ல்லாததில்லை சங்க இலக்கியப் புலவர்

சொல்லாத தில்லை

என்னும் படி ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்பே ஓராயிரம் நுட்பத் தகவல்களைத் தம்முள் செறித்துக் கொண்டு செம்மொழிக்குச் சிறப்புச் சேர்ப்பவை பாட்டும் தொகையுமாம் பதினெண் மேற்கணக்கு நூல்கள். "தொட்டிலை ஆட்டும் கை தொல்லுலகை ஆளும் கை' என்ற மொழிக்கு இணங்கவும், "ஈட்ஹழ்ண்ற்ஹ் க்ஷங்ஞ்ண்ய்ள் ஹற் ட்ர்ம்ங்' என்னும் வாக்கிற்கேற்ப இல்லாண்மையால் நல்லாண்மையை நாட்டியும் வாழ்க்கைச் சகடத்திற்கு அச்சாணியாய்த் திகழும் மகளிர் மாண்பைப் பல்லாற்றான் வெளிப்படுத்தி அரிவையர் ஆளுமைக்குச் சான்றுபகர்பவை சங்க இலக்கியங்கள்! அக இலக்கியத்தில் வாய்ப்புண்டா?- ஐயுறுவோர்க்கு மெய்யுறு சாட்சியாய்ச் சிலசில செய்திகளைத் தொட்டும் துலக்கியும் மாதர் ஆளுமைத் திறத்தை அகவயப்படுத்துவதே கட்டுரை நோக்கம்.

அன்பின் ஆழம்

Advertisment

அன்பே வாழ்வின் உயிர்நாடி. "காதல் அடைதல் உயிரியற்கை என்பான் பாரதி. எதையும் தாண்டி உன்னதமான காதலை யாராலும் அழிக்கமுடியாது. யாரும் முயலவும் கூடாது! காதலர்கள் மாளலாம்! காதல் மாயாது! ஆதை ஆள்வதில்தான் மானுடத்தின் வெற்றி அடங்கியுள்ளது. வெகுநுட்பமாகவும் நேர்த்தியாகவும் காதலைக் கையாள வேண்டும். அதனால்தான் "மலரினும் மெல்லிலிது காமம்' என்றார் வள்ளுவர். அன்றே சிலர்தான் அதன் செவ்வி தலைப்பட்டுள்ளனர் என்பது மனங்கொள்ளற் குரியது. குறுந்தொகைக் குறிஞ்சிப் பாட்டொன்றில்

நிலத்தினும் பெரிதே வானினும் உயர்ந்தன்று

நீரினும் ஆரளவின்றே சாரல்

Advertisment

கருங்கோற் குறிஞ்சிப் பூக்கொண்டு

பெருந்தேன் இழைக்கும் நாடனொடு நட்பே

(குறுந்தொகை -3)

என்று காதலிலின் ஆழஅகலங்களை விளக்கித் தன் காதலை உறுதிப்படுத்துகின்றாள் தலைவி. செம்புலப்பெயல்நீர்போல் அன்புடை நெஞ்சம் கலந்த கலப்பில் உருவான காதலில் புன்மையும் பொய்மையும் புரையோடாத காலத்தில்- பொருள் மயக்கில் புறம்போகாத சூழலில் உண்டான உண்மைக் காதல்!

காதல் ஆளுமை

பொய்யே இல்லாத காதற்காலம். நம்ப மறுக்கின்றதா உள்ளம்? எங்காவது என்றாவது தவறு நேர்ந்திருக்க வாய்ப்புண்டே... அதற்கும் சான்றளிக்கின்றது அகநானூறு. கள்ளுர் என்ற ஊரில் மங்கையொருத்தியின்பால் அன்புகாட்டி ஏமாற்றிவிடுகிறான் ஒருவன். ஊரவைக்கு வழக்கு வருகிறது. பொய்ச்சூள் உரைத்து அவளைத் தெரியவே தெரியாதென்ற அவனை விசாரித்துத் தண்டிக்கின்றனர் அவையோர். மரத்தில் கட்டிவைத்துத் தலையில் சுண்ணாம்பை ஊற்றிய கொடுமை கண்டு ஊரே பரபக்கிறது. அவையில் ஏற்பட்ட ஆரவாரத்தைத் தலைவன் பரத்தையோடு நீராடிய செய்தி ஊரெங்கும் அம்பலமானதற்கு உவமையாக்குகிறார் புலவர். உவமையாயினும் நடந்தது உண்மை நிகழ்ச்சி.

