ஸ்ரீகுட்டியை பள்ளிக்கூடத்தில் விட்டுவிட்டு, சுமித்ரா வீட்டைநோக்கித் திரும்பி நடந்தாள். பத்து நிமிட நேரம் நீண்டு நிற்கக்கூடிய அந்த நடை அவளுக்கு மிகவும் பிடித்திருந்தது. மகள் பள்ளிக்கூடத்திலிருக் கிறாள். கணவன் அலுவலகத்திற்குச் சென்றுவிட்டான். இனி அவள் சிறிதுநேரம் சற்று நன்றாக மூச்சுவிடலாம்.

விமான நிலையத்திற்குச் செல்லும் சாலையில் போக்குவரத்து நெரிசல் அதிகமாக ஆரம்பித்தது. இடையில் அவ்வப்போது தலைக்குமேலே விமானங்கள் தாழ்ந்து பறந்து கொண்டிருந்தன. மிகவும் வேகமாக ஓடிக்கொண்டிருக்கும் கார்களுக்கு மத்தியில் "ஏர் இந்தியா'வின் பிரம்மாண்டமான கேட்டரிங் வேனை அவள் பார்த்தாள். அது நிறைய விமானப் பயணிகளுக்கான உணவிருக்கிறது என்ற விஷயம் அவளுக்குத் தெரியும். விமானத்தில் ஏறி ஒரு நிமிடம் ஆகாயத்தின்வழியாகப் பயணிப்பதை அவள் ஒவ்வொரு நாளும் கனவு கண்டாள். உடனே அவளுக்கு குற்றவுணர்வு உண்டானது. "அது எதுவும் என்னைப் போன்றவர்களுக்கு விதிக்கப்பட்டதல்ல.' அவள் தனக்குத்தானே கூறிக்கொண்டாள்: "எனக்கு அந்த அளவுக்கு ஆசைகள் எதுவும் இருக்கக்கூடாது. ஸ்ரீகுட்டியுடனும் ஹரிநாராயணனுடனும் சிறிய ஃபிளாட்டில் எளிமையாக வாழ்ந்தால்போதும். கண்கள் மூடுவதுவரை தாயைப் பார்த்துக்கொள்ள வேண்டும்'. அவள் ஆசைப்படுவது அவ்வளவுதான்.

சர்வீஸ் பாதையின்வழியாக அவள் வீட்டை நோக்கி நடையைத் தொடர்ந்தாள். இரு பக்கங்களிலும் எட்டும், பத்தும் தளங்களைக் கொண்ட கட்டடங்கள்...

அதைப்போன்ற ஒன்றில் எட்டாவது மாடியில் அவள் ஹரிநாராயணனுடனும் ஸ்ரீகுட்டியுடனும் தாயுடனும் சேர்ந்து வாழ்ந்துகொண்டிருந்தாள். அந்த அளவுக்கு உயரமான ஃப்ளாட்டில் வசிப்பது வாடகை குறைவாக இருப்பதால்தான். கீழே இருக்கும் ஃப்ளாட்டுகளுக்கு வாடகை அதிகமாக இருக்கும்.

Advertisment

முதன்முறையாக ஃப்ளாட்டிற்கு வந்த நாளன்று வாசலில் வந்துநின்று கீழே பார்த்தபோது, கடவுளே! தலை சுற்றிவிட்டது. இந்த அளவுக்கு உயரத்தில் மனிதர்கள் எப்படி வாழ்கிறார்கள்? அவள் ஆச்சரியப்பட்டாள்.

"இது ரொம்ப உயரமில்ல. அமெரிக்காவுல நூறு மாடியுள்ள கட்டடங்க இருக்கு. அங்க மனுஷங்க வாழலையா? பிறகு... நமக்கு ஏறி இறங்கறதுக்கு லிலிஃப்ட் இருக்கு.'

ஹரிநாராயணன் கூறினான்.

