பத்துப்பாட்டுள் ஒருவகை இலக்கியம் ஆற்றுப்படை. ஆற்றுப்படுத்துதல் என்றாலே வழிப்படுத்துதல் என்பது பொருளாகும். வறுமையுற்றவன் தன் வறுமை நீங்கப்பெற்ற நிலையில் இன்னொரு வறுமையுற்றவனுக்கு அவ்வறுமை போக ஆற்றுப்படுத்துதல் (வழிகாட்டுதல்). இதில் ஒரு சிறு நூல் சிறுபாணாற்றுப்படை என்பது. மிகக்குறைந்த அடிகளைக்கொண்டு வெகு ஆழமான, சிறப்பான பொருட்சுவை, சொற்சுவையோடு வாழ்வின் சுவையையும் விளக்குவது. மனித வாழ்க்கை நிலையற்ற தன்மைகொண்டது. உயர்ந்து தாழ்ந்தும் பரவி வளர்வது. எல்லாவற்றையும் தாங்கி, சகித்து, அதனையும் சுவைத்து வாழ்வது தமிழனின் திறமை. இத்தகைய வாழ்வே என்றும் நினைக்கற்பாலது.
சிறுபாணாற்றுபடை எல்லாவற்றிலும் சிறப்புடைத்து என்றாலும் குறிப்பாக இங்கே ஒரு பாணனின் (பாட்டுப்பாடுபவன்) வறுமைச்சூழலும் அது நீங்கப்பெற்ற சூழலும் என ஒப்பிடப்பட்டு விளக்கப்படுகிறது. எத்தகைய வறுமையிலும் தன்திறன் மறக்காமல், செம்மையுற்று, தன் வாழ்வை வளப்படுத்திக்கொண்டான் என்பதுதான் பெருமைக்குரிய செய்தி.
பாணனின் வறுமைச்சூழலை அவனே விவரிக்கிறான்.
""என் வறுமையை நீ அறிவாயா? சொல்கிறேன் கேள். நல்லியக் கோடனைக் காண்பதற்கு முன்பிருந்த என்னுடைய நிலை நீ அறியவேண்டும். இன்றுவரை சாய்ந்த சிறு காதுகளையும் திறக்காத கண்களையும் உடைய குட்டிகளை தாய் நாய் எங்கள் வீட்டு அடுக்களைக்குள் ஈன்றிருக்கிறது. சிறுகுட்டிகளாதலால் பசிபொறுக்காமல் தன்னுடைய தாயிடத் துப் பாலருந்த அவை முயலும்போது பால் சுரக்காத முலைகளை யுடைய அத்தாய் நாய் தானீன்ற குட்டிகளைக் குரைத்து விரட்டும் சிறுமைச் சூழலைக் கொண்ட அடுக்களை அது. ஒரு தாய் நாய் தன் குட்டிகளைச் சுமந்து ஈனும்வரையிலான பயன்பா
பத்துப்பாட்டுள் ஒருவகை இலக்கியம் ஆற்றுப்படை. ஆற்றுப்படுத்துதல் என்றாலே வழிப்படுத்துதல் என்பது பொருளாகும். வறுமையுற்றவன் தன் வறுமை நீங்கப்பெற்ற நிலையில் இன்னொரு வறுமையுற்றவனுக்கு அவ்வறுமை போக ஆற்றுப்படுத்துதல் (வழிகாட்டுதல்). இதில் ஒரு சிறு நூல் சிறுபாணாற்றுப்படை என்பது. மிகக்குறைந்த அடிகளைக்கொண்டு வெகு ஆழமான, சிறப்பான பொருட்சுவை, சொற்சுவையோடு வாழ்வின் சுவையையும் விளக்குவது. மனித வாழ்க்கை நிலையற்ற தன்மைகொண்டது. உயர்ந்து தாழ்ந்தும் பரவி வளர்வது. எல்லாவற்றையும் தாங்கி, சகித்து, அதனையும் சுவைத்து வாழ்வது தமிழனின் திறமை. இத்தகைய வாழ்வே என்றும் நினைக்கற்பாலது.
