கவிஞர் பிரமிள் 20.4.1939-ல் பிறந்தவர். அடுத்த மாதம் அவரது 82-ஆவது பிறந்த நாள் வருகிறது. இலங்கையில் பிறந்த பிரமிள், தமிழகத்தில் வாழ்ந்து இலக்கிய உலகில் தனித்தடம் பதித்தவர். தனது ‘சிறகிலிருந்து பிரிந்த இறகு ஒன்று/ காற்றின் தீராத பக்கங்களில்/ ஒரு பறவையின் வாழ்வை/ எழுதிச் செல்கிறது!’ என்ற கவிதையால் பேசப்பட்ட அவர், மிகச் சிறந்த மரபுக் கவிஞரும் ஆவார். மனதில் பட்டதை அப்பட்டமாக வெளிப்படுத்தக்கூடிய அவர் நினைவாக அவரின் இந்தக் கட்டுரை இங்கே....
என் தகப்பனார், தாயார் இருவருக்குமே சாமான்ய மனிதர்களுக்கு இருப்பதைவிட அதீதமான உணர்ச்சி இருந்திருக்கிறது. தகப்பனாரின் நேர்மை, தாயாரின் பெண்மைக்கும் கற்பனைக்கும் உரிய இயற்கையான சாகஸங்களை இது விரூபமாகத்தான் காண அவரைத் தூண்டியிருக்கிறது.
இதன் விளைவாக அவர்கள் பெரும்பாலும் சண்டை யிட்டே வாழ்ந்திருக்கிறார்கள். இந்தச் சண்டைகளின்போது என் தகப்பானாரின் நேர்மை அவரை எவ்வளவு குருட்டுத்தனமாக்கியது என்பதையும், தாயாரிடம் தற்காப்பு இல்லாதுபோனாலும் சொல்லாடல் மூலம் தந்ப்பனாருக்கு பதில் பிறக்க இடமில்லாமல் ஆக்குவதையும், விளைவு தாயாருக்கு சரீரபூர்வமான ஆபத்தாவதையும் இன்று நினைக்க... ஒரு வகையில் சுவாரஸ்யமாகத்தான் இருக்கிறது.
அத்தகைய சந்தர்ப்பங்களில், பெரும்பாலும் தமக்குக் கிடைக்கக்கூடிய சரீரார்த்தமான துர்பலன் களினூடேயும், தாயார் தமது புத்தி வன்மைக்கு, புத்திபூர்வமாகத் தகப்பனார் ஈடுகட்ட இயலவில்லை என்ற அளவில் திருப்தியடைவதை உணர இயலும்.
உண்மையில் என் தகப்பனாரின் நேர்மை வியாபார உலகில்தான் என்பதையும் தாம்பத்ய வாழ்வில், உறவில், அவர் தாயாரை பயங்கரமாக ஏமாற்றியவர் என்பதையும் பின் உணரமுடிந்தது. பார்க்கப்போனால் வியாபாரத்தில் காட்டிய நேர்மை அவருக்கு ஒரு போர்வையாகத்தான் இருந்திருக்கிறது.
இதற்கும் மேல், தகப்பானாரின் ‘நேர்மை’, அவரைப் பழிவாங்கும் மனோபாவமுள்ளவராக்கிற்று. என் தாயாரின் ‘நேர்மையின்மை’, தகப்பனார் உட்பட எவர் இழைத்த தீங்கையும் மறக்கக்கூடியவராயிற்று. முக்கியமாக நோய்வாய்ப்பட்டுள்ளவர் எவராயினும் அவருக்கு யாவற்றையும் மறந்து சிசுருஷை செய்யத் தாயார் முன்வந்துவிடுவார். ஒருசமயம் அவரது முதல்தர வைரிகளது பசுமாடு ‘ரப்பர் மர’ இலை களைத் தின்று தொண்டையில் பால் சிக்கி சாகக் கிடந்தபோது தமது ‘குழந்தைகள்’ என்று அவர் வளர்த்த வாழை மரங்களின் குழாய் வடிவான குருத்துக் களை, மரத்தின் அழிவையும் பொருட்படுத்தாது வெட்டிக்கொண்டு சென்று, பசுவின் தொண்டையிலிருந்த பாலை அவற்றின் மூலம் வெளிக்கொண்டுவர அவர் உதவியதும், அதற்காக வைரிகளுக்கு-
அதுவும் பணக்கார வைரிகளுக்கு, (பிராமணக் குருக்கள் வகுப்பினரான இவர்கள் தாயாருக்கு இருந்த ஒரே நிலபுலத்தில் தமக்கு பாத்தியதை வைத்து வழக்காடியபடி இருந்தனர்.) உதவியதற்காக அயலார் தாயாரைப் பரிகசித்ததும் அவர் பொருட்படுத்தாததும் என் மனதில் ஆழப்பதிந்த விஷயம்.