Advertisment

நடுத்தர மனிதர்கள் வாழக்கூடிய அவர்களுடைய குடியிருப்புக் கட்டடத்தில் நூற்றைம்பது ஃப்ளாட்டுகள் இருக்கின்றன. சமீபத்தில் கட்டப்பட்டதுதான் என்றாலும், பல ஃப்ளாட்களில் வெளிச்சுவர்கள் சிதிலமடைந்து உதிர ஆரம்பித்திருந்தன. லிஃப்ட்கள் நடுங்கிக்கொண்டும் குலுங்கிக்கொண்டும் பயணிக்கும். கிழக்குப் பகுதியிலிருக்கும் வெளிச்சுவர் இடிந்து விழுந்திருந்தது. அதன்வழியாக இரவில் திருடர்கள் பலமுறை உள்ளே வந்திருக்கிறார்கள்.

வசிப்பிடத்தை அடைந்ததும் அவளுக்கு வெறுப்புண்டானது. மேலும் சிறிதுநேரம் அப்படியே பாதையோரக் காட்சிகளைப் பார்த்தவாறு வெறுமனே நடக்கவேண்டும்போல இருந்தது. ஆனால், அவ்வாறு நடந்தால் போதுமா? ஒரு நூறு பணிகள் இருக்கின்றன. வாத நோயால் கஷ்டப்பட்டுக் கொண்டிருக்கும் தாய்க்கு தைலத்தைத் தேய்த்துவிட்டு வெந்நீரில் குளிப்பாட்டவேண்டும். வீடு முழுவதையும் பெருக்கி, ஈரத்தால் துடைத்து சுத்தப்படுத்தவேண்டும். துணிகளைத் துவைக்கவேண்டும். சோறும் குழம்பும் ஆக்கவேண்டும். அவையனைத்தும் முடிந்தபிறகு, குளித்து முடித்து, எதையாவது அள்ளித் தின்னும்போது, ஸ்ரீகுட்டியை பள்ளிக்கூடத்திலிருந்து அழைத்துவருவதற்கான நேரமாகியிருக்கும்.

அவள் அமைதியான முகத்துடன் தங்களின் குடியிருப்புக் கட்டடத்தின் கேட்டைக் கடந்துசென்றாள்.

அப்போது அவளுடைய மனதில் என்னென்னவோ எண்ணங்கள் வளர்ந்துவந்தன.

இன்று காலையில் கண் விழித்தபோது, அவளுக்கு வெறுமே ஒரு பயம் உண்டானது. ஏழு வயதுள்ள ஒரு மகளின் தாயாக இருந்தாலும், ஒரு குழந்தையைப்போல சிரித்து விளையாடக்கூடிய குணத்தைக் கொண்டவள் அவள். கண் விழித்தவுடன் சாளரத்தின் அருகில் சென்று நின்று, திரைச் சீலையை விலக்கி வெளிச்சம் விழுந்துகொண்டிருந்த கட்டடங்களைப் பார்த்து அவள் ஒரு பாடலைப் பாடுவாள். அதுதான் வழக்கம். சில வேளைகளில் தூரத்திலிருந்து பறந்து உயரும் விமானங்களிடம் அவள் நலம் விசாரிப்பாள்.

ஆனால், இன்று கண் விழித்தபிறகும் தூக்கம் போதாது என்பதைப்போல, அவள் படுக்கையிலேயே அமர்ந்திருந்தாள். முகம் கனத்துப்போய்க் காணப் பட்டது.

அவளிடம் வெளிப்பட்ட உணர்ச்சி மாறுதலைப் பார்த்து ஹரிநாராயணன் கேட்டான்: ""இன்னைக்கு நீ ஏன் பாட்டு பாடல? கட்டடங்களைப் பார்த்துக்கிட்டு ஏன் நிற்கல? பறந்து உயர்ற விமானங்களை ஏன் பார்க்கல?''

சுமித்ரா கூறினாள்: ""எனக்கு பயமா இருக்கு.''

