மார்பகத்தில் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட பெண்... வயது முதிர்ந்தவள் பார்த்துக்கொண்டிருக்க, மாலைநேரம் கடந்து வந்தது. தொடர்ந்து எப்போதோ இரவு வந்து சேர்ந்தபோது, மாலைநேரம் ஒதுங்கி வழிவிட்டது. இரவு வந்து அணைத்துக்கொள்ளும் வகையில்...

கட்டிப் பிடிக்கும் வண்ணம்... ஒட்டிப் பிணையும் வெறியுடன்... அடிபணியும் எண்ணத்தை வெளிப்படுத்தும் கண்களுடன்...

விளக்கை ஏற்றிவைக்க வேண்டும். இன்று தாண்டினால், பிறகு இந்த குடிசையில் என்று விளக்கெரியும்? நாளையோ மற்றொரு முறையோ அது நடக்கப் போவதில்லை.

காலையில் வெல்லூருக்குச் செல்லவேண்டும்.

Advertisment

விருப்பம் காரணமாக அல்ல. ஆனால், அவர் ஒரே பிடிவாதமாக இருந்தார். மார்பை அறுத்து நீக்கிவிட்டு, மீதி விஷயங்களைப் பார்க்கலாம் என்பதைப் போன்ற போக்கு...

இடது பக்க மார்பிற்குள் நோய் இருக்கிறது. கிழவிக்கு நோயைப் பற்றி ஒரு கருத்துண்டு. ஓரத்தில் காணப்படும் காளானைப்போல... எத்தனையோ இதழ்களைத்கொண்ட காளான்..

ss

Advertisment

ஒவ்வொன்றையும் பிடுங்கி நீக்கினால், மீண்டும் அடியில் வேறொன்று முளைத்து நிற்பது தெரியும்.

தென்னங்குருத்தைப்போல... அது வளரும்.

அதைப் பிடுங்கி வீசியெறிந்தால், சுற்றி வளர்வதற்குத் தயாராக இருக்கும் இன்னொன்று! பிடுங்க ஆரம்பித்தால் முடிவதில்லை. அடியுடன் வெட்டி நீக்கியே ஆகவேண்டும். எதுவுமே தேவையில்லை.

இனிமேல் என்ன வாழ்க்கை? இதை வெட்டி நீக்கிவிடும்பட்சம், அவள் மார்க்கண்டேய நிலைக்கு வந்துவிடப் போவதில்லையே!

விளக்கைப் பற்ற வைப்பதற்காக எழுந்தபோது, வெளியே இருட்டிற்குள்ளிருந்து கேட்டது: "கண்ணு... இது என்ன? ஒரு விளக்கைப் பற்ற வைக்கறதுக்குக்கூட இங்க ஆள் இல்லியா?"

"இருக்கு...'' அவள் கூறினாள்: "நான் இப்போதான் எழுந்தேன்.''

வாசலில் பாத்திரத்திலிருந்து நீரை மொண்டு கால்களைக் கழுவியபோது, கிழவரின் மனதில் வேதனை நிறைந்த சிந்தனைகள் மண்ணுளிப் பாம்புகளைப்போல தலையை உயர்த்தின.

பாவம் அந்தப் பெண். அவளுடைய மனம் வெறுத்துப் போயிருந்தது. பயம் நுழைந்திருக்கிறது. வெல்லூருக்குச் செல்லவேண்டும் என்று டாக்டர் கூறியதிலிருந்து, எல்லா இரவுகளிலும் அவரைக் கட்டிப் பிடித்துக்கொண்டு அழுவாள்: "எதுவுமே வேணாம். என்னை எங்குமே கொண்டுபோக வேணாம்.''

சரியென தோன்றினாலும், அதன்படி எப்படி நடப்பது? இந்த நோய் பரம்பரை... பரம்பரையாகவே வரக்கூடியதென்று டாக்டர்கூட கூறிவிட்டார். இன்று இல்லாவிட்டாலும் நாளை அவர் செல்வார். அவளை அழைத்துக்கொண்டு.

மண்ணுக்கடியில் கிடக்கும்போது, அவளை சரியான வகையில் பார்க்கவில்லையென்று தோன்றினால், எப்படி நிம்மதியாக உறங்கமுடியும்? யாருமே இல்லாமல், நோய் முற்றி... அவளால் எப்படி வாழமுடியும்? அழுகிய நாயைப்போல... நீர் தருவதற்குக்கூட ஆளில்லாமல், ஊர்ந்து... நகர்ந்து...