சிறுபாணாற்றுபடை எல்லாவற்றிலும் சிறப்புடைத்து என்றாலும் குறிப்பாக இங்கே ஒரு பாணனின் (பாட்டுப்பாடுபவன்) வறுமைச்சூழலும் அது நீங்கப்பெற்ற சூழலும் என ஒப்பிடப்பட்டு விளக்கப்படுகிறது. எத்தகைய வறுமையிலும் தன்திறன் மறக்காமல், செம்மையுற்று, தன் வாழ்வை வளப்படுத்திக்கொண்டான் என்பதுதான் பெருமைக்குரிய செய்தி.
பாணனின் வறுமைச்சூழலை அவனே விவரிக்கிறான்.
""என் வறுமையை நீ அறிவாயா? சொல்கிறேன் கேள். நல்லியக் கோடனைக் காண்பதற்கு முன்பிருந்த என்னுடைய நிலை நீ அறியவேண்டும். இன்றுவரை சாய்ந்த சிறு காதுகளையும் திறக்காத கண்களையும் உடைய குட்டிகளை தாய் நாய் எங்கள் வீட்டு அடுக்களைக்குள் ஈன்றிருக்கிறது. சிறுகுட்டிகளாதலால் பசிபொறுக்காமல் தன்னுடைய தாயிடத் துப் பாலருந்த அவை முயலும்போது பால் சுரக்காத முலைகளை யுடைய அத்தாய் நாய் தானீன்ற குட்டிகளைக் குரைத்து விரட்டும் சிறுமைச் சூழலைக் கொண்ட அடுக்களை அது. ஒரு தாய் நாய் தன் குட்டிகளைச் சுமந்து ஈனும்வரையிலான பயன்பாட்டுச் சூழலற்ற அடுக்களை. அடுப்பே பற்றவைக்கமுடியாத வறுமைச்சூழல். பசி தாய் நாய்க்கு மட்டுமல்ல எங்களுக்கும்தான். அதுமட்டுமல்ல பழைய சுவர்களில் கரையான்கள் அரித்து அதனால் குவிக்கப்பெற்ற மண்மேடுகளில் காளான்கள் பூத்துக்கிடக்கின்றன. சமையலின் வாசனையே அறியாமல் பொய்த்துவிட்ட அடுக்களை அது.
இருப்பினும் பசி பெரிது. எங்கள் வீட்டு ஆடல்மகள் தன் கைகளால் கொல்லைப்புறம் போய் குப்பைமேட்டில் விளைந்திருக்கும் வேளைக்கீரையைப் பறித்து வருவாள். ஆனால் அதைச் சமைப்பதற்கு நீரன்றி உப்பிருக்காது. யாரும் பார்த்துவிடக்கூடாது எங்கள் வறுமையை என்று அஞ்சி கதவடைத்து எங்கள் சுற்றத் தாரோடு உப்பில்லாமல் சமைத்து அந்த வேளைக்கீரையை உண்டு முடிப்போம். அப்படிப்பட்ட அல்லலுடைய பசித்துன்பத்தை நாங்கள் பெற்றிருந்தோம். துன்பப்பட்டோம்'' என்கிறான் பாணன்.
பொதுவாக உப்பில்லாத பண்டம் குப்பையிலே என்பது பழமொழி. ஆனால் குப்பையில் விளைந்த வேளைக்கீரையை உப்பில்லாமல் கதவடைத்து பிறர் சொல்லுக்கு நாணி உண்ட வறுமை கொடிது மட்டுமல்லாமல் எத்தகைய முரண்நகை அது.
திறவாக் கண்ண சாய்செவிக் குருளை
கறவாப் பால்முலை கவர்தல் நோணாது
புனிற்றுநாய் குரைக்கும் புல்லென் அட்டில்
காழ்சோர் முதுசுவர்க் கணச்சித லரித்த
பூழி பூத்த புழற்கா ளாம்பி
ஒல்குபசி உழந்த ஒடுங்குநுண் மருங்குல்
வளைக்கைக் கிணைமகள் வள்ளுகிர்க் குறைந்த
குப்பை வேளை உப்பிலி வெந்ததை
மடவோர் காட்சி நாணிக் கடையடைத்து
இரும்பேர் ஒக்கலொ டொருங்குடன் மிசையும்
அழிபசி வருத்தம் வீடப் பொழிகவுள்
வறுமையின் உச்சம் இப்பாடல் வரிகளில் காட்சிப்படுகிறது. தாயின் வறுமை குட்டிக்குத் தெரியாது. கண் தெரியாமல் தாயின் முலையில் வைத்து பாலருந்த முயலுகையில் பசிதாகத்துடன் இருக்கும் தாய்நாயுடலில் வற்றிய முலைகள். கறவாப் பால்முலை. அது எப்படி தன் பிள்ளைகளுக்கு தன்னையழித்தாவது பேணிக்காக்கும் தாயால் கறவாதிருக்கமுடியும். இருந்தால்தானே பால்சுரக்கும்.