""நீ யாருக்கு பயப்படுறே? உனக்குப் பக்கத்துல நான் இல்லியா?'' ஹரிநாராயணன் அவளை சமாதானப் படுத்தினான். ""பயப்படாதே மகளே!''

""மனசுக்கு ஒரு சுகமும் இல்ல.''

அவள் தலையைத் தாழ்த்திக்கொண்டு கால் விரல்களைப் பார்த்தவாறு அமர்ந்திருந்தாள்.

முதலிரவின்போது அவனுக்கு முன்னால் அவள் அப்படித்தான் அமர்ந்திருந்தாள்- முகத்தைத் தாழ்த்தி வைத்துக்கொண்டு, கால் விரல்களைப் பார்த்தவாறு...

""சுமித்ரா... நீ இன்னும் எழுந்திரிக்கலையா?'' தாய் வாசலுக்கு வெளியே வந்து நின்றிருந்தாள்.

""ஹரிநாராயணன் அலுவலகத்துக்குப் போக வேணாமா? ஸ்ரீகுட்டி பள்ளிக்கூடத்துக்குப் போக வேணாமா?''

""இதோ... நான் வந்துட்டேன்மா...''

அவள் புடவைத் தலைப்பால் முகத்தைத் துடைத்தவாறு, ஸ்ரீகுட்டியைத் தட்டி எழுப்பினாள்.

""நான் இன்னும் தூங்கணும்.''

ஸ்ரீகுட்டி தூக்கக் கலக்கத்துடன் கண்களைக் கசக்கினாள். வெப்பத்தின் காரணமாக முந்தைய நாள் ஒரு பைஜாமாவை மட்டும் இட்டவாறு அவள் படுத்திருந்தாள். அவளுடைய சரீரத்தைப் பார்த்தால் ஏழு வயதுள்ள சிறுமியாகத் தெரியமாட்டாள். வயதைவிட ஸ்ரீகுட்டிக்கு வளர்ச்சி இருந்தது.

""இனிமே சட்டையில்லாமல் படுக்கக்கூடாது. தெரியுமா?''

அவள் ஸ்ரீகுட்டியின் மார்புப் பகுதியைப் பார்த்தவாறு கூறினாள். மகளுடைய வளர்ச்சி சுமித்ராவை பயப்படச் செய்தது.

மணி ஆறுதான் ஆகியிருந்தது. அதற்குள் பொழுது "பல... பல'வென்று வெளுத்துவிட்டிருந்தது. கீழே ஏர்போர்ட் சாலையின்வழியாக பேருந்துகள் ஓட ஆரம்பித்திருந்தன. எட்டாவது மாடியிலிருந்து பார்க்கும்போது அந்தப் பேருந்துகள், கார்களைப்போல தோன்றின. அந்த அளவுக்கு சிறியனவாக...

""எனக்கு ஒண்ணுமே முடியல மகளே.'' தாய் கூறினாள்: ""நான் இன்னும் கொஞ்ச நேரம் படுத்திருக்கட்டுமா?''

தாய்க்கு இப்போது எல்லா நேரங்களிலும் களைப்பு. போதாதென்று வாதத்தின் காரணமாக சிரமும்... வரவிருக்கும் "சிங்க மாதத்தில்' (ஆவணி) தாய்க்கு எழுபது முடியும்.

""வயசான காலத்துல டில்லியோட வெப்பத்தையும் குளிரையும் என்னால தாங்கிக்க முடியல ஹரிநாராயணா.'' இடையில் அவ்வப்போது தாய் கூறுவாள்: ""என்னை ஊர்ல கொண்டுபோய் விடு மகனே.''

ஊரில் பார்த்துக்கொள்வதற்கு யாருமில்லாத காரணத்தால்தான், தாயை இங்கு அழைத்துவந்தார்கள். இங்கு சுமித்ரா இருக்கிறாளே!