... கள்ளுர்க் குறுமகன்

ஆறனிலாளன் அறியேன் என்ற

திறனறி பொய்ச்சூள் அறிகரி கடாயெ

முறியார் பெருங்கிளை செறியப் பற்றி

நீறுதலைப் பெய்த ஞான்றை

வீறுசால் அவையத்து ஆர்ப்பினும் பெரிதே

(அகம்- 256)

என்னும் பாடல்வரிகளில் தவறிழைத்த பொய்யன் தண்டிக்கப்பட்டது கூறப்படுகிறது. பாடலிலின் இரண்டு செய்திகள் வெளிப்படையாகவும், இரண்டு செய்திகள் மறைமுகமாகவும் உணர்த்தப் படுகின்றன. தவறு செய்தவன் பெருமகனாயினும் தண்டனைக்குரிய குறுமகனே என்பது சமூகச் செய்தி. பொதுவிடத்தில் தண்டிக்கப்படும் காதலனைக் கண்டு கண்ணீர் சிந்தித் தலைவியோ, தோழியோ தடுக்க முற்படவில்லை என்பது அகச்செய்தி. கடுமையான தண்டனையால் ஆர்ப்பெழுந்தாலும் குற்றம் கடியப்படவேண்டும் என்பதில் யார்க்கும் மாற்றுக்கருத்ததில்லை.

உணர்ச்சிவசப்படும் பெண்கள் இதுபோன்ற சூழ்நிலையில் தானே மனம் உருகியோ பிறர் தூண்டலாலோ வழக்கைத் திரும்பப்பெறுவதும், தண்டனையைத் தடுக்க முயல்வதும் குற்றவாளிக்கும் சாதகமாகிக் குற்றங்களைத்தான் பெருக்கும்! பெண்கள் மனவுறுதியோடு தன் ஆளுமையைக் காட்டவேண்டிய இக்கட்டான இடம் இது! அமிலம் ஊற்றியும், வெட்டியும். குத்தியும், எரித்தும் காதலிலிக்க(?)க் கட்டாயப்படுத்தும் கலிலியுகத்தில் சிந்தித்துப் பார்க்கவேண்டிய நிகழ்ச்சி இது. பாடல்சான்ற புலனெறி வழக்கத்தைத் தாண்டி "சுட்டி ஒருவர் பெயர்கொளப் பெறார்' என்ற அறநெறி கடந்து ஊர்ப்பெயரோடு பதிவாகி யிருக்கும் இவ்வழக்கு தனக்கு இழைக்கப்பட்ட அநீதியைப் பெண் எவ்வாறு எதிர்கொள்ளவேண்டும் என்று பாடம்புகட்டும் தகையது. ஏமாற்றப்பட்ட தலைவியின் உள்ள ஆளுமை இன்றைய தலைமுறைக்கு வழிகாட்டுவது.

தோழி கூற்றாய்ப் பாடலைக் காண்கையில் வெளியாகும் மறைபொருள் தலைவனுக்கு எச்சரிக்கை விடுக்கும் இடிப்புரையாய் அவனது புறத்தொழுக்கம் கண்டனத்துக்குரியது பலரறி செயல் என்பது. யாரும் அறியாரென்று கள்ளுரில் குறுமகன் காதலியை ஏமாற்றியது அம்பலமாக்கிவிட்டபோது துணிகரமாய்ப் பொதுவிடங்களில் பரத்தையோடு வலம்வரும் தலைவனின் மதர்ப்பான செயலும் விரைவில் முடிவுறுமென்பதும் குறியாய் உணர்த்தப் படுகிறது. தவறை உணர்ந்து திருந்தவேண்டுமென்பதே நோக்கமும் எதிர்பார்ப்பும். உறுத்தும் வகையில் எடுத்துக்காட்டித் திருத்த முயலும் தோழியின் ஆளுமைத்திறத்தை மெச்சித்தான் ஆகவேண்டும்.

கடமையும் காதலும் பின்னிப் பிணைந்தது வாழ்வு. ஆடவன் கடமைக்கு முதன்மை தந்தான்! (அன்றைய) பெண்மனதிலோ காதலுக்கே முதலிலிடம்! அக்காலத் தமிழுள்ளம் (இல்லம்) இப்படித்தான் இருந்தது.

