தான். தேநீரையும் ஆவி வந்துகொண்டிருந்த புட்டையும், ஜானகி முன்னால் கொண்டுவந்து வைத்தாள். ஜானகி முகத்தை உயர்ந்தவில்லை... பார்க்கவில்லை.... பேசவில்லை...

ஜானகிக்கு என்ன ஆனது? முகத்தில் ரத்த ஓட்டம் குறைந்துவிட்டது. கண்களின் நிறம் மங்கிவிட்டது. மார்பகம் இறங்கிவிட்டது. ஜானகி வாடிக்கொண்டிருக்கிறாளா? மெலிந்து கொண்டிருக்கிறாளா?

""சீக்கிரம் பாரு.... மகனே. நேரம் ரொம்ப அதிகமாயிடுச்சு.''

தினேஷனின் வகுப்பில் படிக்கும் ஹாஸிம் வேகமாக நடந்துசெல்வதைப் பார்த்தார்கள்.

புட்டைச் சாப்பிடவில்லை. தேநீரைப் பருகிவிட்டு உதட்டைத் துடைத்தான். எழுந்தான்.

தாய் வேட்டியையும் சட்டையையும் எடுத்துக் கையில் தந்தாள். அவன் ஆடைகளை அணிந்தான்.

சீப்பை எடுத்துக் கையில் கொடுத்துவிட்டுக் கூறினாள்.

""தலைமுடியை வாரு.''

தலைமுடியை வாரினான்.

""லட்சுமி... உனக்கு பைத்தியம் பிடிச்சிருச்சாடீ? துணிகளைப் போட்டுகிறதுக்கும் தலைமுடியை வார்றதுக்கும் நீ சொல்லணுமாடீ? அவன் எப்போதும் குழந்தையா?''

""பைத்தியம்தான்... அம்மா. சீக்கிரமே எனக்கு பைத்தியம் பிடிச்சிடும்.''

தாய் கூறினாள். அவளுடைய குரல் இடறியது.

போர்வைக்குள்ளிருந்து தலையை உயர்த்தி பாட்டி பார்த்தாள்.

தாய் கண்களைத் துடைத்தாள்.

""தினேஷன் என்னைப் பைத்தியம் பிடிக்கவைப்பான். அப்படின்னாதான் அவனுக்கு திருப்தி ஏற்படும்.''

""உனக்கு என்னடி ஆச்சு லட்சுமீ?''

தாய் எதுவும் கூறவில்லை. மேற்துண்டின் நுனியால் கண்களைத் துடைத்தாள்.

""நீ என்னடீ சொன்னே? தினேஷனுக்கு என்னடீ ஆச்சு?''

தாய் வாய் திறக்கவில்லை.

தினேஷன் புத்தகத்தையும் பேனாவையும் எடுத்துக்கொண்டு வெளியேறினான். வெயில் சாலையில் பரவிக்கிடந்தது. வெயிலின் வாசனை மண்ணிலிருந்து உயர்ந்துகொண்டிருந்தது. நேற்று விழுந்த பனி ஆவியாக உயர்ந்துகொண்டிருந்தது. பனியின் வாசனை மேலே வந்தது. ஈரப்பதம் உயர்ந்து வந்தது.

வெயிலின்... பனியின் வாசனையை முகர்ந்தவாறு நடந்தான்.

கல்லறை சாலையின் சிமென்ட் போடப்பட்டிருந்த ஒற்றையடிப் பாதையின் வழியாக அப்புண்ணி நடந்துவந்தான்.

கண்கள் சிவந்திருந்தன. கன்னம் வீங்கியிருந்தது.

""ராத்திரி நீ எத்தனை மணிவரை படிச்சே?''

""ராத்திரியில படிக்கல.''

நம்ப இயலாததைப்போல அப்புண்ணி கேட்டான்.

""நான் இரண்டு மணிவரை படிச்சேன்.''

""ம்...''

""படிக்கலைன்னாலும் நீ பாஸாயிடுவ...

அதனாலதானே நீ படிக்காம இருந்திருக்கே?''

""ம்...''

""எனக்கு கணக்குதான் கஷ்டம்... முப்பத்தஞ்சு மார்க் கிடைச்சாகூட போதும்.''

அப்புண்ணி கொட்டாவிவிட்டான். கைக் குட்டையை எடுத்து கண்களையும் முகத்தையும் துடைத்தான்.

""சீக்கிரமா நட...''

""மணி என்ன ஆச்சு?''

அப்புண்ணி கைக்கடிகாரத்தைப் பார்த்தான். பத்திற்கு பத்து நிமிடங்கள் மட்டும்...

