அழிவதூஉம் ஆவதூஉம் ஆகி வழிபயக்கும்
ஊதியமும் சூழ்ந்து செயல்.
என்பது வள்ளுவர் வாக்கு. இதன் பொருள், ஒரு செயலில் இறங்கும் போது, அது நன்மையைத் தருமா? இல்லை தீமையை ஏற்படுத்துமா? என்று தெளிவாகக் கணக்குப் போட்டுப் பார்த்தபிறகே அந்த செயலில் இறங்கவேண்டும் என்பதாகும்.
ஆனால், இதையெல்லாம் மனதில் கொள்ளாமல், இந்த முயற்சி வெற்றி தருமா என்று நிபுணர்களுடன் தீர்க்கமாக ஆலோசிக்காமல், சரியாகத் திட்டமிடாமல் இந்த எடப்பாடி அரசு, மனம் போனபடி களமிறங்கி யதன் விளைவுதான் சிறுவன் சுஜித்தின் மரணம்.
அமைச்சர்களின் முன்னிலையிலேயே சுஜித் மரணத்திடம் ஒப்படைக்கப்பட்டுவிட்டான்.
தமிழகத்தின் பரிதவிப்புப் பார்வையை நான்கு நாட்கள் தன் பக்கம் திருப்பி வைத்திருந்த இரண்டு வயது மழலை அரும்பு சுஜித், இப்போது இல்லை.
அந்த சுட்டிச் சிறுவன் மணப்பாறை மருத்துவமனையில் உடற்கூராய்வுக்கு ஆளாக்கப்பட்டு, அருகிலிருக்கும் ஆவாரம்பட்டிபுதூர் கிராமத்தில் உள்ள பாத்திமா நகர் கல்லறைத் தோட்டத்தில், கிறிஸ்துவ முறைப்படி அடக்கம் செய்யப்பட்டுவிட்டான்.
அவனுக்காக உருவாக்கப்பட்ட சின்ன அளவிலான கல்லறைப் பெட்டியில் வைத்து, பொதுமக்களின் கண்ணீரோடும் மலரஞ்சலியோடும் அவன் உடல் கல்லறைக்குள் வைக்கப்பட்டுவிட்டது. சுஜித்தை மையமாக்கி, நான்கு நாள் துயர நாடகத்தை நடத்திய எடப்பாடி அரசு, அமைச்சர்கள் முன்னிலையிலேயே அவனைப் புதைத்திருப்பது பெரும் கொடுமை. எத்தனையெத்தனை மீட்புப்பணியாளர்கள், எத்தனையெத்தனை தீயணைப்பு வீரர்கள், பேரிடர் மீட்புக்குழுவினர், என்.எல்.ஜி., ஓ.என்.ஜி.சி. போன்ற நிறுவனங் களைச் சார்ந்தவர்கள், மதுரை மணிகண்டன், புதுக்கோட்டை வீரமணி, நாமக்கல் குழு என எத்தனை தனியார் ஆர்வலர்கள்! அத்தனை பேரும் இரவு- பகல் பாராமல் அக்டோபர் 25-ஆம் தேதி வெள்ளிக்கிழமை இரவில் தொடங்கி, அக்டோபர் 29 செவ்வாய் விடியற்காலை வரை அர்ப்பணிப்புடன் பணியாற்றினார்கள். அவர்களுக்கு ராயல் சல்யூட்.
சுஜித்-
மணப்பாறைக்குப் பக்கத்தில் இருக்கும் நடுக்காட்டுப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த பிரிட்டோ-மேரி தம்பதியின் சுட்டிக் குழந்தை. 25-ஆம் தேதி மாலை வீட்டருகே விளையாடியபோது, கால் தவறி அருகிலிருந்த ஆழ்குழாய்க் கிணறுக்குள் விழுந்தவன், தன்னைக் காப்பாற்றும்படி மரணக்கூச்சல் எழுப்பினான். குடும்பமே கதறியது. ஊரே திரண்டுவந்து பரிதவித்தது.
