சுற்றுலாப் பயணிகளின் சொர்க்கமான சுவிட்சர்லாந்தின் "தூண்' ஏரிக் கரையிலிருக்கும் "தூண்' நகரத்தில், என்னுடைய சுவிட்சர்லாந்து நண்பன் மிஸ்டர் ரிச்சர்டின் விருந்தாளியாக நான் அவருடைய வீட்டில் தங்கியிருந்தேன். மிஸ்டர் ரிச்சர்ட் தத்துவத்தில் பட்டம் பெறுவதற்காக "பேன்' பல்கலைக்கழகத்தில் படித்துக்கொண்டி ருக்கும் ஒரு மாணவர். நல்ல தோற்றத்தையும் நல்ல உடல்நிலையையும் கொண்டிருக்கும் ஒரு இளைஞர் அவர். எப்போதும் புன்னகையைத் தவழவிட்டவாறு, நீலநிறக் கண்கள் பிரகாசிக்க மென்மையான குரலில் பேசும் ரிச்சர்டுடன் சேர்ந்து நடப்பதே ஒரு சந்தோஷ மான விஷயமாக இருக்கும். சுவிட்சர்லாந்து மக்களையும் அவர் களுடைய வாழ்க்கைமுறைகளைப் பற்றியும் தெரிந்துகொள்வதற்கு ரிச்சர்டின் குரலும் இயல்பான உரையாடல்களும் எனக்குப் பெரிய அருளாக இருந்தன.
ஒரு மாலைவேளையில் ரிச்சர்ட் என்னைத் தன்னுடைய குடும்பத்தின் நிலவறையைக் காட்டு வதற்காக அழைத்துச் சென்றார். வீட்டிற்குக் கீழே, தரைமட்டத்திற்கு அடியிலிருக்கும் விசாலமான அறைக்குள், ஒரு பெரிய மர ஏணியின் வழியாக நாங்கள் இறங்கிச் சென் றோம். முன்பே சூழ்ந்துவிட்டிருந்த பழைய காற்றின் விசேஷ வாசனையை நாங்கள் முகர்ந்தோம். மதுவும் பிற போதைப் பொருட் களும் உள்ள, கட்டிவைக்கப்பட்டிருந்த கொள்கலன்களும், பெரிய துப்பாக்கி குண்டு களைப்போல காணப்பட்ட சுவிட்சர்லாந்து பால் கட்டிகளும், விறகும், வைக்கோலும் அதற்குள் வைக்கப்பட்டிருந்தன. குளிர் காலத்தின்போது குடும்பத்திற்குத் தேவைப் படும் உணவுப் பொருட்கள் மட்டுமல்ல; பயன்படுத்தி முடிக்கப்பட்டவையும், வீட்டில் வைப்பதற்கு இடம் கிடைக்காதவையுமான பழையவையும் புதியவையுமான பல பொருட்கள் அந்த நிலவறைக்குள் வைக்கப் பட்டிருந்தன.
ஒரு பழைய இரும்புக்கட்டில், செயல் படுவதை நிறுத்திவிட்ட ஒரு மர கடிகாரம், துருப்பிடித்த ஒரு சைக்கிள், சவப் பெட்டி யைப்போல காட்சியளிக்கும் ஒரு வயலின் பெட்டி, உடைந்த கண்ணாடி சாளரங்களின் சட்டங்கள், ஒரு கோடரி... "ஸ்கீயிங்' என்ற பனிச்சறுக்கு விளையாட்டில் பயன்படுத்தும் காலணிகளும் ஊன்றுகோல்களும், ஒரு குதிரைச் சேணமும்... இப்படி பல வகையான பொருட்கள் அங்கு சிதறிக்கிடக்க, அந்த கூட்டத்தில் ஒரு மூலையில் அமரவைக்கப் பட்டிருந்த அழகான ஒரு பளிங்குக் கல்லாலான சிலை என்னுடைய கவனத்தை ஈர்த்தது. நெற்றியில் கையை வைத்தவாறு சிந்தனையில் மூழ்கியிருந்த ஒரு இளைஞனின் சிலை அது. அதிலிருந்து கண்களை எடுப்பதற்கு என்னால் முடியவில்லை.
