தமிழில் ஹைக்கூ என்று சொன்னால் நினைவில் தோன்றும் முதல் பெயர் மு.முருகேஷ். தமிழ்க் கவிதைப் பரப்பில் நாற்பதாண்டு காலமாக தொடர்ந்து இயங்கி வருபவர். ஹைக்கூவையும் கடந்து புதுக் கவிதை, சிறார் இலக்கியம், கட்டுரை என்று தொடர் எழுத்துப் பயணத்தில் கைவீசி நடப்பவர். மின்னல் கவிதைகளால் கவியரங்க மேடைகளை ஒளிவீச வைப்பவர். இவருடைய ஹைக்கூ கவிதைகள் மலையாளம், தெலுங்கு, இந்தி, ஆங்கிலம், ஜப்பானிய மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. பல்கலைக்கழக அளவிலான பாடநூலில் கவிதைகள் இடம்பெற்றிருப்பதோடு, பல ஆய்வு மாணவர்களால் இளமுனைவர், முனைவர் பட்ட ஆய்வுகள் செய்யப்பட்டுள்ளன. சில காலம் சிற்றிதழ்களை நடத்திய அனுபவம் உடையவர். இன்றளவும் தமிழ்ச் சிற்றிதழ்களோடு நெருக்கமான நட்பையும் தொடர்பையும் வைத்திருப்பவர்.
தமிழகம் முழுவதுமுள்ள இளைய படைப்பாளர்களை ஒன்றிணைத்து ஒரு கவிதை இயக்கம்போல் எப்போதும் உற்சாகத்துடன் செயல்பட்டு வருபவர். ஒன்றிய அரசின் சாகித்திய அகாதமி 2021-ஆம் ஆண்டுக்கான ‘பால சாகித்திய புரஸ்கார் விருதைப்’ பெற்றிருப்பவர். அவருடன் ஒரு நேருக்கு நேர்...
வணக்கம். 2021-ஆம் ஆண்டின் ‘பால சாகித்திய புரஸ்கார் விருதைப்’ பெற்றிருப்பதற்கு முதலில் ‘இனிய உதயம்’ சார்பில் வாழ்த்துகள்.
மிக்க மகிழ்ச்சி. எனது தொடர் படைப்பிலக்கியச் செயல்பாடுகளுக்கு என்றும் உறுதுணையாக இருக்கும் ‘இனிய உதயம்’ இதழின் சார்பிலான தங்கள் வாழ்த்திற்கு என்றென்றும் நன்றியும் அன்பும்.
உங்களுடைய இளமைப் பருவம் பற்றிச் சொல்லுங்கள்.
நான் பிறந்தது புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள திருக்கோகர்ணத்தில். ஆரம்பக்கல்வியை அருகிலுள்ள கோவில்பட்டி நகராட்சித் தொடக்கப்பள்ளியிலும், உயர்நிலைக் கல்வியை திருக்கோகர்ணம் உயர்நிலைப் பள்ளியிலும் படித்தேன். பள்ளி நாட்களிலேயே கதை, கவிதை எழுதும் எனது ஆர்வத்திற்கு எனது பள்ளிக்கால நண்பர்கள் காட்டிய ஆதரவு எனக் குப் பெரிய உற்சாகத்தைத் தருவதாக அமைந்தது. புத்தகங்களை வாசிப்பதற்கும், அதன் தாக்கத்தினால் எழுதுவதற்குமான சூழல் எனக்கு பள்ளி நாட்களிலேயே வரமென அமைந்தது.
எழுதுவதற்கான உந்துதலை எங்கிருந்து பெற்றீர்கள்?
நான் கதைகளை ஆர்வத்தோடு கேட்பதற்கும் எழுதுவதற்குமான முதல் தூண்டுதலை என் அம்மா விடமிருந்து பெற்றேன். அடுத்ததாக, எனது மாமா பரமசிவம், தினமும் இரவில் தனது வீட்டின் திண்ணை யில் உட்கார்ந்து குழந்தைகளுக்கு கதைகளைச் சொல்வார். அவர் கதை சொல்லும் கதைகளையும் ஆர்வத்தோடு கேட்பேன்.
எங்கள் வீட்டில் எல்லோருமே தீப்பெட்டி அட்டைகளை ஒட்டுவோம். வீட்டுக்குப் பக்கத்திலுள்ள மைதானத்தில் கும்பலாக உட்கார்ந்து வேலை செய்யும்போது, வேலையில் தொய்வில்லாமலிருக்க யாராவது ஒருவர் கதை சொல்லவேண்டும். என் அம்மா ரொம்ப அழகாகக் கதை சொல்வார். பார்த்த திரைப்படமொன்றை நான்கைந்து நாட்களுக்கு தொடர்கதையாக சொல்வார். நல்ல உரத்த குரலில், ஏற்ற இறக்கத்துடன் அம்மா கதை சொல்வதைக் கேட்டுக்கொண்டே இருக்கலாம். அப்படியான ஒரு சூழலில், வழக்கமான கதையாக இல்லாமல் நான் புத்தகத்தில் படித்த கதையொன்றினைச் சொன்னேன்.
