ணவன் மரணமடையும்போது மனைவி கேட்பாள்: "என்னை விட்டுட்டுப் போறீங்களா?' என்று. குழந்தை இறக்கும்போது தாயும் அதேமாதிரிதான். மனைவி இறக்கும்போது கணவனும் அதே கேள்வியைக் கேட்கும் நிலை வரும். அதுமட்டுமல்ல; யார்

இறக்கும்போதும் அந்த நபரிடம் மிகவும் நெருக்கமாக இருப்பவர்கள் கேட்கக்கூடிய கேள்விதான் அது.

ஆனால், கணவன் இறக்கும்போது மனைவி இந்த கேள்வியைக் கேட்பதற்கு சிறப்புத் தன்மை இருக்கிறது. அது தாயின் கேள்வியைப் போன்றதல்ல. சகோதரனின், நண்பனின் கேள்வியைப் போன்றதும் அல்ல. அந்த மரணத்தின்மூலம் அவர்கள் அனைவருக்கும் வாழ்க்கையில் ஒரு இடைவெளி உண்டாகிறது. தாய்க்கு உண்டாகக்கூடிய கவலை பெரியது. அவள் சிரமப்பட்டுப் பெற்றாள். அன்பு செலுத்தி வளர்த்தாள். வாழ்க்கைக்கு அவளின் பரிசாக இருந்தது. அதுதான் போய்விட்டது. அப்படி யென்றால்... வம்சம் தழைத்து நிற்பதற்காக தாய்க்குள் பாதுகாத்து வைக்கப்பட்டிருந்த மிகவும் புனிதமான அந்த ஏதோ ஒன்றுக்கு நேர்ந்த துயரம்தான் தாயின் கவலைக்குக் காரணம். சகோதரனுக்கு, "நாங்கள் இவ்வளவு பேர் இருந்தோம். ஒன்று போய்விட்டது' என்ற கவலை... கணவனுக்கு, மனைவியின் பணிவிடையையும் மற்ற விஷயங்களையும் நினைத்து நினைத்து உண்டாகக்கூடிய கவலை.

மனைவிக்கோ?

Advertisment

அதற்கு விசேஷத்தன்மை இருக்கிறது. அது என்னவென்று கேட்கிறீர்களா? அது சற்று நினைக்கப்படக்கூடியது. சொல்லக்கூடியது. ஆணுக்கும் பெண்ணுக்குமிடையே இருக்கும் உறவை... ஆழமான உறவை... பொருளாதார அமைப்பை... அதுமட்டுமல்ல- வாழ்க்கையின் சமூகச்சூழலின் வரலாற்றையும், செயல்பாடுகளையும், சட்டத்தையும், தத்துவ அறிவியலையும்... அனைத்தையும் நினைக்கும்போது, அந்த விசேஷத் தன்மைக்கான வடிவம் கிடைக்கும். இன்னுமொரு வகையில் கூறுவதாக இருந்தால்- வேண்டாம்... கட்டிய பெண்ணின் கழுத்திலிருக்கும் தாலியைப் பார்த்துச் சிந்தித்தால் போதும்...

அது தொண்டைக்குழியில் ஒட்டிச் சேர்ந்து உயிரின் மையத்தில் அசைந்து கொண்டிருப்பதைப் பார்க்கவில்லையா? அப்போது "என்னை விட்டுட்டுப் போயிட்டீங்களா?' என்று கேட்பதற்கான அர்த்தம் புரிகிறதா?

"என்னை விட்டுட்டுப் போறீங்களா?' என்று அவள் கேட்டாள். என்னவோ கூறவேண்டும் என்பதைப்போல அவனுடைய வாய் பாதி திறந்துதான் இருக்கிறது. அவளைப் பார்ப்பதைப்போல கண்கள் பாதி திறந்திருக்கின்றன. ஆனால், இமைகளால் மூடப்பட்டதைப் போன்று இருக்கின்றன விழிகள்... அவன் மல்லார்ந்து விறகுக் கட்டையைப்போல படுத்திருக்கிறான்.

Advertisment

கேள்விக்கு பதிலை அவள் எதிர்பார்த்தாள். ஆமாம்... நிச்சயம் கூறுவான். "இல்லை...' என்று ஒரு குரல் வரும். அலையை உண்டாக்கி அழும் அவளைப் பார்க்கிறான். அவள் மீண்டும் கேள்வியைத் திரும்பக் கேட்டாள்.

"அய்யோ... மூச்சு இல்லியா?'

அவள் ஒரு ரகசியத்தைக் கண்டுபிடித்தாள். அவள் பிடித்துக் குலுக்கினாள். கண்ணிமைகளைத் திறந்தாள். உதட்டைப் பிடித்து பிரித்தாள். அந்த சரீரத்தின்மீது அவள் விழுந்தாள்.