நான் ரிச்சர்டிடம் கேட்டேன்: ""இந்த அளவுக்குக் கலை வேலைப்பாடு கொண்ட ஒருசிலையை நீங்கள் இந்த நிலவறையின் இருட்டிற்குள் போட்டு வைத்திருப்பதற்கான காரணம் என்ன?''
ரிச்சர்ட் அலட்சியமாக அருகில் வந்து, அந்தச் சிலையின் தலையைக் கையில் தூக்கி எடுத்தவாறு கூறினார்: ""பாருங்கள்... இது உடைந்துபோன ஒரு பழைய சிலை.''
ரிச்சர்ட் சிலையின் தலையைத் தன் முகத்திற்கு நேராக உயர்த்தியபோது, ரிச்சர்டின் முகச்சாயல், குறிப்பாக... அந்த உணர்ச்சி சிலையின் முகத்திலும் அப்படியே இருப்பதை நான் பார்த்தேன்.
""என்ன? இது உங்களுடைய தோற்றத்தில் இருக்கும் சிலையாகத் தெரிகிறதே?'' என்று நான் ஆச்சரியத்துடன் கூறினேன்.
""இருக்கலாம்...'' அவர் கவலை நிறைந்த குரலில் பதில் கூறினார்.
""இதை உருவாக்கியது யார்? இது எப்படி உடைந்தது?'' நான் ஆர்வத்துடன் கேட்டேன்.
ரிச்சர்ட் அமைதியான குரலில் கூறினார்: ""நண்பரே... இதற்குப் பின்னால் ஒரு கதை இருக்கிறது. இரவு உணவு சாப்பிட்டு முடித்தபிறகு, நாம் சற்று தூணின்கரைக்கு நடந்து செல்வோம். அப்போது அந்தக் கதையை உங்களுக்குக் கூறுகிறேன்.''
சிலையின் தலையை ஏற்கெனவே அது இருந்த இடத்தில் வைத்துவிட்டு ரிச்சர்ட் வெளியே நடந்தார். நானும் அவரைப் பின்தொடர்ந்தேன்.
அன்றிரவு உணவு சாப்பிட்டு முடித்தபிறகு, நானும் ரிச்சர்டும் நடப்பதற்காக வெளியேறினோம். நல்ல நிலவு வெளிச்சம் இருந்தது. பனிமூடிய மலைகள் நிறைந்த சூழல், வெண்ணிலாவின் வெளிச்சத்தில் ஒரு வெண்ணெய் வர்த்தகக் கடையைப்போல தோன்றியது. ஏராளமாகப் பூத்து நின்றுகொண்டிருந்த ஆப்பிள் மரங்களிலிருந்து வந்த மெல்லிய வாசனை சுற்றிலும் பரவியிருந்தது. பைன் மரங்களும் பூமரங்களும் நிறைய வளர்ந்து நின்று கொண்டிருக்கும் ஏரியின் கரை, நிலவும் நிழலும் நெய்து உண்டாக்கிய கலை வேலைப்பாடுகளால் மிகவும் அழகாகக் காட்சியளித்தது. மரங்களின் கிளைகளிலிருந்து பறவைகள் மணியோசையைப் போன்ற பாடல்களைப் பாடிக்கொண்டிருந்தன.