பலரும் பாராட்டவே, கதைகளைப் படிக்கும் ஆர்வம் வளர்ந்தது. ஒரு கட்டத்தில் எனக்குள்ளும் கதை எழுதும் ஆர்வமேற்பட, நானும் கதையாளனாகிப் போனேன்.
பள்ளி நாட்களில் உங்களுக்குள்ளிருந்த எழுத்தார்வத்தை எப்படி வெளிப்படுத்தினீர்கள்?
பள்ளியில் என்னோடு படித்த நண்பர்கள் மத்தியில் நான் சொல்லும் கதைகளுக்கு நல்ல வரவேற்பு கிட்டியது. நண்பர்கள் சிலர் சேர்ந்து ஆளுக்கு 10 பைசா வீதம் சேர்த்து, 1 ரூபாய், 2 ரூபாய் காமிக்ஸ் கதைப் புத்தகங்களை வாங்கி, என்னிடம் தருவார்கள். அதை நான் படித்துவிட்டு, அவர்களுக்கு கதையாகச் சொல்வேன். கோவில்பட்டி பாரதி மன்றம் நடத்திய ‘பார்வை’ எனும் கையெழுத்து இதழ்தான், எனது முதல் படைப்புகளைச் சுமந்து வந்தது.
பத்தாம் வகுப்பு படிக்கையில் நானும் நண்பர்களுடன் சேர்ந்து ‘விடியல்’ எனும் ரோனியோ இதழினை (உருட்டச்சு) கொண்டுவந்தோம். அதில், கதை, கவிதை, தொடர், கவர் ஸ்டோரி என ஏராளமாக எழுதினேன். பிறகு அது அச்சிதழாகவும் சில இதழ்கள் வந்தது. தமிழகம் முழுவதுமுள்ள சிற்றிதழ்களுடனான தொடர்பு அப்போதுதான் எனக்கு ஏற்பட்டது. ‘விடியல்’ இதழில் எழுதிக் கொண்டே, பல இதழ்களுக்கும் எனது படைப்புகளை அனுப்பத் தொடங்கினேன்.
1990-களில் அறிவொளி இயக்கம் தமிழ் நாட்டில் தீவிரம் பெற்றிருந்தது. அதில், குறிப்பாக புதுக்கோட்டை மாவட்டத்தில் உங்கள் பங்களிப்பு பெரிது. அந்த அறிவொளி இயக்க அனுபவங்கள் எப்படி இருந்தன?
தேசிய எழுத்தறிவு முனையத்தின் எழுத்தறிவு இயக்கமான அறிவொளி இயக்கம், புதுக்கோட்டை மாவட்டத்தில் தொடங்கப்பட்ட போது, தமிழ்நாடு அறிவியல் இயக்கம் முழுமையாக தன்னை அதில் அர்ப்பணித்துக்கொண்டு களமிறங் கியது. ‘கற்ற ஒருவர், கல்லாத 10 பேர்களுக்கு கற்பிப்போம்’ எனும் முழக்கத்துடன் தொடங்கிய அந்த இயக்கத்தின் தலைவராக மாவட்ட ஆட்சியர் ஷீலாராணி சுங்கத் இருந்தார். நான் அதில் முதலில் கலைக்குழுவின் கலைஞனாகச் சேர்ந்தேன்.
எழுத்தறிவின் அவசியத்தை வலியுறுத்தி போடப்பட்ட வீதி நாடகங்களில் வேட்டி, துண்டு மட்டுமே அணிந்து நடிக்கவேண்டும். கிராமத்து மக்களுக்கு மிகவும் நெருக்கமாக அமைந்த அந்த நாடகங்கள் வழி ஈர்க்கப்பட்ட மக்கள், ஆர்வத்துடன் அறிவொளி இயக்கம் நோக்கி வந்தனர். கவிஞர்கள் நா.முத்துநிலவன், ஜீவி, எஸ்.இளங்கோ, வெற்றிநிலவன், ரமா.ராமநாதன், பூவண்ணன், கவிவர்மன் என ஒரு பெரும் படைப்பாளர் பட்டாளமே அறிவொளி பணிகளில் ஈடுபட்டது. பிறகு, கலைக்குழுவின் தலைவராக, மாவட்டத் தகவல் தொகுப்பாளராக, ‘ஊர்கூடி’ செய்தி இதழின் உதவி ஆசிரியராக என பல நிலைகளில் நான் பணியாற்றினேன். அறிவொளியின் மூலமாக நான் பெற்றுக்கொண்டதும், கற்றுக்கொண்டதுமே அதிகம். என்னைப்போல் கற்பிக்கச் சென்ற பலரும் கற்றுக்கொண்டு திரும்பியதே அறிவொளியின் சாதனைகளுள் ஒன்று என்று சொல்வதே பொருத்தமாக இருக்கும்.
தமிழில் ஹைக்கூ என்ற சொல்லை உச்சரிக்கும் போதே உங்கள் பெயரும் ஒட்டிக்கொண்டு வந்துவிடுகிறது. உங்களை ஹைக்கூவை நோக்கித் திருப்பியது எது? இன்றும் ஹைக்கூ குறித்த தேடல் தொடர்கிறதே. அலுக்கவில்லையா?