தூங்கிக்கொண்டிருந்த ஸ்ரீகுட்டியை குழாய்க்குக் கீழே அழைத்துச்சென்று நிறுத்திக் குளிப்பாட்டினாள். ஹரிநாராயணனுக்கு தேநீர் தயாரித்துக்கொடுத்தாள். இதற்கிடையில் குளியலறையிலிருக்கும் ட்ரம்மில் நீர் நிறைத்துவைத்தாள். ஏழு மணியானால் குழாயில் நீர் நின்றுவிடும். பிறகு நீர் வருவது மாலை ஐந்து மணிக்கு மட்டுமே.

ஸ்ரீகுட்டிக்கு காலை உணவு தயாரித்து மேஜைமீது வைத்துவிட்டு, அவளுடைய ஷூக்களை பாலிலிஷ் செய்ய ஆரம்பித்தபோது, குளியலறையிலிருந்து ஹரிநாராயணனின் குரல்: ""சுமித்ரா... என் மேல்துண்டை இங்க தா...''

தினமும் குளிப்பதற்காகச் செல்லும்போது, ஹரிநாராயணன் மேற்துண்டை எடுக்க மறந்துவிடுவான். தினமும...

தாய் அழைத்துக் கூறினாள்:

""சுமித்ரா... ஒரு அனாஸினும் கொஞ்சம் வெந்நீரும்... என் தலை வெடிக்குது.''

ss

ஷூக்களை பாலீஷ் செய்து வைத்துவிட்டு, அவள் தாய்க்கு வெந்நீரையும் அனாஸினையும் கொடுத்தாள்.

சவரம் செய்து குளித்துமுடித்து, கையிடுக்கில் பவுடரைத் தேய்த்த ஹரிநாராயணன் காலை உணவை எதிர்பார்த்து மேஜைக்கு அருகில் அமர்ந்திருந்தான். மேஜையின்மீது பத்திரிகையைப் பரப்பிவைத்து, அதில் கண்களை ஓட்டுவதற்கிடையே அவன் காலை உணவை சாப்பிட்டான். நெய் இடாத மூன்று சப்பாத்தியும், உருளைக் கிழங்கு குருமாவும், ஒரு குவளை பாலும்... இவைதான் அவனுடைய காலை உணவு.

அதற்குப்பிறகு சுமித்ரா ஸ்ரீகுட்டியை சீருடை அணிவித்து அவளுடைய புத்தகப்பையையும் நீர் புட்டியையும், மதிய உணவு பாக்ஸையும் எடுத்துக்கொண்டு, அவளையும் அழைத்துக்கொண்டு பள்ளிக்கூடத்தை நோக்கிப் புறப்பட்டாள்.

இனி இரண்டரை மணிக்கு அவளைத் திரும்ப அழைத்துவருவதற்கு மீண்டுமொருமுறை பள்ளிக்கூடத் திற்குச் செல்லவேண்டும்.

இவ்வாறு நாட்கள் கடந்து போய்க்கொண்டிருந்தன.

சுமித்ரா வீட்டிற்குள் நுழையும்போது, தாய் பொறுமையில்லாமல் காத்துக்கொண்டு நின்றிருந்தாள்.

""நீ எங்க போயிருந்தே சுமித்ரா?'' அவள் கேட்டாள்.

""எனக்கு பசி எடுத்து, வயிறு புகையுது.''

தைலம் தேய்த்து குளித்து முடித்தபிறகு மட்டுமே அவள் காலை உணவு சாப்பிடுவாள். அதுவரை சுமித்ராவாலும் எதையும் சாப்பிட முடியாது. இந்த பெரிய நகரத்திற்கு வந்து வாழ்ந்தபிறகும், தாய் சொந்த ஊரின் வாழ்க்கைமுறைகளைக் கைவிடவில்லை. அவள் அதற்காக தாயை வற்புறுத்துவதுமில்லை. "இந்த வயதான காலத்தில் அவளால் எப்படி மாறமுடியும்? எழுபது முடிந்துவிட்டது. இனி எவ்வளவு காலம் இருப்பாள் என்று தெரியவில்லை. இனி இருக்கக்கூடிய காலத்தில் அவள் தன் விருப்பப்படி வாழ்ந்துகொள்ளட்டும்.'