ரிச்சர்ட் தன்னுடைய காதல் கதையை என்னிடம் கூறினார். நான் கவனமாகக் கேட்டேன். தென்னந் தோப்புகள் நிறைந்த கேரளத்தின் மலைச் சரிவாக இருந்தாலும், ஆப்பிரிக்காவின் இருண்ட காடுகளாக இருந்தாலும், சுவிட்சர்லாந்தின் பனிமூடிய மலைப் பகுதிகளுக்கு அருகிலிருக்கும் மரக்குடில்களாக இருந் தாலும், காதலின் ஆரம்பத்தையும் வளர்ச்சியையும் பரிணா மத்தையும் ஒருவர் சொல்லக் கேட்பதென்பது ஆனந்த மளிக்கும் விஷயம்தான். ஒரு காதலனை எல்லாரும் விரும்புகிறார்கள். நான்கு வருடங்களுக்கு முன்பு ரிச்சர்ட், மிகவும் அழகுபடைத்த ஒரு ஜெர்மன் இளம் பெண்ணுடன் அறிமுகமானார். அவள் தூணில் படித்துக் கொண்டிருந்தாள். அறிமுகம், காதலாக மலர்ந்தது. மூன்று வருட காலம் அவர்கள் ஒருவரையொருவர் வழிபட்டவாறு, தூண் ஏரியின் கரையில் மிகவும் புனித மான ஒரு காதல் சாம்ராஜ்ஜியத்தை உண்டாக்கினார்கள்.
இறுதியில், சென்ற வருடம் அவள் திடீரென்று ரிச்சர்டை ஒதுக்கிவிட்டு, பணக்காரரும் வழுக்கைத்தலை கொண்ட வருமான ஒரு "டச்' வியாபாரியைத் திருமணம் செய்து கொண்டாள். இதுதான் ரிச்சர்டின் ஏமாற்றமடைந்த காதல் கதையின் ரத்தினச் சுருக்கம்.
நான் ரிச்சர்டிடம் கேட்டேன்: ""அவள் உங்களை இப்படி ஒதுக்கிவைத்துவிட்டு, அந்த "டச்' வியாபாரியைத் திருமணம் செய்துகொள்ள தீர்மானித்ததற்கு ஏதாவது விசேஷமான காரணம் இருந்ததா?''
ரிச்சர்ட் கவலை நிறைந்த குரலில் பதில் கூறினார்:
""இல்லை... நண்பரே. எங்களுக்கிடையே சிறிய அளவில்கூட சண்டை நடந்ததில்லை. அவள் காதலுக்காக அப்படிச் செய்யவில்லை என்பதை என்னால் உறுதியாகக் கூறமுடியும். பணத்திற்காகச் செய்திருக்கலாம்...''
நான் கேட்டேன்: ""என்ன? பணத்திற்காக அவள் காதலை பலிகொடுத்து விட்டாளா?''
ரிச்சர்ட் கூறினார்: ""பெண்கள் காதலுக்காக வறுமையை ஏற்றுக்கொள்ளும் அதே தியாக உணர்வுடன், பணத்திற்காக காதலையும் பலிகொடுப்பார்கள். இதில் ஆச்சரியப்படுவதற்கு ஒன்றுமில்லை. ஆனால் வெறீ னாவை- அதுதான் அவளுடைய பெயர். அவளைப் பொருத் தவரையில் அதுவும் சரிதானா என்று தெரியவில்லை. என் கதை இங்கு முடிந்துவிடவில்லை. வெறீனாவின் திருமணத் திற்குப் பிறகுதான் அந்த கதையின் சுவாரசியமான பகுதி ஆரம்பிக்கிறது. நீங்கள் கவனமாகக் கேளுங்கள்.''
ரிச்சர்டின் காதல் கதையின் வளர்ச்சியைத் தெரிந்து கொள்வதற்காக நான் மிகவும் ஆர்வத்துடன் இருந்தேன். சிறிது நேரப் பேரமைதிக்குப்பிறகு அவர் திரும்பி நின்று, சற்று தூரத்திலிருந்த மலையைச் சுட்டிக்காட்டியவாறு என்னிடம் கேட்டார்: ""அந்த மலையில் மங்கலாகத் தெரியும் கட்டடம் என்னவென்று புரிகிறதா?''
நான் கூர்ந்து பார்த்தேன். தூணின் மிகப்பழமையான பிரபுவின் அரண்மனையும் கோட்டையும்தான் தெரிகின்றன என்பதை நான் புரிந்துகொண்டேன். அந்தப் பழைய கோட்டையில் நானும் ரிச்சர்டும் அன்று காலையில் சுற்றி நடந்திருந்தோம். நான் கூறினேன்: ""அது தூணிலிருக்கும் கோட்டை என்று தோன்றுகிறது.''
