இருள் அடர்த்தியாக மூடியிருந்த ஒரு சாயங்கால வேளையில்தான் நானும் புதிய மணப்பெண்ணும் சேர்ந்து சுந்தரி சித்தியின் வீட்டிற்கு வந்தோம். சுந்தரி சித்தி மெத்தை போடப்பட்டிருந்த கட்டிலில் சரிந்து படுத்திருந்தார்கள். அதனால், அவர்களின் முகத் தைப் பார்க்கமுடியவில்லை.
ஒருவேளை... தூங்கிக் கொண்டிருக்கலாம்.
அமைதியான கவலையை அனுபவித்துக் கொண்டி ருக்கும் எனக்கு அவரிடம் நீண்டகாலமாகவே அன்பும் இரக்கவுணர்வும் இருந்து வந்திருக்கின்றன.
"சித்தி... தூங்கறீங்களா?'' கட்டிலுக்கருகில் நின்றவாறு மிகவும் மெதுவாக... அவர் காதில் முணுமுணுப்பதைப் போல கேட்டேன்.
"யாரது?'' சிந்தனையிலிருந்து விடுபட்டவாறு கேட்டார்.
"இது... நான்தான் அப்புண்ணி...''
அப்புண்ணி என்று கூறியவுடனே... அவர் தட்டுத் தடுமாறி எழுந்தார். மிகவும் பலவீனமாக இருந்த அவரது சரீரம், அந்த கூனின் சுமையால் மிகவும் அதிகமாக குனிந்துவிட்டிருந்தது. முதுகை நிமிர்த்தி முகத்தைப் பார்ப்பதென்பதில் சிரமம் இருக்கிறது என்பதை என்னால் புரிந்துகொள்ள முடிந்தது. நெற்றியில் நரைத்த முடிகள் விழுந்துகிடந்தன. (நீலிப்பிருங்காதி எண்ணெய் தேய்த்து மினுமினுப் பாக்கிய கருத்த சுருள் முடிகளைப் பற்றிய நினைவில் சிறிதுநேரம் மூழ்கிவிட்டேன்.) எண்ணெய் தேய்க்காத தால், நரைத்த முடிகளை மிகவும் தெளிவாகப் பார்க்கமுடிந்தது.
"என்ன... உடல்நல பாதிப்பு எதுவுமில்லையே?''
அவர் என் முகத்தைப் பார்த்து பலவீனமாக சிரித்தார். அப்போது அவரது பார்வை கதவின் மறைவில் நின்றுகொண்டிருந்த புதுமணப் பெண்ணின்மீது பதிந்தது.
"இங்க யாரு வந்திருக்கறது? அப்புண்ணியின் மனைவியா?'' அவரது வார்த்தைகளில் ஆச்சரியமும்... அதற்கும் மேலாக நெகிழ்ச்சியும் இருந்ததாக நான் உணர்ந்தேன். ஒரு அரைக்கால் சட்டை அணிந்து எல்லா இடங்களிலும் ஓடித்திரிந்த என் பால்ய காலத்தை அவர் திடீரென நினைத்திருக்கலாம்.)
மெத்தை போடப்பட்டிருந்த கட்டிலில் தங்கத்தைப் பிடித்து அமர வைத்தார்.
"என்னைத் தெரியமா மகளே? இந்த கூனியை..?''
அவரது மனதில் ஆறிக் குளிர்ந்திராத துக்கம் முழுவதும் இருமலுடன் சேர்ந்துவரப் பார்க்கிறதோ? இயல்பாகவே வெட்கப்படக்கூடிய புது மணப்பெண் என் முகத்தையே தர்மசங்கடத்துடன் பார்த்தாள். "என்ன... இந்த சுந்தரி சித்தி என்கிட்ட இப்படிச் சொல்றாங்க?' என்ற வெளிப்பாடாக இருக்குமோ அவளுடைய விழிகளில்?
சித்தி அடுக்களைக்குள் செல்வதைப் பார்த்தேன். காப்பி தயாரிப்பதற்காக போகிறார் என்பதைப் புரிந்துகொள்ள முடிந்தது.
"உடம்புக்கு முடியாம இருக்கறப்போ, சித்தி... சிரமப்பட வேணாம். சித்தி... உங்களுக்கு வேணும்னா தங்கம் காப்பி போட்டுத் தருவா.''
