திருமணம் நடைபெற்ற காலத்தில் பினாஜு நேப்பாளத்தில் ஆசிரியராக இருந்தார். எட்டு பேர் பிறந்திருக்கும் வீட்டிற்கு இரண்டாவது மருமகனாக பினாஜு போய்ச் சேர்ந்தார். அக்காவின் கணவர் நேபாளத்தில் பணிபுரியும் ஆளாக இருந்ததால், அவரை "பினாஜ்யு' என்று அழைக்கலாமென லால் அக்காவின் தங்கைகள் தீர்மானித்தார்கள்.
நேப்பாளி மொழியில் அதுதான் அக்காவின் கணவரை அழைக்கும் பெயர். அந்தவகையில் திருமணம் முடிந்தவுடன், கிஷோர் பாபு "பினாஜ்யு'வாக ஆனார்.
காலப்போக்கில் கிராமம் முழுவதுமே அவரை அதே பெயரிட்டு அழைக்க ஆரம்பித் தார்கள்.
அனைவருக்கும் அவர் "பினாஜ்யு'வாக ஆனார். பிறகு எப்போதோ "பினாஜ்யு' பினாஜு என்று சுருங்கிவிட்டது.
"பினாஜு... பினாஜு...''
கிஷோர்பாபு அறிவியல் ஆசிரியராகப் பணியாற்றினார். சுத்தம் என்ற விஷயத்தில் மனிதர் ஒரு கறாரான ஆள்.
மெட்ரிக்குலேஷனில் தேர்ச்சி பெறுவதுவரை சமஸ்கிருத மீடியத்தில் படித்தார். அது முடிந்து அறிவியலில் பட்டம்.
அப்போது கிராமத்தில் சமஸ்கிருத பாடசாலை மட்டுமே இருந்தது. சமஸ்கிருதத்தையும் இந்தியையும் ஆங்கிலத்தையும் அறிவியலையும் ஒன்றுசேர்த்து பினாஜு கூறக்கூடிய ஈரடிகளை ஆட்கள் ரசித்தார்கள்.
"கஷ்டிகா கெ குஷ்டிகா மெ லுஷ்டிகா கிட்கிஷ்டதாம்...'' இவ்வாறு வரிகள் இருக்கும்.
ஒவ்வொரு வருடமும் கோடைகால விடுமுறையில் கிஷோர்பாபு மனைவியின் வீட்டிற்கு வருவார். பினாஜு வரப்போகிறார் என்ற தகவலை அறிந்தவுடன் மட்டுமே கிராமத்து மக்கள் சுற்றுப்புறத்தை சுத்தமாக வைப்பதைப்பற்றி நினைப்பார்கள். அவர்கள் தெருக்களைக்கூட சுத்தப்படுத்தி வைப்பார்கள்.
ஒருமுறை பினாஜு கிராமத்திற்கு வந்திருந்தபோது, கையால் அடிக்கும் நீர்க் குழாய்க்கு அருகில் கொஞ்சம் வெங்காயத் தோல்கள் கிடப்பதைப் பார்த்து ஆட்களையெல்லாம் அழைத்துவர வைத்து அறிவுரை கூற ஆரம்பித்துவிட்டார். அதைச் செய்த மனிதன் குற்றத்தை ஒப்புக்கொள்ளும்வரை அறிவுரை தொடர்ந்தது.
பினாஜு வரப் போகும் தகவல் தெரிந்தால் கிராமத் திலிருக்கும் குழந்தைகள் அனைவரும் சமஸ்கிருதத்தில் தாது சுலோகங்களை வாய்விட்டுப் படிக்க ஆரம்பித்து விடுவார்கள். எந்த நேரத்தில் பினாஜு கேள்வியுடன் முன்னால்வந்து நிற்பார் என்பதைக் கூறமுடியாது.
"தாது முனிவரின் பஞ்சம ஓரடி சுலோகத்தைக் கேட்கட்டுமா?'' என்று பினாஜு கேட்கும்போது பதில் கூறவில்லையென்றால், நண்பர்களுடன் சேர்ந்து விளையாடுவது நடக்காமல் போய்விடும். நீண்டநேரம் பினாஜுவின் அறிவுரையைக் கேட்கவேண்டியதிருக்கும். அறிவுரை அல்ல... அன்பு நிறைந்த திட்டுதல்.
