ந்தாம் வகுப்பு படிக்கும்வரை ஒரு சந்தனப்பொட்டு ஆசிரியர் காதைப்பிடித்துத் திருகியதும் பெஞ்சிமேல் ஏறவைத்ததும் முட்டிபோடவைத்ததும் இன்னும் நினைவில் இருக்கிறது. இன்னும் எனக்கு அவர் முகம் மறக்கவே இல்லை. மீசையில்லாத சிவப்பான முகத்தோடு கண்களை உருட்டி உருட்டிப் பார்த்த அவரது காதுகளில் இருந்த வெள்ளை முடிவரை என்னை வியர்க்க விறுவிறுக்க வைத்திருக்கிறது.

நாங்கள் கோயில் நிலத்தில் குடியிருந்த காலம் அது. காளியம்மன் கோயிலுக்கும் பிள்ளையார் கோயிலுக்கும் இடைப்பட்ட தெருவின் நடுநாயகமான இடம். இரவுகளில் வண்டுகள் வட்டமிடும் தெருவிளக்கின் கட்டுமானத்தில் அமர்ந்து அந்த வெளிச்சத்தில் படித்திருக்கிறேன். பரிட்சை வந்துவிட்டதே என்று பயப்பட்டு புரியாத வாய்ப்பாடுகளை "நெட்டுரு' போட்ட நேரம் அது.

தொடக்கப்பள்ளி அருகிலேயேதான் கௌரி டீச்சர் வீடு. கௌரி டீச்சரை எனக்குப் பிடிக்கும்.

கௌரி டீச்சர் எனக்கு மிகவும் பிடித்தமானவராக இருந்ததற்கு காரணம் அவர் கவிதை எழுதுவார். "கவிதைப் பூங்கா' என்ற பெயரில் ஒரு மஞ்சள்நிற அட்டையுடன் பூங்கொத்து ஒன்றை அட்டையில் போட்டு உள்ளூர் "ட்ரடில் பிரஸ்ஸில்' அவர் ஒரு கவிதைப் புத்தகமும் போட்டார். சினிமாப் பாட்டு மெட்டில்தான் பல கவிதைகள். அதுதான் கவிதை போலும் என்று அப்போது நினைத்துவிட்டேன்.

Advertisment

கௌரி டீச்சரின் பெண் அந்த வயதிலேயே என்னை வசீகரித்துத் திரும்பத் திரும்ப பார்க்கத் தூண்டிய பெண். கறுப்பாக இருந்தாலும் அழகு மிளிரும் முகம். ஆனால்... பேசுவதற்கு பயம். டீச்சரின் பெண் வேறு. எனக்குத் தெரிந்து... கௌரி டீச்சரின் மிக அழகான கவிதை அவள்தான். படிக்காமலே உணர்ந்த கவிதை! தூர இருந்தே நான் முதன்முதலில் ஆராதித்த கவிதை!

மதுக்கூரின் அரசினர் உயர்நிலைப்பள்ளி வந்ததும், மிகவும் அன்பாக இருந்த பாலு ஆசிரியர் பாடம் நடத்துவது பிடித்திருந்தது. ஆனால் அவர் வகுப்பு மாணவியைக் காதலித்தார் என்பதற்காக ஊர்முழுதும் சேர்ந்து அவரை வெறுத்து விலக்கிவைத்து அவமானப்படுத்தினார்கள்.

என்றாலும்... அவர் அந்த மாணவியைத் திருமணம் செய்து வாழ்ந்துகாட்டினார். இன்றைக்கும் ஊரில் எல்லா நிகழ்ச்சிகளிலும் கலந்து கொள்ளும் முக்கியமான ஒருவராக இருக்கிறார். வந்துகொண்டிருக்கும், வளர்ந்து கொண்டிருக்கும் ஊரின் புதிய தலைமுறைக்கு இந்தக் கதை எதுவும் தெரியாது....

Advertisment

வி. தேவராஜன், வி.டி.ஆர். என்று அன்போடு அழைக்கப்பட்ட ஆசிரியர்... "டியூஷன்' எடுத்து அவர் ஒரு பெரிய மாணவக்கூட்டத்தையே தன்னோடு வைத்துக்கொண்டிருந்தார். எனக்கு "டியூஷன்' போகிற அளவுக்கெல்லாம் அப்போது வசதி இல்லை. ஆனாலும்... வி.டி.ஆர் வீட்டிற்குச் செல்வேன். "ஜெயராமன்' என்ற தமிழாசிரியர் அவர் வீட்டிற்கு அருகில் இருந்ததால். வி.டி.ஆர். வீட்டு வழியாகச் செல்வேன்.

ஜெயராமன் ஆசிரியர்தான் எனக்கு- நாவலாசிரியர் கு.ப.ரா, தி.ஜா, நா. பா., என ஒவ்வொருவராக அறிமுகப்படுத்த படிக்க வைத்தவர்.