""ஆமாம்... தூணிலிருக்கும் கோட்டைதான்...'' ரிச்சர்ட் கூறினார்: ""அதற்குள் உங்களை மிகவும் ஈர்த்த விஷயம் என்னவென்பது ஞாபகத்தில் இருக்கிறதா?''
நான் கூறினேன்: ""பண்டைக் காலத்தைச் சேர்ந்த பிரபுக்கள் குற்றவாளிகளையும் அரசியல் போராளி களையும் கொல்வதற்குப் பயன்படுத்திய கொடூரமான ஆயுதங்களும் கருவிகளும்தான் என்னை அதிகமாக ஈர்த்த விஷயங்கள். உயிருள்ள மனித உடலை இரு பக்கங்களிலும் அங்குலம் அங்குலமாக இழுத்துக் கிழிக்கப் பயன்படுத்திய மரத்தாலான அந்த சக்கரத்தையும் கயிறையும் என்னால் மறக்கமுடியவில்லை. மனிதனை இதைவிட பயங்கரமாகக் கொல்வதற்குப் பயன்படக்கூடிய ஒரு கருவியை மனிதன் கண்டுபிடிக்கவில்லை.''
ரிச்சர்ட் அமைதியான குரலில் கூறினார்: ""இருக்கிறது நண்பரே! உயிருள்ள மனிதனின் இரு பக்கங்களையும் அங்குலம் அங்குலமாக இழுத்து நீட்டிப்பிடிக்கக் கூடியதைவிட, கொடூரமாகக் கொல்லும் கருவிகள் பெண்களின் இதயத்தில் மறைந்துகிடக்கின்றன.''
ஏரியின் கரையில் தனியாக நின்றுகொண்டிருக்கும் இருண்ட சூனியமாகிக்கிடக்கும் ஒரு பிரம்மாண்டமான மாளிகைக்கு முன்னால் நாங்கள் போய் நின்றோம். ""இனி நாம் இதற்கு முன்னால் நின்றுகொண்டு அந்தக் கதையைத் தொடரலாம்'' என்று கூறியவாறு, ரிச்சர்ட் அங்கு நின்றார்.
நான் அந்த கட்டடத்தையே சற்று வெறித்துப் பார்த்தேன். முதல் பார்வையிலேயே அந்த மாளிகை என்னை அச்சம்கொள்ளச் செய்தது. அழகு என்ற பசுமைத் தோப்பிற்குள் கட்டப்பட்டிருந்த அச்சத்தைத் தரும் காட்சி அது. நான் தனியாக அதற்கு முன்னால் சென்று சிக்கியிருந்தால், உடனடியாக வயிற்றைக் கையால் அழுத்திப் பிடித்தபடி திரும்பி ஓடாமல் இருந்திருக்க மாட்டேன். கறுத்த சாயம் பூசப்பட்ட இரண்டு தளங் களைக்கொண்ட மாளிகை அது. மேலே.. ஏரியைப் பார்த் தவாறு ஒரு திறந்த வாசல் பகுதி இருந்தது. மேல்மாடியின் பாதிப்பகுதி இடிந்து விழுந்துகிடந்தது. அடைக்கப்பட்டிருந்த கதவுகளில் யாரோ பொறுமையை இழந்து தட்டிக்கொண்டிருப்பதைப் போன்ற ஒரு சத்தம் இடையில் அவ்வப்போது கேட்டுக்கொண்டிருந்தது. ஏரியிலிருந்து வீசிக்கொண்டிருந்த காற்று அந்த கதவுகளிலும் சாளரத்தின் பகுதிகளிலும் வந்து மோதிக் கொண்டிருக்கும் சத்தம்தான் அது என்பது பின்னர் புரிந்தது. எனினும், அந்த வீட்டின் அச்சத்தை அளிக்கக் கூடிய சூழலுடன் ஒத்துப்போவதற்கு என்னால் முடிய வில்லை. அதற்குள் இறந்தவர்களின் மற்றும் பேய்களின் ஒரு பெரிய ஆலோசனைக் கூட்டம் நடந்துகொண்டிருப் பதைப் போன்ற ஒரு தோற்றத்தை மனதிலிருந்து மறைப் பதற்கு முடியவில்லை.