"என் வீட்ல உன் பொண்டாட்டி முதல்முறையா காலடி எடுத்து வச்சிருக்கா. நான் அவளுக்கு வேலை தர்றதா? சரிதான்! நீ வரப்போறதா எழுதியிருந்த கடிதம் எனக்கு நேத்து கிடைச்சது. அந்தச் சமயத்திலதான் இந்த காய்ச்சல் தொண்ணூறுக்கு வந்திருச்சு..''
"சுகமில்லாம இருக்கறப்போ உடலைத் தொல்லைப் படுத்தக் கூடாது. நாங்க இப்போதான் காப்பி குடிச்சோம்.''
"எங்கே காப்பி குடிச்சீங்க?''
"படகுத் துறைக்கு வந்தப்போ, "எளேடத்தெ' குடும்பத்தைச் சேர்ந்த ராகவனைப் பார்த்தேன். காப்பி குடிக்காம எங்களை அவன் அங்கிருந்து விடல.''
"என்ன இருந்தாலும்... இங்க வந்திட்டு காப்பி குடிக்காம போகமுடியாது. சித்திக்கு சிரமங்கள் இருந்தாலும், ஒரு நேர தேநீர் தரவாவது முடியுதேன்னு நினைச்சுக்கோ...''
கவலையின் நெருஞ்சி முட்கள் குத்தியிருக்கும் அவர் இதயத்தின் தன்மையை என்னால் முழுமையாகப் புரிந்துகொள்ள முடிந்ததால், நான் அவரிடம் அதிகமாக எதுவும் கூறவில்லை.
அடுப்பிற்கருகிலிருந்த பச்சை மடலை வைத்து ஊதிக்கொண்டிருந்த அவரது கறுத்துப்போன முகம் ஈரமாக இருந்தது. தங்கத்திடம் அடுக்களைக்குச் சென்று அவருக்கு உதவும்படி மெதுவான குரலில் கூறிவிட்டு, நான் வெளியே சென்றேன்.
காட்டுக் கொஞ்சியும் கோவைச் செடிகளும் பனையும் வளர்ந்து வாசல்வரை காடென இருக்கிறது. வெட்டவோ கிளறவோ செய்யாததால் தென்னை மரங்கள் மெலிந்து, செம்போலை விரிந்திருக்கிறது. முற்றிலும் தனித்துக் கிடந்தது அந்த இடம்.
நான் பழைய கதைகளில் மூழ்கிவிட்டேன். எங்களுடைய பரம்பரையில் மிகப்பெரிய... தாய்வழி வந்த குடும்பமாக சுந்தரி சித்தியின் குடும்பம் இருந்தது. குடும்பத்திலேயே பேரழகியாக இருந்ததும் அவர்தான்.
எங்களுடைய ஊரில்கூட அவரைப்போல ஒரு அழகி இல்லை. அளந்து எடுத்ததைப்போல இருந்த அவரது சரீரத்தின் ஒவ்வொரு உறுப்புமே முழுமையான அழகுடன் ஒன்றோடொன்று போட்டி போட்டுக் கொண்டிருந்தன. நீலநிறம் படர்ந்த கருத்து மலர்ந்து காணப்பட்ட விழிகளும், பிரகாசமாக இருந்த அந்த முகமும் யாரையும் வசீகரிக்கக்கூடியதாக இருந்தன... ஒருகாலத்தில்.
சுந்தரி சித்தியின் பின்னால் நடப்பதே ஒரு புண்ணியச் செயலென்று கருதிக்கொண்டிருந்த இளைஞர்கள் அன்று வடக்கே முறியில் ஏராளமாக இருந்தார்கள். அவர் சற்று திரும்பிப் பார்த்தால்...
அவரது நேர்த்தியான சிவந்த உதடுகளிலிருந்து ஒரு வார்த்தை பூவிதழைப்போல உதிர்ந்து விழுந்தால்... சற்று சிரித்தால்... வாழ்க்கையே பெருமதிப்பு கொண்டதாகிவிடுமென்று நினைத்துக் கொண்டிருந்த வர்களில் பலரையும் எனக்குத் தெரியும்.