அவரின் பிணம் புதைக்கப்பட்டிருக்கும் மண்ணில் வந்து அமர்ந்து அவள் சத்தமாக அழுவாள் என்ற நிலை உண்டாகும்பட்சம்... முடியாது... போகாமல் இருக்கமுடியாது.

"இதுவரை எங்க இருந்தீங்க?'' விளக்கின் வெளிச்சத்தை அவருடைய முகத்திற்கருகில் கொண்டுசென்றவாறு கிழவி கேட்டாள்: "இன்னிக்கு சாராயக் கடைக்குள்ள நுழையலயா?''

"இல்லை..'' அவர் கூறினார்.

"அய்யோ... அது எப்படி? இன்னிக்கு ராத்திரி ஆவி நுழைஞ்சு, பிடிச்சு இழுக்குமே!''

உண்மைதான். நீண்ட வருடங்களுக்குப்பிறகு, முதன்முறையாக இன்றிரவு அவர் மது அருந்தவில்லை.

இன்று அடிவயிற்றிலிருந்து வாயு எழும்பும். மூச்சுக் குழாய்க்குள் வந்து இரும்புத் துண்டாக மாறும். ஆனால், முடியவில்லை.

மாதவன் ஆசாரியின் குடிசையை விட்டு வெளியேறி, சாராயக் கடைக்கு முன்னால்தான் நடந்துசென்றார். மடியில் பணம் இருந்தாலும், நுழைவதற்குத் தோன்றவில்லை. அவளை அழைத்துச் செல்வதற்காக கடனாக வாங்கிய பணம்... அங்குபோய் சேரும்போது, பணத்திற்குப் பிரச்சினை வந்தால்..?

கிழவி கூறினாள்: "கஞ்சி குடிப்போம்.''

வேண்டும் என்றில்லை. ஆனால், குடிக்காமலிருந்தால், அவளும் இன்று பட்டினி கிடக்க வேண்டியதிருக்கும்.

பாத்திரத்திற்கு முன்னால் அமர்ந்திருந்தபோது, அவர் கவனித்தார். அவள் எதுவுமே பேசவில்லை. முகத்தில் பதைபதைப்போ கவலையோ... இரண்டும் கலந்து குழைந்து கிடந்தன. அவள் என்ன நினைத்துக்கொண்டிருப்பாள்? ஒரே பாத்திரத்திலிருந்து ஒரே பலா இலையில் நடைபெறும் இந்த கஞ்சி குடித்தால் இன்னும் எத்தனை நாட்களுக்கு என்ற நிலை உண்டாகுமோ?

"கண்ணு...''

"என்ன?''

"நீ என்ன நினைக்கிறே?''

"ஒண்ணுமில்ல...''

அவள் பொய் கூறுகிறாள். அவருடைய மனம் வேதனைப்படக்கூடாது என்பதற்காக... பிரசவ வேதனை அதிகமாக இருந்தபோதும் அவள் இதையேதான் கூறினாள்- வேதனையே இல்லையென்று.

அவள்மீது கிழவருக்கு இரக்கம் உண்டானது.

வேதனைப்பட்டு பெற்றெடுத்த மூன்று ஆண் பிள்ளைகளும் இப்போது திரும்பிக்கூட பார்ப்பதில்லை.

ஒருவன் மலபார் பகுதிக்கு கல் சுமப்பதற்காகச் சென்று, பிறகு... திரும்பி வரவேயில்லை.

அங்கு ஏதோவொரு பெண்ணைத் திருமணம் செய்துகொண்டு வாழ்வதாக அவனுடன் சென்றவர்கள் திரும்பி வந்தபோது கூறினார்கள். பிறகு... இன்னொருவன்...

படகு ஓட்டுவதற்காகச் சென்று... சென்று, இறுதியில் தோட்டப் பள்ளி பாலத்திற்கடியில் அழுகிக் கிடந்தான். கடைசி மகன் கோன்னியில் எங்கோ காட்டில் இருக்கிறான். அவரைப்போல யானைப் பாகனாக மாறியிருக்கிறான்.

பாகனின் வாழ்க்கை அவருக்கும் தெரியும். நிலையற்றது...

ஒழுங்கற்றது... ஏதோ காட்டில் யானையின் நான்கு கால்களுக்கு மத்தியில் இப்போது படுத்து உறங்கிக்கொண்டிருப்பான்.

"உட்கார்ந்து என்ன நினைச்சுக்கிட்டு இருக்கீங்க?'' கிழவி கேட்டாள்.

"என்ன..?''

அவர் அவளுடைய முகத்தையே பதைபதைப்புடன் பார்த்தார். எதைப் பற்றி அவர் சிந்தித்துக் கொண்டிருக்கிறார் என்பதைக்கூட அவள் தெளிவாக உணர்ந்திருப்பாள்.

