டந்த மாதம் நான் கலந்து கொண்ட நிகழ்ச்சிகளில் முக்கிய மானது சிவகாசி அய்ய நாடார் ஜானகியம்மாள் கல்லூரி காட்சி ஊடகவியல் துறை சார்பில் நடந்த திரைத்துறை, பத்திரிகைத்துறை தொடர்பான பயிலரங்க விழா. ஐயாயிரம் பேருக்குமேல் பயிலும் பழமை மாறாத கல்லூரி. சுமார் 200 ஏக்கர் பரப்பளவில் விரிந்து கிடந்தது. பட்டாசுக்குப் பெயர்பெற்ற ஊர். தீப்பெட்டித் தொழிற்சாலைகள் நிறைந்த ஊர். கல்விப் பணியிலும்... ஒரு "சமூகம்' சார்ந்தவர்கள் காமராஜர் வழியில் நல்ல கல்விப்பணி செய்துகொண்டிருக்கிறார்கள் என்றாலும்...

ஊடகத்துறை பயிலும் மாணவர்கள்- மாணவிகள் ஊடகம்- திரைப்படம் தொடர்பான அறிவை வளர்த்துக்கொள்ளவே இல்லை என்பதே என் வருத்தம். வெளிநாட்டுப் படங்கள் பற்றிய அறிவும் ஞானமும் இல்லை என்பது ஒருபுறம் இருந்தாலும் 70-கள், 80-கள், 90-கள் சென்ற நூற்றாண்டின் தமிழ் திரைப்பயணத்தில் மறக்க முடியாத காலகட்டங்கள் எனலாம்... அந்தப் பொற்காலத்தைப் பற்றிக்கூட அவர்கள் அறிந்திருக்கவில்லை.

தொழிலாளர்கள்... பின்தங்கிய வகுப்பினர்... பட்டாசு, தீப்பெட்டித் தொழிலில் தன் மகனோ மகளோ தேங்கி நின்று வெந்து நொந்துவிடக்கூடாது என்று கல்லூரி வரை அனுப்புகின்றனர். ஆனால் படிக்க வருகிறவர்கள் தாம் தேர்ந்தெடுக்கும் துறையின் அடிப்படை அறிவையாவது பெறவேண்டும் என்று ஆர்வம் காட்டுவதில்லை.

அறிவியல் சாதனங்கள், தொழில் நுட்ப வசதிகள் கையில் இருப்பதால், புத்தகங்களை தேடிப்பிடித்து நேசித்து வாசித்து நெக்குருக... யாரும் தயாராக இல்லை. நூலகங்களில் நுழையத் தயாராய் இல்லை. தினசரிகளில் வார மாத இதழ்களில் மூழ்கி முத்தெடுக்கத் தயாராய் இல்லை. பேராசிரியர்கள் மாணவ- மாணவிகள் இப்படி இருக்கிறார்களே என்று கவலைப்படுவதாகவும் தெரியவில்லை. சில பேராசிரியர்கள் விதிவிலக்கு. விஷுவல் கம்யூனிகேஷன், ஃபிலிம் டெக்னாலஜி ஊடகவியல், பப்ளிக் ரிலேஷன், மாஸ்கம்யூனிகேஷன் இப்படி எல்லாம் வகை வகையாக கல்லூரிகள் கற்றுத்தராத காலகட்டத்தில் நான் படித்தேன்.

Advertisment

நூலகங்கள்... பல்கலைக்கழகங்களாய் இருந்து கற்றுக்கொடுத்தன. பேராசிரியர்கள்- ஆசிரியர்கள் நண்பர்களாய் இருந்து வழிநடத்தினார்கள்.

திரைப்படங்களில் பயன்படுத்தப்படும் ""மினியேச்சர்'' எனப்படும் ஓர் அரிய கலையை என் ஆரம்பப்பள்ளி நாட்களிலே எனக்கு கற்றுக் கொடுத்தவர் சுந்தரமூர்த்தி என்ற பெயரில் பஞ்சாயத்து யூனியனில் ஜீப் டிரைவராக இருந்த பக்கத்து வீட்டுக்காரர். கைகளை அசைத்து மேடையில் எப்படிப் பேச வேண்டும் என்கிற கலை யைக்கூட தொடக்கப்பள்ளி நாட்களில் அவர்தான் எனக்குக் கற்பித்தார்.