""அழாதடா சாமி... அம்மா உன்னைத் தூக்கிடுறேன்'' என்று அவனைப் பெற்ற தாய் மேரி, கண்ணீரும் கம்பலையுமாகச் சொன்னபோதுகூட, தான் மீட்கப்பட்டு விடுவோம் என்ற நம்பிக்கையில்தான் அழுத்தமாக "ம்' கொட்டினான் சுஜித். அந்த அவனது "ம்..' என்ற சொல்லில் இருந்த பரிதவிப்பும், பொறுமையும், நம்பிக்கையும் மண்ணோடு மண்ணாகப் புதைந்துவிட்டது.
தங்கள் மகன் சுஜித்தை இந்த அரசாங்கமும், அங்கேயே நான்கு நாட்களாக டேரா போட்டிருந்த சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கரும், அங்கு கொண்டுவந்து குவிக்கப்பட்ட மீட்புப் படையினருமாக எல்லோரும் ஒன்றுசேர்ந்து காப்பாற்றிக் கொடுத்துவிடுவார்கள் என்ற நம்பிக்கையோடு அவன் பெற்றோர்கள் காத்திருந்தார்கள். தமிழகமே கவலையோடு தொலைக்காட்சிப் பெட்டிகளுக்குமுன் உட்கார்ந்து கொண்டு, அந்த நான்கு நாளும் அவனது மீட்பிற்காகக் காத்திருந்தது. ஆனால் அரங்கேற்றப்பட்ட க்ளைமாக்ஸ் காட்சியைப் பார்த்து அத்தனை பேரும் விக்கித்துத் தேம்பினார்கள்.
நாம் மீட்பு முயற்சியில் ஈடுபட்ட அதிகாரிகளைக் குறை சொல்லவில்லை. சுதந்தரமாக முடிவெடுத்துச் செயல்படும் சூழலை அவர்களுக்குத் தராமல், அமைச்சர்கள் உள்ளிட்ட ஆளும்கட்சிப் பிரமுகர்கள் அங்கே இடைஞ்சலாக இருந்ததையே நம்மால் உணரமுடிகிறது.
இந்த மீட்பு முயற்சியே நாடகம்தானோ? என்று இப்போது பலரும் கேள்வி எழுப்புகிறார்கள். காரணம், கடந்த 25-ஆம் தேதி மதியம், தமிழகத்தில் இருக்கும் ஒட்டுமொத்த அரசு மருத்துவர்களும் தங்களின் நான்கு அம்ச கோரிக்கையை வலியுறுத்தி வேலைநிறுத்தப் போராட்டத்தைத் தொடங்கினார்கள். போராட்டத்தை நிறுத்த எந்தவிதப் பேச்சுவார்த்தையிலும் இறங்காத சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், அன்று மாலையே, குழியில் விழுந்த சிறுவன் சுஜித் விவகாரத்தைக் கையில் எடுத்துக்கொண்டு... அந்தப் பிரச்சினையின் பின்னால் பதுங்க ஆரம்பித்தார். தன்னைக் காத்துக்கொள்ள மீட்பு முயற்சியை அவர் நாடகமாக்கிக்கொண்டார் என்கிறார்கள் பலரும்.
அங்கே மீட்பு முயற்சி சரியான திட்டமிடலோடு நடந்ததா? என்றால் உதட்டைப் பிதுக்கவேண்டியிருக்கிறது.
25-ஆம் தேதி சுஜித் குழாய்க்குள் விழுந்ததும் தீயணைப்புப் படையினர் விரைந்து வந்து அவனை கயிறு கட்டித் தூக்க முயன்றனர்.