"என்ன நினைக்கிறீங்கன்னு நான் சொல்லட்டுமா?'' கிழவி பெருமையுடன் கேட்டாள்.

"ம்...'' அவர் கஞ்சி நீரைக் குடிப்பதற்கு மத்தியில் முனகினார்.

"அறுவை சிகிட்சை முடிஞ்சு, நான் ஒருவேளை செத்துப் போயிடுவேனோன்னு நினைச்சீங்களா?''

அவர் பதில் கூறவில்லை. மேலும் சற்று கஞ்சிப் பாத்திரத்தை உயர்த்தி முகத்தை மறைத்துக் கொண்டார். கண்கள் நிறைந்தன.

அமர்ந்திருந்தால் அழுவார். அவர் எழுந்து வாழை மரங்களை நோக்கி நடந்தார். முகத்தைக் கழுவவேண்டும். புதிதாக வெட்டப்பட்டிருந்த குளத்தின் ஓரத்திலிருந்து சிறிய தவளைகள் தாளம் எழுப்பி சத்தமிட்டுக் கொண்டிருந்தன. ஜோடிகளாக இருக்கலாம். முன்பு ஒரு இரவு வேளையில் இளம் வயதில் இருக்கும்போது,

அவற்றைப் பார்க்கவேண்டுமென அவள் கூறியதை அவர் நினைத்துப் பார்த்தார்.

பந்தத்தைப் பற்றவைத்துக்கொண்டு சத்தத்திற் கருகில் சென்றபோது, வெளுத்த பலூன்களை கடித்துப் பிடித்தவாறு ஒரே மாதிரி சத்தம் எழுப்பிக் கொண்டிருந்த தவளைக் குட்டிகளைப் பார்த்தார்கள். அப்போது அவள் கூறினாள்:

"நீங்க முதல் முறையா எனக்கருகில வந்து இரவுப் பொழுதில... நான் காய்ச்சலால பாதிக்கப்பட்டு பயந்த நிலையில படுத்திருந்தப்போ... இவை இதேபோல சத்தம் உண்டாக்கின.''

உண்மையாக இருக்கலாம். அன்றும் குட்டித் தவளைகள் சத்தம் எழுப்பியிருக்கலாம். ஒன்றின் குரலுக்கு இன்னொன்று பின்சத்தம் எழுப்பி சந்தோஷப்படுவதை கேட்டவாறு, அந்த இளம்பெண் சருகுகளுடன் சேர்ந்து முழுமையாக மூடிக்கொண்டு படுத்திருந்திருக்க வாய்ப்பிருக்கிறது.

அவ்வாறு படுத்திருக்கும்போது, யானையின் சங்கிலி குலுங்குவதையும், யானையின் வயிற்றில் மரக் கொம்பு சென்று அடிப்பதையும், பாகன் யானையைத் திட்டுவதையும் கேட்டு அவள் நடுங்கியிருக்கலாம்.

அந்த அதிர்ச்சியுடன் அவள் வெளியே வந்திருக்கலாம்.

பாண்டவர்காவில் உள்ள கோவிலில் ஒன்பதாவது நாள் திருவிழா... சேவைக்கு தயார்செய்து நிறுத்தியதிலிருந்தே யானை பிரச்சினை பண்ணிக் கொண்டிருந்தது. ஒருமுறை மேலே இருந்தவாறு வெண்சாமரம் வீசிக் கொண்டிருந்த ஆளை இழுத்து கீழே விழச்செய்தபோது, ஆட்கள் பயந்து விலகினார்கள்.

உற்சவத்தை நடத்திக்கொண்டிருந்தவர்கள் யானையை அருகிலிருக்கும் ஏதாவது நிலத்தில் கொண்டுபோய் கட்டும்படி அவரை கேட்டுக்கொண்டார்கள்.

அன்று அவர்கள் அவ்வாறு கூறாமல் இருந்திருந் தால், அவர் குஞ்ஞுஞ்ஞுவைப் பார்த்திருக்கவே வழியில்லாமல் போயிருக்கும் என்று தோன்றுகிறது.

யானைக்கு ஓலை மடல்களைப் போட்டுவிட்டு திரும்பும்போது, அவளைப் பார்த்தார். ஒரு போர்வையைக்கொண்டு முழுமையாக மூடியவாறு, நடுங்கிய நிலையில் நின்றுகொண்டிருந்தாள்.

"நீ யார் கண்ணு?''

"நான் இங்கதான் இருக்கேன்.''