நமக்கு எது பிடிக்கவில்லையோ, எதன்மீது நமக்கு ஈடுபாடு குறைகிறதோ அது நாளடைவில் அலுத்துவிடும். எனக்கு ஹைக்கூவின் மீதான ஈர்ப்பு நாளுக்குநாள் கூடிக்கொண்டேதான் வருகிறது. ஒவ்வொரு நாளும் ஹைக்கூவில் புதிது புதிதாக தெரிந்துகொள்ள வேண்டிய நுட்பங்களை அறிந்துகொள்வதில் ஆர்வமாக இருக்கிறேன்.
1980-களின் மத்தியில் தமிழின் முதல் ஹைக்கூ நூல் வெளியான போதே, ஹைக்கூ கவிதையின் மூவரி வடிவம் என்னை வெகுவாக கவர்ந்தது. வெறும் மூன்று வரியிலான கவிதை எனும் எளிய புரிதலில்தான் நானும் ஹைக்கூவை ஆரம்பத்தில் எழுதினேன். பிறகு, ஹைக்கூ தொடர்பான நூல்களை வாசிக்க வாசிக்க, ஹைக்கூ பற்றிய என் பார்வையும் புரிதலும் மேம்பட்டது.
ஹைக்கூ என்பது வெறும் மூன்று வரியோடு சுருங்கிக் கிடக்கும் ஒரு கவிதை வடிவமல்ல; விரித்தால் விண்ணுக்கும் மண்ணுக்கும் விஸ்வரூபம் எடுக்கும் வீர்ய வெளிப்பாடு ஹைக்கூவிற்கு உண்டு என்பதையும், ஹைக்கூவின் ஒவ்வொரு வரிக்குமான நுட்ப மான சொல்லடர்த்தியையும், காட்சி பூர்வமான அதன் அழகியலை யும், மூன்றாவது வரியில் தெறிப் பாக நிற்கும் அதன் புதிய சிந்தனை யையும், எல்லாவற்றிற்கும் மேலாக ஹைக்கூவைப் படிக்கும் வாசகனையும் அது படைப்பாளியாக மாற்றும் செயல்பாட்டையும் கண்டுணர்ந்தபோது, ஹைக்கூ எனக்குப் பிடித்தமான கவிதை வடிவம் மட்டுமல்ல; இன்றைய வேகமான காலச்சூழலுக்கு ஏற்ற தேவையான கவிதை வடிவம் என்பதையும் முழுமையாக உள்வாங்கிக்கொண்டு, ஹைக்கூத் தளத்தில் என்னை ஈடுபடுத்திக்கொண்டேன்.
80-களில் தொடங்கி இன்றைக்கு வரைக்கும் தமிழில் வெளியான ஹைக்கூ தொடர்பான அனைத்து நூல்களையும் ஒரு ஆவணம்போல் தொகுத்து வருகிறேன். தமிழ் ஹைக்கூவின் வரலாற்றை ‘ஏழைதாசன்’ இதழில் ஒரு தொடராகவும் தற்போது எழுதிவருகிறேன்.
சாகித்திய அகாதமியின் ‘பால சாகித்திய புரஸ்கார் விருதைப்’ பெறுமளவு சிறுவர் இலக்கியத்தில் முத்திரை பதித்து இருக்கின்றீர்கள். மகிழ்ச்சி. உங்கள் சிறுவர் இலக்கியப் பயணம் மற்றும் படைப்புகள் குறித்துக் கூறுங்களேன்...
தொடக்கக் காலத்தில் கதை, கவிதைகளைத்தான் நானும் எழுதிவந்தேன். அறிவொளி இயக்கத்தில் புதிய கற்போர்களுக்கான கதை நூல்களை எழுதும்போதுதான் மொழி குறித்த என் கவனம் கூடுதலானது. நான் எழுதும் கதை, கவிதைகளைப் படிக்கவேண்டிய மக்கள் இன்னமும் எழுத்தறிவு பெறாமல் இருக்கிறார்களே, அவர்களுக்காக எழுதுவதும் நம் பணியாக இருக்கவேண்டுமென்று எண்ணி, எளிய மொழியில் சிறுசிறு கதைகளை எழுதத் தொடங்கினேன். இது குழந்தைகளுக்கும் மிகப் பிடித்தமானதாக இருந்தது. புதிய கற்போர், குழந்தைகள் என இருவருக்காகவும் இனி எழுத வேண்டுமென்று எண்ணி, ‘மண் மணம் வீசும் மக்களின் விடுகதைகள்’ எனும் புதுமையான நூலொன்றை வெளிக்கொண்டு வந்தேன். பல்லாயிரம் பிரதிகள் அந்த நூல் விற்றது.
பிறகு குழந்தைகளுக்கான கதைகளை ‘துளிர்’ இதழில் எழுதினேன். மக்கள் பள்ளி இயக்கத்திலும், எய்டு இந்தியா ஒருங்கிணைத்த ‘படிப்பும் இனிக்கும்’ திட்டத்திலும் மாநில கருத்தாளராகப் பணியாற்றியபோது, நூற்றுக்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கான 2 பக்க அளவிலான படக்கதை அட்டைகள், குறுநூல்கள் என தொடர்ந்து எழுதிவந்தேன். கதை, விளையாட்டு, செயல்பாட்டு நூல், குழந்தைகளின் மனவுலகம் தொடர்பான கட்டுரைகள் என இதுவரை குழந்தைகளுக்காக 20-க்கும் மேற்பட்ட நூல்களை எழுதியுள்ளேன்.