அதற்கான ஊட்டம் உடலில இல்லை. வறுமை. பாணனின் வறுமை அவன்வீட்டு நாய்க்கும். ஆகவே அந்த புனிற்று நாய் குரைத்து தன் பிள்ளைகளை விரட்டும் கொடுமையான வறுமை. இத்தகைய வறுமைச் சூழலிலும் உப்பில்லாமல் உண்ணும் கீரையையும் ஒக்கலோடு (சுற்றமொடு) உண்ணும் பண்பு பெரிது. அழிபசி வினைத்தொகை. தொடர்ந்திருக்கும் பசி. அது மனம், அறிவு, உடல் எல்லாவற்றையும் அழித்த பசி. அழிக்கின்ற பசி. அழிக்கும் பசி. இத்தகைய வறுமையை நல்லியக்கோடன் தீர்த்துவைக்கிறான்.
ஆனால் இப்பசி தீர வழிநடைப்பயணம் பெரிதானது. ஆகவே அதுவரை பயணிக்கமுடியுமா? நல்லியக்கோடனின் தன்மையை முன்கூட்டியே புலவர் வழிநடைப் பயணத்தில் உணர்த்துகிறார். எயிற்பட்டணம், வேலூர், ஆமூர் ஆகிய ஊர்களில் இதுபோன்ற வறுமையுற்ற பாணர்களுக்கு வழங்கப்படும் விருந்தினைச் சுவைக்கக் காட்சிப்படுத்துகிறார். அழிபசி தீர்கிறது. நம்பிக்கை பிறக்கிறது. அறிவுக் கண் திறக்கிறது. நல்லியக்கோடனைப் புரிந்துகொள்கிறார் கள். வறுமை தீர்கிறது. இனி வழியெங்கும் படைக்கும் விருந்தின் தன்மையைக் காணலாம்.
எயிற்பட்டண விருந்து
எயில் என்பதற்கு மதில் என்று பொருள். மதிலையுடைய பட்டணம். அது நெய்தல் நிலம். நெய்தல் நிலத்தின் காட்சியே வளமானது. தாழம்பூ அன்னப்பறவைபோல பூத்துக்கிடக்கும் நீலமணிபோல முள்ளி ஒளி வீசும். ஒட்டகம் உறங்குவதைப்போல கடல்அலைகள் குவித்து வைத்த அகிற்கட்டைகளை எரித்து அத்தீயில் கள்ளைக் காய்ச்சி பாணருக்கு ஊட்டுவர். ஒவ்வொரு வீடுதோறும் சூடான மீன் விருந்தாகக் கிடைக்கும். இதற்கான பாடல்.
அலைநீர்த் தாழை அன்னம் பூப்பவும்
தலை நாள் செருந்தி தமனியம் மருட்டவும்
கடுஞ்சூல் முண்டகம் கதிர்மணி கழா அலவும்
நெடுங்கால் புன்னை நித்திலம் வைப்பவும்
கானல் வெண்மணல் கடல்உலாய் நிமிர்தரப்
தளை அவிழ் தெரியல் தகையோற் பாடி
அறல் குழல் பாணி தூங்கிய அவரோடு
வறல்குழல் சூட்டின் வயின்வயின் பெருகுவீர்.
வேலூர் விருந்து
இது முல்லைநிலம். பவழம் கோத்ததுபோல அவரைச்செடிப் பூக்களுடன் படர்ந்திருக்கும். மயிலின் கழுத்தைப்போலக் காயா மரம். ஓலைப்பெட்டிப் போன்ற பூக்களுடன் முசுண்டைக் கொடி. கைவிரல்களைப்போல காந்தட்செடிகள். முல்லைக்கொடிகள் எனப் பூத்துக்குலுங்கும். மாலை வேளையில் அங்கு எயினர்குலப் பெண்கள் சமைத்த புளிக்கறியிட்ட சுடுசோறும் காட்டுப்பசுவின் பதமான இறைச்சியும் மனநிறைவோடு உண்ண விருந்தாகக் கிடைக்கும்.