கிராமத்திற்கு வந்திருக்கும் மருமகன் இப்படியெல்லாம் நடப்பாரா? இப்படியெல்லாமா ஒரு மருமகன் இருப்பார்? கிராமத்திலிருக்கும் பெண்கள் தங்களுக்குள் பேசிக்கொள்வார்கள். எல்லா வீடுகளுக்கும் சென்று நலம் விசாரிக்கிறார். அசுத்தத்தைப் பார்த்தால், உடனடி யாக யாராக இருந்தாலும் பிடித்து நிறத்தி அறிவுரை கூறுகிறார். இப்படியும் ஒரு மருமகனா?
இப்படிப்பட்ட விஷயங்கள் இருந்தாலும், கிராமத்தின் அனைத்து வயதுகளில் இருப்பவர்களுக்கும் பினாஜுவின்மீது பெரிய அளவில் மதிப்பிருந்தது.
அவர் மருமகனைப்போல அல்ல... மகனைப்போலவே நடப்பதாக அம்மா எப்போதும் கூறுவாள். சொந்த கிராமமாக இருந்தாலும், மனைவியின் கிராமமாக இருந்தாலும் அனைவரிடமும் ஒரேமாதிரி...
வருடங்கள் கடந்துவிட்டன. பினாஜு இந்த துயரத்தை எப்படித் தாங்கிக்கொள்வார்? பினாஜுவின் மகனைப் பற்றிய துயரச்செய்தி கிராமத்தை அடைந்த போது, பாரிதோஷ் சிந்தித்தான். இந்த கவலையை பினாஜு எப்படி பொறுத்துக்கொள்வார்? சஷ்டி பூஜைக் காக கங்கைக் கரையில் இடத்தைத் தயார் செய்து கொண்டிருந்தபோது, மண்சரிவு உண்டாகிவிட்டது. பினாஜுவின் இருபத்திரண்டு வயது மகன் அதற்கடி யில் சிக்கி இறந்துவிட்டான். இறுதிச் சடங்குகள் சுடுகாட்டின் படித்துறையில் நடக்கும். அகால மரணம் நடக்கும்போது, வீட்டில் இறுதிச் சடங்குகள் நடத்தப்படுவதில்லை. சொந்த ஜாதியைச் சேர்ந்தவர்கள் மட்டுமல்ல... வேற்று ஜாதியைச் சேர்ந்தவர்களும் வீட்டிற்கு வந்து சாப்பிடுவதில்லை. யாருக்கும் தொண்டைக்குள் உணவு இறங்காது. இறுதிச் சடங்கில் கலந்து கொள்வதற்காக பாரிதோஷ் கங்கைக் கரையைநோக்கிக் கிளம்பினான். பூசாரியின் வீட்டிற்குச் சென்றால், சடங்கு எங்கு நடைபெறுகிறது என்பதைத் தெரிந்துகொள்ளலாம். நேராக அங்கு நடந்தான். தெருவை அடைந்தபோது, புதிய தலைமுறையைச் சேர்ந்த கொஞ்சம் சிறுவர்கள் சுற்றிலும் கூடினார்கள்.
"வீடு எங்கே இருக்கு? எந்த கிராமம்?'' பத்திலிருந்து பதினைந்து வயதுவரை இருக்கக்கூடிய சிறுவர்கள் கேள்விகளுடன் பின்னால் வந்து நின்றார்கள். அவர்கள் இடது பக்கத்திலும் வலது பக்கத்திலும் முன்னாலும் பின்னாலுமாக பாரிதோஷுடன் சேர்ந்து நடந்தார்கள்.
"என் ஆசிரியரோட வீடு எனக்குத் தெரியும் பிள்ளைங்களே! நீங்க எல்லாரும் கோவணம் அணிஞ்சு நடக்க கத்துக்கறதுக்கு முன்னவே இங்க வரக்கூடிய ஆளு நான். புரியுதா? போங்க... போய் வேலையைப் பாருங்க...''
"இதுதான் எங்களோட வேலை. நீங்க யாரோட எஜமான்னு சொல்றதுல என்ன இழக்கப் போறீங்க?'' சிறுவர்கள் கேட்டார்கள்.
பாரிதோஷ் அமைதியாக முன்னோக்கி நடந்தான்.
பூசாரியின் வீட்டிற்குச் செல்லும் வழியில் திரும்பிய போது, சிறுவர்களில் ஒருவன் உரத்த குரலில் கூறினான்:
"சிவநாதா... இந்த எஜமான் உன் தாத்தாவோட வீட்டுக்குப் போறாரு.''
"எஜமான்... நீங்க எந்த கிராமத்துல இருந்து வர்றீங்க?'' சிவநாத் முன்னோக்கிவந்து கேட்டான்.