நடந்ததை அவளால் நம்பமுடியவில்லை. மரணத்தை அவள் நம்பவில்லை. அவளுடைய கணவன் அவள்மீது அன்பு வைத்திருந்தான் என்பதுதான் அதற்குக் காரணம். அந்த ஆண் கையையும் கால்களையும் உடலையும் தலையையும் அனைத்தையும் சரியாக வைத்தே படுத்திருக்கிறான். அப்போது அவளுடைய அழுகையைக் கேட்டு ஏதாவது கூறாமல் இருப்பானா? ஒருவேளை அவனுடைய தலை உடலிலிருந்து பிரிந்து கிடந்திருந்தால், அந்த உண்மையை நம்பியிருப்பாளோ? எனினும், ஒட்டி, இணைத்து வைத்துப் பார்ப்பாள்.

மடியில் அவனுடைய தலையை எடுத்து வைத்துக்கொண்டு அவள் கேள்வியை மீண்டும் கேட்டாள்.

அந்த உண்மை அவளுக்குப் புரிந்தது. அவன் இறந்துவிட்டான்.

"இனி எனக்கு யார் இருக்காங்க?'

அடுத்த கேள்வி...

"சொல்லுங்க...'

அந்த பதிலுக்கான முயற்சி...

"நான் என்ன செய்யணும்?'

பதில் இல்லை.

அப்போதும் அவள் உதட்டைப் பிடித்துப் பிரித்துக்கொண்டும் கண்ணிமைகளைப் பிடித்து விரித்துக்கொண்டும் பதிலைப் பெற முயற்சித்துக் கொண்டிருந்தாள்.

பதில் இல்லை.... இறந்துவிட்டாலும், ஒரே வார்த்தையில் ஒரு பதில் கிடைக்குமென்பது அவளுடைய எண்ணமாக இருந்தது.

தொடர்ந்து சர்வசாதாரணமான புலம்பல்கள்... அன்பு நிறைந்த கதைகள்! அவள் சாப்பிடாமல் இருந்ததற்காக சண்டை போட்டது... இப்படி அனைத்தும்...

பக்கத்து வீடுகளைச் சேர்ந்த பெண்கள், அருகில் வந்து கூடி என்னென்னவோ கூறினார்கள். ஆறுதல் கூறும் வகையில்தான்! ஆனால், அவ்வப்போது உரத்த குரலில் "எனக்கு யார் இருக்காங்க... நான் என்ன செய்யணும்?' என்ற கேள்வியைக் கேட்டுக் கொண்டிருந்தாள். ஏன் தெரியுமா? பிரிந்துசென்ற ஆன்மா, அந்தப் பகுதியில் இருக்கும். அவள் கவலைப்படுவதைப் பார்த்து தேம்பித் தேம்பி அழுதவாறு அங்கேயே சுற்றிக் கொண்டிருக்கும். அது பதில் கூறும்.

அந்தப் பெண்கள் அந்த கேள்விகளுக்கு பதில் கூறினார்கள். அவர்களுக்கு அதற்கான அர்த்தம் சிறிதளவில் புரியும். "எனக்கு யார் இருக்காங்க?' என்று கேட்கும்போது, மனிதன், பூமி இருக்கும்வரை வாழ்வானா என்பதிலிருந்து ஆரம்பித்து சில விஷயங்களைக் கூறுவார்கள். பிறகு "கடவுள் இருக்காரு!' என்று முடிப்பார்கள். "நான் என்ன செய்வேன்?' என்று கேட்கும்போது, "வாயைக் கிழித்த கடவுள் இரையையும் தருவார்' என்று கூறுவார்கள்.

எனினும், பதில் கிடைக்காத அந்த கேள்விகளை எவ்வளவு நேரம் கேட்டுக்கொண்டிருக்க முடியும்?

பக்கத்திலிருக்கும் வீடுகளில் அவள் அன்று ஒரு பேச்சுக்கான விஷயமாகிவிட்டாள். சிறிய பெண்! இளம்வயதிலேயே ஒரு கணவன் வந்து சேர்ந்து விட்டான். அவன் அவள்மீதும், அவள் அவன்மீதும் அன்பு வைத்திருந்தார்கள். மற்ற எல்லா இடங்களிலும் கணவன்- மனைவிக்கிடையே எப்போதாவதோ... எப்போதுமேவோ... சண்டையும் சச்சரவும்... சிலவேளைகளில் அடிபிடியோகூட உண்டாவதுண்டு. ஆனால், அங்கு விளையாட்டும் சிரிப்பும் மட்டுமே இருந்தன. அந்த பக்கத்து வீடுகளில் இருப்பவர்களுக்கு இரண்டு சிறு பிள்ளைகளின் உற்சாகம் நிறைந்த வாழ்க்கைதான் பேசுவதற்கு இருந்த விஷயமே. அவர்கள் ஒரே பாத்திரத்திலிருந்தே சாப்பிடுவார்கள்... சில நேரங்களில் அவன் அவளை இடுப்பில் தூக்கிக்கொண்டு நடப்பான்... அவளுக்கு அது கூச்சத்தை அளிக்கும் விஷயமாக இருந்தது. ஒருநாள் அவளுடைய முகத்தில் மீசையை வரைந்தான். இப்படி ஏராளமான கதைகள்! "என்னை விட்டுட்டு போறீங்களா?' என்ற கேள்விக்கான பொருளும் ஆழமும் அவர்கள் அனைவருக்கும் முழுமையாகப் புரிந்தன. இனி அவளுக்கு யார் இருக்கிறார்கள்? அவள் என்ன செய்வாள்?