உள்ளூர் ஜவுளிக்கடைகளில் துணிகளைச் சுற்றுவதற்கு பயன்படுத்தப்படும் அட்டைகளை காலியான பனியன் பாக்ஸ்களைக் கொண்டு வந்து மாடிப்படிகளும் தளங்களும் அஸ்திவாரங்களும் அமைத்து வீடு கட்டுவார். மைதாப்பசை காய்ச்சி பழைய போஸ்டர்களைத் திருப்பி வெள்ளை நிறம் வெளியில் தெரியும்படி ஒட்டி, பிறகு வண்ண பைண்டிங் அட்டையில் ஒட்டும் தாள்களை மேற்பூச்சாக்கி, டேபிள் மினியேச்சர் கலையை அன்றே எனக்குக் கற்றுக்கொடுத்தவர் அவர்.

Advertisment

"யார்?' திரைப்படத்தில் பூமி பிளப்பதுபோல் வரும் காட்சி டேபிள் மினியேச்சர் உத்தியில் எடுக்கப்பட்டதுதான்.

கல்யாண விழாக்களில் மணமக்கள் மாலைகளில் "ஜிகினா' பேப்பரை வைத்து தொங்கட்டான் போல் பலவற்றை ஒன்றுசேர்த்து பட்டை பட்டையாகக் கட்டி அழகுபடுத்துவார்கள். மாலை மலர் உதிர்ந்து வாடினாலும்... "ஜிகினா' பட்டைகள் அப்படியே இருக்கும். உறவினர்கள் திருமணம் வரிசையாக வந்து கொண்டே இருக்கும். அந்தப் பட்டைகளும் எங்களுக்குக் கிடைக்கும். அந்தப் பட்டைகளை தெருக்கூத்து பாணியில் கைகளில் தோளிலிருந்து கட்டிக் கொள்வோம். ஜவுளிக்கடை அட்டையை வளைத்து வெட்டி கிரீடம் செய்வோம்... தீபாவளி சங்கு சக்கர குமிழ்களை அதில் ஓட்டுவோம். இப்படி எதை எதையோ ஒட்டிவெட்டி மயிலிறகு வைத்து புல்லாங்குழல் பிடித்து நாடகம் நடத்தி இருக்கிறோம். "போகஸ்' லைட் போடுகிறோம் என்று அண்ணனுக்கு திருமணப் பரிசாக வந்த நைட்லேம்புகளை புகையிலைத்தாள்களைக் கொண்டு மறைத்து மின் இணைப்பு கொடுக்கிறபோது "ஷாக்' அடித்து உதறிவிழுந்த கதைகளும் உண்டு. பெட்ஷீட்களை போர்வைகளை திரைச்சீலைகளாக்கி அழுக்காக்கி திட்டுவாங்கிய சம்பவங்களும் உண்டு.

yaarkannanஉயர் பள்ளி, கல்லூரி சென்றபோது... ஆசிரியர்கள் நம் ஆர்வம் அறிந்து பாரதி, வ.உ.சி., திருப்பூர் குமரன் என்றெல்லாம் நடிக்க... அதற்கான வசனங்களை எழுத வாய்ப்பளித்து மேடை ஏற்றினார்கள்... பரிசும் பாராட்டும் கைதட்டல்களும் பெறப்பெற ஆர்வம் அதிகரித்துக் கொண்டே போனது.

ஆன்றோர்கள், சான்றோர்கள் ஊர்விழாக்களுக்கு வந்தால் பறையடித்து அறிவிப்பதைப்போல் தமுக்கு அடிப்பதைப்போல்- நான் குதிரை வண்டிகளில் பயணித்து "மைக்' பிடித்தபடியே குரலை ஏற்றி இறக்கி கிராமம் கிராமமாக ஒலி பெருக்கிகளில் விளம்பரப்படுத்திய நாட்கள்... தீபாவளி, பொங்கல் என்றால் ஊரின் மையப்பகுதியில் கடை வீதிகளின் காதுகளுக்கு கேட்குமாறு ஒலி பெருக்கிகளைக் கட்டி வர்த்தக விளம்பரம் செய்த நாட்கள், விடுமுறை நாட்களில் அச்சகங்களில் கம்பாஸிடர் வேலைபார்த்து பிழைதிருத்தி டிரடில் பிரிண்டிங்.. சிலிண்டர் பிரிண்டிங்... ஸ்கிரீன் பிரிண்டிங் எல்லாம் கற்றுக்கொண்ட நாட்கள்.

மாத, வார இதழ்களில் புதிதாக எந்தக் கடையில் பத்திரிகை பார்த்தாலும் வாங்கிச் சேகரித்து படித்து பரவசப்பட்ட நாட்கள்... எனக்கானவை!