*
இதுபோன்றவற்றால் ஆரம்பத்தில் என் தகப்பனா ரின் நேர்மை’யை கௌரவித்த என் மனம், தாயாரின் அன்பைத்தான் நிச்சயமானது என்று கொள்ள ஆரம்பித்திருக்கிறது போகப்போக. ஆனால், என் தகப்பனாரின் நேர்மையிலிருந்த போலித்தனத்தையே, கொடுக்கல் வாங்கல் தனத்தையே இங்கே உணர்ந்து தெளிகிறேன் என்பதையும், ‘நேர்மை’யை கௌரவிப்பதிலிருந்து விலகியது ஆகாது இது என்பதையும் கவனிக்க வேண்டும்.
பொதுவான வாழ்விலும், ஆழமான மனோ தர்மங்களிலும், கருத்துலகிலும் நான் சந்தித்த பிரச்சினைகளிடையில் இந்தப் பின்னணி இயங்கி இருக்கக்கூடும். எனது பெற்றோர் கல்வியறிவற்ற ஏழ்மையானவர்களாயினும் தாய்வழி மூதாதைகள் கொழுத்த நிலப்பிரபுக்களாகவும், ‘புலமை’ வாய்ந்த வர்களாகவும் இருந்திருக்கின்றனர். ஒருபுறத்தில் இவர்கள் கண்மூடித்தனமான செலவாளிகளாகவும் கோயில் முதலியவற்றுக்கு தானம் செய்பவர்களாகவும் கூட இருந்திருக்கிறார்கள். ஒரு ராமகிருஷ்ண மிஷன் பள்ளிக்காக தமது நிலத்தை இவர்கள் வழங்கியதைத் தான் கௌரவத்துக்கு உரியதாக நான் கருதினேன்.
*
ஜாதீயம் வெறுப்பையே ஊட்டிற்று. கோவில் பிராமணக் குருக்கள் சிறுவர்களுடனும், இசை வேளாளர் சமூக சிறுவர்களுடனும்தான் விபரம் தெரியும் வயதுகளில் விளையாடியிருக்கிறேன். தாயார் எங்கள் வீட்டுக்காலனியில், அயல் அபிப்ராயங் களைப் பொருட்படுத்தாமல் மேளக்காரர் களுக்கு வாடகை அறைகள் தந்திருந்தார். இவர்களை, ‘சேவகத்துக்கு’ அழைத்துப் போக வருகிறவர்கள் இவர்களை நடத்தும் முறையும், அதற்கு இவர்கள் உடன்படும் கீழ்மையும் அதற்கேற்ற வகையான இவர்களது நடைமுறை வாழ்வின் குடி போதை சச்சரவுகள் முதலியனவும் அருவருப் பாக இருந்தாலும், எனது ரஸனைக்கு ஆரம்பக்கல்வி இவர்களிடமிருந்தே எனக் குக் கிடைத்துள்ளதை உணர்கிறேன்.