அப்புண்ணி நடைக்கு வேகத்தை அதிகரித்தான்.

""சீக்கிரம் வாடா தினேஷா.''

அப்புண்ணி ஓடுவதைப்போல நடந்தான். அவன் தினேஷனைத் தாண்டினான்.

கொடியின் கிளைகள் படிகளின் இரு பக்கங்களிலும் படர்ந்து கிடந்தன. சுவரின்மீது காட்டுக்கொடிகள் படர்ந்துகிடந்தன.

வாசலில் நாராயணியம்மா நின்றுகொண்டிருந்தாள். காலியாகக் காட்சியளித்த சாலையைப் பார்த்தவாறு... வெறுமையைப் பார்த்தவாறு... சூனியமாகிவிட்ட தன் மனதில் கண்களைப் பதித்தவாறு...

தினேஷனை மோகனின் தாய் பார்க்கவில்லை.

ஆனால், தினேஷன் அவளைப் பார்த்தான்.

அவன் படிகளில் ஏறினான். வாசலுக்கு நடந்தான். காலடிச் சத்தத்தைக் கேட்டு அவள் பார்த்தாள்.

""தினேஷனா?''

""சார் இங்க இல்லியா?''

அப்போதுதான் அவன் பார்த்தான். சாய்வு நாற்காலி யில் நாளிதழால் முகத்தைமூடிப் படுத்தவாறு ஆசிரியர் உறங்கிக்கொண்டிருந்தார்.

""தினேஷா... நீ பள்ளிக்கூடத்துக்குப் போகலியா?''

""ம்... சாருக்கு இன்னிக்கு பள்ளிக்கூடம் இல்லியா?''

விடுமுறை... உடல்நலமில்ல... தினமும் வயித்துல வேதனை.'' ஆசிரியருக்கு அல்ஸர்.

கள்ளு குடிப்பதால்தான் என்று ஆட்கள் கூறுகிறார்கள். கள்ளு குடித்தால் அல்ஸர் வருமா? அப்படியென்றால் தந்தைக்கு வந்திருக்கவேண்டும். தந்தை தினமும் குடிக்கிறார்.

ஆனால், தந்தை குடிப்பது கள்ளு அல்ல. மது... மதுவும் பீரும்... விலை அதிகமான சரக்கு... வெளிநாட்டு சரக்கு... வெள்ளைக்காரன் வியர்வையின் ருசி, தந்தை குடிக்கும் கள்ளுக்கு இருக்கிறது.

""பள்ளிக்கூடம் போறதுக்கு நேரமாகலியா?''

""ஆகல...''

""அப்படின்னா உள்ளவந்து உட்காரு மகனே.''

தினேஷன் நுழைந்து நாற்காலியில் அமர்ந்தான்.

ஆசிரியர் முகத்திலிருந்து நாளிதழை எடுத்தார். குழிவிழுந்த கண்களால் அவனைப் பார்த்தார். ரோமங்கள் வளர்ந்திருந்த தாடியைச் சொறிந்தார்.

""தினேஷா... உனக்கு இன்னைக்குதானே பரீட்சை?''

""ஆமா.''

""பத்து மணிக்குத்தானே?''

தினேஷன் வாய் திறக்கவில்லை.

ஆசிரியர் கைக்கடிக்காரத்தைப் பார்த்தார். மணி பத்தாகியிருந்தது.

""என்ன இது தினேஷா?''

ஆசிரியர் திட்டினார்.

""என்ன இது... மகனே? சீக்கிரமா போ... சீக்கிரம்...''

ஆசிரியர் நாற்காலியிலிருந்து எழுந்து தினேஷனைப் பிடித்துத் தள்ளினார்.

""பரீட்சைன்னு உனக்குத் தெரியாதா நாராயணீ? பரீட்சைக்குப் போற பிள்ளையைக் கூப்பிட்டு உட்காரவச்சு பேசிட்டு இருப்பியா?''

தினேஷன் வெளியேறி நடந்தான்.

ஆசிரியர் நாற்காலியில் திரும்பச்சென்று அமர்ந்தார்.

மெதுவாக நடந்துசெல்லும் தினேஷனைப் பார்த்தவாறு நாராயணியம்மா நின்றுகொண்டிருந்தாள்.

மோகனன் இப்போது இருந்திருந்தால்...!

புனித தெரேஸா தேவாலயத்தைக் கடந்து தினேஷன் பள்ளிக்கூடத்திற்குச் செல்லும் சாலையில் நடந்தான்.