அவளுக்கும் அவனுக்கும் உறவினர்களாக யாராவது இருப்பதாகத் தோன்றவில்லை. அப்படி யாரும் முன்பு வந்ததில்லை. அவனுக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டு படுத்துக்கிடந்த காலத்திலும் இறந்த பிறகும் வந்ததில்லை. ஆனால் திருமணம் நடந்திருக்கிறது. அவளுடைய கழுத்தில் தாலி இருக்கிறது.

இனி அவள் எப்படி வாழ்வாள் என்ற கேள்வி அந்த வீடுகள் அனைத்திலும் எழுந்து நின்றது. யாரிடமும்...

யாரிடமும் பதில் இல்லை. அந்த நகரத்தில் விறகு வெட்டியும், வீட்டை வேய்ந்தும் இவ்வாறு பல வேலை களைச் செய்தும் கிடைக்கும் பணத்தைக்கொண்டு சந்தோஷமாக வாழ்ந்துகொண்டிருந்த வீடு அது. இனிமேல் அவள் என்ன செய்வாள்? "அங்க இருப்பாள்' என்ற ஒரு பதிலே இருந்தது. ஒரு பெண் மட்டும் கேட்டாள்:

""யாருமே இல்லாத அவளை கல்யாணம் செய்யாம இருந்திருந்தா அதேநிலையில அவ அங்க இருப்பா. கல்யாணமே செஞ்சுக்கலேன்னு வச்சிக்கணும்.''

அது சரிதான்... ஆனால், அந்த தாலி! அதற்கு எந்தவொரு அர்த்தமும் இல்லையா? கழுத்திலிருந்து அந்த தங்கத்தாலான துண்டை அவிழ்த்து நீக்கினாலும், தாலி அங்கேயேதான் கிடக்கும். புதிய கணவன் வந்தாலும், அந்த தாலிக்கு அர்த்தம் இருக்கும்.

அதுதான் நூற்றுக்கணக்கான வருடங்களாகவோ அதையும் தாண்டிய யுகங்களாகவோ தாலிக்கு உண்டாக்கி வைத்திருக்கும் முக்கியத்துவம்!

அவன் மரணமடைந்த நாளன்று பக்கத்து வீடுகளைச் சேர்ந்த பெண்கள் அனைவரும் அவளுக்கு அருகில் இருந்தார்கள். அவர்கள் ஒவ்வொன்றையும் கூறி, அவளைத் தேற்றினார்கள். மறுநாள் அவர்கள் வந்துகொண்டும் போய்க்கொண்டும் இருந்தார்கள். அவளுக்கு அருகிலேயே இருந்துகொண்டிருக்க முடியுமா? அன்று மூன்று... நான்கு பெண்கள் சேர்ந்து அவளைக் குளிப்பாட்டினார்கள். கொஞ்சம் கஞ்சியைக் கொடுத்தார்கள். அவள் வேண்டாமென்று கூறினாள். மரணமடைந்தவர்கள் போய்விட்டார்கள். கஞ்சி குடிக்காமல் இருப்பதால் அவர்கள் திரும்ப வரப்போகிறார்களா? அவளுடைய இடைவிடாமல் வழிந்துகொண்டிருந்த கண்ணீரை நல்லமனம் கொண்ட பெண்கள் துடைத்தார்கள். அவர்களும் அழுதார்கள். கஞ்சியில் கையை வைத்தவாறு அவள் இதயம் வெடித்து அழுதாள். அந்தப் பெண்களும் அழுதுவிட்டார்கள்.

""நானே என் கையால இந்த பாத்திரத்திலிருந்து அள்ளிக்குடிக்க வேண்டிய நிலை வந்துட்டதே?'' அந்த அளவுக்கு பரிதாபமான ஒரு உண்மையை அன்றுவரை அந்தப் பெண்கள் நேரில் சந்திக்க வேண்டிய சூழல் உண்டானதில்லை. அவர்கள் அவளுடைய வாழ்க்கையின் சந்தோஷத்தைப் பார்த்திருக்கிறார்கள். அவன் அவளைவிட்டுச் சென்றுவிட்டான். தனியாகத்தான் இருக்கிறாள்.

ஒரு கிழவி ""தங்க மகளே!'' என்று கூறியவாறு, அவளை இறுக அணைத்து தேம்பித் தேம்பி அழுதாள்.

அவளுடைய தொண்டையின் வழியாக நீர் இறங்கவில்லை.