*
இந்த ‘மேளக்காரர்கள்’ உண்மையில் சங்கீதத்தைத் தொழிலாகக் கொண்டவர்கள். இந்த இசைஞர்கள் மூலம் நான் பயின்ற ஆரம்ப ரஸனைக் கல்வியே முதல்படி ஆயிற்று. சங்கீதத்தில் உயர்ந்த சங்கீதம், மட்டம் என்பவற்றை இவர்களது சகவாசம் எனக்கு இயல்பான சுரணையாக்கிற்று. இதன் வளர்ச்சியாக என் எந்தப் பருவத்திலும் மட்டமான சங்கீத, கலை வகைகள் எதனிடமும் நான் ஈர்க்கப்படவில்லை, இவ்வளவுக்கும் இசை இவர்களுக்கு வெறும் தொழில்.
இவர்களில் பலர் பின்னாடி துறைமுகத் தொழிலாளிகளாகவும் போயிருக்கிறார்கள். இருந்தும் பிழைப்புக்காக தாங்கள் சினிமா பாட்டுகளை வாசிக்க வற்புறுத்தப்படுவதை இவர்கள் வெறுத்தனர். கலைத்திறன் மூலமும், பொருளாதார உயர்வுகளின் மூலமும் ஜாதீயம் போன்றவற்றில் உயர்வான வகுப்பினரை சில இசைஞர்கள் எடுத்தெறிந்து நடந்துகொள்வது சகலவிதத்திலும் கீழ்மையாக இருந்த என் நண்பர்களுக்குத் திருப்தியாக இருக்கும்.
அப்படி ஏதும் அவர்கள் எடுத்தெறிந்து நடக்காதிருந் தாலும் நடந்தமாதிரி கதைகளை இவர்கள் கட்டி இருக்கலாம். பெரும்பாலும், பணத்தைக் காட்டி பெரிய இசைக்கலைஞர்களை வாங்க முயற்சிப்பவர் களைப் பற்றியும் பணத்தை அலட்சியப்படுத்த இவர்கள் நடந்ததைப் பற்றியுமே பெருமைக்குரிய விஷயமாக இவர்களது கதைகள் கூறும். இக்கதை களின் அடிப்படைச் செய்தி என் மனசில் ஆழப்பதிந் தது என்று சொல்லலாம்.
நான் சிறுவனாக இருந்தபோது ஒரு பெரிய நாதஸ்வர வித்வானை ஒரு கோயில் திருவிழாவுக்கு வரவழைத்திருந்தார்கள். பூசகர் அர்ச்சனையை ஆரம்பிப்பதற்காக நாதஸ்வரத்தை நிறுத்தும்படி சமிக்ஞை கொடுத்தார். நீலாம்பரி அடங்க ஒருசில நிமிஷங்கள் ஆயிற்று. மற்றபடி ஐயரின் சமிக்ஞையில் யந்திரமாகப் பிறந்து இறக்கும் இசை இந்தக் கலைஞரின் நாதஸ்வரத்தில், தனது இயல்பின் கதியைத் தவிர எதற்கும் இணங்க மறுத்ததாகத் தோன்றிற்று. ஐயரும் ‘ஞானம்’ உள்ளவர். புன்னகையோடு சங்கீதம் வடியும்வரை காத்திருந்தார். ‘பக்தர்களும் கூட ஒருவகையில் திடுக்கிட்டு, இந்த அசம்பாவிதத்தின்’ விளைவாக சங்கீதம் என்ற ஒன்றுக்கு ஒரு இயல்பும்கூட இருக்கிறது என்பதை உணர தாங்கள் படும் சிரமத்துடன் காத்து நின்றனர்.
இந்த நிகழ்ச்சி சிறுவனாயினும் என்னூடே ஒரு பரம திருப்தியாகச் சென்றடைந்தது.
எனது நண்பர்களான இசைஞர்களது ரஸனைத் தெளிவு சங்கீதத்தோடு நின்று விட்ட ஒன்றுதான். வாசகர்கள் என்ற வகையில் அவர்கள் கல்கி வகையறா வைத் தாண்டாதவர்கள்.