ஒரு நாள் போகிற வழியில் வி.டி.ஆர் என்னிடம், ""ஜெயராமன் சார் சொன்னார்... நீ கவிதை எல்லாம் எழுதுகிறாய் என்பதாக... என்னிடம் ஒரு கவிதை எழுதிக்கொடு "தியாகபூமி' என்றொரு பத்திரிகை சென்னையில் இருந்து வருகிறது... அதில் பிரசுரிக்க அனுப்புகிறேன்.'' என்றார்... நான் அவரிடம் கொடுத்த கவிதை அடுத்த இதழிலேயே அழகாக வெளிவந்தது.'' "குமரேச சதகம்' சந்தத்தில் எழுதப்பட்ட மரபுக்கவிதை அது. உயர்நிலைப்பள்ளியில் போதித்த மதிப்புக்குரிய திருமிகு பஞ்சநாதம், துரைக்கண்ணு, சிதம்பரம், விக்டர், ராமையா என ஒவ்வொரு ஆசிரியர் முகமும் அவ்வப்போது வந்துபோகும்.

அந்த நாட்களில்தான் பள்ளியில் பாரதியாராக... வ.உ.சி.யாக பல்வேறு தோற்றங்களில் நடித்தேன்.

அரசினர் பள்ளியில் ஆறாவது படிக்கையில், ஒரு கலைவிழாவிலே நான் புறநானூறு காட்டும் "வீரத்தாய்' நாடகத்தில் "புறமுதுகு' காட்டாமல் மடிந்த "வீரமகனாக' நடித்தேன் பள்ளியில் பெரிய வகுப்பில் உள்ள மாணவர்களுக்கான நாடகங்கள் நடக்கும்போது- தொடக்கப் பள்ளியில் இருந்தபோதுகூட... உயர்நிலைப்பள்ளி சென்று நாடகங்கள் பார்ப்பேன்.

அப்படிப்பட்ட காலத்தில்தான் ஒரு நாடகத்தில் "கைதியும் பாதிரியாரும் சந்தித்துக்கொள்வார்கள். அடைக்கலம் கொடுத்த பாதிரியார் வீட்டிலேயே திருடிக்கொண்டு போனவரை ஊர்மக்கள் பிடித்து பாதிரியாரிடம் அழைத்து வருவார்கள். பாதிரியார் நான்தான் கொடுத்தேன் அவர் திருடவில்லை. நான் கொடுத்த இரண்டு வெள்ளி விளக்குகளில் ஒன்றை அவர் இங்கேயே வைத்துவிட்டுப்போய் விட்டார். இதையும் எடுத்துச்செல் என்று கைதியிடம் கொடுப்பார்... கைதி பாதிரியார் காலில் விழுந்து அழுவார்... இப்படி ஒரு கதை பலருக்கு நினைவில் இருக்கலாம். இதை அப்போது நாடகமாக நான் பார்த்தது இன்னும் என் நினைவில் நிற்கிறது. கைதியாக நடித்தவர். ஒரு ஆசிரியரின் மகன். ஒல்லியான உயரமான தேகம்... தாடிக்காக முடியை ஒட்டிக்கொண்டு அவர் நடித்திருந்தார்.

yaarkannanபிறகு நான் பட்டப்படிப்பிற்காக பூண்டி கல்லூரிக்கு வந்தபோது- "டை' கட்டிய "ட்யூட்டராக' எனக்கு வகுப்பெடுக்க வந்தார்... அந்தக் கைதியாக நடித்த தமிழாசிரியரின் மகன்.

தன்னுடைய இயற்பெயரை மாற்றி சுத்தத் தமிழில் "இறையரசன்' என்று பெயர் வைத்துக்கொண்டிருந்தார். என்னைப் பார்த்து ஊர்க்காரன். என்றுகூட எந்தச் சலுகையும் செய்யமாட்டார். சிரிக்கக்கூட மாட்டார். மிகமிக கண்டிப்பான கறரான தோரணையுடன் இருப்பார்.

பள்ளிப்படிப்பு முடிந்ததும் "தாமோதரன்' என்ற ஆசிரியர் ஒரு வழிகாட்டி போல் எனக்கு தென்பட்டவர். அவருடன் கும்பகோணத்தில் புதுமுக வகுப்பு படிக்கிறபோது விடுதிக் காப்பாளராக இருந்த பேராசிரியர் "தமிழமுதன்' அவர்கள் முகம் மட்டும்தான் நினைவில் இருக்கிறது.

ஆனால் பூண்டி புஷ்பம் கல்லூரியில் திருவாளர்கள் இறையரசன் தொடங்கி... குன்றக்குடி அடிகளாரிடம் இருந்து வந்து பேராசிரியர் ஆன சுப்ரமண்யம், காத்தையன், ஜி.ஆர். கிருஷ்ணமூர்த்தி, தெட்சிணாமூர்த்தி, ஜெயபால் என எல்லோருமே நினைவில் இருக்கிறார்கள்.