முடியவில்லை. சுஜித் கீழ்நோக்கி நகர்ந்தான்.இரவு எட்டு மணிவாக்கில் அமைச்சர் விஜயபாஸ்கர் அங்கே சென்றார். அப்போது சுஜித் 27 அடி ஆழத்தைத் தாண்டவில்லை. அப்போதே ரிக் எந்திரத்தை வரவழைத் திருக்கலாம். அதை விட்டுவிட்டு அடுத்தடுத்து பல்வேறு சிறுசிறு மீட்புக் குழுக்களை வைத்து, மீட்கமுடியுமா என்று சோதித்தார்கள். இதில் சுஜித் 70 அடிக்கும் கீழே போய்விட்டான்.
அவ்வளவு சிறிய குழாயில் சிக்கிய குழந்தை.. 30 அடிக்குமேல் சென்றுவிட்டாலே, மூச்சுத் திணறல், வெப்பத் தாக்குதல், ஈர நெருக்கடி ஆகியவற்றைத் தாக்குபிடிப்பது கடினம். இப்படிப்பட்ட நிலையில் குழந்தையை உயிரோடு மீட்கமுடியாது என்பது சாமானியருக்கும் தெரியும். ஆனால் அதை மறைத்து குழந்தை அசைகிறது. ஆக்சிஜனை அனுப்புகிறோம் என்று சொல்லிக்கொண்டே இருந்தார்கள். அமைச்சர் விஜயபாஸ்கரோ அங்கேயே டேரா போட்டு உட்கார்ந்துகொண்டு, ஊடகங்களின் பார்வை தன்மீதே இருக்கும்படி பார்த்துக்கொண்டார்.
அமைச்சர் இருக்கிறார் என்றதும் அதிகாரிகள் டீமும் அவருக்கு அனுசரணையாக அங்கேயே இருந்தது. உடனுக்குடன் அமைச்சர் ஊடகத்திற்குத் தகவல் சொல்லவேண்டும் என்பதற்காக மீட்புப் பணியில் இருக்கும் அதிகாரிகள் அடிக்கடி அவரிடம் நிலவரத்தைச் சொல்லிக் கொண்டே இருந்தனர்.
குழந்தை குழிக்குள் உயிருக்குப் போராடிக் கொண்டிருக்கும்போது, அந்தப் பகுதியில் பிரமுகர்கள் பலரையும் நடமாடவிடலாமா? அதிர்வில் மண்சரியாதா? இது பற்றியெல்லாம் அங்கே யாரும் கவலைப்படவில்லை.
மறுநாள் வரைகூட சுஜித்தால் தாக்குபிடிக்க முடியாது என்பதுதான் இதயத்தைச் சுடும் நிலவரம். இருந்தும் வித்தை காட்டுவது தொடர்ந்தது. இந்த நேரத்தில் தேசிய பேரிடர் மீட்புக் குழு வந்தது. அருகில் குழி தோண்ட முயன்றனர். அப்போது 70 அடிக்கும் கீழ் சுஜித் இருந்தான். சுற்றிலும் மக்கள் திரண்டிருக்கிறார்கள். அவர்களை நம்பவைக்க எதையாவது செய்யவேண்டும் என்ற நிலையில் அமைச்சரின் டீம் இருந்தது. சுஜித்தின் தாய் மேரியைவிட்டே ஒரு துணிப்பையைத் தைக்க வைத்தனர். அது எதற்கும் பயன்படவில்லை.
27-ஆம் தேதி ரிக் இயந்திரம் கொண்டு வரப்பட்டு மூன்று மீட்டர் தொலைவில் துளையிடும் பணி ஆரம்பித்தது. அங்கே பாறைகள் இருந்ததால் துளையிடும் பணி மிக மெதுவாகவே நடக்க, இன்னொரு ரிக் எந்திரம் கொண்டுவரப்பட்டது. அடுத்து பாறையைத் துளைக்கும் எந்திரம் வந்தது. இரவு 11 மணிக்கு ஓ.பி.எஸ். அங்கே வந்தார். அவரிடமும் நடந்தவற்றை அதிகாரிகள் விளக்கினர். அவரும் அவர் பங்கிற்குப் பேட்டி கொடுத்தார். 28-ஆம் தேதி முழுவதும் பாறை கஷ்டப்படுத்துகிறது என்றும் மழை இடைஞ்சல் தருகிறது என்றும் போக்குக் காட்டினார்கள். அந்த நிலையிலும் சுகாதாரத்துறை சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த குழந்தைகள் நல மருத்துவரான டாக்டர் ரமா என்பவர், ஒரு செய்திச் சேனலுக்கு பேட்டியளித்தார். அதில்... "மாண்புமிகு சுகாதாரத்துறை அமைச்சரின் மேற்பார் வையில் மீட்புப்பணிகள் துரிதமாக நடக்கிறது.