*
பழந்தமிழ் இலக்கியம் என்பதே தமிழ் இலக்கியம் என்ற எண்ணம், சத்ய யுகாத்தோடு கடவுளுக்கும் உலகுக்குமிடையே இருந்த உறவு தீர்ந்துவிட்டது என்ற வைதீகத்தனத்தைப் போல் பள்ளியில் எனக்குப் புகட்டப்பட்டது. பாரதி கவிதைகளைப் பற்றி நிதானிக் குமளவு ‘சிந்தனை’ எகிறவுமில்லை. ஆனால் வாரா வாரம் கல்கியைப் படித்தேன். சினிமா ரகமான தீரச்செயல் கதை என்ற அளவுக்கு மேல் அந்த வாசிப்பைப் பற்றி கணித்துப் பார்க்கும் வில்லங்கம் தோன்றவில்லை. 1950-ல் என்று ஞாபகம். கல்கி, புதுமைப்பித்தன் மறைவை ஒட்டி ‘கடவுளும் கந்தசாமிப்பிள்ளையும்’ என்ற கதையை மறுபிரசுரம் செய்தது. ‘கதை’ இலக்கியமாகுமா என்ற ஸ்மரணையே இல்லாதிருந்த எனக்கு இக்கதையை 1954 வாக்கில் படித்தபோது அது ஒரு புதிரான புதுவித அநுபவ மாயிற்று. புதுமைப்பித்தன் என்ற பெயரும் மனசில் ஆழப்பதிருந்தது. சுமார் 1955, 56 வாக்கில்தான் புதுமைப்பித்தன் கதைகள் கையில் கிடைத்தது. ஆனால் அதற்குள் எனது ஆங்கில வாசிப்பு ரைடர் ஹஹ்கார்ட் எழுதிய ’கிங் சாலமோன்ஸ் மைன்ஸ் என்று வந்துவிட்டதோடு பழந்தமிழ் இலக்கியம், யாப்புப் பயிற்சி என்றெல்லாம் சிறுசிறு தேற்றங்கள் உண்டாகிவிட்டன. இவற்றின் பின்னணி யைத்தான் புதுமைப்பித்தன் கதைகள் சந்தித்தன. விளைவு ‘இது இலக்கியம்’ என்ற தீவிரமான தெளிவு. புதுமைப் பித்தனை இலக்கியாசிரியர் என்று எவ்வித புற உந்துதலுமின்றி நிதானித்த என் நிலை உண்மையில் எனது சின்னஞ்சிறு சமூகவட்டத்தில் என்னை ஒரு புரட்சிக்காரனாகவே ஆக்கிற்று.
*
துப்பறியும் கதைகளையும் தொடர்கதைகளையும் படித்துவிட்டு அவற்றை நண்பர்களுக்குத் திருப்பிச் சொல்லும் பழக்கமும், சுவரெல்லாம், அகப்பட்ட காகிதங்களெல்லாம் படங்கள் போடும் பழக்கமும் எனக்கு ஏற்கனவே இருந்ததால், எனது குட்டிச் சமுதாயத்தில் எனக்கு ஏற்கனவே ஒரு கௌரவம் ஏற்பட்டிருந்தது. எனவே நான் புரட்சிக்காரனாகியது என்னோடு நின்றுவிடவில்லை. நாங்கள் சிலர் ‘நவீன’ தமிழ் இலக்கியத்தில் இறங்கிவிட்டோம். ஒரு தமிழ் வாத்தியார் ‘சிறுகதையா? சிறு கதைதானே அது,’ என்று சிறுகதைகளின் சிறுமையை விளக்கினார்.
இதற்குள் 1957 வாக்கில் என் பள்ளிப்படிப்பு நின்று விட்டது.