"அதை நீ ஏன் தெரிஞ்சிக்கணும்?''
"நான்... நான் மஹீநாத் பண்டாவோட மகன். கணேஷ் பண்டா என் தாத்தா. வீட்ல பங்கு பிரிச்சாச்சு. எஜமானார்களை பங்கு வச்சாச்சு. அதனாலதான் கேட்டேன்...''
"மஹீநாத், கணேஷ் பண்டாவோட மகன்ங்கற விஷயம் எனக்குத் தெரியும். ஆனா, பினாஜுவோட மகன் ஆஸுதோஷ் யாரோட உரிமையின்கீழ இருக்காங்கறதை எப்படி தெரிஞ்சிக்கறது?''
பாரிதோஷ் எதுவுமே பேசாமல் அவனுடன் சேர்ந்து நடந்து கணேஷ் பண்டாவின் வீட்டு வாசல்கதவை அடைந்தான். கதவைத் திறந்து வெளியேவந்த கணேஷ் பண்டாவின் முகம் உயிரற்றுக் காணப்பட்டது.
"என்ன... உடல்நலம் சரியில்லியா?'' பாரிதோஷ் கேட்டான்.
"பிரச்சினை ஒண்ணுமில்ல. ஆனா பிரச்சினை இருக்கு. பிள்ளைங்க நாலுபேரும் பாகத்தைப் பிரிச்சிக்கிட்டு போயிட்டாங்க. எஜமான்களையும் அஞ்சு பங்குகளா பிரிச்சிக்கிட்டாங்க.''
"எஜமான்களை அஞ்சா பங்கு போட்டுக் கிட்டாங்களா?''
பாரிதோஷுக்கு சீக்கிரம் பினாஜுவைப் பார்க்க வேண்டும்போல இருந்தது. எனினும், கணேஷ பண்டாவின் பேச்சைக் கேட்டதும், கேட்காமலிருக்க முடியவில்லை.
"அதாவது... கிராமங்களை அஞ்சா பிரிச்சிக்கிட்டாங்க. நாலு பாகம் ஆண் பிள்ளைகளுக்கு... ஒரு பாகம் தந்தைக்கும் தாய்க்கும்... சொத்துகளைக் கணக்குப் போட்டு பிரிச்சி, நாலு பேரும் தனித்தனியா வீடுங்களை உண்டாக்கிக்கிட்டாங்க. நாலு பேரோட குடுமியையும் யாரோ அவிழ்த்துவிட்டதைப்போல பிரிஞ்சு சிதறிப் போச்சு...''
"இதுல கவலைப்படுறதுக்கு என்ன இருக்கு? இதெல்லாம் இப்போ சாதாரண சம்பவங்கள்தானே? எல்லா வீடுகள்லயும் நடக்கறதுதான். ஒவ்வொருவரும் அவரவரோட பொறுப்பை அவங்களே பார்த்துக்க வேண்டியதுதான். தந்தைக்கும் தாய்க்கும் தனி அடுப்பா?''
"இல்ல...'' கணேஷ் பண்டா கூறினார்: "நாங்க இளைய மகன்கூட இருக்கோம். பாகம் பிரிச்சப்போ... மத்த மூணு பேருக்கும் நல்ல விவசாய நிலம் கிடைச்சது. இளையவனுக்கு மட்டும் தரிசுநிலம் கிடைச்சது.
அவனோட வருத்தத்தைப் பார்த்து நான் அவனை என்கூட வச்சிக்கிட்டேன். என் பாகத்தையும் அவனுக்கே தர்றதா சொல்லிட்டேன். புரோகித செயலை கத்துக்க சொன்னேன். என் பிள்ளைங்களுக்கு மந்திரங்களைச் சொல்லக்கூட தெரியல. மந்திரத்தைக் கத்துக்கிட்டா, வாழ்க்கை நல்லா இருக்கும்னு நான் சொல்லிப் பார்த்துட்டேன். ஆனா...''
"என்ன ஆனா..?''
"அவனோட மனைவிக்கு சம்மதமில்ல. பங்கு பிடிக்கும் விஷயத்தில சரியான முடிவு இருக்கணும்னு அவ பிடிவாதம் பிடிச்சா.''
"அப்படின்னா..?''