அவள் தனக்குத்தானே கூறிக்கொள்வாள்.

அவள் தாயை குளியலறைக்கு அழைத்துச்சென்று ஒரு ஸ்டூலின்மீது அமரவைத்தாள். அதில் நிறைய எண்ணெய்க்கறை இருந்தது. தாயின் வாதத்தின் தொந்தரவு இருந்த தடித்த கால்களில் அவள் தைலத்தைத் தேய்த்துவிட்டாள். அதற்குப்பிறகு சரீரம் முழுவதிலும் தைலத்தைத் தேய்த்து உருவிவிட்டாள். அதற்குள் கியாஸுக்கு மேலே இருந்த பாத்திரத்தில் நீர் சூடாகி விட்டிருந்தது.

குளித்து முடித்து வந்த தாய்க்கு அவள் சூடான சப்பாத்தியையும் உருளைக் கிழக்கு குருமாவையும் தந்தாள். எல்லா விஷயங்களிலும் சொந்த ஊரின் பழக்கங்களைப் பின்பற்றிக்கொண்டிருந்தாலும், அவளுக்கு சப்பாத்தியை மிகவும் பிடிக்கும். அதற்காக அவள் கடவுளுக்கு ஒரு நூறுமுறை நன்றி கூறுவாள்.

அதற்குப்பிறகு அவள் பல்துலக்கி காலை உணவைச் சாப்பிட்டாள். அப்போது மணி பதினொன்றாகி விட்டிருந்தது. அன்றைய பத்திரிகையின்மீது சற்று கண்களை ஓட்ட விரும்பினாள். உலகத்தில் என்ன நடந்திருக்கிறது என்பதைத் தெரிந்துகொள்ள வேண்டாமா? ஆனால், அதற்கு நேரம் எங்கிருக்கிறது? இனியும் ஒரு நூறு வேலைகள் இருக்கின்றனவே!

திருமணத்திற்குமுன்பு நிறைய வாசித்தாள். நாளிதழும் வார இதழ்களும் புத்தகங்களும்... அனைத்தையும். கையில் கிடைக்கக்கூடிய எதையும் வாசிப்பாள்.

"இனியொரு பிறவி இருந்தால், ஆணாகப் பிறந்தால் நல்லது கடவுளே!' அவள் தனக்குத்தானே கூறிக்கொண்டாள். சமையலறையிலிலிருந்தும் வீட்டு வேலைகளிலிருந்தும் தப்பிக்கலாமல்லவா?

""சுமித்ரா... கொஞ்சம் டி.வியைப் போடு மகளே.''

தாய் அழைத்துக் கூறினாள். அவள் டி.வியை "ஆன்' செய்தாள். இனி மதிய உணவுக்கான நேரம் வரும்வரை அவளால் தொந்தரவில்லை. எல்லா தொடர்களையும் பார்த்துக்கொண்டிருப்பாள். இந்தியில் ஒரு எழுத்துக்கூட தெரியாமல் இருந்தாலும், அவள் இந்தி தொலைக்காட்சிகளையும் பார்ப்பாள். பார்த்து ரசிக்கவும் செய்வாள்.

""அம்மா... இந்தி தெரியாம உங்களுக்கு கதை புரியுமா?''

""என்ன புரியணும் சுமித்ரா? எல்லா கதையும் ஒண்ணுதான்.''

தொலைக்காட்சி பார்ப்பதற்கு மத்தியில் தாய் அவ்வப்போது அமர்ந்தபடியே உறங்கிகொண்டிருப் பதையும் பார்க்கலாம். எப்படி தூக்கம் வராமலிருக்கும்? தைலம் தேய்த்து வெந்நீரில் குளித்து அமர்ந்திருந்தால் யாருக்குத்தான் தூக்கம் வராமலிருக்கும்?