பாரதியை ஒரு இலக்கியாசிரியனாகக் காண உதவியது புதுமைப்பித்தனின் வசன இலக்கியம்தான். ஆனால் இலக்கியக் கட்டுரைகளையோ, முன்னுரை களையோ ருசித்துப் படிக்கும் பழக்கம் ஏற்படாத நிலை தான். புதுமைப்பித்தனுக்கு முன்னுரையாக ரா.ஸ்ரீ. தேசிகன் எழுதியிருந்ததை, முன்னுரைகளுக்கு ஒரு இளம் வாசகன் காட்டும் வெறுப்புடன் படிக்காமலே அப்போது விட்டுவிட்டேன். அதைப் படித்தது வெகு பின்னாடிதான்.
இது என் ஸ்மரணையை சாத்தியமானதாக்க சொல்லப்படுவதல்ல. பாரதி இலக்கியத்தை விட்டு தீவிரமாக புதுமைப்பித்தன் எழுத்தே என்னை இலக்கிய பூர்வமாகத் தொற்றியது என்பதைத் தெளிவாக்கவே இது. இது புதுமைப்பித்தனது கலையின், தீவிரமான எழுத்தின் சாத்தியத்தையே காட்டும்.
*
இதன்பின்பு 1959-ல் ‘சரஸ்வதி’ பத்திரிகை இதழ் களைப் படிக்க ஆரம்பித்தேன். க.நா.சுப்பிரமணியம், அ.தைரியநாதன் என்ற புனைபெயரில் கலைமகள், கல்கி, ஆனந்தவிகடன் வகையறாக்களை காரசாரமாகத் தாக்கிய கட்டுரைகள் தென் பட்டன. “ஒழிந்த நேரத்தில் விபச்சாரம் செய்தால் உப்பு புளிக்காச்சுது என்று ஒரு ‘தினுசான’ குடும்பஸ்த்ரீ சொல்வதைப் போல இருக்கிறது’’ என்று வியாபார எழுத் தாளர்களது ‘இலக்கிய’ வாதத்தை க.நா.சு விவரிக்கும் வரிகளுடன் அக்கட்டுரை களுள் ஒன்று ஆரம்பிக்கிறது. அந்தச் சமயத் தில் க.நா.சுவின் கட்டுரைகள் சரஸ்வதியில் பெரும்பாலும் இந்தத் தொனியிலேயே இருந்தன என்பதை இன்று பூர்ஷ்வாத்தனமாக ‘கற்புள்ள இலக்கிய சர்ச்சை வேண்டும்’ என்று முன்வைக்கும் நபர்களில் பலர் அறிவார்களா என்பது சந்தேகமே.
*
அப்போது க.நா.சு நெருப்பைக் கக்கிக்கொண்டிருந்த போதே ரஷ்யாவில் போரிஸ் பாஸ்டர்நாக் தாக்குத லுக்கு உள்ளாகி சோவியத் முறை ஒரு நவீன ஜாரிஸம் தான் என உலகுக்குத் தெரியவந்த விபரம் பற்றி க.நா.சு அப்போது ஒரு வரியும் எழுதவில்லை என்பதை வெகு பின்னாடி அத்தகைய பிரச்சினைகளைப் பற்றி சிந்திக்கும்போதுதான் உணர்ந்தேன். இது பற்றி சில மாதங்களின் முன் ஒரு முக்யமான மலையாள எழுத்தாளர் கூறியது இது:
“பாஸ்டர்நாக் பிரச்சினையின்போது சென்னையில் எழுத்தாளர் சங்கத்திற்குத் தலைவரைத் தெரிவுசெய்யும் தேர்தல் சமயம். க.நா.சு வேறொருவரை எதிர்த்துப் போட்டியிடுகிறார். க.நா.சுவுக்கு கம்யூனிஸ எழுத் தாளர்களின் வோட்டுகள் அவசியமாயிருந்தன என்பதையும், இதற்கேற்ப பாஸ்டர்நாக் பிரச்சினை பற்றி அவர் மூச்சுக்காட்டவில்லை என்பதையும் நேரடி யாக அறிந்தேன்.’’