"அப்படின்னா... எனக்கு கிடைக்கக்கூடிய பணத்தை பங்கு வச்சிப் பிரிச்சா... எப்படி இருக்கும்ன்றதை முன்கூட்டியே தீர்மானிக்கணும்னு... அவளோட விருப்பத்திற்கேற்ப செய்யலாம்னு மனைவி சம்மதிச்சது னால அவங்க எங்ககூட வசிக்க தயாரானாங்க. கிடைக்கறதுல முக்கால் பங்கு அவங்களுக்கு. கால் பகுதி எங்களுக்கு... அவங்க உணவு தருவாங்க. இங்க கும்பமேளா ஆரம்பிச்ச பிறகுதான் காரியங்கள் இப்படியெல்லாம் ஆயிடுச்சு. எல்லாரும் பணக்காரங்களா ஆயிட்டாங்க. தலைக் கனமாயிடுச்சு. சுயநலவாதிகளா ஆயிட்டாங்க. கங்கை அன்னையைப் பத்தி நினைச்சு கவலைப்படுறதுக்கு ஆள் இல்லாம போச்சு...''
"ஜய் ஜய் கிராமம் யாரோட பாகத்தில இருக்குது?'' பாரிதோஷ் கேட்டான்.
"நான்தான் அதுக்கான பூசாரியா இருந்தேன். ஆனா இப்போ அந்த கிராமம் மஹீநாத்தோட அதிகாரத்துல இருக்கு. நேத்து நடந்த ஒரு சம்பவத்தைக் கேளுங்க. அந்த கிராமத்திலிருந்து கிஷோர்பாபு தன் மகனோட இறுதிச் சடங்குக்காக வந்தார். வெறும் இருபத்துரெண்டு வயசே உள்ள மகன் இறந்துட்டான். கிஷோர்பாபுவைப்போல ஒரு நல்ல மனிதரை கொள்ளையடிச்சான்னு சொன்னா போதும்ல... இளம் வயசிலயிருக்குற மகனை இழந்து வந்திருக்கிற ஒரு தந்தைகிட்ட விலைபேசிய விஷயத்தை சொல்லாம இருக்கறதே நல்லது. மூத்த மகன்தான் உத்தரீயம் அணிஞ்சு சடங்குகளைச் செய்றது... துக்கத்தைத் தாங்க முடியாம... பாவம்... கிஷோர்பாபு தலையைக் குனிஞ்சிக்கிட்டு உட்கார்ந்திருந்தார். சித்தப்பாவும் கூட இருந்தார். மஹீநாத்தின் தந்தை நான். மகனைப் பத்தூ மோசமா சொல்லக்கூடாதில்லியா? ஆனா அந்த நல்ல மனுஷன்கிட்ட செஞ்சதை கங்கை மாதா பொறுத்துக்க மாட்டா. அவன் ஒருத்தன்தான் இந்த குடும்பத்தைச் சிதைச்சவன். நீங்க சொன்ன கிராமம் அந்த திருடன் பொறுப்புலதான் இருக்கு...'' கணேஷ் பண்டா கூறினார்.
"பண்டாஜி... மீதி விசேஷங்களைப் பிறகு கேட்கறேன். இப்போ.... மஹீநாத்தின் வீடு எங்க இருக்குன்றதை மட்டும் சொல்லுங்க.'' பாரிதோஷ் அவசரப்பட்டான்.
"அதோ... அங்க. அந்த செங்கல்லால கட்டப்பட்ட வீடு இருக்குல்ல?'' கணேஷ் பண்டா விரலால் சுட்டிக் காட்டினார்.
"அதுக்கு முன்னால இருக்கக்கூடிய வீட்லதான் கிஷோர்பாபு இருக்காரு. ஆனா, இந்த சமயத்தில ஏகாதசி சடங்குகளை செய்றதுக்காக படித்துறைக்கு போயிருப்பார். அதோ... அங்க....'' கணேஷ் பண்டா மீண்டும் விரலால் சுட்டிக் காட்டினார்.
"நல்ல கிராமங்கள்லாம் அவனோட பங்குக்குப் போயிடுச்சு. அவனோ தன்னோட எஜமான்கள் எல்லாரையும் கொள்ளையடிக்கறான்.''
"அன்னிக்கு நான் ஜாமின்ல வெளியவிட்ட மஹீநாத்தானே இந்த ஆள்?''
முன்பொருமுறை மஹீநாத் போலீஸின் கையில் சிக்கிய விஷயத்தை நினைத்துக்கொண்டே பாரிதோஷ் பண்டாவிடம் கேட்டான். அன்று பாரிதோஷ்தான் தன் நண்பரான எஸ்.பி.யிடம் சிபாரிசு செய்து அவனை விடுதலை செய்யவைத்தான். அவன் கொடுத்த ஜாமினில்தான் அன்று அந்த ஆளை போலீஸ் வெளியே விட்டது. 344-ஆம் பிரிவின்கீழ்...