அருகில் சென்று நெருப்புப் பெட்டியை உரசி பார்த்தபோது, துடித்துக்கொண்டிருக்கும் இளமை... மெல்லிய குச்சியின் நுனியில் எரிந்துகொண்டிருக்கும் நெருப்பின் வெளிச்சத்தில் அவள் மேலும் பேரழகியாகத் தெரிந்தாள்.

"நீ தனியாக இருக்கியா?''

"ம்....''

"பெயர் என்ன?''

"குஞ்ஞுஞ்ஞு...''

" கூட இருந்தவங்க..?''

"திருவிழாவுக்குப் போயிட்டாங்க. எனக்கு காய்ச்சல் இருந்த காரணத்தால, யாரும் அழைச்சிட்டுப் போகல...''

முதலில் பற்றவைத்த நெருப்புக் குச்சி அணைந்து விழுந்திருந்தது. அடுத்த குச்சியில் அதிக நேரம் நெருப்பு துடித்தவாறு நின்றுகொண்டிருந்தது.

புலர்காலைப் பொழுதில் அவள் கூறினாள்: "எழுந்து போங்க யானைக்காரரே! அம்மா இப்போ வந்திருவாங்க...''

"வரட்டும்...'' அவர் சாதாரணமான குரலில் கூறினார்:

"அவங்கக்கிட்ட ஒரு விஷயத்தைக் கேட்டுட்டுதான் நான் போவேன்." ‌‌

"என்ன விஷயம்?" பெண்ணின் முகத்தில் பதைபதைப்பு தெரிந்தது.

"உன்னைத் தரமுடியுமான்னு...''

அவளுடைய நாணம்: "அய்யே..!''

"நின்னுக்கிட்டு எதைப் பத்தி நினைக்கிறீங்க?'' - அப்பாலிருந்து கிழவி உரத்த குரலில் கேட்டாள். திடீரென அவர் வாழை மரங்களைப் பார்த்தார். சரிந்து கிடக்கும் நீர் பாத்திரத்தைப் பார்த்தார். இருட்டைப் பார்த்தார்.

தவளைகளின் முனகல்களைக் கேட்டார்.

"பாய் விரிச்சுப் போட்டுட்டேன். வந்து படுங்க ..'' கிழவி கூறினாள். அவர் உள்ளே நடந்தார்.

சாராய கடைக்குள் நுழைந்திருந்தால், இப்படிப் பட்ட எதையும் நினைத்துப் பார்த்திருக்க வேண்டிய சூழல் உண்டாகியிருக்காது. இன்னும் கொஞ்சம் சாப்பிட்டால் போதுமென தோன்றியது. நன்கு உறங்கி, பொழுது வெளுக்கும்போது அவளையும் அழைத்துக்கொண்டு செல்லவேண்டும்.

"கண்ணு...'' அவர் அழைத்தார். ‌‌

"என்ன?''

"உனக்கு போறதுக்கு பயமா இருக்குதா?''

பதில் வரவில்லை. அவளுக்கு பயம் இருந்தது. உண்மை... சிறிது நேரம் கடந்ததும், கிழவி கேட்டாள்: "நாம போகாமயிருந்தா.?''

"போகாமயிருந்தா..'' அவர் கூறினார்: "உடல்நலம் அதிகமா பாதிக்கப்படும்.''

"ஓ... அதிகமானாலன என்ன? நான் இறந்துடுவேன்.

அவ்வளவுதானே?''

அவள் எந்த அளவிற்கு அலட்சியமாக அதைக் கூறுகிறாள்! எந்த சமயத்திலும் அவளை எதனாலும் அடிபணிய வைக்கமுடியாது என்ற அவருடைய நம்பிக்கை எந்த அளவுக்கு சரியாக இருக்கிறது!

அவர் மீண்டும் மௌனமாகிவிட்டார். அவள் இருட்டில் அமர்ந்து அழுவது காதில் விழுந்தது. என்ன காரணத்திற்காக என்ற விஷயம் அவருக்குத் தெரியும். இறந்துவிட்டால் கணவரின் காரியங்களை யார் பார்ப்பார்கள் என்பதை நினைத் திருக்கலாம்.

"உனக்கு போறதுக்கு தயக்கமாக இருக்கா?''

அவர் கேட்டார்.

"ஆமாம்...''

"ஏன்? பயமா?''

"பயமில்ல..''

"பிறகு..?''

"என் சரீரத்தை... இந்த வயதான காலத்தில வேறொரு ஆண் தொடுவானேங்கறதநினைச்சு உண்டாகக்கூடிய மனக் கவலை. அதுதான் விஷயம்...''