2017-ஆம் ஆண்டில் வெளியான 16 குழந்தைக் கதைகளடங்கிய ‘அம்மாவுக்கு மகள் சொன்ன உலகின் முதல் கதை’ நூலுக்கு ‘பால சாகித்திய புரஸ்கார்’ விருது கிடைத்திருப்பது, எனது தொடர் சிறுவர் இலக்கியச் செயல்பாடுகளுக்கு கிடைத்த அங்கீகாரமாகப் பார்க்கிறேன். தொடர்ந்து இத்தளத்தில் நான் ஈடுபட உத்வேகமளிப்பதாகவும் இந்த விருது அறிவிப்பு அமைந்துள்ளது.
தாங்கள் விருது பெற்றதற்கு தமிழக முதல்வர், ஆளுநர் வாழ்த்துகளைப் பகிர்ந்திருக்கிறார்கள். இந்தப் பாராட்டை எப்படிப் பார்க்கிறீர்கள்?
படைப்பாளன் வாழும் காலத்திலேயே அவனது படைப்பும், படைப்பாளனும் கொண்டாடப்பட வேண்டுமென்பதில் இருவேறு கருத்தில்லை. ஆனாலும், தமிழ்ச் சமுதாயத்தில் படைப்பாளர்கள் பலரும் குழு மனப்பான்மை சார்ந்து இயங்குவதால், இந்தக் குழு படைப்பாளியை, அந்தக் குழுவினர் ஏற்பதில்லை. அந்தக் குழுவினரின் வெற்றியை இந்தக் குழுவினர் கொண்டாடுவதில்லை என்பதே இப்போதுள்ள எதார்த்த நிலை. இந்நிலையில், எனக்கு விருது அறிவிக்கப்பட்ட அடுத்த சில மணி நேரங்களிலேயே மாண்புமிகு. தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது டுவிட்டர் பக்கத்தில் வாழ்த்தினைப் பகிர்ந்தார். மேதகு. தமிழக ஆளுநரும் தனது டுவிட்டர் பக்கத்தில் வாழ்த்துத் தெரிவித்ததோடு, எனக்கு வாழ்த்து மடலொன்றும் எழுதியுள்ளார்.
இப்படியான வாழ்த்துச் செய்திகள் தமிழ்ச் சூழலில் மிகுந்த மனநிறைவையும் மகிழ்ச்சியையும் தருவதாக அமைந்துள்ளன. மேலும், முதல்வர் அவர்கள் அழைத்துப் பாராட்டி யதும், பல அமைச்சர் பெருமக்கள் எனக்கு வாழ்த்தினைப் பகிர்ந்ததும் நல்ல மாற்றங்களின் தொடக்கமாகப் பார்க்கிறேன். தமிழின் ஆகச் சிறந்த எழுத்தாளராகவும், பேச்சாளராக வும், ஆய்வறிஞராகவும் திகழ்ந்த முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் வழி நின்று, தமிழகத்தை வழி நடத்திவரும் தமிழக முதல்வர் அவர் களும் படைப்பாளிகளைக் கொண்டாடி வருவதில் பெருமகிழ்ச்சி. இந்தப் பாராட்டும், கொண்டாட்டமும் அனைத்து படைப்பாளர்களுக்கும் தொடர வேண்டுமென்கிற எனது விருப்பத்தையும் இந்த நேரத்தில் பதிவுசெய்கிறேன்.
ஹைக்கூ கவிதை தொகுப்புகள் வெளியீடு, இதழ் ஆசிரியர், அடுத்து அகநி வெளியீடு வழியாகப் பதிப்பாளர் என்று மலர்ந்திருக்கின்றீர்கள். பல புதிய இளம் படைப்பாளர்களின் முதல் தொகுப்புகளைக் கொண்டுவந்திருக்கின்றீர்கள். ஒரு பதிப்பாசிரியராக உங்களுக்குச் சவாலாக இருந்த புத்தகம் எது?
எனது ஒவ்வொரு நூலாக்க அனுபவமுமே ஒரு சவால் நிறைந்த பணியாகத்தான் உள்ளது. தமிழகத்தின் ஏதோ ஓர் மூலையில் ஏராளமான கனவுகளைச் சுமந்தபடி எழுதிக்கொண்டிருக்கும் புதிய கவிஞர்களின் முதல் நூலை வெளியிடும் வேலைகளை இன்றளவும் மிகுந்த ஈடுபாட்டோடு செய்துவருகிறேன். அகநி வெளியீட்டின் மூலமாக அறிமுகமான பல கவிஞர்கள், எழுத்தாளர்கள் இன்றைக்கு பலரும் அறிந்த படைப்பாளர்களாக வலம்வருவது எனக்கு மிகுந்த நெகிழ்வைத் தருகிறது.