சி.சு.செல்லப்பாவும் கூடத்தான் பாஸ்டர்நாக் பிரச்சினை பற்றி அலட்டிக்கொள்ளவில்லை. இது பற்றி சி.சு.செ, “இந்த விவகாரம் ‘சுத்த’ இலக்கிய பூர்வமானது அல்ல’’ என்றே கூறியிருப்பார் என நினைக்கிறேன்.
ஆக, ‘சுத்த இலக்கியத்தன்மை’ எவ்வகையில் கம்யூனிஸ்டுகளுக்கு சௌகரியமாக இருந்திருக்கிறது!
எனது சிறு சமூக வட்டத்தில் பாஸ்டர்நாக் ஏற்கனவே தீரபுருஷனாகிவிட்டான். ஒரு குறிப்பிட்ட சலவைத்தொழிலாளியின் முகம் பாஸ்டர்நாக் முகத்தின் சாயலில் இருந்ததைக் கண்டு நாங்கள் ஓரிருவர் அந்த ஆளின் முகத்தையே பார்த்துக்கொண்டு நின்ற நிகழ்ச்சி ஞாபகத்துக்கு வருகிறது.
இவ்வளவுக்கும் நானோ, நான் எழுத ஆரம்பித்த பின்பும்கூட இன்றுவரை எனது நெருங்கிய நண்பர்களோ எழுத்தாளர்களாக வேண்டும் என்ற அபிலாஷையுடன் வாசகர்களானவர்கள் அல்ல. மௌனியை எழுத்தாளர்கள் மட்டுமே படிக்கிறார் கள். அல்லது எழுதும் ‘ஆசை உள்ளவர்கள்’ என்கிறார் சுந்தர ராமசாமி. எனது அனுபவம் அத்தகையதல்ல. எனது நண்பர்களுக்கு எழுதும் ஆசை இல்லாதிருந்தும் மௌனி என்ன, டாஸ்டாய்வ்ஸ்கி என்ன, படித்து அநுபவிப்பதே நோக்கமாக இருந்திருக்கிறது. எழுதும் ஆசை மட்டும் இருந்து உயர்ந்த இலக்கியங்களை இனம் காண இலயலாதவர்கள் போலித்தனமாக மௌனி போன்றவர்களை ரசிக்க முடிவதாகக் காட்டு வதைத்தான் சுந்தர ராமசாமியின் சித்தாந்தம் காட்டுகிறது. இந்த ரகத்தினர் எழுத்தாளர்களுமல்ல, தகுதியான வாசகர்களுமல்ல என்பதே என் அபிப்ராயம். இவர்கள் இலக்கியப் பத்திரிகை நடத்தினார் களே, கதை கவிதை கட்டுரைகள் எழுதினார்களே என்பது எதுவும் இவர்களை எழுத்தாளர்களாக்கிவிடும் என நான் கருதவிலை.
*
மௌனியும் தமது அநுவபத்தில் வேற்றூர் ஒன்றில் தாம் சந்தித்த ஒரு வெற்றிலை பாக்குக்கடைக்காரர் தமது ரசிகர் என்று அறிந்த நிகழ்ச்சி பற்றி எனக்குக் கூறி இருக்கிறார்.
எனது ‘ஆசை’ ஓவியத்துறையையே சார்ந்திருந்தது. ஆனால் ஒரு தமிழ் வாத்தியாரின் தூண்டுதலில் நாங்கள் அழ.வள்ளியப்பாவின் ‘பூந்தோட்டம்’ என்ற கவிதையைப் பின்பற்றி ஒவ்வொருவரும் பாடல்கள் எழுதினோம். நான் ஓரிரு நண்பர்களுக்கும் சேர்த்து ஒன்றுக்கு மேற்பட்டு எழுதவேண்டியவனானேன். இது சுமார் 1956 வாக்கில் என ஞாபகம்.
இதற்குள் நாங்கள் சிலர் ஏற்கனவே கையெழுத்துப் பத்திரிகை நடத்தினோம். அதில் நான் ஓவியனா கவே இருந்தாலும் கதைகளையும் எழுதவேண்டிய நிர்ப்பந்தம் இருந்திருக்கிறது.