அவள் இயந்திரத்தைப்போல பணியைத் தொடர்ந்துகொண்டிருந்தாள். சரியாக ஒன்று பத்திற்கு ஹரிநாராயணன் சாப்பிடுவதற்காக வந்தான். ஹோட்டலில் சாப்பிட்டால் தினமும் முப்பது ரூபாய் செலவாகும். அதைத் தவிர்ப்பதற்குத்தான் கடுமையான வெயிலில் ஸ்கூட்டரை ஓட்டிக்கொண்டு சாப்பிடவருவது... வீட்டு வாடகை கொடுக்கவேண்டும். தாய்க்கு மருந்தும் தைலமும் வாங்கவேண்டும். ஸ்ரீகுட்டி பெரியவளாகிக்கொண்டிருக்கிறாள். இப்படி நூற்றுக்கணக்கான செலவுகள். அனைத்தும் இந்த ஹரி அத்தான் என்ற ஒரு மனிதனின் சம்பளத்தில் நடக்கவேண்டுமே!

சாப்பாடு முடிந்தவுடனே ஸ்கூட்டரில் ஏறி திரும்பவும் அலுவலகத்திற்குச் செல்லவேண்டும். தாய் வருவதற்குமுன்பு, சிறிதுநேரம் இருவரும் ஒன்றுசேர்ந்து காற்றாடிக்குக் கீழே படுத்திருப்பார்கள். தாய் வந்ததும் அந்த சந்தோஷமும் இல்லாமல் போய்விட்டது.

""சீக்கிரமா போங்க...'' ஹரிநாராயணன் தன்னை ஏக்கத்துடன் பார்ப்பதைக்கண்டு அவள் கூறினாள்: ""நான் இன்னும் குளிக்கல. மணி ஒண்ணரை தாண்டிருச்சு. ஸ்ரீகுட்டியை கூட்டிட்டுவரப் போக வேண்டாமா?''

கீழே உச்சி வெயிலில் ஏர்போர்ட் சாலையின் வழியாக ஹரிநாராயணனின் ஸ்கூட்டர் ஓடி மறைவதை அவள் பார்த்துக்கொண்டு நின்றிருந்தாள்.

குளித்து முடித்து தாய்க்கு சோறு தந்துவிட்டு, அவளும் கொஞ்சம் அள்ளி சாப்பிட்டாள்.

அப்போது மணி இரண்டு இருபத்தைந்து... எப்படியோ ஒரு புடவையை வாரி சுருட்டிக்கொண்டு அவள் லி லிஃப்ட்டை நோக்கி ஓடினாள். சரியாக இரண்டரைக்கு ஸ்ரீகுட்டி பள்ளிக்கூடத்தின் கேட்டில் வந்து நின்றுகொண்டிருப்பாள். ஒரு சைக்கிள் ரிக்ஷாவைப் பிடித்தால், ஐந்தே நிமிடத்தில் அவள் அங்குபோய்ச் சேர்ந்துவிடலாம். பள்ளிக்கூடம் விடக்கூடிய நேரத்தில் அவளுடைய வசிப்பிட வளாகத்திற்கு முன்னால் சைக்கிள் ரிக்ஷாக்கள் வந்து நின்றுகொண்டிருக்கும்.

கீழே தரைத்தளத்தில் லிலிஃப்ட் இருக்கிறது.

அவசரமாக எங்காவது போகும்போது, அது எப்போதும் இந்தமாதிரி கீழ்த்தளத்தில் இருக்கும். மேலே வருவதற்கான அம்புக்குறிமீது அவள் விரலை அழுத்தி விட்டு, பொறுமையில்லாமல் காத்து நின்றாள். மேல்நோக்கிப் புறப்பட்ட லிஃப்ட்டை இடையில் இரண்டு தளங்களில் யாரோ பிடித்து நிறுத்தினார்கள். அவள் பொறுமையை இழந்து கடிகாரத்தைப் பார்த்தாள்.

ஆனால் கையில் கடிகாரம் இல்லை. அவசரத்தில் கடிகாரத்தைக் கட்டுவதற்கு மறந்துவிட்டாள்.