அதேபோல், ஹைக்கூ கவிதைகளின் கூட்டுத் தொகுப்புகளை வெளியிட்டு வருவதினால் பலர் மீது மஞ்சள் வெளிச்சம் விழுவதோடு, பலரும் வெளியுலகிறகு அறிமுகமாகும் வாய்ப்பையும் பெறுகிறார்கள். தற்போது நான் ஒரு பத்திரிகையில் முதுநிலை உதவி ஆசிரியராகப் பணியாற்றுவதால், முன்போல் பதிப்புப் பணிகளில் கூடுதல் நேரமொதுக்கி செயல்பட முடிவதில்லை. ஆனாலும், பதிப்புப் பணிகளில் ஈடுபட்ட காலங்களில் எனக்கு மிகவும் சவாலாக இருந்த நூல்களென மூன்று நூல்களைச் சொல்ல முடியும்.
ஒன்று, டாக்டர் மு.ராஜேந்திரன், இஆப அவர்கள் எழுதிய சேரர் -சோழர் - பாண்டியர் - பல்லவர் காலச் செப்பேடுகள் நூலை அழகான புகைப்படங்களுடன், அனைவரும் விரும்பிப் படிக்கும் வகையில் வெளிக்கொண்டு வந்தது பெரிய சவாலாக அமைந்தது. இன்றளவும் பலரும் கேட்டு வாங்கும் நூல்களாக இவை நான்கும் உள்ளன.
இரண்டாவதாக, 1700 முதல் 1840 வரையிலான உலக - இந்திய -தமிழக வரலாற்றினைத் தொகுத்து ப.சிவனடி எழுதிய ‘இந்திய சரித்திரக் களஞ்சியம்’ எனும் 8 பெருந்தொகுப்புகளாக - 4600 பக்கங்கள் கொண்ட தொகுதிகளை மிகுந்த சிரமத் தோடு வெளியிடுவதற்கான செயல் பாடுகளை முன்னெடுத்தோம். இந்தத் தொகுதிகளைப் படங் களுடன் வெளியிட வேண்டு மென்று நாங்கள் முடிவுசெய்து, அதற்கான வேலைகளில் நாங்கள் ஈடுபட்டதே எங்களுக்கான பெரும் சவாலாக மாறியது.
மூன்றாவதாக, புதுச்சேரியில் பிரெஞ்ச் கவர்னர்கள் பலரிடம் துபாஷியாகப் பணியாற்றிய பன்மொழியாளர் ஆனந்தரங்கப் பிள்ளை அவர்கள் 25 ஆண்டுகாலம் தொடர்ந்து தினப்படி எழுதிய சேதிக்குறிப்புகளை அனைவரும் படிக்கும் எளிய மொழியில் செம்பதிப்பாக 5190 பக்கங்களில் - 12 தொகுதிகளாகக் கொண்டுவந்ததும் சவால் மட்டுமல்ல; தமிழ்ப் பதிப்புலகின் சாதனையான வெளியீடுகள் என்று சொல்லலாம்.
தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தில் முன்னணிச் செயல்பாட்டாளராக இருந் தவர் நீங்கள். அந்தச் செயல்பாடுகள் உங்களைச் செதுக்கியது என்று சொல்லலாமா?
நிச்சயமாக; என்னை வளர்த்தெடுத்ததிலும், செதுக்கியதிலும் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்திற்குப் பங்குண்டு. கல்லூரி மாணவனாக இருந்தபோதே, எங்கள் பகுதியில் தமுஎச கிளையை உருவாக்கி, அதன் ஒவ்வொரு கூட்டத்தையும் மிகுந்த ஈடுபாட்டோடும் ரசனையோடும் நடத்தினேன். பிறகு, அந்தக் கிளையின் செயலாளர், மாவட்ட துணைச் செயலாளர், மாவட்டப் பொருளாளர், மாநிலக் குழு உறுப்பினர் என அதன் செயல்பாடுகளில் படிப்படியாக உயர்ந்து கொண்டே சென்றேன்.
ஒரு ஜோல்னாப் பையை எடுத்து மாட்டிக்கொண்டு, தமிழகம் முழுவதும் சுற்றியலைந்திருக்கிறேன். இலக்கியம், நண்பர்கள் தவிர வேறெதுவும் தெரிந்ததுகொள்ளும் ஆர்வமில்லை. தமிழகத்தின் பல ஊர்களில் தமுஎச கிளைகளை அமைத்தேன். எனக்கு அறிமுகமான இளைய கவிஞர்களை அமைப்பில் ஐக்கியப்படுத்தினேன். அதில் இன்றைக்கு பலரும் அந்த அமைப்பின் செயல்பாடுகளில் முன்னணி தலைவர்களாக இருப்பது எனக்குப் பெருமையளிக்கிறது. இளைய படைப்பாளர்களை ஆற்றுப்படுத்துவதில், அமைப்பாக ஒருங்கிணைத்து செயல்பட வைப்பதில் என்றென்றும் தமுஎகச தான் எனக்கான தாய்வீடு. தாயோடு செல்லச் சண்டையிடும் குழந்தைகள் எங்குமுண்டு. ஆனால் தாயை வெறுக்கும் குழந்தைகளாக ஒருவருமில்லை என்பதே உண்மை.