நாட்கள் கடந்தன. அந்த வீட்டில் அவள் தனியாக இருந்தாள். கடந்தகால வாழ்க்கையைப்பற்றி ஒவ்வொன்றாக நினைத்து அழுது, கண்ணீர் வற்றிப்போய்விட்டது. இனி கண்ணீர் வராது. ஒரு வேதனை மட்டுமே... இப்போது "இனிமேலும்...?' என்ற கேள்வியை அவள் சந்திக்கிறாள். கனமும் ஆழமும் கொண்ட கேள்வி... வாழவேண்டும்! அந்த தாலி கழுத்தில் வந்து சேர்வதற்குமுன்பு அப்படிப்பட்ட ஒரு கேள்வி அவளை இந்த அளவுக்கு தீவிரமாக பாதித்ததில்லை. கன்னிப்பெண்ணுக்கு எதிர்பார்ப்புகள் இருக்கும். ஒருவன் வருவான். அந்த வகையில் ஒரு ஆணின் மனைவியாக இருக்கக்கூடிய ஒரு தொழில் கிடைக்கும். இந்த வகையான எதிர்பார்ப்புகள்!

அந்த தொழிலிலிருந்து அவள் கட்டாயப்படுத்தப்பட்டு ஒதுக்கிவைக்கப்பட்டாள். இப்போது அவளுக்கு எதிர்பார்ப்புகள் இல்லை. அதுமட்டுமல்ல- கிழவிகள் அவளுக்கு என்ன கற்பித்திருக்கிறார்கள்? இந்த தாலிக்கான அர்த்தம்... அவள் ஒருவனுக்குச் சொந்தமாகிவிட்டாள் என்பதுதான்!

இனிமேலும் எப்படி வாழ்வாள்? இனியும் வேறொரு ஆணை கவனித்துப் பார்த்துக்கொள்ள வேண்டும். அவளால் நினைத்துப் பார்க்கக்கூட முடியவில்லை. அவள் ஒரு ஆணை கவனமாகப் பார்த்துக்கொண்டிருக்கும் செயலைச் செய்யவில்லை. அவள் கடமையில் கண்ணாக இருந்தாள். அவ்வாறு இனிமேலும் அவளால் முழுத்திருப்தியுடன் இருப்பதற்கு சாத்தியமில்லை. கழுத்தில் அந்த தாலி கிடப்பதை அவள் உணர்ந்தாள். அந்த தாலியைக் கட்டிவிட்டு அவளுடைய கடவுள் போய்விட்டான்.

வற்றிப்போய்விட்டது என்று நினைத்த கண்ணீரின் ஊற்று மீண்டும் வெடித்துக் கொட்டியது.

அவள்மீது அன்பு வைத்திருந்தான். பாசத்தைக் கொட்டினான்... தழுவினான். அந்த வகையில் அவளுக்கே ஒரு முக்கியத்துவம் தோன்றியது.

அவள் ஒரு மனிதனின் கண்மணி. அதன்காரணமாக அவளுக்கு கடுமையான பிடிவாதங்கள் இருந்தன. அவள் கொஞ்சுவாள். குழைவாள். அன்பை வெளிப்படுத்துவாள். அவள் அழுவதையும் கவலைப்படுவதையும் பார்த்து அந்த ஆன்மா அந்தப் பகுதியில் தேம்பித் தேம்பி அழுதவாறு சுற்றிக்கொண்டி ருக்கிறது. தன்னைச் சுற்றி அந்த ஆன்மா வட்டமிட்டுப் பயணிப்பதைப்போல அவளுக்குத் தோன்றியது.

அந்த அழுகைச் சத்தங்கள் அவளுடைய சரீரத்தில் மோதுகின்றன. மிகவும் வெப்பம் நிறைந்த ஒரு முத்தம் அவளுடைய கன்னங்களில் பதிவதை உணர்கிறாள். அது சூடான கண்ணீரில் நனைந்தது.

"நான் என்ன செய்யணும்?'

அவள் கேட்டாள்.

அதற்கான பதில் அந்த சூழலில் நிறைந்திருக்கிறது. ஆனால், அது மொழியில் வடிவமெடுக்கவில்லை. வெளிப்படவில்லை. இளங்காற்றிலும், மலர்களின் முனகல்களிலும், பறவைகளின் கொஞ்சல்களிலும், மனிதனின் நிம்மதி நிறைந்த வார்த்தைகளிலும் அந்த பதில் இருக்கிறது. நெருக்கமாக நிறைந்து நின்றுகொண்டிருக்கிறது.

"வேறொருவனோட சேர்ந்துவாழறது... என்னால முடியாது' என்று அவள் கூறினாள். "வேறொருவ னோட சேர்ந்து வாழறது' என்ற பதில் இருந்ததைப் போல கூறினாள். அவள் அவ்வாறு கூறிவிட்டாள்.