""வினையே ஆடவர்க்கு யிரே வாணுதல்

மனையுறை மகளிர்க்கு ஆடவர் உயிரே''

(குறுந்தொகை- 135)

போரெனில் புகலும் புனைகழல் மறவரும், விருந்தெனில் உவக்கும் திருந்திழை மகளிரும் கூடிய இல்லறம் நல்லறமாய் நடந்தது. புறவாழ்வு அகவாழ்வுக்கு ஆதரவாயும், அகவாழ்வு புறத்திற்கு அரணாயும் இருந்து சமூக வாழ்வு சுமுகமானது.

ll

பொருள் இன்றியமையாத தேவையாய் அகவாழ்வு அறவாழ்வாய்ச் சிறக்கவும் புறவாழ்வு மறவாழ்வாய் வீரத்தில் செழிக்கவும் அடிப்படையாயிற்று. திரைகடலோடியும் திரவியம் தேடிப்பிழைப்பது ஆடவர்க்குக் கட்டாயமாக, போரின் பொருட்டோ, பொருள் காரணமாகவோ பிரிந்து சென்ற தலைவன் மீளும்வரை ஆற்றியிருப்பது பெண்ணின் கடமையாகிற்று. அறவோர்க்களித்தலும் அந்தணர் ஓம்பலும், விருந்தெதிர் கோடலுமாகிய இல்லறக்கடமைகளில் வழுவாது தற்காத்துத் தற்கொண்டான் பேணி, ஈன்று புறந்தந்து, குடிப்பெயர் காத்து குலப்பெருமை போற்றி மனையறம் பூணவேண்டியவள் பெண்!

அரிதாய அறனெய்தி அருளியோர்க்கு அளித்தலும்

பெரிதாய பகைவென்று பேணார்த் தெறுதலும்

பொருளின் ஆகும் புனையிழை

(பாலைக்கலி 11)

என்று கலிலித்தொகைத் தலைவன் தலைவிக்கு உணர்த்தி விட்டுப் பொருள்வயிற் பிரிகின்றான். தான்மட்டும் வாழப்பொருள் தேடவில்லை தமிழன்! விருந்தோம்பி வேளாண்மை புரியவே இருந்தோம்பி இல்வாழ்ந்தனர் தமிழ்மகளிர்! இல்லாண் முல்லைப் புறப்பாடல்கள்கூட இல்லாண் முல்லைப் பெண்களின் விருந்தூட்டும் திறத்தையே விண்டுரைக்கின்றன! அன்றைய போர்ச் சூழலில் விருந்தோம்பல் என்பது சமூகக் கடமை! குரம்பியில் வசிக்கும் ஒருவன் அரசபரிவாரத்துக்கே விருந்து வைத்த செய்திகளும் உண்டு. போரால் பாதிப் புற்றுப் புலம்பெயர்ந்த மக்களுக்கு அறம்புரியவே இல்வாழ்க்கை! அதனால் வள்ளுவர் "அறன் எனப் பட்டதே இல்வாழ்க்கை' என்றார் போலும். புன் புலத்தில் வாழ்ந்தாலும் தம்மை நாடி வந்தவர்க்கு உள்ளது கொண்டு உள்ளன்போடு உணவு பரிமாறிப் பசியாற்றிய பாவையரையும், தானியமே இல்லாத நிலையில் விதைக்கென்று வைத்திருந்த தினையைக் குற்றி உணவு சமைத்த இல்லத்தரசிகளையும் இலக்கியம் சுட்டிக்காட்டுகின்றது. மனையறம் காத்த மகளிரின் ஆளுமைக்கு வினையறம் காத்துத் தலைவன் ஈட்டிவரும் பொருளே ஆதாரம்! பொருள் ஈட்டப் பிரிந்தவன் சென்ற இடத்தில் காலம் நீட்டித்த போது துயரில் உழன்றாலும் தன்னைக் காத்தலும் குடும்பத்தைக் காத்தலுமான இரட்டைப் பொறுப்பு தலைவியின் மேல் விழுகிறது!

ஆற்றும் ஆளுமை

இல்லிருத்தல் முல்லை என்றாலே பிரிவாற்றிப் பொறுத்திருத்தல்தான். வரைவிடைவைத்துப் பொருள்வயிற் பிரிதலும், திருமணத்திற்குப்பின் பிரிதலும், போர் நெருக்கடியில் அரசு கடனாற்றப் பிரிதலுமென எவ்வகையில் தலைவன் பிரிந்தாலும் தலைவியைத் தேற்றும் பொறுப்பு தோழிக்கு, பொருளே காதல் காதல் என்று மனம் சலிலித்து விரக்தியுறும் நிலையிலும், ""குன்றக நன்னாடன் வாய்மையில் பொய்தோன்றின்

திங்களில் தீத்தோன்றி யற்று''

(குறிஞ்சிக் கலி)