வெண்ணிலாவும் வானும் போல வாழ்க” என்று முன்பு வாழ்த்துவார்கள். அ.வெண்ணிலாவும் மு.முருகேசும் போல் வாழ்க” என்று இப்போது வாழ்த்தலாம். காதலி, மனைவி, கவிஞர், நாவலாசிரியர் , சாதனைப் பெண்மணி... இவற்றில் உங்களுக்குப் பிடித்தமான வெண்ணிலா யார்? ஏன்?
நிலவின் எந்தப் பக்கம் குளுமையானது என்று கேட்பது போலுள்ளது உங்களின் கேள்வி. வெண்ணிலாவை ஒரு சிற்றிதழாளராக, ஆசிரியராகத் தான் எனக்கு முதல் அறிமுகம். பிறகு, அவர் கவிதை கள், கதைகளை எழுதத் தொடங்கினார். ஏழாண்டுகால எங்களின் நட்பு, காதலாக மலர்ந்தது. ரொம்பவே குறைவாக எழுதிக்கொண்டிருந்த வெண்ணிலாவின் எழுத்துக்கு எப்போதுமே நான் முதல் வாசகன்.
வெண்ணிலாவும் நானும் எழுதிய கவிதைகள், ‘என் மனசை உன் தூரிகைத் தொட்டு…’ எனும் தொகுப்பு நூலாக எங்களது மண நாளுக்கு முதல் நாளின் மாலைப்பொழுதில் வெளியிடப்பட்டது. வெண்ணிலா திருமணத்திற்கு முன்னர் எனக்கு எழுதிய கடிதங்களைத் தொகுத்து, ‘கனவிருந்த கூடு’ எனும் நூலாக்கினேன். இந்த இரு நூல்களுக்கும் நல்ல வரவேற்பு கிட்டியது. திருமணத்திற்குப் பிறகு வெண்ணிலா நிறைய எழுதுவதற்கான சூழல் அமைந்தது. கவிதை, சிறுகதை, கட்டுரைகள், ஆய்வுகள், தொகுப்பு முயற்சிகள், நாவல் என பரந்து பட்ட தளத்தில் அவரது எழுத்துப்பணிகள் தொடர் கின்றன.
எதை எழுதினாலும் அதில் தன்னை முழுமை யாக ஈடுபடுத்திக்கொண்டு முற்றாகக் கரைத்துக் கொள்வதும், சளைக்காமல் தேடிக் கண்டடைந்து வரலாற்றுத் தவறில்லாமல் எழுதுவதும் வெண்ணிலா வின் எழுத்திற்கு கூடுதல் வாசகர்களைப் பெற்றுத் தந்திருக்கிறது.
குழந்தைகளின் கல்வி நலன் சார்ந்து அக்கறையுடன் கற்பிப்பதில் ஈடுபாட்டுடன் செயல்படும் நல்லாசிரியர் வெண்ணிலாவை, எதையும் கற்றுக்கொள்வதில் ஆர்வமுள்ள ஒரு மாணவனான எனக்குப் பிடிக்கும். எனக்குள்ளிருந்த காதலை அடையாளம் கண்டு, முதலாவதாக காதலை முன்மொழிந்த காதலி வெண்ணிலாவை இன்னும் பிடிக்கும். இல்லற வாழ்வில் இணைந்தபிறகும் என் மீதான அன்பை, நேசத்தைத் துளியும் குறைவைக்காத மனைவி வெண்ணிலாவையும் அதிகம் பிடிக்கும். அழகியல் ததும்பும் மொழியில் தெறிப்பான கவிதைகளை எழுதும் கவிஞர் வெண்ணிலாவைக் கவிதைபோல் எப்போதுமே பிடிக்கும். ராஜேந்திர சோழனின் அகவுலகை, ‘கங்காபுரம்’ எனும் வரவாற்று நாவலாகப் பதிவுசெய்த புதின ஆசிரியராகவும் வெண்ணிலாவைப் பிடிக்கும். கலை-இலக்கியம், கல்வி, வரலாறு, ஆய்வு என பல துறைகளிலும் உயரங்களைத் தொடும் பெண்மணியாக இன்னும் இன்னும் சாதனைப் பெண்மணியாக வெண்ணிலாவைப் பிடிக்கும்.
யோசித்துப் பார்க்கிறேன்… இது பிடிக்காது என்று சொல்ல ஏதாவது இருக்கிறதா என்று. ம்ம்… பிடிக்காத ஒன்றையும் கண்டுபிடித்து விட்டேன். தன் உடல்நலனில் சிறிதும் அக்கறையில்லாமல் எப்போதும் எழுதுவதிலேயே கவனத்தைக் குவித்திருக்கும் அந்த எழுத்துப் பேய் பிடித்த வெண்ணிலாவை ஏனோ எனக்கு கொஞ்சம் பிடிக்காமல் போகிறது. அவ்வளவு தான்.
இலங்கை இலக்கியப் பயணம், கவிதைக்கான வெளிமாநிலப் பயணங்கள்... இவற்றிலிருந்து நீங்கள் கற்றதும் பெற்றதும்? இந்தப் பயணங்களை முன்வைத்து நீங்கள் ஏன் பயண இலக்கியம் படைக்கவில்லை?