வாழ்வதற்கான வெறி... ஒரு பெண்ணுக்கு மனைவியாக இருக்கும் தொழிலே இருக்கிறது என்ற உண்மையை நோக்கி விரலைக் சுட்டிக்காட்டியபோது, அவள் கூறிவிட்டதாக இருக்கவேண்டும். இந்த உயிர்ப்பு நிறைந்த உலகம், இளங்காற்றிலும், பறவைகளின் ஓசைகளிலும், அன்பின் வடிவமான மனிதர்களிலும்... அனைத்திலும் கலந்து வாழும்படி அவளை அழைத்தது. அதற்கு ஒரேயொரு வழிதான் இருக்கிறது. இன்னொருவனின் மனைவியாவது...

அந்த அப்பிராணிப் பெண் கூறினாள்: "இனி ஒருத்தனை கவனிச்சுப் பார்த்துக்கறது... முடியாது. அவருக்குப் பிடிக்காது. எனக்கும் தெரியாது. நான் தோத்துடுவேன். அடி வாங்குவேன்.'

அந்தத் தாலி கழுத்தின் குழியில் கிடந்து "படபடா' என்று துடித்தது. மீண்டும் வாழவேண்டுமென்ற ஆசை எழுந்தது. சிறிய பெண்தானே? வாழ்ந்தது போதும் என்று அவளுக்குத் தோன்றவில்லை.

ஒரு கணவனுக்கு என்னவெல்லாம் தேவை யென்பதை அவள் கற்றுக்கொண்டாள். அதற்கு அவளுக்கு அனுமதி கிடைக்கவேண்டும். இன்னொரு வனின் மனைவியாவதற்கு இறந்தவனின் ஆன்மா அனுமதிக்கவேண்டும்.

அந்த அனுமதி எப்படி கிடைக்கும்?

அவள் கஷ்டப்படுவதை இறந்த மனிதனால் பொறுத்துக்கொள்ள முடியாது.

அவள் எப்போதும் அவ்வாறு சந்தோஷமாக இருக்கவேண்டும் என்பதுதான் அவன் விருப்பமாக இருந்தது. அப்படி இருக்கும்போது அதற்கான வழியை நீக்குவானா?

அந்த இறந்த உடல் அழுகியிருக்க வாய்ப்பில்லை. வாழ்வதற்காக கஷ்டப்பட வேண்டிய பக்கத்து வீடுகளில் இருப்பவர்களுக்கு அவ்வாறு எப்போதும் அவளுக்கருகில் இருப்பதற்கு நேரமில்லை. அன்றன் றைக்கு தேவைப்படக் கூடியதே சரியாகக் கிடைக்காத அவர்களால் தினமும் அவளுக்கு உணவுதர முடியுமா? அந்தவகையில் அவள் எதுவுமே சாப்பிடாமல் ஒரு நாள் கடந்தது. ஆனால், அன்று அது அவளுக்குத் தெரியவில்லை.

எவ்வளவு நாட்கள் பசியறியாமல் இருப்பாள்? மறுநாள் அவள் நினைத்தாள்- இன்னும் இதேபோல எத்தனை நாட்கள் வாழவேண்டுமென்று. மரணம்வரை! அந்த நாள் எப்போது?

ஆழாக்கு கஞ்சி நீரில் ஒரு உயிரின் கவனம் சென்று மோதியது. தொண்டையில் வறட்சி உண்டாகிறது. வயிறு எரிகிறது. ஆழாக்கு அரிசி எங்கிருந்து கிடைக்கும்?

பக்கத்து வீடுகளில் இருப்பவர்களிடம் கேட்டால் என்ன? அவர்கள் கொண்டுவந்து தந்துகொண்டுதான் இருக்கிறார்கள். இன்று கேட்டால் ஒருவேளை தருவார்கள். பிறகு... நாளைக்கு? அவளுடைய சிந்தனைப் போக்கு இவ்வாறு சென்றது.

அந்த கூலிவேலை செய்பவனின் வீட்டில் விலைமதிக்கக்கூடிய எதுவுமே இல்லை. உதவி கேட்பதற்கு அவளுடைய சிந்தனையில் ஒரு இடம்கூட தோன்றவில்லை.

பாதைகளைத் தேடக்கூடிய சந்தர்ப்பம் அது. நீண்டு... நீண்டு கிடக்கும் நாளையும், நாளைக்கு மறுநாளும் இருக்கக்கூடிய திட்டமல்ல அது.

அடுத்த நேரத்திற்கு உள்ளதுகூட அல்ல. அப்போதைய ஆழாக்கு நீருக்கு.

அப்போதும் அவளுக்கு எதிர்பார்ப்பு இருந்தது. இல்லாவிட்டால் அவள் அடுத்த மூச்சை இழுத்துக் கொண்டும், வெளியே விட்டுக்கொண்டும் இருப்பாளா? அவளுடைய பார்வைகள் ஆராய்ந்துகொண்டிருந்தன.