ரிச்சர்டின் முகத்தில் எந்தவொரு குழப்பத்தையும் பார்க்க முடியவில்லை. அவர் என்னை நோக்கித் திரும் பியவாறு கூறினார்: ""பாருங்கள் நண்பரே! என்னுடைய காதல் சம்பந்தப்பட்ட ஏராளமான நினைவுகளின் உறைவிடம் இந்த வெறுமையாகக் கிடக்கும் மாளிகைதான். எத்தனையெத்தனை சாயங்கால வேளைகளில் நானும் வெறீனாவும் இதற்குள் இருந்திருக்கிறோம் என்று நினைக் கிறீர்கள்? மானிட உலகத்திலிருந்து தனியாகப் பிரிந்த இரண்டு உயிரற்ற உடல்களாக எங்களைக் கற்பனை செய்துகொண்டு, நாங்கள் நட்சத்திர உலகத்தைக் கனவு கண்டவாறு எவ்வளவோ மணிநேரம் இதன் வாசல் பகுதியில் இருந்திருக்கிறோம். அன்றும் இது இதேமாதிரி அனாதையைப்போல இருளின் சாபத்தை வாங்கிக் கிடந்தது. பிறகு அதற்கு சிறிது காலம் உயிர் அளித்ததுகூட வெறீனாதான். அவள் அவளுடைய டச்சுக்காரரான கணவருடன் சேர்ந்து தேன்நிலவைக் கொண்டாடுவதற்குத் தீர்மானித்த மாளிகையும் இதேதான்...''
""என்ன? அவள் தேன்நிலவைக் கொண்டாடுவதற்கு கண்டுபிடித்த இடம் இதுவா?'' நான் ஆச்சரியத்துடன் கேட்டேன்: ""அப்படியென்றால்... உங்களுடைய வெறீனா ஒரு பிசாசாகத்தான் இருக்க வேண்டும்.'' நான் தலையை ஆட்டியவாறு கூறினேன். ""டச்சுக்காரரான கணவருடன் சேர்ந்து தேன்நிலவை அனுபவித்துக்கொண்டிருக்கும்போது, அவள் எனக்கு மிகுந்த உணர்ச்சிகள் நிறைந்த மொழியில் காதல் உணர்வு கொண்ட கடிதங்களை எழுதியதும் இந்த இருண்ட மாளிகையில் வைத்துதான்.''
நான் இடையில் புகுந்து கேட்டேன்: ""திருமணத் திற்குப் பிறகும் வெறீனா உங்களைக் காதலித்துக் கொண்டிருந்தாள். அப்படித்தானே?''
ரிச்சர்ட் உடனடியாக பதில் கூறவில்லை. அந்த மாளிகைக்கு முன்னாலிருந்த ஏரியின் கரையில் நிறைய பூத்து நின்றுகொண்டிருந்த ஒரு ஆப்பிள் மரத்திற்குக் கீழே, ஒரு சிதிலமடைந்த, கல்லாலான ஓய்வெடுக்கும் திண்ணை இருந்தது. அந்த திண்ணையில் காலைத் தூக்கி வைத்தவாறு, அவர் ஏரியின் கரையின் வழியாக கிழக்கு திசையைப் பார்த்தவாறு நின்றுகொண்டிருந்தார். ஒளிர்ந்துகொண்டிருக்கும் வெண்ணிலவைப்போல, மூடுபனி ஏரியின் நீர்பரப்பைத் தடவிக்கொண்டிருந்தது. தூரத்தில் எதிர்கரையிலிருந்த ஒரு மலையின் உச்சியிலுள்ள ஹோட்டலின் மேற்பகுதியில் மின்விளக்கு சிறிய நட்சத்திரத்தைப்போல பிரகாசித்துக்கொண்டிருந்தது. அந்தப் பிரகாசத் துளியைப் பார்த்தவாறு ரிச்சர்ட் தழுதழுத்த குரலில் கூறினார்:
""வெறீனாவிற்கு என்மீது இருந்த காதல்? அதன் உண்மைத் தன்மையை விளக்கிக் கூறுவதற்கு என்னால் இன்றுவரை முடியவில்லை. நான் உங்களிடம் மனம் திறந்து கூறுகிறேன். நாங்கள் மூன்று வருடங்கள் தினமும் பழகியவர்களாக இருந்தாலும், முத்தம் கொடுத்ததைத் தாண்டி நான் அவளை எதுவும் செய்ததில்லை. அவள் எனக்கு ஒரு தேவதையாக இருந்தாள். அவளை என்னால் முழுமையாகப் புரிந்துகொள்ள முடியவில்லை. இந்தக் கதை முழுவதையும் கேட்டால் உங்களுக்கு அது புரியும்.''