எனது திருமண வாழ்க்கைக்கு முன்புவரை ஒரு தேசாந்திரியாகச் சுற்றித் திரிந்தவன் நான். இலக்கியமும் நட்பும் என்னைக் கைப்பிடித்து அழைத்துச்சென்ற எல்லா இடங்களுக்கும் மறுபேச்சின்றி சென்று வந்தேன். திருமணத்திற்குப் பிறகான பயணங்கள் அனைத்துமே ஒரு திட்டமிடலுக்குப் பின் அமைந்தவையே. இலக்கியப் பயணங்கள் என்றால் வெண்ணிலாவோடு இணைந்த பயணமாக அவற்றை திட்டமிட்டுக்கொண்டு பயணப்பட்டிருக்கிறேன்.
இலக்கியம் - கல்வி தொடர்பான நிகழ்வுகளில் பங்கேற்பதற்காகவும் கவிதை வாசிக்கவும், உரையாற்று வதற்காகவும் மேற்கு வங்க மாநிலம் டார்ஜிலிங், கர்நாடக மாநிலம் மைசூரு - பெங்களூரு, கேரள மாநிலம் இடுக்கி - திருச்சூர், உத்தரப் பிரதேசம் ஆக்ரா, புதுடெல்லியிலுள்ள ஜந்தர்மந்தர், கோவா, ஆந்திர மாநிலம் விஜய வாடா, தெலங்கானா மாநிலம் ஹைதராபாத், ஒடிசா மாநிலம் பாரலக்கேமுண்டி, அசாம் மாநிலம் கவுகாத்தி, மணிப்பூர் மாநிலம் இம்பால் உள்ளிட்ட பல இந்திய மாநிலங்களுக்கும் பயணம் செய்துள்ளேன்.
அதேபோல், இலங்கை, சிங்கப்பூர், மலேசியா, குவைத் ஆகிய நாடுகளுக்கும் சென்றுள்ளேன். எனது ஒவ்வொரு பயணத்திலும் செல்லுமிடமெல்லாம் குறிப்புகளையும், புகைப்படங்களையும் எடுத்து வருவேன். இந்தப் பயண அனுபவங்களை எழுத வேண்டுமென்று நினைப்பேன். ஊர் திரும்பியதும் வழக்கமான வேலைகள் உள்ளிழுத்துக் கொள்வதால், இந்தப் பயண அனுபவங்களை எழுதும் பணி தள்ளிச்சென்றுகொண்டே இருக்கிறது. இந்தக் கேள்வி சீக்கிரமே அந்தப் பயண இலக்கிய அனுபவத்தை எழுதிவிட வேண்டுமென்கிற தூண்டுதலைத் தந்துள்ளது.
தனியார் பள்ளிகளில் படித்த உங்கள் மகள்கள், பின்னர் அரசுப் பள்ளியில் சேர்க்கப்பட்டனர். தமிழகத்தின் பரவலான கவனம் பெற்ற செய்தி அது. இன்று அவர்களின் கல்வி நிலை எப்படி இருக்கிறது?
பிள்ளைகளை அரசுப் பள்ளிகளில் படிக்கவைக்க வேண்டுமென்பதில் நானும் வெண்ணிலாவும் விருப்பம் கொண்டிருந்தோம். ஆனால், எங்கள் வீட்டின் அருகிருந்த ஆரம்பப் பள்ளிகள் எதுவும் குறிப்பிட்டுச் சொல்லும்படியில்லை. தவிர்க்கவே முடியாமல் தனியார் பள்ளியில் குழந்தைகளைச் சேர்க்கும்படி ஆயிற்று. ஆனாலும், உள்ளூர ஒரு குற்றவுணர்வு உறுத்திக்கொண்டே இருந்தது.
பிள்ளைகள் பத்தாம் வகுப்பை முடித்ததும் வெண்ணிலா பணியாற்றிய வந்தவாசி அரசுப் பெண்கள் மேல்நிலைப் பள்ளியிலேயே, குழந்தைகளின் விருப்பத்தோடு சேர்த்தோம்.
உடனிருந்த பலரும் வேண்டா மென்று சொன்னார்கள். மீறி சேர்த் தோம். எங்கள் எண்ணங்களைப் புரிந்துகொண்ட குழந்தைகளும் சிறப்பாகப் படித்தார்கள். மூத்த மகள் கவின்மொழி எதிர் பார்த்ததைவிட, அதிக மதிப் பெண் பெற்றார். அவரது விருப்பம் போல் கோவை வேளாண் கல்லூரியில் சேர்ந்து படித்தார்.
அடுத்ததாக, இரட்டையர் களான நிலாபாரதி - அன்புபாரதி இருவரும் மாவட்ட அளவில் முதலிடம் பெற்று, தேர்ச்சி பெற்றனர்.