பள்ளிக்கூடத்திற்கு முன்னால் போய்ச் சேர்ந்தபோது, இரண்டாவது மணியடிக்கும் சத்தம் கேட்டது. பள்ளிக்கூடம் இருந்த பகுதி காலியாகக் கிடந்தது. பிள்ளைகள் முழுவதும் தேர்வுக்கூடத்திற்குச் சென்றிருப்பார்கள். வருகைப் பட்டியலுக்கு பதில் கூறியிருப்பார்கள். எழுதுவதற்கு தாள்கள் வினியோகிக்கப்பட்டிருக்கும்.

பள்ளிக்கூடத்திற்கு முன்னால் நடந்தான். பள்ளிக்கூடத்தைக் கடந்து நடந்தான்.

அந்த்ரமான் சாஹிப்பின் நவநாகரீக மாளிகைக்கு முன்னால் நடந்தான்.

காவல் நிலையத்திற்கு முன்னால் நடந்தான். போலீஸ்காரரான சுப்பிரமணியன் துப்பாக்கியைப் பிடித்தவாறு காவலுக்கு நின்றிருந்தார். பின்னாலி ருந்த கொடிமரத்தில் சிவப்பு, வெள்ளை, பச்சை நிறங்களைக்கொண்ட தேசியக்கொடி ஆடிக் கொண்டிருந்தது. அசைந்துகொண்டிருந்தது. பறந்து கொண்டிருந்தது. நடனமாடிக்கொண்டிருந்தது.

போலீஸ்காரர் சுப்பிரமணியன் அவனைப் பார்த்தார். அவருக்கு தந்தையை நன்கு தெரியும்.

ரெவின்யூ அலுவலகத்திற்கு முன்னால் போய்ச்சேர்ந்தான்.

பாலத்தை நோக்கி நடந்தான்.

அப்போது சாலையின் நடுவில் வட்ட வடிவத்தில் அமைக்கப்பட்டிருந்த பூந்தோட்டத்திற்கு அருகில் தந்தை நின்றுகொண்டிருப்பதைப் பார்த்தான்.

""எங்கடா போறே?''

தந்தையின் முகத்தைப் பார்ப்பதற்கு அவனுக்கு தைரியமில்லை.

""உங்கிட்டதான் கேட்டேன்... நீ எங்க போறே?''

பொதுச்சாலை என்பதையும், சுற்றிலும் ஆட்கள் இருக்கிறார்கள் என்பதையும் மறந்துவிட்டு தந்தை உரத்த குரலில் கத்தினார்.

அவன் எதுவும் கூறவில்லை.

""நீ என்ன செய்யப்போறேன்று எனக்குத் தெரியும்டா. தெரிஞ்சுதான் வச்சிருக்கேன்.''

தந்தை நின்றுகொண்டு மேலும்கீழும் மூச்சு விட்டார். வியர்வையை வழியவிட்டார்.

""நட...''

அவன் நடந்தான்.

பின்னால் தந்தை நடந்தார்.

கைக் கடிகாரத்தைப் பார்த்தார். மணி பத்தேகால் ஆகியிருந்தது. தந்தை வியர்வையில் குளித்தார். மேலும்கீழும் மூச்சுவிட்டார். தோளைப் பிடித்துத் தள்ளிவிட்டுக் கத்தினார்.

""வீட்டுக்கு வா... இன்னிக்கு உன்னை நான் கொல்றேன்டா... கொல்லுவேன்...''

துப்பாக்கியுடன் காவல்காத்து நின்றுகொண்டிருந்த போலீஸ்காரர் சுப்பிரமணியன் கேட்டார்:

""என்ன சமாச்சாரம் சார்?''

""ஒண்ணுமில்ல... சீக்கிரமா நடடா.''

தினேஷனை தந்தை பள்ளிக்கூடத்திற்கு விரட்டிக்கொண்டு சென்றார்.

பள்ளிக்கூடத்தில் வெளிவாசலைக் கடந்தார்கள். காலியாகக் கிடந்த வாசலின் வழியாக நடந்தார்கள்.

தேர்வுக் கூடத்திற்கு முன்னால் போய்ச் சேர்ந்தார்கள்.

பிள்ளைகள் குனிந்த தலையுடன் அமர்ந்து எழுதிக்கொண்டிருந்தார்கள். வியர்வை வழிந்து கொண்டிருந்தது. வியர்வையின் நாற்றம் நிறைந்து கிடக்கும் கூடத்திற்கு வெளியே தந்தை நின்றார். கண்ணன் மாஸ்டர் அதைப் பார்த்தார். அவர் வேகமாக வெளியே வந்தார்.

""என்ன? என்ன ஆச்சு?''