ரிச்சர்ட் அமைதியான குரலில் கதையைத் தொடர்ந்தார்:
""ஹான்ஸன் என்ற பெயரைக் கொண்ட அந்த "டச்' வியாபாரியைத் திருமணம் செய்ய முடிவெடுத்த பிறகுதான் அவள், அந்த செய்தியை என்னிடம் கூறினாள்.
"ரிச்சர்ட்... நான் ஒரு பணக்காரரும் வழுக்கைத்தலையுள்ள மனிதருமான "டச்' வியாபாரியைத் திருமணம் செய்து கொள்ளப் போகிறேன். மார்ச் 15-ஆம் நாள் எங்களுடைய திருமணம்' என்று அவள் என்னிடம் வந்து கூறினாள்.
அப்போது என்னுடைய முக உணர்ச்சிகளை அவள் கூர்ந்து பார்க்கவும் செய்தாள். என் இதயத்தில் ஒரு கிரகத்தின் கண்டம் பதிந்ததைப்போல எனக்குத் தோன்றினாலும் நான் என்னுடைய வேதனையையும் அதிர்ச்சியையும் முகத்தில் வெளிக்காட்டிக்கொள்ளவில்லை. "வெறீனா...
என் வாழ்த்துகள்!' என்று நான் முடிந்தவரைக்கும் உற்சாகம் அடைந்தவனைப்போல அவளிடம் கூறினேன்.
முடிந்தவரைக்கும் என்னை மனரீதியாக விட்டெறிந்து விட்டு, ஒரு சந்தோஷத்தை அனுபவிப்பது... இதுதான் அவளுடைய நோக்கம் என்று தோன்றுகிறது.
அவளுடைய திருமணத்திற்கு வரவேண்டுமென்று அவள் என்னை தனிப்பட்ட முறையில் அழைத்திருந்தாள். ஆனால் நான் போகவில்லை.
திருமணம் முடிந்து, மூன்றாவது நாள் அவள் தன் கணவரிடம் கூறி சம்மதிக்கச் செய்து, தேன்நிலவைக் கொண்டாடுவதற்கு இந்த இருண்ட மாளிகைக்கு வந்து தங்கினாள். அதன்மூலம் அவள் இந்த வழியே நான் தனிமையாக நடந்து செல்லும் செயலையும் நடக்காமல் செய்துவிட்டாள்.
திருமணம் முடிவடைந்து ஏழாவது நாள் எனக்கு வெறீனாவின் ஒரு நீண்ட கடிதம் கிடைத்தது. அவளுடைய மணவறையில் நடைபெற்ற முதலிரவை உணர்ச்சிகள் நிறைந்த மொழியில் விளக்கமாக விவரித்து எழுதப் பட்ட ஒரு கடிதம் அது. அதை வாசித்து நான் அதிர்ச் சியடைந்துவிட்டேன். அதன் இறுதியில் அவள் இவ்வாறு ஒரு குறிப்பையும் சேர்த்திருந்தாள்.... "ரிச்சர்ட்... என்னுடைய சந்தோஷத்திற்குக் காரணம் நீங்கள் ஒருவர் மட்டும்தான்... மணவறையில் நான் அனுபவித்தது உங்களைத்தான்; என் கணவரான ஹான்ஸனை அல்ல. அந்த மனிதர் எனக்கு கணவர் என்ற அடையாளம் மட்டுமே.'