சரஸ்வதியை அடுத்து இந்த கையெழுத்துப் பத்திரிகையின் ‘ஆசிரியர்’ தாம் வாசிக்காமல் வெறுமே சேர்க்கும் பத்திரிகை, புத்தகங்களின் வரிசையில் ‘எழுத்து’ என்ற பத்திரிகையையும் 1959-இன் பின்பகுதியில் சேர்க்க ஆரம்பித்தார். பத்திரிகையின் அமைப்பு, ‘கவர்ச்சி’த்தன்மையை மேற்கொள்ள மறுத்தத்தால் விளைந்த ஒரு வீர்யம் தெளிவாக என் உணர்வைத் தாக்கிற்று. ஓவியத்தை, படத்தை நீக்கி தமிழ்ப்பத்திரிகை எதையும் காணப் பழகியிராத கண்களுக்கு ‘எழுத்து’ தந்த தோற்றம் ஒரு அறைகூவல். விஷய கனத்தைத்தவிர வேறு எதையும் நம்பாமல் வெளிவருகிறது என்ற அடிப்படை ‘எழுத்து’
வின் மீது பெருமதிப்பை ஏற்படுத்திற்று. இந்த மதிப்பின் விளைவாகத்தான் 1959 டிஸம்பர் இதழில் வெளியான நான் என்ற கவிதையை எழுத்துக்கு அனுப்பிவைத்தேன்.
இலக்கியக் கருத்துலகில் நன்கு ஈடுபட்டுப் பழகி அதில் உள்ள அனுபவங்களைக் காணும் வரை எழுத்து ஆசிரியர் சி.சு.செல்லப்பாவுக்கு நான் எழுதிய கடிதங்கள் பவ்யமானவை. ஏற்கனவே தனித்தமிழ், தூயதமிழ் போன்றவற்றைப் பற்றியும், உரைநடை பற்றியும், அச்சமயத்தில் பரவலாக இருந்த கருத்துகள் பற்றி எனக்கு அபிப்ராயங் கள் உருவாகியிருந்தன. அழ.வள்ளியப்பாவின் ‘பூந்தோட்டத்தை’ப் பின்பற்றி என்னோடு ‘பாட்டு’ எழுத ஆரம்பித்த, விவாதப்பிரியரான ஒரு நண்பரது தூயத் தமிழ்வாதத்திற்கு பிரதிவாதங்கள் பலவற்றைச் சொல்லவேண்டிய நிர்ப்பந்தம் ‘நான்’ வெளியான சமயத்தில் ஏற்பட்டிருந்தது. நண்பர் நான் சொன்னவற்றை இரசித்ததாகவோ, கிரகித்திருந்தால் அதற்கு மசிபவ’ராகவோ தெரியவில்லை. வியர்த்த உணர்வு டன் அவ்வுணர்விலிருந்து விடுதலை வேண்டி அன்று அந்த நண்பரிடம் கூறியவற்றை எழுதி சி.சு.செல்லப்பா வுக்கு அனுப்பிவிட்டேன். அவர் இக்கட்டுரையை இரண்டாகப் பிரித்து முதல் பகுதிக்கு ‘சொல்லும், நடையும்’ என்று தலைப்பிட்டு 1960 ஜனவரி பிரசுரித் தார். இதைப்படித்ததும் வெங்கட் சாமிநாதன் அப்போதே சி.சு.செல்லப்பாவுக்கு என் உரைநடையின் சிந்தனையின் கனத்தைக் குறிப்பிட்டு ‘சொல்லின் செல்வர் ரா.பி.சேதுப்பிள்ளை’ என்று எல்லாம் பெயர் வாங்கியவர்களின் சிந்தனை அம்சமே அற்ற எழுத்துடன் ஒப்பிட்டு தாம் கடிதம் எழுதியதை சமீபத்தில்தான் ஒரு சம்பாஷனையில் குறிப்பிட்டார்.
நான் ‘எழுத்தாளன்’ ஆகிய கதை இதுதான்.