அங்கே... சாலையின்வழியாக ஒருவன் நடந்து செல்வதை அவள் பார்த்தாள். அது யார் என்பதைத் தெரிந்துகொள்வதற்காக அவள் கூர்ந்து பார்த்தாள். வெறுமனே பார்த்தாள். ஏற்கெனவே தெரிந்த மனிதன் என்று தோன்றியதால் மட்டுமே... அவளுடைய கணவனுடன் சேர்ந்து அவன் பல நேரங்களில் வந்திருக்கிறான். அவர்கள் நண்பர்களாக இருந்தார்கள். அவன் எங்கு போய்க்கொண்டிருப்பான்?

அந்த மனிதனைப் பற்றிய பல தகவல்கள் அவளுடைய சிந்தனை மண்டலத்தில் திரண்டு நின்றன. ஏனென்றும் எப்படியென்றும் தெரியவில்லை. அவளுக்குத் தெரிந்த விஷயங்கள் மட்டும்...

அவன் திருமணம் செய்துகொள்ளவில்லை. நன்கு பணி செய்யக்கூடியவன். நல்ல முறையில் பணம் கிடைக்கிறது. எப்போதும் கையில் பணம் வைத்திருக்கக்கூடிய ஆள். கணவன் கடனாகப் பணம் வாங்கியிருக்கிறான்.

அவன் நேராக வீட்டை நோக்கித்தான் வந்தான். அவள் எழுந்தாள்.

வாசலில் சிறிது நேரம் அவன் நின்றான். எதுவுமே பேசாமல்... என்ன கூறவேண்டுமென்று அவனுக்குத் தெரியவில்லை. அவன் சற்று தடுமாறினான். அவளும் எதுவும் பேசவில்லை.

thh

அவளுடைய கண்களிலிருந்து இடைவிடாமல் கண்ணீர் வழிந்து கொண்டிருந்தது. ஒருவேளை... முன்பு கணவனுடன் சேர்ந்து அவன் வந்திருப்பதை அவள் நினைத்திருக்கலாம்.

திடீரென்று மரியாதை நிமித்தத்தைப் பற்றி அவள் நினைத்தாள். முகத்தைத் துடைத்துவிட்டு, அவள் கூறினாள்:

""உள்ள வந்து உட்காருங்க.''

அதை கேட்காமலே அவன் உள்ளே நுழைந்து வந்தான். அவர்கள் நீளமாக... நீளமாக பேசுவதற்கு இருந்தது. நோய் பற்றியது. மரணம்- இப்படி பல விஷயங்களும்! அவன் கவலைப்பட்டான்.

அவர்களுக்கிடையே இருந்த பழைய வரலாற்றை விளக்கி அவன் கூறினான்.

""அது எனக்குத் தெரியும். இங்க... நீங்க சேர்ந்து வாழ்ந்ததைப் பற்றி சொல்றதுண்டு.''

அந்த வகையில் மீண்டும் அவர்கள் உரையாடலைத் தொடர்ந்தார்கள். அது எதிர்காலத்தைப் பற்றிய விஷயத்தில் சென்று நின்றது.

அவன் கேட்டான்:

""என்ன செய்வே?''

அவள் கூறினாள்:

""வாழுவேன்... வாழாம இருக்கமுடியுமா?''

அவளைக் கூர்ந்து பார்த்துவிட்டு அவன் கேட்டான்:

""எதுவும் சாப்பிடலையா?''

""சாப்ட்டேன்.''

""அதிக சோர்வோட இருக்கற மாதிரி தெரியுதே! உண்மையைச் சொல்லு.''

அவள் எதுவும் கூறவில்லை.

அவன் இடுப்பிலிருந்து ஒரு பொட்டலத்தை எடுத்தான்.

அவள் கூறினாள்:

""வேணாம்... நான் பட்டினியா இல்ல... சிந்தனையால உண்டான சோர்வு...''

அவன் உணர்ச்சிவசப்பட்டு அந்த நட்புறவைப் பற்றிப் பெருமையுடன் கூறினான்:

""கொஞ்சமும் தயங்க வேணாம். இதை வாங்கிக்கணும். இறந்த என் நண்பனுக்கு இதுவொரு ஆறுதலா இருக்கும்.''

அவன் பணத்தை நீட்டினான். அவள் வாங்கவில்லை.

பணத்தை நீட்டியவாறு அவன் இதயம் நொறுங்க பலவற்றையும் கூறினான்:

""ஒரு சகோதரன்கிட்டயிருந்து இதை வாங்கிக்க மாட்டியா?''

அவள் குலுங்கிக் குலுங்கி அழுதாள்.

அவளுடைய கை, அவளே அறியாமல் நீண்டு சென்றது.

இரவில் அந்த குடிசையில் சிறிய மண்ணெண்ணெய் விளக்கு எரிந்துகொண்டி ருக்கிறது. அவர்கள் அமர்ந்து பேசிக்கொண்டிருக் கிறார்கள். என்ன பேசிக்கொண்டிருப்பார்கள்? நேரம் நீண்டுகொண்டிருக்கிறது. அப்படி பேசிக் கொண்டிருப்பது சரியல்ல என்று அவள் கூறாமல் இருப்பாளோ? அப்படியே இல்லையென்றாலும்... இந்த அளவுக்கு நீண்ட நேரம் பேசுவதற்கு என்ன இருக்கிறது?