அவருக்கு திடீரென கண்களால் பார்க்கமுடியாத நிலை உண்டானது. அவர் இதுவரை அந்த விஷயத்தைப் பற்றி சிந்தித்ததே இல்லை. எனினும், அவள் அந்த அளவிற்கு நினைத்துப் பார்த்திருக்கிறாள்!

அன்பின் காரணமாக...

தான் என்ன செய்கிறோம் என்ற உணர்வே இல்லாமல் அவர் அவளைக் கட்டிப் பிடித்தார். நரைத்த கூந்தலை விரல்களால் ஒதுக்கிவிட்டார். கண்கள் நிறைந்து, அவளுடைய சுருக்கங்கள் விழுந்த சரீரத்தில் துளிகளை விழச் செய்தன.

பதினைந்து வயதில் அவருடைய கையில் வந்து விழுந்த பெண்... இதுவரை இன்னொரு ஆணைப் பற்றி நினைத்துப் பார்க்கவேண்டிய சூழல் அவளுக்கு உண்டானதில்லை. இப்போது... இதோ... இந்த ஐம்பத்தேழாவது வயதில்....

வாழ்க்கையில் முதல் முறையாக தன் மனைவியையும் ஒரு அந்நிய ஆணையும் பற்றி ஒன்றாக இணைத்து...

பொறாமைப்படக்கூடிய அளவிற்கு சிந்தித்துப் பார்க்கவேண்டிய சூழ்நிலை கிழவருக்கு உண்டானது.

இரவு முதிர்ந்த நிலைக்கு வந்தது. தேவாலயத்திலிருந்து மத சொற்பொழிவு முடிந்து, திரும்பிவரும் பக்தர்கள் நிலத்தை மிதித்து நசுக்கிச் செல்லும் சத்தம் கேட்டது.

கிழவி கேட்டாள்: "எல்லாமே நீங்க தந்தது....

அப்படி இருக்கறப்போ... இதையும்கூட...''

அவரும் அதையேதான் சிந்தித்துக் கொண்டிருந்தார்.

மனங்களின் ஒரே மாதிரியான செயல்படும் தன்மையைப் பற்றி கிழவர் மேலுமொரு முறை ஆச்சரியப்பட்டார்.

"கண்ணு... உனக்கு பயமெதுவும் இல்லியே?''

அவர் கேட்டார்.

"உங்களோட கைகளால நடக்கும்போதா? சரிதான்...''

அவள் அழுவதையும் சிரிப்பதையும் கேட்டார். அதற்குப்பிறகு அவரிடம் பேசுவதற்கு எதுவுமே இல்லை. தன்னுடைய கூர்மையான யானை கத்தியைப் பற்றியும், ரத்தத்தைத் துடைக்கும் பழைய துணியைப் பற்றியும், காயத்தைக் கட்டக்கூடிய புதிய வேட்டியைப் பற்றியும், வாழை மரங்கள் இருக்குமிடத்தில் குழிதோண்டி புதைக்கப்பட வேண்டிய பளபளப்பான மார்பகத்தைப் பற்றியும் உள்ள பலவித சிந்தனைகளும் அவருடைய இதயத்தை நிறைத்திருந்தன.

மீண்டுமொரு முறை அவளுடைய சுருக்கங்கள் நிறைந்த சரீரத்தைத் தழுவி, முத்தம் கொடுத்துவிட்டு அவர் வாசலை நோக்கி நடந்தார்.

கிழவி அறைக்குள்ளேயே மல்லார்ந்து படுத்திருந் தாள்.

உதட்டில் கடவுள்களின் நாமங்கள் மண்ணிலிருந்து மேலெழும் விட்டில் பூச்சிகளைப்போல புறப் பட்டு ஒலித்தன. என்ன நடக்கிறது என்பதைப் பற்றி அவளுக்கேகூட தெளிவான எண்ணங்கள் இல்லை.

அவ்வாறு படுத்திருந்தபோது, வாசலில் கத்தியின் வாய்ப் பகுதி மணல் துகள்களை நசுக்கியவாறு கல்லில் உரசும் சத்தத்தைக் கேட்டாள். முதலில் இடைவெளி விட்டு... விட்டு... உரசி... உரசி.... கேட்ட அதன் வேகம் படிப்படியாக அதிகரித்துக்கொண்டிருந்தது.

இரண்டு சத்தங்களுக்கிடையே இருந்த நேரம் குறைந்து.... குறைந்து வந்து கொண்டிருந்தது. வேகத்திற்கு பைத்தியம் பிடித்திருக்கிறது.

சிறிது நேரம் சென்றபிறகு, இடைவெளியற்ற ஒரு ஓலம் தன் காதுகளில் வந்து விழுவதைப்போல அவளுக்குத் தோன்றியது.