கல்லூரித் தேர்வு முடிவுகள் வருவதற்கு முன்னதாகவே நான் சென்னை வந்துவிட்டதால் திரைப்படத்துறையின் ஆக்ரமிப்பில் பேராசிரியர் களின் பிரியம் எதுவும் பெரிதாகத் தெரியவில்லை.

கொஞ்சம் கொஞ்சமாக நான் என்னை நிலைநிறுத்திக் கொண்டபோது- தஞ்சையிலிருந்து பழைய பாசத்தோடு அன்பு பாராட்டி அழைத்தது இறையரசன் ஒருவர்தான்.

ஆசிரியர்களில்- திருவாளர் பேராசிரியர் தாமோதரன் அவர்களுக்குப் பிறகு என்னை நேசத்தோடு பாசத்தோடு பார்க்கத்தொடங்கியவர் இறையரசன் அவர்கள் மட்டும்தான்.

பூண்டி புஷ்பம் கல்லூரிக்கு வந்து படப்பிடிப்பு நடத்தவேண்டும் என்று பலமுறை அழைத்திருக்கிறார். நான் அந்த வாய்ப்பை பயன்படுத்தவே இல்லை. பிறகு கடிதம் எழுதும்போது ஒவ்வொருமுறையும் "சயாம் மரண ரயில்பாதைக் கதையைப் படமாக்கவேண்டும் என்றே நினைவுபடுத்திக்கொண்டிருப்பார்.

எனக்கு கோடம்பாக்கத்தில்- சர்க்குலர் ரோடில் ஒரு அலுவலகம் அமைந்தபோது- வட்டச்சாலை- என முகவரியில் எழுதி கடிதம் அனுப்புவார். யுனைட்டட் இந்தியா காலனி என்பதை "கூட்டு இந்திய குடியிருப்பு' என அழகுடன் எழுதினார் "ஃபிளாட்' என்பதை "அடுக்ககம்' என மாற்றி முகவரி இட்டார். நல்லவேளை... என் பெயரில் மட்டும் இன்னும்... இன்றுவரை அவர் கைவைக்கவில்லை.

மனைவியை இழந்து மகனையும் மகள்களையும் வளர்த்தபோதும் தஞ்சையில் தனித்தமிழ் பயில மழலையர் பள்ளி அமைத்து நிறைய பொருளாதாரத்தையும் இழந்தார்.

பிறக்கும் குழந்தைகளுக்கு தமிழில் பெயரிடுங்கள் என ஒரு புத்தகமே உருவாக்கி தனித்தமிழ் பெயர்களை அறிமுகப்படுத்தினார்.

நிறைய... தமிழ்பரப்பும் கூட்டங்களை தஞ்சையில் நடத்தி, சம்பாதித்த வருவாயை அர்த்தமுள்ளதாய் ஆக்கினார். இதழ்களில் ஓய்வின்றி எழுதினார்... இன்னும் எழுதிக்கொண்டும் இருக்கிறார். உடல் நலக்குறைவு மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தியும் அவர் ஓய்ந்துவிடவில்லை. தமிழ்ப்பணியையும் சமுதாயப்பணியையம் மக்கள் பணியையும் தொடர.. பணி ஓய்வுபெற்றதும் சென்னை வந்தார். அவர் உருவாக்கிய அமைப்பான தமிழர் பேரவை "தமிழ் எழுச்சிப் பேரவை' என்ற பெயரில் என்னையும் ஆட்படுத்திக்கொண்டது.

பணி ஓய்வு என்ற பெயரில் வெட்டிக் கதைபேசி வீணடிக்கும் பலருக்கிடையே ஒவ்வொரு பொழுதையும் போராட்டக்களமாக்கி மொழி, நாடு, மக்கள் சமுதாயம் என்ற சிந்தனையோடு முதிர்ச்சியிலும் அயர்ச்சி இல்லாமல் அன்றாடம் செயல்பட்டுக்கொண்டிருக்கும் என் பேராசிரியர் மார்ச் பதினைந்தில் 70 அகவையைக் காண்கிறார்.

ஆனால் 20 வயதின் போராட்ட குணம் பேராசிரியர் இறையரசனின் மனதில் இருந்து உரமேற்றிக் கொண்டிருக்கிறது.

அவரிடம் படித்த மாணவர்களில் பெயர் சொல்லக்கூடிய வரிசைப் பட்டியலில் நான் இருப்பது அவருக்குச் செய்யும் பெருமை.

அவரது கனவுகளில் ஒன்றான "சயாம் மரண ரயில்பாதை'யை இயக்கும் பொறுப்பை நான் ஏற்றுக்கொண்டிருக்கிறேன். அந்தப் பெரும்வாய்ப்பினை அவர் எனக்கு பல ஆண்டுகால மாக நினைவுபடுத்தி நினைவுபடுத்தி ஏற்படுத்திக் கொடுத்து ஈடுபட வைத்திருக்கிறார்... அதுவே அவர் எனக்குத் தந்த பெருமை... கௌரவம்... பரிசு... வெகுமதி...

(இன்னும் இருக்கிறது . . .)