அந்தக் கடிதத்தை வாசித்தபோதுதான் உயிருள்ள மனித உடலை இழுத்து நீட்டும்போது உண்டாகக்கூடிய வேதனையை நான் உணர்ந்தேன்.
கடிதத்திற்கு நான் பதில் எழுதி அனுப்பவில்லை. அவள் எனக்கு தொடந்து... தொடர்ந்து... அவளுடைய அனுபவங் களைப் பற்றி எழுதிக் கொண்டேயிருந்தாள். எனக்கு பைத்தியம் பிடித்துவிடும்போல இருந்தது. நான் துறவி களின் கூட்டத்தில் சேர்ந்து ஊரைவிட்டு வெளியேறத் தீர்மானித்தேன். அதற்கான ஆயத்தங்களைச் செய்ய ஆரம்பித்தேன். அப்போதுதான் அது நடந்தது.''
தன்னுடைய காதல் கதையின் இறுதிப் பகுதியைக் கூறி முடிப்பதற்கு தயார் செய்தவாறு, ரிச்சர்ட் சிறிது நேரம் அமைதியாக இருந்தார். அந்த கறுத்த மாளிகையின் கதவு "கடகட' என்று ஓசை உண்டாக்கிக்கொண்டிருந்தது. எங்களுக்கு அருகில், வெண்ணிற மஸ்லின் துணியாலான திருமண பர்தா அணிந்த புதிய மணப்பெண்ணைப்போல நின்றுகொண்டிருந்த அந்த ஆப்பிள் மரம் ஒரு நீண்ட பெருமூச்சை விட்டது.
ரிச்சர்ட் கதையைத் தொடர்ந்தார்: ""அவர்கள் இந்த கறுத்த மாளிகையில் தங்க ஆரம்பித்த முப்பதாவது நாளின் இரவு வேளையில் அது நடந்தது. ஒரு சூறாவளிக் காற்று! தூண் ஏரியில் இடையில் அவ்வப்போது ஆபத்தான சூறாவளிக் காற்றுகள் வீசுவதுண்டு. ஒருநாள் காலையில் படகோட்டிகள் எங்களுடைய ஊருக்குள் வந்து கூறினார்கள். முந்தைய நாள் இரவில் வீசிய சூறாவளி காரணமாக இந்த கறுத்த மாளிகையின் மேல்மாடி தகர்ந்து விழுந்துவிட்டதென்றும், அதனுள்ளே இருந்தவர்களுக்கு கடுமையான காயம் உண்டானது என்றும்... அதைக் கேட்டவுடன் நாங்கள் இங்கு ஓடிவந்தோம். இங்கு வந்து பார்த்தபோது கண்களில் பட்டது.... அறைக்குள் வெறீனா தலை சிதறி இறந்து கிடந்த காட்சிதான். அவளுடைய கணவரான அந்த டச்சுக்காரர் ஒரு சிலையைப்போல அருகில் நின்றுகொண்டிருந்தார். அது மட்டுமல்ல... பெரிய பளிங்குக் கல்லாலான ஒரு சிலையும் உடைந்து, தலை துண்டாகி அவளுக்கு அருகில் கிடந்தது.
கவலையளிக்கக்கூடிய அந்த பேரமைதிக்கு மத்தியில் ஹான்ஸன் என்னையே சற்று கூர்ந்து பார்த்தார். நாங்கள் ஒருவரையொருவர் முன்பு பார்த்ததில்லை. நான் அவரைப் பார்க்க விரும்பியதும் இல்லை. ஆனால், அந்த சந்தர்ப்பத்தில் என்னுடைய கவலையை அவரிடம் தெரிவிக்கவேண்டிய ஒரு கடமையுணர்வு எனக்கிருந்தது. நான் அதற்கு முயற்சிப்பதற்கு முன்பே, ஹான்ஸன் ஆட்களின் கூட்டத்திலிருந்து என்னை நோக்கி வந்து, என் தோளைத் தொட்டவாறு கூறினார்: "மன்னிக்க வேண்டும்.