இறுதியில் லிஃப்ட் முன்னால் வந்து நின்றபோது, அவள் நிம்மதியாக சற்று மூச்சுவிட்டாள். கதவுகள் மூடுவதற்குமுன்பே அவள் பொறுமையை இழந்து தரைத்தளத்திற்குப் போவதற்காக "0'வில் விரலை அழுத்தினாள். கண்களை மூடி நின்றாள். தினமும் இந்த அவசரம்... தினமும் இந்த படபடப்பு... வீட்டையும் குடும்பத்தையும்... அனைத்தையும் விட்டெறிந்துவிட்டு, சிலர் சத்யசாய்பாபா, மாதா அமிர்தானந்தமயி ஆகியோரிடம் போகிறார்கள் அல்லவா? இப்போது அவளுக்குப் புரிந்தது- அவர்கள் ஏன் அவ்வாறு போகிறார்கள் என்று. தப்பிப்பதற்காக...

லிஃப்ட் சற்று குலுங்கியது. தரைத்தளத்தை அடைந்துவிட்டதென்று நினைத்து அவள் பொறுமையிழந்து கதவுகள் திறப்பதற்காகக் காத்து நின்றிருந்தாள். ஆனால், கீழே அடைந்திருக்கவில்லை. நான்காவது தளத்திற்கும் மூன்றாவது தளத்திற்கும் மத்தியில் லிஃப்ட் நின்றிருக்கிறது.

கடவுளே! ஸ்ரீகுட்டி கேட்டில் காத்து நின்றிருப்பாளே!

அவள் மீண்டும்... மீண்டும் "0'வில் விரலை அழுத்தினாள். திடீரென்று லிஃப்ட்டிற்குள்ளிருந்த வெளிச்சம் அணைந்தது. அத்துடன் மேலே தளங்களைக் காட்டக்கூடிய சிவப்புநிற எண்களும் மறைந்தன. சிறிது நேரத்திற்கு அவளால் எதையும் பார்க்கமுடியவில்லை. சுற்றிலும் அடர்த்தியான இருட்டு மட்டும்... ஆனால், சிறிதுநேரம் சென்றதும், மேலேயிருந்த ஒரு சிறிய இடைவெளியின்வழியாக வெளிச்சத்தின் ஒரு வெள்ளி நூல் லிஃப்ட்டிற்குள் வந்து பதிந்தது. அந்த வெளிச்சத்தில் அலராம் மணியைக் கண்டுபிடித்து, அவள் அதில் விரலை அழுத்தினாள். ஆபத்தை அறிவித்தவாறு வெளியே அலாரம் பலமாக ஒலித்துக்கொண்டிருக்கும். ஆனால், அவள் எதையும் கேட்கவில்லை.

ஸ்ரீகுட்டி தன் தாயை எதிர்பார்த்து பள்ளிக்கூடத்தின் கேட்டில் நின்றுகொண்டிருப்பாள். அவளுடைய தோழிகள் அனைவரும் போய்விட்டிருப்பார்கள். நகரத்தின் கழுகு குணம் படைத்த மனிதர்களுக்கு மத்தியில் ஸ்ரீகுட்டி தனியாக...

லிஃப்ட் சற்று அசைந்ததோ? இல்லை... அது ஒரு வெறும் தோணல்தான்...

லிப்ட்டிற்குள்ளிருந்த வெப்பத்தில் அவளுக்கு வியர்க்க ஆரம்பித்தது. "இனி நான் என்ன செய்வது? என் கடவுளே!' அவளுடைய கண்கள் நிறைந்தன. எவ்வளவு நேரம் வேண்டுமானாலும், அதற்குள் இருக்கலாம். வெப்பத்தைத் தாங்கிக்கொள்ளலாம். ஆனால், ஸ்ரீகுட்டி ஆட்கள் இல்லாத பள்ளிக்கூட கேட்டிற்கு முன்னால் தனியாக நின்றுகொண்டிருக்கிறாளே?