"ஆமா. அதை செஞ்சிருக்கக்கூடாதுன்னு எனக்கு இப்போ தோணுது.''
"சரி... நான் வரட்டுமா?''
"எங்க..?''
"கிஷோர்பாபுகிட்ட.... அவரு என்னோட சகோதரி கணவர்.''
படித்துறையை அடைந்தபோது, பதினொன்றாம் நாளுக்கான சடங்குகளுக்குத் தேவையான பொருட்களை யெல்லாம் அடுக்கி வைத்தவாறு பினாஜு கவலைச் சுமையுடன் தலையை குனிந்துகொண்டு அமர்ந்திருப் பதைப் பார்த்தான். சித்தப்பா சஹதேவ் பாபுவும் அங்கிருந்தார். இறந்துவிட்டவனின் அண்ணனை வைத்து பூசாரி சடங்குகளைச் செய்துகொண்டிருக்கிறார்.
பினாஜு காரியங்களில் மூழ்கியிருந்தார். சற்று தள்ளி ஜகந்நாத்தும் அமர்ந்திருந்தார். பினாஜுவின் கண்கள் நிறைந்து வழிவதை பாரிதோஷ் பார்த்தான்.
"மகன் போனதிலிருந்து இதுதான் நிலைமை. ஒரு வார்த்தைகூட பேசுவதில்லை. ஆட்களைப் பார்த்து கண்ணீரை வழியவிட்டவாறு அமர்ந்திருப்பார். "உங்களோட சகோதர் நிலைமையும் வேறுபட்டில்ல. நாங்க எல்லாரும் எந்தப் பிறவியோட பாவத்துக்கான தண்டனையை அனுபவிக்கிறோம்? எனக்கு சடங்குங்க செய்யவேண்டியவனோட சடங்கில நான் பங்கெடுத்துக்கிட்டிருக்கேன்.'' சஹதேவ் பாபு அழ ஆரம்பித்தார்.
"சித்தப்பா... எல்லாருக்கும் ஆறுதல் சொல்லவேண்டிய நீங்களே...'' சஹதேவ் பாபுவைத் தேற்றுவதற்கு பாரிதோஷ் முயற்சித்தான்.
"எஜமான்... தைரியத்தைக் கைவிட்டுராதீங்க...''
ஜகந்நாத்தும் கூறினான்.
அப்போதுதான் கர்மங்களைச் செய்யக்கூடிய பூசாரியை பாரிதோஷ் கவனித்தான். ஜகந்நாத் எதற்காக அங்கிருக்கிறான் என்பது தெரியவில்லை. முன்பு அவனை எங்குவைத்து பார்த்திருக்கிறோம்? பாரிதோஷ் ஞாபகப்படுத்திப் பார்த்தான். ஆமாம்... நண்பரின் தாய் மரணமடைந்த நேரத்தில்... அவளுடைய மரணத்திற்குப் பிந்தைய சடங்குகள் இந்த இடத்தில்தான் நடந்தன. தாயின் மரணத்திற்குப் பிந்தைய சடங்குகளுக்காக வெளிநாட்டிலிருந்து நண்பர் வந்திருந்தார். மனைவியும் பிள்ளைகளும் தந்தையும் சகோதரியும் சேர்ந்த ஒரு கூட்டம் மட்டுமே படித்துறைக்கு வந்திருந்தது. பாரிதோஷும் அவர்களுடன் இருந்தான்.
ஜனவரி மாதம்... எலும்புகளுக்குள் துளைத்து இறங் கக்கூடிய குளிர்ச்சி... இரவு ஒன்பது மணியளவில் அவர்கள் அங்கு வந்திருந்தார்கள். பிணத்தை அடக்கம் செய்யக்கூடிய அனைத்து ஏற்பாடுகளும் செய்து வைக்கப்பட்டிருந்தன. ஆனால், சிதைக்கு நெருப்பு வைப்பதற்கு யாராலும் முடியவில்லை. இறுதியில் பண்டாஜி இந்த ஜகந்நாத்தை எங்கிருந்தோ அழைத்துக் கொண்டு வந்தார். ஐந்நூறு ரூபாய்களும் இரண்டு புட்டி நாட்டு சாராயமும் தருவதாகக் கூறி சம்மதிக்க வைத்திருந்தார். ஆனால், இங்கு இவனுக்கு என்ன வேலை?
"ஜகந்நாத்... இங்க?'' பாரிதோஷ் கேட்டான்.