பள்ளி, கல்லூரி மாணவர்கள் பலருக்கு இப்போது அந்த நாட்கள் இல்லை. 80-களில் இருந்த வழிகாட்டிகள் 90-களில் ஜனத்தொகை கூடுவதைப்போல் கூடவில்லை... குறைந்தார்கள். 21-ஆம் நூற்றாண்டின் முற்பகுதிக்கு இருந்த கவியும் புலமையும்... கனமும் கரைந்துகொண்டே போகிறது... காணாமலும் போகலாம்.

வேதனையின் வெளிப்பாடு இது! அனைத்துக் கல்லூரி கவிதைப் போட்டிக்கு.. தேர்ந்தெடுக்கும் பொறுப்பாளனாய் சென்ற மாதம் சென்னை- கல்லூரி ஒன்றில் பகல் பொழுதை அர்த்தமுள்ளதாக ஆக்க முயன்றபோது- கலந்துகொண்ட மாணவர்களுக்கு மாணவிகளுக்கு மத்தியில் முதல் தோல்வியாளன் நான் ஆனேன்...

மரபுக்கவிதையோ... சந்தமோ... புதுக்கவிதையோ... ஹைகூவோ... நவீன கவிதையோ... எந்த வடிவமும்... சுத்தமாய் எவருக்கும் வரவில்லை. கருத்து, உருவகம், படிமம், சொல்லாட்சி வெளிப்படுத்தும் திறன் எவருக்கும் இல்லை.

அனைத்துக் கல்லூரி கவிதைப் போட்டியில் அவசரம் அவசரமாக வந்து கலந்துகொண்டவர்கள் முடிவுகளை அறிவிப்பதற்குமுன் அடுத்த போட்டிக்கு நடையைக் கட்டிவிட்டார்கள்... இல்லை... இல்லை... ஓடிவிட்டார்கள்.

அப்துல் ரகுமான் ஆட்சிசெய்த கவிப்பேருலகம் கல்லூரிக் கழனிகளில் இன்று விதைக்க ஆள் இல்லாமல்... வெற்று மண்ணாய்க் கிடக்கிறது..

மு. மேத்தாவின் முடிசூட்டலும்... "நா.கா' வின் நடையும்... "மீரா'வின் மினுமினுப்பும் வைரமுத்துவின் வசீகரமும் "இன்குலாப்'பின் எழுச்சியும் இன்றைய சென்னை மாணவர்களின் எழுத்துக்களில் இல்லையே என்ற ஏக்கம் பிறக்கிறது. அறிவுமதி யுகபாரதி, பழனிபாரதி, சிற்பி, புவியரசு, சென்னிமலை, ஆரூர் தமிழ்நாடன், ஜெயதேவன் எனப்பலர் இன்னும் செதுக்கிக் கொண்டே இருக்கிறார்கள்... கற்கள்- சிற்பமாகத் தயார் இல்லை.

மரபே தெரியாத மாணவர்களுக்கு ஞானச் செல்வனின் நளினம் எப்படிக் கவிதையில் வரும்? கண்ணதாசனை எப்படி கனவு காணுவார்கள்? வாலியை எப்படி வசப்படுத்துவார்கள்? "சுரதா'வில் எப்படி சொக்கிப்போவார்கள்.

சிவகாசி கல்லூரியும் சென்னை கல்லூரியும் மாணவர்களின் இலக்கிய ஊடக ஈடுபாட்டிற்கு உதாரணங்கள் என்றாலும்... ஆறேழு ஆண்டுகளுக்குமுன் படூர் ஹிந்துஸ்தான் கல்லூரியில் நான் நடுவராக சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்ட குறும்படப் போட்டியில் பொறியியல் படிக்கும் மாணவர்கள் ஐம்பது அறுபது பேர் படைத்த குறும்படங்கள் இன்றும் என் நினைவில் நிற்கிறது...

பொறியியல் மாணவர்கள்- திரைப்படக் கலைஞர்களுடன் போட்டிபோடும் அளவிற்கு குறும் படங்களை இயக்கி இருந்தார்கள்... எனக்கு இன்னும்... நம்பிக்கை நதி வற்றிவிடவில்லை.

""இலைகள் உதிர்வது

என்னவோ

இப்போதும் உண்மைதான்...

என்றாலும்...