இளம்வயதுப் பெண்கள் வாழமுடியாத ஒரு நகரம் இது. தினமும் பத்திரிகைகளில் என்னவெல்லாம் கதைகளைக் கேட்கிறோம்? கொடூரமான மனிதர்கள் ஐந்து ஆறு வயதுள்ள சிறுமிகளைக்கூட... தலை சுற்றுவதைப்போல தோன்றி, அவள் இரும்புச் சுவரில் சாய்ந்து நின்றாள். நேரம் கடந்துகொண்டிருந்தது. கடிகாரம் இல்லாத அவளால் அதைச் சரியாகத் தெரிந்துகொள்ள முடியவில்லை.

இப்போது பள்ளிக்கூடம் முற்றிலும் ஆட்கள் யாருமே இல்லாமல் இருக்கும். ஆட்களற்ற கேட்டில் கண்களில் நீருடன் ஸ்ரீகுட்டி நின்றுகொண்டிருப்பாள். அந்த வழியாகக் கடந்து செல்லக்கூடிய ஆண்களின் கண்கள் பள்ளிச் சீருடையணிந்து தனியாக நின்றுகொண்டிருக்கும் சரீர வளர்ச்சிகொண்ட அந்த சிறுமையைக் கொத்திப் பறித்துக்கொண்டிருக்கும்.

தலைசுற்றிய சுமித்ரா, லிஃப்ட்டின் தரையில் சாய்ந்து அமர்ந்தாள். அவளுடைய கண்களில் இருட்டு வந்து நிறைந்தது. இருட்டில் பார்த்துக்கொண்டிருந்த அவளுடைய கண்களுக்கு முன்னால் பயங்கர கனவுகளின் தோற்றங்கள் பிரகாசமாகத் தெரிந்தன. ஸ்ரீகுட்டிக்கு முன்னால் ஒரு ஆட்டோ வந்து நிற்கிறது.

அதிலிருக்கும் ஆள், தலையை வெளியே நீட்டி ஸ்ரீகுட்டியிடம் என்னவோ மெதுவாகக் கூறுகிறான்.

ஸ்ரீகுட்டி ஒரு நிமிடம் தயங்கி நிற்கிறாள். பிறகு கண்களைத் துடைத்துக்கொண்டு அவள் ஆட்டோவில் ஏறுகிறாள். அவன் தூரத்திற்கு ஆட்டோவை ஓட்டிக்கொண்டு செல்கிறான். தூரத்திற்கு... அங்கிருந்து ஸ்ரீகுட்டியின் அழுகைச் சத்தம் வந்து அவளுடைய காதுகளில் விழுகிறது. ஸ்ரீகுட்டி தேம்பித்தேம்பி அழுகிறாள்.

சுமித்ராவின் சுய உணர்வு இல்லாமற்போனது.

ஆட்களின் உரத்த பேச்சுடன் சேர்ந்து பலமான வெளிச்சம் அவளுடைய கண்களுக்குள் தள்ளிக்கொண்டு நுழைந்தது. லிஃப்ட்டிலிருந்து வெளியேவந்த அவள் சுற்றிலும் பார்த்தாள். ஐந்து... பத்துபேர் அங்கு கூட்டமாக நின்றிருந்தார்கள். கூட்டத்தில் பள்ளிக்கூட பேக்குடன் ஸ்ரீகுட்டியும்...

""மம்மி... பயந்துட்டீங்களா?'' அவள் புடவையைப் பிடித்தவாறு தன் தாயுடன் சேர்ந்து நின்றாள்.

""மகளே... நீ எப்படி வந்தே?'' சுமித்ராவின் குரலில் நடுக்கம்...

""நான் நடந்து வந்தேன்.''

""தனியாவா?'' சுமித்ராவின் தொண்டையில் ஏதோ ஒன்று தடுத்தது.

""தனியா...'' ஸ்ரீகுட்டி கூறினாள்.

ஆட்களின் கூட்டத்திலிருந்து யாரோ ஒரு ஆள் கூறினான்:

""தைரியசாலி!''