"இவன்தான் மஹீநாத்தோட பிரதிநிதி. காவலாளி...'' ஜகந்நாத்திற்கு பதில் கூறுவதற்கு இடம்தராமல் ஸஹதேவ் பாபு கூறினார்.
"பிரதிநிதியா?'' பாரிதோஷ ஆச்சரியப்பட்டான்.
"இந்த பூஜைப் பொருளுங்க எல்லாத்துக்கும் காவலாளிகூட இவன்தான்...''
"சடங்குங்களை செய்யக்கூடிய பூசாரி?''
"இது வெறும் வாடகை பூசாரி. சரியான பண்டாஜியில்ல...''
"ஓஹோ! சும்மாவா சரசரன்னு சடங்குங்களெல்லாம் முடியுது? கங்கை நதியோட பாலத்தின் வழியா புகைவண்டியோட பெட்டிங்க கடந்துசெல்றதைப் போல இருக்கு...''
சிறிது நேரத்திற்கு கர்மங்கள் நிறுத்தி வைக்கப்பட்டன.
"கர்மங்களை செய்யக்கூடிய ஆளுக்குக் கொஞ்சம் ஓய்வு வேணும். அதுதான் முறை...'' ஸஹதேவ் பாபு கூறினார்.
ஆனால் பூசாரி அவசரப்பட்டான். அவனுடைய வழிமுறை வேறாக இருந்தது. சடங்குகள் அனைத் தையும் வேகவேகமாக முடித்துக்கொண்டிருந்தான்.
பாரிதோஷும் சிந்தனையில் மூழ்கினான். பொதுவாக பல மாதங்கள் செய்யவேண்டிய கர்மங்களை எட்டிலிருந்து பத்து மணிகள்வரை நேரத்தை எடுத்து ஒரே இருப்பில் செய்வார்கள். அந்தசமயம் முழுவதும் கர்மத்தைச் செய்பவரும் உதவியாளரும் உபவாஸத்தில் இருப்பார்கள். கோடைக்காலமாக இருந்தால், சர்பத் பருகுவதற்கான உரிமை இருக்கிறது. ஆனால், அப்படிப்பட்ட சூழல் இப்போதில்லை. பூசாரியோ புகைவண்டியின் வேகத்தில் காரியங்களைச் செய்து முடித்துக்கொண்டிருக்கிறான்.
இடையே பாரிதோஷ் பூசாரியிடம் கேட்டான்: "வீடு எங்க இருக்கு?''
"மஹிஷியில...''
"இங்க?''
"இந்த வேலைதான்... எங்களோட எஜமானங்க இங்க இல்ல. இங்குள்ளவங்களோட பூஜைகளைச் செய்றதுக்கான உரிமை எங்களுக்கில்ல. நாங்க இங்கவந்து பூஜை செஞ்சா ரத்தக் களரி உண்டாகும். ஆனா இது ஒப்பந்த வேலை. நான் புரோகிதம் செய்யக்கூடிய பிராமணனா இருந்தாலும், மிகப்பெரிய பண்டிதர் இல்ல. கிராமத்தில புரோகிதத்தை வச்சு வயித்தை நிறைக்க முடியாத சூழல்ல இருக்கேன். வேற வேலைங்க கிடைக்கறதுமில்ல. ஒரு குடும்பமும் வந்து சேர்ந்ததும் பிரச்சினை அதிகமாகிடிச்சி. வேலைதேடி வெளியே புறப்பட்டேன். அதைத் தொடர்ந்து இங்கவந்து சேர்ந்தேன்.''
"ஒரு கர்மத்துக்கு எவ்வளவு கிடைக்கும்?''
"இருநூத்தம்பது.''
"தட்சிணை..?''
"தட்சிணை மஹீநாத்திற்கு... அதுக்குதான் ஜகந்நாத் காவலா இருக்கறது...''
"சராசரியா எத்தனை கர்மங்க செய்வீங்க?''
"அதிகபட்சம் மூணு. சில வேளைகள்ல ஒண்ணு மட்டுமே இருக்கும்.''
"மந்திரங்கள்ல தவறு இருக்கே?''
"இந்த கங்கையோட கரையில தவறோ சரியோ இல்ல. எல்லாமே கங்கை மாதாவுக்கு சமர்ப்பிக்கப்படுது. எல்லாரையும் பாதுகாத்து காப்பாத்துறது அம்மாதான். கிராமத்திலோ வீட்டிலோ கர்மங்க செய்றதைப் போலில்ல இங்குள்ள காரியங்க. இது... கங்கைக் கரை. அம்மாவோட பேருமட்டும் போதும்- எல்லாமே புனிதமாகிடும். அம்மாவை நினைச்சாமட்டும் போதும்- பெருங்கடலோட அக்கரைய அடையறதுக்கு...''