என்னை கைக்குள் போட்டுக்கொண்டு சுந்தரி சித்தியை வசீகரிக்க முயற்சித்தவர்களில் ஒரு ஆள்தான் புரளிப்புரத்தெ ராமன் மேனவன். சுந்தரி சித்தியுடன் சேர்ந்து கோவிலி-ருந்து வழிபாடு முடிந்து வரும்போது, ஒரு நிழலைப்போல ராமன் மேனவன் பின்தொடர்ந்து வருவார். ஒருநாள் சித்திக்கு ஒரு கடிதத்தைக் கொடுத்தார். அந்தக் கடிதத்தை வாசித்துவிட்டு சுந்தரி சித்தி ராமன் மேனவனின் முகத்தைப் பார்த்துக் கூறிய வார்த்தைகள் என் காதுகளில் இப்போதும் முழங்கிக்கொண்டிருக்கின்றன: "இப்படிப்பட்ட கடிதங்களை உங்களோட தாய்க்கும் சகோதரிகளுக்கும் யாராவது எழுதி அனுப்பறதுண்டா?''
ராமன் மேனவனின் முகம் தாளைப்போல வெளிறிப்போனது. தனக்கு உண்டான அவமானத் திற்கு ஒரு பரிகாரம் என்றவகையில், அவரைத் திருமணம் செய்துவிட்டுதான் அடங்குவேன் என சபதம் செய்தார். ஆனால் அந்தத் திருமணம் நடக்கவில்லை. வீட்டிலிருப்பவர்களும் அண்ணன்மார்களும் ஆதரவு தெரிவித்தும் சுந்தரி சித்தி சம்மதிக்கவில்லை.
"எனக்கு அந்த பொம்பளை பொறுக்கிப் பயல் தேவையில்லை.'' அண்ணன்மார்களின் முகத்தைப் பார்த்து சொன்னார். பல திருமண ஆலோசனைகள் வந்தன. ஆனால் என்ன காரணத்தாலோ எதுவுமே நடக்கவில்லை.
கண்ணாடிப் பாத்திரத்தில் தங்கி நின்றுகொண்டி ருக்கும் ஒரு பிரகாச ஜுவாலையைப்போல ஜொலித் துக்கொண்டிருந்த என் சுந்தரி சித்தியிடம் விதி காட்டிய அநீதி எந்த அளவிற்குக் கொடூரமானதாக இருந்தது!
மூன்று அண்ணன்மார்களுக்கு வாய்த்திருந்த ஒரேயொரு தங்கையாக இருந்தார். பனையைப்போலிருந்த அந்த அண்ணன்மார்களின் பேரழகு படைத்த தங்கையின் எதிர்காலம் இப்படி ஆகுமென அவர்கள் கனவில்கூட நினைத்திருக்க வழியில்லை.
சேகர மாமா மூன்று நாள் டைஃபாய்டில் மரணத் தைத் தழுவினார். ஒரு வருடம் முடிவதற்குமுன்பே நாராயண மாமாவும் அகால மரணத்திற்கு இரையானார்.
துலா மாதத்தின் அமாவாசை... காகத்திற்கு உணவு கொடுத்துவிட்டுத் திரும்பிவரும்போது மீனவர்களிடமிருந்து நல்ல மீன்களை வாங்கிவர வேண்டுமென்பது திட்டம்.
உணவு கொடுக்கச்சென்ற ஆளுக்கு வெளுத் தேடத்தெ ராமுண்ணியுடன் சேர்ந்து அலைகளில் விழுந்து புரளவேண்டுமென்ற எண்ணம் உண்டானது.
அலைகளின்மீது விழுந்து விளையாடினார். விளையாடி... விளையாடி உள்ளே போய்விட்டார். இறுதியில் ஒரு அலை உயிரை வாங்கிவிட்டது. ஏழாவது நாளன்று சேற்றுவா படித்துறையில் மீனவர்களுக்குக் கிடைத்தது... தலையும் கையும் காலும் இல்லாத... மீன்கள் கடித்துக் குதறிய ஒரு மாமிசப் பிண்டம்தான். தெற்கிலிருந்த வாசற்படியில்... பின்னப் பட்ட ஓலைப்பாயில் கொண்டுவந்து படுக்க வைக்கப் பட்ட அந்த மாமிசப் பிண்டத்திலிருந்து கிளம்பிய கெட்ட நாற்றம் ஒரு ஃபர்லாங் தூரத்திற்கு வீசியதாக ஊர்க்காரர்கள் கூறினார்கள்.