பைந்நனை அவரை பவழம் கோப்பவும்
உறுவெயிற்கு உலைஇய உருப்பு அவிர் குரம்பை
எயிற்றியர் அட்ட இன்புளி வெஞ்சோறு
தேமா மேனிச் சில்வளை ஆயமொடு
ஆமான் சூட்டின அமைவரப் பெருகுவீர்.
ஆமூர் விருந்து
மாலை தொடுத்ததைப்போன்று மலர்கள் பூத்துத்தொங்கும் காஞ்சி மரங்கள். தனக்குரிய இரைக்காகக் கிளைகளின்மேல் காத்திருக்கும் மீன்கொத்திப் பறவை. சட்டென்று அருகிருக்கும் குளத்தில் பாய்ந்த மீன்கொத்தி மேலேறி வரும். பாயும் மீன்கொத்தியின் கால் நகங்களால் தாக்கமுற்ற கிழிந்த தாமரையிலையினூடாக உள்ள தாமரை மொட்டு மலரத்தொடங்கும். மருதநிலக் காட்சி இது. குளிர்ந்த வயல்கள் சூழ்ந்துகிடக்கும். அங்கு செல்லும்போது மருதநிலத்து உழவர்களின் பிள்ளை கள் பாணர்களைத் தடுத்து சிறந்த சொற்களால் வரவேற்று குற்றிய அரிசியால் சமைக்கப்பட்ட வெண் சோற்றையும் பிளவுபட்ட காலினையுடைய நண்டின் கறிக்கூட்டையும் விருந்தாகப் படைப்பர்.
நறுபூங் கோதை தொடுத்த நான்சினைக்
குறுங்கால் காஞ்சிக் கொம்பர் ஏறி
அவைப்புமாண் அரிசி அமலை வெண்சோறு
சுவைத்தாள் அலவன் கலவையொடு பெறுகுவீர்.
இத்தகைய அருமையான விருந்தினையுண்டு நல்லியக்கோடன் அரண்மனையை அடையலாம். அவ்வாறு அவன் வாயிலை அடைந்தவுடன் பாணர்கள் புகழ்வதற்குள் அவன் எதிர்கொண்டு அழைத்துப்போவான். வெண்மையான பட்டாடை உடுத்தத் தருவான். பாம்பின் நஞ்சைப்போன்ற மயக்கும் கள்ளை அருந்தக்கொடுப்பான். பல்வேறு சுவைகளுடன் சமைக்கப்பட்ட உணவை விருந்தாக்குவான். தானே அருகிருந்து தணியாத விருப்பத்தோடு உண்ணச் செய்வான். பின் என்ன... பரிசு விருந்துதான். ஒளி பொருந்திய பொன், மணி, தேர், குதிரை, வெள்ளை எருது எனப் படைத்தனுப்பிவைப்பான்.
ஒரு நாட்டை ஆளும் அரசனின் மாண்பு அவன் மக்களை நன்கு பேணுவதுதான். எத்தகைய வறுமையையும் தீர்த்துவைக்கும் பண்பு அரசனுக்குரியது. மக்கள் நலமே மன்னவன் நலம் என்று கொள்கையுடைய ஆட்சி நடத்துபவன். தனக்கென்று கொள்ளாமல் வாரி வழங்கும் மன்னரின் நம் தமிழ்ப் பண்பாட்டின் உச்சம். அத்தகைய மரபில் வந்தவர் தமிழர். அவரின் பண்பாட்டு உள்ளமே இத்தகைய காவியங்களைப் படைத்தளிக்கும் உந்துதலைத் தருகிறது. இன்றைய சூழலில் அரசாள்வோர் அதற்குரிய தகுதியற்றவர்கள். பாவேந்தன் சொன்னதுபோல தன்பிள்ளை, தன்பெண்டு என சுயநலச் சேற்றில் அமிழ்ந்துகிடப்பவர். தமிழின் மேன்மையை உணராதவர். பண்பாட்டைக் கைக்கொள்ளாதவர். அதனால்தான் மக்களுக்கு இன்றளவும் இத்தகைய துன்பம் நீடித்துக் கிடக்கிறது. இவற்றை அவர்க்கு உணர்த்துவார் யார்?