"ஆனா மந்திரங்க தவறுதலா இருக்கலாமா?'' பாரிதோஷ் கோபத்துடன் கேட்டான்.
பினாஜுவைப் பேசவைக்கவேண்டும் என்பதற் காகத்தான் பாரிதோஷ் பூசாரியிடம் எதிர்த்துப் பேசினான்.
சத்யநாராயண பூஜையின்போது மந்திர உச்சரிப்பில் ஒரு எழுத்து தவறினால், பூசாரியை அவ்வப்போது திருத்தக்கூடிய மனிதர்தான் மந்திரங்கள் தவறாக உச்சரிக்கப்படுவதைக் கேட்டுக்கொண்டு மௌனமாக உட்கார்ந்திருக்கிறார். எதுவுமே கூறாமல் அமைதியாக அமர்ந்திருக்கும் பினாஜுவின் செயலற்ற நிலை பரிதாபமாக இருந்தது. பினாஜுவை நேருக்கு நேராகப் பார்ப்பதற்கு பாரிதோஷ் தயங்கினான்.
சடங்குகள் அனைத்தும் முடியக்கூடிய நிலையில் இருந்தன. அப்போது கணேஷ் பண்டா அங்கு வந்தார். தெருவின் எதிர்பக்கத்திலிருந்த தேநீர்க்கடைக்கு பாரிதோஷை அழைத்தான்.
"கூட்டுக்குடும்பமாக இருந்த காலத்தில உங்களோட குடும்பத்தோட உதவி வேண்டிய அளவுக்கு கிடைச்சிருக்கு.'' பண்டாஜி கூறினார்.
"பயப்படவேணாம். அதுல இனிமேலும் எந்த குறையும் இருக்காது.''
கணேஷ் பண்டாவின் வீட்டிற்கு முன்னாலிருந்த காளி கோவிலைப் புதுப்பித்துக் கட்டுவதற்கு தான் பலமுறை நன்கொடை கொடுத்திருப்பதை பாரிதோஷ் நினைத்துப் பார்த்தான். கோவிலின் சிதிலங்களை மாற்றக் கூடிய பணிகள் இன்னும் ஆரம்பிக்கப்படாமலே இருப்பதையும் புரிந்துகொண்டான்.
"பார்த்தீங்கள்ல... இதுதான் மஹீநாத்தின் வேலை... பூஜை செயல்களுக்கு ஒப்பந்தம் கொடுத்துட்டு, எங்காவது சுத்திக்கிட்டிருப்பான். இந்த நேரத்தில சடங்குங்க எல்லாம் முடிக்கப்பட்டிருக்கணும்னு அந்த ஆளுடன் ஒப்பந்தம் இருக்கும். அந்த சமயத்தில அவனோ அவனோட மனைவியோ வருவாங்க. பூஜைப் பொருளுங்க எல்லாத்தையும் எடுத்துக்கிட்டுப் போவாங்க. பூசாரி திருட்டுத்தனம் செஞ்சிடக்கூடாதுங்குறதுக்காகதான் ஜகந்நாத்தைக் காவலுக்கு அமர்த்தியிருக்கறது... இதுதான் அவனோட புரோகிதம்! அவனுக்கு கர்மங்க தெரியாது. மந்திரங்களும்... தனக்குத் தெரியாத மந்திரங்களை மத்தவங்களை வச்சு எப்படி சொல்ல வைப்பான்?''
"ஆனா, மஹீநாத் உங்களோட மகன்தானே? என்ன காரணத்தால எதையும் படிக்கவிடல?''
"நீங்க சொன்னதென்னவோ உண்மைதான்.
அவனுக்கு வேண்டியது எதையும் கத்துக்கொடுக்காத காரணத்தாலதான் எனக்கு இந்த நிலைமை வந்திருக்கு. அதனாலதான் பேரன் சிவநாத்துக்கு புரோகிதம் கத்துத்தர தீர்மானிச்சிருக்கேன். ஆனா, அதுக்கும் அவன் சம்மதிக்கலையே! சிவநாத் படிச்சிட்டு வந்தா, அவனால அலைஞ்சு திரிஞ்சு பக்தர்களை ஏமாத்த முடியுமா?''