குழந்தை வெளியே வந்ததும் அதற்குத் தேவையான சிகிச்சை யைத் தரக் காத்திருக் கிறோம்' என்றவர்... "தண்ணீர், உணவு இல்லாமல் குழந்தைகள் ஏழு நாள்கூட உயிரோடு தாக்குப் பிடிக்கும்' என்றார். இது எல்லாமே திட்டமிட்டு சொல்லவைக்கப்பட்டது போலவே தெரிந்தது. கடைசியாக...
29-ஆம் தேதி அதிகாலை 2.30 மணியளவில் முன்னாள் சுகாதாரத்துறை செயலாளரும் வருவாய் நிர்வாக ஆணையருமான ராதாகிருஷ்ணன் ஊடகங் களிடம் "நேற்று இரவு 12 மணியில் இருந்தே ஆழ்துளைக் கிணற்றில் இருந்து துர்நாற்றம் வீசுவதை' சூசகமாகக் குறிப்பிட்டு இன்னும் பத்து மணி நேரத்தில் எப்படியும் மீட்டுவிடுவோம் என்று எல்லோருக்கும்- முக்கியமாக பத்திரிகை, தொலைக்காட்சி நிருபர்களுக்கு நம்பிக்கை கொடுத்துவிட்டு... யாருக்கும் தெரியாமல் அதிகாலை 4.19 மணிக்கு ஆழ்துளைக் கிணற்றில் சிக்கிய சுஜித், கொக்கிவைத்து அரைகுறையாக துண்டு துண்டான சடலமாக மீட்கப்பட்டு வெளியில் கொண்டு வரப்பட்டான்.
ஒரு உயிர் இறந்து 60 மணிநேரம் கழித்துதான் அந்த உடம்பிலிருந்து துர்நாற்றம் வருமாம். அப்படியானால் சுஜித் இறந்து எத்தனை நாட்கள் ஆகியிருக்குமென்று நீங்களே கணக்குப் போட்டுக்கொள்ளுங்கள். கடைசிவரை உயிர் இருந்ததால்தான், சுஜித்தை மீட்க நாங்கள் பிரயத்தனம் எடுத்துக்கொண்டு அங்கேயே இருந்தோம் என்பதை அந்த நிலையிலும் அமைச்சர் விஜயபாஸ்கர் காட்ட முனைந்தார். அதனால்தான், அவர் சுஜித்திற்காக எழுதிய இரங்கல் கவிதையில் "எண்பத்தைந்து அடி ஆழத்தில் நான் கேட்ட உன் மூச்சு சத்தம்தான் என்னை மீட்புப்பணியில் ஒரு தந்தை ஸ்தானத்தில் பாசப் பிணைப்பில் இணைந்து இயங்கவைத்தது' என்று குறிப்பிட்டிருக்கிறார்.
85 அடியில் சுஜித் இருந்தபோது, அவன் மூச்சு சத்தத்தைக் கேட்டேன் என்பதே அபத்தமான பொய். எந்த அசைவும் இல்லாத சுஜித்திடமிருந்து, எந்திர இரைச்சல்களுக்கு மத்தியில் மூச்சுச் சத்தம் அவருக்கு மட்டும் கேட்டதாம். இதை யாரால் நம்பமுடியும்? குழந்தை உயிரோடு இருக்க வாய்ப்பில்லை என்று தெரிந்தாலும், அவர் நடுக்காட்டுப்பட்டியிலேயே டேரா போட்டதற்குக் காரணம், அரசு மருத்துவர்களின் போராட்டப் பரபரப்பைத் திசைமாற்றத்தான். பிரச்சினையில் இருந்து தப்பிக்க அமைச்சருக்கு அப்பாவி சுஜித், கேடயமாகக் கிடைத்திருக்கிறான்.