ஆனாலும், நீட் தேர்வினால் அவர்களால் மருத்துவம் படிக்க முடியாமல் போனது. இருவருமே மூத்த சகோதரி வழியில் பி.எஸ்.சி., வேளாண்மை படித்தனர். அரசுப் பள்ளிக் குழந்தைகள் மாவட்ட அளவில் முதலிடம் பெற்றதால், அந்தப் பள்ளியில் இன்றைக்கு 500-க்கும் மேற்பட்ட குழந்தைகள் கூடுதலாகச் சேர்ந்துள்ளனர். பலரும் பள்ளி வளர்ச்சிக்கு உதவி வருகின்றனர். இன்றைக்கும் சிலர், ‘உங்கள் பிள்ளைகள் அரசுப் பள்ளியில் படிக்கும் செய்தியை ‘இந்து தமிழ் திசை’ நாளிதழின் கட்டுரை வழியாக அறிந்த பிறகுதான், எங்கள் குழந்தைகளையும் துணிந்து அரசுப் பள்ளிகளில் சேர்த்தோம்’ என்று சொல்கையில் கண்கள் பனிக்கின்றன. ஒரு நல்ல தொடக்கத்திற்கான விதையாக என் பிள்ளைகள் இருந்தார்கள் என்பதில் கூடுதல் சந்தோசம். இப்போதும் புரிதலுடனும் - ஈடுபாட்டுடனும் கற்பதையே குழந்தைகள் செய்து வருகிறார்கள். கல்வியில் அவர்கள் பெறுகிற உயரம், வாழ்வின் உயரத்திற்கான படிக்கட்டாகவும் அமையுமென்று உறுதியாக நம்புகின்றேன்.
இதுவரை நீங்கள் எழுதியுள்ள புத்தகங்கள்..? உங்கள் எதிர்காலத் திட்டங்கள் பற்றி .... ?
கடந்த 40 ஆண்டுகால எனது படைப்பிலக்கிய பயணத்தில் இதுவரை 10 புதுக்கவிதை, 9 ஹைக்கூ கவிதை, 18 குழந்தை இலக்கியம், 9 கட்டுரைகள், சிறுகதை நூலொன்றையும் எழுதியுள்ளேன். மேலும், 3 புதுக்கவிதை, 7 ஹைக்கூ கவிதை, 5 சிறுவர் இலக்கிய நூல்களையும் தொகுத்துள்ளேன்.
எழுத எழுதத்தான் இன்னும் எழுதவேண்டியதன் தேவை கூடிக்கொண்டே செல்வதாக உணர்கிறேன். தற்போது மகாகவி பாரதியை இளைய தலைமுறையினரிடம் அறிமுகம் செய்யும் விதமாக, ‘என்றென்றும் பாரதி’ எனும் தொடர் கட்டுரையை ‘இனிய நந்தவனம்’ எனும் இதழில் எழுதிவருகிறேன். அதேபோல், நம் மூத்த படைப்பாளர்களின் இலக்கியப் புதையல்களைத் தொகுக்கும் வகையில் ‘தகவு’ மின்னிதழில் ‘கவிதைக்குள் கலந்திருக்கும் கதை’ எனும் தொடர் கட்டுரையையும் எழுதி வருகிறேன். இன்றைய அரசியல் சூழலைக் கவிதைகளின் வழியே காத்திர மாகச் சொல்லும் அரசியல் கவிதைகளை, ‘புதிய ஆசிரியன்’ இதழில் எழுதிவருகிறேன். நான் வாசிக்கும் எனக்குப் பிடித்த கவிதைகளைப் ‘படித்ததில் பிடித்தது’ எனும் தலைப்பின்கீழ் ‘கவிதை உறவு’ இதழில் மாதந்தோறும் தொடராக எழுதிவருகிறேன். எதிர்காலத்தில் எனது சிறுவயது நாளின் கசப்பும் கரிப்பும் கலந்த வாழ்க்கையை நாவலாக எழுதும் எதிர்கால எழுத்துத் திட்டமும் உண்டு. நேரமும் காலமும் கனிகையில், நிச்சயம் ஒரு நாவலாசிரியராகவும் உங்கள்முன் நிற்பேன்.
‘எமக்குத்தொழில் கவிதையும் எழுத்தும்; இமைப்பொழுதும் சோராதிருத்தலே!’
மகிழ்ச்சி. நன்றி. வாழ்த்துகள்.
தமிழில் மரபுக்கவிதைகளே அருகிவரும் சூழலில் மரபு, புதிது, ஹைக்கூ என மூவகை கவிதை வடிவங் களுக்கான இலக்கியத் தளமாகவும், மூத்த - இளைய படைப்பாளிகளின் படைப்புகளை வாசக வெளியில் அறிமுகம் செய்துவரும் இலக்கிய இதழாகவும் ‘இனிய உதயம்’ இதழியக்கம் தொடங்கியுள்ள இந்தப் பயணம், தமிழுக்கும் தமிழ்ப் படைப்பாளி களுக்கும் புத்துணர்வு ஊட்டிவருகிறது. ‘பால சாகித்திய புரஸ்கார் விருதிற்கு’ நான் தேர்வுசெய்யப்பட்டி ருக்கும் இவ்வேளையில், எனது இலக்கியப் பயணத்தை மீண்டுமொருமுறை பார்ப்பதற்கான வாய்ப்பாக எனது நேர்காணலைப் பதிவுசெய்யும் ‘இனிய உதயம்’ இதழுக்கு எனது நெஞ்சார்ந்த நன்றியும் வணக்கமும்.