"அப்படிச் சொல்லக்கூடாது. உங்களோட மகனும் பேரனும்தானே? அம்மா எல்லாத்தையும் பார்த்துக்கிட்டிருக்கா. அம்மாவை யாருமே பார்க்கலைன்றதுதான் விஷயமே... அம்மா எல்லாரையும் காக்கிறாள். அம்மாவைக் காக்குறதுக்கு யாருமே இல்லை. உங்களோட ஆட்களோட இப்படிப்பட்ட செயல்கள்தான் கங்கையோட கரையை ரத்தக் களரியா ஆக்குது.
"அது... இங்க தினமும் நடக்கக்கூடிய சம்பவமாச்சே! அம்மா விருப்பப்படுவது மட்டுமே இங்க நடக்கும்.''
"தாத்தா... சித்தி கூப்பிடுறாங்க...'' சிவநாத் ஓடிவந்து கூறினான்: "எஜமான் வந்திருக்காரு.''
கணேஷ் பண்டா அங்கு ஓடினார். சடங்கு முடிந்தது. இந்திய பூஜைப் பொருட்களை நதியில் மிதக்கவிடுவதற்கான நேரம் வந்தது. பினாஜு எல்லாவற்றையும் வாரியெடுத்து கூடையில் போட்டு தலையில் வைத்தவாறு நதிக்குள் நடக்கும்போது, உதவுவதற்காக பாரிதோஷ் உடன் சென்றான். ஆனால், ஸஹதேவ் பாபு விலக்கினார். நதியில் நடக்கும்போது பாரிதோஷ் பினாஜுவைத் தடுக்கப் பார்த்தான்.
பினாஜு எதுவுமே பேசாமல் முன்னோக்கி நடந்தார்.
நீரில் இறங்குவதற்கு முன்னால் கணேஷ் பண்டா மீண்டும் பாரிதோஷுக்கு அருகில் வந்தார்: "என் இளைய மகன் இங்க இல்ல. அவனோட மனைவி வந்திருக்கா. நான்தான் சொன்னேனே... மந்திரம் சொல்றது நானுன்னும், காசு வாங்குறது அவளுன்னும்...''
பூஜையில் பயன்படுத்திய பொருட்களை நீரில் விடுவதற்காக கர்மம் செய்தவனுடன் பினாஜுவும் முழங்கால்வரை இருக்கும் நீருக்குள் இறங்கினார். பாரிதோஷும் உடனிறங்கினான்.
"பூஜை செஞ்ச பொருளுங்களை நீரில் போட்டுட்டு, "ஸ்வாஹ'ன்னு சொல்லணும்.''
பினாஜு அசையவில்லை. மௌனத்தைக் கலைக்கவுமில்லை. பூஜை செய்தவன் கூடையைத் தன் கையில் வாங்கி நதியில் மிதக்கவிட்டவாறு கூறினான்: "ஸ்வாஹ...''
பூசாரி கர்மம் செய்தவனிடம் கூறினார்: "இன்னிக்கான சடங்குங்க முடிஞ்சுபோச்சு. இனி... குளிக்கலாம். மீதி நாளைக்கு...''
கர்மம் செய்தவன் நீரில் மூழ்குவதற்காக மேலும் சற்று முன்னோக்கி நடந்தான். திடீரென பினாஜு அவனுடைய உத்தரீயத்தை இழுத்து அவிழ்த்தார். பாரிதோஷ் ஒரு நிமிடம் அதிர்ச்சியடைந்து நின்றுவிட்டான். கணேஷ் பண்டாவும் ஸஹதேவ் பாபுவும் என்ன நடக்கிறதென்று தெரியாமல் ஆச்சரியப்பட்டார்கள். அனைவரும் பார்த்துக்கொண்டிருக்க, உத்தரீயத்தைப் பிடித்திழுத்துக் கிழித்து நதியில் எறிந்தவாறு பினாஜு உரத்த குரலில் கூறினார்: "ஸ்வாஹ...''
படித்துறையிலிருந்து கணேஷ் பண்டா சத்தம் போட்டுக் கூறினார்: "கிஷோர் பாபுவுக்கு பைத்தியம் பிடிச்சிருச்சு. நாளைய கர்மம் பாக்கியிருக்கு. உத்தரீயத்தை நாளைக்குதான் அவிழ்க்கணும்.''
"சடங்குகளெல்லாம் முடிஞ்சுபோச்சு. குளிச்சிட்டு திரும்புவோம்.'' பினாஜு தன் மகனிடம் கூறினார்.
பினாஜு திரும்பி நின்று பாரிதோஷைக் கட்டிப் பிடித்தவாறு கேட்டார்: "நாம திரும்பிப் போறதுக்கான வண்டி எத்தனை மணிக்கு..?''