அவ்வளவுதான். இது எவ்வளவு பெரிய மோசடித்தனம்?
சுயநலம்?
சுஜித் வீட்டருகே வசிக்கும் மாதேஷ் என்ற சிறுவன் ""என் தந்தை ஆழ்துளைக் கிணறு தோண்டும் தொழிலைச் செய்துவந்தார். அவருக்கு இந்த விவகாரமெல்லாம் அத்துப்படி. இதுபோல் அவர் தோண்டும் குழாய்க்குள் ஏதேனும் ஒரு பொருள் விழுந்துவிட்டால்... என்னைக் கயிற்றால் கட்டி... அந்தக் குழிக்குள் தலைகீழாக இறக்கி, அதை எடுக்கச் செய்வார். இதில் நான் அனுபவம் வாய்ந்தவன். அதேபோல், இந்த முறையில் சுஜித்தை மீட்க நானும் என் தந்தையாரும் முயற்சி செய்தோம். ஆனால் அங்கிருந்தவர்கள் எங்களை மதிக்கவே இல்லை. எங்களை மீட்பு முயற்சிக்கு அனுமதிக்கவும் இல்லை'' என்று ஆதங்கத்தோடு சொல்லியிருக்கிறான்.
நடைமுறையில் எளிதாக இருக்கும் மீட்பு முயற்சியைச் செய்யவிடாமல் தடுத்துவிட்டு, ஊரைக் கூட்டி வைத்துக்கொண்டு துக்க நாடகத்தை அரங்கேற்றியிருக்கிறது எடப்பாடி அரசு.
இங்கே நடந்த மீட்பு முயற்சிகளை கவனித்துப் பார்த்தால்... தமிழக அரசிடம் போதுமான தொழில்நுட்பம் இல்லை. ஒரு தீர்க்கமான திட்டமிடல் இல்லை. ஒருமித்த கூட்டு முயற்சி இல்லை. சரியான வழிகாட்டல் இல்லை. அங்கிருந்த அதிகாரிகள் சுதந்திரமாக செயல்பட அனுமதிக்கப்பட்டதாகவும் தெரியவில்லை. எல்லாவற்றையும் அமைச்சர்களைக் கேட்டுக் கேட்டு, அவர்கள் சொன்னபடியெல்லாம் நடந்து, காரியத்தைக் குழறுபடி ஆக்கிவிட்டார்கள் என்பதைப் புரிந்துகொள்ளமுடிகிறது.
பொறியாளர்களும் தொழில்நுட்ப வல்லுநர்களும் செய்யவேண்டிய மீட்பு முயற்சிக்கு, சுகாதாரத்துறை அமைச்சர் அருகிலிருந்து என்ன ஆலோசனையைத் தந்துவிட முடியும்? ஓ.பி.எஸ். உள்ளிட்ட அமைச்சர்கள் அங்கே சென்றது எந்தவகையில் மீட்பு முயற்சிக்கு உதவியிருக்கமுடியும்?
ஆனால் ஐந்து நாள் செலவுக்கணக்கு மட்டும் 11 கோடியாம்...!? இதுவும் நம்ம காசுதான்.
நடந்ததை எல்லாம் வைத்துப் பார்க்கும்போது, குழியில் விழுந்த ஒரு குழந்தையை வைத்துக்கொண்டு எடப்பாடி அரசு டிராஜடி டிராமா நடத்தியிருக்கிறது என்றுதான் சொல்லவேண்டியிருக்கிறது.
-ஆதங்கத்தோடு,
நக்கீரன்கோபால்