காம்புகள்

கால்வைத்த தடங்களில்-

கண்ணுக்குத் தெரியாத

தளிர்களின்

தவம்''-

என்ற, என்றோ ஒருநாள் நான் எழுதிய வரிகள் பொய்க்காது

விஸ்காம் மாணவர்களில் ஒருவரான தஞ்சையை பிறப்பிடமாகக் கொண்ட "செல்வ கணேசன்' என்ற இளைஞர் தனது கதைப்பதிவிற்காக எழுத்தாளர் சங்கம் வந்தபோது எனது பார்வைக்கும் செவிக்கும் தான் உருவாக்கத் திட்டமிட்டுள்ள திரைப்படத்தின் ""டீஸர்'' எனப்படும் திரைப்பட அறிமுகத்தொகுப்பின் படமாக்கத்தைக் காட்டினார்.

நான் அசந்து போனேன். திருச்சி யின் அடையாளமான ஒரு பகுதியை முன் வைத்து அசத்தலான ஒரு கதையை பிரம்மாண்டமாக உருவாக்கும் திறனை உணர்ந்து வியந்து போனேன். எதிர் காலம் அவருக்கு மிகச்சிறப்பாக இருக்கும். அதுபோலவே-

"மறுமலர்ச்சி', "கள்ளழகர்' போன்ற திரைப் படங்களை இயக்கிய நகைச்சுவை உணர்வும் நட்பும் மிகுந்த இயக்குநர் "பாரதி' அவர்களை சமீபத்திய காலைப் பொழுதில் சந்தித்தேன்.

உடல்நலக்குறைவால் மிகவும் பாதிக்கப்பட்ட அவர் பொருளாதார ரீதியாகவும் சிரமப்பட்டு... பல ஆண்டுகளுக்குப்பின் உயிர்த்தெழுந்த நிகழ்ச்சிகளை ஒவ்வொன்றாக அடுக்க அடுக்க... எனக்கு கண் கலங்கியது... அடுத்த படத்திற்கு புதுப்பொலிவோடு தயாராகிறார் அவர்.

புயலும் சூறாவளியும் சுனாமியும் பந்தாடிய உடல் இன்று பாதுகாப்பாய் தெளிவாய்த் தென்பட, பக்குவப்பட்ட மனதோடு அவர் பகிர்ந்து கொண்ட செய்திகளை கலை இலக்கிய எழுத்துலகில் இருப்போர்க்கெல்லாம் பாடமாகவே வைக்கலாம்... உயிர்த்தெழுந்த அவர் முகத்தில் தெளிவும் தேஜஸ்ஸும் குன்றாமல் குடியிருந்தன.

வெற்றியும் புகழும் செல்வாக்கும் அந்தஸ்து உயர்வும் பணமும் சேரச்சேர வானத்திலிருந்து தொபுக்கடீர் என்று குதித்து விட்டதாக பலர் எண்ணிக்கொள்கின்றனர்.

நல்லவர்களாய் இருக்கும் பலரைச் சூழும் நயவஞ்சகர்கள் தூபம் போட்டு காக்காய் பிடித்து புகழ்ந்து புகழ்ந்து நல்ல திறன் உள்ள கலைஞர்களை புகழ்போதைக்கு அடிமைகளாக்கி தங்களது எச்சில் பிழைப்பை நடத்திக்கொள்ளும் கதைகளும் அன்றாடம் அரங்கேறிக் கொண்டிருக்கின்றன.

அதனால், தகுதி கொஞ்சம் கூட இல்லாதவர்களுக்கெல்லாம் இருக்கை கிடைத்து இறக்கையும் கிடைத்து பறக்கத் தொடங்கிவிடுகிறார்கள். கொம்பும் முளைத்துவிடுகிறது... நல்லவர்களையும் "ஜால்ரா'க்கள் முட்டிமோதத் தயாராகி விடுகிறார்கள்.

தகுதி உள்ள பலர் தள்ளாடி தடுமாறித் தவிப்பதும்... அரை வேக்காடுகள் ஆட்டம் போடுவதும் அதிகரித்து வருகிறது.

ஒருபக்கம் தகுதியை வளர்த்துக்கொள்ளாத கூட்டம்; இன்னொரு பக்கம் தகுதி இல்லாதவர்கள் இடம்பிடித்துக் கொண்டு ஆடும் ஆட்டம். புதிதாக வருகிறவர்களை அரவணைக்க வலம்புரி ஜான்கள் இல்லை. கல்லூரிகளிலே கற்றுக்கொடுக்க அப்துல் ரகுமான்கள் இல்லை... பத்து இருபது ஆண்டுகளுக்குப் பிறகு... வழிகாட்டுவோர் வரைபடங்களில் மட்டும் தானா?

-இன்னும் இருக்கிறது.