""எக்ஸ்க்யூஸ் மீ...''

தந்தை மாஸ்டரை வெளியே அழைத்தார்.

மாஸ்டரும் தந்தையும் சேர்ந்து தலைமையாசிரியரின் அலுவலத்தை நோக்கி நடந்தார்கள்.

தந்தையும் தலைமையாசிரியரும் சேர்ந்து ஐந்து நிமிட நேரம் உரையாடினார்கள்.

""வகுப்புக்குப் போ.''

தினேஷன் தேர்வுக் கூடத்திற்குச் சென்றான். கேள்வித்தாள்களை வாங்கினான்.

""ஆங்கிலம்... இரண்டரை மணி நேரம் மட்டும்... பன்னிரண்டரை ஆனதும், கண்ணன் மாஸ்டர் கட்டளையிட்டார்.

""எழுதுறதை நிறுத்துங்க.''

பிள்ளைகள் தாள்களை மாஸ்டரிடம் ஒப்படைத் தார்கள். ஒவ்வொருவராக வெளியேறினார்கள்.

ஒரு மணிக்கு தினேஷனும் வெளியேறினான்.

மறுநாள் அலுவலகத்திற்குத் தந்தை புறப் பட்டபோது, தாய் கூறினாள்:

""தினேஷனோட பள்ளிக்கூடத்துக்கு கொஞ்சம் போங்க.''

""என்னால முடியாது லட்சுமி. பள்ளிக்கூடத்துக்குப் போறதுன்னா போகட்டும். இல்லன்னா... போக வேணாம்.''

"நேற்றைப்போல இன்னைக்கும் சுத்திக்கிட்டுத் திரிஞ்சா?''

""எப்படி விருப்பமோ அப்படி நடக்கட்டும்.

எனக்கு வெறுப்பாயிருச்சு.''

நாளிதழை எடுத்துக்கொண்டு, சிகரெட்டைப் பற்றவைத்து இழுத்தவாறு தந்தை நடந்துசென்றார்.

""விதிச்ச மாதிரி நடக்கும்... தலைவிதி!''

யாரிடம் என்றில்லாமல் தாய் கூறினாள். தினேஷன் விதிக்குப் பின்னால் இல்லை. விதி தினேஷனுக்குப் பின்னால் இருந்தது.

தேர்வு முடிந்தது.

தேர்வின் முடிவு தெரிந்தது.

ஹாஸிம் வெற்றிபெற்றான்.

அப்புண்ணி வெற்றிபெற்றான்.

தினேஷன் தோற்றுவிட்டான்.

தாய் அதிர்ச்சியடைந்து அமர்ந்திருந்தாள். தந்தை மிகவும் அமைதியாக இருந்தார். சிகரெட்டை இழுத்துப் புகையை மெதுவாக மேல்நோக்கி ஊதிவிட்டார். தந்தை கூறினார்.

""எனக்குத் தெரியும்.''

""வெறுமனே ஒரு வருஷம் போயிடுச்சு.''

""தினேஷன் தோத்துட்டானா? எப்படி தோத்தான்? இது... கண்ணன் மாஸ்டரோட வேலை... பொறாமையால செய்துட்டார்.''

போர்வைக்குள் படுத்துக்கொண்டு பாட்டி யாரிடம் என்றில்லாமல் கோபப்பட்டாள். முணு முணுத்தாள். தினேஷன் தோற்றுவிட்டான் என்பதை நம்பமுடியவில்லை. முதன்முறையாகத் தோற்கிறான். தோல்வி ஆரம்பமாகிவிட்டது.

கண்ணன் மாஸ்டர் கூறினார்.

""ஒண்ணோ ரெண்டோ பாடத்துலன்னா பரவாயில்லை. வெற்றிபெற வச்சிருக்கலாம்.

ஆனா...''

தோற்றது ஒன்றோ இரண்டோ விஷயத்தில் அல்ல. அனைத்திலும் தோற்றிருக்கிறான். பள்ளிக்கூடத்தின் வரலாற்றில் இது முதன்முறையாக நடக்கிறது. தேர்வில் ஒரு மாணவன் அனைத்துப் பாடங்களிலும் தோற்பது... தந்தை தலைகுனிந்து அமர்ந்து கேட்டார்.

தினேஷன் தன் தந்தையை அவமானத்திற்குள் ளாக்கினான். கண்ணன் மாஸ்டரை அவமானத் திற்குள்ளாக்கினான்... பள்ளிக்கூடத்தையும் அவமானத் திற்குள்ளாக்கினான்...

தினேஷன் தன்னையே அவமானத்திற்குள்ளாக் கினான்.