உங்களுடன் ஒரு நிமிடம் பேசவேண்டும். என்னுடன் பக்கத்திலிருக்கும் அறைக்கு வரமுடியுமா?'
நான் ஹான்ஸனுடன் பக்கத்திலிருந்த அறைக்குச் சென்றேன்.
"நீங்கள்தானே ஹெர் ரிச்சர்ட்?' ஹான்ஸன் என் முகத் தையே கூர்ந்து பார்த்தவாறு கேட்டார்.
"ஆமாம்...' நான் சற்று நிலைகொள்ளா மனதுடன் பதில் கூறினேன்: "என் பெயர் உங்களுக்கு எப்படித் தெரிந்தது?'
ஹான்ஸன் உதட்டைக் கடித்தவாறு கூறினார்: "ஆமாம்...
வெறீனாவுக்கு அருகில் தலை தனியாகப் பிரிந்துகிடக்கும் சிலையை நீங்கள் பார்த்தீர்களா? உங்களுடைய தோற்றத் தைக் கொண்ட சிலை அது.'
"உண்மையாகவா?' நான் ஆச்சரியத்துடன் கேட்டேன்.
"ஆமாம்... எங்களுடைய திருமணம் நடந்த மறுநாள் அவள் இங்கு கொண்டுவந்து வைத்த சிலை அது. கடந்துசென்ற ஒரு மாதம் முழுவதும் வெறீனா அந்த சிலையையே வழிபட்டுக் கொண்டிருந்தாள். அதன் கலை அழகைத்தான் அவள் வழிபட்டுக் கொண்டிருக்கிறாள் என்று நான் நினைத்தேன். நேற்றுதான் அந்த ரகசியம் வெளியே வந்தது. சூறாவளிக்காற்று மாளிகையின் மேல்மாடியைத் தகர்த்து, சுவரிலிருந்த அந்தச் சிலையை அவளுடைய தலையின்மீது தள்ளிவிட்டது. தலை உடைந்து, அந்தச் சமயத்திலேயே அவள் இறந்து விட்டாள்.
அந்த சிலையும் உடைந்தது. அவள் அதற்குள் ஒளித்து வைத்திருந்த சில காதல் கடிதங்கள் வெளியே வந்தன. யார் அனுப்பிய காதல் கடிதங்கள் என்கிறீர்கள்? நீங்கள் முன்பு அவளுக்கு எழுதிய காதல் கடிதங்கள்!'
ஹான்ஸன் பைக்குள் கையை விட்டு, அந்தக் கடிதங் களை எடுத்து என் கையை நோக்கி நீட்டியவாறு கூறினார்:
"இதோ... இந்த கடிதங்களை நீங்கள் வாங்கிக் கொள்ளலாம்.
அவளுடைய இறந்த உடலையும் நீங்கள் வாங்கிக் கொள்ளலாம். நான் இதோ... இந்த நிமிடமே... சுவிட்சர்லாந் தைவிட்டுச் செல்கிறேன். நான் புரிந்துகொண்ட வரையில், அவளுடைய உண்மையான கணவர் நீங்கள்தான். இறு தியில் நீங்கள்தான் அவளைக் கொல்லவும் செய்தீர்கள்.'''
ரிச்சர்ட் கதையை இவ்வாறு முடித்தார்: ""நண்பரே... அந்த வகையில் வெறீனாவின் பிண அடைக்கத்தையும் நானே செய்யவேண்டிய நிலை உண்டானது. இந்த கறுத்த மாளிகையும், நீங்கள் மாலை என் வீட்டின் நிலவறையில் பார்த்த அந்தச் சிலையும் மட்டுமே அந்த கறுத்த நினைவுகளுக்கு சாட்சிகளாக எஞ்சி நின்றுகொண்டிருக்கின்றன.''