என நம்பிக்கையூட்டுபவள் தலைவி. பாலைநிலக் காட்சிகளைக் கண்டு விலங்கினங்களின் அன்புநிலை யுணர்ந்து விரைவில் மீள்வான் என்றும், வெம்மைமிகு சுரத்திடை தலைவியின் நினைவால் அவனும் தவிப்பான்: எனவே வினைமுடித்ததும் திரும்புவான் என்றும் ஆறுதல் கூறி அவள் வருத்தம் புறத்தார்க்குப் புலனாகாதவண்ணம் தேற்றும் உள்ள உரமும் பக்குவமும் வாய்ந்தவளாகத் தோழி காட்டப்படுகிறாள். நெய்தற்கலிலியில் நல்லந்துவனார் தோழியின் வாயிலாக வாழ்க்கைக்கு வேண்டிய நற்பண்புகளை- ஆளுமைத்திறன் களை அடுக்கிக் கூறுவது சுட்டற்குகந்தது.

ஆற்றுதல் என்பதொன்று அலந்தவர்க்கு உதவுதல்

போற்றுதல் என்பது புணர்ந்தார்ப் பிரியாமை

அன்பெனப்படுவது தன்நிலை செறாமை

பண்பெனப் படுவது பாடறிந் தொழுகல்

பொறையெனப் படுவது பொற்றார்ப் பொறுத்தல்

நிறையெனப் படுவது மறைபிறர் அறியாமை

முறையெனப் படுவது கண்யோடாது உயிர் வௌவல்

அறிவெனப் படுவது பேதையார் சொல் நோன்றல்

செறிவெனப் படுவது கூறியது மறா அமை''

(கலிலித்தொகை- 133)

தோழி தலைவியிடம் கூறுவது போல் அமையும் பாடலில் இவையனைத்தையும் உணர்ந்தவனாதலிலின் தலைவன் சென்ற இடத்தில் காலம் நீட்டிக்காமல் வினைமுடித்து மீள்வான் என்பதாக ஒரு கருத்தும், மேற்கூறப்பட்ட பண்புகளைத் தலைவியும் அறிந்திருப்ப தால் சூழ்நிலை உணர்ந்து அவன் வரும்வரை பொறுத்திருப்பது கடனென்ற கருத்தொன்றும் பாடலிலில் பொதிந்துள்ளன. இதே அடிகளில் தலைவியும் தோழியும் வாக்குவாதம் செய்வது போன்ற தொனியைப் புலவர் தென்பட வைத்திருப்பதைக் கூர்ந்து நோக்கினால் ஒருவரை ஒருவர் மடக்கும் திறமும் புலப்படும். இருவரின் அறிவாளுமையும் நம்மை வியக்க வைக்கும்.

பலராலும் மேற்கோள் காட்டப்படும் நெய்தற்கலிலிப் பாடலில் ஆளுமைத் திறங்களே பாடப்பட்டுள்ளன. அகவாழ்விற்கும், புறவாழ்விற்கும் பொதுவான இவை இருபாலார்க்கும் பொருந்துபவை வாழ்வு சிறக்க வளம் சேர்ப்பவை. ஆற்றுதல் என்பது துன்பத்தில் துணையாதல்- கஷ்டத்தில் கைகொடுத்தல். போற்றுதல் ஆவது துணையைப் பிரியாமை- நட்பை நெகிழவிடாமை. அன்பென்பது சார்ந்தவரை வெறுக்காமை- சுற்றத்தைப் பகைக்காமை. பண்பென்பது குறைநேராமல் பெருமை காத்தல் உலக நடையறிந்து நடத்தல். பொறையாவது தவறுகளைப் பொறுத்தல்- பகைவரையும் பொறுத்தருளல். நிறையாவது மற்றவர்க்குப் புலனாகாதபடி குடும்பக் கவலைகளை மறைத்தல், நாட்டுமறைகளைப் பகைவர் அறியாதபடி பேதைப் பெண்களின் சொற்களைப் பொறுத்தல்- அறிவிற் குறைந்தோர் பேசுவனவற்றைப் பொறுத்தல். செறிவென்பது பிறர் கூறுவதை மறுக்காது ஏற்றல்- மற்றவர் சொல்வதைச் செவிமடுத்தல். இல்லத்திலும் சமூகத்திலும் வெற்றி வாழ்வு வாழ உதவும் இந்தப் பண்புகள் சுற்றம் போற்ற வாழக் கற்றுத்தரும் பாடம்!