அந்த சம்பவத்திற்குப்பிறகு வெளுத்தேடனுக்கு ஓணம், விஷு, ஆண்டு இறுதிகளில் விளக்கு வைத்து சோறு படைக்கும் சடங்கு குடும்பத்தில் நிறுத்தப்பட்டுவிட்டது.
வெளுத்தேடத்தெ ராமுண்ணி அதற்குப்பிறகு வடக்கே முறி நிலத்தில் கால் வைக்கவேயில்லை. மூன்றாவது அண்ணனான சுகுமாரனுண்ணி ஒரு முஸ்லிம் பெண்ணைக் கடத்தி, கொண்டோட்டிக்குக் கொண்டுசென்றார். நான்கு வருடங்களுக்குப்பிறகு இப்ராஹிம் குட்டி என்ற பெயரில் சொந்த ஊருக்கு வந்து தன் பாகத்தை வாங்கிக்கொண்டு திரும்பிச் சென்றார். சுந்தரி சித்தி தனியாகினார். விதி தன்னுடைய விளையாட்டை அதற்குப் பிறகும் நிறுத்தவில்லை.
இருபத்தேழாவது வயதில் அவரது முதுகில் ஒரு தேங்காய் விழுந்துவிட்டது. அந்தநாளின் கதையை நான் இன்னும் மறக்கவில்லை.
அன்று அவருடைய பிறந்தநாள். கனகக்கா விலம்மாவை வழிபடுவதற்காகச் சென்றபோது, அவருக்குப் பின்னால் நானும் போனேன். வழிபாடு முடிந்து திரும்பி வந்துகொண்டிருந்தோம். வேட்டைக்காரர்களின் இருப்பிடமிருக்கும் மேட்டில் ஏறி இறங்கினால், இரண்டு ஃபர்லாங்கை மிச்சப்படுத்தலாம். மேட்டை அடைந்ததும், ஒரு முற்றிய தேங்காய் உதிர்ந்து சுந்தரி சித்தியின் முதுகில் விழுந்ததும் ஒரே நேரத்தில் நடந்தன. முதுகில் தேங்காய் விழுந்தவுடனே அவர் கூப்பாடு போட்டார். மயக்கமடைந்து விழுந்த அவர் ஒன்பது மணிநேரம் கழிந்து கண் திறந்தார். மருத்துவமனைக்குக் கொண்டு போனோம். ஒரு வாரம் கழித்து அங்கிருந்து வந்தார். நாட்டு வைத்தியம் நடந்தது. புகழ்பெற்ற எல்லா நாட்டு வைத்தியர்களும் சிகிச்சை நடத்தினார்கள்.
மூலிகை எண்ணெய் தேய்ப்பது, சரீரத்தைப் பிடித்துவிடுவது, உடற்பயிற்சி... அனைத்தும் முறைப்படி நடந்தன. க்யாலன் கணக்கில் தைலமும் களிம்பும் சுந்தரி சித்தியின் முதுகின் வழியாக வழிந்தன. இருந்த பணம் முழுவதையும் தான் எழுந்து நடப்பதற்காக அவர் செலவு செய்தார். ஆனால், அவர் நிமிர்ந்து நடக்கும் செயல் நடக்கவேயில்லை.
தாழம்பூ போன்ற அவருடைய சரீரத்தில் ஒரு கறுப்பு ஆமையின் அளவுக்கு தழும்பும் கட்டிப்போன தன்மையும் தெரிந்தன. அந்த கரிய தழும்பு மறையவே யில்லை. அவருடைய முதுகு இனி எந்தக் காலத்திலும் நிமிராது என்ற விஷயத்தை அறிந்தபோது, நாங்கள் எல்லோரும் குலுங்கிக் குலுங்கி அழுதோம். நீண்டநாட்கள் கடந்த பிறகும் என் கண்ணீர் நிற்கவில்லை.
மலரின் இதழைப் போலிருந்த அவருடைய- அளவெடுத்ததைப் போலிருந்த சரீரம் பாதிக்கப்பட்டது. முதுகு நிமிராமல் நான்கு கால்களால் நடக்கக்கூடிய ஒரு உயிரினமாக மாறினார்.