திடீரென்று அந்த விளக்கு அணைந்தது.

அணைக்கப்பட்டது. அணைத்தது யாராக இருக்கும்? எதற்காக இருக்கும்? யாருக்குத் தெரியும்?

பிறகும் உரையாடல் நடந்துகொண்டிருந்தது. மேலும் சற்று தாழ்வான குரலில்... மறைந்து செல்கிறார்கள். மனப்பூர்வமான வாக்குறுதிகள்!

""அய்யோ... வேணாம்!'' என்று இதயம் வெடித்த ஒரு முனகல்! அனைத்தும் அடர்ந்த இருட்டிற்குள்... எதையும் மறைக்க இயலும் இருட்டில்!

""அந்த உடம்பு அழுகக்கூட இல்ல. வேணாம்.''

அது... மிகவும் பலவீனமான ஒரு பெண்ணின் குரல்...

கழுத்தின் குழியில் அவளுடைய தாலி கிடந்து முன்பு எந்தச் சமயத்திலும் இல்லாத அளவுக்கு துடித்துக்கொண்டிருந்திருக்க வேண்டும். ஆனால், அதைப் பார்க்க முடியவில்லை.

மீண்டும் அவர்கள் பேசிக்கொண்டிருக்கிறார்கள்.

அவன் திருமணமாகாதவன் என்ற விஷயம் அவளுக்குத் தெரியும். கணவனின் நண்பனாகவும் இருந்தான்.

தான் மரணமடைந்துவிட்டால், தன் மனைவியைப் பார்த்துக்கொள்ள வேண்டுமென்று அவளுடைய கணவன் கூறியிருக்கிறான் என்ற விஷயத்தை அவன் கூறியிருப்பான். மனைவியாக ஏற்றுக்கொள்கிறேன் என்று வாக்குறுதி அளித்திருப்பான். எந்தச் சமயத்திலும் கைவிடமாட்டேன் என்று கூறியிருப்பான். அந்த விஷயத்தில் கணவன் சந்தோஷப்படவே செய்வான். அது அந்த தாலிக்கு துரோகம் செய்வதல்ல.

அவளும் பலவற்றையும் கூறியிருப்பாள். அவள் ஒருவன்மீது அன்பு வைத்திருந்தாள். இனி இன்னொரு மனிதன்மீது அன்பு வைக்கமுடியாது. இனி வேறொரு மனிதனை கவனித்துப் பார்த்துக்கொள்ள அவளால் முடியாது. மனைவி என்ற நிலையில் தோற்றுவிடுவேன் என்றெல்லாம்...

அதற்கும் உணர்ச்சிவசப்பட்ட மனிதன் பதில் கூறியிருப்பான். மரணமடைந்த கணவன்மீது அவன் அன்பு வைத்திருப்பது குறித்து மனக்குறையே இல்லை என்று... அவனும் அந்த மனிதன்மீது அன்பு வைத்திருக்கிறான் என்று... அவள் கவனம் செலுத்திப் பார்த்துக்கொள்ளவில்லையென்றால்... வேண்டாம்.

அவன் அவள்மீது அன்பு வைத்திருக்கிறான்.

அந்த குடிசை அறையின் கதவு "என் தெய்வமே!' என்று இதயத்தைத் தகர்க்கக்கூடிய நீண்ட பெருமூச்சுடன் மூடியது.

அந்த வீட்டில் அடுப்பு புகைகிறது. அவள் குளிக்கிறாள். துவைத்த ஆடை அணிகிறாள். நள்ளிரவு நேரம்வரை அவள் விளக்கு வைத்துக் காத்திருக் கிறாள். ஒரு நல்ல பாயையும் தலையணையையும் அவள் வாங்கினாள். ஒரு ஆள் சாப்பிடுவதற்கான சோற்றையும் குழம்பையும் வைப்பாள். சில நாட்கள் அவள் பட்டினி கிடப்பாள்.

இந்த வகையில் முன்பு எந்தச் சமயத்திலும் அவள் வாழவேண்டிய நிலை இருந்ததில்லை. அவளுடைய கணவன் சீக்கிரமே வந்துவிடுவான். ஒன்றாகச் சேர்ந்து சாப்பிடுவான். இப்போது அவள் தூங்காமல் இருக்கக் கற்றுக்கொண்டாள். பட்டினி கிடப்பதற்குப் பழகிக்கொண்டாள். அவளுடைய கடமை அது...

கழுத்திலிருக்கும் அந்த கட்டிய தாலி, அந்த கதையை நினைத்துக்கொண்டதைப்போல தொண்டைக் குழியில் கிடந்து துடித்தது.