அறத்தொடு நிற்றலில் ஆளுமை

அவையறிந்து பேசுவதே அழகு! இன்னார் இன்னாரி டம் இன்னின்னவற்றைப் பேசலாம் என்று அன்றே தமிழன் அளந்துவைத்ததைத்தான் "அறத்தொடு நிற்றல்' என்னும் துறை விளக்குகிறது. ஒன்றித் தோன்றும் தோழியிடம் உள்ளம் திறப்பான் தலைவி. தோழி தன் தாளான செவிலிலியிடம் தக்கவேளையில் எடுத்துரைப்பாள். ஏற்றதொரு சூழ்நிலையில் செவிலிலித்தாய் நற்றாயிடம் செய்தியைக் கூறுவாள். உகந்த காலத்தில் நற்றாய் தந்தைக்கும் பிறர்க்கும் புலப்படுத்த இப்படித்தான் தலைவியின் காதல் வெளிப்படவேண்டும் என்று படிநிலை வகுத்தனர் பண்டைத்தமிழர். முறைப் படிப் புலப்பட்டு முடிவெடுக்கப்பட்டுத் திருமணம் நிகழ்ந்தால் யார்க்கும் வருத்தமில்லை. உறுத்தலுமில்லை. ஆதரவுப்பட்ட வாழ்க்கை ஆரோக்கியமாய்ச் செல்லும்.

குறிஞ்சிப்பாட்டில் கபிலர் காட்டியுள்ள தோழியின் ஆற்றலும் தலைவியின் சீர்மையும், தலைவனின் நேர்மையும் தமிழ்க்காதலிலின் தகவிற்குக் கட்டியம் கூறுபவை.

இருண்ட வாழ்வில் ஒளியேற்றுபவள் பெண் என்பதால்தான் பெண்கள் நாட்டின் கண்கள் என்றார் பெட்ரண்டு ரஸல். இருட்டுப்பாதையில் முரட்டுத்தனமாய்த் தறிகெட்டுத் திரியும் காளையை நெறிப்பட நிறுத்தி நேர்வழியில் செலுத்துபவள் பெண். புறநானூற்றில் வஞ்சினம் கூறும் பூதப்பாண்டியனும் சோழன் நலங்கிள்ளியும் மாமன்னராயினும் ஒருவனுக்கு ஒருத்தியாய் வாழ்ந்த உறுதிப்பாட்டிற்கு அவர்தம் தேவியரும் காரணம் என்பதை மறுக்க முடியாது. தன்னொடு போரிடவரும் அடங்காத் தானை வேந்தரை முறியடிக்க முடியாவிடில் "பேரமர் உண்கண் இவளினும் பிரிக' (புறம் 71) என்று தேவியைப் பிரியச் சூளுரைக்கின்றான் பூதப்பாண்டியன். நலங்கிள்ளியோ தன்மீது படையெடுக்கும் எதிரிகளைப் புறங்காணாவிடின்,

தீதில் நெஞ்சத்துக் காதல் கொள்ளாப்

பல்லிலிருங் கூந்தல் மகளிர்

ஒல்லா முயக்கிகடைக் குழைகவென்தாரே'

' (புறம் 73)

எனப் பொதுமகளிரைப் புணர்ந்த புன்மை தனக்கு நேரட்டும் என்கிறான். பல்வேறு காரணங்களால் பலரை மணக்க வாய்ப்புள்ள சூழலிலில் மனவுறுதியோடு வாழ்ந்த மன்னர்களுக்குப் பின்னணியில் மகளிர் ஆளுமை திகழ்ந்திருக்கிறது. அரசமாதேவியரின் ஆழ்ந்த அன்பும் ஆளுமைத் திறமுமே அவர்களைக் கட்டிப்போட்டுள்ளது. பட்டினப்பாலையில் செலவழுங்கும் தலைவன்.

"முட்டாச் சிறப்பின் பட்டினம் பெறினும்

வாரேன் வாழியர் நெஞ்சே''

என்று நெஞ்சிற்குரைத்துப் பிரிவைத் தவிர்ப்ப தையும், கரிகாலனின்

""வேலினும் வெய்ய கானம்

கோலினும் தண்ணிய தடமென் தோளே''

என்று வெளிப்படக் காரணத்தைக் கூறுவதையும் எண்ணிப் பார்க்க மனையறத்திலும் உள்ள பண்பிலும் சிறந்த தலைவியின் அன்புக்கிருந்த ஆளுமையை உணரமுடியும்.

தேர்ந்தெடுக்கும் ஆளுமை சந்ததியை வளர்ப்பவள் பெண்! சமூகத்தைக் காப்ப வள் பெண்! காதலில் ஒருவனைக் கைப்பிடித்து அவன் காரியம் யாவிலும் கைகொடுப்பவள் பெண்! இருவரும் இணைந்தாற்றுவதுதான் இனிய இல்லறம்.