பூ தாலி மாலை அணிந்து, என் சுந்தரி சித்தி இனி... இந்த பிறவியில் நிமிர்ந்து நிற்கமுடியாது. இனி அவர் கனகக்காவில் ஆலயத்தில் நடைபெறும் திருவிழாவில் நடனமாட முடியாது. ஊரிலுள்ள ஏழு நடனப் பெண்களில் முதலிடத்தில் இருக்கக் கூடிய நடனப் பெண்ணாக அவர் இருந்தார்.
என் சுந்தரி சித்தி இனி திருவாதிரை நிலவு வெளிச்சத்தில் ஊஞ்சல் ஆடமாட்டார். திருவோண சமயத்தில் கைகளைத் தட்டிப் பாடமாட்டார்.
அவரால் இனி கும்மியடிக்க முடியாது.
என் கண்களில் இருள் நுழைந்தது. நான் அவரைக் கட்டிப்பிடித்து அழுதேன். அவர் என்னையும்....
அவர்மீது பொறாமை கொண்டிருந்த பெண்கள் கூர்மையான வார்த்தைகளால் கேட்கும்படியும் கேட்காத மாதிரியும் மழையென அர்ச்சித்துக் கொண்டிருந்தார்கள். அழகியான அவர் கூனியாக மாறியதில்தான் அவர்களுக்கு என்ன ஒரு சந்தோஷம்!
அவர் அமைதியாக இருந்து அழுதார். விதியிடம் அவருக்கு புகார் எதுவுமில்லை. அவங்களுக்கு ஒரேயொரு ஆறுதலாக இருந்தது நான்தான்.
"என் சுந்தரி சித்திக்கு நான் இருக்கேன். நான் வளர்ந்தா, சுந்தரி சித்தியைப் பார்த்துக்குவேன்.''
தேம்பி அழுவதற்கு மத்தியில் அவர் என் நெற்றியில் முத்தமிடுவார். என் தலை அவருடைய கண்ணீரால் பலமுறை நனைந்திருக்கிறது.
"சுந்தரி சித்தி... நீங்க ஏன் அழுறீங்க?'' நான் கண்ணீரைத் துடைத்துக்கொண்டே கேட்பேன்.
அப்போது அவர் என்னைக் கட்டிப்பிடித்தவாறு தேம்பி அழுதுகொண்டே சொல்வார்: "என் மகனே... நீ இனிமே என்னை சுந்தரி சித்தின்னு கூப்பிடாதே... தெரியுதா? நீயும் என்னை கூனின்னு கூப்பிட்டா போதும்...''
அவரை யாரோ கூனிக்குஞ்ஞுக்குட்டி என்று அழைத்தது எனக்கு உடனடியாக ஞாபகத்தில் வந்தது. யாருக்கு அப்படி அழைக்க தைரியம் வந்தது? ஆமாம்... அழைத்தது பொய் பேசும் காளியம்மாதான். இனி தந்தி இல்லாத தந்தியுடன் பொய் பேசுவதில் கில்லாடியான காளியம்மா இந்த படியில் ஏறிவந்தால், அவளைக் கடித்துக் குதறுவதற்கு கரிபாண்டனை அவிழ்த்துவிட வேண்டும். பொய்கூறும் பெண்ணான காளியம்மா வின் கருந்தொடையை கரிபாண்டன் கடித்துக் குதறட் டும்! சத்தம்போட்டு கூப்பாடு போடும்போது, தொடையிலிருந்து ரத்தம் விடாமல் வழியும்போது... பிறகும் பாண்டனை உசுப்பேற்றிவிட வேண்டும்.
"பிடிடா பாண்டா. பிடிடா... பொய்பேசும் காளியை விடாதடா பாண்டா..!'
ஆனால், பொய்பேசும் காளியம்மாவின் தொடையை கறுத்த பாண்டனை வைத்து கடித்துக் குதறவைக்க முடியவில்லை. அதற்கு முன்பே புறப் பட்டாகிவிட்டது.
பதினான்காவது வயதில் எங்களுடைய தாய்வழியாக பிறந்த ஊரிடமிருந்து விடை பெற்றோம். தந்தைக்கு பணி இருந்த இடத்தில் நாங்கள் நிரந்தரமாக வசித்தோம். சுந்தரி சித்தியிடமிருந்து பிரிக்கப்பட்டிருந்த என் மனம் எப்போதும் அவருடனேயே இருந்தது. ஓணத்திற்கும் விஷுவிற்கும் நான் அவரைப் போய்ப் பார்ப்பேன். வருடங்கள் எவ்வளவு வேகமாக கடந்தோடுகின்றன!