அவன் வேறேதோ ஒரு நண்பனைப் பற்றிய விஷயத்தைக் கூறுவதுண்டு. வேறொரு முக்கிய மனிதரான முதலாளியைப் பற்றியும்... அவர்கள் அந்த குடும்பத்தின் செலவிற்காக சிலவேளைகளில் உதவுகிறார்கள் போலிருக்கிறது. அவர்களைப் பற்றி அவன் அளவுக்கும் அதிகமாகப் புகழ்ந்தான்.

ஒரு இரவு வேளையில் அந்த நண்பனும் அவனும் சேர்ந்து அங்கு வந்தார்கள்.

மீண்டும் அந்த கணவன்- மனைவிக்கிடையே தாழ்ந்த குரலில் நடைபெற்ற உரையாடல், அந்த வீட்டிற்கு அப்பால் கேட்டது. அவள் இதயம் நொறுங்கி "என்னை நாசமாக்கிடாதீங்க!' என்று கெஞ்சிக் கேட்டுக்கொண்டிருக்கலாம். கணவனின் அதிகாரத்துடன் "சொன்னபடி நட' என்று அவன் கட்டளையிட்டிருக்கலாம். கணவன் கூறுவதன்படி நடப்பதுதானே தாலியின் கடமை? அப்போது அவளுடைய கழுத்தில் தங்கத்தாலான தாலியைத் தவிர, ஒரு முலாம் பூசப்பட்ட தாலியும் இருந்தது. அந்த முலாம் பூசப்பட்ட தாலியை மீறி நடப்பதா?

அப்போதும்... ஒருவேளை... அவள் தன்னுடைய மரணமடைந்த உயிர் நாதனின் ஆன்மாவிடம் தான் என்ன செய்யவேண்டுமென்று கேட்டிருப்பாள்.

அந்த ஆன்மா அந்த இடத்திலிருந்து புறப்பட்டுச் சென்றுவிட்டது. பதில் கிடைக்கவில்லை.

தாலியைப் பற்றிய தகவலைத் தெரிந்துகொண்ட அவளால் அந்த கட்டளையை மீறுவதற்கு முடியவில்லை. அதுவும் கணவனுக்குச் செய்யும் கடமையில் அடங்கியதாக இருக்கும்.

அந்த அறைக்குள் இரண்டு ஆண்களும் வந்தார்கள். தாலியின் அழைப்பு அவளையும் அதற்குள் வரச் செய்தது.

பிறகு ஒரு நாள் அந்த முதலாளி வந்தார்.

இவ்வாறு காலங்கள் மேலும் அதிகமாகக் கடந்தோடின. யார் யாரையோ மீண்டும் அங்கு அவன் அழைத்துக்கொண்டு வந்தான். அவன் கூறியபடி அவள் நடந்தாள். இயந்திரத்தைப்போல பின்பற்றினாள்.

ஆனால், அதிக நாட்கள் ஆவதற்கு முன்பே ஒரு நாள் இரவில் பொழுது புலரும்வரை அவள் அவனுக்காகக் காத்திருந்தாள். மறுநாளும் அவன் வரவில்லை. நான்கு நாட்களாக வரவில்லை. பிறகு ஒரு இரவு வேளையில் அந்த வீட்டில் யாரோ யாரையோ அடிக்கவோ, யாரோ ஓடவோ செய்தார்கள்.

அவனுடைய அனுமதி இல்லாமல் யார் அங்கு வந்தது என்பதுதான் அவனுடைய கேள்வி...

நகரத்தின் இருளடைந்த மூலைகளில் இரவு வேளை களில் அவளைப் பார்க்கலாம். அவளுக்கு வீடில்லை. கூடில்லை. பகல் பொழுதில் தெருக்களில் அப்படியே அலைந்து திரிந்து நடப்பாள். எப்படியோ அவள் வாழ்ந்துகொண்டிருக்கிறாள்.

சரீரமெங்கும் வெடித்துக்கீறி நீர் வழிந்து கொண்டிருக்கும் ஒரு உயிர், பாதையின் மூலையில் அமர்ந்து யாசிக்கும் காட்சியைப் பின்னர் பார்க்க முடிந்தது. அப்போதும் புண்ணுடன் ஒட்டிச்சேர்ந்து அந்த தாலி கிடந்தது.

ஒரு அழகான புலர்காலைப் பொழுதில் அவள் அந்த பாதையின் மூலையில் இறந்து கிடந்ததைப் பார்க்க முடிந்தது.

அந்த சரீரம் ஒரு காலத்தில் ஒரு ஆண் விரும்பியது.... அந்த தாலி அதற்கான அடையாளம்... ஆணின் மனைவியாக இருப்பதுதான் பெண்ணுக்கான தொழிலே என்பதற்கான அடையாளம் அது.

அந்த தாலிக்கு அவள் துரோகம் செய்தாளா? யாருக்குத் தெரியும்? அதைத் தீர்மானியுங்கள்.