நானும் சிறிய ஒரு பணியில் அமர்ந்தேன். கதை எழு தக்கூடிய ஒரு ஆள் என்ற நிலையில் என்னை எப்படியோ அவரும் தெரிந்துகொண்டார். என் இலக்கிய ரசனைக்கு ஒரே காரணமாக இருந்தவர் சுந்தரி சித்திதான்.
இளம் வயதிலேயே அவர் நல்ல ஒரு வாசிக்கக்கூடிய பெண்ணாக இருந்தார். "குந்தலதா', "இந்துலேகா', "சாரதா', "விருதன் சங்கு' ஆகிய நூல்களை நான் வாசித்ததே சுந்தரி சித்தி தந்துதான். அவர்களுக்கு இனிமையாகப் பாடத் தெரியும். ராகம்போட்டு அவர் நூற்றெட்டு ஹரியையும் சீலாவதி பாட்டையும் பாடுவார். சோக ரசனையுடன் அவரால் இராமாயணத்தை வாசிக்கமுடியும். அந்த விபத்து நடப்பதற்குமுன்பு, சுந்தரி சித்தி திங்கட்கிழமையன்று விரதமிருப்பார். அந்தநாளில் அவர் விசேஷமாக சிவ புராணம் வாசிப்பார். அதற்குப் பிறகும் அவருடைய மனதிற்குப் பிடித்த ஒரு கணவன் கிடைக்காமல் போனதற்கு என்ன காரணம்? தாமரைக் கொடியைப்போல மென்மையான மனதைக்கொண்ட சுந்தரி சித்தியிடம் அநீதி காட்டிய விதியின்மீது எனக்கு இப்போதும் வெறுப்புதான்.
என் நீண்ட நினைவுகளுக்குத் திரைச்சீலை இட்டவாறு, ஒரு துயரத்தின் சின்னத்தைப்போல சுந்தரி சித்தி வெங்கலக் குவளையில் காப்பியுடன் வந்தார். மிகவும் அருகிலிருந்த வீட்டைச் சேர்ந்த குஞ்ஞில என்ற சிறுமி ஒரு பொட்டலத்துடன் வாசலுக்கு வந்தாள். சுந்தரி சித்தி அந்த பொட்டலத்தை அடுக்களை சாளரத்தின் வழியாக ரகசியமாக வாங்கினார்.
தட்டுகளில் காரோலப்பம், ரொட்டி, வறுத்த காய், சிறிய வாழைப்பழம் ஆகியவை இருந்தன.
"இதெல்லாம் வரவழைச்சு ஏன் காசை செலவழிக் கிறீங்க?''
"அப்புண்ணி... நீ சித்தியை மறந்துட்டே. இல்லாட்டி இந்த வார்த்தையைச் சொல்லமாட்டே. உன் பொண்டாட்டி முதல்முறையா இங்க வந்திருக்க. வெறும் நீரைத்தந்து அனுப்பமுடியுமா? எனக்கு சுய உணர்விருந்தா, அது நடக்காது.''
அவரிடம் பரிதாபப்பட்டோ... புகார் கூறியோ.. எதிர்ப்பை வெளிப்படுத்தியோ... அளவற்ற அன்பு காரண மாக திட்டியோ... பிரயோஜனமில்லை. அவர் என்ன சொன்னாலும், என்னால் பின்பற்றமட்டுமே முடியும்.
அன்பு நிறைந்த அந்த தேனருவியில் எப்போதும் இரண்டறக் கலக்கும் அதிர்ஷ்டமே எனக்கிருக்கிறது.
நாங்கள் ஒன்றாக அமர்ந்து காப்பி பருகினோம். தங்கத்தின் முகத்தையே சுந்தரி சித்தி இமைவெட்டாமல் அமைதியாகப் பார்த்துக்கொண்டிருப்பதைப் பார்த்தேன். ஒரு புது மணப்பெண்ணின் அழகான உணர்ச்சிகள் அவளிடம் வெளிப்பட்டதால் இருக்குமோ? சித்தி பலவற்றையும் நினைத்துப் பார்த்திருக்க வேண்டும். தங்கத்தின் சுருண்ட முடி இழைகளில் அவருடைய வெளிறிய விரல்கள் ஓடின. திடீரென உதடுகள் கோண, அவர் அழுவதைப் பார்த்தேன். உள்ளுக்குள் இருந்த வேதனையை நீக்குவதற்கு அவரால் முடியவில்லை.
"நீ என்னைப் பத்தி ஒரு கதை எழுதணும்
அப்புண்ணி. தெரியுதா?''
என் தொண்டையில் அடைப்பு உண்டானதைப்போல இருந்தது. அழக்கூடாதென்று உறுதிப்படுத்திக்கொண்ட பிறகும் நான் அழுதுவிட்டேன்.
நாங்கள் புறப்படுவதற்குத் தயாரானோம். அந்த சமயத்தில் சுந்தரி சித்தி உள்ளே சென்று ஆடைகள் வைத்திருக்கும் பெட்டியைத் திறப்பதைப் பார்த்தேன். தாழம்பூவின்... வினோலியா சோப்பின் மெல்லிய வாசனை பரவியது.
சுந்தரி சித்தியின் திருமணத்திற்காக வாங்கிவைத்திருந்த ஜரிகைபோட்ட ஒரு புடவையையும் ஒரு சிவப்பு வண்ண பட்டு ரவிக்கைத் துணியையும் தங்கத்திற்குக் கொடுத்தார். சுந்தரி சித்தி தன் கழுத்தில் அணிந்திருந்த வைரம் பதித்த சங்கிலியைத் தங்கத்தின் கழுத்தில் அணிவித்தார். பல வருடங்களாக அந்த வைரம் பதித்த சங்கிலி பெட்டியில் இருந்தது. ஒரு தங்க நாகத்தைப் போல அந்த வைரம் பதித்த சங்கிலி அவளுடைய கழுத்தில் கிடந்து ஒளிர்ந்தது. அதன் பிரகாசம் சுந்தரி சித்தியின் கண்களில் பிரதிபலித்ததோ? தங்கத் தைக் கட்டிப்பிடித்துக்கொண்டு அவர் விடாமல் முத்த மிட்டார். இறுதியில் என் கையை இழுத்துப் பிடித்துக் கொண்டு அவர் சொன்னார்:
"உன் பொண்டாட்டி நல்ல அதிர்ஷ்டம் உள்ளவ. எல்லா முக லட்சணமும் அவளுக்கு இருக்கு. இதை அணியறதுக்கும் கொடுக்கறதுக்கும் அவளுக்கு யோகமிருக்கு. பிள்ளைங்க நல்லா இருக்கணும்...''
நான் எதுவுமே கூறவில்லை. பதைபதைப்பு காரணமாக என்னால் எதுவுமே கூறமுடியவில்லை.
பாக்கெட்டிலிருந்து ஒரு பத்து ரூபாய் நோட்டை எடுத்து நான் அவரிடம் கொடுத்தவாறு கூறினேன்: "இது கையில இருக்கட்டும் சித்தி.''
"எனக்கு எதுவும் வேணாம். எல்லாம் இங்கே இருக்கு.
இருந்தாலும்... நீ தர்றதுனால நான் வாங்காம இருக்க முடியாது.''
நாங்கள் விடைபெற்றுக்கொண்டு வெளியேறினோம்.
சுந்தரி சித்தி குலுங்கிக் குலுங்கி அழுதார். அவருடைய தேம்பல்களை தொண்டையை இழுத்து முறுக்கிய நரம்பு கள் வெளிக்காட்டின. அந்தச் சந்திப்பு எங்களுடைய இறுதி சந்திப்பாக அமைந்துவிட்டது. இப்போது அவர் என் வாழ்க்கையில் விலைமதிப்பற்ற ஒரு நினைவாக மட்டும் எஞ்சி இருக்கிறார். சிவப்பு வண்ணம் பூசப்பட்ட மெத்தை போடப்பட்டிருந்த அந்த கட்டில் இப்போது வெறுமனே கிடக்கிறது. அந்த வெறுமையைச் சரிசெய்ய முடியாமல், எப்போதும் என் மனம் அவர்களைப்பற்றி நினைத்துக் கொண்டே இருக்கட்டும்!